காவிரிப்படுகை வேளாண் மண்டல பாதுகாப்பு சட்டம்:நமது எதிர்ப்பார்ப்புகள் என்ன? நடந்தது என்ன?

21 Feb 2020

காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து பாதுகாக்கின்ற சட்ட மசோதா, நேற்று சட்டமன்றத்தில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

சமீமகாலமாக வேளாண்மை சாராத நடவடிக்கையால் இம்மண்டலத்தில் வேளாண்மையை பாதிப்புக்குள்ளாகியதும், அதன்  எதிர்விளைவாக மாநில உணவுப் பாதுகாப்பை அச்சுறுத்தியதை கவனத்தில் கொண்டு,அதை தடுக்கும்  பொருட்டு சில நடவடிக்கைகளுக்கு தடை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.அதன்படி டெல்டா பகுதிகளில் துத்தநாக உருக்காலை (zinc), செம்பு உருக்காலை ,அலுமுனியம் உருக்காலை,இரும்புத்தாது செயல்முறை,தோல் பதனிடுதல்,எண்ணெய் மற்றும் நிலக்கரி படுகை மீத்தேன்,இயற்கை வாயுக்களின் ஆய்வு துளைத்தல் மற்றும் பிரித்தெடுத்தல் ஆகியவை  தடை செய்யப்பட்டுள்ளது” என சட்ட மசோதாவில் கூறப்படுள்ளது.

பண்ணை உற்பத்தித் திறனை அதிகரிக்கவும் விவசாய நலனுக்கு சேவை செய்யவும் அரசுக்கு ஆலோசனை வழங்குவதற்கு உயர் மட்டக் குழு ஒன்று அமைக்கப்படுள்ளதாகவும், முதல்வரை தலைவராக கொண்டு தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அதிகார அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாகவும் மசோதாவில் கூறப்பட்டுள்ளது.

திருச்சி, கரூர், அரியலூர் மாவட்டங்களில் சிமென்ட் தொழிற்சாலை அமைந்திருப்பதால், அந்த மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் சேர்க்கப்படவில்லை எனவும், சொந்த நிலங்களை விற்கிற விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் சட்டத்தில், ரியல் எஸ்டேட் தொழிலுக்கு தடை விதிக்கவில்லை என மசோதா மீதான எதிர்கட்சிகளின் கேள்விகளுக்கு எடப்பாடி பழனிசாமி பதிலுரைத்தார். இந்த மசோதாவில் உள்ள சந்தேகங்களை தீர்க்கும் விதமாக மசோதாவை தேர்வுக் குழுவுக்கு அனுப்பவேண்டும் என்ற எதிர்க்கட்சியின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால், திமுக வெளிநடப்பு செய்தது.

இம்மசோதா மீதான ஆதரவும் விமர்சனமும் பரவலாகியுள்ள நிலையில்,வேளாண் மண்டலம் குறித்த நமது கோரிக்கைகளும் எதிர்ப்பார்ப்புகளும் என்னவாக இருந்தன? தற்போது என்ன நடந்துள்ளது? என்பது குறித்து இரு பகுதிகளில் சுருக்கமாக பார்ப்போம்.

பகுதி-1

மசோதாவில் விடுபட்ட கோரிக்கைகள்

நடப்பு திட்டங்கள் தொடர்வதை இந்த வேளாண் மண்டல மசோதா கட்டுப்படுத்தாது என்பது,”வேளாண்மை சாராத  நடவடிக்கையால் இம்மண்டலத்தில் வேளாண்மையை எதிர்விளைவாக பாதித்து, மாநில உணவு பாதுகாப்பை அச்சுறுத்துகிறது”என்கிற மசோதா விளக்கத்திற்கே எதிராகிறது. ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள திட்டங்கள் நடைமுறையில் தொடருமானால், அது உருவாக்குகிற (வேளாண்மையை பாதிக்கிற) எதிர்விளைவுகளை ஏற்றுக் கொள்ளவேண்டும் அல்லது பொறுத்துக்கொள்ளவேண்டும் என்பதே இதன் பொருளாகிறது.

i)செயல்படுகிற எண்ணெய்க் கிணறுகள்

தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் சுமார் 57,850 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் ஹைட்ரோகார்பன் எடுப்பு பணிகளில் ஒ.ஏன்.ஜி.சி நிறுவனமானது கடந்த ஐம்பது வருடங்களாக  ஈடுபட்டு வருகிறது. காரைக்கால், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், தஞ்சாவூர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ‘காவேரி அசட்’ என்ற பெயரில் இப்பணியை நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

மொத்தம் 31 எண்ணெய் எரிவாவு வயல்கள் இதுவரை  கண்டறியப்பட்டுள்ளன. கண்டறியப்பட்டுள்ள  697 கிணறுகளில் 170 கிணறுகளின் இருந்து தற்போது எண்ணெய் எரிவாவு எடுக்கப்பட்டு வருகிறது. ஆண்டொன்றுக்கு சுமார் 700டன் எண்ணெயும் 25 லட்சம் கன மீட்டர் வாயுவும் தமிழ்நாட்டில் இருந்து எடுக்கப்பட்டு வருகின்றது.

தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள வேளாண் மண்டல மசோதாவானது, ஏற்கனவே நடைமுறையில் உள்ள மேற்கூறிய திட்டங்களை கட்டுப்படுத்தாது. அதாவது மசோதா நிறைவேறிய தேதிக்கு முந்தைய திட்டங்களை கட்டுப்படுத்தாது.

ஆனால் தற்போது நாகை, திருவாரூர்  மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்கின்ற பணியை, பொதுத்துறை  நிறுவனமோ, தனியார் நிறுவனமோ, எந்த நிறுவனம் மேற்கொண்டாலும் சுற்றுசூழலுக்கு மோசமான விளைவுகளையே ஏற்படுத்தி வருவதை கண்டு வருகிறோம்.

நெடுவாசல் பகுதி சுற்றுவட்டாரத்தில்  200 க்கும் மேற்பட்ட பகுதிகளில் ஓ.என்.ஜி சி நிறுவனம்  எண்ணெய் கிணறுகளை  பல்வேறு பணிக்காக தோண்டி வைத்துள்ளது. பின்னர் இந்தக் கிணறுகளை கைவிடுவதாகட்டும் அல்லது அடுத்த கட்ட பணிக்காக மராமத்து செய்வதாகட்டும் மோசமான நிலையில் பாதுகாப்பாற்ற நிலையில் பரமரப்பின்றி உள்ளது. எந்தவொரு கண்காணிப்பின்றி மோசான எண்ணெய் கசிவுகளையும் நிலத்தடி நீர் மாசையும் ஏற்படுத்தி வருகிறது. இதுபோல பத்துக்கும் மேற்பட்ட பகுதிகளை நெடுவாசல் சுற்றுவட்டாரத்தில் நாம் பார்க்கலாம். மேலும், எண்ணெய்க் கசிவால் பாதிப்படைந்த  விளைநிலங்கள் மீண்டும் பயன்பாட்டிற்கு வருவதற்கு பல காலம் ஆகலாம், அல்லது வேறு வழியின்றி வானம் பார்த்த நிலமாக பயனற்று கிடைக்க வேண்டியதுதான். எண்ணெய் கசிவோடு தீ விபத்தக்களும் நடைபெறுகிறது. நிலத்தடி நீர் மாசோடு காற்று மாசால்  சுவாசக் கோளாறு பாதிப்புகளும்  ஏற்படுகின்றன. உதாரணமாக  ஓ.என்.ஜி.சி.யின் எண்ணெய் கிணறுகளில் ஏற்பட்ட கசிவால் தீ விபத்து ஏற்பட்டது. இதற்கெதிராக கதிராமங்கல போராட்டம் வெடித்தது.

தற்போதைய மசோதா இவை யாவற்றையும் கட்டுப்படுத்தாது என்பது மிகப்பெரிய முரண்பாடாக உள்ளது.

ii)ஒப்பந்தம் போடப்பட்ட திட்டங்களின் நிலை என்ன?

காவிரிப்படுகையை இரு  மண்டலங்களாக பிரித்து மொத்தம் 274 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு கடந்த ஆண்டு அனுமதி அளித்தது. நிலத்தில் 4368 சதுர கி.மீ. , வங்கக் கடலில் 4047 சதுர கி.மீ. பரப்பிலும் இத்திட்டம் அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து நிலம் கையகப்படுத்துகிற பணியும் நடைபெற்றது. நாகை, காரைக்கால், விழுப்புரம் மாவட்டங்களில் இவை வருகின்றன. அரை கிமீ தொலைவில் பிச்சாவரம் காடு!  காவிரி, மஞ்சளாறு, உப்பனாறு, தென்பெண்ணை என ஆறுகள் பலவும் தேங்காய்திட்டு முகத்துவாரம், பக்கிங்காம் கால்வாய், வேதாரண்யம் கால்வாய் என நீர்நிலைகள் பலவும் இத்திட்டப் பகுதிகளில் வருகின்றன.

தற்போதைய வேளாண் மண்டல மசோதாவானது ஏற்கனவே போட்ட இந்த பழைய 274 எண்ணெய் கிணறுகள் தோண்டுகிற திட்டத்தை   நிறுத்துமா என்பதை விளக்கவில்லை.

இறால் குட்டைகள்:

1990 களுக்கு பிறகு கொண்டுவரப்பட்ட இறால் பண்ணை, தமிழகத்திலியே அதிகம் அமல்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்ட பகுதியாக நாகை மாவட்டம் உள்ளது. காரைக்கால், சீர்காழி உள்ளிட்ட கடற்கரையோர பகுதிகளில் சுமார் 12,000 ஏக்கர் பரப்பளவில் இறால் குட்டைகள் செயல்பட்டதாக அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு தொடங்கப்பட்ட இறால் குட்டைகள் ஒரு சில ஆண்டுகளில் பண்ணை முதலாளிகளுக்கு லாபத்தையும் அரசுக்கு அந்நியச் செலாவணியும் ஈட்டிக் கொடுத்தது. ஆனால் அனுமதிக்கப்பட்ட உப்புநீர் இறால் குட்டைகளால் உள்நாட்டு நிலமானது, கடல் அடி நிலத்திற்கு சமமாக உப்புத்தன்மை கொண்ட நிலமாக நாசமாகிப் போனது.

அதோடு நிலத்தின் மேற்பரப்பில் இறால்களுக்கு போடப்பட்ட தீவினங்கள், மருந்துகள் நச்சுத்தன்மை வாய்ந்த உயிர்கொல்லிகளால் நண்டு, நத்தை மீன் மண்புழுக்கள் போன்ற இனங்களின் இயல்பான தன்மை பாதிக்கப்பட்டு அழிந்துவிட்டது .

இந்த கடுமையான பாதிப்புகளால் சுற்றுச்சூழல் பாதிக்கபட்ட பகுதியாக உள்ளது. இதே பகுதிகளில்தான் பதிமூன்றுக்கு மேற்பட்ட அனல் மின் நிலையங்கள் அமைப்பதற்கான திட்டப் பணிகள் அமைக்கப்பட்டு நிலம் கையகப்படுத்தப்பட்டது.

மேற்கூறிய திட்டங்களை நிறுத்துவது குறித்து வேளாண் மசோதாவில் எதுவும் தெரிவிக்கப்படவில்ல்லை.

பெட்ரோ கெமிகல் மண்டலம்:

தமிழக கடலோர மாவட்டங்களான நாகப்பட்டினம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் உள்ள 45 கிராமங்களில் பெட்ரோகெமிக்கல் மண்டலம் அமைக்கப்பட உள்ளதாக தமிழக அரசின் மாநில நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வீட்டுவசதி கழகம் சார்பில் சுமார் இரு ஆண்டுகளுக்கு முன்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இத்திட்டத்திற்காக  சுமார்  23 ஆயிரம் ஹெக்டேரில் ரூ.92 ஆயிரம் கோடி முதலீட்டில் பெட்ரோலிய பொருட்கள் உற்பத்திக்கான முதலீட்டு மையம் தொடங்கப்படும்’ எனக் கூறப்பட்டுள்ளது.மேலும், இத்திட்டப் பணிகளுக்காக சாலை மற்றும் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்காக மத்திய அரசு சார்பில் ரூ.1,146 கோடியை ஒதுக்கவுள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டது.

பெட்ரோலியம் மற்றும் எரிவாவுக்களை உள்நாடு மற்றும்  வெளிநாடுகளுக்கு  ஏற்றுமதி செய்வதற்கு  ஏற்ற கட்டமைப்புகளை உருவாக்குவது, எண்ணெய் எரிவாவு சுத்திகரிப்பு நிலையங்களை இப்பகுதிகளில் அமைப்பது  ஆகியவை இத்திட்டத்தின்  முதன்மையான நோக்கமாக கூறப்பட்டது.

கடலூர் சிப்காட் ரசாயன தொழிற்பூங்காவில் இயங்குகிற  தொழிற்சாலைகள்   ஆபத்தான சிகப்பு தரம் (Red category) பட்டயலில் வருபவை. ரசாயன பொருள் உற்பத்தி, பூச்சிக்கொல்லி மருந்து, பெயின்ட், சாயம்,  மற்றும் பாலி வினைல் குளோரைடு (PVC) போன்ற நச்சுமிக்க பொருள்கள் இங்கு உற்பத்தி செய்யப்படுகிறது.

இத்தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படுகிற  திட மற்றும் திரவக்கழிவுகள்  இப்பகுதி நிலத்தடி நீரை  நஞ்சாக்குகிறது. அதேசமயம் தொழிற்சாலைக்காக  அதிகளவில் நீரும் உறுஞ்சி எடுக்கப்படுகிறது.

முன்பு  30 அடியில் தண்ணீர் கிடைத்த நிலை மாறி  தற்போது  800 அடி ஆழத்திற்கு  நிலத்தடி நீர்மட்டம் சரிந்துவிட்டது. கிடைக்கிற  நிலத்தடி நீரும்  உப்புத்தன்மை கொண்டதாக மாறிவிட்டது. இத்தொழிற்சாலைக் கழிவுகள் பல வருடங்களாகத் தொடர்ந்து உப்பனாற்றில் விடப்படுவதால் ஆறு கெட்டுப் போயுள்ளது. இதனால் இந்த ஆற்றுப் பாசனத்தை நம்பி மேற்கொள்ளப்படுவருகிற பாசன பரப்புகள் குறிப்பாக நெல், கடலை, வெள்ளரி போன்ற பயிர்கள் பயிரடப்பட்டுவந்த நிலங்கள்,நிலத்தடி நீர் நஞ்சாகிப் போனதால்  பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது..

அதேபோல உப்பனாற்றில் மீன் பிடித்த வந்த மீனவர்களும் இந்த ஆற்று நீர் நஞ்சாகியதால்,மீன் இனங்கள் அழிந்து வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.தைக்கால் முகத்துவாரம் முதலாக ஆலப்பாக்கம்வரை வரையிலான  உப்பனாற்றங்கரையோர கிராமங்களில் மீன் பிடித்து வந்தவர்கள் இன்று வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனர்.நிலமும் நீரும் நஞ்சாகியதால் வாழ்வாதாரத்தை இழந்தும்,சுகாதாரக் கேட்டை எதிர்கொண்டும் நடைபிணம் போல வாழ்ந்துவருகிறார்கள்.

கடலூருக்குதெற்கே இருக்கிற பகுதிகள் பொதுவாக காவிரிப் பாசனப் பகுதியுடன் இணைத்து பேசப்படுவதில்லை.காவிரி பிரச்சனையை தஞ்சை ஜில்லாவோடு மட்டுமே பெரும்பாலும் சுருக்கப்படுகிறது..வீராணம் ஏரியை சென்னைக்கு குடிநீர் வழங்குகிற ஆதாரமாக மாற்றியபிறகு கடலூர் சிதம்பரம் பகுதிகள் முழுக்க கைவிடப்பட்ட பகுதியாக மாறிவிட்டது.இதுபோக எப்பொழுதெல்லாம் தமிழகத்தை வெள்ளம்,சுனாமி போன்ற இயற்கை பேரிடர் பாதிப்புகளுக்கு உள்ளாகின்றதோ அப்போதெல்லாம் இம்மாவட்டத்தில்தான்  பெரும்பாதிப்புகள் ஏற்படுகிறது.

இவ்வளவு சிக்கல்கள் நிலவுகிற பகுதிகளில்தான்  வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல பெட்ரோ கெமிகல் மண்டல திட்ட அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது.முன்னதாக தானே புயலாலும் இதர காரணங்களாலும் தொடங்கப்படாமல் இருந்து நாகர்ஜுனா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை தற்போது  50 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில், , அமெரிக்காவை சேர்ந்த ஹால்தியா நிறுவனம் கைப்பற்றி நடத்துவதாக தெரியவருகிறது.. இது குறித்து, அந்நிறுவன அதிகாரிகளுடன், முதல்வர் இ.பி.எஸ்., ஆலோசனை நடத்தியதும் செய்திகளில் வந்தது.

கடலூரின் இப்பகுதியை கைவிட்டுவிட்டு காட்டுமன்னார் கோவில்,மேல் புவனகிரி,கீரப்பாளையம்,பரங்கிப் பேட்டை மற்றும் குமராட்சி வட்டாரங்களை மட்டுமே பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் சேர்த்தது என்பது கடலூர் மாவட்ட அழிவிற்கு அரசு ஒப்புதல் வழங்குவதற்கு ஒப்பாகும்.

 

பகுதி-2

வேளாண் மண்டலம் நிர்வாக கட்டமைப்பு

முதல்வர் அறிவித்துள்ள மசோதாவில்,முதல்வரை தலைவராக கொண்டு 30 உறுப்பினர்களைக் கொண்ட தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அதிகார அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதற்கு ஆலோசனை கூற ஆலோசனைக் குழுவொன்று அமைக்கபடவுள்ளதகாவும் கூறப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்ட அளவிலான குழுவும் உருவாக்கப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்த நிர்வாக கட்டமைப்பு முறையானது, கிட்டத்தட்ட தமிழக பேரிடர் மேலாண்மை ஆணையத்தை ஒத்துள்ளது. தமிழக முதல்வரைத்  தலைவராகக் கொண்டு செயல்படுகிற இவ்வாணையத்தில் மாநில வருவாய்த் துறை மற்றும் உள்துறை அமைச்சர், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை செயலாளர்,தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர் மற்றும் நிதித்துறை செயலாளர் ஆகியோர்களை உறுப்பினர்களாக கொண்டு இயங்குகிறது. தமிழக அரசின் பேரிடர்கால செயல்பாடு குறித்த கடந்த கால வரலாற்றை பார்த்தோமென்றால் சில விலக்குகளைத் தவிர பெரும்பால பேரிடர் நிகழ்வுகளைக்  கையாள்வதில் தொடர்ச்சியாக  அரசு தோல்வியடைந்துள்ளதை பார்த்துவருகிறோம்.

தற்போது இதேபோன்றதொரு நிர்வாக கட்டமைப்பையே வேளாண் மண்டல அதிகார அமைப்பு பிரதிபளிக்கின்றது.உண்மையிலே வேளாண் மண்டல நிர்வாக கட்டமைப்பு எவ்வாறு இருக்க வேண்டும்?அவை வருமாறு

  • பாதுகாக்கப்பட்ட காவிரி வேளாண் மண்டல திட்டங்களை செயல்படுத்த, காவிரி வேளாண் மண்டல ஆணையம் ஒன்று  உருவாக்கப்பட வேண்டும்.இந்த அமைப்பு  ஒரு பொருளாதாரத் தன்னாட்சி பெற்ற நிறுவனமாக அரசு உருவாக்க வேண்டும்.
  • இந்த ஆணையமானது காவிரி வேளாண் மண்டலத்தின் நீடித்த சமூக வளர்ச்சிக்கான திட்டங்களை வடிவமைக்க வேண்டும்.அதற்காக அறிவுஜீவிகள், வேளாண்மை அறிஞர்கள் மற்றும் விவசாயப் பிரதிநிகள் கொண்ட குழு அமைத்து ஆலோசனைப் பெற்று அமல்படுத்த முயற்சிக்கவேண்டும்.
  • இந்த ஆணையமானது கூட்டறவு உற்பத்திக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.
  • கல்லணைக்கு கீழே உள்ள சுமார் 47,000 கிலோ மீட்டர் வாய்க்கால்களை முறையாக பராமரிப்பது,கடல் நீர் உட்புகாமல் காவிரி படுகை ரேகுலேட்டர்களை பராமரிப்பது,ஆற்று மணல் கொள்ளையை தடுப்பது  என காவிரிப் படுகையில் நீர் மேலாண்மை திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்.
  • கால நிலை மாற்றத்தால் ஏற்பட்டு வருகிற கடல் நீர் மட்ட உயர்வு சிக்கலானது கடலோர காவிரிப் படுகை மாவட்டத்தை மூழ்கடிக்க கூடிய அபாயமுள்ளது.இந்த சிக்கலையும் இந்த ஆணையம் முதன்மையாக கவனத்தில் எடுத்துக் கொள்ளவேண்டும்.

முடிவாக:

காவிரிப்பாசன படுகையில் முக்கியமாக தீர்க்கப்படவேண்டிய மேற்கூறிய சிக்கல்கள் தீர்க்கப்படாமல் தொடர்வதும், புதிய நிர்வாக அமைப்பு செயல்திறனற்று ஒப்புக்கு அமைப்பதும் நீண்டகாலமாக விவசாயிகள் எதிர்பார்க்கிற மாற்றங்களை சாதிப்பதற்கும் காவிரிப் படுகையை பாதுக்காப்பதற்கும் உதாவது.

சில ஆண்டுகளுக்கு முன்பாக தமிழகத்தில் சுமார் இருநூறூக்கும் மேற்பட்ட காவிரிர்ப் படுகை விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டது நினைவிருக்கலாம்.

நெல்மணிகள் பால் பிடிக்கும் பருவத்திலே தண்ணீர் நின்றுபோனது, கடை மடைப் பகுதிக்கு காவிரித் தண்ணீர் வந்து சேராதது,பொய்த்து போன பருவமழையால் பயிர்கள் கருகிப் போனது, கடன் தொல்லை,நில உரிமையில் சமச்சீரற்ற நிலைமை, இடுபொருள் செலவு பெருக்கம்,விளைச்சலுக்குக் கிடைக்கும் குறைவான விலை,பசுமைப்புரட்சியின் விளைவாக ரசாயன உரங்களின் பயன்பாடு காரணமாக நிலத்தடி நீர் மட்டத்தின் சரிவு விவசாயிகளின் தற்கொலைக்கு முக்கிய காரணமாக உள்ளது.இவற்றோடு பேரழிவுத் திட்டங்களும் டெல்டா மாவட்டங்களை சூறையாடி வருவதால் விவசாய நெருக்கடி மிகத் தீவிரமாகியது.

தற்போது பெரும் ஆர்ப்பாட்டத்துடன் நிறைவேற்றப்பட்டுள்ள  வேளாண் மண்டல சட்டமானது மேற்கூறிய சிக்கலையெல்லாம்  தீர்க்கவேண்டும். அதுவே நமது கோரிக்கையும் கூட!

  • அருண் நெடுஞ்சழியன்

 

 

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW