கொரோனா அபாயம்: அமெரிக்காவின் பெருந்தோல்விக்கு என்ன காரணம் ? – பகுதி 1 – நோம் சாம்ஸ்கி.
ஏப்ரல் 5 வரை அமெரிக்காவில் மூன்று லட்சத்து இருவது ஆயிரம் நபர்களுக்கு நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இறப்பு: 9,129.
கோவிட் -19 என்னும் வைரஸ் உலகத்தைப் புயல்போல தாக்கியுள்ளது. லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர், கணக்கில் வராதோர் பல மடங்கு அதிகமாக இருக்கலாம். இறந்தவர்களின் பட்டியல் அதிவேகமாக வளர்ந்து வருகிறது, முதலாளித்துவ பொருளாதாரம் ஆட்டம்கண்டு நிற்கின்றன. உலகளாவிய பொருளாதார மந்தநிலையைக் கிட்டத்தட்ட தவிர்க்க முடியாத நிலை வந்துவிட்டது.
கொரோனா வைரஸால் அபாயம் உள்ளது என்று ஏற்கனவே கணிக்கப்பட்டிருந்தது, ஆனாலும் அத்தகைய நெருக்கடிக்குத் தயாரிப்பதற்கான நடவடிக்கைகள் அரசின் பொருளாதாரக் கொள்கையின் கட்டாயங்களால் தடைசெய்யப்பட்டன.“அவர்களுக்கு எதிர்காலப் பேரழிவைத் தடுப்பதற்கான நடவடிக்கையால் எந்த லாபமும் இல்லை” என்று நோம் சாம்ஸ்கி ட்ரூத்அவுட் (truthout) பத்திரிக்கைக்கானப் பிரத்தியேக பேட்டியில் சுட்டிக்காட்டுகிறார். தொடர்ந்து வரும் நேர்காணலில், கோவிட் -19 தொற்றுநோயைத் தடுப்பதில் அமெரிக்கா தோல்வியுற்றதற்குப் பின்னால் புதிய தாராளமய முதலாளித்துவம் எவ்வாறு உள்ளது என்பதை அவர் விவாதித்துள்ளார்.
(நோம் சாம்ஸ்கி எம்ஐடியில் MIT) மொழியியல் பேராசிரியராகவும், 120க்கும் மேற்பட்ட புத்தகங்கள் மற்றும் ஆயிரக்கணக்கான கட்டுரைகளை எழுதியவர்)
கொரோனா வைரஸ் உலகின் பெரும்பாலான பகுதிகளிலும் பரவியுள்ளது, அமெரிக்கா இப்போது வைரஸ் தோன்றிய சீனா உட்பட வேறு எந்த நாட்டையும் விட அதிகமான நோய்த்தொற்றுக்கு ஆளாகியுள்ளது. இது குறித்து உங்கள் பார்வை?
தொற்றுநோயின் பரவும் வேகம் அதிர்ச்சியளிக்கக்கூடியதாக உள்ளது, ஆனால் இந்த தொற்றுநோய் எதிர்பார்க்காததல்ல. இதுபோன்ற நெருக்கடிகளை மிகமோசமாகக் கையாண்டதற்கான முன்னுதாரணங்களும் அமெரிக்காவுக்கு உள்ளது. 2003 ஆம் ஆண்டின் SARS (Severe Acute Respiratory Syndrome – கொரோனா குடும்பத்தின் வேறொரு வைரசால் ஏற்பட்ட) தொற்றுநோயிலிருந்து, அறிவியல் விஞ்ஞானிகள் பல ஆண்டுகளாகத் தொற்றுநோயைப் பற்றி எச்சரித்து வருகின்றனர். SARS நோய்க்கான தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டன, ஆனால் அவை மருத்துவ பயன்பாட்டிற்கு வரவில்லை. அப்போதிருந்தே பெருந்தொற்றுநோய்களைக் கையாள்வதற்கான சிறப்பு அமைப்புகளையும் நிறுவியும், அந்த நிறுவனங்களுக்குத் தேவையானதை செய்திருக்கவேண்டும். இதுபோன்ற வைரஸ்களுக்கான சிகிச்சை முறைகளை உருவாக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம்.
ஆனால் இதற்கான எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. சமகால சமூக பொருளாதார கொள்கைகள் அதற்கு தடையாக இருந்தன. எதிர்காலத்தில் ஒரு பேரழிவைத் தடுப்பதில் முதலீடு செய்வதில் முதலாளிகள் யாருக்கும் லாபம் இல்லை. அரசாங்கம் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கலாம், ஆனால் அரசுக்கும் அதன் முதலாளித்துவக் கொள்கைகள் தடையாக இருந்தன. “அரசாங்கமே பிரச்சனை, முடிவெடுக்கும் விருப்பம் முழுமையாக வணிக உலகிற்கு ஒப்படைக்கப்பட வேண்டும்” என்று அன்றைய ஜனாதிபதி ரீகன் புன்னகையுடன் கூறினார். அதாவது ஒட்டுமொத்த மக்களின் நலனுக்காகவும் இயங்கவேண்டிய அரசு, அதன் பொறுப்பை லாபத்திற்காக மட்டும் இயங்கும் தனியார் நிறுவனங்களுக்கு ஒப்படைத்தது. அதையடுத்த ஆண்டுகளில் தாராளமயம் என்னும் கோட்பாடு கட்டுப்படுத்தப்படாத முதலாளித்துவ ஒழுங்கையும், அது உருவாக்கும் சந்தைகளின் வடிவத்தையும் அதற்குத்தகுந்தாற்போல மாற்றிக்கொண்டது.
தொற்றுநோயை எதிர்கொள்வதில் ஒரு பெரிய இடையூறாக இருக்கும் வென்டிலேட்டர்களின் பற்றாக்குறையால் நோயின் வீரியம் மிகவும் கோரமாக வெளிப்பட்டிருக்கிறது. சுகாதார மற்றும் மனித சேவை (Health and Human Services) நிறுவனமானது இந்தப் பிரச்சினையை முன்கூட்டியே அறிவித்தது மட்டுமில்லாமல், மலிவான, பயன்படுத்த எளிதான வென்டிலேட்டர்களை தயாரிக்க ஒரு சிறிய நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்தது. ஆனால் முதலாளித்துவம் அங்கும் தலையிட்டது, இந்த நிறுவனத்தை ஒரு பெரிய நிறுவனமான கோவிடியன் (Covidien) வாங்கியது, பின்னர் வெண்டிலேட்டர் தயாரிக்கும் திட்டத்தை ஓரங்கட்டியது. “2014 ஆம் ஆண்டில், எந்த வென்டிலேட்டர்களும் அரசாங்கத்திற்கு வழங்கப்படாத நிலையில், கோவிடியன்(Covidien) நிர்வாகிகள், அரசிடம் வென்டிலேட்டர்கள் தயாரிப்பதில் போதுமான லாபம் இல்லை என்பதைக் காரணம் காட்டி ஒப்பந்தத்திலிருந்து வெளியேற விரும்புவதாகக் கூறினர்.”
தற்போதைய நிர்வாகத்திற்கு ஒரு தொற்றுநோய் பற்றி போதுமான எச்சரிக்கை இருந்தது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அரசின் அதிகாரப்பூர்வமான நிறுவனம் ஒன்று, வென்டிலேட்டர்கள் உட்பட பல்வேறு மருத்துவ உபகரணங்களில் பற்றாக்குறை இருப்பதையும், அதற்கான தயாரிப்பிற்கு முதலீடு செய்யவும் அறிவுறுத்தியதாகச் செய்திகள் வந்துள்ளன. மொத்த சந்தைத் தோல்வியைச் சமாளிக்க அரசாங்கம் நேரடியாகச் தலையிட வேண்டியதில்லை என்ற புதிய தாராளவாத தர்க்கத்தின் அடிப்படையில் அரசு கண்டுகொள்ளவில்லை. இது இப்போது அழிவை ஏற்படுத்தி வருகிறது. நியூயார்க் டைம்ஸ் இந்த விஷயத்தை கூறியது போல், “ஒரு புதிய மலிவான, பயன்படுத்த எளிதான வென்டிலேட்டர்களை உருவாக்குவதற்கான முயற்சிகள், பொது-சுகாதாரம் சம்மந்தப்பட்டத் திட்டங்களைத் தனியார் நிறுவனங்களுக்கு அவுட்சோர்சிங் செய்வதால் உள்ள அபாயங்களை எடுத்துக்காட்டுகின்றன; இலாபங்களை அதிகரிப்பதில் இருக்கும் அவர்களின் குறிக்கோளானது எப்போதும் எதிர்கால நெருக்கடிக்குத் தயாராகும் அரசாங்கத்தின் குறிக்கோளுடன் ஒத்துப்போகவில்லை.”
இதிலிருந்து நாம் உணர்த்த விரும்புவது, இலாபங்களை அதிகரிப்பதில் கவனம் செலுத்துவது “மனிதக்குலத்தின் உயிர்வாழ்விற்கான நம்பிக்கையுடன் எப்போதும் ஒத்துப்போவதில்லை” என்பதே. உதாரணமாக, அமெரிக்காவின் மிகப் பெரிய வங்கியான ஜே.பி மோர்கன் சேஸிடமிருந்து (JPMorgan Chase) கசிந்த சுற்றறிக்கையின் அடிப்படையில் (https://www.theguardian.com/environment/2020/feb/21/jp-morgan-economists-warn-climate-crisis-threat-human-race?CMP=Share_AndroidApp_Gmail) தனது வாடிக்கையாளர்களுக்கு”காலநிலை நெருக்கடியானது மனிதக்குலத்தின் உயிர்வாழ்வையே அச்சுறுத்துகிறது” என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆனால் ஜே.பி மோர்கன் வங்கியானது தன்னுடைய முதலீடு பெரும்பானவற்றை புதைபடிவ எரிபொருட்களில்தான் செய்துள்ளது. ஜே.பி மோர்கன் வங்கியின் வாடிக்கையாளரான செவ்ரான் (Chevron) ஒரு இலாபகரமான மாற்று எரிசக்தி திட்டத்தை ரத்து செய்தது, ஏனெனில் இதைவிட புதைபடிவ எரிசக்திக்கு முதலீடு செய்து பூமியில் உள்ள உயிர்களை அழிப்பதில் அதிக லாபம் ஈட்ட முடியும். மற்றொரு வாடிக்கையாளரான எக்ஸான்மொபில் (ExxonMobil – American oil and gas corporation company) மாற்று எரிசக்திக்கான எந்த திட்டமும், முதலீடும் இதுவரை செய்யவில்லை. முதலாளித்துவ இலாப வெறியே இதற்குக் காரணம், மனிதக்குலத்திற்கு ஆபத்து ஏற்பட்டாலும் லாபமே பிரதானம். புதிய தாராளவாத கோட்பாட்டின் படி, மில்டன் ப்ரீட்மேன் மற்றும் பிற தாராளவாத கோட்பாட்டாளர்கள் அறிவுறுத்துவது என்னவென்றால், “கார்ப்பரேட் மேலாளர்களின் பணி லாபத்தை அதிகரிப்பதாகும். இந்த தார்மீக கடமையிலிருந்து எந்தவொரு விலகலும் நாகரிக வாழ்க்கையின் அடிப்படையைச் சிதைக்கும்“.
COVID-19 நெருக்கடியிலிருந்து, ஏழைகள் மற்றும் நடுத்தரவர்க்கம் பெரும் இழப்புகளோடு மீண்டுவரலாம். ஆனால் புவி வெப்பமடைதலின் பிற அழிவுகரமான விளைவுகளிலிருந்தும் மீள முடியாது. இப்போதும் கூட, COVID-19க்கு பிந்தையச் சந்தைத்தோல்வியின் விளைவாகவும் பெருமளவு சேதம் இருக்கும்.
டிரம்ப் ‘இது ஒரு சாதாரணமான இருமல்’ என்றும் எல்லாவற்றையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார் என்றும் பொதுமக்களுக்கு நம்பிக்கையான அறிவிப்புகளை அவர் வெளியிட்டார். ட்ரம்ப் தனது பதவியிலிருந்த ஆண்டுகளில் நமக்கு ஏற்கனவே அறிமுகமானவகையிலேயே இப்போதும் எதிர்வினையாற்றியுள்ளார். தனியார் நிறுவனங்கள் இலாபமமீட்டுவதற்குத் தடையாக இருக்கும் அரசாங்கத்தின் முக்கியமான நிறுவனத்திற்கு நிதி ஒதுக்காமலும், விதிமுறைகளை அகற்றுவதன் மூலமும் தனது எஜமானர்களின் அறிவுறுத்தல்களை உறுதியுடன் செயல்படுத்துகிறார். இதுவரை அவர் செய்த மிகப் பெரிய குற்றம் என்பது “சுற்றுச்சூழல் பேரழிவுக்கு மனிதக்குலத்தைக் தள்ளியது”, அதன் விளைவுகளை நாம் கருத்தில் கொள்ளும்போது இது வரலாற்றில் மிகப் பெரிய குற்றமாகும்.
டிசம்பர் 31 ம் தேதி, உலக சுகாதார அமைப்புக்கு (WHO) நிமோனியா போன்ற அறிகுறிகளுடன் இதுவரை அறியப்படாத நோய் பரவுவதைச் சீனா அறிவித்தது. ஜனவரி 7 ம் தேதி, விஞ்ஞானிகள் இது ஒரு கொரோனா வைரஸ் என்று அடையாளம் கண்டுள்ளதாகவும், மரபணுவை வரிசைப்படுத்தியதாகவும், அவை அறிவியல் உலகிற்குக் கிடைக்கச் செய்ததாகவும் சீனா WHO க்குத் தெரிவித்தது. ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில், அமெரிக்க உளவுத்துறை டிரம்பின் கவனத்தைப்பெற கடுமையாக முயன்றது தோல்வியடைந்தது. அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் பத்திரிக்கைகளுக்கு “எங்களால் அவரை எந்த முன்னேற்பாட்டு நடவடிக்கையையும் எடுக்கவைக்க முடியவில்லை” என்கின்றனர்.
இது எல்லாவற்றிற்கும் மேலாகப் பெப்ரவரி 10 அன்று, கொரோனா வைரஸ் நாட்டையே துடைத்தெறிய ஆரம்பித்தபோது, வெள்ளை மாளிகையிலிருந்து இந்த வருடத்திற்கான நிதி அறிக்கையை அவர் வெளியிட்டார். அரசின் பொதுச் சுகாதாரம் போன்ற திட்டம் மற்றும் துறைகளில் வழக்கத்தை விடச் சற்று அதிகமாக நிதிக்குறைப்பு செய்திருந்தார். ஆனால் மிகவும் அத்தியாவசியம்போல, கனவுத்திட்டமான சுவருக்கும், ராணுவத்திற்கும் கூடுதலாக நிதி ஒதுங்கியிருந்தார்.
அதிர்ச்சியூட்டும் அளவுக்குத் தாமதமாகவும், குறைவான சோதனைகளை மேற்கொண்டதுடன், நோய்த்தொற்று சோதனை-பரவலை விரைவாகக் கண்டுபிடிப்பதற்கான எந்த சிறந்த உத்திகளையும், அமைப்புகளையும் ஏற்படுத்தமுடியாமல்போனது.நோய்த்தொற்று அமெரிக்காவின் எல்லா பகுதிகளுக்கும் விரைவாகப் பரவக் காரணமாகும். அமெரிக்காவின் மிகப்பெரிய மருத்துவமனைகளில்கூட அடிப்படைக் கருவிகளுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா இப்போது உலகளாவிய நெருக்கடியின் மையமாக உள்ளது.
அமெரிக்காவின் இந்த பேரழிவிற்கு டிரம்ப் தலையிலான திறனற்ற அரசே காரணம். ஆனால் அவர்மீது பழி சுமத்துவதைத்தாண்டி அமெரிக்கா எதிர்கொள்ளப்போகும் பேரழிவுகளைத் தவிர்க்கவேண்டும் என்று எண்ணினால், நாம் டிரம்பைத் தாண்டி பார்க்க வேண்டும். 40 ஆண்டுகாலமாக புதிய தாராளமயத்தால் ஆழமான பாதிக்கப்பட்டுள்ள ஒரு நோய்வாய்ப்பட்ட சமூகத்திற்குத்தான் டிரம்ப் பதவிக்கு வந்தார். புதிய தாராளவாத முதலாளித்துவம் ரீகன் மற்றும் மார்கரெட் தாட்சர் ஆகியோரின் ஆட்சியிலிருந்தே நடைமுறையில் உள்ளது. அதன் கடுமையான விளைவுகளை விவரிக்க வேண்டிய அவசியமில்லை. அமெரிக்காவின் இன்றைய அரசு, பொருளாதாரத்தை மீட்க மேற்கொள்ளும் நடவடிக்கைகள், ரீகனின் காலத்தில் மேற்கொண்ட பணக்காரர்களுக்கான தாராள மனப்பான்மையை ஒத்ததாக உள்ளது.
ரீகன், பெரும் பணக்காரர்களுக்கான வரியை குறைத்து அதன் சுமையை பொதுமக்களுக்கு மீது திணித்தார். பங்குகளை குறைந்த விலைக்கு அந்நிறுவனங்களே திரும்ப வாங்குவதற்கு (Buy back) வழிவகை செய்தார்.
இத்தகைய கொள்கை மாற்றங்கள் பெரும் விளைவுகளை ஏற்படுத்துகின்றன. பொதுவாக கொள்கை என்பது ஒரு சிறுபான்மையினருக்குப் பயனளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மக்கள்தொகையில் 0.1 சதவிகிதம் உள்ளவர்கள் நாட்டின் 20 சதவிகித சொத்துக்களை வைத்துள்ளனர்.
சமூகசத்தின் அடித்தட்டிலுள்ள 50% மக்கள், சொத்துக்களுக்கு மாறாக கடனாளியாகவே உள்ளனர். இலாபங்கள் அதிகரித்தாலும், தலைமை நிர்வாக அதிகாரி சம்பளம் உயர்ந்தாலும், உண்மையான சராசரி ஊதியங்கள் தேக்கமடைந்துள்ளன. பொருளாதார வல்லுனர்களான இம்மானுவேல் சாஸ் மற்றும் கேப்ரியல் ஜுக்மேன் ஆகியோர் தங்களது ‘The Triumph of Injustice’ என்ற புத்தகத்தில் காட்டியுள்ளபடி, மாத வருமானம் பெரும் மக்களிடம் பெறப்படும் வரி சம விகிதத்திலும், பணக்காரர்களுக்கு வரிவிகிதம் குறைவாகும் பெறப்படுகிறது.
அமெரிக்காவின் தனியார்மயமாக்கப்பட்ட சுகாதாரப் பாதுகாப்பு முறை நீண்டகாலமாக ஒரு சர்வதேச ஊழலாக இருந்தது, பொதுசுகாதாரத்தில் மற்ற வளர்ந்த சமூகங்களின் தனிநபர் செலவினங்களை விட அமெரிக்காவில் இரண்டு மடங்கு அதிகமாக உள்ளது. ட்ரம்ப் அதிபராகப் பெற்ற அமெரிக்கா இதுதான். தற்போதைய நெருக்கடியிலிருந்து எஞ்சியிருக்கும் இடிபாடுகளிலிருந்து ஒரு சாத்தியமான சமுதாயத்தைப் புனரமைப்பதில் அக்கறை உள்ளவர்களுக்கு, விஜய் பிரஷாத்தின் (இந்திய வரலாற்றாசிரியர், பத்திரிகையாளர் மற்றும் மார்க்சிய அறிவுஜீவி) அழைப்பைக் கவனிப்பது நல்லது: “நாங்கள் இயல்பு நிலைக்குத் திரும்ப மாட்டோம், ஏனென்றால் இயல்பு நிலையே பிரச்னையாக உள்ளது ”
தமிழில்; ராதா