காசா மீதான இசுரேலின் இனவழிப்புப் போர்….    நெருப்பாற்றைக் கடக்கும் பாலத்தீன மக்கள்…. – செந்தில்

03 Dec 2023

கொரோனாவுக்குப் பின்னான ஊழி இது.

20 ஆண்டுகள் ஆக்கிரமிப்புக்குப் பிறகு, ஆப்கனில் இருந்து அமெரிக்கப் படைகள் பின்வாங்கவே, தாலிபான்கள் அங்கே ஆட்சிக்கு வந்தனர். 

கிழக்கு ஐரோப்பாவிலோ, கடந்த 2022 பிப்ரவரி 24 இல் தொடங்கிய உக்ரைன் மீதான இரசியாவின் ஆக்கிரமிப்புப் போர் இன்றுவரை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இந்த சூழலில்தான், மற்றுமொரு போர்முனை மேற்காசியாவில் திறந்துவிடப் பட்டுவிட்டது. இடப்பெயர்வுகள், படுகொலைகள், பெருக்கெடுத்து ஓடும் குருதியைப் பற்றிய கதையாடல் இப்போது பாலத்தீனத்தை மையப்படுத்தி நடக்கிறது. 

போர்க்குற்றங்கள், மாந்தக் குலத்திற்கு எதிரான குற்றங்கள், இனவழிப்புக் குற்றங்கள், தற்காப்புப் போர், பயங்கரவாத எதிர்ப்புப் போர் என்பவற்றை அணிசேர்க்கைக்கு ஏற்றாற் போல் உலக அரசுகள் பேசிக் கொள்கின்றன.  

பாலத்தீன மக்களின் விடுதலையும் இசுரேல் அரசின் பயங்கரவாதமும் முன்னெப்போதும் இல்லாத வகையில் இப்போது பேசு பொருளாகியுள்ளது.

’அல்-அக்சா வெள்ள நடவடிக்கை’

ஆம். அது வெள்ளம் போன்ற பெருக்கெடுப்புதான், இசுரேலை திணறடித்த எறிகணை மழை!

அக்டோபர் 7 ஆம் நாள் காலை 6:30 மணிக்கு பாலத்தீனத்தை மறந்திருந்த உலகத்தின் உறக்கத்தை தட்டி எழுப்பியது அமாசு இயக்கம். பல்வேறு இடங்களில் இருந்து சரமாரியாக 5000 எறிகணைகளை  இசுரேலின் சிறு நகரங்கள் மீது ஏவியது அமாசு. அது காசாவில் இருந்து 70 கிமீ தொலைவில் இருக்கும் இசுரேல் தலைநகரம் வரை தொடர்கின்றது. அதேநேரத்தில் கடல்வழி, தரைவழி, வான்வழியாக அமாசு போராளிகள் இசுரேலுக்குள் ஊடுறுவினர். காசா எல்லையை ஒட்டியுள்ள இசுரேல் நகரங்களில் ஊடுறுவி அமாசு படையினர் தாக்குதலை நடத்தினர்.

1973 க்குப் பிறகு இசுரேல் மீது நடத்தப்பட்ட மிகப் பெரிய தாக்குதலாக இது பார்க்கப்படுகிறது. அல்-அக்சா என்பது கிழக்கு ஜெருசலேத்தில் உள்ள இசுலாமியர்களின் மூன்றாவது புனிதத் தலமாகும். கடந்த 2021 ஆம் ஆண்டு அதன் வளாகத்தில் இசுரேலியப் படைகளுடன் நடந்த மோதலில் நூற்றுக்கணக்கான பாலத்தீனர்கள் கொல்லப்பட்டனர்.  அல்-அக்சா மசூதியின் புனிதத்தைப் பாழ் செய்ததற்குப் பதிலடிக் கொடுக்கும் வகையில் அல்-அக்சா என்று இந்நடவடிக்கைக்கு பெயரிடப்பட்டுள்ளது.

1967 ஆம் ஆண்டு நடந்த போரில் இசுரேல் வன்கவர்ந்த பகுதிகளை மீட்பதற்காக 1973 ஆம் ஆண்டு எகிப்தினதும் சிரியாவினதும் படைகள் இசுரேல் மீது தாக்குதல் நடத்தி வெற்றி கண்டன. அதிலிருந்து ஐம்பது ஆண்டுகள் நிறைவுற்ற நாளில்தான் இத்தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையில்  1200 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று இசுரேல் சொல்கிறது. இசுரேல் படையினர், காவலர்கள் இன்றி பொதுமக்களும் கொல்லப்பட்டுள்ளனர் என்பதன் பெயரால் இதை ’மோசமான பயங்கரவாத குற்றமாக’ உலகுக்கு காட்டிக்கொண்டிருக்கிறது இசுரேல்.

240 பேரை பணையக் கைதிகளாக அமாசு தூக்கிச் சென்றுவிட்டது.

நோவா இசை நிகழ்ச்சியில் புகுந்து அமாசு படையினர் தாக்குதல் நடத்தியபோது ’தற்காப்பு’ என்ற பெயரில் இசுரேல் படை திருகிறக்கையில் (ஹெலிகாப்டர்) இருந்து அமாசு படையினர் மீது கண்மூடித்தனமாக நடத்திய தாக்குதலில் இசுரேலியப் பொதுமக்களும் கொல்லப்பட்டனர். மற்றும் பீரி என்ற காசா எல்லைப் பகுதியில் பணையக் கைதிகளின் உயிரைப் பற்றி கவலைப்படாமல் பணையக் கைதிகளை வைத்திருந்த அமாசு படையினர் மீது இசுரேலிய படையினர் தாக்குதல் நடத்தியிருப்பதாக இசுரேலிய காவல்துறையின் முதல்கட்ட விசாரணை சொல்கிறது என இசுரேல் நாளிதழ் ஆரெட்சு ( Haretz ) கடந்த நவம்பர் 18 அன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், நோவா இசை நிகழ்ச்சியில் தாக்குதல் நடத்தும் திட்டம் அமாசுக்கு இல்லை என்பது பிடிபட்ட அமாசு போராளிகளிடம் விசாரணை நடத்தியதில் இருந்து தெரிய வந்துள்ளது என்றும் அச்செய்தி சொல்கிறது.

அமாசு இந்த நேரத்தில் ஏன் இந்த தாக்குதலைத் தொடுத்தது? மூன்று காரணங்கள் இருக்கக் கூடும்.

  1. இசுரேல் தலைமை அமைச்சர் நெதன்யாகு தலைமையில் அமைந்திருக்கக் கூடிய அதிதீவிர வலதுசாரி கட்சிகள் அடங்கிய கூட்டணி அரசின் கொள்கைகளால் மேற்குகரையில் இருக்கக்கூடிய வன்பறிப்புக் குடியேறிகளின் அட்டூழியங்கள் அதிகரித்திருக்கின்றன. இதற்கு எதிர்வினை ஆற்ற வேண்டும் என்ற பதற்றம் பாலத்தீனியர்களிடம் அதிகரித்துக் கொண்டிருந்தது. இசுரேல் படையினரை காசாவில் இருந்து மேற்குகரை நோக்கி நகர்த்துவதற்கு இது வழிவகுத்தது. காசா பகுதியில் இத்தாக்குதலுக்கு அணியமாவதற்கான சிறு வெளியும் இதனால் கிடைத்தது.
  2. ’ஆபிரகாம் உடன்படிக்கை’ என்ற பெயரில் சவுதியும் இசுரேலும் இயல்பாக்க உடன்படிக்கை கண்டு விடுமாயின் இசுரேல் – பாலத்தீனப் பிரச்சனையில் இரண்டு அரசு தீர்வை நோக்கிச் செல்வதற்கான வாய்ப்பை அது இல்லாமல் ஆக்கிவிடும். எனவே அரபு – இசுரேல் உறவில் இணக்கம் ஏற்பட்டுவிடக் கூடாது.
  3. ஈரானுடன் இருந்த விரிசல் முடிவுக்கு வந்து மீண்டும் நட்புறவு மலர்ந்தது (கடந்த அக்டோபர் 2022 இல் இருந்து)  அமாசுக்கு துணிவைக் கொடுத்துள்ளது.

அமாசின் செய்தி தொடர்பாளர் காலித் குவாதாமி பல பத்தாண்டுகளாக பாலத்தீனர்கள் எதிர்கொண்டு வரும் கொடுமைகளுக்கு எதிரான தாக்குதல் இதுவாகும். காசாவில் பாலத்தீன மக்களுக்கு எதிரான கொடுமைகளையும் அல்-அக்சா போன்ற புனித தலங்களுக்கு எதிரான நடவடிக்கைகளையும் பன்னாட்டுக் குமுகம் நிறுத்திக்கொள்ள வேண்டும்.

”இப்புவிப்பரப்பின் கடைசி வன்பறிப்பை முடிவுக்கு கொண்டுவரும் போர் இதுவாகும்” என்று அமாசு படைத்தளபதி முகமது டெய்ப் கூறியுள்ளார். துப்பாக்கியைக் கையில் வைத்திருக்கும் ஒவ்வொருவரும் போரில் ஈடுபட வேண்டும். இதுவே தருணம்.  மேற்கு கரையில் உள்ள போராட்டக்காரர்களும் நமது அரபு மற்றும் இசுலாமிய தேசங்களும் இப்போரில் இணைய வேண்டும் என அறைகூவல் விடுத்தார்.

அமாசின் தலைவர் இசுமாயில் அனியே ( Ismael Haniyeh ), ” எங்கள் அரபு உடன்பிறப்புகள் உள்ளிட்ட அனைத்து நாடுகளுக்கும் சொல்கிறோம், போராட்டக்காரர்களின் தாக்குதலில் இருந்து தன்னைத் தற்காத்துக் கொள்ள முடியாத ஒரு நாடு,  உங்களுக்கு எந்தவொரு பாதுகாப்பையும் கொடுத்துவிட முடியாது.  அந்த நாட்டுடன் நீங்கள் மேற்கொள்ளூம் இயல்பாக்க உடன்படிக்கை இப்பூசலுக்கு தீர்வு தந்துவிட முடியாது.” என்று சொன்னார். மேலும், நாம் வெற்றியின் விளிம்பில் இருக்கிறோம். காசா முனையில் தெளிவான வெற்றியை ஈட்டியுள்ளோம் என்றார் இண்டிபதாக்களின் அலைகள், எம் மண்ணை விடுதலை செய்வதற்கான களத்தில் நடைபெறும் புரட்சிகள், இசுரேலிய சிறைகளில் எமது சிறையாளர்கள் – எல்லாம் முடிவுக்கு வர வேண்டும் என்று அவர் சொல்லியுள்ளார்.

இரும்புவாள் நடவடிக்கை:

காலையில் 6:30 மணிக்கு அமாசு தன் தாக்குதலைத் தொடங்கியது என்றால் சரியாக 9:45 மணிக்கெல்லாம் காசா வான்பரப்பில் இசுரேல் குண்டு மழைப் பொழியத் தொடங்கிவிட்டது. இசுரேலிய குடிமக்களே, நாம் போரில் இருக்கிறோம், எதிரி இதுவரையில்லாத அளவுக்கு விலை கொடுப்பான்” என்று சூளுரைத்தார் இசுரேலிய தலைமை அமைச்சர் நெதன்யாகு.

இந்த போருக்கு இசுரேல் வைத்திருக்கும் பெயர் ”இரும்பு வாள்” நடவடிக்கை.

போர் தொடங்கி ஆறு நாட்களுக்குள் இசுரேல் 6000 குண்டுகளைக் காசாவின் மீது வீசியிருந்தது. 4000 டன்கள் வீசப்பட்டிருந்தன. இது கிட்டதட்ட ஓராண்டில் அமெரிக்கா ஆப்கனில் மீது வீசிய குண்டுகளின் அளவாகும்.

காசா என்பது வெறும் 365 சதுர கிமீ பரப்பளவு கொண்ட பகுதி. ஆப்கனோ 6,52,860 சதுர கிமீ பரப்பளவு கொண்ட பகுதியாகும். அதாவது காசாவை விட 1800 மடங்கு பெரியது ஆபகன். காசாவில் சுமார் 23 இலட்சம் பாலத்தீனர்கள் வாழ்கின்றனர்.

வெறும் 24 மணி நேரத்தில் காசா நகரத்தில் உள்ள பத்து இலட்சம் மக்களை  வடக்கில் இருந்து தெற்கு நோக்கி இடம்பெயர்ந்து செல்லுமாறு அக்டோபர் 12 அன்று இசுரேல் அரசு சொன்னது. காசாவில் இருந்து பாலத்தீனர்களை முற்றாக வெளியேற்றிவிட்டு காசாவையும் விழுங்க வேண்டும் என்பது இசுரேலின் நோக்கம். 

 ’கண்ணுக்கு கண், பல்லுக்குப் பல்’ என்று  பழிக்குப்பழி கருத்தியலை விளக்குவதுண்டு. ஆனால், இசுரேலைப் பொறுத்தவரை ஒரு கண்ணுக்கு பத்து கண் அல்லது இருபது கண் எனப் பழிவாங்கும் வழக்கத்தைக் கொண்டுள்ளது.

எடுத்துக்காட்டாக கடந்த 2008 இல் இந்த 2023  அக்டோபர் வரை நடந்த போர்களில் பாலத்தீனர்கள் சுமார் 6407 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால், இசுரேல் தரப்பிலோ வெறும் 308 தான். அதேபோல் காயம்பட்டவர்களில் பாலத்தீனர்கள் 1,52,560 பேர். இசுரேலியர்கள் 6307 பேர்.

2002 ஆம் ஆண்டில் இருந்து காசாவை சுற்றி ஒரு முற்றுகை சுவரைக் கட்டியெழுப்பிக் கொண்டிருக்கிறது இசுரேல். இது சட்டப் புறப்பானதென 2004 ஆம் ஆண்டு ஹேக்கில் ( Hague) உள்ள பன்னாட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது. 2006 ஆம் ஆண்டு தேர்தல் வெற்றியின் மூலம் அமாசு காசாவில் ஆட்சியைப் பிடித்தது.  2007 ஆம் ஆண்டில் இருந்து காசாவை முழுமையான முற்றுகைக்குள் சிறைப்பிடித்து வைத்துள்ளது இசுரேல்.

இப்போது குண்டு மழை பொழியத் தொடங்கியவுடன் காசாவுக்குள் உணவு, மருந்து, குடிநீர், எரிபொருள் என எதுவும் நுழையவிடாமல் தடுத்தது இசுரேல். வான்வழித் தாக்குதலைத் தொடர்ந்து மிக அடர்த்தியாக மக்கள் வாழும் காசாவிற்குள் தரைவழியிலும் கடல் வழியிலும் இசுரேலிய படை நுழைந்து தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கிறது.

எகிப்து காசா எல்லையான சினாய் தீபகற்பத்தில் இருக்கும் ரஃபா எல்லையில் 200 க்கும் மேற்பட்ட சரக்கு உந்துகள் காசாவுக்குள் நுழைய முடியாமல் காத்துக் கிடந்தன. கடந்த அக்டோபர் 20 அன்று எகிப்து வெளியுறவு அமைச்சர் சமேகு சவுக்ரியுடன் ( Sameh Shoukry) ரஃபா எல்லைக்குப் போன ஐ.நா. செயலர் அண்டோனியா குட்டர்சு, “ இவை வெறும் சரக்கு உந்துகள் மட்டுமல்ல, உயிர்ப்பாதையாகும். காசாவில் இருக்கும் மக்களுக்கு அவை வாழ்வுக்கும் சாவுக்கும் இடையிலான வேறுபாடாகும். ……… முடிந்தவரை விரைவாக, கூடுமானவரை அதிகமாக இந்த சரக்கு உந்துகள் முன்னே செல்ல வேண்டும்.  என்று உணர்ச்சிப் பெருக்குடன் வேண்டுகோள் விடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.  

அக்டோபர் 17, செவ்வாய் அன்று அல்-அகலி-அல்-அரபி மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 500 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இசுரேல் படை இதற்கு பொறுப்பேற்க மறுத்து, பழியை இசுலாமிய ஜிகாத்ப் படையினர் மீது போட்டது. ஆனால், அந்தக் குற்றச்சாட்டுக்கு சான்று கொடுக்க முடியவில்லை. ஏதிலி முகாம்கள் என்றும் பார்க்காமல் அங்கும் தாக்குதல் நடத்தியது இசுரேல் படை. அல்-சிஃபா மருத்துவமனையில் அமாசு படையினர் குடிகொண்டிருப்பதாக சொல்லி அம்மருத்துவமனையை முற்றுகையிட்டு தாக்கியது. ஆனால், அமாசு படையினர் அங்கிருப்பதற்கான சான்றுகளைக் காட்ட முடியவில்லை. நேற்றைக்கு (21-11-2023) இன் அல் – அவ்தா மருத்துவமனையில் இசுரேல் படையினர் நடத்திய தாக்குதலில் 3 மருத்துவர்கள் கொல்லப்பட்டனர்.

”எங்கள் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக நாங்கள் மருத்துவமனைகளைப் பயன்படுத்தவில்லை” என்று அமாசு அறிவித்துள்ளது. எங்கள் மக்களை வடக்கில் இருந்து தெற்கு நோக்கி நகர்த்தி,  பின்னர் எகிப்துக்கு விரட்டுவதுதான் இசுரேலின் நோக்கம். ஆனால், இடம்பெயர்வதோ , இங்கிருந்து புறப்படுவதோ இல்லை என எம் மக்கள் மண்ணில் கால் பதித்து நிற்கின்றனர்” என்கிறது அமாசு.

எல்லா இடர்பாடுகளுக்கும் அப்பால் நாங்கள் எமது மண்ணிலேயே இருப்போம், நாங்கள் வெளியேற மாட்டோம்” என பாலத்தீன அதிகார சபையின் அதிபர் மகமது அப்பாசு அக்டோபர் 21 அன்று எகிப்து தலைநகர் கெய்ரோவில் நடந்த மாநாட்டில் சூளுரைத்தார்.

அதேநேரத்தில், காசாவில் இருந்து இடப்பெயர்வும் நடந்துள்ளது.

ஆயினும் குண்டு மழைக்கும் இடிபாடுகளுக்கும் படுகொலைகளுக்கும் மரண ஓலங்களுக்கும் பிணக்குவியல்களுக்கும் இடையில் பாலத்தீனர்கள் விடுதலைக்கான தமது குன்றாத வேட்கையை உலகுக்கு அறிவித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தமது வரலாற்றில் ஒரு நெருப்பாற்றைக் கடந்து கொண்டிருக்கிறார்கள்.

அக்டோபர் 7 இல் இருந்து இசுரேல் நடத்திவரும் பழிவாங்கும் போரில், நவம்பர் 22 வரை கொல்லப்பட்ட பாலத்தீனர்கள் 14,128 பேர். இதில் குழந்தைகள் குறைந்தது 5600 பேர், பெண்கள் 3550 பேர், காயம்பட்டோர் 33,000 பேர். 6800 க்கும் மேற்பட்டோர் காணவில்லை. அதாவது அவர்கள் கட்டிட இடிப்பாடுகளில் சிக்கியிருக்க வேண்டும் அல்லது அடையாளம் தெரியாத பிணங்களாக இருக்க வேண்டும். 44,000 குடியிருப்புப் பகுதிகள் முற்றாக அழிக்கப்பட்டுவிட்டன, 2,30,000 குடியிருப்புகள் சேதப்படுத்தப் பட்டுள்ளன. அதாவது காசாவில் உள்ள 60% வீடுகள் வாழத் தகுதியற்றதாக ஆகிவிட்டன. 26 மருத்துவமனைகள், 55 மருத்துவ மையங்கள் செயலிழந்துவிட்டன. இதுவரை குறைந்தது 53 ஊடகவியலாளர்கள் இப்போரில் உயிரிழந்திருப்பதாக செய்திகள் சொல்கின்றன.

அக்டோபர் 7 க்குப் பிறகு மேற்கு கரையிலும் பாலத்தீனர்களுக்கு எதிராக இசுரேலியப் படையினரும் குடியேற்ற யூதர்களும் நடத்தும் வன்முறை கூடியுள்ளது. இதுவரை 200 பேருக்கு மேல் கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் தளைப்படுத்தப்பட்டுள்ளனர், சித்திரவதைக்கு உள்ளாகி வருகின்றனர். பலரும் வேலையில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். கிட்டத்தட்ட அனைத்துப் பொருளியல் நடவடிக்கைகளுக்கும் முழுத் தடை விதித்துள்ளது.

அக்டோபர் 7 தாக்குதல் இசுரேலிய பாதுகாப்புத் துறை, உளவுத் துறையின் தோல்வியாக பார்க்கப்படுகிறது. இத்தாக்குதல் நடந்தவுடன் நெதன்யாகு ஆளுங்கட்சி , எதிர்க்கட்சி ஆகியவற்றை உள்ளடக்கிய தேசிய ஐக்கிய அரசாங்கம் ஒன்றை அமைத்துக் கொண்டார். இசுரேலிய மக்கள் நெதன்யாகு அரசைவிடவும் படைத் துறையை நம்புவதாக செய்திகள் வருகின்றன; பணையக் கைதிகளை மீட்க வலியுறுத்தி இசுரேலுக்குள் போராட்டங்கள் நடக்கின்றன.

போர் இடைநிறுத்தப்பட்டு பணையக் கைதிகள் மீட்கப்பட்டவுடன் நெதன்யாகு அரசுக்கு எதிராக மாபெரும் மக்கள்திரள் போராட்டங்கள் வெடிக்கக் கூடும் என்று இசுரேலின் உள்நாட்டு அரசியல் சூழல் மதிப்பிடப் படுகிறது. அவ்வகையில் போரை நீட்டிப்பது நெதன்யாகு அரசுக்கு ஓர் உள்நாட்டு அரசியல் தேவையாகவும் இருக்கிறது.

இனவழிப்புப் போர்:

வெகுமக்கள் மீது குண்டு வீசுவது, இராசயணக் குண்டுகளைப் பயன்படுத்துவது, மருத்துவமனைகள் மீது குண்டு வீசுவது, ஏதிலி முகாம்களைத் தாக்குவது ஆகியவை திட்டவட்டமானப் போர்க்குற்றங்களாகப் பார்க்கப்படுகின்றன. உணவு, மருந்துப் பொருட்கள், தண்ணீர், மின்சாரத் துண்டிப்பு, எரிபொருள் ஆகியவைக் கிடைக்காதபடி செய்வது மாந்தக் குலத்திற்கு எதிரானக் குற்றங்களாகப் பார்க்கப்படுகின்றன.

இதையொரு இனவழிப்புப் போர் என்று வரையறுப்பதற்கு 1948 இல் ஐ.நா.வில் நிறைவேற்றப்பட்ட இனவழிப்புத் தடுப்பு உடன்படிக்கையின் உறுப்பு 2 ஐயும் ரோமாபுரி சட்டம் உறுப்பு 6 ஐயும் வழிகாட்டுதலாகக் கொள்ள வேண்டும். அவற்றின்படி ஒரு குறிப்பிட்ட மக்கள் கூட்டத்தை முற்றாகவோ பகுதியாக அழிக்கும் நோக்கத்தில் செய்யப்படும் குற்றங்கள் இனவழிப்புக் குற்றங்களாகப் பார்க்கப்படும்.

இனவழிப்புக் குற்றங்களைப் பொறுத்தவரை அவற்றை வரையறுப்பதற்கு குற்றமிழைக்கும் அரசின் நோக்கம் அதுதான் என்பதை மெய்ப்பிக்க வேண்டும். அது சற்று கடினமானது. ஆனால், இம்முறை இசுரேலிய அரசத் தலைவர்கள் இருப்போர் தமது பேச்சுக்களால் இனவழிப்பு நோக்கத்தை வெளிக்காட்டியுள்ளனர்.

அக்டோபர் 9 அன்று இசுரேலின் பாதுகாப்புத் துறை அமைச்சர் கல்லண்ட் காசா மீது முற்றுகை அறிவித்தக் கையோடு காசாவில் வாழும் பால்த்தீனியர்களை மனித மிருகங்கள் என்று சாடினார். அக்டோபர் 29 அன்று நெதன்யாகு, ஈப்ரு பைபிளில் வரும் ”அமலேக்கின் தேசத்தை தாக்கி, குழந்தைகள், பெண்கள் என்ற வேறுபாடின்றி கொன்றொழித்திடு” என்ற வரிகளை எடுத்துக்காட்டி காசாவில் தாம் செய்துகொண்டிருப்பதை அத்துடன் ஒப்பிட்டுக்கொண்டார். நவமபர் 5 ஆம் நாள் இசுரேலின் அருமரபுத் துறை அமைச்சர் ( Heritage Minister), காசாவின் மீது அணுகுண்டைப் பயன்படுத்துவதும் ஒரு வழிமுறைதான் என்று பேசினார். மேலும், ”எவ்வித துயர்தணிப்பு உதவிகளும் பாலத்தீனர்களுக்குப் போகக் கூடாது. ஏனெனில், அமாசு செய்த குற்றங்களில் ‘ஈடுபடாதவர்’ என்று எவரும் அங்கு இல்லை” என்று அவர் சொன்னார். இவை சில எடுத்துக்காட்டுகளே.

காசா மீதான போரை அமாசுக்கு எதிரானப் போர் என்று காட்டிக் கொண்டும் தற்பாதுகாப்புக்கான உரிமையின் ( Right to Self defence) பெயரால் செய்வதாக சொல்லிக் கொண்டும் பாலத்தீன இனவழிப்பை செய்ய முயல்கிறது இசுரேல் அரசு.

’இனியொரு முறை அனுமதியோம்’ என்று ஒவ்வொரு இனவழிப்புக்குப் பின்பும் வருந்தும் உலகம், ‘இனியொரு முறை’ என்பது இந்த தருணம் என்றுணர்ந்து பாலத்தீனத்திற்கு எதிரான இனவழிப்பு முயற்சியைத் தடுக்க முன்வர வேண்டும். உடனடியாக உலக நாடுகள் தலையிட்டு இனவழிப்பை நிறுத்த வேண்டும் என்று அக்டோபர் 12 அன்று இனவழிப்பு தொடர்பான சட்டம், கல்விப்புலம்சார் பன்னாட்டு அறிஞர் பெருமக்கள் 800 பேர் ஒரு கூட்டறிக்கையை வெளியிட்டு உலகத்தை விழித்துக் கொள்ளச் செய்தனர்.

வரலாறு காணாத பாலத்தீன ஆதரவு:

அரபுலகம் ஆர்ப்பரித்து எழுந்து நிற்பது ஒருபுறம் என்றால் ஐரோப்பாவிலும் வட அமெரிக்காவிலும் இன்ன பிற மேற்குல நாடுகளிலும் போர் நிறுத்தம் கோரி பாலத்தீன ஆதரவுப் போராட்டங்கள் அந்தந்த நாடுகளின் தலைநகரை திணறடித்துக் கொண்டிருந்தன. ”தங்கள் பெயரால் வேண்டாம்” என புலம்பெயர்ந்து வாழும் யூதர்களில் உள்ள சனநாயக உணர்வு கொண்டோர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரன்,  பயங்கரவாத எதிர்ப்புப் போர் என முதலில் இசுரேல் ஆதரவு நிலை எடுத்திருந்த போதும் பின்னர் உள்நாட்டுப் போராட்டங்களின் அழுத்தம் காரணமாக போர் நிறுத்தத்தை வலியுறுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டார்.

இலண்டனில் நடந்த பாலத்தீன ஆதரவுப் போராட்டத்திற்கு எதிராகப் பேசிய இங்கிலாந்தின் உள்துறை செயலர் சுவல்லா பிரேவர்மேன் பதவியில் இருந்து நீக்கப்படும் நிலை ஏற்பட்டது.

அமெரிக்காவிலோ போர்நிறுத்தம் கோரி தலைநகரங்களில் போராட்டங்கள் நடந்த வண்ணம் உள்ளன. 18 – 34 அகவைக்கு உட்பட்ட இளந் தலைமுறையினர் போராட்டங்களுக்கு வந்திருப்பது ஒரு புதிய காட்சி என்று சொல்லப்படுகிறது. அமெரிக்கா இசுரேலுக்கு படை உதவி செய்யக்கூடாதென்று அவர்கள் குரல் எழுப்புகின்றனர். அமெரிக்க அதிபர் பைடன் உள்ளிட்ட அமெரிக்க அரசத் தலைவர்கள் இசுரேல் நடத்திவரும் இனவழிப்புக்கு துணைபோகிறார்கள் எனக் குற்றஞ்சாட்டியும் இசுரேலுக்கு பண உதவி, ஆயுத உதவி, அரசுறவிய உதவிகள் செய்யக்கூடாதென  கலிஃபோர்னியா நீதிமன்றத்தில் அரசமைப்புச் சட்ட உரிமைகளுக்கான மையம் ( Centre for Constitutional Rights) என்ற மனிதவுரிமை அமைப்பு வழக்கு தொடுத்துள்ளனர்.

தென்னாப்பிரிகா இசுரேலுடனான தனது தூதரக உறவைத் துண்டித்துக் கொண்டது. இலத்தீன அமெரிக்காவைச் சேர்ந்த பொலிவியா, கொலம்பியா, சிலி, ஓண்டுராசு ஆகிய இடதுசாரிக் கட்சிகள் ஆளும் நாடுகள் இசுரேலுடனான அரசியல் உறவைத் துண்டித்துக் கொண்டன.

கடந்த நவம்பர் 11 அன்று சவுதியில் அரபுக் கழகமும் ( 22 அரபு நாடுகள்) இசுலாமிய ஒத்துழைப்புக்கான அமைப்பு ( OIC – 57 இசுலாமியர் பெரும்பான்மை கொண்ட நாடுகள்) கூடி போர்நிறுத்தத்தை வலியுறுத்தியும் இசுரேல் நடத்திவரும் படுகொலைகளைக் கண்டித்தும் கைதிகளை விடுவிக்க வலியுறுத்தியும் போர்க்குற்றங்களைக் கண்டித்தும் ஐநா. பாதுகாப்பு அவை கட்டாயப் படுத்தும் தீர்மானம் கொண்டுவர வலியுறுத்தியும் அறிக்கை விட்டுள்ளன.

இசுரேலுடனான உறவைத் துண்டிக் கொள்வது பற்றிய வரியை நீக்க வலியுறுத்தி சவுதி வெற்றிக் கண்டது என்பதும் இங்கு கருத்தில் கொள்ளத்தக்கது!

நேற்று ( 21-11-2022) பிரிக்சு ( BRICS – பிரேசில், இரசியா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ) கூட்டமைப்பின் தலைவர்கள் இணையவழியில் சந்தித்து காசாவில் நடந்துவரும் போர்க்குற்றங்கள் நிறுத்தப்பட வேண்டும், போர் நிறுத்தம் வேண்டும் என்று வலியுறுத்தின. மேற்படி நாடுகள் மட்டுமின்றி எகிப்து, எத்தியோபியா, அர்ஜெண்டினா, சவுதி, ஐக்கிய அரபு அமீரகம், ஈரான் ஆகிய நாடுகளின் தலைவர்களும் இதில் கலந்துகொண்டனர். ஐநா செயலர் அண்டோனிய குட்டரசும் இதில் கலந்து கொண்டார். மோடி தலைமையிலான இந்தியாவில் மட்டும்தான் தலைநகரங்களில் பாலத்தீன ஆதரவுப் போராட்டங்கள் சொல்லிக் கொள்ளும்படி இல்லை என்பது சமகால இந்தியாவின் குடியாட்சிய ( சனநாயக ) மட்டத்தைப் படம்பிடித்துக் கொண்டிருக்கிறது.

ஐநா தீர்மானம்:

கடந்த நவம்பர் 15 அன்று ஐ.நா. பாதுகாப்பு அவையில், ’உடனடி மற்றும் நீடித்த மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான போர் நிறுத்தத்தை வலியுறுத்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

15 உறுப்பினர்கள் கொண்ட பாதுகாப்பு அவையில் குறைந்தது 9 நாடுகள் வாக்களித்தால்தான் ஒரு தீர்மானம் நிறைவேறும். மால்டா என்ற நாடுதான் இத்தீர்மானத்தை முன்மொழிந்தது. அமெரிக்கா, இங்கிலாந்து, இரசியா ஆகிய நாடுகள் இத்தீர்மானத்தில் வாக்களிக்காமல் விலகிக் கொண்டன. ஏனைய 12 நாடுகளின் ஆதரவுடன் இத்தீர்மானம் நிறைவேறியது. இத்தீர்மானத்தில் அமாசு நடத்திய அக்டோபர் 7 தாக்குதல் பற்றியும் இசுரேல் நடத்தும் வான்வழிக் குண்டு வீச்சுகள் பற்றியும் குறிப்பு இல்லை. அமாசு தாக்குதல் பற்றிய குறிப்பு இல்லை என்பதற்காக அமெரிக்கா உறுப்பு நாடுகளைக் கடிந்து கொண்டது.

போர் தொடங்கியதில் இருந்து நான்கு தீர்மானங்கள் பாதுகாப்பு அவையில் முன்மொழியப்பட்டு அவை தோற்கடிக்கப்பட்டன.

பிரேசில் கொண்டு வந்த தீர்மான முன்மொழிவில், ’இசுரேலுக்கு இருக்கும் தற்பாதுகாப்புக்கான உரிமை’ பற்றிய குறிப்பு இல்லை என்ற காரணத்தின் பெயரால் அமெரிக்கா தனது வெட்டதிகாரத்தைப் பயன்படுத்தி அதை தோற்கடித்தது. போர் நிறுத்தம் கோராத அமெரிக்காவின் தீர்மான முன்மொழிவு இரசியாவாலும் சீனாவாலும் வெட்டதிகாரத்தின் மூலம் தோற்கடிக்கப்பட்டது. இரசியாவின் இரு தீர்மான முன்மொழிவுகள் போதிய ஆதரவில்லாததால் தோற்றுப் போயின.

ஐ.நா. பாதுகாப்பு அவையில் தீர்மானம் நிறைவேற்ற முடியாத நிலையில், அக்டோபர் 23 அன்று ஐ.நா. பொதுப் பேரவையின் அவசரக் கூட்டம் ஒன்று நடத்தப்பட்டு போர் நிறுத்தம் கோரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது கட்டாயப் படுத்தும் தீர்மானம் அல்ல ( Non – binding resolution) பாலத்தீன விடுதலைப் போராட்டத்திற்கு மரபாக ஆதரவு தெரிவித்து வந்த இந்திய அரசோ அத்தீர்மானத்தில் வாக்களிக்காமல் ஒதுங்கி நின்றது.

அக்டோபர் 23 அன்று ஐ.நா. பாதுகாப்பு அவைக் கூட்டத்தில் அதன் உறுப்பினர்களின் வெளியுறவு அமைச்சர்கள் பங்குபெற்றிருந்த போது, ஐ.நா. செயலர் அண்டோனியா குட்டர்சு, “அமாசின் தாக்குதலைக் கண்டித்த அதேநேரத்தில், அந்த தாக்குதல் வெற்றிடத்தில் ஒன்றும் நடந்துவிடவில்லை. பாலத்தீனர்கள் கடந்த 56 ஆண்டுகளாக மூச்சு திணறும் ஆக்கிரமிப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். ஆனால், பாலத்தீன மக்களின் துயரங்களின் பெயரால் அமாசு நடத்திய தாக்குதலை நியாயப்படுத்த முடியாது. அமாசு நடத்திய தாக்குதலின் பெயரால் பாலத்தீன மக்களுக்கு கூட்டுத் தண்டனை வழங்குவதையும் ஏற்க முடியாது.” என்று பேசினார். 

அமாசு நடத்திய தாக்குதலை நியாயப்படுத்திவிட்டதாகவும் பயங்கரவாதத்திற்குத் துணைபோவதகாவும் சொல்லி ஐ.நா.வை மிரட்டும் தொனியில் பேசியது இசுரேல், ஐ.நா. செயலர் பதவி விலக வேண்டும், ஐ.நா.வுக்குப் பாடம் புகட்டுவோம் என்றெல்லாம் பேசி இசுரேல் தன்னை ஓர் அரம்ப அரசாக (rogue state) வெளிப்படுத்திக் கொண்டது..

ஐநா. பாதுகாப்பு அவைத் தீர்மானத்தைப் பொருட்படுத்தவில்லை இசுரேல். கடந்த காலங்களிலும் ஐ.நா. பாதுகாப்பு அவைத் தீர்மானங்களை அது மதித்ததில்லை. அடுத்தக் கட்டமாக இசுரேல் அரசுக்கு எதிராக பொருளியல் தடைகளை விதிப்பதை நோக்கி பாதுகாப்பு அவை செல்லாமல் இருப்பதை அமெரிக்கா பார்த்துக் கொள்ளும் என்ற துணிச்சல்தான் இதற்கு காரணம்.

47 நாட்களுக்குப் பின் இடைநிறுத்தம்:

”இப்போது காசாவில் எந்த நேரத்திலும் தொற்றுநோய்ப் பரவும் அபாயம் இருக்கிறது” என்று ஐ.நா. நேற்று எச்சரித்திருந்த நிலையில் கத்தாரின் பேச்சுவார்த்தை முயற்சியில் ஒரு முன்னேற்றம் ஏற்பட்டு நான்கு நாட்கள் போர் நிறுத்தத்திற்கான உடன்பாட்டை இசுரேலும் அமாசும் எட்டியுள்ளது.  குழந்தைகள், பெண்கள் அடங்கிய பணையக் கைதிகள் 50 பேரை விடுவிப்பதாக அமாசும் தளைப்பட்டோர்  150 பேரை விடுவிப்பதாக இசுரேலும் உடன்பாடு எட்டியுள்ளன. காசாவின் தெற்குப் பகுதியில் கண்காணிப்பை முற்றிலும் நிறுத்திவைக்க வேண்டும், வடக்கில் 6 மணி நேரத்திற்கு கண்காணிப்பை நிறுத்திவைக்க வேண்டும், இக்காலகட்டத்தில் யாரையும் கைது செய்யவோ தாக்கவோ கூடாது, சுதந்திரமான நடமாட்டத்தை அனுமதிக்க வேண்டும். துயர்தணிப்புப் பொருட்கள் உள்ளே அனுமதிக்கப்பட வேண்டும். 

இந்த உடன்படிக்கைக்கு எகிப்தும் அமெரிக்காவும் துணைசெய்துள்ளன.

அக்டோபர் 7 அமாசு நடத்திய தாக்குதலுக்குப் பின் பாலத்தீன விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவு பெருகியுள்ளது. இசுரேலின் பயங்கரவாத முகம் உலகுக்கு தெரியவந்துள்ளது.  பயங்கரவாத எதிர்ப்பின் பெயரால் விடுதலைப் போராட்டங்களை நசுக்கலாம் என்ற நிலை கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா தலைமையிலான முகாம் – சீனா தலைமையிலான முகாம் என கொஞ்சம்கொஞ்சமாக உலகம் இருமுனையாகப் பிரிந்து காட்சியளிக்கத் தொடங்கியுள்ளது. இது விடுதலைப் போராட்டங்களுக்கு சாதகமான பன்னாட்டு சூழலை உருவாக்கி வருகிறது. போராடும் ஆற்றல்கள் கிடைக்கும் இந்த அரசியல் வெளியை ஆகச் சிறந்த வகையில் பயன்படுத்தி, குறைந்த இழப்புகளுடன் முன்னேறி, தம்மை தற்காத்துக் கொண்டு, விடுதலைப் போராட்டத்தை முன்னகர்த்த வேண்டும்.

முள்ளிவாய்க்கால் பேரழிவை சந்தித்த தமிழர்கள் நெருப்பாற்றைக் கடந்து கொண்டிருக்கும் பாலத்தீனத்தின் பக்கம் நிற்க வேண்டும்.

பாலத்தீனத்தின் போராட்டம் ஒரு பண்பாட்டு இனத்தின் இருப்புக்கானப் போராட்டம். பாலத்தீனம் மானுடத்தின் பிரிக்க முடியாத பகுதி.

ஈழ விடுதலையைப் போலவே பாலத்தீனத்தின் விடுதலையும் மானுட விடுதலையின் பிரிக்கவொண்ணாப் பகுதியாகும்.

பாலத்தீன விடுதலைப் போராட்டம் வெல்லட்டும்!

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW