அமித் ஷா கூறுவது பொய்; பாகிஸ்தானில் இஸ்லாமியர் அல்லாதோர் எண்ணிக்கை 23 % இருந்து 3.7 % ஆக குறையவில்லை!

17 Dec 2019

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை மக்களவையில்  சமர்பித்துப் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மசோதாவை நியாயப்படுத்துவதற்கு பல புள்ளி விவரங்களை நாடாளுமன்றத்தில் முன்வைத்தார். அதில் சுதந்திரம் பெற்ற 1947 ஆம் ஆண்டில் பாகிஸ்தானில் இஸ்லாமியர்கள் அல்லாதவர்கள் மக்கள் தொகை 23 விழுக்காடு  இருந்ததாகவும் 2011 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 3.7 விழுக்காடாக குறைந்ததாகவும் தெரிவித்தார். போலவே 1947 இல் வங்காளதேசத்தில் இஸ்லாமியர்கள் அல்லாதோர் மக்கள் தொகை  22 விழுக்காட்டிலிருந்து 2011 ஆம் ஆண்டில் 7.8 விழுக்காட்டிற்கு சரிந்து விட்டது என்றார்.

பிறகு மாநிலங்களவையில் மசோதா மீதான வாக்கெடுப்பின் போது பேசிய அமித்ஷா, பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசத்தில் இஸ்லாமியர்கள் அல்லாதவர்கள் மக்கள் தொகை மொத்தமாக 20 விழுக்காடு  சரிந்துள்ளது என்றார். பாகிஸ்தானிலும் வங்காளதேசத்தில் மதச் சிறுபான்மையினர் எங்கு சென்றிருப்பார்கள்? ஒன்று அவர்கள் அங்கே துன்புறுத்தலுக்கு உள்ளேயிருக்க வேண்டும் அல்லது இந்தியாவில் தஞ்சம் அடைந்திருக்க வேண்டும் என்றார்.

முதலில் அமித்ஷா  கூறுவது போல 1947 ஆம் ஆண்டில் பாகிஸ்தானில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை.பிறகு எந்த ஆதாரத்தின் பேரில் பாகிஸ்தானில் இஸ்லாமியர்கள் அல்லாதவர்கள் மக்கள் தொகை 23(1947  ஆம் ஆண்டில்) விழுக்காட்டில் இருந்து தற்போது 3.7 விழுக்காடாக குறைந்ததுள்ளது எனக்  கூறுகிறார்?. சொல்லப்போனால் இது கற்பனையில்  கூறிய பொய்யான தகவல் ஆகும்.

ஏனென்றால் 1951 ஆம் ஆண்டில்தான் பாகிஸ்தானில் முதல் முதலாக மக்கள் தொகை கணக்கெடுப்பே நடத்தப்பட்டது. வங்காளதேசமாக  பிரியாத காலகட்டத்தில் மேற்கு  பாகிஸ்தான் மற்றும் கிழக்கு பாகிஸ்தான் ஆகிய இரு பிரதேசங்களையும் சேர்த்தே 14.20 விழுக்காடுதான் இஸ்லாமியர்கள் அல்லாதோர் மக்கள் தொகை இருந்துள்ளது.

மேலும் இஸ்லாமியர்கள் அல்லாத  14.20 விழுக்காட்டு மக்கள் தொகையினரும் பாகிஸ்தான் முழுக்க பரவலாக இல்லை. மேற்கு பாகிஸ்தானில் (தற்போதைய பாகிஸ்தான்) 3.44 விழுக்காடும் கிழக்கு பாகிஸ்தானில் (தற்போது வங்காளதேசம்) 23.20 விழுக்காடுமாக இருந்தார்கள்.

1951 ஆண்டில் இருந்து அண்மைக்காலம் வரையிலும் பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசத்தில் மத அடிப்படையிலான மக்கள் தொகையை ஆய்வு செய்யவேண்டுமென்றால், மேற்கு பாகிஸ்தானையும் (தற்போதைய பாகிஸ்தான்) கிழக்கு பாகிஸ்தானையும் (தற்போதைய வங்காளதேசம்) தனித் தனித்தனியே காணவேண்டும்.

மேற்கு பாகிஸ்தான்

1951 ஆம் ஆண்டில் மேற்கு பாகிஸ்தானின் (தற்போதைய பாகிஸ்தான்) மொத்த மக்கள் தொகையில் 96.56 விழுக்காடு இஸ்லாமிய மதத்தினர் இருந்தார்கள். பாகிஸ்தானில் இஸ்லாம் மதப்பிரிவினர் மக்கள் தொகை புள்ளி விவரங்கள் வருமாறு

பகுதி இஸ்லாமியர்கள் மக்கள் தொகை(%)
பாகிஸ்தான்(மொத்தமாக) 85.80
பலுசிஸ்தான் 98.5
கிழக்கு வங்காளம் 76.8
கராச்சி 96
NWFP 99.9
பஞ்சாப் 97.9
சிந்த் 90.5

பிறகு 1961 ஆம் ஆண்டில் மேற்கு பாகிஸ்தானில் (தற்போதைய பாகிஸ்தான்) மேற்கொள்ளப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பில் இஸ்லாமியர்கள் அல்லாதோர் மக்கள் தொகை 2.83 விழுக்காடாக இருந்தது.

1971 ஆம் ஆண்டில் கிழக்கு வங்காளம், வங்காளதேசமாக தனி நாடக பிரிந்தது பிறகு 1972 ஆம் ஆண்டில்  மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில், இஸ்லாமியர்கள் அல்லாதோர் மக்கள் தொகை 3.25 விழுக்காடாக அதிகரித்தது. அதன் பிறகு 1981 ஆம் ஆண்டுகணக்கெடுப்பில் 3.30 விழுக்காடாக ஆக இருந்துள்ளது.

1981 ஆம் ஆண்டுக்கு பிறகான அடுத்த பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக பாகிஸ்தான் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தவில்லை. பிறகு 1998 ஆம் ஆண்டில் மேற்கொண்ட கணக்கெடுப்பில், இஸ்லாமியர்கள் அல்லாதோர் மக்கள் தொகை 3.70 விழுக்காடாக இருந்தது. இதன் பிறகு 2017 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட  கணக்கெடுப்பின் மத அடிப்படையிலான மக்கள் தொகை புள்ளி விவரங்களை இனிதான் பாகிஸ்தான் அரசு  வெளியிடும்.

மேற்கூறிய பாகிஸ்தான் மக்கள் தொகை கணக்கெடுப்பு புள்ளிவிவரங்களில் இருந்து  சில விஷயங்கள் தெளிவாகிறது. அதாவது

  1. பாகிஸ்தான் மக்கள் தொகையில் இஸ்லாமியர்கள் அல்லாதோர் மக்கள் தொகையானது 23 விழுக்காடாக  என்றுமே இருந்ததில்லை.
  2. கிழக்கு வங்காளம் பிரிவதற்கு முந்தைய ஒன்றுபட்ட பாகிஸ்தானில் கூட இஸ்லாமியர் அல்லாதோர் மக்கள் தொகை (1951 கணக்கெடுப்பின் படி அதிக பட்சம் 14.2விழுக்காடு) 15 விழுக்காட்டை தாண்டவில்லை.
  3. ஒவ்வொரு பத்தாண்டுகளிலும் பாகிஸ்தானில் இஸ்லாமியர்கள் அல்லாதோர் மக்கள் தொகை தோராயமாக 3.5 விழுக்காடாகவே இருந்துள்ளது.

கிழக்கு பாகிஸ்தான் (தற்போதைய வங்காளதேசம்)

கிழக்கு வங்காளத்தில் 1951 ஆம் ஆண்டு (ஒன்றிணைந்த பாகிஸ்தான்) கணக்கெடுப்பின்படி இஸ்லாமியர்கள் அல்லாதோர் மக்கள் தொகை 23.20 விழுக்காடாகவும் 1961 ஆம் ஆண்டில் கணக்கெடுப்பில் (இஸ்லாமியர்கள் அல்லாதோர் மக்கள் தொகை ) 19.57 விழுக்காடாகவும் பின்னர் 1991  ஆம் ஆண்டு  கணக்கெடுப்பில் 11.70 விழுக்காடாகவும் 2001  ஆம் ஆண்டு கணக்கெடுப்பில் 10.40  விழுக்காடாகவும் சரிவுவீதத்தில் சென்றது. இறுதியாக 2011ஆம் ஆண்டு  கணக்கெடுப்பில் இஸ்லாமியர்கள் அல்லாதோர் மக்கள் தொகை 9.40 விழுக்காடாக சரிந்தது.

பாஜக வின் பொய் பிரச்சாரம்:

பாஜகவின் பிரச்சாரம்  தகவல்கள் கீழ்வருமாறு,

  1. சுதந்திரம் பெற்ற போது(1947) பாகிஸ்தானில் இஸ்லாமியர்கள் அல்லாதோர் மக்கள் தொகை 23 விழுக்காட்டில் இருந்து  2011 ஆம் ஆண்டில் 3.7விழுக்காடாக சரிந்துள்ளது.
  2. வங்காளதேசத்தில்  இஸ்லாமியர்கள் அல்லாதோர் மக்கள் தொகை 22 விழுக்காட்டில் இருந்து 2011 ஆம் ஆண்டில் 7.8 விழுக்காடாக சரிந்துள்ளது
  3. மேற்கூறிய இரு நாட்டில் மதப் பெரும்பாண்மையினரின் பெரிய  துன்புறுத்தல் காரணமாகவே  இஸ்லாமியர்கள் அல்லாதோர் மக்கள் தொகை குறைந்து விட்டது.

இந்த மூன்று தகவல்களைத் தான் அமித்ஷா மீண்டும் மீண்டும் பல்வேறு இடங்களில் பேசி வருகிறார்.

முதலில் நாம் கூறியவாறு, 1947 இற்கும் 1951 இற்கும் இடைப்பட்ட நான்கு ஆண்டுகளில் பாகிஸ்தானில் இஸ்லாமியர் அல்லாதோர் மக்கள் தொகை குறித்து எந்தவித புள்ளிவிவரங்களும் இல்லை.மேலும் 1947 இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின்போது பாகிஸ்தானில் இருந்து ஏராளமான இஸ்லாமியர் அல்லாத மக்கள் தொகையினர்  இந்தியாவிற்கு தஞ்சம் புகுந்தனர். போலவே இந்தியாவில் இருந்து இஸ்லாமியர்களும் பாகிஸ்தானில் குடிபெயர்ந்தனர். 1947 பிரிவினையும் அதன் தொடர்ச்சியாக நடைபெற்ற மாபெரும்  மக்கள் இடப்பெயர்வானது, பெரும் படுகொலைகளைக்கும் உடமை இழப்புகளுக்கும் வித்திட்டன.

இந்நிலையில் பாஜக மேற்கொள்கிற ஆதாரமற்ற  பிரச்சாரங்கள் எவ்வளவு பொய்யானது என்பதை ஒவ்வொன்றாக பார்க்கலாம்.

முதலாவது,

பாகிஸ்தானில் இஸ்லாமியர்கள் அல்லாதோர் மக்கள் தொகை 23 விழுக்காடு என்பதே தவறு. கிழக்கு வங்காளத்தில் மட்டுமே இஸ்லாமியர்கள் அல்லாதோர் மக்கள் தொகை 23 விழுக்காடு இருந்துள்ளது. 1951 இல் மேற்கு மற்றும் கிழக்கு பாகிஸ்தானை சேர்த்தால்  மொத்தமாக 14.20 விழுக்காடு அளவே இஸ்லாமியர்கள் அல்லாதோர் மக்கள் தொகை உள்ளது தெளிவாகிறது.

இரண்டாவது,

பாகிஸ்தானில் இஸ்லாமியர்கள் அல்லாதோர் மக்கள் தொகை  23 விழுக்காட்டிலிருந்து தற்போது 3.7 விழுக்காட்டிற்கு சரிந்து விட்டது என பாஜக கூறுகிறது. இதுவுமே தவறு, மேற்கு பாகிஸ்தானாக இருந்தபோதும் பாகிஸ்தானாக இருந்தபோதும் இஸ்லாமியர்கள் அல்லாதோர் மக்கள் தொகை 1951 ஆம் ஆண்டு முதல் 1998 வரையிலும் தோராயமாக 3.5 விழுக்காட்டை ஒட்டியே இருந்துள்ளது. ஒவ்வொரு பத்தாண்டு கணக்கெடுப்பும் இதற்கு ஆதரமாக உள்ளன.

1951-3.44%

1961-2.8%

1972-3.25%

1981-3.33%

1998-3.70%

மூன்றாவது,

வங்காளதேசத்தில் இஸ்லாமியர்கள் அல்லாதோர் மக்கள் தொகை  22 விழுக்காட்டிலிருந்து தற்போது 7.8 விழுக்காட்டிற்கு சரிந்து விட்டது என அமித்ஷா கூறுகிறார், இதுவுமே தவறாக உள்ளது. சரிவு என்பது செரிதான் என்றாலும் புள்ளிவிவரம் தவராகவுள்ளது. 1951 இல் 23  விழுக்காட்டிலிருந்து  2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 9.40 விழுக்காடாக சரிந்துள்ளது.

நான்காவதாக,

இஸ்லாமியர்கள், பெரும்பான்மை மக்கள் தொகையாக வாழ்கின்ற நாட்டில் மதச் சிறுபான்மையினராக  இருந்த இந்து, பௌத்த மதத்தை சேர்த்த மக்கள் துன்புறுத்தலுக்கு உள்ளானதால் மட்டுமே பெரியளவில் இஸ்லாமியர்கள் அல்லாதோர் எண்ணிக்கை வங்காளதேசத்தில் சரிந்துள்ளது என பாஜக கூறுகிறது. ஆம், சிறுபான்மையினர் துன்புறுத்தலுக்கு ஆளாயினர் மட்டுமின்றி படுகொலை செய்யப்பட்டனர். இதில் பகுதி உண்மை இருந்தாலும், மத நெருக்கடியால் மட்டுமே மக்கள் புலம் பெயரவில்லை. வறுமை, வேலைவாய்ப்புக்காக, நல்ல வாழ்க்கை நிலமைக்காகவும் இந்தியாவில் இஸ்லாமியர்கள் அல்லாதோர் மட்டுமின்றி  பெருமெண்ணிக்கையில் இஸ்லாமியர்களும் இடம்பெயர்ந்தனர்

ஆக, மேற்கூறிய புள்ளிவிவர ஆதாரங்களின் அடிப்படையில் பார்த்தால் அமித் ஷா கூற்றுக்கு துளியும் தொடர்பில்லை என்பது தெளிவாகிறது. குடியிரிமை சட்டத் திருத்த மசோதாவானது  இந்து ராஷ்டிரா சித்தாந்தத்தை நடைமுறையாக்க முயல்கிற இந்துத்துவ அடிப்படைவாத அரசின் அரசியல் சாசன விரோத நடவடிக்கையே. மத அடிப்படையில் குடியிரிமையை தீர்மானிக்க முயல்கிற இந்த சட்டத்தை நியாயப்படுத்த பாஜக மேற்கொள்கிற அனைத்து பிரச்சாரமும் அடிப்படை ஆதாரம் அற்றவை..

ஆதாரம்:

https://www.indiatoday.in/india/story/pakistan-bangladesh-non-muslim-population-citizenship-amendment-bill-bjp-1627678-2019-12-12?fbclid=IwAR3eiGA1ekUs3zycwwy80E7BUBx5K2EQ9LfywkKxvsyDYUYNeBNh5LK-3K8

ஆங்கிலம் வழி தமிழில்-அருண் நெடுஞ்செழியன்

——————————————————————————————————————————-

ஹிட்லருக்கு ஒரு கொயபல்சைப் போல மோடிக்கு ஒரு அமித் ஷா உள்ளார் என்பதற்கு மேற்கூறிய பொய் தகவல்களே சிறந்த உதாரணமாக கூற முடியும். நாட்டின் உள்துறை அமைச்சர் என்ற பொறுப்பிற்கு சற்றும் பொருத்தமில்லாமல், உண்மைக்கு புறம்பாக வாய்க்கு வந்த புளுகுமூட்டைகளை நாடாளுமன்றத்தில் அள்ளிவிட்ட அமித்ஷா கொயபல்சையும் மிஞ்சி விட்டார் என்றே கூறவேண்டும். இத்தனை தகவல் பிழைகள் கொண்ட ஆதாரமற்ற புள்ளி விவரங்களை வைத்துத்தான் குடியிரிமை சட்டத்திருத்த மசோதாவை நியாயப்படுத்துவதற்கு பாஜகவும் இதர இந்து அடிப்படைவாத அமைப்புகளும் வெட்கமின்றி  கூப்பாடு போடுகின்றன.

-அருண் நெடுஞ்செழியன்

 

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW