காசுமீர் 370 தீர்ப்பும் தமிழ்நாடு எதிர்கொள்ளும் ஆபத்தும்

19 Dec 2023

கருத்தரங்கம்

நாள்: 21-12-2023, வியாழன், மாலை 5:30 மணி,

இடம்: MEET அரங்கம், 2 வது தளம், இராயப்பேட்டை, சென்னை

ஆளுநர் இரவி தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்திருப்பதாகச் சொல்லி ஆட்சியைக் கலைக்கப் பரிந்துரைத்து உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதலாம். உள்துறை அமைச்சர் அமித் ஷா அமைச்சரவையைக் கூட்டி தமிழ்நாட்டில் ஆட்சியைக் கலைத்துவிட்டு குடியரசு தலைவர் ஆட்சியை கொண்டுவர முடிவெடுத்து குடியரசு தலைவர் மூலம் தமிழ்நாட்டில் ஆட்சியைக் கலைக்கலாம்.

பின்னர், தமிழ்நாட்டை கொங்குநாடு , வட தமிழ்நாடு, பாண்டிநாடு என மூன்றாகப் பிரிப்பது குறித்து கருத்துக் கேட்டு ஆளுநருக்கு கடிதம் அனுப்பலாம். ஆளுநரின் பதிலுக்காக காத்திருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. பின்னர் குடியரசு தலைவர் அக்கடிதத்தை ஒன்றிய அரசுக்கு அனுப்பலாம். தமிழ்நாடு மறுசீரமைப்பு சட்ட வரைவை உருவாக்கி  அதை ஆளும் பாசக அரசு நாடாளுமன்றத்தில் முன்வைக்கலாம். ஏற்கெனவே இருக்கும் எளிய பெரும்பான்மையின் மூலம் அது சட்டமாக்கப்பட்டு தமிழ்நாடு மூன்றாகப் பிரிக்கப்பட்டு அதில் ஏதேனும் ஒன்று ஒன்றிய ஆட்சிப் புலமாக அறிவிக்கப்படலாம்.  இப்படி எல்லாம் செய்வது சட்டப்படி செல்லுபடியாகும் என்பதுதான் காசுமீர் 370 வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பாகும்.

கடந்த 2019 ஆகஸ்ட் 5 ஆம் நாள் சம்மு காசுமீருக்கு சிறப்புத் தகுதி வழங்கிய பிரிவு 370 ம், 35A ம் செயலிழக்கம் செய்யப்பட்டன. அது மட்டுமின்றி, சம்மு காசுமீர் மாநிலம் சம்மு காசுமீர், லடாக் என்று துண்டாடப்பட்டது மட்டுமின்றி இரு ஒன்றியப் பிரதேசங்களாக மாற்றப்பட்டுவிட்டது. காசுமீரில் 2018 இல் இருந்து குடியரசு தலைவர் ஆட்சி இருந்தது. புயலுக்கு முன் அமைதி போல் காசுமீரத்து மக்கள் ஏதோ நடக்கப் போகிறது என்று அரண்டு போயிருந்தனர். காசுமீரத்து  தலைவர்கள், செயற்பாட்டாளர்கள் என 4000 பேர் சிறை வைக்கப்பட்டிருந்தனர். ’இணையத்திற்கு தடை, ஊடகங்களுக்கு தடை, பாதுகாப்பை அதிகபப்டுத்தல என இத்தனைக்கும் இடையில் நிறைவேற்றப்பட்ட இச்சட்டம் அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்று சட்ட வல்லுநர்கள் சொல்லிக் கொண்டிருந்தனர்.

காசுமீரில் இட ஒதுக்கீடு இல்லை, நேரு ஐ.நா.வுக்கு காசுமீர் பிரச்சனையைக் கொண்டு சென்றிருக்கக் கூடாது, 370 தான் பிரிவினைவாதத்திற்கு காரணம், இதுவரை பெண்களுக்கு சொத்துரிமை கிடையாது என்றெல்லாம் பாசகவினர் பொய்களை அள்ளி வீசிக் கொண்டிருந்தனர்.

பிரிவு 370 நிரந்தரமானது, காசுமீர் அரசமைப்பு அவையின் ஒப்புதல் இன்றி அதை நீக்க முடியாது, குடியரசு தலைவர் ஆட்சியை வைத்துக் கொண்டு மாநிலத்தை உடைக்க முடியாது, உறுப்பு 3 ஐ இவ்வண்ணம் பயன்படுத்த இயலாது என்றெல்லாம் சொல்லப்பட்டது.

2023 திசம்பர் 11 அன்று உலகமே எதிர்பார்த்திருந்த உச்சநீதிமன்றத் தீர்ப்பு வந்தது.  பிரிவு 370 தற்காலிமானதாம். அது இந்தியாவுடன் காசுமீரை இணைப்பதை இலகுபடுத்துவதற்கானது மட்டும்தானாம். காசுமீருக்கு தனித்த இறைமை என்று எதுவும் இல்லையாம். குடியரசு தலைவர் ஆட்சியின் போது எதையும் செய்ய முடியுமாம். மாநிலத்தை ஒன்றிய ஆட்சிப்புலமாக தரம் தாழ்த்தியது பற்றி நீதிமன்றம் ஆய்வு செய்யவில்லையாம். ஏனென்றால், மோடி அரசு சம்மு காசுமீரை மீண்டும் மாநிலமாக்க உறுதி அளித்துள்ளதாம்! ஆனால், லடாக்கைப் பிரித்து சட்டப்பேரவை இல்லாத ஒன்றிய ஆட்சிப் புலமாக மாற்றியது செல்லுபடியாகுமாம்.

சட்டப் பிரிவு 368 வழியாகத்தான் 367 ஐ மாற்ற முடியும். அப்படியான அரசமைப்பு சட்டத் திருத்தம் செய்வதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வேண்டும். மோடி அரசுக்கு அந்த பெரும்பான்மை இல்லை. எனவே, 368 இன் வழியாக திருத்தம் செய்யாமல் குடியரசு தலைவர் ஆணையின் மூலம் 367 ஐ திருத்தியது மோடி அரசு. இது கரவுத்தனமாக செய்யப்பட்டுள்ளது ( இரகசியமாக, surreptitious ), பின் கதவு வழியாக செய்த திருத்தம், இதுபோல் செய்யக் கூடாது என்று செல்லமாக கண்டித்துவிட்டு ஆகஸ்ட் 5 ஆம் நாள் செய்த அத்தனைக்கும் ஒப்புதல் அளித்துவிட்டது உச்சநீதிமன்றம். அதாவது பாசிச மோடி அரசு செய்த சட்டக் கவிழ்ப்பு மற்றும் கொடுங்கோன் வேலைகளுக்கு சட்ட ஏற்பை வழங்கிவிட்டது.

370 ஐ சுற்றிப் பின்னப்பட்டிருந்த மாயைகள் அறுத்தெறியப்பட்டுவிட்டன. எல்லாம் வெட்ட வெளிச்சம் ஆகிவிட்டது. காசுமீர் இனி என்னவாகும்? மோடி அரசு காசுமீர் சிக்கலுக்கு  தீர்வு கண்டுவிட்டதா? காசுமீரில் அமைதி நிலவுகிறதா? காசுமீரில் வளர்ச்சி ஏற்பட்டுவிட்டதா? காசுமீர் மக்களுக்கு சனநாயகத்தை உறுதி செய்வதை தவிர்த்துவிட்டு மதச்சார்பின்மை அரசியல் என்றொன்று இருக்க முடியுமா? சனநாயகத்தின் பால் முரணற்ற அக்கறை கொண்டிருப்போரும் இதுநாள் வரை 370 ஐ காட்டி காசுமீரிகளுக்கு சமாதானம் சொல்லிக் கொண்டிருந்தோரும் மேற்சொன்ன கேள்விகளுக்கு விடை கண்டாக வேண்டும்.  

காசுமீர் மக்களின் நம்பிக்கையை வென்றெடுப்பதில் படிப்படியாக தோற்றுப் போய் இறுதியில் தனது வாக்குறுதி அனைத்தையும் குழிதோண்டி புதைத்துவிட்டது இந்திய அரசு. இத்தனைக்கும் பிறகு நீங்கள் இந்தியாவுடன் சேர்ந்து இருக்க விரும்புகிறீர்களா? இல்லையா? என்ற கேள்வியைக் காசுமீர் மகக்ளிடம் எழுப்பி அவர்களின் விருப்பத்தை அறிய வேண்டாமா? இதற்கு அப்பால் இச்சிக்கலுக்கு வேறொரு தீர்வு இருக்க முடியுமா?

இன்னொருபுறம்  காசுமீருக்கு 370 ஐ போல் வடகிழக்கு மாநிலங்களுக்கு சிறப்பு அதிகாரம் வழங்கும் பிரிவுகளும் உள்ளன. அவற்றின் எதிர்காலமும் நிலைத்தன்மையும் கேள்விக்குள்ளாகிவிட்டது. ஒருவகையில் இத்தீர்ப்பு கூட்டாட்சிக்கு முடிவுரை எழுதிவிட்டது.

இன்னொருபுறம் தமிழ்நாடு, மேற்குவங்கம், பஞ்சாப் போன்ற மொழிவழி மாநிலங்கள் இனி இருக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. மொழிவழி மாநிலங்களே கூடாது என கொள்கை கொண்ட ஆர்.எஸ்.எஸ். க்கு தேனாய் இனிக்கும் தீர்ப்பு இது.. ஏற்கெனவே, தமிழ்நாட்டைப் பிளக்க வேண்டும் என அண்ணாமலை, வானதி சீனிவாசன் உள்ளிட்ட பாசகவினர் சூது செய்துவருகின்றனர். அர்ஜூன் சம்பத் போன்ற சங் பரிவார ஆற்றல்கள் தங்கள் அமைப்புகளில் தீர்மானம் நிறைவேற்றி இக்கோரிக்கைக்கு ஆதரவு திரட்டி வருகின்றனர். சாதிக் கட்சிகள் தமது பதவி அரசியலுக்கு பைந்தமிழ் நாட்டைக் கூறு போட சொல்லி வருகின்றனர். 

சட்ட உறுப்பு 3 ஐ கொண்டுதான் மாநில உடைப்பை செய்து காட்டியுள்ளது பாசக. என்றாவது ஒருநாள் இதை இப்படி பயன்படுத்துவார்கள் என அரசியல் நிர்ணய சபையில் எச்சரிக்கை விடப்பட்டது. மறைந்த கு.ச. ஆனந்தனும் முரசொலி மாறனும் 50 ஆண்டுகளுக்கு முன்பே இதை சுட்டிக்காட்டி உறுப்பு 3 ஐ திறனாய்வு செய்தனர்.

மாநில உரிமைகளுக்காக அமைக்கப்பட்ட இராஜமன்னார் குழு இதை நீக்கச் சொல்லி பரிந்துரைத்தது. 1974 ஆம் ஆண்டு தமிழ்நாட்டு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மாநில சுயாட்சி தீர்மானத்தில் உறுப்பு 3 ஐயும் 4 ஐயும் நீக்க வேண்டும் என்று அறைகூவல் விடப்பட்டுள்ளது..

”ஒரே தேசம், ஒரே மொழி, ஒரே சந்தை – இந்துராஷ்டிரம்’ என்ற காவி -கார்ப்பரேட் பாசிச நிகழ்ச்சி நிரலின் பகுதிதான் காசுமீரத்தை இந்தியாவுக்குள் கரைப்பதாகும்; மொழிவழி மாநிலங்களை இல்லாதொழிக்கும் வேலைத்திட்டமாகும். எனவே, காசுமீர் மக்களின் உரிமைக்காக குரல் கொடுப்பதும் மொழிவழி மாநிலங்களின் இருப்பைப் பாதுகாப்பதும் பாசிச எதிர்ப்பு சனநாயக வேலைத்திட்டத்தின் பிரிக்க முடியாத பகுதியாகும்.

காசுமீர் மக்களிடையே பொதுவாக்கெடுப்பை நடத்தி அவர்கள் இந்தியாவுடன் இருக்க விரும்புகிறார்களா? அல்லது பிரிந்து செல்ல விரும்புகிறார்களா? என்பதை அறிய வேண்டும். காசுமீர் காசுமீரிகளுக்கே என்று ஓங்கி குரல் கொடுப்போம்.

மொழிவழி மாநிலங்களைத் துண்டாட கருவியாகப் பயன்படும் உறுப்பு 3 ஐ நீக்கக் கோருவோம். 

வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்

வைத்தூறு போலக் கெடும். 

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW