தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை வன்முறை பாதிப்பு பகுதிகளுக்கு மத்திய அரசு அனுப்பியது ஏன்?

27 Feb 2020

தில்லி வடகிழக்கு பகுதியில் CAA ஆதரவுப் போராட்டம் என்ற பேரில் இஸ்லாமியர்கள் மீது நிகழ்த்தப்பட்ட கொலைவெறி தாக்குதல்களுக்கு  இதுவரை சுமார் 34 மக்கள் பலியாகியுள்ளனர். ஒவ்வொரு மணி நேரமும் பலி எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டுள்ளது. இந்நிலையில் வழக்கத்திற்கு மாறாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை வன்முறை பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு  மோடி அரசு அனுப்பிவைத்துள்ளது.       இது ஊடகத்தால் மிகைப்படுத்தியும்  காட்டப்படுகிறது.

இந்த நடைமுறை வழக்கத்திற்கு மாறானது. ஏனெனில் ஆளும் அரசின் அமைச்சர்களோ, சட்டமன்ற, நாடளுமன்ற உறுப்பினர்களோ, போலீஸ் உயர் அதிகாரிவர்க்கத்தினோராதான் கலவர பாதிப்பு  பகுதிகளுக்கு பயணம் செய்து ஆறுதல் கூறி அமைதி காக்க கோருவார்கள். ஆனால் இங்கு நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கலவர பகுதிகளில் தெருத்தெருவாக சுற்றுகிறார். நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகருக்கு நாட்டின் ஒரு பகுதியில் நடைபெற்ற சட்ட ஒழுங்கு சீர்குலைவில் நுணுகிச் சென்று ஈடுபடவேண்டியதில்லை. ஆனால் இந்த தேவை எங்கிருந்து எழுந்துது? சுருக்கமாக பார்ப்போம்.

முதல் காரணம் வன்முறை கும்பலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்துறை அமைச்சர் அமித்சாவே செல்ல முடியாது என்பதுதான்.

ஏனெனில் மத வெறுப்பு பேச்சை தூண்டும் விதமாக உள்துறை அமைச்சரே பேசியிருப்பது அவரது அமைதிப் பயணத்திற்கு முரண்பாடாக அமையும். இரண்டாவதாக, பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள்தான் இந்த வெறுப்புப் பேச்சை தூண்டி கலவரத்திற்கு வித்திட்டார்கள் என்பதும் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டாக உள்ளது.

டெல்லி போலீஸ் துறைக்கு இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவே பொறுப்பு. டெல்லி மாநகர போலீஸ் ஆணையர் அமுல்யா பட்நாயக் நேரடியாக உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின் கீழ் செயலாற்றுபவர்.

ஜாமியா மாணவர்கள் மீதான போலீஸ் தக்குதல்கள் தொடங்கி தற்போதைய தில்லி வடகிழக்கு  வன்முறை வரையிலும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவான இந்துத்வ அடிப்படைவாத சக்திகளின் கைப்பாவையாக டில்லி போலீஸ் செயல்படுவது கண்கூடாக அம்பலமாகி வருகிறது. கலவரத்தில் ஈடுபடுகிற இந்துத்துவ வன்முறை கும்பல்களுடன் இணைந்து கண்காணிப்பு கேமிராக்களை உடைப்பது, இஸ்லாமியர்களை தாக்குவது என சட்ட ஒழுங்க பாதுகாப்பு உடையில், இந்துத்துவ கும்பலின் காவலர்களாக செயல்பட்டது அப்பட்டமாக ஆதாரத்துடன் வெளிவந்துகொண்டிருக்கிறது. இந்த குற்றச்சாட்டிலிருந்து டில்லி போலீசும், உள்துறை அமைச்சரும் எளிதாக தப்பி ஓட முடியாது. அதனால்தால் வன்முறைக்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் கூறுகிறது.ராணுவத்தை கொண்டுவந்து நிலைமையை கட்டுப்படுத்த வேண்டும் என டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் கோருகிறார்.

தில்லி போலீசின் இந்த ஒருதலைப்பட்சமான செயல்பாட்டை, நீதிமன்றம் வன்மையாக கண்டித்து பிறகே, தற்போது சிலர் மீது மட்டுமே டில்லி போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது.

மேற்கூறியது போலீசுக்கும் ஆளும்கட்சிக்கும் இடையிலான இயற்கையான பரஸ்பர உறவாகவே நிலவியது. தில்லி போலீஸ், உள்துறை அமைச்சர் மற்றும் தில்லி  பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகிய அனைவரும் மதச்சார்பின்மைக்கும் மனித நேயத்திற்கும் எதிராக நின்றது நாடெங்கும்  அம்பலமாகிவிட்டது.

அமெரிக்க அதிபரின் இந்திய சுற்றுப்பயணத்தின் போது, அதுவும் அவரது பயணப் பகுதியில் இருந்து வெறும் இருபது கி மீ தொலைவில் வடகிழக்கு தில்லி பற்றிக் எரிந்துகொண்டிருந்தது இந்திய ஆளும் கட்சிக்கு உலகளவில் பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியது. நிலைமையை சமாளிக்க ஆளும் கட்சி செயல்பட்டே ஆக வேண்டிய நிர்பந்தத்திற்கு உள்ளானது. இந்நிலையில்தான் வழக்கத்திற்கு மாறாக தேசிய பாதுகாப்பு துறை ஆலோசகர் அஜித் தோவல் வன்முறை பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மத்திய அரசால் அனுப்பி வைக்கப்படுகிறார்.

அஜித் தோவல் இந்திய உளவு அமைப்பின் இயக்குனராக செயலாற்றி ஓய்வு பெற்றவர். இந்தியாவின் ஜேம்ஸ் பான்ட் என ஆளும்வர்க்கத்தால் செல்லமாக அழைக்கப்படுபவர். இவரைத்தான் 2014 ஆம் ஆண்டில் மோடி ஆட்சிக்கு வந்தவுடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமித்தது.

தில்லி போலீஸ் மற்றும் பாஜக மீது சிவில் சமூகம்  நம்பிக்கையிழந்த நிலையில் மத்திய அரசுக்கு நம்பிக்கையாக ஓரளவிற்கு வெளியிலும் அறியப்பட்டவராக ,சூழ்நிலைமையை கையாளத் தெரிந்த ஆளுமையை கலவர பகுதிகளுக்கு அனுப்பி, நிலைமையை கட்டுக் கொள் கொண்டுவரவேண்டும்.அதற்கு தேர்வு செய்யப்பட்ட நபர்தான் அஜித் தோவல்.

மத்திய அரசிற்கும் பாஜகவிற்கு இந்த வன்முறை பெரும்  பின்னடவை  ஏற்படுத்திவிட்டது.இந்தியாவின் ஜேம்ஸ் பாண்ட்டை வைத்து மட்டுமே மோடி அரசு சேதாரத்தை சரி செய்துவிட முடியாது!

– அருண் நெடுஞ்சழியன்

 

ஆதாரம்:

https://theprint.in/india/why-modi-decided-to-send-ajit-doval-to-enforce-the-law-bring-peace-to-northeast-delhi/371880/?utm_source=izooto&utm_medium=push_notification&utm_campaign=promotion

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW