தமிழ்நாட்டு வேலை தமிழ்நாட்டவர்க்கே! தமிழ்நாட்டு தொழில் – வளங்கள் தமிழ்நாட்டுக்கே!! – மாநாட்டுத் தீர்மானங்கள்

30 Jun 2023

தமிழ்நாடு இளைஞர் இயக்கம்

சார்பில் 18-06-2023 ஞாயிறு அன்று சேலத்தில் நடைபெற்ற

தமிழ்நாட்டு வேலை தமிழ்நாட்டவர்க்கே!

தமிழ்நாட்டு தொழில் – வளங்கள் தமிழ்நாட்டுக்கே!!

மாநாட்டுத்தீர்மானங்கள்

  1. தமிழ்நாடு அரசின் அனைத்து வேலை வாய்ப்புகளும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கே வழங்கப்பட வேண்டும்.
  2. தமிழ்நாட்டு அரசின் நிர்வாக அமைப்பில் உச்ச பதவிகளான தலைமை செயலாளர், உள்துறைச் செயலாளர், அரசு துறைகளின் இயக்குனர், காவல்துறை தலைவர் போன்ற பதவிகளில் தமிழக அரசின் குரூப் ஒன் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் அமர்த்தப்படுவதில்லை. இந்திய குடிமைப் பணியை சார்ந்தவர்களுக்கே இப்பதவி வழங்கப்படுகிறது. இந்நிலையை மாற்றும் வகையில் குரூப் ஒன் தேர்வில் வெற்றி பெற்று பதவி உயர்வில் வரும் அதிகாரிகளுக்கு இப்பதவிகளை வழங்க தமிழ்நாடு அரசு உரிய சட்ட திருத்தத்தைக் கொண்டு வர வேண்டும்.
  3. ஆளுநர் மற்றும் ஆளுநர் மாளிகையில் இருக்கும் அரசு பணியாளர்களுக்கான சம்பளம் மாநில அரசின் நிதி ஒதுக்கீட்டில் இருந்தே வழங்கப்படுகிறது. இது தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணம் ஆகும். எனவே அந்தப் பணிகளில் தமிழ்நாட்டைச் சார்ந்தவர்களே இருக்கும் வகையில் பணி நியமனம் அமைய வேண்டும்.
  4. தமிழ்நாட்டின் எல்லைக்குள் இருக்கும் ஒன்றிய அரசின் அனைத்து துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் தமிழக இயற்கை வளங்களை பயன்படுத்தியே இயங்குகின்றன. எனவே அந்நிறுவனங்கள் மற்றும் துறைகளில் கீழ் மட்டம் முதல் உயர் மட்டம் வரையில் 90% தமிழ்நாட்டைச் சார்ந்தவர்கள் பணி அமர்த்தப்பட வேண்டும். இது குறித்து மாநில அரசு உரிய சட்ட திருத்தத்தைக் கொண்டு வர வேண்டும்.
  5. சில ஆண்டுகளாக அஞ்சல்துறை, வங்கி, காப்பீட்டுத் துறை போன்ற மக்கள் அன்றாடம் சந்திக்கும் சேவை துறை சார்ந்த ஒன்றிய அரசு நிறுவனங்களில் தமிழ் தெரியாத வட இந்தியப் பணியாளர்கள் பெருமளவில் பணியில் அமர்த்தப்பட்டு உள்ளனர். இதனால் மக்களுக்கும் அவர்களுக்குமான வாய் தகராறு, புரிதல் இன்மை, நிர்வாக குறைபாடு அன்றாடம் நடக்கின்றது. இந்நிலையைப் போக்கிட தமிழ் தெரிந்த தமிழ்நாட்டைச் சார்ந்தவர்களை இங்கு பணியில் அமர்த்த வேண்டும். தமிழ் தெரியாத வேறு மாநிலத்தவர்களை அவர்களின் சொந்த மாநிலத்தில் பணியில் அமர்த்தும் வகையில் அவர்களைத் திருப்பி அனுப்ப வேண்டும். இதற்கு ஒன்றிய அரசோடு தமிழ்நாடு அரசு உரிய முயற்சிகளை எடுத்து செயல்படுத்த வேண்டும்.
  6. தமிழ்நாட்டில் இயங்கும் கார்ப்பரேட் மற்றும் இந்தியப் பெரும் நிறுவனங்களின் பணிகளில் 80% வேலைவாய்ப்புகளை தமிழ்நாட்டவர்க்கு வழங்க வேண்டும்.
  7. அரசு மற்றும் தனியார் துறைகளில் பின்பற்றப்படும் ஒப்பந்த்த் தொழிலாலர்கள் முறை, தற்காலிக தொழிலாளர் முறை, தொகுப்பு ஊதிய முறை ஆகியவற்றை ஒழித்து நிரந்தர பணியாளர் முறையைக் கொண்டுவர வேண்டும். அதாவது, புலம்பெயர் தொழிலாளர்களைக் கொண்டு வேலைகளை வாங்கும் முறை இதன் மூலம் கட்டுப்படுத்தப்படுவதோடு தமிழ்நாட்டைச் சார்ந்த வேலைவாய்ப்பு  கிடைப்பதற்கு வழிவகுக்கும்.
  8. அமைப்பாக்கப்படாத தொழில்களில் (கட்டுமானம், நெடுஞ்சாலை மற்றும் கனரக தொழில் நிறுவனம் அமைக்கும் பணிகள்) அதிகமாக வெளிமாநிலத்தவர்கள் அமர்த்தப்படுகின்றனர். ”தமிழ்நாட்டைச் சார்ந்தவர்கள் அதிகம் ஊதியம் கேட்கின்றனர். வட இந்திய தொழிலாளர்கள் குறைந்த கூலிக்கு வேலை செய்கின்றனர் “ என்பதைக் காரணமாக சொல்லிக் கொண்டு   வட இந்திய தொழிலாளர்களின் வறுமையைப் பயன்படுத்தி இங்குள்ள முதலாளிகள் சுரண்டிக் கொளுக்கின்றனர். எனவே சம வேலைக்கு சம ஊதியம் என்ற சட்டத்தைக் கட்டாயம் அமல்படுத்த வேண்டும். இதனால் வட இந்திய தொழிலாளர்கள் குறைந்த கூலிக்கு சுரண்டப்படுவதும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்பு பறிபோவதும் தடுக்கப்பட்டு தொழிலாளர்களின் ஊதியம் சார்ந்த பிரச்சனை தீர்க்கப்படும். எனவே குறைந்தபட்ச கூலி சட்டத்தை கட்டாயம் அமல்படுத்தி சம வேலைக்கு சம ஊதியம் என்ற நிலையை தமிழ்நாடு அரசு நிறுவ வேண்டும்.
  9. தமிழ்நாட்டில் பணிசெய்யும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உள்அனுமதி சீட்டு நடைமுறையை கொண்டு வர வேண்டும். தொழிலாளர்கள் கொடூரமான முறையில், பாதுகாப்பற்ற சூழலில், சுகாதாரமற்ற சூழலில் சுரண்டப்படுவதைத் தடுப்பதற்கான தொழிலாளர் பாதுகாப்பு நடைமுறைகளைக் கட்டாயப்படுத்த வேண்டும். அவர்களுக்கு குறைந்தபட்ச கூலி உத்திரவாதத்தை வழங்கும் வகையிலான சட்ட நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். பணியாளர்களின் தங்குமிடம், பணிசெய்யும் நேரம் உள்ளிட்டவை தொழிலாளர் நலத்துறையால் முறையாக கண்காணிக்கப்பட வேண்டும்.
  10. ஒன்றிய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் சிவில், காவல், இராணுவம், வருவாய், இரயில்வே போன்ற அனைத்து துறைகளின் தேர்வுகளும் கட்டாயம் தமிழ் மொழியில் நடத்தப்பட வேண்டும். இந்தி மற்றும் ஆங்கிலம் மட்டுமே தேர்வு மொழி என்ற நிலையை மாற்ற தமிழ்நாடு அரசு, தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு குரல் கொடுக்க வேண்டும்.
  11. தமிழ்நாட்டின் இயற்கை வளங்களையும் கனிம வளங்களையும் சூறையாடி சர்வதேச சந்தையில் விற்று இலாபம் பார்க்கும் கனிம-வளக் கொள்ளையைத் தடுக்கும் வகையில் உரிய கண்காணிப்பு, கட்டுப்பாட்டு சட்ட நடைமுறைகளை அரசு கொண்டுவர வேண்டும். ஏற்றுமதி ஊக்குவிப்பு என்ற பெயரில் இயற்கை வளங்களும் கனிம வளங்களும் சூறையாடப்படுவதை தமிழ்நாடு அரசு கட்டாயம் தடுக்க வேண்டும்.
  12. தமிழ்நாட்டிற்குள் சில்லறை வணிகம் மற்றும் மொத்த வணிகத்தில் பன்னாட்டு மற்றும் இந்தியப் பெரு நிறுவனங்களின் ஏகபோகத்தை அனுமதிக்கக் கூடாது. அனுமதித்தால் கோடிக்கணக்கான மக்களின் வேலைவாய்ப்புகளும் சிறுகுறு வணிகர்களின் தொழிலும் கடுமையாக பாதிக்கப்பட்டு தமிழக மக்களுக்கும் தொழில் முனைவோருக்கும் வருவாய் இழப்பு ஏற்படும் இது தமிழ்நாட்டின் நிதிமூலதன திரட்சி,  தனிநபர் வருவாயில் பெருத்த சேதத்தை ஏற்படுத்துகிறது. எனவே தமிழ்நாடு அரசு சில்லறை வணிகத்திலும் மொத்த வணிகத்திலும் பெருநிறுவனங்களின் தலையீட்டை கட்டாயம் தடுக்க வேண்டும்.
  13. தமிழ்நாட்டில் இயங்குகின்ற மற்றும் தமிழ்நாட்டில் வணிகம் செய்யும் நிறுவனங்களின் ஜிஎஸ்டி பதிவு எண் கட்டாயம் தமிழ்நாட்டு எல்லைக்குள் இருக்க வேண்டும் என்ற நடைமுறையை ஜிஎஸ்டி கவுன்சிலில் தமிழ்நாடு அரசு முன்வைத்து திருத்தத்தைக் கொண்டு வரவேண்டும். ஏனென்றால் தமிழ்நாட்டில் இயங்கும் பல தொழில் நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் குறிப்பாக குஜராத் மற்றும் மும்பையில் பதிவு அலுவலகத்தையும், ஜிஎஸ்டி கணக்கையும் வைத்துள்ளனர். இதனால் தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி கணக்கில் சேருவதில்லை. ஜிஎஸ்டி வருவாயில் தமிழ்நாட்டுக்கு சேர வேண்டிய பங்கீடு கிடைக்காமல் போகிறது.

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW