சந்திரயான் வெற்றி: சொல்வதும் சொல்லாததும் -அருண் நெடுஞ்செழியன்

04 Sep 2023

சந்திரயான் – 3 வெற்றிகரமாக நிலவை சென்றடைந்தது. கடந்த 23.8.2023 தேதியன்று மாலை சரியாக 6.04 மணிக்கு நிலவின் தென் துருவத்தில் விக்ரம் லேண்டர் திட்டமிட்டபடி நிலவில் மேற்பரப்பில் தரையிறங்கியது. அடுத்து லேண்டரிலிருந்து பிரக்யான் ரோவர் வெற்றிகரமாக வெளிவந்து நிலவின் தரைத்தளத்தில் ஊர்ந்து சென்றது. இந்த ரோவர் வரும் நாட்களில் நிலவின் மேற்பரப்பில் தனிமங்கள் மற்றும் தண்ணீர் இருப்பு குறித்த ஆய்வை தொடங்கும்.

தென்துருவத்தில் ஒரு பகல் பொழுது என்பது பூமியில் 14 நாட்களுக்கு சமம் என்ற அறிவியலின்படி, இந்த ரோவரானது ஒரு லூனார் பகல் பொழுது முழுவதும் ஆய்வு செய்து தரவுகளை லேன்டருக்கு அனுப்பும். லேண்டர் மூலம் பூமியில் உள்ள கட்டுப்பாடு அறைக்கு ஆய்வுத் தகவல்கள் சேகரிக்கப்படும். இந்த ஆய்வு முடிவுகள் நிலவு குறித்த எதிர்காலத் திட்டமிடலுக்கு முக்கிய மைல்கல்லாக அமையும். உலக விண்வெளி வரலாற்றில் சந்திரயான்-3 திட்டத்தின் வெற்றியானது ஒரு மகத்தான வரலாற்று சாதனை நிகழ்வென்றால் அது மிகையல்ல.

கடந்த 2019 ஆம் ஆண்டில் சந்திரயான்-2 திட்டத்தில் நிலவின் மேற்பரப்பில் லேண்டரை தரை இறக்கும் இறுதிக்கட்ட முயற்சியில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கட்டுப்பாட்டை இழந்த லேண்டர், நிலவில் விழுந்து நொறுங்கியது. தென் துருவத்தில் கரடு முரடான பள்ளங்கள் மற்றும் லேண்டரை தரையிறக்குவதில் உள்ள தொழில்நுட்ப சவால்கள் மற்றும் முந்தைய தரையிறங்கும் முயற்சியில் ஏற்பட்ட தோல்வி போன்றவை, சந்திரயான்-3 திட்டத்தின் இறுதிக்கட்ட தரையிறங்கும் நிகழ்வு பலத்த எதிர்பார்ப்புகளுடன் உற்றுநோக்கப்பட்டது.

சந்திரயான்-3 வெற்றியை தட்டிச்செல்ல முயல்கிற மோடி :

திட்டமிட்டபடி எல்லாம் கச்சிதமாக நடந்து, திட்டமிட்ட நேரத்தில் நிலவில் லேண்டர் தரையிறங்கியவுடன், விஞ்ஞானிகள் ஆர்ப்பரிப்புடன் கரகோஷம் எழுப்பியும் வெற்றிக் களிப்பில் துள்ளிக் குதித்தும், சக விஞ்ஞானிகளை கட்டியணைத்துக் கைகொடுத்தும் வாழ்த்துக்களை பரிமாறியும் ஆனந்தக் கண்ணீர் விட்டும் கொண்டாடினர். இந்த அற்புதமான வெற்றிக் களிப்பில் லட்சக்கணக்கான மக்களும் கலந்துகொண்டு குதூகலித்தனர். இந்த நேரத்தில் யாரும் எதிர்பாராத நிலையில் திடீரென வீடியோ கான்பிரன்சிங் நேரலையில் பிரதமர் மோடி தேசியக் கொடியை ஆட்டியவாறு முகத்தில் புன்னகை பூத்தபடி திரையில் தோன்றுகிறார். இஸ்ரோ மையத்தில் நடந்த வெற்றிக் களிப்புகள் சில நொடிகளில் முடிவுக்கு வந்து பிரதமரின் உரையை கேட்கப் பணிக்கப்படுகின்றனர்.

சந்திரயான் திட்டம் தொடங்கிய நாள் தொட்டே இத்திட்டத்திற்காக இரவு பகலாக உழைத்த நூற்றுக்கணக்கான தொழில்நுட்ப வல்லுநர்கள், பணியாளர்கள், விஞ்ஞானிகள் இந்த வரலாற்று சாதனையை கொண்டாடிக் கொண்டிருக்க, வெற்றிக் களிப்பு ஆர்ப்பரிப்புகளுக்கு சிறு அவகாசம் கூடத் தராமல், அடுத்த சில நொடிகளில் பிரதமர் இஸ்ரோ மையத்தில் உரையாற்றப் போகிறார் என்றதும் இஸ்ரோ மையம் அமைதியாகிவிட்டது. விஞ்ஞானிகளோ வேறு வழியின்றி வேண்டா வெறுப்பாக கானொளியை கண்டபடி நின்றனர்.

ஏற்கனவே தயாரிக்கப்பட்ட உரையை நீட்டி முழங்கி வாசித்துவிட்டு விஞ்ஞானிகளை வாழ்த்தி முடிக்கிறார் பிரதமர் மோடி. நம் ஊரில் ஒரு பழமொழி உண்டு, கல்யாண வீட்டில் மாப்பிள்ளையாகவும் எழவு வீட்டில் பிணமாகவும் இருக்க வேண்டும் என. இந்த பழமொழி யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ பிரதமர் மோடியின் சுயமோக அரசியல் பரப்புரைக்கு கச்சிதமாகப் பொருந்துகிறது.

பொதுவாக நாட்டின் அனைத்து அதிகாரங்களையும் தங்களின் கைகளில் குவித்துக் கொண்டுள்ள சர்வாதிகாரிகள், மன்னர்கள் நாட்டில் நடைபெறுகிற அனைத்து வரலாற்றுப் பெருமைகளுக்கும் உரிமை கொண்டாடி தன்வயப்படுதுக் கொள்ள முயல்வார்கள். இதன் மூலமாக தனது ஆட்சியில்தான் எல்லாம் நிகழ்ந்தது என்ற மாயத் தோற்றத்தை உருவாக்கி, தனது பெயரையும் புகழையும் மேலும் பெரிதுபடுத்திக்கொள்ள முயல்வார்கள்.

சந்திரயான்-2 திட்டத்தின் போது நிலவில் தரையிறங்குகிற தினம் அன்று இஸ்ரோவிற்கு சென்று விஞ்ஞானிகளின் சாதனையை அறுவடை செய்ய முயன்ற பிரதமர் மோடி, திட்டம் தோல்வியடைந்ததும் திட்ட இயக்குநர் சிவனை கட்டியணைத்து ஆறுதல் சொன்னார். இக்காட்சியை பார்க்கிற மக்களோ, ஆகா ! பிரதமருக்குத்தான் எவ்வளவு நல்ல கனிவான உள்ளமென பூரிப்பார்கள். ஆனால் தனது நடவடிக்கைகள் அனைத்தையும் திட்டமிட்டபடி சுய பரப்புரையாக மாற்றுவதற்கு மோடி தவறுவதில்லை.

ஒவ்வொரு தேர்தலின் போதும் தனது அன்னையிடம் பிரதமர் மோடி ஆசி வாங்கப்போவது போல, பிரதமர் மயிலுக்கு உணவு போடுவது, புத்தகத்துடன் பூங்காவில் அமர்ந்திருப்பது என அனைத்தும் விளம்பர அரசியல் – ஆதாயத்திற்காக நடத்தப்படும் மலிவான அரசியல்.

நாட்டின் முக்கிய அரசியல் தலைவர்கள், உலக நாட்டுத் தலைவர்கள், விஞ்ஞானிகள் இஸ்ரோவின் சாதனைக்குப் பாராட்டு தெரிவித்து வருகிற நிலையில், மோடியின் இந்த மோசமான விளம்பர அரசியலை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கண்டிக்கத் தவறவில்லை.

“நிலவில் லேண்டர் தரையிறங்கிய அடுத்து நொடியே மிக வேகமாக ஓடிவந்து இந்த சாதனைக்கான நற்பெயரை தட்டிச்செல்ல பார்க்கிற நீங்கள், சந்திரயான்-3 திட்டத்திற்கான நிதியை 32 விழுக்காடு குறைத்தும் இத்திட்டத்திற்கு வேலை பார்த்த ஊழியர்களுக்கு 17 மாதங்களாக சம்பளம் வழங்காமல் கைவிட்டு விட்டீர்கள்” என கடுமையாக பிரதமர் மோடியை சாடினார்.

“இஸ்ரோவிற்கும் விஞ்ஞானிகளுக்கும் எந்த ஆதரவும் தராமல் உங்கள் (ஒன்றிய) அரசு படுதோல்வி அடைந்து விட்டது. ஆனால் இஸ்ரோவின் சாதனைக்கு மட்டும் ஓடோடி வந்து புகழை தட்டிச் செல்வீர்களா?” என காட்டமாக விமர்சித்துள்ளார்.

முன்னதாக சந்திரயான் திட்டத்திற்கான ராக்கெட் ஏவுதளத்தை, ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனமான கனரக பொறியியல் நிறுவனம்(HEC) அமைத்துக் கொடுத்தது. இந்த நிறுவனத்தின் கடுமையான நிதிச் சுமை காரணமாக இங்கு பணியாற்றும் சுமார் 2,500 ஊழியர்களுக்கு 14 மாதங்களாக சம்பளம் கொடுக்கப்படவில்லை. இது குறித்து பலமுறை ஊழியர்கள் கோரிக்கை விடுத்தும் செவி சாய்க்காத ஒன்றிய அரசு, ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கான நிதி ஆதாரத்தை நிறுவனமே தேடிக் கொள்ள வேண்டும் என்றது. எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இதைச் சுட்டிக்காட்டி விமர்சித்து வருகிறார்.

எதிர்க்கட்சித் தலைவரின் விமர்சனங்களை கண்டுகொள்ளாத பிரதமர் மோடி, தனது வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு நேராக பெங்களூருவில் உள்ள இஸ்ரோ மையத்திற்கு சென்று, சந்திரயான்-3 திட்ட வெற்றிக்கான சாதனைக்கு உரிமை கொண்டாடத் தவறவில்லை. இஸ்ரோ மையத்தில் பேசிய பிரதமர் மோடி, நிலவில் லேண்டர் இறங்கிய இடத்திற்கு “சிவசக்தி” என பெயர் சூட்டினார். ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகளின் உழைப்பில் நிகழ்த்தப்பட்ட அறிவியல் சாதனைக்கு சற்றும் தொடர்பே இல்லாமல் மதச்சாயம் பூசி நிலவிற்கும் மதவாத அரசியலை எடுத்துச் செல்கிறார். நாட்டின் அனைத்துப் பிரச்சனைக்கும் செத்துப் போன நேருவை விமர்சித்து வருகிற பிரதமர் மோடி, தற்போது தொலைநோக்குப் பார்வையுடன் நேரு உருவாக்கிய இஸ்ரோவின் மைய அவையிலே நின்று, அறிவியல் விரோத கொள்கைகளை பரப்புரை செய்து கொண்டு இஸ்ரோவின் வெற்றியை தட்டிப் பறிக்க மேற்கொள்கிற முயற்சி இழிவினும் இழிவான விளம்பர அரசியலாகும்.

இஸ்ரோவை வஞ்சிக்கிற மோடி அரசு:

இஸ்ரோ விஞ்ஞானிகளுக்குத் தலைவணங்குகிறேன் என மேடையில் முழங்கி விட்டு, நடைமுறையில் இஸ்ரோவை கைவிடுவதே பாஜக மோடி அரசின் கொள்கையாக உள்ளது. சந்திரயான்-3 திட்ட வெற்றி குறித்து பேசிய மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் “குறைந்த செலவில் விண்வெளி திட்டங்களை நிறைவேற்றிக் காட்ட முடியும் என்ற இந்தியாவின் திறனை சந்திரயான்-3 திட்டம் நிரூபித்துக் காட்டியுள்ளது. ரஷ்யாவின் லூனா-25 விண்கலம் நிலவில் விழுந்து நொறுங்கியது. அந்த திட்டத்துக்கு ரஷ்யா ரூ.16,000 கோடி செலவிட்டுள்ளது. ஆனால், சந்திரயான்-3 திட்டத்துக்கு இந்தியா வெறும் ரூ.600 கோடிதான் செலவிட்டது. ஹாலிவுட் திரைப்படங்கள் தயாரிப்பதற்கு செலவிடும் தொகையைவிட, சந்திரயான்-3 திட்டத்துக்கு செலவு மிகவும் குறைவு” என்றார்.

இதில் வருந்தத்தக்க உண்மை என்னவென்றால், இஸ்ரோவில் பணிபரியும் ஊழியர்களுக்கு குறைவான ஊதியம் கொடுத்து அதிக உழைப்பை சுரண்டுவதுதான் இந்த திட்டச் செலவு குறைவிற்கான ரகசியம்.

இது குறித்து இஸ்ரோவின் முன்னாள் தலைவர் மாதவன் நாயர் கூறியதாவது: “இஸ்ரோவில் பணிபுரியும் விஞ்ஞானிகள், பொறியாளர்கள் உள்ளிட்ட ஊழியர்களுக்கு வளர்ந்த நாடுகளைவிட 5 மடங்கு குறைவாக சம்பளம் வழங்கப்படுகிறது. அப்படி இருந்தபோதிலும் நமது விஞ்ஞானிகள் வரலாற்று சாதனை புரிந்துள்ளனர்” என்கிறார்.

உலக நாடுகளுடன் ஒப்பிடும்போது நமது விஞ்ஞானிகள் மிகக் குறைவான செலவில் சந்திரயான்-3 விண்கலத்தை அனுப்பி உள்ளனர். இதற்கு அவர்கள் குறைவாக சம்பளம் பெறுவதும் ஒரு காரணம் என நேரடியாக செலவு குறைவுக்கான காரணத்தை போட்டு உடைத்துள்ளார்.

இதில் செலவு குறைவு என நாம் பெருமை பேசுவதில் எந்த அர்த்தமும் இல்லை. அப்படி பெருமை பேசுபவர்கள், விஞ்ஞானிகளின் உழைப்பைச் சுரண்டுவதை ஆதரிக்கிறவர்கள் என்றே பொருள் கொள்ள வேண்டும்.

கார்ப்பரேட்களின் வணிக இலக்காக மாறுகிறதா நிலா?

சந்திரயான்-3 திட்ட வெற்றிக்காக நாம் மகிழ்ச்சியடையும் அதே நேரத்தில், இந்த ஆய்வுத் திட்டங்களின் நோக்கம் குறித்து அக்கறை செலுத்துவதும் அவசியமாகிறது. இவ்வளவு பணத்தையும் உழைப்பையும் முதலீடு செய்து மேற்கொள்ளப்படுகிற விண்வெளித் திட்டங்கள், கார்பரேட்களின் வணிக நலன்களுக்கு சேவை செய்யப் பயன்படப்போகிறதா அல்லது அறிவியல் ஆய்வை மட்டும் நோக்கமாக கொண்டிருக்கப் போகிறதா என்பதைப் பார்க்க வேண்டும். நிலாவை ஆய்வு செய்வதில் தற்போது அரை டஜன் நாடுகள் போட்டா போட்டி போடுகின்றன. இந்தாண்டில் மட்டும் ரஷ்யா, இந்தியாவைத் தொடர்ந்து ஜப்பானின் ஸ்லிம் திட்டம், சீனாவின் செஞ்சர் திட்டம், இஸ்ரேலின் ஸ்பேஸ் ஐஎல் திட்டம் ஆகியவை நிலவை ஆய்வு செய்ய முயற்சிக்கும் முக்கியத் திட்டங்களாகும்.

இந்தியா மனிதர்களை விண்வெளிக்கு அனுப்ப ககன்யான் திட்டத்தை அறிவித்துள்ளது போல, அமெரிக்காவின் ஸ்பேஸ்- எக்ஸ் நிறுவனமும் அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

அண்மைக்கால விண்வெளி ஆய்வுகளை காணும் போது, விண்வெளியும் கார்ப்பரேட்களுக்கான சந்தையாக மாற்றப்பட்டு வருவது தெளிவாகிறது. உதாரணமாக தற்போது எக்ஸ் என பெயர் மாற்றம் செய்யப்பட்ட ட்விட்டர் நிறுவனத்தின் உரிமையாளர் எலன் மஸ்க்,.ஸ்பேஸ்- எக்ஸ் என்ற விண்வெளி நிறுவனம் மூலமாக விண்வெளி சந்தையில் துடிப்புடன் செயல்பட்டுவருவதை குறிப்பிடலாம்.

அண்மையில் அமெரிக்காவில் ஸ்பேஸ்- எக்ஸ் நிறுவனம் உருவாக்கிய உலகின் மிகப்பெரிய ராக்கெட்டை விண்ணில் ஏவுகிற திட்டமொன்று தோல்வியில் முடிந்ததை செய்திகளில் அறிந்திருக்கலாம். உலகப் பணக்காரர்கள் வரிசையில் முதல் இடத்தில் உள்ள எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்-எக்ஸ் (SPACE-X) நிறுவனம், அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் அமைந்துள்ள நாசாவின் விண்வெளி ஏவுதளத்தில் ராக்கெட்டை ஏவிவருகிறது. ஸ்டார்ஷிப் எனப் பெயரிட்டுள்ள இந்த பிரம்மாண்ட ராக்கெட்டானது, இதுவரை விண்வெளிக்கு அனுப்பிய ராக்கெட்டுகளிலேயே மிகவும் சக்தி வாய்ந்த ராக்கெட் ஆகும். இனிவரும் நாட்களில் இந்த ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டு சுற்றுப்பாதையில் நிலை நிறுத்திவிட்டால், நிலவுக்கும் செவ்வாய் கிரகத்திற்கும் மனிதர்களை அனுப்புகிற சோதனையில் பெரும் பாய்ச்சல் நிகழ்வாக அமைத்துவிடும். குறிப்பாக அப்பல்லோ திட்டம் என்ற பெயரில் 1972 ஆம் ஆண்டில் நிலவுக்கு மனிதனை அனுப்பிய நிகழ்விற்குப் பிறகு தற்போது 2025 ஆண்டில் அர்டேமிஸ்-III (Artemis III) என்ற திட்டத்தில் மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் திட்டத்தின் வெற்றி வாய்ப்பு நாசாவிற்கு பிரகாசமாகும். ஆனால் இதன் பயனும் புகழும் யாருக்கு சேரப்போகிறது என்பதுதான் கேள்வி.

நாசாவின் அர்டேமிஸ் என்ற பிரம்மாண்ட திட்டத்தில் ஒத்துழைக்க பல ஐரோப்பிய யூனியன் நாடுகளும் இந்தியாவும் ஒப்பந்தம் போட்டுள்ளன. அமெரிக்கா- ஐரோப்பிய நாடுகளின் நிலவு திட்டத்திற்கு சமமான ஒரு திட்டத்தை ரஷ்யாவும் சீனாவும் மேற்கொண்டு வருகிறது.

1950-70 களில் அமெரிக்காவிற்கும் சோவியத் ரஷ்யாவிற்கும் இடையே நிலவிய விண்வெளிப் போட்டி அனைவரும் அறிந்த ஒன்றுதான். இந்தப் போட்டியானது, அறிவியல், வானியற்பியல் மற்றும் விண்வெளித்துறையில் தொழில்நுட்ப வளர்ச்சியையும் சாதனைகளையும் நிகழ்த்தியது. கூடவே விண்வெளி மீது அறிவியலாளர்கள் மற்றும் மக்களின் ஆர்வத்தையும் முடுக்கிவிட்டது. பல விண்வெளி சாதனைகள் சாத்தியப்பட்டன. உலகின் முதல் செயற்கைக்கோளை (Sputnik 1) வெற்றிகரமாக பூமியின் சுற்றுப்பாதையில் அனுப்பியது. உலகின் முதல் விண்வெளி வீரரையும் முதல் வீராங்கனையையும் விண்ணிற்கு அனுப்பியது. முதல் விண்வெளி ஆய்வுக் கூடத்தை நிறுவியது என சோவியத் ரஷ்யா பல “முதல்” சாதனைகளை நிகழ்த்தியது. இந்த விண்வெளி போட்டியின் (space race) முத்தாய்ப்பாக நிலவில் முதல் மனிதனை 1972ல் அமெரிக்கா இறக்கியது. விண்வெளி போட்டியில் அமெரிக்காவின் வெற்றியாக இது கொண்டாடப்பட்டது.

அறுபதுகளில் அமெரிக்காவிற்கும் சோவியத் ரஷ்யாவிற்குமான விண்வெளிப் போட்டி தற்போதைய புவிசார் அரசியல் நிலைமையில் வேறொரு வடிவம் எடுத்துள்ளதாக தெரிகிறது. ஒருபக்கம் அமெரிக்கா, இஸ்ரேல், ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகள் மறுபக்கம் ரஷ்யா, சீனா நாடுகள். இவ்விரு முகாமும் போட்டி போட்டு நிலவில் ஆய்வுகளை முடுக்கிவிட்டுக் கொண்டுள்ளது. கடந்த ஆகஸ்ட்-18 அன்று நிலவுக்கு ரஷ்யா அனுப்பிய விண்கலம் லூனா-25 தோல்வியில் முடிந்தது. ஆனால், சீனா வெற்றிகரமாக தனது விண்கலத்தை நிலவில் தரையிறக்கி ஆய்வு செய்து வருகிறது.

1960கள் போல் அல்லாமல், தற்போதைய உலகமய தாராளமய சகாப்தத்தில் பொதுத்துறை விண்வெளி நிறுவனங்களின் இடத்தை தனியார் கார்ப்பரேட் நிறுவனங்கள் தற்போது எடுத்துக் கொண்டுள்ளன. விண்வெளி திட்டங்களில் முதலீடு, விண்வெளி சுற்றுலா, நிலவு மற்றும் பிற கோள்களில் உள்ள தனிமங்களை பயன்படுத்திக் கொள்வது என விண்வெளித்துறையே வேறொரு பரிணாமம் எடுத்துள்ளது.

தற்போது டியர் மூன் (Dear moon) என்ற திட்டத்தில், நிலவின் மேற்பரப்புக்கு மனிதர்களை ஸ்பேஸ் எக்ஸ் அழைத்துச் செல்ல உள்ளது. அடுத்து சில ஆண்டுகளில் நிலவில் மீண்டும் மனிதர்களை இறக்குகிற திட்டதையும் ஸ்பேஸ் எக்ஸ் அறிவித்துள்ளது. இம்முறை நிலவுக்கு பெண் ஒருவரை அழைத்துச் சென்று தரையிறக்கப் போவதாக கூறியுள்ளது. அடுத்த சில பத்தாண்டுகளில் செவ்வாய்க்கு ராக்கெட் அனுப்பும் திட்டம், நிலவில் ஒரு முகாம் அமைக்கிற திட்டம் என அடுத்தடுத்த விண்வெளி பாய்ச்சல்களை நிகழ்த்த ஸ்பேஸ் எக்ஸ் திட்டமிட்டுள்ளது.

அரசுத்துறை நிறுவனங்கள் விண்வெளித்துறையில் இருந்து ஒதுங்குவதும் உலகின் பெரும் பணக்காரர்கள் விண்வெளித்துறையை தொழிலாக மாற்றுவதும் எங்கு போய் முடியும் எனத் தெரியவில்லை. அரசுகள், ராணுவத்திற்கு ஒதுக்குகிற நிதியில் நூறில் ஒரு பங்கை விண்வெளி ஆய்வுக்கு ஒதுக்கினாலே போதும். ஆனாலும் அரசிற்கும் அதில் எந்த நாட்டமும் இல்லை. முதலாளித்துவம் தற்போது புதிதாக ஒரு சந்தையை பிடித்துக் கொண்டுள்ளது அல்லது உருவாக்கிக் கொண்டுள்ளது.இனி செவ்வாய் கிரகத்தையும், நிலவையும் தனியார் நிறுவனங்கள் பங்கு போட்டுக் கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அறிவியல் சாதனைகள் என்ற திரைக்கு பின்னே வர்க்க முரண்பாடுகள் வெற்றிகரமாக மறைக்கப்படும். மறக்கடிக்கப்படும்.

– அருண் நெடுஞ்செழியன்

நன்றி ஜனசக்தி

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW