மோடி – ஜி ஜின்பிங் மாமல்லபுர சந்திப்பு – இராஜதந்திர அரசியல் குறித்து தமிழகத்தின் பார்வைகள்
திராவிட முன்னேற்றக் கழகத்தின் இந்தி எதிர்ப்புப் போராட்ட அறிவிப்பை ஒட்டி ஆளுநர் சந்திப்பு நடந்தபோதே ஓர் யூகம் எழுந்தது. மோடி-ஜி ஜின்பிங் சந்திப்பை ஓட்டி எதிர்ப்புப் போராட்டங்களோ எதிர்ப்புப் பிரச்சாரங்களோ வேண்டாமென்று வலியுறுத்தப்பட்டதாகப் செய்திகள் வந்தன. திமுக இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தை ஒத்திப் போட்டது மட்டுமின்றி சில நாட்களுக்கு முன்பு சீன அதிபர் ஜி ஜின்பிங்கை வரவேற்று ஆரவாரமிக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதை தொடர்ந்து மதிமுகப் பொதுச்செயலாளர் வைகோவும் சீன அதிபரை வரவேற்று அறிக்கை வெளியிட்டார். பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ‘தோழர் ஜின் பிங்கே வருக’ என்று அறிக்கை வெளியிட்டது. இந்நிலையில் சமூக ஊடங்களிலும் மோடி-ஜி ஜின்பிங் சந்திப்புப் பற்றி சில கருத்துகள் முன்வைக்கப்பட்டன. அதில் ஒன்றாக மோடியே திரும்பிப் போ! ஜிங்பிங்கே வருக! என்று முகநூல், டிவிட்டர் பதிவுகள் போடப்படுவதைக் கண்டு வருகிறோம். மோடி – ஜி ஜின்பிங் சந்திப்பைத் தமிழகம் எதிர்கொண்ட விதத்தை வைத்து சர்வதேச அரசியல் குறித்து தமிழகத்தின் பல்வேறு அரசியல் முகாம்களும் எத்தகைய கண்ணோட்டத்தைக் கொண்டிருக்கின்றன என்று பார்ப்போம்.
Gobackmodi என்பது தமிழகம் தொடர்ந்து முன்வைத்துக் கொண்டிருக்கும் முழக்கம். ஆனால், welcome ZI-XINPING என்ற முழக்கம் புதியது. திமுக ‘GoBackModi’ ஐ கைவிட்டு ‘Welcome ZI-XINPING என்பதைக் கையிலெடுத்ததற்குப் பல்வேறு நேரடி தொழில்-வர்த்தக நலன்கள் இருக்கக் கூடும். வெளியுறவு கொள்கையில் இந்திய அரசு மேற்கொள்ளும் இராஜதந்திர நகர்வுகளுக்கு ஏற்ப நிலையெடுப்பது திமுகவுக்குப் புதிதல்ல.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் ஜி ஜின்பிங்கை வரவேற்று அறிக்கை விடும்போதே மாஜினி, கரிபால்டி என சர்வதேச வரலாற்று நினைவுகளுக்குள் நீந்தி சென்றிருக்கக் கூடும். திமுகவைப் போன்று மதிமுகவிற்கு நேரடி தொழில்-வர்த்தக நலன்கள் ஏதும் இல்லையென்றாலும் இந்திய தேசியப் போர்வைக்குள்ளால் இந்திய ஆளும்வர்க்கம் மேற்கொள்ளும் நகர்வுகளுக்கு வழமையாக கூடுதல் விசுவாசத்தைக் காட்டக் கூடியவர் வைகோ. அவரது இராஜதந்திரம் என்பது தேர்தலின் போது மோடியை ஆதரித்துப் பிரச்சாரம் செய்வதற்கும் அதே தேர்தலில் மோடி வெற்றி பெற்ற பிறகு நடக்கும் பதவியேற்பு விழாவின்போது இராஜபச்சே வருகையைக் கண்டித்து மராட்டியதுக்கே சென்று எதிர்ப்பு தெரிவிப்பதற்கும் இடைப்பட்ட ஊஞ்சலாட்டம்தான். அவரது இராஜதந்திரம் மலேசியாவிலோ சீனாவிலோ மத்திய கிழக்கிலோ தமிழ்நாட்டு மீனவர்கள், தொழிலாளர்கள் சிறைபட்டுக் கிடக்கும்போது அவர்களை மீட்க உதவும் என்ற வகையில் அவர் பெருமை கொள்ளலாம்.
சிபிஐ(எம்) ஐ பொருத்தவரை ரசியாவில் கோர்பச்சேவின் சட்டையைப் பிடித்து யெல்த்சின் கீழே தள்ளிய நிகழ்வு நடக்குவரை ரசியாவைக் கம்யூனிச நாடென்று சொல்லி வியந்ததுதான் கடந்த நூற்றாண்டின் முத்தாய்ப்பான இராஜதந்திரம். சீனாவின் விவகாரத்திலோ அது பிராந்திய மேலாதிக்க சக்தியாகவும் ஏகாதிபத்தியமாகவும் இருந்தாலுங்கூட முதலாளித்துவம் என்று தன்னை அறிவித்துக்கொண்டு தானே தலைக்குப்புற கீழே விழும்வரை ’சீன வகைப்பட்ட சோசலிசம்’ என சீனா சொல்லும் பழங்கதைகளையே சிபிஐ(எம்) உம் சொல்லி வரப்போகிறது. சிபிஐ(எம்) இன் இத்தகைய இராஜதந்திரத்தால் வைகோவின் இராஜதந்திர நகர்வுகளின் அளவுக்கேனும் தமிழர்களுக்குப் பயன் உண்டா? ஈழத்தில் சீனாவின் துணையையும் பெற்று கொண்டு சிங்கள பெளத்த பேரினவாத அரசு இனப்படுகொலையை நடத்திய போது சிபிஐ(எம்) தமிழர்களைக் காப்பாற்றும் விதமாக தனது இராஜதந்திர உறவுகளைப் பயன்படுத்தி ஏதாவது செய்ததா? மாறாக இந்திய ஆளும் வர்க்கத்தின் விரிவாதிக்க நலன்களுடன் நூறு விழுக்காடு ஒத்துப் போகும் பணியை அல்லவா செய்தது? நேபாளப் புரட்சியின் போது இந்திய அரசின் விரிவாதிக்க நலனுக்கு சேவை செய்யும் வகையில் நேபாள மாவோயிஸ்ட்களை சந்தித்து நேபாள முதலாளித்துவக் கட்சிகளுடன் சமரசம் செய்துவைக்க சிபிஐ(எம்)மின் இன்றைய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி இந்தியாவின் தூதராக அல்லவா சென்றார். ஆக, காங்கிரசோ அல்லது காவியோ யார் தலைமையிலான இந்திய அரசு என்பதற்கு அப்பால் இந்திய ஆளும்வர்க்கத்தின் விரிவாதிக்க நலனுடன் ஒத்துப் போய்விடுகின்றனர்.
எனவே, மேலே கண்ட முகாமைச் சேர்ந்தவர்களெல்லாம் ஜி ஜின்பிங்குக்கு பட்டுக் கம்பளம் விரிப்பதில் நமக்கு வியப்போ அதிர்ச்சியோ இல்லை. அது தெரிந்த கதைதான். ஆனால் 2009 ஈழ ஆதரவுப் போராட்டத்திற்குப் பிறகு அரசியல் களத்திற்கு வந்த ஆற்றல்களிடமிருந்து ஜி ஜின்பிங் வருகையை வரவேற்க வேண்டுமென சமூக ஊடகங்களில் கருத்து எழுவது புதிய வகைப்பட்டதாக இருக்கிறது. இதில் முதன்மையாக இரு பிரிவினர் உள்ளனர் – 1. திராவிட அரசியலை ஆதரிக்கக் கூடியவர்கள் 2. சாதித் தூய்மைவாத தமிழர் தேசிய அரசியலைப் பேசக் கூடியவர்கள். இவ்விரு தரப்பாரும் ஜி ஜின்பிங்கை வரவேற்க வேண்டும் என்ற இக்கருத்தில் ஒத்துப் போகின்றனர். இந்திய எதிர்ப்பில் இருந்து சீனாவைத் தமிழர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற இராஜதந்திரப் பின்னணியோடு தாம் இக்கருத்தை சொல்வதாக அறிவித்துக் கொள்கின்றனர். ஆனால், அதற்கு ஏதாவது அடிப்படை இருக்கிறதா? என்று பார்ப்பதற்கு முன்னால் சில கேள்விகள்.
முள்ளிவாய்க்காலில் தமிழின அழிப்பு நடந்தேறிய காலப்பின்னணியில் சீனா இலங்கை அரசுக்கு துணைப் போனதை அம்பலப்படுத்தி ’கம்யூனிச நாடு’ என்ற சித்திரிப்புடன் சீன எதிர்ப்பு அரசியல் பேசப்பட்டது. இலட்சம் தமிழர்கள் செத்து விழுந்து தமிழினமே நிலைதடுமாறி நின்றபோது ’சீனாவின் முற்றுகைக்குள் இந்தியா’ என்று இந்திய அரசையே ஓர் ஏமாளியாகச் சித்திரித்து சீன எதிர்ப்பு பேசியவர்கள் இப்போது மெளனம் காப்பது ஏன்? அப்போது இந்திய அரசை ஏமாந்த சோனகிரியாக காட்டியதற்கும் இப்போது சீன அதிபரை வரவேற்பதற்கும் பின்னால் இராஜதந்திரக் காரணங்கள் இருக்குமோ என்னவோ? இன்னொருபுறம், சமூக ஊடகங்களில் பெருங்கூச்சலோடு முட்டிமோதிக் கொள்ளும் ’கழகங்களுக்கு அப்பாலான’ திராவிட அரசியல் அனுதாபிகளும் சாதித் தூய்மையவாத தமிழர் தேசிய சக்திகளும் மோடி-ஜி ஜின்பிங் சந்திப்பு விவகாரத்தில் ஜி ஜின்பிங்கை வரவேற்க ஒரே வரிசையில் நிற்பதேன்? மோடி எதிர்ப்பின் முன்னால் சீன எதிர்ப்பு பின்னுக்கு சென்றுவிட்டது என்பதாகப் புரிந்து கொள்ளலாமா? இந்த காரணத்தைத் தாண்டி புதிய கருத்தொன்று கட்டமைக்கப்படுகிறது. அதாவது, இந்திய அரசுக்கு அப்பால் தமிழ்-சீன நட்புறவைக் கட்டியெழுப்புவதாம்! சீன அரசைப் பற்றிய புரிதலில் எவ்வளவு இடைவெளி இருந்தால் இன்றைய நிலையில் இப்படியொரு உறவை ஏற்படுத்துவதற்காக சீன அதிபரை வரவேற்கச் சொல்வார்கள்?
தமிழர்களின் தரப்பு என்று சொல்லிக் கொள்ளும் அளவுக்கு அதிகாரம் படைத்த அரசொன்று தமிழர்களுக்கு இல்லை. அரசு இல்லாவிட்டாலும் தமிழர்களின் தரப்பு என்று சொல்லிக் கொள்ளும் அளவிற்கானப் போராட்ட வளர்ச்சியோ அல்லது அமைப்பு வலிமையோ தமிழர்களிடம் இருக்கிறதா? இன்றளவும் தமிழர்களின் அரசியல் தகைமை இந்திய அரசிடம் எதிர்ப்பை வெளிப்படுத்தி தன்னுடைய நலன்களைத் தற்காத்து கொள்ளும் இடத்தில்கூட இல்லை. நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் தமிழர்களின் உரிமைகள் காற்றில் பறந்தபடி இருக்கின்றன. இப்படிப்பட்ட நிலையில் தமிழர்களின் உரிமைப் போராட்ட அரசியல் இருக்கும்போது சீன அரசுடன் தமிழர் நல்லுறவுக்கான இராஜதந்திர அணுகுமுறை என்று சொல்வது பத்தாம்பசலித்தனம் இல்லையா?
சீனா அடிப்படையில் சந்தை பொருளாதார விதிக்குள் செயல்படும் ட்ராகன். சீனா தனது பிராந்திய மேலாதிக்க மற்றும் உலகளாவிய வர்த்தக நலனுக்கு உட்பட்டே தனது சர்வதேச அரசியலை செயல்படுத்தி வருவதைப் பட்டவர்த்தனமாக காண முடியும். ஈராக்கில் எண்ணெய் வளங்களுக்காக சதாம் உசேனுடன் கூடிக் குலாவிக் கொண்டிருந்த சீனா, அமெரிக்கா ஈராக் மீது போர் தொடுத்த பொழுது என்ன செய்தது? மூழ்கும் படகில் இருந்து சத்தம் இன்றி வெளியேறும் நீச்சல் வீரனைப் போல் ஈராக்கில் இருந்து வெளியேறிவிட்டு அமெரிக்காவிடம் ஈராக் சரியும்வரை வேடிக்கை பார்த்தது. பின்னர் போரினால் சிதைந்த ஈராக்கில் அமெரிக்காவால் முன்னெடுக்கப்பட்ட மீள்கட்டுமான நிகழ்ச்சி நிரலில் தன்னுடைய பங்கைப் பெறுவதற்காக மீண்டும் ஈராக்கில் அடியெடுத்து வைத்தது. இலங்கை தீவில் சிங்கள அரசுடனான சீனாவின் உறவு பிராந்திய மேலாதிக்க மற்றும் கடல் வர்த்தகப் போக்குவரத்துசார் பாதுகாப்பு நலன்களுக்கு உட்பட்டு இருந்து வருகிறதே ஒழிய சர்வதேச ஒடுக்கப்பட்ட மக்களினங்கள்சார் நெறிகளுக்கு உட்பட்டு இல்லை. அப்படிப்பட்ட சீனாவிடம் தமக்கென்ற அரசியல் வலிமை ஏதும் இல்லாத தமிழர்கள் வெறுங் கையில் முழம்போட்ட கதையாக ’இராஜதந்திர மெருகுடன்’ சீன – தமிழ்நாட்டு நட்புறவு வாழ்கவென முழக்கமிடுவது வேடிக்கை இல்லையா?
தன்னுடைய எதிர்ப்பைப் பதிவு செய்வதன் மூலம்தான் இந்திய அரசுக்கும் அதிகாரமற்ற தமிழக அரசுக்கு அப்பால் ஒரு சக்தி இருக்கிறதென்பதை உலகுக்கு வெளிப்படுத்த முடியுமே ஒழிய மோடியோடும் எடப்பாடியோடும் முகஸ்டாலினோடும் வரிசையில் நின்று சீன அதிபரை வரவேற்பதால் எந்த செய்தியையும் உலகுக்கு சொல்ல முடியாது. அதுமட்டுமின்றி, இந்திய-சீன ஆதிக்க அரசுகளின் நலனை முன்னிட்ட இந்த சந்திப்பை எதிர்ப்பதன் வழியாக உள்நாட்டு சனநாயகத்திற்கான மற்றும் சனநாயகப் பூர்வமான உலக ஒழுங்குக்கான அரசியலை தமிழக மக்களிடம் வளர்த்தெடுக்க முடியும்.
தமிழ்-சீன நட்புறவை வளர்ப்பதால் தமிழ்நாட்டுக்கும் சீனாவுக்கும் இடையிலான அரசியல் பொருளாதார நலன்களை உயர்த்திப் பிடிப்பதாக சொல்பவர்கள் அடையாளம் காட்டும் பொருளாதார நலன்கள் என்ன? என்று தேடிப் பிடித்தால் நேற்றைய தமிழ் இந்து இதழின் நடுப்பக்கத்தில் ’சீனாவில் புரோட்டா போடும் இரண்டாயிரம் தமிழர்களைத்’ தான் சுட்டிக்காட்டுகிறார்கள். இதைதவிர சிறப்பான ‘பொருளாதார’ நலன்கள் எதையும் முன்வைக்க வேண்டும் என்று அவர்கள் கருதவில்லை. தமிழ்-சீன நட்புறவின் பெயரால் ஜின் பிங்கை வரவேற்கச் சொல்பவர்களால் விளையக்கூடிய அதிகபட்ச பயன் கடந்த காலத்தில் செயல்பட்டுவந்த இந்திய – ரஷ்ய நட்புறவு கழகங்களைப் போன்ற என்.ஜி.ஓ. தன்மையிலான சீனச் சுற்றுப்பயணங்கள், கலாச்சார பரிவர்த்தனை அமைப்புகளாக இருக்கக் கூடும். ஈழத் தமிழர்களின் நலனுக்கோ அல்லது தமிழ்நாட்டு தமிழ்த்தேசிய அரசியலுக்கோ எந்த வகையிலும் பயனளிக்கப் போவதில்லை.
தில்லியும் பெய்ஜிங்கும் இப்பிராந்தியத்தின் மேலாதிக்க அதிகார மையங்கள். தமிழ்நாட்டு அரசியலின் இன்றைய கட்டத்தில் இந்த அதிகார மையங்களை அம்பலப்படுத்தும் அரசியலை முன்னெடுக்க வேண்டும். அதில் இருந்து ஓர் அரசியல் வலிமை உருப்பெற வேண்டும். அந்த வலிமையின் மீது ஊன்றி நிற்கும்போதுதான் இராஜதந்திரம் என்பதைப் பற்றியெல்லாம் சிந்திக்கவோ பேசவோ செயல்படுத்தவோ இயலும். அதை விட்டுவிட்டு இருக்கின்ற அதிகார மைய அரசியல் ஒழுங்குக்கு உள்ளாகவே இராஜதந்திர முன்னெடுப்பு செய்வதெல்லாம் மக்கள் போராட்டத்திற்கும் ஜனநாயகத்திற்கும் பங்களிக்காது.
– பாலன்
தமிழ்-சீன நட்புறவில் ஒருசில பொருளாதார பலன்கள் கிடைக்க வேண்டும் என்று தாங்களே ஊகித்துக்கொண்டு அதேபோல் இப்போது நிகழ வாய்ப்பில்லை என்று இன்னொரு இன்னொரு ஊகத்தை வெளிப்படுத்துவது நியாயமற்றது.
இப்பிராந்தியத்தின் அதிகார மையங்களான டில்லியையும் பெய்ஜிங்கையும் அம்பலபடுத்துவதன் மூலம் ஓர் அரசியல் பலம் ‘உருபெறவேண்டும்’ என்று கூறுகிறீர்களே, ஏன் அது ‘ உருபெறும் ‘ என்று தங்களால் உறுதியாக சொல்லமுடியவில்லை. அது என்ன ‘அரசியல் பலம்’?