எதிர்க்கட்சித் தலைவர் ராகுலுக்கு இரண்டு ஆண்டு சிறை – பதவி பறிப்பு சனநாயகத்தின் மீதான பாசிச தாக்குதல் பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணி கண்டன அறிக்கை

10 Apr 2023

குஜராத் இனப்படுகொலையை மீண்டும் விவாதத்திற்குள்ளாக்கியது பிபிசி ஆவணப்படம். பங்குச்சந்தை மோசடி மூலம் உலக பணக்காரர்கள் வரிசையில் மூன்றாவது இடத்திற்கு உயர்ந்த அதானியின் மோசடிகளை வெளிக்கொணர்ந்தது ஹிண்டன்பர்க் அறிக்கை. இவ்விரண்டும் குஜராத் இனப்படுகொலை மற்றும் அதானி மோசடியில் மோடியின் பங்கை வெளிக்கொணர்ந்தது.. இது இந்தியா மற்றும் உலகெங்கும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கார்ப்பரேட் கும்பல்களின் போட்டியின் விளைவாக இவ்விரண்டும் வெளிவந்தது என்றாலும் இது பாசிச பாஜகவின் இரண்டு முகங்களை வெட்ட வெளிச்சமாக்கியது. ஒரு முகம் இஸ்லாமியருக்கு எதிரான இந்துத்துவ மதவெறி, இரண்டாவது முகம் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு அடிவருடி வேலை செய்வது. கார்ப்பரேட் கொள்ளை கும்பலில் ஒருவனான அதானியுடனான மோடியின் களவாணித்தனத்தை வெளிக்கொணர்ந்தது. இதன் விளைவாக பல்வேறு மக்கள் போராட்டங்களும் முன்னுக்கு வந்தன அதானி உலகப் பணக்காரர் வரிசையில் மூன்றாம் இடத்தில் இருந்து 28 வது இடத்திற்கும்மேல் தள்ளப்பட்டான். மோடிக்கு எதிரானப் போராட்டங்களும் கருத்துகளும் முன்னுக்கு வந்தன. இச்சூழலில் இதன் தொடர்ச்சியாக. எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி 7/2/2023 அன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய போது பிரதமர் மோடி எந்தெந்த நாட்டிற்கு எல்லாம் பயணித்தாரோ அந்த நாட்டில் எல்லாம் அதானி தொழில் தொடங்குவதற்கான ஒப்பந்தங்கள் போடப்பட்டன. அங்கு தொழிலை தொடங்குவதற்கு எஸ்பிஐ எல்ஐசி போன்ற வங்கிகளில் இருந்து மக்கள் பணம் பல இலட்சம் கோடிகள் கடனாக வழங்கப்பட்டது, இது மட்டுமல்லாமல் தொழிலாளர் வைப்பு நிதியிலிருந்துகூட பல கோடிகள் அதானிக்கு கடனாக வழங்கப்பட்டது. வெளியுறவு கொள்கை “”இந்திய வெளியுறவு கொள்கையா?” அல்லது ”அதானி வெளியுறவு கொள்கையா?’ ‘இந்திய தேசம் காந்திய தேசமா? அதானி தேசமா?’ என்று கேள்வி எழுப்பியதோடு அதானியும் மோடியும் ஒன்றாக விமானத்தில் பயணம் செய்யும் படங்களையும் நாடாளுமன்றத்தில் காண்பித்தார். 28/2/2023 அன்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம், இந்திய பத்திரிகையாளர் சங்கம், மற்றும் பிரிட்டிஷ் பார்லிமென்ட் ஹவுஸ் ஆப் காமன்ஸ் அரங்கம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் ராகுல் காந்தி பேசும்பொழுது ”இந்தியாவில் நாடாளுமன்றம், நீதிமன்றங்கள், பத்திரிகை மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் சுதந்திரமாக செயல்பட முடிவதில்லை. அவை அனைத்தும் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கின்றன. தன்னுடையது உட்பட பல எதிர்க்கட்சி தலைவர்களின் செல்போன் உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்படுகின்றன என்றார். இலண்டனில் உள்ள இந்திய பத்திரிகையாளர் சங்கத்தின் நிகழ்ச்சியில் பேசிய ராகுல் காந்தி காசுமீரில் கண்டுபிடிக்கப்பட்ட ஐந்து மில்லியன் டன் லித்தியம் இரும்பு மற்றும் அதன் ஏல அறிவிப்பு குறித்த பத்திரிகையாளர் கேள்விக்கு, ”அதானி பங்கேற்கும் ஒவ்வொரு ஏலத்திலும் அவர் வெற்றி பெறுவார் என்று நான் உங்களுக்கு சொல்ல முடியும், வணிகத்தில் நுழைவதற்கு அவருக்கு அனுபவம் தேவையில்லை. அதனால் லித்தியம் இரும்பு அதானிக்கு கிடைக்கும் என்று என்னால் ஆருடம் சொல்ல முடியும்” என்றார். அதானி செல் (போலி கம்பெனிகள்) நிறுவனத்தின் 20000 கோடிக்கான பினாமி யார் என்ற கேள்வியையும் ராகுல் காந்தி முன் வைத்துள்ளார் அந்த போலி கம்பெனி பற்றி கீழ்வரும் செய்தி உலா வருகிறது. அதானி குழுமத்தின் நடவடிக்கைகளில் சீன நாட்டவர் ஒருவருக்கு பங்கு இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது’ என்றும் ஏதேனும் முக்கியமான பாதுகாப்பு ஒப்பந்தத்தில் இவரை சேர்த்திருக்கிறதா என்பதை அரசு தெரிவிக்க வேண்டும் என்றும் 06/03/2023 அன்று செய்தியாளர் கூட்டத்தை நடத்திய காங்கிரசு கட்சி கேட்டுக்கொண்டது. “சாங் சுங்-லிங்குடன் தொடர்புடைய ஒரு நிறுவனம் வடகொரியாவிற்கு பெட்ரோலியம் அனுப்பியதாகக் கூறப்படுகிறது, இது ஐக்கிய நாடுகள் சபை விதித்த தடைகளுக்கு எதிரானது. 2005 ஆம் ஆண்டில் சாங் சுங்-லிங் தனது முகவரியாக சிங்கப்பூரின் ஒரு முகவரியை அளித்தார். இது கௌதம் அதானியின் மூத்த சகோதரர் வினோத் அதானியின் முகவரி,” என்று காங்கிரசைச் சேர்ந்த ஜெய்ராம் ரமேஷ் குறிப்பிட்டார். ராகுல் காந்தி, அதானி உடனான மோடியின் கூட்டுக் களவாணித்தனத்தை மோடியின் சர்வாதிகாரத்தை அம்பலப்படுத்தி வருகிறார். இது கார்ப்பரேட் முதலாளிகளுக்கு இடையிலான முரண்பாட்டின் விளைவாகவும் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை ஒட்டியும் தீவிரமாக முன்னுக்கு வருகின்றது. அதானி உடனான மோடியின் கூட்டு களவாணித்தனத்தை , முழுமையாக அம்பலப்படுத்தியதால் பாசிஸ்ட் மோடி தனக்கு எதிரான கருத்தை வெளியிட்ட எதிர்க்கட்சித் தலைவரின் குரல்வளையை நெரிக்கும் நோக்கோடு களம் இறங்கினார்.. ‌ 2019 ஆம் ஆண்டு கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தில் ‘ நீரவ் மோடி லலித் மோடி நரேந்திர மோடி என்று எல்லா திருடர்களின் பெயரும் மோடி என்று முடிகிறது, ‘மோடி என்ற குடும்பப் பெயரையே கொண்டிருக்கின்றனர் அது ஏன்” என்று பேசியதையொட்டி குஜராத் மாநில முன்னாள் அமைச்சரும் பாஜக எம்.எல்.ஏ வுமான பூர்ணேஷ் மோடி குஜராத்தில் சூரத் மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ”ஒட்டுமொத்த மோடி சமூகத்தை” ராகுல் காந்தி அவமதித்து விட்டதாக அவதூறு வழக்கு தொடுத்தார். 7/03/2022-ல் பூர்ணேஷ் மோடி ராகுல் காந்தியை நீதிமன்றத்திற்கு வரவழைத்து விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார், நீதிமன்றம் அகோரிக்கையை நிராகரித்தது. உடனே பூர்ணேஷ் மோடி உயர் நீதிமன்றத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடவடிக்கைக்கு தடை கோரினார் உயர்நீதிமன்றமும் தடையை வழங்கியது. இதில் வேடிக்கை என்னவென்றால் வழக்கு தொடுத்தவரே தடை கோரியதுதான்.. ராகுல் காந்தி 7/02/2023-ல் பாராளுமன்றத்தில் பேசியதை தொடர்ந்து 16/02/2023 இல் பூர்ணேஷ் மோடி மீண்டும் உயர்நீதிமன்றம் சென்று வழக்குநடத்த போதுமான சான்றுகள் கிடைத்து விட்டதால் உயர்நீதிமன்றம் தடையை நீக்க வேண்டும் என்று கோரியதை உயர்நீதிமன்றம் ஏற்று தடையை உடனே நீக்கியது, நீதிமன்றம் பாஜகவின் எடுபிடி மன்றமாக மாற்றப்பட்டு 23/03/23 அன்று ராகுல் காந்திக்கு இந்திய தண்டனைச் சட்டம் 499 மற்றும் 500 பிரிவுகளின் கீழ் அதிகபட்ச தண்டனையாக இரண்டு ஆண்டுகள் தண்டனை வழங்கப்பட்டது. இதுவரை இரண்டு நபர்களுக்கு மட்டுமே ( ராகுல் காந்தி உட்பட) இந்த அதிகபட்ச தண்டனை வழங்கப்பட்டுள்ளது மற்றும் இது பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட சட்டமாகும். தண்டனை விதித்த மறுநாளே மக்களவை செயலகம் ராகுல் காந்தியை எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டது. இந்த அறிவிப்பு வெளியிட்ட அடுத்த நாளே வயநாடு தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. பாசிச பாஜக வானது அனைத்து கட்சிகளையும் ஹிட்லர் பாணியில் பல குறுக்கு வழிகளில் அழித்து வருகிறது. இதற்கு திரிபுரா, ,மகாராஷ்டிரா என பல உதாரணங்கள் உண்டு. பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆளுநரை வைத்து ஆட்சி நடத்துகிறது அரைகுறை சனநாயகத்தையும் அழித்து வருகிறது. எதிர்க்கட்சி இல்லாத இந்தியா, காங்கிரஸ் இல்லாத இந்தியா என்ற பாசிச திட்டத்தின்படி செயல்பட்டு வருகிறது. அதன் அடிப்படையிலேயே பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் குரல்கள் இல்லாமல் செய்ய பார்க்கின்றது. மேலும் பாராளுமன்றத்தின் மூலமாகவும், சட்டத்தின் மூலமாகவும் பாசிச காட்டாட்சியை நடத்துகின்றது. இதை ராகுல் காந்தி பாராளுமன்றத்தில் அதானி, மோடிக்கு எதிராக பேசியதற்காக பழிவாங்கப்பட்ட செயல் என்று நாம் கடந்து செல்ல முடியாது. மக்கள் சொத்தையும் மக்களின் வரிப் பணத்தில் இருந்து உருவாக்கப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களையும் இயற்கை வளங்களையும் கனிம வளங்களையும் அதானி, அம்பானி போன்ற கார்ப்பரேட் கொள்ளையர்களுக்கு மோடி வாரி வழங்குவதை, மக்கள் மீது சுமத்தப்படும் வரிச்சுமையை, விண்ணை முட்டும் விலைவாசி உயர்வை, மக்கள் விரோத சட்டங்களை யார் எதிர்த்து கேட்டாலும் அவர்களை பாசிச பாஜக அரசு விட்டுவிடாது. அவர்கள் மீது வழக்குகள் பாயும். தேவைப்பட்டால் கௌரி லங்கேஷ் போல் கொலை செய்யப்படுவார்கள் என்று இந்த நாட்டில் உள்ள தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் அனைத்து மக்களுக்கும் சனநாயக சக்திகளுக்கும், இயக்கங்களுக்கும் கட்சிகளுக்கும் விடுக்கப்பட்ட மிரட்டலே ராகுல் காந்தியின் மீதான நடவடிக்கை ஆகும். ஆளும்வர்க்க கட்சியான காங்கிரஸ் கட்சயை சேர்ந்த நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி என்ற வரிசையில் தற்போது எதிர்க்கட்சி தலைவராகவுள்ள ராகுல் காந்திக்கே இந்த நிலைமை என்றால் பாசிச பாஜக அரசு மற்றவர்கள் மீது எப்படி பாயும் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். சட்டமன்றம், பாராளுமன்றம், நீதிமன்றம் ,பத்திரிகை துறை ,காவல்துறை, இராணுவம் என அனைத்தையும் ஆர் எஸ் எஸ் பாஜக கும்பல் தனது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்து ஒற்றை சர்வாதிகார ஆட்சியை நிறுவுவதற்கு தீவிரமாக முயற்சித்துக் கொண்டிருக்கின்றது. குறைந்தபட்ச சனநாயகத்தையும் கேள்விக்குறியாக்கி உள்ளது. ஆளும் பாஜக அரசை, ஆர் எஸ் எஸ் ஐ ,இந்துத்துவ மத வெறியை கேள்விகேட்டாலே தேச விரோதிகள் என்று முத்திரை குத்தி பாசிச அடக்குமுறையை ஏவுகிறது. ஆர் எஸ் எஸ் பாஜக தேசத்தின் அடையாளம் அல்ல. ஆர்.எஸ்.எஸ். பாஜகவை எதிர்ப்பது, விமர்சிப்பது தேச விரோதம் என்றால் அந்த தேச விரோத செயலை துணிவுடன் செய்ய அனைத்து மக்களும் சனநாயக சக்திகளும் முன்வர வேண்டும்‌. உலகமய, தாராளமய, தனியார்மயப் பொருளியல் கொள்கையின் அடிப்படையில் தேசத்தையே கூறுபோட்டு கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஏலம் போட்டு விற்கும் தேச விரோதிகளே ஆர்எஸ்எஸ் பாஜக கும்பல். இந்த தேச விரோத சக்திகளுக்கு எதிராக அனைத்து சக்திகளும் ஐக்கியப்பட வேண்டும். உலகத்தில் பாசிசம் (ஜெர்மன், ஜப்பான், இத்தாலியில்) தற்காலிகமாக வெற்றி பெற்றாலும் அவை மக்கள் சக்தியால் இருந்த இடம் தெரியாமல் அழிக்கப்பட்ட வரலாற்றை மீண்டும் இந்திய மண்ணில் நிகழ்த்திக் காட்டுவோம். ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட தண்டனையின் மூலம் சனநாயகத்திற்கு விடப்பட்ட சவாலை தொழிலாளர்களும் விவசாயிகளும் உழைக்கும் மக்களும் சனநாயக சக்திகளும் அனைத்து இடது சக்திகளும் ஒருங்கிணைந்து உறுதிமிக்க மக்கள் போராட்டத்தின் மூலம் துணிவுடன் எதிர்கொள்வோம். காலனிய சட்டங்களை மற்றும் பல்வேறு அடக்குமுறை சட்டங்களை திரும்பப்பெற போராடுவோம். பாசிச பாஜக ஆட்சியை வீழ்த்துவோம், சனநாயகத்தை மலரச் செய்வோம், இடது சனநாயக சக்திகளை வலுப்படுத்துவோம்.

பாலன், ஒருங்கிணைப்பாளர், பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணி 70100 84440

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW