கூடங்குளம் அணுக்கழிவு அபாயம் – எச்சரிக்கை மாநாடு
14-07-2019 ஞாயிறு, காலை 10:30 மணி முதல் இரவு 7 மணி வரை
இடம் நிருபர்கள் சங்கம், சேப்பாக்கம், சென்னை
அணுக்கழிவைப் புதைக்காதே! பேரழிவை விதைக்காதே!
’கூடங்குளத்தில் அணுஉலை அமைக்காதே’ என வலியுறுத்தி இடிந்தகரை, கூத்தன்குழி, கூட்டங்குழி, கூடங்குளம் மக்கள் 1000 நாட்களுக்கு மேல் போராடினர். அப்போராட்டத்தை அடக்குமுறைச் சட்டங்களைக் கொண்டு, தடியடிகளாலும் நடுவண்-மாநில அரசுகள் ஒடுக்கின. இப்போது மூன்று, நான்கு, ஐந்து, ஆறு என அடுத்தடுத்து அணு உலை பூங்கா அமைத்துக் கொண்டிருக்கின்றன.
இப்போது இந்தியாவின் முதல் அணுக்கழிவு மையத்தையும் கூடங்குளத்தில் அமைக்கப் போகிறதென அறிவிப்பு தந்துள்ளது இந்திய நடுவண் அரசு!
குழந்தைகள் வறுமையிலும் ஊட்டச்சத்துக் குறைவாலும் செத்து மடியும் நாடு இது. இங்கே மிகவும் விலை குறைவான பொருள் மக்களின் உயிர்! கார்ப்பரேட்டுகளுக்கு லாபத்தைவிட மக்களின் உயிர் மலிவானது என்பதே அரசின் கொள்கையாக இருக்கிறது. இந்நாட்டில் அணுஉலை உபகரணங்கள் எந்த அளவுக்கு பாதுகாப்பானவை, தரமானவை என்ற கேள்விகளுக்கு நம்பகமான பதில் சொல்லவில்லை என்பதில் என்ன வியப்பு இருக்கிறது..
அணுக்கழிவைப் புதைக்க தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பவே, மொட்டை கடிதம் போல பெயர், பொறுப்பு ஏதுமற்ற அறிவிப்பு ஒன்று அணுசக்தி கழகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, அணுக்கழிவு மையத்தால் பாதிப்பு இல்லையாம்!
அணுவைப் பிளக்கும் போது வெளிப்படும் ஆற்றலைக் கொண்டு மின்னாக்கம் நடக்கிறது. பிளக்கும் போதும் கதிர்வீச்சு வெளிப்படும், பிளந்தப் பின் உள்ள அணு எரிபொருளில் இருந்தும் கதிர்வீச்சு வெளிப்படும். ஒருமுறை பயன்படுத்தியப் பின் கிடைக்கும் எரிபொருளை மீண்டும் மறுசுழற்சிக்குப் பயன்படுத்தினால்தான் அதை ’பயன்படுத்தப்பட்ட எரிபொருள்’(spent fuel) என்று அழைப்பர். இந்தியாவில் இதை மூடப்பட்ட எரிபொருள் படிநிலை என்று அழைக்கிறார்கள். இந்தியாவில் டிராம்பே, கல்பாக்கம் ஆகிய இருவிடங்களில் மட்டுமே மறுசுழற்சிப் பயன்பாட்டுக்கு வாய்ப்புண்டு. மீண்டும் மறுசுழற்சிக்கு அனுப்பப்பட்டாலும் அதிலிருந்து அணுக்கழிவு கிடைக்கும். அதுவும் கதிரிவீச்சை உமிழும்!
அப்படி அல்லாமல், பயன்படுத்தப்பட்ட எரிபொருளை அப்படியே புதைத்து வைத்து பாதுகாக்கப் போகிறார்கள் என்றால் அணுக்கழிவு என்பர். மொத்தத்தில், அணு மின்சார நிகழ்முறைக்கு பின் கிடைக்கும் எரிபொருளையும் கதிரியக்க தனிமங்களையும் அணுக்கழிவென்றே அழைக்கலாம். ஆனால், மக்களைக் குழப்பிவிடும் நோக்கில் அணுசக்தி கழகம் தொடங்கி பா.ச.க தலைவர் தமிழிசை வரை பயன்படுத்தப்பட்ட எரிபொருள் என்று பாசாங்கு செய்கின்றனர்.
இதுவரை இந்தியாவில் உள்ள எல்லா அணு உலைகளிலும் அணுஉலைக்கு மிக அருகாமையிலேயே பயன்பாட்டிற்கான அணு எரிபொருளும் அணுக் கழிவும் நீரில் அமிழ்த்தி பாதுகாக்கப்பட்டு வருகின்றது. கூடங்குளம் அணு உலை தொடர்பான வழக்கில் 2013 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் இன்னும் ஐந்து ஆண்டுகளில் அணு உலைக்கு வெளியே அணுக்கழிவைப் பாதுகாக்கும் முறைக்கு செல்ல வேண்டும் என்று தீர்ப்பளித்திருந்தது. 5 ஆண்டு முடியும் போது அணுக்கழிவு மையம் அமைக்கும் தொழில்நுட்பம் தம்மிடம் இல்லை என்று சொல்லி மேலும் ஐந்து ஆண்டு காலம் கேட்டது அணுசக்தி கழகம். இப்போது அணுக் கழிவு மையம் அமைக்கும் பரிசோதனை முயற்சிக்கு சோதனைக் கூடமாக கூடங்குளத்தை தேர்வு செய்துவிட்டனர். சோதனைக் கூடத்து எலிகளா தமிழர்கள்?
அணுக் கழிவை நீண்டகாலத்திற்கு மேலாண்மை செய்வதற்கான ஒரே வழி ஆழ்நிலக் கிடங்கு’ ஒன்றை கட்டி (Deep Geological Repository – DGR) அதில் இந்த கழிவுகளை பத்திரமாகப் சேமித்து வைப்பதுதான். ஆனால், இதிலும் வெற்றிகரமானத் தொழில்நுட்பம் யாரிடமும் இல்லை.
- ஜெர்மனியில் உப்புப் பாறை அமைப்பில் ஆழ்நிலக் கிடங்கு அமைக்கப்பட்டுப் பின்னர் 2010 இல் பாதுகாப்பில்லை என மூடப்பட்டது.
- கிரானைட் பாறை அமைப்பில் ஸ்வீடனிலும், பின்லாந்திலும் கிடங்குகள் அமைக்கப்படிருந்தாலும் அதுவும் முழுப் பாதுகாப்பானவை என்று சொல்லப்படுவதில்லை.
- பிரான்சில் களிமண் பாறை அமைப்பில் அமைக்கப்பட்டிருக்கும் கிடங்கினால் ஏற்படக்கூடிய கதிரிவீச்சைப் பலப் பத்தாண்டுகளுக்கு ஆராய வேண்டும் என விஞ்ஞானிகள் சொல்கின்றனர்.
- 1987 இல் இருந்து அமெரிக்காவில் எரிமலை சாம்பல் பாறை அமைப்பில் கிடங்கு அமைத்து பாதுகாக்க முயன்றவர்கள் 2010 இல் அதை நிறுத்திக்கொண்டனர்.
அமெரிக்காவிலும், பிரான்சிலும், ஜெர்மனியிலுமே ஆழ்நிலக் கிடங்கு அமைப்பதில் இதுதான் நிலை என்றால் இந்தியாவில் எப்போது, எப்படி அமைக்கப்போகிறார்கள்? அணுக்கழிவைப் புதைக்க வக்காலத்து வாங்கும் பாசக தலைவர் ’அணு விஞ்ஞானி’ பொன்.இராதாகிருஷ்ணன் இதற்கு பதிலளிப்பாரா? இதில் நடுவண் அரசுக்கு தெளிவானக் கொள்கையும் இல்லை, நடைமுறையும் இல்லை
இப்போது இந்திய அரசு அமைக்கப் போவதாக சொல்லும் தற்காலிக சேமிப்பகத்தை எந்தக் கருதுகோள்களின் அடிப்படையில் கட்டப்போகிறார்கள்? அதன் கொள்ளளவு என்ன?
2011 இல் ஜப்பானில் ஏற்பட்ட புகுசிமா அணு விபத்தின் போதுமட்டும் அணுஉலைக்கு வெளியே இருந்த அணுக்கழிவு சேமிப்பகம் மட்டும் வெடித்திருந்தால் டோக்கியோ நகரமே அழிந்திருக்கும். அதற்குப் பிறகுதான், அணுக் கழிவைப் பாதுகாப்பதில் மேலும் பல கடுமையான நெறிகளை ஏற்படுத்தினர். அதையெல்லாம் இந்திய அரசு செய்யப் போகிறதா?
13.5 சதுர கி.மீ இடமே கொண்ட அணுமின் நிலையத்திற்குள் தான் ஆறிலிருந்து எட்டு அணு உலைகளை வைக்கத் திட்டமிட்டுள்ளனர். முதலிரண்டுக்கும் மூன்றுநான்கு அணுஉலைகளுக்குமான இடைவெளி வெறும் 804 மீட்டர். அதற்கடுத்த இரண்டுஇரண்டு அணுஉலைகளுக்கு இடைவெளி வெறும் 344 மீட்டர். இந்த இடநெருக்கடியில் அணுக் கழிவையும் அங்கேயே புதைக்க முற்படுவது எத்தனை ஆபாயமானது! அணுவிபத்தேற்பட்டால் நெல்லை, குமரி, தூத்துக்குடி என மூன்று மாவட்டங்கள் அழிந்து போகும்!
கொள்கை தெளிவும் நேர்மையும் உண்மையும் அரசுக்கு இருக்குமாயின், கருத்துக் கேட்புக் கூட்டத்தை இராதாபுரத்தில் நடத்த முற்படுவதேன், கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்திலேயே நடத்த வேண்டியது தானே! இது குறித்த சூழல்தாக்க அறிக்கையை மக்களுக்கு காட்ட மறுப்பதேன்? அதை இணையதளத்தில் வெளியிட மறுப்பதேன், இதுதான் டிஜிட்டல் இந்தியாவாயிற்றே?
கோலார் தங்கச் சுரங்கத்தில் அணுக்கழிவைப் பாதுகாக்க முற்பட்ட போது கர்நாடகாவில் கிளம்பிய எதிர்ப்பால் அதை கைவிட்ட நடுவண் அரசு, தமிழ்நாட்டில் இருந்து எழும் எதிர்ப்பை மட்டும் புறந்தள்ளுவது ஏன்?
இப்படி எழும் எண்ணற்ற கேள்விகளையும் சேர்த்து அணுக் கழிவோடு புதைத்துவிடலாம் என நடுவண் அரசு கருதுமாயின் அந்தக் காலம் மலையேறிவிட்டது.
மின்சாரம் வேண்டாமா? என்ற பழைய ’வளர்ச்சிப் பல்லவி’ இனியும் எடுபடாது. காற்று, சூரியஒளி, கடல் அலை என புதுப்பிக்கத்தக்க ஆற்றல்களில் இருந்து மின்னாக்கம் செய்வது பற்றிய விழிப்புணர்வு பெருகியுள்ளது. மாற்று எரிசக்திக்கு மாறச் சொல்லும் இயக்கங்கள் நடந்து வருகின்றன.
ஜெர்மனியும் பிரான்சும் ஜப்பானும் அணு மின்னாக்கத்திலிருந்து படிப்படியாய் வெளியேறிக் கொண்டிருக்கின்றன. மக்களின் எதிர்ப்புக்கும் பாதுகாப்புக்கும் அந்தந்த நாட்டு ஆளும்வர்க்கங்கள் மதிப்பு கொடுக்கின்றன. உலகம் படிப்படியாய் வெளியேறிக் கொண்டிருக்கும் போது இங்கே படிப்படியாய் விரிவாக்க முயல்கின்றார்கள் என்றால் இந்திய ஆளும் வர்க்கம் தன் மக்களின் உயிர் மீதும் பாதுகாப்பின் மீதும் எந்த அக்கறையும் கொண்டிருக்கவில்லை என்பதற்கு இதைவிட வேறென்ன எடுத்துக்காட்டு வேண்டும். வெறும் வாக்களிக்கும் மந்தைகளாக மக்களைக் கருதும் இவர்களை இனியும் பொறுக்கலாமா?
காவி-கார்ப்பரேட் சர்வாதிகாரத்தை எதிர்த்து நிற்போம்.
தமிழகமே உரக்கச் சொல், இது வாழும் தலைமுறைக்கும் வருங்கால தலைமுறைக்குமானப் போராட்டம்
அணுக்கழிவைப் புதைக்காதே!
அணு உலை விரிவாக்கத்தை உடனடியாக கைவிடு!
அணு உலைகளைப் படிப்படியாக மூடிடு!
அணுசக்தி எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு
9443184051,9443307681, 9047521117, 9751554613, 6381828052