அணைபோட துணைநில் தோழா! அரண் அமைக்க வலிமைசேர் தோழா!

ஒரே சந்தை, ஒரே தேசம், ஒற்றை ஆட்சி என அதிகாரம் ஒன்றுகுவிக்கப்பட்டு மோடி தலைமையிலான சிறு கும்பல் சர்வாதிகாரத்துக்கு வழிவகுத்துள்ளது. இதனை நாம் காவி-கார்ப்பரேட் சர்வாதிகாரம் என்றழைக்கிறோம். உலகமய வளர்ச்சி என்ற பொருளாதார கொள்கையும், ஏகபோக இந்திய பெருமுதலாளிய சக்திகளின் நலனும், பார்ப்பனிய கருத்தியல் அடிப்படையிலான இந்துத்துவ தேசியமும் ஒன்றிணைந்த இந்த வரலாற்று கட்டத்தில் இந்திய அரசு ஒரு கோரமான வடிவைத்தை நோக்கி நகர்வதைதான் ‘பாசிச அபாயம்’ என்றழைக்கிறோம்.
எதிர்முகாமில் உலகமய சந்தைப் பொருளாதார எதிர்ப்பு இல்லாத ஆற்றல்கள் இந்திய தேசிய வெறியூட்டல், பயங்கரவாதப் பூச்சாண்டி, இந்துப்பெரும்பான்மைவாதத்திற்கு முன்னால் சிதறடிக்கப்படுகின்றனர். ஆள்வோர் யாரென்று அறியாமல், பண்பறியாமல் பகைமுடிக்க இயலுமா? தத்துவ துணையும், கோட்பாட்டு தெளிவும் பரந்துபட்ட மக்களின் பங்கேற்பும் இன்றியமையாதது என்பதை ஒவ்வொரு நாளும் நடைமுறையில் காட்டிநிற்கின்றது.
அரசை விமர்சிப்பதோ அல்லது கேள்விகேட்பதோ தேச விரோதமாக்கப்பட்டு வருகிறது. முகநூல் எழுதினால் வழக்கு. தெருமுனைக்கூட்டம், பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம் என எதற்கும் அனுமதி மறுப்பு. நீதிமன்றப் படியேறினாலும் இழுத்தடிப்பு. அரங்க உரிமையாளர்கள் பலரும் அரங்கம் கொடுக்கக்கூட அஞ்சுகின்றனர். இத்தனையும் தாண்டி அரசியல் நிகழ்வுகள் நடத்தப்படும்போதும் பேசினால், முழக்கம் போட்டால், பங்கேற்றால் என எல்லவாற்றிற்கும் கெடுபிடிகள், வழக்கு, சம்மன், நீதிமன்றம், கைது என்பது வாடிக்கையாகிவிட்டது. பத்தாண்டுக்கு முன்பு போடப்பட்ட வழக்குகளும் தூசி தட்டப்பட்டு சம்மன்கள் தேடி வருகின்றன.
காவிரி, காவி பயங்கரவாத எதிர்ப்பு, ஸ்டெர்லைட் எதிர்ப்பு, ஹைட்ரோகார்பன் எதிர்ப்பு, எஸ்.சி/எஸ்.டி. வன்கொடுமை சட்டத்திருத்த எதிர்ப்பு, நீட் எதிர்ப்பு என ஒவ்வொரு உரிமைப் போராட்டக் களமும் தவறாமல் வழக்குகளை சந்திப்பதையும் உள்ளடக்கியே இருக்கின்றன. சென்னை, திருச்சி, தஞ்சை, மதுரை என நாம் பணியாற்றும் ஒவ்வொரு மாவட்டத்திலும் நம் தோழர்களை வழக்குகளால் முடக்கப் பார்க்கும் அரசு ஒருபுறம்.
அரசியல் கார்ப்பரேட்மயமாகிவிட்டது. மூலதன நலனைக் காக்க பல்லாயிரம் கோடிகள் இறைக்கப்படுகின்றன. இவையன்றி இந்துராஷ்டிர வெறியோடு உழைக்கும் பன்னூறு முழுநேர ஊழியர்கள். இவற்றோடு அரச நிறுவனங்களின் துணையோடு காவி,கார்ப்பரேட் முகாம் எதிரில் நிற்கிறது. மக்கள் முகாமில் நாம் கொள்கைப் பற்றுடனும் கோட்பாட்டுத் தெளிவுடனும் நிற்கிறோம். விரல் விட்டுஎண்ணக்கூடிய அளவில் முழுநேர ஊழியர்களும் பகுதிநேர ஊழியர்தம் வலைப்பின்னலும் கொண்டிருக்கிறோம். ஆனால், இது போதவே போதாது. இதை திடப்படுத்தவும் விரிவாக்கவும் வேண்டும். இந்நிலையில்தான், அரசு நெருக்கடியோடு நிதிநெருக்கடியும் எம்மை சூழ்ந்து நிற்கிறது.
கடந்த பத்தாண்டுகளாக வர்க்க கண்ணோட்டத்துடன் சாதி, மத ஆதிக்கத்தை மறுக்கும் புரட்சிகர சனநாயக தமிழ்த்தேசிய அரசியலை நாம் முன்னெடுத்து வருகிறோம். முள்ளிவாய்க்கால் படுகொலையோடு புதிய பரிணாமத்தை அடைந்த ஈழப் போராட்டத்திற்கு ஆதரவான இயக்கத்தில் இடைவிடாது பங்காற்றிவருகிறோம். எழுவர் விடுதலை, நீட் எதிர்ப்பு, புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு போன்ற பல்வேறு தேசிய இன உரிமைசார் போராட்டக் களங்களுக்கு வலிமை சேர்த்து வருகிறோம். தர்ம்பரி வன்முறையோடு சாதி ஆதிக்க எதிர்ப்பு அரசியல் புதிய பரிணாமத்தை அடைந்திருக்கும் நிலையில் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக தொடர்ந்து பாடுபட்டு வருகிறோம். கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு, ஸ்டெர்லைட் எதிர்ப்பு, எட்டுவழிச் சாலை எதிர்ப்பு, ஹைட்ரோகார்பன் எதிர்ப்புப் போன்ற பேரழிவுத் திட்டங்களுக்கு எதிரான இயக்கத்தில் முனைப்புடன் பங்கேற்று வருகிறோம். உலகமயச் சூழல் தோற்றுவித்துள்ள நிலைமைகளால் நம்மை நோக்கி ஈர்க்கப்படும் புதிய இளைஞர்களை அமைப்பாக்குவதில் வெற்றிகள், பின்னடைவுகளின் வழியாக செறிவானப் படிப்பினைகளைப் பெற்றுள்ளோம்.
தமிழ்ச் சமூகத்தின் இன்றைய வரலாற்றுக் கட்டத்தில் புரட்சிகரமான தமிழ்த்தேசிய அரசியலை முன்னுக்கு கொண்டுவரும் கடமை நம் எல்லோர் முன்பும் இருக்கிறது. இப்பத்தாண்டுகளில் ஏற்பட்டுள்ள அரசியல் பொருளியல் நெருக்கடிகள் புதிய ஆற்றல்களை கணிசமாக அரசியல் களத்திற்கு இழுத்துவந்த போதும் முதலாளித்துவ சீர்திருத்த அரசியல் போக்கு வரலாற்று வழியில் தான் பெற்றிருக்கும் கருத்தியல் மேலாண்மையின் வழியாகவும் பொருளாதாரப் பலத்தின் வழியாகவும் அவ்வாற்றல்களை உள்வாங்குவதும் சிதறடிப்பதும் நடந்து வருகிறது. இதை எதிர்கொண்டு புரட்சிகர தமிழ்த்தேசிய அரசியலை வளர்த்தெடுப்பதற்குப் பொருளாதார ஆதரவினைப் பெருக்கியாக வேண்டிய கட்டாயம் நமக்கு இருக்கிறது. ஆகவே, தங்களுடைய ஆதரவை கடந்த காலம் போலவே தொடரவும் இன்னும் அதிகமாக நல்கவும் வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
மக்கள் முகாமுக்கு வலிமை சேர்க்க அணியமாவோம். உற்றார், உறவினர், சுற்றத்தாரென எல்லோரிடமும் நம்பிக்கையுடன் நமது அரசியலைப் பேசுவோம்…… கருத்தியல் அரணைக் கட்டமைத்திடுவோம்! அமைப்பாய் வடிவம் கொள்வோம்… அரசியல் நிறுவனங்களைக்கட்டியெழுப்புவோம்….. காட்டாற்று வெள்ளமாய் கரைபுரண்டுவரும் காவி-கார்ப்பரேட் படையெடுப்புக்கு அணைபோட சிறுதுளிகளாய் சேர்ந்து பெருவெள்ளமாய் எழுவோம்….. உழைப்போ பொருளோ உளமார்ந்த ஊக்கமோ எதுதரினும் ஆக்கமே, ஏற்படும் தாக்கமே தந்திடுக! தந்திடுக! தந்திடுக!
Google pay: 9384640622
ARAVINTHA KUMAR T
IDBI BANK, a.c no: 0005 1040 0063 2393
BRANCH: GREAMS ROAD, CHENNAI. IFSC: IBKL000 0005
தொடர்புக்கு: 9500056554 –
தமிழ்த்தேச மக்கள் முன்னணி
7010084440, 9443184051