தமிழ்நாட்டில் CAA-NPR-NRC எதிர்ப்புப் போராட்டங்கள்: தமிழர் குடியுரிமைக் காக்கும் மாபெரும் மக்கள் இயக்கம்!

19 Feb 2020

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக இரு மாதங்களாக நாடு தழுவியப் போராட்டம் நடந்துக் கொண்டிருக்கும் நிலையில் திமிர்த்தனத்தின் உச்சமாக ‘குடியுரிமை திருத்தச் சட்டத்தால் ஒருவர் பாதிக்கப்பட்டிருந்தால் காட்டுங்கள்’ என்று முதல்வர் எடப்பாடி சலம்புகிறார்.

  • அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் இடம்பெறாத 19 இலட்சம் பேரில் சுமார் 6 இலட்சம் பேர் இஸ்லாமியர்கள். அவர்களுக்கு குடியுரிமையை மறுத்துள்ளது இச்சட்டத்திருத்தம். த
  • மிழகத்தில் உள்ள சுமார் 1 இலட்சம் ஈழத் தமிழர்களுக்கு குடியுரிமை மறுக்கப்பட்டுள்ளது.                    அப்படியிருக்கும்போது பதவிக்காக இச்சட்டத்திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்து நிறைவேற்றச் செய்துவிட்டு வாய்சவடால் விடுகிறார் எடப்பாடி.  உண்மையில் அதிமுக, பாமக மாநிலங்களவை உறுப்பினர்கள் வாக்களிக்காமல் இருந்திருந்தால் இந்தச் சட்டத் திருத்தம் நிறைவேறியே இருக்காது. எவ்வளவு போராட்டங்கள், எத்தனை உயிரிழப்புகள், கைதுகள், தடியடி, குருதி சிந்தல், அச்சம், கண்ணீர், துயரம்! இப்படியொரு வெட்கங்கெட்டப் பேச்சை பாசக ஆட்சி செய்யும் மாநிலங்கள் தவிர்த்த வேறெந்த ஒரு மாநில முதல்வரும் பேசவில்லை.

நாடு தழுவிய என்.ஆர்.சி. என்ற பூதம் கிளம்பியவுடன் குடியுரிமை திருத்தச் சட்டம் ஆபத்தானதென்ற அச்சம் நாடெங்கும் உள்ள கோடிக்கணக்கான இஸ்லாமியர்களிடமும் இலட்சக்கணக்கான சனநாயக ஆற்றல்களிடமும் தொற்றிக் கொண்டுள்ளது. பதினொரு மாநிலங்கள் தேசிய மக்கள்தொகை பதிவேட்டை தங்கள் மாநிலத்தில் நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று சொல்லியுள்ளனர்.

  • கேரள முதல்வர் பிணராய் விஜயனும் வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியும் பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்கும் அறியாமையாலும் எதிர்க்கட்சி அரசியலுக்காகவும் தான் தேசிய குடிமக்கள் பதிவேட்டை எதிர்க்கிறார்களா?
  • அசாமில் என்.ஆர்.சி. நடத்தப்பட்டதென்றால் அத்தகைய கோரிக்கையை அவர்கள் முன் வைத்திருந்தனர். வேறெந்த மாநிலத்திலும் என்.ஆர்.சி. நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்திருக்கவில்லையே. அப்படியிருக்கும் போது எதற்கு இந்த நாடு தழுவிய என்.ஆர்.சி என்று கேட்கும் துணிவு இல்லாத அடிமை எடப்பாடி போராடும் மக்களை முட்டாளாக சித்திரிக்கப் பார்க்கிறார். உண்மையில் முதுகெலும்பு இல்லாதவராக மாநில முதல்வர் இருப்பதால்தான் தெருவில் இறங்கி மக்கள் போராடத் தள்ளப்பட்டுள்ளனர்.

ஏதிலிகளிடம் இஸ்லாமியர் , இஸ்லாமியர் அல்லாதவர் என்ற சமய வேற்றுமைக் காட்டி குடியுரிமைக் கொடுக்கும் குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு(CAA) எதிரானப் போராட்டம் ஏதிலிகளுக்கான உரிமைப் போராட்டமாக, அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்ட மாந்த நிகர்மைக்கான போராட்டமாக தொடங்கியது. ஈழத் தமிழர்களுக்கு குடியுரிமை மறுத்த நிலையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரானப் போராட்டத்தில் தமிழ்நாட்டு மக்களுக்கு கூடுதல் பொறுப்பு சேர்ந்து கொண்டது.

நாடு தழுவிய என்.ஆர்.சி., அதற்கான என்.பி.ஆர். என்ற அறிவிப்பு ஏதிலிகளைக் கடந்து இந்திய குடிமக்கள் அனைவரது குடியுரிமையையும் கேள்விக்குள்ளாக்கும் நிலையில் நாடுதழுவிய போராட்டம் தீவிரம் அடைந்தது. நல்வாய்ப்பாக 11 மாநில அரசுகள் என்.பி.ஆர். நடைமுறைக்கு ஒத்துழைக்கப் போவதில்லை என அறிவித்துவிட்டன. கெடுவாய்ப்பாக ஈழத் தமிழர் குடியுரிமைக்காகவும் சமயப் பாகுபாட்டிற்கு எதிராகவும் நிற்கத் தவறிய அடிமை அதிமுக, அதன் உச்சமாய் என்.பிஆர் விசயத்தில் தமிழர்களின் குடியுரிமையையும் விற்கத் துணிந்துவிட்டது. இச்சட்டங்களுக்கு எதிரான கொள்கை முடிவெடுக்க மறுத்துவிட்டது. இது வெட்கக் கேடானது.

இந்நிலையில் தமிழ்நாட்டின் முதன்மை எதிர்க்கட்சிகள் வெகுமக்களிடம் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடத்தி அதை குடியரசு தலைவரிடம் கொடுத்துள்ளன. மேலும் என்.பி.ஆர். க்கு எதிரான ஒத்துழையாமை இயக்கத்திற்கு முதன்மை எதிர்க்கட்சிகள் முன்னுக்கு வந்துள்ளன.

இன்னொருபுறம் தமிழக அரசு இதில் பிடிவாதமாக் இருப்பதும் இஸ்லாமியர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது, எதிர்க்கட்சிகளின் தூண்டுதலின் பெயரால் போராட்டம் நடத்தப்படுகின்றது என்ற கருத்தைத் தொடர்ந்து பேசி வருகிறது. ’பொய் பரப்புரைகளை மக்கள் நம்பமாட்டார்கள்’ என அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார் கடந்த சனிக்கிழமை அன்று சொன்னார். ஆக, அவர் இங்கு ’மக்கள்’ என்று சொல்வது போராட்டத்தில் ஈடுபடாத இஸ்லாமியர் அல்லாத ஏனையவர்களைத் தான். பாசக விரும்பிய வகையில் இஸ்லாமியர் , இஸ்லாமியர் அல்லாதவர் என்ற ஓர் உரையாடல் தமிழகத்தில் நடக்கத் தொடங்கி இருக்கிறது. மாபெரும் கையெழுத்து இயக்கம் நடந்து முடிந்த பின்னும் ’மக்கள் நம்பமாட்டார்கள்’ என்று அதிமுக அரசு சொல்வது புறந்தள்ளக் கூடியது அல்ல. இன்னும் தெளிவாகச் சொன்னால், வண்ணாரப்பேட்டையில் நடத்தப்பட்ட தடியடியைத் தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்குள் தமிழக முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் வீதிகளில் இறங்கி போராடிய போது பிரதான எதிர்க்கட்சிகள் அத்தகைய போராட்டத்தில் உடனடியாகப் பங்கேற்கவில்லை என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது. ஒருபுறம் இஸ்லாமியர்கள் மட்டும் போராடிக் கொண்டிருக்க எதிர்க்கட்சிகளின் மேலோட்டமான ஆதரவு மட்டும் இருப்பதால், இப்போராட்டங்களுக்கு எதிராக அதிமுக அரசும் இந்துத்துவ சக்திகளும் ஒரு கருத்தை உருவாக்க முடிகிறது.. போராட்டங்களுக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகளின் சார்பாக சில நூறுபேர் அல்லது சில ஆயிரம்பேர் திரண்டு கூட போராட்டங்களை நடத்தவில்லை. எனவே, இது இஸ்லாமியர்களின் போராட்டமாகவே காட்சி தருகின்றது. போராடுபவர்கள் இஸ்லாமியர்களாக இருந்தாலும் அதனால் பலனடையப் போகிறவர்கள் இஸ்லாமியர் அல்லாதவர்களும் தான்.

தமிழக அரசின் மெத்தனம் ஒரு செய்தியை சுட்டி நிற்கின்றது. இதனால் இஸ்லாமியர்களுக்கு பாதிப்பில்லை என்று மீண்டும்மீண்டும் சொல்வதன் மூலம் ’இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று மக்கள் நம்புகின்றனர்’ என்ற மதிப்பீடு அரசுக்கு இருப்பது தெரிகிறது. தமக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்று இஸ்லாமியர் அல்லாதவர்கள் கருதுவதை நம்மாலும் அறிய முடிகின்றது.

உண்மையிலேயே இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லையா?. எப்படி கருப்பு பண ஒழிப்பு என்ற பெயரில் 500 ரூ, 1000 ரூ செல்லாததென அறிவித்து 130 கோடி பேரிடம் இருந்த பணத்தை செல்லாதது ஆக்கி குற்றவாளிகளைப் போல் வங்கி வாசலில் வரிசையில் நிறுத்தினார்களோ அதே போல் இப்போது இத்தனை கோடிக்கணக்கான மக்களை தங்கள் குடியுரிமையை மெய்ப்பிக்கச் சொல்கிறது மோடி அரசு. அப்படி மெய்பிப்பதற்கு ஆவணங்களைக் காட்ட வேண்டும். தெருவோரம் வீடின்றி வாழக்கூடியவர்கள், பழங்குடிகள், மீனவர்கள், நரிக்குறவர்கள், நகர்ப்புற ஏழை,எளிய உழைக்கும் மக்கள், கிராமப்புற மக்கள், முதியவர்கள் என ஆவணங்கள் இல்லாத எத்தனையோ கோடிக்கணக்கான மக்களை அடையாளம் காட்ட முடியும். இவர்கள் எல்லோரும் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்காக தேசிய மக்கள்தொகை பதிவேட்டு நடைமுறையைத் தொடங்கிய நொடிப் பொழுதே குடியுரிமையற்றவர்களாக ஆக்கப்படுவார்கள். முன்னோர்களின் பிறப்புச் சான்றிதழ் போன்ற ஆவணங்களைக் காட்ட முடிந்தவர்கள்தான் குடிமக்களாக ஏற்கப்படுவர். மற்றவர்கள் எல்லோரும் சந்தேகத்திற்கு இடமான குடிமக்கள் ஆகிவிடுவர்.

ஏப்ரல் மாத தொடக்கத்தில் இருந்து இந்த என்.பி.ஆர். க்கான விவர சேகரிப்பை ஒன்றிய அரசு தொடங்க இருக்கும் நிலையில் இஸ்லாமியர் அல்லாத மக்களிடம் இது எல்லோரையும் பாதிக்கக் கூடிய ஒன்று என்ற உண்மையைக் கொண்டுசெல்ல வேண்டும். அப்போதுதான் அதற்கு எதிரான ஒத்துழையாமை இயக்கத்தில் எல்லாத் தரப்பினரும் பங்கேற்பார்கள்.

இவ்வகையில், இலட்சக்கணக்கில் இஸ்லாமியர்கள் தெருவில் இறங்கி போராடிக் கொண்டிருப்பது தமக்காக மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழர்களுக்காகவுமே. CAA – NPR – NRC க்கு எதிரானப் போராட்டம் ஈழத் தமிழர்களின் குடியுரிமைக்காவும் ஒட்டுமொத்த தமிழ்நாட்டுத் தமிழர்களின் குடியுரிமையைப் பாதுகாப்பதற்காகவுமே. இப்போராட்டம் இஸ்லாமிர்களுக்கானப் போராட்டம் என்பதற்கு மாறாக தமிழர் குடியுரிமைப் பாதுகாப்பு இயக்கம் என்று கருத்தப்பட வேண்டும். தன்னலம் இல்லாமல் பொதுநலம் இல்லை. பொதுநலன் இல்லாத தன்னலம் நீண்ட காலத்திற்கு பாதுகாக்கப்படுவதும் இல்லை. இஸ்லாமியர்கள் தமக்காகப் போராடும் அதே நேரத்தில் அது ஒட்டுமொத்த தமிழர்களின் நலனுக்கானதாகவும் விளங்குகிறது என்பதை முதலில் உணர வேண்டும்.

குடியுரிமை அனைத்து உரிமைகளுக்குமான தாய் உரிமை என்பதைச் சொல்லத் தேவையில்லை. எனவே, இந்த கோரிக்கைக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். இந்துத்துவ அரசியல் தமிழர்களின் சுதந்திரத்தையும் வாழ்வையும் எதிர்காலத்தையும் சீர்குலைக்கக் கூடியது. இந்துத்துவப் பாசிசத்திற்கு எதிரானத் தமிழர்களின் போராட்டத்தில் அதன் ஈட்டிமுனையாக தமிழக இஸ்லாமியர்கள் போராட்டக் களத்தில் நிற்கின்றனர் இந்நேரத்தில் இக்கோரிக்கைப் பற்றிய தெளிவின்றி ’தமக்கு பாதிப்பிலை’ என்ற அறியாமையில் இருக்கும் ஏனைய தமிழர்களை நோக்கிச் செல்ல வேண்டியுள்ளது.

இளைஞர்களும் பெண்களுமாகப் போராட்டக் களத்தில் இறங்கியிருக்கும் இஸ்லாமியர்கள் ஒரு பிரச்சாரப் படையாகப் பணியாற்ற வேண்டிய தேவையுள்ளது. போராட்டக் களத்தில் நிற்கும் இஸ்லாமியர்களும் சனநாயக ஆற்றல்களும் கோரிக்கைப் பற்றிய முழு தெளிவை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். தெளிவு என்றால் பாமரருக்கும் புரியும் வண்ணம் அதாவது பதினைந்து வயது சிறுவருக்கும் அறுபது வயது முதியவருக்கும் புரியும் வண்ணம் விளக்கிச் சொல்லும் தெளிவை ஏற்படுத்திக் கொண்டு மக்களை சந்திக்க வேண்டும். இஸ்லாமியர் அல்லாத ஏனையவர்களிடம் மாபெரும் உரையாடலை நடத்த வேண்டும். இதற்கு தேவையான பரப்புரை வடிவங்களை எடுத்துக் கொண்டு செல்ல வேண்டும்.

இதுவே இப்போது உடனடிக் கடமையாகும். போராட்டக் களத்தில் நிற்கும் இஸ்லாமிய இளைஞர்களும் பெண்களும் உள்ளிட்ட சனநாயக ஆற்றல்கள் அனைவரும் இச்சட்டங்களால் தமக்குப் பாதிப்பில்லை என்று கருதி அறியாமையில் இருக்கும் ஏனைய தமிழர்களிடம் இந்த மாபெரும் உரையாடலை நடத்த வேண்டும்.

இதில் நாம் வெற்றி பெற முடியுமா? என்றால் நிச்சயமாக முடியும். எல்லோரது குடியுரிமையையும் கேள்விக்குள்ளாக்க கூடியது என்பதால் தெள்ளத் தெளிவான நலன்கள் இருக்கின்றன. மேலும் தமிழ் மக்களின் பொதுமனத்தில் நீதியுணர்ச்சிக்கும் சரி,பிழைக்கு நிற்க வேண்டும் என்ற இலட்சிய வேட்கையும் உண்டு. அதை நம்மால் தட்டி எழுப்ப முடியும். எடுத்துக்காட்டாக, கடந்த தீபாவளிப் பண்டிகையின் போது சுஜித் என்ற குழந்தை ஆழ்துளை கிணற்றில் சிக்கிக் கொண்ட போது அக்குழந்தையை மீட்க வேண்டும் என்ற உணர்வில் தமிழக மக்கள் தீபாவளி கொண்டாட்டத்தையே இரண்டாம் பட்சமாக்கினர். வியாபார நோக்கிற்காகத் தான் என்றாலும் ஊடகங்கள் தமிழ் மக்களின் அறவுணர்வை கிளறிவிடுவதில் முக்கியப் பங்காற்றின. எனவே, சமகாலத்திலும் வருங்காலத்திலும் சாதி, சமய குழு உணர்ச்சிகளை வளர்ப்பதற்கு மாறாக தமிழர்களிடையே நீதியுணர்ச்சியை வளர்த்தெடுப்பதற்கு நாம் முனைப்புக் காட்ட வேண்டும்.

என்.பி.ஆர். க்கு எதிரான ஒத்துழையாமை இயக்கத்திற்கான மாபெரும் உரையாடலைத் தொடங்குவோம். தமிழர் குடியுரிமைப் பாதுகாப்பு இயக்கத்தின் வெற்றிக்குப் பாடுபடுவோம்.

  • செந்தில் இளந்தமிழகம்
RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW