தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் தலைவர் மீ.த.பாண்டியன், தஞ்சை மாவட்டச் செயலாளர் அருண்சோரி மற்றும் பல்வேறு அமைப்புத் தோழர்கள் மீதும் தொடர்ந்து வழக்குப் பதிவு. தமிழக அரசின் பேச்சுரிமை, கருத்துரிமை மறுப்புக்கு கண்டனம்
அண்மையில் நடந்த அரங்கக் கூட்டங்கள், பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் ஆகியவற்றை முன்னிட்டு தமிழக அரசின் காவல்துறை பல்வேறு இயக்க ஆற்றல்கள் மீது வழக்குப்போட்டு வருவது மிகுந்த கண்டனத்திற்குரியது. இதில் பெரும்பாலானவைக் காவல்துறையில் அனுமதி பெற்று நடத்தப்பட்ட நிகழ்வுகளாகும்.
கடந்த ஆகஸ்ட் 28 இல் ஈகி செங்கொடியின் நினைவுநாளை முன்னிட்டு ஏழு தமிழர் விடுதலைக் கட்சி சார்பாக நடந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் தலைவர் மீ.த.பாண்டியன் மீதும் ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத்தைச் சேர்ந்த தோழர் விவேக்கின் மீதும் பிரிவு 123A, 505(20) ஆகிய சட்டப்பிரிவுகளின்கீழ் காவல்துறை வழக்குப் பதிந்துள்ளது. இந்தப் பொதுக்கூட்டம் காவல்துறையின் அனுமதிப் பெற்று நடத்தப்பட்டதாகும். முன்னதாக, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் நடத்தப்பட்ட ஸ்டெர்லைட் படுகொலை எதிர்ப்பு அரங்கக் கூட்டத்தில் உரையாற்றியதற்காக தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் தலைவர் மீ.த.பாண்டியன் மற்றும் தமிழ்த்தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச்செயலாளர் தியாகு, தோழர் குமரன் ஆகியோர் மீது இருபது நாட்களுக்கு முன்பு வழக்கு பதிந்தது காவல்துறை. தஞ்சையில் ஏழு தமிழர் விடுதலையை வலியுறுத்தி அனைத்துக் கட்சிகளின் உண்ணாநிலைப் போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் அந்த இடத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்ததற்காக தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் தஞ்சை மாவட்டச் செயலாளர் அருண்சோரி மற்றும் பிற அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் என ஏழு பேர் மீது போக்குவரத்துக்கு இடையூறு, மக்களுக்கு இடையூறு போன்ற காரணங்களின் பெயரால் வழக்குப் போட்டுள்ளனர். ஓராண்டுக்கு முன்பு ஈகி பகத்சிங் நினைவுநாள் அன்று பகத் சிங் தொடர்பான ஆவணப்படம் திரையிட முயன்றதற்காகப் போடப்பட்ட வழக்கு, ஓராண்டுக்கு முன்பு மீத்தேன் திட்டத்தை எதிர்த்து சரபோஜி கல்லூரியில் நடத்திய போராட்டத்திற்காகப் போட்டப்பட்ட வழக்கு ஆகியவற்றிற்காக தோழர்கள் அருண்சோரி, பிரபாகரன், ஆலம்கான், அரவிந்த் ஆகியோரைக் கைது செய்து சொந்த பிணையில் விட்டுள்ளது காவல்துறை.
இப்படியாக, அரங்கக் கூட்டம், பொதுக்கூட்டங்களில் பேசியதற்காகவெல்லாம் வழக்குப் போட்டு கருத்துரிமை, பேச்சுரிமைக்கு சவால்விடுகிறது தமிழக அரசு. காவல் நிலையம், நீதிமன்றம் என அரசியல் முன்னணிகளை அலைக்கழிப்பதன் மூலம் மக்கள் விரோதக் கொள்கைகளை மக்களிடம் அம்பலப்படுத்துவதை தடுக்க முயல்கிறது தமிழக அரசு. இன்னொருபுறம், மோடி-அமித் ஷா கும்பலின் அடிமையாக இருக்கும் தமிழக ஆட்சியாளர்கள், இந்துத்துவ ஆற்றல்கள் தமிழகத்தில் வேர்பிடிப்பதற்கு வசதியாக போட்டியற்ற அரசியல் களத்தை உருவாக்கித் தருகின்றனர். அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள கருத்துரிமை, பேச்சுரிமை, போராடும் உரிமை, மக்களைத் திரட்டும் உரிமை ஆகியவற்றிற்கு எதிராக வழக்குகளால் வாய்பூட்டுப் போடுவதை தமிழ்த்தேச மக்கள் முன்னணி சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன். தமிழக அரசு சனநாயகத்திற்கு எதிரான இந்த சர்வாதிகாரப் போக்கை கைவிட வேண்டும். இது போல் அரசியல் முன்னணிகள் மீது போட்டுள்ள வழக்குகளைத் திரும்பப் பெறவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
பாலன்,
பொதுச்செயலாளர், தமிழ்த்தேச மக்கள் முன்னனி