காந்தியைக் கொன்ற மதவெறி தொடரலாமா? என்ற வினாவோடு ஒன்றுகூடிய சமூக ஆளுமைகள்.
காந்தி கொல்லப்பட்ட சனவரி 30 ஆன இன்று தமிழ்நாடு பொதுமேடை – 2024 சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஒன்றுகூடலும் கலை நிகழ்ச்சியும் ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்வு மாலை 4:30 மணிக்கு தொடங்கியது. மாற்று ஊடக மையத்தின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பின்னர் காம்ரேட் கேங்கஸ்டா குழுவினரின் பாசிச எதிர்ப்பு ராப் பாடல் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. சரியாக 5:17 மணிக்கு காந்தியார் சுடப்பட்ட அதே நேரத்தில் 2 நிமிடம் மெளன அஞ்சலி கடைபிடிக்கப்பட்டது. பின்னர். தமிழ்நாடு பொதுமேடை- 2024 இன் ஒருங்கிணைப்பாளர் முன்னாள் நீதியர் து. அரிபரந்தாமன் பின்வரும் உறுதிமொழியை வாசிக்க ஒன்றுகூடலுக்கு வந்திருந்த அனைவரும் அதை திரும்பக் கூறினர்.
”மகாத்மா காந்தி மதவெறியால் கொல்லப்பட்ட இந்நாளில் மதவெறியைத் தொடர விடமாட்டோம் என்று உறுதியேற்கிறோம்.
பல்வேறு மொழிபேசக் கூடிய இந்தியாவின் குடிமக்களாகிய நாங்கள் மதப் பெரும்பான்மைவாதத்தை மறுதலிக்கிறோம்! அதன் அடிப்படையிலான இந்துத்துவ அரசியலை சமரசமின்றி எதிர்த்துப் போராடுவோம் என்ற உறுதிப்பாட்டை உளமார அறிவித்துக் கொள்கிறோம்.
இந்து, கிறித்தவ, சீக்கிய, பெளத்த, ஏனைய மதத்தவர்கள், மத நம்பிக்கையற்றவர்களாகிய நாங்கள்,
’அமைதிசூழவும் பாதுகாப்பாகவும் தன்மானத்துடனும் இந்நாட்டில் வாழவும், இந்திய ஒன்றியத்தின் நன்மை, நல்வாழ்வுக்காக உழைக்கவும் இந்திய ஒன்றியத்தின் இஸ்லாமியக் குடிமக்களுக்கு நம்மில் மற்றவர்களுக்குள்ள அதே சுதந்திரம் இருக்க வேண்டும்’ என்ற உறுதிப்பாட்டை உளமார அறிவித்துக் கொள்கிறோம்.”
பின்னர், ”நாங்கள் கோட்சேக்களுடன் இல்லை, காந்தியுடன் இருக்கிறோம்” என்று அறிவிக்கும் முகமாக காந்தியின் ஓவியத்தில் கைச்சாத்திடும் நிகழ்வை முன்னாள் ஐ.ஏ.எஸ். பாலச்சந்திரன் தொடங்கி வைத்தார்.
பின்னர் உறுதியேற்கும் முழக்கங்களைத் தோழர் தியாகு எழுப்பினார். அதை தொடர்ந்து முன்னாள் நீதியர் அரிபரந்தாமனும் முன்னாள் ஐ.ஏ.எஸ். பாலச்சந்திரனும் ஊடகங்களிடம் இந்த நிகழ்ச்சியின் நோக்கங்களை விளக்கிப் பேசினார்.
டி.எம். கிருஷ்ணா குழுவைச் சேர்ந்த திரு விக்னேஷ் அவர்கள் காந்தியார் பாடிய ’ரகுபதி ராகவ ராஜாராம்’ பாடலையும் ’நாங்கள் பார்ப்போமே’ பாடலையும் ’அல்லாவை தொழுதால்’ பாடலையும் பாடினார். பின்னர் திருமிகு காதர் மொய்தீன் அவர்கள் சமூக நல்லிணக்கப் பாடல்களைப் பாடினார்.
மனித உரிமைச் செயற்பாட்டாளர் தீஸ்தா செதல்வாட் அவர்கள் பதிவு செய்து அனுப்பிய காணொளி ஒளிபரப்பட்டது. அதை தொடர்ந்து திரு மதுர் சத்யா அதன் மொழிபெயர்ப்பு சுருக்கத்தைத் தொகுத்துச் சொன்னார்.
பின்னர் தாய்த் தமிழ்க் கலைக்குழுவினர் பறை இசை நிகழ்ச்சி நடைபெற்றது. அதை தொடர்ந்து தமிழ்நாடு பொதுமேடை – 2024 சார்பாக முன்னாள் ஐ.ஏ.எஸ். பாலச்சந்திரன் சிறப்புரையாற்றினார்.
அதை தொடர்ந்து தாய்த் தமிழ் குழுவினர் வள்ளலார் பற்றிய பாடலைப் பாடினர். பின்னர், தமிழ்நாடு பொதுமேடை – 2024 இன் ஒருங்கிணைப்பாளர் து.அரிபரந்தாமன் சிறப்புரையாற்றினர். நிகழ்ச்சியைப் பேராசிரியர் குழந்தைசாமியும் தோழர் செந்திலும் நெறியாளுகை செய்தனர். ஓவியர் கிருஷ் வரைந்த மதவெறி எதிர்ப்பு ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
இந்நிகழ்வுக்கு ஆதரவு தெரிவித்து மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் வந்தியத்தேவனும் மதிமுகவினரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில், பேராசிரியர்கள், எழுத்தாளர்கள், மாணவர்கள், சமயப் பெரியவர்கள், வழக்கறிஞர்கள், ஊடகவியலாளர்கள், ஐ.டி. துறையினர், தொழிற்சங்க செயற்பாட்டாளர்கள், தொழிலாளர்கள் உள்ளிட்ட 300 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மதவெறிக்கு எதிரான உணர்வை வெளிப்படுத்தினர்.
இந்நிகழ்வு குறித்த செய்தியை தங்கள் ஊடகத்தில் வெளியிட்டு மக்களிடம் கொண்டு செல்ல உதவுமாறு தமிழ்நாடு பொதுமேடை – 2024 சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
இப்படிக்கு,
செந்தில்,
ஒருங்கிணைப்புக் குழு,
தமிழ்நாடு பொதுமேடை – 2024
தொடர்புக்கு: 9941931499