கஜா புயலில் தப்பிய மக்களை சாலையோரங்களில் சாகவிடப் போகிறோமா?

27 Nov 2018

(கஜா பேரிடர் –  உயிர் காற்றின் ஓசைகள் – (8) – நாகை வேதாரண்யம் )

வேதாரண்யத்தில் இருந்து நாகை, நாகையிலிருந்து திருத்துறைப்பூண்டி, திருத்துறைப்பூண்டியிலிருந்து மன்னார்குடி வழியான தஞ்சாவூர் செல்லும் சாலை ஓரங்களில் இரவு நேரங்களில்கூட மக்கள் நின்று கொண்டோ உட்கார்ந்து கொண்டோ இருக்கின்றனர். இரண்டு காரணங்களுக்காக அவர்கள் அப்படி நிற்கக் கூடும்.

  1. புயலும் மழையும் சேர்ந்து கொண்டதால் குடிசை வீட்டுக்குள் சேறும் சகதியும் ஆகிவிட்டது. இதனால் இரவு நேரங்களில் வீட்டில் தூங்க முடியாமல் சாலையோரங்களுக்கு வருபவர்கள். தொகுப்பாய் குடிசைகள் இருக்குமிடங்களில் முகாம் அமைக்கப்பட்டுள்ளதால் அம்மக்கள் முகாம்களில் தூங்கிவிடுகின்றனர். அப்படி தொகுப்பாய் இல்லாமல் உதிரியாய் குடிசைகள் இருக்கும் இடங்களில்தான் மக்கள் சாலையோரங்களில் இருக்க நேர்கிறது.
  2. துயர் தணிப்புப் பொருட்களை எடுத்துக் கொண்டு வரும் வாகனங்களை எதிர்ப்பார்த்து அப்படி நிற்க வேண்டும். ஒருவர் கடந்து செல்லும் வாகனங்களுக்கு தெரியும்படி ’புயலால் பாதிப்பு’ எனப் பதாகை பிடிப்பதைக் கூட காண முடிந்தது.

இப்படி சாலையோரம் நிற்பது எத்தனை அபாயகரமானது என்பதை சில நாட்களுக்கு முன்பு கண்டோம். எனவே, இது மிகவும் கவலைக்குரியதும் இப்படி நிற்க வேண்டிய தேவை இல்லாமல் செய்வதெப்படி என சிந்திக்க வேண்டியதுமாகும். ஏனெனில், நவம்பர் 22 ஆம் நாள் இரவு சுமார் 10 மணியளவில் திருத்துறைப்பூண்டியில் இருந்து நாகை செல்லும் சாலையில் அகர நீர்முளையில் சாலையோரம் உட்கார்ந்திருந்த நான்கு பெண்கள் காரில் ஏற்றிக் கொல்லப்பட்டனர். சுமதி, ராஜகுமாரி, அமுதா, சரோஜா ஆகிய நால்வரும் அதே இடத்தில் உயிரிழந்ததும் சரோஜாவின் ஒன்பதாவது படிக்கும் மகன் மணிகண்டன் கால் இழந்ததும் நடந்துள்ளது. அகரநீர்முளையைச் சேர்ந்த இவர்கள் ஆரம்ப சுகாதர நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அங்கே உட்கார்ந்து காற்றோட்டமாக வெற்றிலைப் பாக்கு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர், சிறுநீர் கழிக்க வந்தனர், துயர்துடைப்பு பொருட்கள் வாங்க நின்றனர் எனப் பல காரணங்களைச் சொல்கின்றனர் அந்த ஊர் மக்கள். ஆனால் இந்த விபத்து அகர நீர்முளைக்கு அருகில் இருக்கும் ஜீவா நகரில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ”பெண்கள் யாரும் சாலைக்கு சென்று துயர்துடைப்பு பொருட்களுக்காக காத்திருக்க வேண்டாம், காலனிக்குள் கொண்டு வந்தால் வாங்கிக் கொள்ளலாம்” என்று அங்குள்ள இளைஞர்கள் சொல்லியுள்ளனர். துயர்துடைப்புப் பொருட்கள் யாருக்கு கிடைக்கிறது, யாருக்கு கிடைக்கவில்லை, யார் மீண்டும் மீண்டும்  பெறுகின்றனர் என்ற கேள்விகள் எழக்கூடும்.

 

புயல் பாதுகாப்பு முகாம்களில் சோறு போடுவதுடன் நியாய விலைக் கடைகளில் 5 கிலோ அரிசியையும் 1 லிட்டர் மண்ணெய்யையும் மெழுகுவர்த்திகளையும் மட்டும்தான் அரசு கொடுத்துள்ளது. மற்றபடி துயர்துடைப்புப் பொருட்கள் என மக்களுக்கு கிடைத்துள்ள யாவும் அரசுக்கு அப்பாற்பட்ட அமைப்புகள், கட்சிகள், தொண்டு நிறுவனங்கள், தனி ஆட்கள் வழியாகத்தான் வந்துள்ளன. அரசு எதையும் உருப்படியாக செய்யவில்லை என்ற கவலையுடன் தனியார் கொண்டுவரும் பொருட்களும்கூட தமக்கு கிடைக்காமல் மற்றவர்களுக்குப் போகிறது என்றும் தாம் புறக்கணிக்கப்படுகிறோம் என்றும் பல்வேறு பிரிவினரும் கவலையுறுகின்றனர். இதனால், துயர்துடைப்புப் பொருட்கள் வரும் பொழுது அந்த வாகனங்களின் கவனத்தைப் பெற்று இன்றியமையாத பொருட்களைப் பெற்றுவிட வேண்டும் என்று கருதுகின்றனர். ஆனால், இத்தகைய ஒரு பேரிடருக்குள்ளாகி இருக்கும் சமூகத்தில், ஒரே கிராமத்தில், தேவையிருக்கும் ஒரு பகுதியினருக்குப் பொருட்கள் கிடைக்காமல் இன்னொரு பகுதியினருக்கு மட்டும் கிடைக்கிறதென்றால் அது உணர்த்தும் செய்தி என்ன?

 

நீர்முளை ஊராட்சியையே எடுத்துக் கொள்வோம். சாலையோரம் அமர்ந்திருந்ததால் உயிரழந்த அந்த நால்வரும் அகர நீர்முளையைச் சேர்ந்த தலித் மக்கள்! கூலி விவசாயிகளான இவர்கள் குடிசை மற்றும் ஓட்டு வீடுகள் புயலில் சேதமடைந்ததால் அங்கேயுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைக்கப்பட்ட புயல் பாதுகாப்பு முகாமுக்கு வந்தவர்கள். இவர்களில் நான்குபேர்தான், ஒரே நேரத்தில் ஒரே காரில் ஏற்றிக் கொல்லப்பட்டவர்கள். இவர்கள் இப்படி இறக்க நேர்ந்ததால், சாலையோரம் நிற்க கூடாதென முடிவெடுத்த ஜீவா நகரைச் சேர்ந்தவர்களும் தலித் மக்கள். இவர்களின் வீடுகள் சாலையில் இருந்து சில நூறு மீட்டர் உள்ளே தள்ளி இருப்பதால் துயர் துடைப்புப் பொருட்கள் யாவும் சாலையோரம் உள்ள பிற சமூகப் பிரிவினரின் கைக்குப் போய்விடுகிறது என்று அவர்கள் சொல்கின்றனர்.

பிரதான சாலையிலிருந்து தொலைதூரத்தில் இருக்கும் கிராமங்களுக்கும் ஊருக்கு ஒதுக்குபுறமாக இருக்கும் தலித் குடியிருப்புகளுக்கும் துயர்துடைப்புப் பொருட்கள் சென்று சேர்வதில் இடர்பாடுகள் உள்ளன. எங்கிருந்தோ துயர்தணிப்புப் பொருட்களைக் கொண்டு வருபவர்களுக்கு அந்த கிராமத்தில் எவ்வளவு பேர், எங்கெங்கு இருக்கிறார்கள் என்பது தெரியாது. ஜீவா நகரைச் சேர்ந்தவர்கள் பிரதான சாலையோரம் நிற்பதில்லை என்று முடிவெடுத்ததால் அவர்கள் அங்கு இருப்பது வெளியூரில் இருந்து துயர்தணிப்புப் பொருட்களை எடுத்துவருபவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. துயர்தணிப்புப் பொருட்களை ஊரின் பிரதான சாலையில் வாழும் முஸ்லிம்கள் பெற்றுகொள்கின்றனர் என்று ஆதங்கப்படுகின்றனர். ஒரே கிராமமாக இருந்தாலும் ஒவ்வொரு  சமூகப் பிரிவினரும் தமது சமூகத்தையே முதல் அடிப்படை அலகாக உணர்வதால் அந்தப் பிரிவின் தேவை நிறைவடைந்த பிறகே அடுத்தப் பிரிவினரின் தேவையைப் பற்றி சிந்திக்கின்றனர்! ஆனால், புயல் எல்லோருக்கும் இழப்புகளைத் தந்துவிட்டுப் போய்விட்டதே!

 

ஒரே கிராமத்தில் என்றாலும் வெவ்வேறு இடங்களில் தனித்தனியாக வாழ்ந்து கொண்டிருப்பதால் தலித் மக்களுக்கும் மற்றவர்களுக்குமான தனித்தனியான முகாம்கள் இருக்கின்றன. சாதிய சமூகத்தின் யதார்த்தம் இப்போதும் பிரதிபதிக்கின்றது. தமது வாழ்விடத்தை இழந்து தவிக்கும் பேரிடரின் போதும்கூட சாதி,வர்க்க வேறுபாடுகளை எல்லாம் மக்கள் கடந்துவிடவில்லை. ஒரு காலனியில் சில கான்கிரீட் வீடுகளும் பல குடிசைகளும் இருந்த நிலையில், புயல் வீசிய போது அந்த குடிசை வீடுகளைச் சேர்ந்தவர்கள் எல்லாம் சில கான்கிரீட் வீடுகளில் தஞ்சம் புகுந்து தம்மைப் பாதுகாத்துக் கொண்டனர். ஆனால், புயல் வீசி முடிந்த அடுத்த நொடியில் இருந்து கான்கிரீட் வீட்டுக்காரரின் தேவைகளும் குடிசை வீட்டுக்காரரின் தேவைகளும் வேறு வேறாக மாறிவிடுகிறது. படுத்து உறங்க இடமில்லாமல், போர்வை, தார்பாய் இல்லாமல் தவித்துக் கிடக்கும் குடிசைவாசிகள் சொந்த சாதியே என்றாலும் வசதி படைத்தவர்கள் இந்த துயரைத் தணிப்பதற்கு துணை நிற்பதில்லை. தலைஞாயிறில் உள்ள அழகுமாரியம்மன் கோயில் தெருவில், இருதரப்பாரும் கூலி விவசாயிகளாகவே இருந்தாலும் தலித் மக்கள் பெரும்பான்மையாகவும் இடைநிலை சாதியைச் சேர்ந்தோர் சிறுபான்மையாகவும் இருக்கும்நிலையில் துயர்தணிப்புப் பொருட்களைத் தலித் மக்களே பெற்றுவிடுகின்றனர் என்று இடைநிலை சாதியினர் நொந்து கொள்வதையும் காண முடிந்த்து! இப்படியாக சாதியும் வர்க்கமும் பின்னிப் பிணைந்த இந்த சமூக கட்டமைப்பின் முரன்பாடுகள் பேரிடரின் போதும்கூட வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அதுமட்டுமின்றி, ஒரு கிராமத்தில் இருக்கும் அனைவருக்கும் கொடுக்கும் அளவுக்கு துயர்தணிப்புப் பொருட்கள் இல்லாத போது விடுபட்டுப் போகும் ஒரு சிலருக்கும் பொருட்களைப் பெற்றுக் கொண்டவர்களுக்கும் இடையிலான முரண்பாடுகூட தற்காலிகமாக தோன்றுகிறது.

இன்றியமையாத பொருட்களை மக்களுக்கு கொடுப்பதற்கு பொறுப்பு ஏற்க வேண்டிய அரசு அதை செய்ய மறுக்கிறது.  தனியாட்கள், தனியார் அமைப்புகளின் உதவும் மனப்பான்மையை தமது செயலின்மைக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறது. இதுமட்டுமின்றி, அரசுக்கு அப்பாற்பட்ட ஆற்றல்களின் முயற்சிகளால் கொண்டுசெல்லப்படும் துயர்தணிப்புப் பொருட்கள்  பாதிக்கப்பட்டோர் அனைவருக்கும் சென்று சேர்வதில் உள்ள இடர்பாடுகளால் மக்களிடையே உள்ள முரண்பாடுகள் கூர்மைப்படுவதையும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது அரசு. இதனால்தான், மக்கள் துயர்துடைப்புப் பொருட்களைக் கொண்டு வரும் வாகனங்களுக்காக காத்திருந்தும் சிற்சில இடங்களில் தடுத்து நிறுத்தியும் தமக்கு அப்பொருட்களைக் கொடுக்குமாறு கேட்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

இப்பேரிடரால் காவிரிப் படுகைக்கு ஏற்பட்டுள்ள துயரைத் தணிப்பதற்கு காவிரிப் படுகைக்கு வெளியில் இருந்தும் தமிழகத்திற்கு வெளியில் இருந்தும் இந்தியாவுக்கு வெளியில் இருந்தும் தமிழர்கள் துயர்தணிப்புப் பொருட்களை அனுப்பி வருகின்றனர். குறிப்பாக, இதே காவிரிப் படுகையில் இருந்து கல்விக்காகவும், வேலைக்காகவும் வெளியில் போனவர்கள் இந்த பொருட் திரட்டலை முன்னெடுத்து வருகின்றனர். அப்படி இப்பணியை முன்னெடுப்பவர்கள் அவரவர் சொந்த ஊரை மனதில் கொண்டே இதை செய்யக் கூடும். ஆனால், பொருட்களையோ நிதியையோ தருபவர்கள் காவிரிப் படுகையைச் சேராதவர்களாகவும் பல்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்களாகவும் இருக்கின்றனர். பொதுவான மாந்த நேய உணர்வும் தம் தேசத்தின் ஒரு பகுதியினர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற தேசிய உணர்வும் இவர்களை இயக்குகிறது.

இப்போது நமது கேள்வி: துயர்தணிப்புப் பொருட்களுக்காக இரவுப்பகலாக கால்கடுக்க சாலையோரம் காத்திருப்பவர்களுக்கு அதே ஊரைச் சேர்ந்த வசதி படைத்தவர்கள் உதவ முன்வராதது ஏன்? தேசிய உணர்வும் பொதுவான மாந்த நேய உணர்வும் அவர்களிடம் மேலோங்காதது ஏன்? கஜா புயல் இருநூறு ஆண்டுகள் பழமையான ஆலமரங்களை அடியோடு பெயர்த்தது, இலட்சக்கணக்கான தென்னை மரங்களை சாய்த்தது, கடற்கரையோரத்தில் நின்ற படகுகளைப் புரட்டிப் போட்டது, மாபெரும் உடைமை நீக்கத்தைச் செய்துள்ளது என்பது உண்மைதான். ஆனால் கெட்டித்தட்டிப் போன கிராமப்புற சமூக உறவுகளைக் கலகலக்க செய்ய முடியவில்லை!

தேசிய சமூகத்திற்குரிய கூட்டு உணர்வும் வேறுபாடுகளைக் கடந்து ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ளும் மனப்பாங்கும் இதுபோன்ற தருணங்களில்தான் வெளிப்படும்; வளர்த்தெடுக்கப்படும். சாதி உணர்வைக் கடந்து மாந்த நேயத்தின் பாற்பட்டும் தமிழ்த்தேசிய உணர்வின் பாற்பட்டும் பாதிக்கப்பட்ட கிராமங்களில் உள்ள அனைத்துத் தரப்பாரும் கஜா புயல் பேரிடரில் இருந்து கூட்டாக மீண்டெழ ஒருவருக்கொருவர் துணைநிற்க வேண்டும் என்ற உணர்வை இதில் அக்கறை உள்ளோர் அனைவரும் உயர்த்திப் பிடிக்க வேண்டும்.

துயர்தணிப்புப் பொருட்கள் பாதிக்கப்பட்டோரைச் சென்று சேர்வதில் உள்ள ஏற்றத்தாழ்வான நிலைமையும் இதை வேடிக்கைப் பார்த்துவரும் அரசின் அலட்சியப் போக்கும் நிலவிக்கொண்டிருக்கும் சமூக,வர்க்க முரண்பாடுகளை வெளிப்படச் செய்கிறது;  மக்களிடையே காழ்ப்புணர்ச்சியும், வெறுப்பும் உருவாவதற்குகூட வழிவகுத்து விடுகிறது. மின்வாரியத் துறை தவிர அரசு இயந்திரத்தின் ஏனைய துறைகளில் பேரிடருக்கு முகங்கொடுக்கும் மனத்திட்பம் இல்லை. அருணாச்சலப் பிரதேசம் போல் தமிழகம் ஒன்றும் மலைப் பகுதியல்ல, சமவெளிப் பகுதிதான். தமிழகத்தின் மூலை முடுக்குக்கு எல்லாம்  சாலைப் போக்குவரத்து இருக்கிறது. ஆயிரக்கணக்கில் அரசு ஊழியர்கள், ஒப்பீட்டளவில் சிறப்பான கட்டமைப்புக் கொண்ட  பொது விநியோக முறை, கணிணி தொழில்நுட்ப வளர்ச்சி என இத்தனையும் இருந்தும் அரசின் சிவில் நிர்வாகம் செயல்பட மறுப்பதேன்? மாறாக காவல்துறையைக் கொண்டு மக்களைக் கட்டுப்படுத்தி விடுவதில்தான் அரசு முனைப்புக் காட்டிக் கொண்டிருக்கிறது.

பாதிக்கப்பட்ட கிராமங்களை நோக்கி வரும் துயர்துடைப்புப் பொருட்களைப் பெற்று நியாய விலைக் கடைகளின் வழியாக குடும்ப அட்டை மூலம் தேவையுள்ள எல்லோருக்கும் சென்று சேரும்படி அரசே இதை ஒருங்கிணைக்க முடியாதா? உறுதியாக முடியும்.  நியாய விலைக் கடையின் மூலமாக தனியாருடைய துயர்தணிப்பு பொருட்களைப் பெற்று கொண்டு, குளறுபடிகள் இன்றி அதை மக்களுக்கு கொடுக்கும் பொறிமுறையைத் தமிழக அரசு உடனடியாக ஏற்படுத்த முடியும். அதை செய்வதற்கு மக்களின் மீது பற்றுக் கொண்டு மக்களைத் துயரில் இருந்து மீட்க வேண்டும் என்ற மனத்திட்பம் முதலில் வேண்டும். அரசு இந்த முறைப்படுத்தலை செய்துவிட்டால் இரவு நேரங்களில் மக்கள் சாலையோரங்களில் நிற்க வேண்டிய தேவையே இல்லாமல் போய்விடும்.

எடப்பாடி தலைமையிலான தமிழக அரசு துயர் தணிப்பு பொருட்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு சென்று சேர வைப்பதற்கு பொறுப்பு ஏற்குமா?

– மக்கள் முன்னணி ஊடகத்திற்காக

செந்தில், 9941931499

குறிப்பு : (கஜா புயல் கரையைக் கடந்த நவம்பர் 16 இல் இருந்து திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியைமையமிட்டு தமிழ்த்தேச மக்கள் முன்னனி பேரிடர் துயர்துடைப்பு பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறது; இத்துடனேயே சீற்றங் கொண்ட புயல் சிதைத்தெறிந்த மாவட்டங்களில் உள்ளபல்வேறு பிரிவினருக்கு ஏற்பட்டுள்ள இழப்புகளையும் மீண்டெழுவதற்கு அரசிடம் அவர்கள்முன்வைக்கும் கோரிக்கைகளையும் கண்டறியும் பணியை தமிழ்த்தேச மக்கள் முன்னணிசெய்துவருகிறது. கஜா புயல் புரட்டிப் போட்டு போய்விட்டது; புயலில் பாதிக்கப்பட்டஇலட்சக்கணக்கான மக்களின் நெஞ்சாங்கூட்டிலிருந்து எழும் உயிர்க்காற்றின் ஓசைகள் இன்னும்உணரப்படவில்லை. களத்தில் இருந்து எழும் உயிர்க்காற்றின் ஓசைகளை ஆய்வறிக்கையாய்முன்வைக்கிறோம். கேளாத செவிகள் கேட்கட்டும், காணாத கண்கள் திறக்கட்டும்,)

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW