மாந்த உரிமைச் செயற்பாட்டாளர்கள் மற்றும் சனநாயக ஆற்றல்களின் கூட்டறிக்கை – 17 பிப்ரவரி, 2019

17 Feb 2019

தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் முகிலன் காவல்துறையால் கடத்தப்பட்டாரா? தமிழக முதல்வர் உடனடியாக தலையிட்டுக் அவரைக் கண்டுபிடித்துப் பாதுகாக்க ஆணையிட வேண்டும்!

அணுஉலை எதிர்ப்புப் போராட்டம், ஆற்று மணல் கொள்ளை எதிர்ப்புப் போராட்டம், ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டம் என பல்வேறு சுற்றுச்சூழல் பாதுகாப்புப் போராட்டங்களில் செயல்வீரராகப் பாடுபட்ட தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் முகிலன் 16-2-2018 அதிகாலை 1:45 மணியிலிருந்து யாருடைய தொடர்பிலும் இல்லை! அவரது தொலைபேசி அணைத்து வைக்கப்பட்டுள்ளது!

முன்னதாக 15-02-2018 அன்று காலை 11:00 மணி அளவில் சென்னைப் பத்திரிகையாளர் மன்றத்தில், 2018 மே 22 அன்று நடந்த ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில், “கொளுத்தியது யார்? மறைக்கப்பட்ட உண்மைகள்?”  என்ற தலைப்பிலான ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டார். கடந்த மே 22 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டக்காரர்கள் மீதான துப்பாக்கிச் சூடு எப்படி திட்டமிட்டு நடத்தப்பட்டது?  ஐ.ஜி., டி.ஐ.ஜி.எஸ்.பி. போன்ற காவல் உயர் அதிகாரிகளின் பங்கு இதில் என்ன? என்பதை அம்பலப்படுத்தும் காணொளி காட்சிகள் அவை. இதை வெளியிடுவதால் தன் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்பதையும் அந்தப் பத்திரிகையாளர் சந்திப்பிலேயே அவர் பதிவிட்டார்.

இந்நிலையில் அன்றிரவு 10:30 அளவில் அவர் மதுரை செல்வதற்காக எழும்பூர் இரயில் நிலையம் சென்றுள்ளார். அவருடன் கடைசியாக இருந்தவர் நாமக்கல்லைச் சேர்ந்த தோழர் வீ.ப.பொன்னரசன். அவர் கரூர் செல்வதற்காக தோழர் முகிலனிடம் இருந்து விடைப்பெற்றுள்ளார். அதற்கு பிறகு தோழர் முகிலன் எங்கே? என்று யாருக்கும் தெரியவில்லை. 16-2-2019 அதிகாலை 1:45 மணிவரை அவரது தொலைபேசி செயல்பாட்டில் இருந்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் ஒலுக்கூரில் அவரது தொலைபேசி செயலிழந்துள்ளது.  அவர் 16-2-2018 காலை 10 மணியளவில் மதுரை போய் சேர்ந்திருக்க வேண்டும். ஆனால், அந்த இரயிலில் வந்து இறங்கவில்லை. அவர் இரயிலில் ஏறியப் பின், பாதி வழியில் எங்கேனும் கடத்தப்பட்டாரா? என்ற ஐயம் நமக்கு எழுகிறது. நேற்றைய முழுநாள் அவருடன் தொடர்பில் இருக்கும் தோழர்கள் பலரையும் விசாரித்த போதும் அவர் எங்கு இருக்கிறார் என்பது குறித்து யாருக்கும் தெரியவில்லை. சென்னிமலையில் உள்ள அவரது மனைவி தோழர் பூங்கொடிக்கும் எவ்வித தகவலும் இல்லை.

ஏற்கெனவே கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டத்தின் போது 2012 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் தோழர் முகிலன் காவல்துறையால் கடத்தப்பட்டு மூன்று நாட்கள் சட்டவிரோதமாக தடுத்துவைக்கப்பட்ட வரலாறும் உண்டு. இம்முறையும் அதுபோல் காவல்துறை அவரை கடத்தி இருக்குமோ என்ற ஐயம் எழுகிறது. அப்படி காவல்துறை அவரைக் கைது செய்து இருக்குமாயின், அவரது மனைவிக்கு தகவல் கொடுத்திருக்க வேண்டும், நீதிமன்றத்தில் அவரை ஒப்படைத்திருக்க வேண்டும். இவை இரண்டும் நடக்கவில்லை. கைது செய்ததிலிருந்து 24 மணி நேரத்திற்குப் பின்பும் அவர் நீதிமன்றத்தில் நிறுத்தப்படவில்லை என்றால் அது சட்டவிரோத தடுப்பு என்ற வகைப்படும்.

மக்களுக்காக அல்லும் பகலும் அயராது உழைப்பதையே தன் வாழ்நாள் பணியாக ஏற்று, பாடுபட்டுவரும் தோழர் முகிலனின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக கருதுகிறோம். எனவே, தமிழக முதல்வர் இவ்விசயத்தில் உடனடியாக தலையிட்டு அவரை தேடிக் கண்டுபிடித்துப் பாதுகாக்க ஆவன செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

இப்படிக்கு,

கண. குறிஞ்சி, மாநிலத் தலைவர்,  மக்கள் சிவில் உரிமைக் கழகம்

க. சரவணன், மாநிலப் பொதுச்செயலர்.மக்கள் சிவில் உரிமைக் கழகம்

ஹென்றி டிபேன், நிர்வாக இயக்குநர், மக்கள் கண்காணிப்பகம்

அ.மார்க்ஸ், தலைவர், தேசிய மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பு

த.வெள்ளையன் தலைவர் வணிகர் சங்கப் பேரவை 

ராஜீ, மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்

பாத்திமா பாபு, ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம்

தமிழ்மாந்தன், ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கம் –தூத்துக்குடி

நித்யானந்த ஜெயராமன், சூழலியல் செயல்பாட்டாளர்

கொளத்தூர் தா.செ. மணி தலைவர் திராவிடர் விடுதலைக் கழகம்

மீ.த. பாண்டியன், தலைவர் தமிழ்த்தேச மக்கள் முன்னணி

கோவை இராமகிருஷ்ணன், பொதுச் செயலாளர், தந்தைப் பெரியார் திராவிடர் கழகம்

தியாகு தலைமைக் குழு உறுப்பினர் தமிழ்த்தேசிய விடுதலை இயக்கம்

பொழிலன் தலைவர், தமிழக மக்கள் முன்னணி

தமிழ்நேயன் பொதுச்செயலாளர் தமிழ்த்தேச மக்கள் கட்சி

முகம்மது  இஸ்மாயில்,  மாநில தலைவர் ஃபபாபுலர் ஃபரண்ட் ஆப் இந்தியா

செந்தில், ஒருங்கிணைப்பாளர், இளந்தமிழகம்

ஆர்.ஆர். சீனிவாசன் பூவுலகின் நண்பர்கள் தமிழ்நாடு- புதுச்சேரி

வழக்கறிஞர் கென்னடி, திருச்சி

கண்ணதாசன், இயற்கை தாயகம்

ரமேஸ் கருப்பையா, சூழலியல் செயல்பாட்டாளர்

ஜா.செழியன், காக்கை கூடு

அ.சண்முகாணந்தன், உயிர்

மூவி.நந்தினி சூழலியல் செயல்பாட்டாளர்

முனைவர் பகத்சிங்  சூழலியல் செயல்பாட்டாளர் –எண்ணூர்

 

 

தொடர்புக்கு :

செந்தில், இளந்தமிழகம் – 9941931499, வழக்கறிஞர் கென்னடி – 9443079552, கண. குறிஞ்சி, PUCL – 9443307681

 

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW