புதுக்கோட்டை – வேங்கைவயல் பட்டியலின மக்களின் குடிநீர்த் தொட்டியில் மலம் கலப்பதற்குக் காரணமான அதிமுகவை சேர்ந்த மு.தலைவர் முத்தையாவை உடனடியாக கைதுசெய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட பட்டியலின மக்களையே குற்றவாளியாக்கும் காவல்துறையின் அராஜகத்திற்கு வன்மையான கண்டனம்

15 Jan 2023

தமிழ்நாடு முழுவதும் நிலவும் சாதிய தீண்டாமைப் பாகுபாடுகளை ஆய்வு செய்து அதனை ஒழிப்பதற்கான நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.

டிசம்பர் 20.12.2022 அன்று புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர்தொட்டிக்குள் மலத்தைக் கலந்த கயவர்கள் யார்? என்பவரை நோக்கி நாம் பேசவேண்டும். மலத்தைக் கலந்த குற்றவாளிகள் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் தலைவர் முத்தையா என்பவரும் அதற்கு உடந்தையாக இருந்த டேங்க் ஆப்பரேட்டரான காசி விசுவநாதன் என்பவரும்தான் முக்கியப்புள்ளிகள். இவற்றில் சாதியமதவாத அமைப்புகளின் பங்கும் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் உண்மை வெளிவரவில்லை. வேங்கைவயல் பகுதி பட்டிலியன மக்களின் தண்ணீர் பிரச்சனை என்பது வறண்ட பூமியான புதுக்கோட்டை மாவட்டத்திற்கே உரிய “தண்ணீர் பற்றாக்குறை என்ற சிக்கலை மையமாகக் கொண்டிருக்கிறது. அவற்றிலும் கிடைத்த தண்ணீரையும் கீழ்சாதிக்கு கொடுக்கனுமா? அதுவும் தூய்மையான காவேரி தண்ணீரா? என்ற ஆதிக்க சக்திகளின் சாதிய மனோபாவமும் இந்த கொடூரத்திற்கு மூலக்காரணியாக இருந்திருக்கிறது. அத்தோடு முக்கியமான விசயம் பட்டியலின மக்கள் மற்றும் முத்தையாவால் பழிவாங்கப்பட்ட முத்தரையர் மக்களில் சிலர் இணைந்து சிபிஎம் கட்சியின் துணையோடு போராட்டத்திற்கு தயாரானதும் முக்கியக்காரணியாக இருக்கிறது


இக்கொடூர வன்கொடுமை நடந்து கிட்டத்தட்ட 25 நாட்களுக்குப் பிறகுதான் உண்மைக் குற்றவாளிகளை நோக்கிய விசயம் வெளிவரத் தொடங்கியிருக்கிறது. வேங்கைவயல் பட்டியலின மக்களின் மீதான இத்தகைய வன்மம் என்பது திடீரென்று நடந்தவையல்ல. சாதி தீண்டாமை ஒடுக்குமுறை என்பது ஆண்டாண்டு காலமாக அப்பகுதியிலும் நீடிக்கிறது. அத்தோடு இணைந்து தலைவர் முத்தையா உடன் 2017 முதற்கொண்டே சிக்கல் இருந்துவந்துள்ளது எனக் கூறுகிறார்கள். அவை தீவிரமடைந்தது என்பது கடந்த 6 மாதம் முதல் 1வருடகாலத்தில்தான்.
சாதி, தீண்டாமை என்கிற முரண்பாட்டோடு மட்டுமின்றி, அதிகாரம், ஊழல் முறைகேடும் கட்சி வேறுபாடும் உள்ளடங்கியிருக்கிறது. இவற்றில் மனசாட்சியுள்ள முத்தரையரில் சிலர், கள்ளர் மக்களில் சிலர் பட்டியலின மக்களோடு இணைந்து நின்ற காரணத்திற்காகவே பழிவாங்கியிருக்கிறார் அதிமுகவை சேர்ந்த முத்தையா என்பவர்.
காரணங்கள்,
• வேங்கைவயல் கிராமத்தில் அகமுடையர், முத்தரையர், (300 குடும்பங்கள்) பறையர் (30 குடும்பங்கள்) மக்கள் வாழ்கிறார்கள். இவற்றில் அகமுடையர், முத்தரையர் மக்கள் உள்ள பகுதியில் குடிநீர் தொட்டி அமைந்திருக்கிறது. இந்தக் குடிநீர் தொட்டியிலிருந்துதான் பட்டியலின மக்களுக்கு தண்ணீர் செல்லும். இந்த குடிநீரும் உப்புநீர்தான். அதுவும் பற்றாக்குறையாகவே கிடைத்திருக்கிறது. பல அதிகாரிகளிடம் முறையிடுகிறார்கள். இந்த சிக்கல் தொடர்ந்திருக்கிறது.
• 2017ல் அதிமுக ஆட்சியின்போது காவேரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின்மூலம் தண்ணீர் பற்றாக்குறையை போக்கும் வகையில் பட்டியலின மக்களுக்கு என்று தனியான தண்ணீர்தொட்டி கட்டிக் கொடுக்கப்படுகிறது. தூய்மையான காவேரி தண்ணீர் மற்றும் தேவைக்கு அதிகமாகவே பட்டியலின மக்களுக்கு தண்ணீர் கிடைத்து வந்திருக்கிறது. இவர்கள் ஊர்த்தெருவிலிருந்து வரும் உப்புநீரை சார்ந்து இருக்கும் நிலை ஏற்படவில்லை.
• இந்த நிலைமை குறைந்த மாதம் வரைதான் நீடிக்கிறது. மர்மமானமுறையில் குழாய் உடைபட்டு கிடைத்த தண்ணீரும் கிடைக்காமல் போய்விடுகிறது. குழாய் சரிசெய்யப்படவில்லை. அதற்கான முயற்சியும் யாரும் எடுக்கவில்லை. மீண்டும் ஊர்த்தெருவிலிருந்து வரும் உப்புநீரை எதிர்பார்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
• கடந்த 8 மாதத்திற்கு முன்பு ஊராட்சி மன்றத்தலைவர் பத்மாவின் கணவர் முத்தையா வாக்குகேட்க பட்டியலின மக்களிடம் சென்றபோது அவர்கள் தண்ணீர் பற்றாக்குறை சிக்கலை கோரிக்கையாக முன் வைத்திருக்கிறார்கள். அதனை ஏற்று வெற்றிபெற்று வந்தபின்பு முத்தையா என்பவர் காவேரி நீர் வந்துகொண்டிருந்த உடைபட்ட குழாயை சரிசெய்து தண்ணீர் சிக்கலை தீர்க்க முயற்சிக்கவில்லை. மாறாக உப்புநீரையே இவர்களுக்கான தொட்டியில் ஏற்றி அதனை பயன்படுத்த ஏற்பாடு செய்திருக்கிறார்.
• முன்பு டேங்க் ஆப்பரேட்டராக வேலை செய்துவந்தவர் சண்முகம் என்பவர். இவர் முத்தரையர். திமுக கட்சியிலுள்ளவர். நியாயமாகவும் பட்டியலின மக்களுக்கான தண்ணீர் சிக்கலை அக்கறை எடுத்து தீர்க்கவும் முயற்சி எடுத்தவர். இதற்காக முத்தையாவிடம் முறையிட்டும் இருக்கிறார். இவர்களின் தண்ணீர் சிக்கலை முறையிட்டு பேசிய காரணத்திற்காக அவமானப்படுத்தப்பட்டு வேலையிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அதற்கு மாற்றாகத்தான் தற்போது காசி விசுவநாதன் என்பவர் டேங்க் ஆப்பரேட்டராக பணிபுரிந்துவருகிறார். இவர் அதிமுகவை சேர்ந்தவர். முத்தையாவிற்கு நெருக்கமானவர்.
• இதற்கிடையில் கொரானா காலத்தில் தண்ணீர் சிக்கல் அதிகளவு இருந்தபோது, அதிமுகவை சேர்ந்த ஒன்றியக்கவுன்சிலரான சிதம்பரம் என்பவர் மக்களுக்கு தேவையானவற்றை செய்திருக்கிறார். குறிப்பாக பட்டியலின மக்களுக்கு தண்ணீர் சப்ளையை தன் சொந்த செலவிலேயே செய்தும் கொடுத்திருக்கிறார் என்று அம்மக்கள் கூறியிருக்கிறார்கள். இவருக்கு இரு தரப்பு மக்களிடமும் நல்ல வரவேற்பும் ஆதரவும் இருக்கிறது.
• இதற்கிடையில் வேலையிழந்து கஷ்டப்பட்ட டேங்க் ஆப்பரேட்டர் மீண்டும் வேலை வேண்டும் என்ற கோரிக்கைவைத்து மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனுகொடுத்திருக்கிறார். டேங்க் ஆப்பரேட்டர் சங்கமும் இவரை அழைத்து விசாரித்திருக்கிறது.
• டேங்க் ஆப்ரேட்டர் சண்முகத்திற்கு ஆதரவாக இரு தரப்பு மக்களும் நின்றிருக்கிறார்கள். “சண்முகத்திற்கு வேலைகொடுக்க வேண்டும் அவரை ஏன் வேலையைவிட்டு தூக்கினீர்கள்?” என்று முன்னாள் தலைவர் முத்தையாவிடம் முறையிட்டிருக்கிறார்கள். இதுவும் அவரை ஆத்திரமூட்டியிருக்கிறது.
• அடுத்து, பட்டியலின மக்களுக்கு இன்றுவரை சுடுகாட்டுப்பாதை கிடையாது. அவர்கள் இறந்த உடலை ஏரிக்கரை வழியாகத்தான் கொண்டு சென்றிருக்கிறார்கள். மழை வந்துவிட்டால் தண்ணீருக்குள் உடலை தூக்கிசென்று அடக்கம் செய்து வருவதாகக் கூறுகிறார்கள். கடந்த 6 மாதத்திற்கு முன்பு அவ்வாறு உடலை எடுத்துச்செல்லும்போது அப்பகுதி தாசில்தார் திடீரென்று அங்கு வந்து பார்த்திருக்கிறார். உடனடியாக இவர்களுக்கு சுடுகாட்டுப்பாதையும் வீடுகளுக்கு முன்பு தண்ணீர் தேங்காமல் இருக்க வடிகால் கட்டித்தர வேண்டும் என்று முத்தையாவிடம் கூறியிருக்கிறார். ஆனால் அத்திட்டத்தை இன்றுவரை நிறைவேற்றாமல் கிடப்பில் போட்டுள்ளார் முத்தையா.
• கடந்த அக்டோபர் 2, 2022 அன்று நடந்த கிராம சபைக்கூட்டத்தில் அதிமுக வைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர் முன்னாள் தலைவர் முத்தையா அவர்கள், வேங்கைவயல் பட்டியலின மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கியதாகக் கூறியதையடுத்து, மூன்று தரப்பிலிருந்தும் “உப்புத் தண்ணீர்தானே தருகிறீர்கள் என்றும் அதற்கான நிதி குறித்தும் கேள்வி கேட்டுள்ளனர். இது முத்தையாவிற்கு ஆத்திரத்தை மூட்டியிருக்கிறது. அதற்கு அவர், “உங்களுக்கு நான் தண்ணீர் ஏற்பாடு செய்துகொடுத்தால் அதையே குறைசொல்லி என்னை கேள்விகேட்குறீங்களா” என்று சத்தம் போட்டு கிராம சபையை களைத்துவிட்டு ஆக்ரோஷமாக வெளியேறியிருக்கிறார்.
• அடுத்து, வேலையிலிருந்து நீக்கப்பட்ட சண்முகமும் அவரது மனைவியும் சிபிஎம்கட்சியின் தொழிற்சங்கத் தோழர் ஒருவரை பார்த்து இச்சிக்கலை கூறவே, போராட்டத்திற்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். போராட்டத்திற்கு இரண்டு நாள் இருக்கும் நிலையில், முத்தையா, காசி விசுவநாதன் உள்ளிட்டவர்கள் கூட்டுசேர்ந்து இத்தகைய கொடூரத்தை அரங்கேற்றியிருக்க வாய்ப்புகள் அதிகம்.

• மேலும், அங்குள்ள அகமுடையார் மற்றும் முத்தரையர் செல்வாக்கில் இருக்கும் ஐயனார் கோயிலுக்குள் பட்டியலின மக்களை அழைத்துச்செல்ல மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு முற்பட்டபோது அதற்குத் தடையாக இருந்தது முன்னாள் தலைவர் முத்தையாதான். பட்டியலின மக்கள் சாமியை பார்க்கக்கூடாது உள்ளே நுழைந்துவிடக்கூடாது என தடுத்திருக்கிறார்.

• இதுபோக, முத்தரையர் மக்கள் மத்தியில் முத்தரையர் சங்கம் ஒன்று அண்மையில் அமைக்கப்பட்டிருக்கிறது. இதற்கு அகமுடையர் தரப்பில் எதிர்ப்பும் தெரிவித்துள்ளதாகவும், அதையும் மீறி சங்கம் அமைத்துள்ளதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள்.

• குடிநீர் தொட்டியில் மலம் கலந்த வன்கொடுமை வெளிவந்தபின்பு, மாவட்ட ஆட்சியர், கவிதா ராமு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே நேரில் சென்று மக்களிடம் விசாரணை மேற்கொண்டதில் இரட்டை டம்பளர், ஐயனார் கோயிலுக்குள் நுழையத்தடை போன்ற தீண்டாமைக் கொடுமைகள் வெளியே கொண்டுவந்து நடவடிக்கை எடுத்தனர். நேர்மையாக செயல்பட்ட அரசு பெண் அதிகாரிகள் இருவர்மீதும் ‘ஊதிப்பெருக்கியதாக‘ பரப்புரை செய்யும் தடா பெரியசாமி உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுத்திட வேண்டும். அங்கு தீண்டாமையே இல்லை, வேறு ஊரை சேர்ந்தவர்கள் என்று பொய்செய்தியை கூறி உண்மைக் குற்றவாளிகளை பாதுகாக்க முயற்சிக்கிறார்களா என்ற சந்தேகம் எழுகிறது. பட்டியலின மக்கள் மீதே பழி சுமத்தும் வெறுப்பு அரசியலை செய்கிறார்கள் என்றால் பாஜக நிர்வாகிகள்மீதும் கேள்வி எழுகிறது.

இதுபோன்ற இன்னும் பல சிக்கல்களை அம்மக்கள் சிறிது சிறிதாக சொல்லத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில் தமிழக அரசு அமைத்துள்ள 11 பேர் கொண்ட விசாரணைக்குழு பாதிக்கப்பட்ட மக்களை, அப்பகுதி இளைஞர்களை குறிவைத்து அடித்து துன்புறுத்தி விசாரணை மேற்கொள்வதாக செய்திகள் வருகிறது. மலநீரை குடித்து வயிற்றுப்போக்கு, காய்ச்சலில் உயிரைப்பிடித்துக்கொணடு தன் குழந்தைகளை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றுகொண்டிருந்த பட்டியலின மக்கள்மீதே நீங்களே மலம் கழித்தீர்களா? குற்றத்தை ஒப்புக்கொண்டால் தருகிறோம் என்று பாதிக்கப்பட்ட பட்டியலின மக்களையே குற்றவாளியாக்கும் போக்கு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. காவல்துறை இதனை உடனடியாக நிறுத்த வேண்டும். உண்மைக் குற்றவாளிகளை நோக்கி விசாரணையை மேற்கொள்ள வேண்டும்.

• தமிழக அரசு உடனடியாக பட்டியலின மக்களுக்கு சுடுகாட்டுப்பாதை அமைத்துக் கொடுக்கவும், தண்ணீர் பிரச்சனையை தீர்க்கவும் முயற்சி எடுக்க வேண்டும். மலம் கலந்த தண்ணீர் தொட்டியை இடித்துவிட்டு புதியதாகத் தொட்டியை கட்டிக்கொடுக்க வேண்டும்.

• சமூக நீதி ஆட்சியில் நீதி கிடைக்கும் என்று நம்பிக்கையோடு காத்திருக்கும் பட்டியலின மக்களை குற்றவாளியாக்கும் சமூகநீதிக்கு எதிரான செயலை தமிழக அரசும் காவல்துறையும் உடனடியாக கைவிட வேண்டும்.

• ஆதிதிராவிடர் நலத்துறை, மனித உரிமை ஆணையம், சமூக நீதி கண்காணிப்பகம் போன்ற ஆணையங்கள் மக்களிடம் சென்று முழுமையான விசாரணையை மேற்கொள்ள வேண்டும்.

மேலும், வேங்கைவயல் பட்டியலின மக்களின் மீதான வன்கொடுமை சம்பவத்தில் தமிழக அரசு, குடிநீர் தொட்டியில் மலத்தை கலந்த குற்றவாளியை கைது செய்யும் நடவடிக்கையோடு நின்று விடக்கூடாது.

• தமிழ்நாடெங்கும் நிலவும் சாதிய தீண்டாமைப் பாகுபாடுகள் குறித்து தமிழக அரசு ஆய்வு செய்ய வேண்டும். இரட்டை டம்ளர் முறை, கோயில் வழிப்பாட்டிற்கு தடை, தலித்துகளுக்கான அதிகாரத்தை பறிப்பது, சமூக புறக்கணிப்பு செய்வது, சாதி பஞ்சாயத்துகள் மூலம் தண்டனை வழங்கும் முறை போன்ற வன்கொடுமைகளை ஒழித்திட தொடர் செயல்பாட்டை அரசு மேற்கொள்ள வேண்டும்.

• மாறாக, பொதுப் பாதை, பொது சுடுகாடு, பொது வழிபாடு, பொது கிணறு, பொது நிர்வாக அலுவலகம் போன்றவற்றை நிறுவ திட்டம் வகுக்க வேண்டும். அதற்கான விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொள்ள வேண்டும்.

ரமணி

சாதி ஒழிப்பு முன்னணி

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW