பொதுத்துறை வங்கிகள் இணைப்பு; விளைவுகள் என்ன ?

24 Sep 2018

ஒட்டுமொத்த இந்தியாவையும் புரட்டிப்போட்டு படுதோல்வியில் முடிந்த  demonetisation, பொதுத்துறை வங்கிகள் மீதான நம்பகத்தன்மையை மக்கள் மத்தியில் குலைக்கப்பார்த்த FRDI மசோதா, 700 கிளைகள் மூடல், பல லட்சம்  கோடி வாரா கடன், இமாலய தோல்வியில் முடிந்த பாரத ஸ்டேட் வங்கியுடன் அதன் துணை வங்கிகளின் இணைப்பு, அதைத் தொடர்ந்து பரோடா,விஜயா மற்றும் தேனா வங்கிகளை இணைக்கப் போகிறோம் என்ற பேரிடியோடு வந்து இறங்கியிருக்கிறது நிதி அமைச்சகம்.

 

மக்கள் மயமாக்கப்பட்ட வாராக்கடன் எனும் வார்த்தை.பட்டி,தொட்டியெங்கும் எதிரொலிக்கத் தொடங்கிவிட்ட நிரவ் மோடி, மல்லையாக்களின் பெயர்கள். கட்டுக்கடங்காமல் விலையேறிக் கொண்டிருக்கும் கச்சா எண்ணெய் பொருட்கள், அதள பாதாளத்திற்கு சரிந்துக்கொண்டிருக்கும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு,  அம்பலப்படுத்தப்பட்ட மல்லையா மற்றும் மத்திய அரசின் கூட்டணி என பொதுமக்கள் மத்தியில் தன்னுடைய மொத்த செல்வாக்கையும் இழந்து வரும் ஆளும் பாஜக அரசு பிரச்சினைகளை திசை திருப்பவும், தன் இருப்பை தக்கவைத்துக் கொள்ளவும் வங்கிகள் இணைப்பு எனும் முற்றிலும் தேவையற்ற நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

 

மத்திய நிதியமைச்சர் பயன்படுத்தி இருக்கும் ‘Amalgamation of banks’ எனும் பதம் ‘merger of banks’ எனும் பதத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டது. ‘Merger of banks’ எனும் பதம் ஒரு வலிமையான வங்கியுடன் மற்றொரு வலிமை குறைந்த வங்கியை இணைப்பதையும். ‘Amalgamation of banks’ எனும் பதம் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வங்கிகளை இணைத்து ஒரு புதிய வங்கியை உருவாக்குவதையும் குறிக்கிறது.

 

ஏறக்குறைய 10.29 இலட்சம் கோடி வியாபாரத்துடன் 5502 கிளைகளை கொண்டுள்ள 110 ஆண்டுகள் பழமை வாய்ந்த பரோடா வங்கி, 2.79 இலட்சம் கோடி வியாபாரத்துடன் 2129 கிளைகளை கொண்டுள்ள 86 ஆண்டுகள் பழமை வாய்ந்த விஜயா வங்கி மற்றும் 1.72 இலட்சம் கோடி வியாபாரத்துடன் 1858 கிளைகளை கொண்டுள்ள 80 ஆண்டுகள் பழமை வாய்ந்த தேனா வங்கி ஆகியவற்றை இணைப்பதன் மூலம் இம்மூன்று வங்கிகளும் தங்களுடைய 100 வருட பாரம்பரியத்தையும், தனித்தன்மையையும் முற்றிலும் இழக்கும் அபாயம் இருக்கிறது. மேலும் குஜராத் மாநிலத்தில் மொத்தம் 1700 கிளைகளுடன் முதன்மை வங்கியாக திகழும் பரோடா மற்றும் தேனா வங்கியின் 700 க்கும் மேற்பட்ட கிளைகளும், 773 கிளைகளுடன் கர்நாடக மாநிலத்தில் முதன்மை வங்கியாக திகழும் விஜயா வங்கியின் 400க்கும் மேற்பட்ட கிளைகளும் இழுத்து மூடப்படுவதற்கும், மொத்தமுள்ள 85000 ஊழியர்களில் 15000 மேற்பட்ட ஊழியர்கள் கட்டாய பணி ஓய்வுக்கு நிர்பந்திக்கப்படவும் மிகப்பெரிய வாய்ப்புள்ளது.

 

இந்தியாவை போன்ற பன்முகத்தன்மை உள்ள ஒரு நாட்டில் உள்ள ஒவ்வொரு பொதுத்துறை வங்கியும் பண்பாடு மற்றும் கலாச்சார அளவில் ஏதோ ஒரு மாநில மக்களின் உணர்வுகளோடு பிண்ணி பிணைந்தவை.மத்திய அரசின் இந்த இணைப்பு நடவடிக்கை அறுத்தெறியப்போவது அந்த வங்கிகளுக்கும், ஊழியர்களுக்குமான உறவை மட்டுமல்ல குஜராத், மஹாராஷ்டிரா மற்றும் கர்நாடக மாநில மக்களின் உணர்வுகளோடு கலந்துவிட்ட மூன்று பொதுத்துறை வங்கிகளுக்கும் அந்த மூன்று மாநில மக்களுக்குமான உறவை.

 

100 ஆண்டுகள் பழமையான பரோடா,தேனா மற்றும் விஜயா வங்கிகளை இணைக்கப் போகிறோம் என்று எந்தவித ஜனநாயக விதிமுறைகளையும் பின்பற்றாமல்  மத்திய அரசு  தன்னிச்சையாக அறிவித்துள்ளது. ஆட்குறைப்பு, கிளைகள் மூடல், அதிகரிக்கப்பட்ட வாராக்கடன், குறைக்கப்படப்போகும் அரசின் பங்குகள் என பேராபத்தில் முடியப்போகும் இந்த பரோடா,தேனா மற்றும் விஜயா வங்கிகளின் இணைப்பு நடவடிக்கை இதோடு மட்டும் நிற்காமல் அடுத்தடுத்த பொதுத்துறை வங்கிகளையும் அழித்தொழிக்கப் போகும் காலம் வெகுதூரமில்லை.

 

  • ராகுல் பாஸ்கர்

 

 

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW