பொய் சொல்வது யார்? ஊடகங்களா? உள்துறை அமைச்சர் அமித் ஷாவா?

03 Sep 2019

நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளின் மூலம் மக்களை ஏமாற்றுவது ஒருவகை. அப்பட்டமான பொய்களைச் சொல்லி ஏமாற்றுவது இரண்டாவது வகை. இவ்விரண்டில் எதற்கும் பா.ச.க. விதிவிலக்கல்ல. அதுவும் அப்பட்டமான பொய்களை ஒரு நாட்டின் உள்துறை அமைச்சரும் உள்துறை அமைச்சகமுமே சொன்னால் அந்த நாட்டில் துளியேனும் சனநாயகமோ அரசின் மீது நம்பகத்தன்மையோ இருக்க முடியுமா? அப்படிப்பட்ட நிலையில்தான் இந்தியா இப்போது இருக்கிறது. இந்தியாவின் உள்துறை அமைச்சகமும் அமைச்சரும்  தங்கள் பொய்கள் நொறுக்கித் தள்ளப்படுவது பற்றி கவலை ஏதும் இன்றி பொய்களை உற்பத்தி செய்யும் ஆலை போல் இருக்கின்றனர்.

காஷ்மீரின் இராணுவ அமைதி

நேற்று முன்தினம் (1-9-2019) ஒன்றிய ஆட்சிப்புலமான தாதர் மற்றும் நகர் ஹாவேலியில் உள்ள சில்வாசா நகரில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்துப் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா காஷ்மீரின் நிலை குறித்து பின்வருமாறு அடித்துச் சொல்கிறார் – ” அந்தப் பிரிவு நீக்கப்பட்ட நாளில் இருந்து ஜம்மு காஷ்மீர் மக்கள் மீது இதுவரை ஒரு துப்பாக்கிக் குண்டுகூட பாயவில்லை. ஆனா உலகத்துக்கும், நாட்டுக்கும் சொல்கிறேன், காஷ்மீர் முழுமையாக அமைதியாக இருக்கிறது. இதுவரை அங்கு ஒருவர் கூட பலியாகவில்லை.”

மூன்று  நாட்களுக்கு முன்பு ஆகஸ்ட் 30 அன்று ”புதிய இந்தியாவில் அரசும் ஊடகமும்” என்ற தலைப்பில் கேரள மாநிலம் கொச்சியில் நடந்த கருத்தரங்கில் பேசிய நடுவண் செய்தி ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பின்வருமாறு பேசினார். “காஷ்மீரில் சர்வதேச ஊடகங்களும் களத்தில் உள்ளன. அவற்றில் சில காஷ்மீர் நிலவரம் குறித்து தவறான செய்திகளை வெளியிடுகின்றன. ஆனால், அது தவறு என்பது உடனுக்குடன் தெளிவுபடுத்தப்பட்டு வருகிறது. நாட்டு மக்கள் அரசின் பக்கம் உள்ளனர். எனவே, எத்தனைப் போலி செய்திகளை வெளியிட்டாலும் அது எடுபடாது.

காஷ்மீரில் 10,000 பேர் பங்கேற்ற பேரணி நடைபெற்றதாக ஒரு சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டது. ஆனால், அதில் ஒன்று கராச்சியில் நடைபெற்றது என்பது மற்றொன்று காஷ்மீரில் 4 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்றது என்பது நிரூபிக்கப்பட்டுவிட்டது. இதன் மூலம் வேண்டுமென்றே இந்தியாவுக்கு எதிராக செய்தி வெளியிடும் ஊடகம் எது என்பதும் வெளிப்பட்டுவிட்டது. இதன் மூலம் அந்த செய்தி நிறுவனம் மக்கள் மத்தியில் நம்பகத்தன்மையை இழந்துவிடும்

ஆகஸ்ட் 17 அன்று நடுவண் அரசு 370 ஐ செயலிழக்கச் செய்ததை நியாயப்படுத்தி ஆங்கில இந்து நாளிதழில் கட்டுரை எழுதிய இந்நாட்டின் துணை குடியரசு தலைவர் வெங்கய்யா நாயுடு, “மேற்கத்திய மற்றும் இந்திய ஊடகங்களில் ஒரு பகுதியினர் செய்யும் பொய்யான மற்றும் குறும்புத்தனமானப் பரப்புரைகளை மக்கள் நம்ப வேண்டாம், அவர்கள் காலனிய கால ’பிரித்தாளும்’    மனநிலையை இன்னும் நம்பிக் கொண்டிருக்கின்றனர்” என்று அறிவுத்தியிருந்தார்.

உள் துறை அமைச்சர் காஷ்மீரில் அமைதி நிலவுகிறது என்கிறார். செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சரும் துணை குடியரசுத் தலைவரும் அமைதி நிலவுகிறது, மேற்கத்திய ஊடகங்கள் பொய் சொல்கின்றன என்று சொல்கின்றனர். உண்மையில் பொய் சொல்வது யார்?  என்று நாம் தேடிச் செல்ல வேண்டியுள்ளது.

ஆகஸ்ட் 9 – ஸ்ரீநகர் சவுரா போராட்டம்:

ஆகஸ்ட் 9 வெள்ளிக்கிழமை அன்று ஸ்ரீநகரில் உள்ள சவுரா என்ற இடத்தில் தொழுகை முடிந்த நேரத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் 370 ஐ செயலிழக்கச் செய்ததைக் கண்டித்து போராட்டம் நடத்தியதாக பிரெஞ்சு ஊடகமான ரெளட்டர்ஸ் ( Reuters), பிபிசி, அல்ஜசிரா ஆகியவைப் புகைப்படங்களை வெளியிட்டிருந்தன. போராட்டத்தில் பங்குபெற்றோர் பத்தாயிரம் பேர் இருப்பர் என்று அதை நேரில் கண்ட காவல்துறை அதிகாரி சொன்னதாகப் பதிவிட்டிருந்தது ரெளட்டர்ஸ். போராடிய மக்கள் மீது இரு திசையில் இருந்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. பெல்லட் குண்டு தாக்குதலுக்கு ஆளானோர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று நேரில் கண்ட ஒருவர் சொல்லியுள்ளார்.

இந்த செய்தி வெளிவந்தவுடன் ஆகஸ்ட் 10 அன்று இந்திய உள்துறை அமைச்சகம் தனது அதிகாரப்பூர்வ டிவிட்டரில் இதை மறுத்தது. பத்தாயிரம் பேர் போராடினார்கள் என்பது பொய் என்றும் சில போராட்டங்கள் ஆங்காங்கே நடந்தது என்றும் அதுவும் 20 பேருக்கு மேல் எங்கும் கூடவில்லை என்றும் செய்தி வெளியிட்டது.

https://twitter.com/PIBHomeAffairs/status/1160081078486368256

உடனே, பிபிசியும் அல்ஜசீராவும் போராட்டம் நடைபெற்ற காணொளியை யூடியூபில் வெளியிட்டு ஸ்ரீநகரில் போராட்டம் நடந்தது உண்மையே, ஆயிரக்கணக்கானோர் பேரணியாகச் சென்றனர், துப்பாக்கிச் சூடு நடந்தது, பன்னிரண்டுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்று அடித்துச் சொன்னது.

பிபிசி : https://twitter.com/NicolaCareem/status/1160107113890426880

உடனே, இது ஆசாத் காஷ்மீர் பகுதியில் எடுக்கப்பட்ட வீடியோ என்று சிலர் பதிவிட்டு பிபிசியை மீண்டும் உசுப்பிவிட்டனர். பிபிசி தான் உண்மையான செய்தியையே பதிவிடுவதாக மீண்டும் அழுத்தம் திருத்தமாய் சொன்னது.

https://www.bbc.com/news/av/49306816/article-370-tear-gas-at-kashmir-rally-india-denies-happened#targetText=Article%20370%3A%20Tear%20gas%20at,imposed%20in%20Indian%2Dadministered%20Kashmir.&targetText=Despite%20that%2C%20the%20Indian%20government,the%20protest%20never%20took%20place.

அல்ஜசீரா வெளியிட்ட காணொளியும் பிபிசி காணொளியும் ஒத்துப் போகின்றன. சவுராவில் உள்ள ஜெனாப் சாயிப் மசூதிக்கு அருகில்தான் அந்தப் போராட்டம் நடந்துள்ளது” என்பதை இரு வீடியோக்களையும் ஒப்பு நோக்கி, கூகுள் வரைப்பட உதவியுடன் பூம்லைவ் இணையம் செய்தி வெளியிட்டுள்ளது.

கடைசியில், ஆகஸ்ட் 9 அன்று சவுரி பகுதியில் நடந்ததாக ஊடகங்களில் வந்த செய்திப் பற்றி தனது அதிகாரப் பூர்வ் டிவிட்டரில் ஆகஸ்ட் 13 அன்று இந்திய உள்துறை அமைச்சகம் மீண்டும் பதிவிட்டது. ‘ஆம் சில விசமிகள் கூட்டத்தில் இருந்தபடி கல்லெறிப் போராட்டத்தை நடத்தினார்கள்’ என்று ஒப்புக் கொண்டது.

https://twitter.com/PIBHomeAffairs/status/1161224075680931841

முதலில் அப்படி எதுவுமே நடக்கவில்லை என்று மறுத்த உள்துறை அமைச்சகம் மூன்று நாட்கள் கழித்து நடந்ததை ஒப்புக் கொண்டதை ’இந்திய அரசு அடித்த பல்டி’ என்று ஆங்கில ஊடகங்கள் பலவும் பதிவு செய்துள்ளன.

’நான் மருத்துவரல்ல’ என்ற அமித் ஷா:

ஆகஸ்ட் 6 அன்று மக்களவையில் காஷ்மீருக்கான சிறப்பு தகுதியை ரத்து செய்வது பற்றி விவாதம் நடந்த பொழுது காஷ்மீர் முன்னாள் முதல்வரும் மக்களவை உறுப்பினருமான பரூக் அப்துல்லா அவையில் இல்லை. தேசியவாத காங்கிரசை சேர்ந்த மக்களவை உறுப்பினர் திருமதி சுப்ரியா அவர்கள், ‘எனது பக்கத்து இருக்கையில் அமரும் பரூக் அப்துல்லா அவைக்கு ஏன் வரவில்லை? அவர் கைது செய்யப்பட்டுள்ளரா?’ என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா வை நோக்கி கேள்வி எழுப்பினார். உடனே, அமித் ஷா ”பரூக் அப்துல்லா கைது செய்யப்படவுமில்லை, தடுத்து வைக்கப்படவுமில்லை, அவர் தாமாகத் தான் அவைக்கு வரவில்லை” என்று பதில் சொன்னார். ‘அப்படியென்றால் அவர் உடல்நலம் சரியில்லை என்பதால் வரவில்லையா?’ என்று கேள்வி எழுப்பினார் சுப்ரியா. ‘அதை சொல்வதற்கு நான் ஒன்றும் மருத்துவரல்ல’ என்று பதில் சொன்னார் இந்நாட்டின் உள்துறை அமைச்சர் அமித் ஷா. ஆனால், அன்று மாலையே காவல்துறை கட்டுப்பாடுகளை மீறி தான் தடுத்து வைக்கப்பட்டிருந்த தன் வீட்டுக்கு வெளியே வந்து ஊடகங்களிடம் உண்மையைப் போட்டு உடைத்தார் பரூக். ‘நான் கைது செய்யப்பட்டு வெளியில் வரமுடியாத படி தடுத்து வைக்கப்பட்டுள்ளேன். உள்துறை அமைச்சர் பொய் சொல்கிறார்’ என்று சொல்லிவிட்டு ஓர் உள்துறை அமைச்சர் இப்படி பொய் சொல்வதை எண்ணி தாம் வருந்துவதாகவும் பதிவு செய்தார். உள்துறை அமைச்சர் பொய் சொன்னது மக்களவை விவாதப் பதிவேட்டில் வரலாற்று களங்கமாக பதிவாகியுள்ளது. பரூக் அப்துல்லாவின் பேட்டி எல்லா ஊடகங்களிலும் வெளிவந்துள்ளது.

சம்ஜெளதா எக்ஸ்பிரஸ் குண்டு வெடிப்பு – யார் அந்த ஏழு பேர்?

திருடனுக்கு தேள் கொட்டியது போல் அமித் ஷா மக்களவையில் பொய் சொல்லி அம்பலப்பட்டுப் போனதற்கான மூன்றாவது கதை இது. கடந்த ஜூலை மாதத்தில் மக்களவைக் கூட்டத் தொடரில் தேசிய புலனாய்வு முகமை        (NIA, என்.ஐ.ஏ) சட்டத் திருத்தத்தின் போது கடுமையான விவாதம் நடந்தது. அஜ்மர் தர்கா குண்டு வெடிப்பு (2007, 3 பேர் சாவு) தவிர என்.ஐ.ஏ விசாரித்த மாலேகான் குண்டு வெடிப்பு(2008),  ஹைதராபாத்தில் உள்ள மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு (2007, 14 பேர் சாவு), சம்ஜெளதா எக்ஸ்பிரஸ் குண்டு வெடிப்பு (2007 – 68 பேர் சாவு) வழக்குகளில் குற்றஞ்சாட்டப் பட்ட அனைத்து இந்துத்துவ பயங்கரவாதிகளும் நீதிமன்றத்தில் விடுவிக்கப்பட்டனர். என்.ஐ.ஏ. வால் உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடித்து நீதியின் முன் நிறுத்த முடியவில்லை. மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் ஈடுபட்டிருந்த வழக்கறிஞர் ரோஹினி சலைன் இந்து தீவிரவாதிகள் பொருத்து மென்மையாக நடந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டார் என்று அவர் குற்றஞ்சாட்டினர். அதில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த பிரக்யா சிங் இப்போது போபால் தொகுதியின் மக்களவை உறுப்பினர்! அஜ்மர் செரிப் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட இரு ஆர்.எஸ்.எஸ்.  உறுப்பினர்கள் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டுள்ளனர்.

சம்ஜெளதா எஸ்க்பிரஸ் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட இந்துத்துவ பயங்கரவாதிகள் அனைவரும் போதிய சான்றுகள் இல்லை என்ற பெயரால் நீதிமன்றத்தில் குற்றமற்றவர்கள் என விடுவிக்கப்பட்டனர். இவ்வழக்கில் என்.ஐ.ஏ. வால் ஏன் உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கவில்லை? ஏன் அரசு மேல் முறையீட்டுக்கு செல்லவில்லை?’ என்று மக்களவையில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பினர். அப்போது. ”இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராகப் போதிய ஆதாரம் இல்லை” என்று சொன்னார் அமித் ஷா. மேலும் இவ்வழக்கில் முதலில் கைது செய்யப்பட்ட ஏழு பேர்தான் உண்மையான குற்றவாளிகள். அவர்களை விட்டுவிட்டு இந்து மதத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்று காங்கிரசு அரசால் இவர்கள் வேண்டுமென்று மாட்டிவிடப்பட்டவர்கள்” என்று அமித் ஷா சொன்னார். ஆனால், அமித் ஷா சொன்னது போல் இவ்வழக்கில் முதலில் ஏழு பேர் கைது செய்யப்பட்டதாக எந்த ஆவணமும் இல்லை. ஒரே ஒரு பாகிஸ்தானியர் மட்டும் பஞ்சாப் காவல்துறையால் முதலில் கைது செய்யப்பட்டுள்ளார். பின்னர் விசாரணையில் அவருக்கு தொடர்பில்லை என்ற காரணத்தின் பெயரால் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். சம்ஜெளதா எக்ஸ்பிரஸ் ரயில் தில்லியில் இருந்து லாகூர் செல்லும் ரயிலாகும். இதில் கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள்.

 அமித் ஷா சொன்னது போல் முதலில் கைது செய்யப்பட்ட ஏழு பேர் யார்? என்பது அவருக்கே வெளிச்சம். அமித் ஷாவுக்கு தெரிந்த அந்த ஏழு பேரை யார் கைது செய்தார்கள்? அவர்கள் தான் உண்மையான குற்றவாளிகள் என்றால் அவர்களை என்.ஐ.ஏ.வால் ஏன் தேடிக் கண்டுபிடித்து நீதியின் முன் நிறுத்த முடியவில்லை என்று கேள்விகள் ஒவ்வொன்றாய் விரிகின்றன. 68 பேர் கொல்லப்பட்ட ஒரு குண்டு வெடிப்பு வழக்கில் முதலில் 7 பேர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா சொன்ன கூற்றும் மக்களவை விவாதங்களில் பதிவாகியுள்ளது.

போகிற போக்கில் வாய்க்கு வந்ததை அள்ளிவிடும் உள்துறை அமைச்சர். அது உண்மையா? பொய்யா? என கண்டுபிடிக்க வேண்டிய பொறுப்பு பிறருடையது என்று கருதுகிறார் போலும்.

உள்துறை அமைச்சர் அமித் ஷா பொய் சொல்வது ஏன்?

இந்துக்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாகும், முஸ்லிம்களுக்கு சலுகைகள் வழங்கப்படுவதாகவும் பயங்கரவாதம் தலைவிரித்தாடுவதாகும் பாகிஸ்தான் அதை ஊக்குவிப்பதாகவும் கூட்டியும் குறைத்தும் ஒட்டியும் வெட்டியும் செய்திகளை சொன்னால் மட்டுமே பா.ச.க. வால் தமது சர்வாதிகார முடிவுகளை மக்கள் ஏற்குமாறு செய்ய முடியும் என்று அவர்கள் கருதுகின்றனர். ஏனெனில், உண்மைகள் மக்களுக்கு தெரிய வரும் பொழுது பா.ச.க. தலைவர்கள் நம் மக்களால் மிகவும் வெறுக்கப்படுவார்கள் என்பதையும் அவர்கள் அறிவர். அவர்களிடம் நியாயமில்லை என்ற காரணத்தால் தான், ஊடகங்களின் வாயை அடைக்கிறார்கள், இணைய தளத்தில் உண்மையைப் பதிவிடுபவர்கள் மீது கூட வழக்குப் போடுகின்றனர், வாயில் வந்த பொய்களை அள்ளி விடுகின்றனர்.

உண்மை எப்போதும் தூங்குவதில்லை, பொய்யே எப்போதும் ஓங்குவதில்லை!

சான்று சுட்டிகள்:

  1. https://thewire.in/security/its-time-to-call-amit-shahs-bluff-in-the-samjhauta-blast-case
  2. https://www.thehindu.com/opinion/lead/a-considered-step-that-opens-up-new-vistas/article29112884.ece
  3. https://www.dinamani.com/india/2019/sep/01/congress-has-to-shame-itself-for-rahuls-speeches-on-kashmir-says-amith-sha-3225840.html
  4. https://www.dinamani.com/india/2019/aug/31/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF–%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-3224668.html
  5. https://www.boomlive.in/government-does-u-turn-on-kashmir-protest-acknowledges-unrest-in-soura/

– செந்தில், இளந்தமிழகம்

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW