‘காஷ்மீரில் நடந்த கொடிய தாக்குதலின் பின்னிருந்த பதின்வயது இளைஞன்’ – Scroll.in செய்தி குறிப்பு
பத்தொன்பது வயதே ஆன அடில் அகமது தர் மதகுரு ஆக வேண்டும் என விரும்பியவன், 2016 ஆம் ஆண்டு நடைபற்ற மக்கள் போராட்டங்களில் பங்கு பெற்றவன், என அவனது குடும்பத்தினர் கூறினர்.
பிப்ரவரி 14 ஆம் தேதி மாலையில், ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு 10 நிம்ட நிளமுள்ள முன் பதிவு செய்யப்பட்ட காணொளி ஒன்றை வெளியிட்டது. தெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள கூன்டிபாக் பகுதியின் வாக்கஸ் கமாண்டா என்று அழைக்கப்பட்ட 19 வயதான அடில் அகமது தர் அக்காணொளியில் தோன்றினான். ஜெய்ஷ் அமைப்பின் ஃபிதாயீன் அணியில் தான் நேரடியாக சேர்க்கப்பட்டதாக அவன் கூறினான். ”ஃபிதாயீன்” என்ற அரபிச் சொல்லுக்கு “தம்மைத் தியாகம் செய்பவர்கள்” என்று அர்த்தம். ”இந்தக் காணொளி உங்களை அடையும் போது, நான் சொர்க்கத்தில் இருப்பேன்”, என்று அறிவித்தான்.
இந்திய அரசின் கீழ் “இந்திய மற்றும் காஷ்மீர் முஸ்லிம்கள்” எதிர்கொள்ளும் நிலையைப் பற்றியும் பேசிய தர், “உங்கள் மீதான ஒடுக்குமுறை எங்கள் ஜிகாத்துக்கு எரியூட்டுகிறது”, என்றும் தெரிவித்தான். ”டெஹ்ரீக்” அல்லது இயக்கத்தில் தெற்கு காஷ்மீரின் பங்கினை பாராட்டிய அவன், வடக்கு மற்றும் மத்திய காஷ்மீர் மக்களையும் இணையக் கோரினான்.
அக்காணொளி வெளியிடப்பட்ட சில மணி நேரங்களுக்கு முன்பு, வெடிபொருட்கள் நிரம்பிய ஸ்கார்பியோ வாகனம் ஒன்றை ஓட்டிச் சென்ற தர், ஸ்ரிநகர்-ஜம்மு தேசிய நெடுங்சாலையில் சென்று கொண்டிருந்த சுமார் 70 மத்திய பாதுகாப்புத் துறை வாகனங்களின் அணிவகுப்பில் மோதினான். புல்வாமா மாவட்டத்தின் அவந்திபொரா பகுதியிலுள்ள லெத்பொரா அருகே இச்சம்பவம் நிகழ்ந்தது.
”அவந்திபொரா காவல் மாவட்டத்தைச் சேர்ந்த காவல்துறையினர் இன்று லது மொடெ லெத்பொராவில் மதியம் 3:15 அளவில், ஜம்முவிலிருந்து ஸ்ரிநகர் நோக்கி சென்று கொண்டிருந்த பாதுகாப்புத் துறையினரின் வாகன அணிவகுப்பின் மீது குறி வைத்து நிகழ்த்தப்பட்ட ஒரு மிகக் கொடிய தீவிரவாத தாக்குதலுக்குள்ளான இடத்திற்கு சென்றனர்” என்று ஜம்மு காஷ்மீர் காவல் துறை அறிக்கை ஒன்று கூறியது. ”மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படையினருடன் அவ்வணிவகுப்பில் சென்ற ஒரு வாகனம் இச்சம்பவத்தால் மிகவும் பாதிக்கப்பட்டு பல உயிரிழப்புகளுக்கு வழி வகுத்தது”.
வியாழக்கிழமை வெளியிடப்பட்ட மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படையின் அறிக்கைப் படி சுமார் 37 வீரர்கள் இறந்துள்ளனர். 42 பேர் வரை இறந்திருக்கலாம் என அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. குறைந்தபட்சம் 5 துணை இராணுவப் படையினரும் இச்சம்பவத்தில் காயமடைந்திருக்கலாம்.
காஷ்மீரின் 30 ஆண்டுகால ஆயுதப் போராட்ட வரலாற்றிலேயே பாதுகாப்புப் படையினரின் மீது ஆயுதப்போராளிகளால் நடத்தப்பட்ட தாக்குதல்களில் இச்சம்பவமே மிகக் கொடியது என அழைக்கப்படுகிறது. அவ்வெடிப்பினை நேரில் கண்டவர்கள் “நில நடுக்கத்தைப் போன்ற” அதிர்வலைகளை அப்பகுதி முழுவதும் அவ்வெடிப்பு ஏற்படுத்தியதாகத் தெரிவிக்கின்றனர். அச்சம்பவம் எரியும் நிலையில் வாகனப் பாகங்கள், சிதறிய மனிதச் சதைத் துண்டுகள், குட்டைகளாக ஆங்காங்கே தேங்கிய இரத்தம் என விட்டுச் சென்றது.
வெடிப்பு நிகழ்ந்த பின்னர், அவ்விடத்தைச் சுற்றியிருந்த 15 கிராமங்கள் சுற்றி வளைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். கடந்த பிப்ரவரி 8 ஆம் தேதி, மத்திய ரிசர்வ் படையினருக்கு, குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ வாய்ப்புள்ளதாக காவல் துறையினர் தங்களுக்கு செய்தி கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர். ”நீங்கள் உங்கள் இடத்தை பயன்படுத்தும் முன்பு, அப்பகுதியை சரியாக சுத்தப்படுத்துங்கள்”, என காவல்துறை அனுப்பிய குறிப்பில் எழுதப்பட்டிருந்தது.
”ஒரு பொறுப்பான பையன்”
குண்டு வெடிப்பு நடந்து சில மணி நேரங்களுக்குப் பிறகு, தர் வீடு இருந்த கூன்டிபாக் பகுதியைச் சேர்ந்த மக்கள், பெண்கள், குழந்தைகள் உட்பட, மழையையும் குளிரையும் கடந்து அவனது வீட்டிற்குச் சென்றனர். இரண்டு மாடிகளைக் கொண்ட அவ்வீட்டின் வெளிச் சுவரில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் கொடி ஒன்று எழுந்துள்ளது.
குலாம் ஹசன் தர், தர்ரின் தந்தை, வெறுப்பற்ற அமைதியான முகத்துடன் அருகிலிருந்த தனது சகோதரனது வீட்டில் துக்கம் அனுசரிப்பவர்கள் சூழ அமர்ந்திருந்தார். ”அவன் மிகவும் பொறுப்பான பையன்”, வீடு வீடாகச் சென்று துணி விற்கும், அவனது தந்தை கூறினார். ”அவனது பையில் 10 ரூபாய் இருந்தால், அதில் 5 ரூபாயை சேமித்து வைப்பான். அவனது அம்மாவிற்கு உதவி புரிவான். வீட்டின் தினசரி தேவைகளை கவனித்துக் கொண்டான்”.
மூன்று சகோதரர்களில் இரண்டாமவனான தர் 12ஆம் வகுப்பு வரை படித்துவிட்டு பின்னர் மதக் கல்வியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டான். ”மதகுருவாக வேண்டும் என அவன் ஆசைப்பட்டான். மேலும் அவன் ஏற்கெனவே குர்ரானின் எட்டு அத்தியாயங்களை மனப்பாடம் செய்துவிட்டிருந்தான்”, என்றார் அவன் தந்தை. ”அவன் நேரம் கிடைக்கும் போது, ஏதாவது ஒரு வேலை செய்து தனக்கென கொஞ்சம் பணம் சம்பாதித்துக் கொள்வான். கடந்த 2017இல், அருகாமையிலிருந்த தச்சு ஆலை ஒன்றில் மரப்பெட்டிகள் செய்து, அதன் மூலம் 50,000 – 60,000 வரை சம்பாதித்தான்.”
தர்ரின் குடும்பம் அவனை கடைசியாக கடந்த மார்ச் 19, 2018 அன்று மதியம் பார்த்ததாக அவனது தந்தை கூறினார். ஒரு கட்டுமானத் தளத்தில் கொத்தனார் ஒருவருக்கு உதவியாளனாக அவன் அப்போது பணிபுரிந்து கொண்டிருந்தான். அன்று மதிய உணவருந்த வீட்டிற்கு வந்த அவரது மகன், உணவருந்தி விட்டு, சைக்கிளை எடுத்துக் கொண்டு சென்றதாகக் கூறினார் குலாம் ஹசன் தர். ”சில நாட்கள் கழித்து அடில் துப்பாக்கி எந்தி நிற்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது”, என்றார் அவன் தந்தை. “அவன் இந்தப் பாதையைத் தேர்ந்தெடுப்பான் என்று எங்களுக்கு எந்த யோசனையும் இல்லை.”
காவல்துறையினரின் கூற்றுப்படி, ஜெய்ஷின் முந்தைய ஆயுதப் போராளியான ஃபர்தீன் அகமது காண்டே கடந்த 2018இல் கொல்லப்பட்ட பிறகு, தர் அவ்வமைப்பின் ஃபிதாயீன் அணியில் சேர்க்கப்பட்டான். கடந்த ஜனவரி 2018 இல், மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படையினர் மீது தற்கொலைத் தாக்குதல் நடத்திய குழுவில் காண்டேவும் ஒருவர். அத்தாக்குதலில் துணை இராணுவப் படையினர் ஐந்து பேர் உயிரிழந்தனர்.
விடைகளைத் தேடி:
எப்படி தமது மகன், காஷ்மீரின் மிகக் கொடிய ஆயுதத் தாக்குதலின் முகமாக மாறினான் என்ற கேள்விக்கான விடையை தர்ரின் குடும்பத்தினர் தேடிய போது, 2016இல் நிகழ்ந்த ஒரு சம்பவம் அவர்களது நினைவுக்கு வந்தது. “ஒரு நாள் அவன் பள்ளி முடிந்து வந்து கொண்டிருந்த போது, எஸ்.டி.எஃப் (STF) அவனைத் தடுத்து நிறுத்தி, அவனது மூக்கை தரையில் உரசுமாறு செய்தனர்”, என்று அவன் தந்தை கூறினார். ஜம்மு காஷ்மிர் காவல்துறையின் எதிர்கிளர்ச்சிப் பிரிவு சிறப்பு வேலைப் படை (Special Task Force) என்று முதலில் அழைக்கப்பட்டது. அதன் பெயர் சிறப்பு நடவடிக்கைக் குழு (Special Operations Group) என பின்னர் மாற்றப்பட்டுவிட்டாலும், மக்கள் வழக்கில், இன்னும் “எஸ்.டி.எஃப்”(STF) என்றே உள்ளது. அப்படைப் பிரிவினர், அச்சிறுவனை ஜீப்பை தனது மூக்கினால் சுற்றும்படி செய்தனர் என்று கூறிய அவனது தந்தை, “அவன் அந்நிகழ்வைப் பற்றி மீண்டும் மீண்டும் கூறிக் கொண்டே இருந்தான்” என்றார்.
காஷ்மீரின் விடுதலைக்கான அரசியலில் தனது மருமகன் மிகவும் ஆர்வமாக இருந்ததாக, அவனது மாமா, அப்துல் ரஷித் தர் கூறினார். ”அவன் போராட்டங்களில் முனைப்புடன் பங்கேற்றான்”, என்று அவர் கூறினார். ”கடந்த 2016 புர்ஹான் வானி எழுச்சியின் போது, அவன் காலில் குண்டடி பட்டது. மூன்று மாதங்கள் அவன் காலுக்கு கட்டு போடப்பட்டு இருந்தது”. ஹிஸ்புல் முஜாஹிதீனின் தளபதி புர்ஹான் வானி கடந்த ஜீலை 8, 2016 இல் கொல்லப்பட்டதை ஒட்டி, காஷ்மீர் பள்ளத்தாக்கில் பெரும் மக்கள் போராட்டங்கள் பல மாதங்கள் தொடர்ந்து நடைபெற்றன.
தனது குடும்பத்திலிருந்து ஆயுதப் போராட்டத்தில் இணைந்ததில் தர் முதலாமவன் இல்லை. அவனுடைய உறவினனும், அப்துல் ரஷித் தர்ரின் மகனுமான மன்சூர் ரஷித் தர் லஷ்கர்-இ-தொய்பாவில் கடந்த 2016இல் இணைந்தான். வெறும் 11 நாட்கள் மட்டுமே ஆன நிலையில், ஒரு துப்பாக்கிச் சூட்டில், ஜூன் 30, 2016 இல் கொல்லப்பட்டான். ” எனது மற்றொரு மகன், டவ்ஸீஃப் அகமது, ஆயுதப் போராட்டத்தில் தன்னை இணைத்துக் கொள்ள கடந்த ஆண்டு மார்ச் மாதம் சென்றான்”, என்றார் அப்துல் ரஷித் தர். “அவன் காணாமல் போன நான்காவது நாள், அடிலும் சென்று விட்டான். என்னுடைய மகன் 14 நாட்கள் கழித்து திரும்பிய போதும், அடில் திரும்பவில்லை.”
யார் தான் இரத்தத்தைப் பார்க்க விரும்புவார்கள்?
தர்ரின் வீட்டில் சோகம் இருந்தாலும், கூடவே கோபமும் இருந்தது. அக்கோபம் பெரிதும் “இந்திய-ஆதரவு” அரசியல் கட்சிகள் மீதே இருந்தது. ”யார் தான் இப்படி இரத்தத்தைப் பார்க்க விரும்புவார்கள்?” என்று கூறினார் குலாம் ஹசன் தர். ”குடும்பத்தில் ஏதாவது பிரச்சனை இருந்தால், அதை சரி செய்யும் பொறுப்பு, குடும்பத்தின் தலைமையையே சாரும். அதுதான், நமது அரசியல்வாதிகள் விடயத்திலும் இருந்திருக்க வேண்டும்.”
மேலும் அவர், “ஆனால், உண்மை என்னவென்றால், அவர்களுக்கு அதிகாரத்தின் மீது அக்கறை. தினம் தினம் குருடாக்கப்படும் பொது மக்களைப் பற்றியும், கொலைகளைப் பற்றியும், என்கவுண்டர்களைப் பற்றியும் யாருமே பேசுவது இல்லை. ஏன் இந்த அரசியல்வாதிகள் அனைத்து கட்சிகளையும் அழைத்து, காஷ்மீர் சிக்கலுக்கு தீர்வு காண்பதில்லை?”
ஆயுதங்களைக் கைவிட்ட பிறகும் தர்ரின் உறவினன், டவ்ஸீஃப் அகமுதுவின் நிலையை அக்குடும்பம் காட்டியது. ”எனது மகன் ஆயுதப் போராட்டத்திலிருந்து திரும்பிய போது, அவனை துபாய்க்கு வேலைக்கு அனுப்புவதாக நாங்கள் காவல்துறையினரிடம் கூறினோம்”, என்று அப்துல் ரஷித் தர், ”ஆனால், நாங்கள் அவனுக்கு பாஸ்போர்ட் ஏற்பாடு செய்யும் வேலையில் இருந்த போது, அவனைக் கைது செய்த காவல்துறையினர் PSA(பொது அமைதிச் சட்டம்)வின் கீழ் அவனை சிறையிலடைத்தனர். கடந்த மூன்று மாதங்களாக, எனது 19 வயது மகன், ஜம்முவிலுள்ள கோட் பல்வால் சிறையில் அடைக்கப்பட்டுள்ளான். பொது அமைதிச் சட்டம் என்பது, ”பொது அமைதி” மற்றும் “தேசப் பாதுகாப்பு” உள்ளிட்ட காரணங்களைக் காட்டி பொதுமக்களை தடுப்புக் காவலில் வைக்க காவல்துறைக்கு அனுமதி அளிக்கும் சட்டம்.
அப்போது குறுக்கிட்ட குலாம் ஹசன் தர், “நான் எனது மகனை திரும்பக் கோரியிருந்தால், ஆயுதப் போராளிகள்: ஏற்கெனவே சரணடைந்த உனது சகோதரன் பி.எஸ்.ஏ வில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப் பட்ட நிலையில் நீ சரணடைவதால் என்ன பயன்? என்று கேட்கமாட்டார்களா?”
தர் இப்படி ஒரு தாக்குதலை நிகழ்த்துவான் என்பதை ஊகிக்கவில்லையாயினும், அவனது மரணம், அவனது குடும்பத்தினர் எதிர்பாராதது அல்ல. “வீட்டை விட்டு ஆயுதப் போராட்டத்திற்குச் சென்ற நாள் முதலே அவன் எங்களுக்கு தியாகி ஆகிவிட்டான்”, என்று அவனது தந்தை கூறினார். ”ஆனாலும் அவனை இறுதியாக ஒரு முறை சந்திக்க முடியவில்லை என்ற வருத்தம் எங்களுக்கு எப்போதும் இருக்கும்.”
வியாழக்கிழமை கொல்லப்பட்ட அப்போராளியின் எஞ்சிய உடலைப் பற்றி யாரும் பெரிதாக பேச விரும்பவில்லை. ”காவல்துறையிடமிருந்து குடும்பத்திற்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது”, எனக் கூறினார் அடையாளப்படுத்தப் பட விரும்பாத உறவினர் ஒருவர். “வெடிப்பு நிகழ்ந்த இடத்தில் அடிலின் உடலில் எதுவும் மிஞ்சவில்லை என அவர் கூறினார். மரக்கிளைகளிலிருந்தும், மொட்டைமாடிகளிலும் ஆங்காங்கே மனிதத் தசைப் பாகங்கள் தொங்குவதாக அவர் கூறினார்.”
அவனுடைய உடல் கிடைக்கப்பெறவில்லையாயினும், அவனது குடும்பத்தினர் தர்ருக்கு பிப்ரவரி 14 ஆம் தேதி இறுதிச் சடங்கினை நடத்தினர். காவல் துறையினரைப் பொறுத்தவரை வேறு இரு போராளிகள் கூன்டிபாக் பகுதியில் செயல்பட்டு கொண்டிருப்பதாகக் கூறினர்.
ஜெய்ஷின் பழைய தந்திரம்
பிப்ரவரி 14 நடந்த தாக்குதல் காஷ்மீரை மீண்டும் 2000ங்களின் துவக்கத்திற்கு கொண்டு சென்றுள்ளது. அப்போது, ஜெய்ஷ்-இ-முகமது தனது வருகையை இரண்டு தற்கொலைத் தாக்குதல்கள் மூலம் காஷ்மீர் பள்ளத்தாக்குக்கு அறிவித்தது. கடந்த 2000 ஆம் ஆண்டு, 17 வயது நிரம்பிய, ஸ்ரிநகரைச் சேர்ந்த அஃபாக் அகமது, மாருதி லாடன் ஒன்றை ஓட்டிச் சென்று, இராணுவத்தின் 15ஆவது பிரிவின் தலைமையகமான பாதாமி பாக் கண்டோன்மண்ட்டிற்குள் வெடிக்கச் செய்தான். அதுவே காஷ்மீர் பள்ளத்தாக்கில் ஜெய்ஷ்-இ-முகமதுவின் வருகையைப் பதிவு செய்தது.
அதே ஆண்டு, பாதாமி பாக் ஒரு தற்கொலை வாகனத் தாக்குதலுக்கு மீண்டும் உள்ளானது. இந்த முறை, பிரிட்டனைச் சேர்ந்த, 24 வயது நிறைந்த அப்துல்லா பாயை அவ்வமைப்பு தேர்ந்தெடுத்தது.
பிறகு, கடந்த 2005 ஆம் ஆண்டில், ஜெய்ஷின் பனாத்-இ-ஆயிஷா பிரிவின் உறுப்பினரும், பாக்கிஸ்தான் போராளி ஒருவரின் மனைவியுமான யஸ்மீனா அக்தர், அவந்திபொரா நகரில் தன்னைத் தானே வெடிக்கச் செய்து தற்கொலைத் தாக்குதல் நிகழ்த்தினார். தங்களது முதல் பெண் தற்கொலைப் போராளியாக அவரை ஜெய்ஷ்-இ-முகமது அறிவித்தது.
பதில் தாக்குதல்கள் மீதான பயம்:
காஷ்மீரை மையமிட்ட தேசிய மாநாட்டுக் கட்சி, மக்கள் ஜனநாயகக் கட்சி உள்ளிட்ட அனைத்து தரப்பு கட்சிகளும் இவ்வெடிப்புக்கு தங்கள் கண்டனங்களைப் பதிவு செய்தன.
இதுபோன்ற தாக்குதல்கள் மீதான கோபம் அதிகரிப்பதென்பது, நாட்டின் பிற பாகங்களில் தங்கி வேலை செய்யும் காஷ்மீரிகள் மீதான தாக்குதல்களாக மாறும் என காஷ்மீர் பள்ளத்தாக்கில் பலர் அஞ்சுகின்றனர். தெற்கு காஷ்மீர் முழுவதும் மொபைல் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. ஸ்ரிநகரில், மொபைல் இணைய சேவையின் வேகம் 2G ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சர் இராஜ்நாத் சிங் வெள்ளிக்கிழமையன்று ஸ்ரிநகர் செல்ல உள்ளார். தற்போது, அம்மாநிலத்தில் குடியரசுத் தலைவரின் ஆட்சி நடைபெற்று வருகிறது. தற்போது, ஜம்முவிலுள்ள ஆளுநர் சத்யபால் சிங், ஸ்ரிநகர் புறப்பட்டுச் செல்கிறார்.
தமிழில்: பாலாஜி திருவடி
நன்றி: Scroll.in