மோடி அரசின் பெண்கள் இடஒதுக்கீடு சட்டவரைவு ஒரு தேர்தல்கால ஜும்லா – பரிமளா

22 Sep 2023

நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க உதவும் பெண்கள் இடஒதுக்கீட்டு சட்டவரைவு 22-09-2023 அன்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. மக்கள் தொகையில் பாதியாக இருக்கும் பெண்களுக்கு இந்திய நாடாளுமன்றத்தில் இருக்கும் பிரதிநிதித்துவம் ஏறக்குறைய 15% மட்டுமே. சர்வதேச என்பது சராசரி 24% உள்ளது.

பெண்கள் இடஒதுக்கீட்டு சட்டம் சொல்வது என்ன?

பெண்கள் இடஒதுக்கீட்டுக்கான அரசியல் அமைப்பு திருத்த (128) சட்டவரைவு 2023, மக்கள் அவை, மாநிலங்களின் சட்டமன்றங்கள் மற்றும் டெல்லி சட்டப்பேரவை ஆகியவற்றில் மூன்றில் ஒரு பங்கு இடங்களை பெண்களுக்கு ஒதுக்கீடு செய்கிறது. அது சட்டமான பிறகு 15 ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும்.

மேலும் இந்த சட்டம் இயற்றப்பட்டபிறகு நடைபெறும் முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுவரையறைக்கு பிறகே நடைமுறைக்கு வரும் என்கிறது. இது மாநிலங்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை பாதிக்கின்ற அரசியலமைப்பு சட்டதிருத்தம் என்பதால் 50 சதவீத மாநில சட்டமன்றங்கள் அனுமதி தந்த பிறகே சட்டமாகும்.

பெண்கள் இடஒதுக்கீடு சட்டம் இதுவரை நடந்தது என்ன?

1992 ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட 73 வது அரசியலமைப்பு சட்ட திருத்தம் (243D பிரிவு) மூலம் முதன் முறையாக மூன்றடுக்கு பஞ்சாயத்து முறையும் அதற்கான தேர்தல் முறையும் கொண்டு வரப்பட்டது. அதே சட்டத்திருத்தம் உள்ளாட்சி அமைப்பில் மூன்றில் ஒரு பங்கு இடங்களை பெண்களுக்கு (பட்டியல், பழங்குடி பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு உள்ளிட்ட) ஒதுக்கியது. 74 வது அரசியலமைப்பு சட்டத்திருத்தம் (243T பிரிவு) நகராட்சி அமைப்புகளில் பெண்களுக்கு இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தியது.

2009 ஆம் ஆண்டு உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கான 50% இடஒதுக்கீட்டுக்கான 110 வது அரசியலமைப்பு சட்டத்திருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேறவில்லை. ஆனால், முதல் மாநிலமாக நிதிஷ்குமார் தலைமையிலான பீகார் மாநில அரசு 2006 ஆம் ஆண்டு உள்ளாட்சி அமைப்புகளில் 50% இடங்களை பெண்களுக்காக ஒதுக்கியது. அதன் பிறகு, சிக்கிம் 40% இடங்களை 2008 ஆம் ஆண்டு ஒதுக்கியது.

தற்போதைய நிலையில் ஏறக்குறைய 20 மாநிலங்களில் உள்ளாட்சி அமைப்புகளில் 50% இடங்கள் பெண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.

இதன் தொடர்ச்சியாக 1996 ஆம் ஆண்டு 81 வது அரசியலமைப்பு சட்டத்திருத்தமாக கொண்டு வரப்பட்ட நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களில் மூன்றில் ஒரு பங்கு பெண்களுக்கான இடஒதுக்கீடு மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. அது நாடாளுமன்றக் கூட்டுக்குழுவிற்கு அனுப்பப்பட்டு ஒன்றிய ஆட்சிப்பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டு வலுப்படுத்தப்பட்டது. ஆனால், அது சட்டமாக மாறுவதற்குள் 11 வது மக்களவை கலைக்கப்பட்டது.

மீண்டும் 1998 ஆம் ஆண்டு மக்களவை, மாநில சட்டமன்றங்கள், டெல்லி சட்டப்பேரவை போன்றவற்றுக்கான 15 ஆண்டுகளுக்கான மூன்றில் ஒரு பங்கு பெண்களுக்கான இடஒதுக்கீடு சட்டவரைவு (84வது திருத்தம்) கொண்டு வரப்பட்டு 12 வது மக்களவை கலைக்கப்பட்ட போது காலாவதியானது. பிறகு 1999 ஆம் ஆண்டு சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டு அரசியல் கட்சிகளிடையே ஒத்த கருத்து இல்லாத காரணத்தால் நிறைவேற்றப்படவில்லை. கடைசியாக 2010 ஆண்டு மன்மோகன் சிங் ஆட்சிக்காலத்தில் தாக்கல் செய்யப்பட்டு மீண்டும் நிறைவேற்றப்படாமல் போனது. அதற்குப்பிறகு, தற்போது 2023 ஆம் ஆண்டில் பா.ச.க தலைமையிலான ஒன்றிய அரசு தன்னுடைய இரண்டாவது ஆட்சிக்காலம் முடியும் தருவாயில் சட்டத்திருத்ததை நிறைவேற்றி இருக்கிறது.

பெண்கள் இடஒதுகீடு சட்டம் நடைமுறைக்கு வருவது எப்போது?

”தேர்தலுக்கு பிறகு மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுவரையறை நடைபெறும். அதன் பிறகு, நாடாளுமன்றத்திலே மூன்றில் ஒரு பகுதியினர் பெண்களாக இருப்பார்கள்” என்றார் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்சா. அதாவது, பெண்கள் இடஒதுக்கீடு சட்டமாக இயற்றப்பட்டாலும்  எப்போது நடைமுறைக்கு வரும் என்பது தெரியாது என்பது தான் இதன் பொருள்.

எதிர்கட்சியினர் பெண்கள் இடஒதுக்கீடு சட்டம் எந்த நிபந்தனையும் இன்றி உடனடியாக நடைமுறைக்கு வரவேண்டும் என்று எதிர்ப்பு தெரிவித்தார்கள். மேலும் ஒபிசி மற்றும் சிறுபான்மையின பெண்களுக்கான இடஒதுக்கீடு உறுதி செய்ய வேண்டும் என்றும் குரல் எழுப்பினார்கள். இந்த சட்டம் மாநிலங்கள் அவை மற்றும் மாநில மேலவைகளுக்கும் விரிவாக்கப்பட வேண்டும் என்பது கோரிக்கையாக வைக்கப்பட்டது. மோடியின் அரசவையில் இவை அனைத்தும் காற்றில் கரைந்த வெற்று குரல்களாக போனது தான் மிச்சம்! 2011 ஆம் ஆண்டிற்கு பிறகு எடுக்க வேண்டிய 2021 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு கொரானா காரணமாக தள்ளி வைக்கப்பட்டது. திருத்தப்பட்ட அரசியலமைப்பு பிரிவு 82 படி 2026க்கு பிறகு நடைபெறும் மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்கு பிறகே தொகுதி மறுவரையறை செய்யமுடியும். எனவே, 2021 ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு 2026 ஆம் ஆண்டுக்கு பிறகு தள்ளிப்போகலாம். எனவே, பெண்கள் இடஒதுக்கீடு என்பது 2029 ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் வரை தள்ளிப்போகலாம்.

தொகுதி மறுவரையறைக்கு தென்மாநிலங்கள் எதிர்ப்பு ஏன்?

மறுவரையறை என்பது ஒவ்வொரு மக்கள்தொகை கணக்கெடுப்பு முடிந்ததும், மறுவரையறை ஆணையம் அமைக்கப்பட்டு, மாநிலங்களுக்கு மக்களவைக்கான இடங்கள் ஒதுக்கீடு மற்றும் ஒவ்வொரு மாநிலத்தையும் மக்கள் தொகைக்கு ஏற்ற வகையில் மக்களவை தொகுதிகளாகப் பிரிப்பது/மாற்றி அமைப்பது ஆகும். இது குறித்து அரசியலமைப்பு பிரிவு 82 பேசுகிறது.

கடைசியாக 1971 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணகெடுப்பின் அடிப்படையில் மறுவரையறை நடந்தது. பிறகு 1976 ஆம் ஆண்டு 42 வது அரசியலமைப்பு சட்டத்திருத்தம் மூலம் அடுத்த 25 ஆண்டுகளுக்கு மறுவரையறை ஒத்தி வைக்கப்பட்டது. அதற்கு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி கூறிய காரணம் “ மக்கள் தொகைக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை சிறப்பாக நடைமுறைப்படுத்தி மக்கள் தொகையை கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ள மாநிலங்களை தண்டிக்க விரும்பவில்லை ” என்பதாகும்.  மீண்டும் 2002 ஆண்டு வாஜ்பாய் அரசு அடுத்த 25 ஆண்டுகளுக்கு மறுவரையறையை ஒத்தி வைத்துள்ளது. அடுத்த மறுவரையறை என்பது 2026 ஆம் ஆண்டுக்கு பிறகு நடைபெறும் மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்கு பிறகு நடைபெறலாம்.

ஏற்கனவே ஒன்றிய அரசின் 15 வது நிதி ஆணையம் மாநிலங்களுக்கான பல்வேறு நிதி மற்றும் வரி வருமான பகிர்வை 2011 ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் மாற்றி அமைத்ததால் தென் மாநிலங்கள் மிகுந்த பாதிப்பை சந்திக்கின்றன. இதே நிலை மக்கள் தொகை அடிப்படையிலான மறுவரையறை இந்திய நாடாளுமன்றத்தில் தங்களுடைய அரசியல் பிரதிநிதித்துவத்தை குறைத்துவிடும் ஆபத்து உள்ளது என்பதால் கடுமையாக எதிர்க்கின்றன.

பிறகு ஏன் மோடி பெண்கள் இடஒதுக்கீட்டு சட்டத்தை கொண்டு வந்தார்?

கடந்த 9 ஆண்டு காலமாக பெரும்பான்மை பலத்தோடு ஆட்சிக்கட்டிலில் இருந்த மோடி ஏன் ஆட்சிக்காலத்தின் கடைசியில் பெண்கள் இடஒதுக்கீடு சட்டத்தை கொண்டு வந்தார்? 2024 தேர்தல் காலத்தில் தன்னை பெண்கள் உரிமைக்காக போராடும் ஒரு போராளி என்ற பிம்பமாக கட்டமைத்து வாக்கு பெறத்தான்!

மோடி உண்மையிலேயே பெண்கள் உரிமைக்காக நிற்பவர் என்றால்,

உயர்சாதியில் உள்ள ஏழைகளுக்காக இடஒதுக்கீட்டை எந்த நிபந்தனையும் இன்றி உடனடியாக நிறைவேற்றிய மோடி

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் உரிமையை பறிக்கும் 370 சட்டத்தை எந்த நிபந்தனையும் இன்றி உடனடியாக ரத்து செய்த மோடி

ஆயிரக்கணக்கான விவசாயிகளின் போராட்டத்தை மீறி மூன்று விவசாய சட்டங்களை எந்த நிபந்தனையும் இன்றி கொண்டு வந்த மோடி

முஸ்லிம்களின் குடியுரிமையை பறிக்கும் குடியுரிமை திருத்தத் சட்டத்தை எந்த நிபந்தனையும் இன்றி உடனடியாகக் கொண்டு வந்த மோடி

ஏன் பெண்கள் இடஒதுக்கீடு சட்டத்திற்கு மட்டும் நிபந்தனை விதிக்கிறார்? ஏனெனில் பெண்கள் ஆண்களுக்கு நிகராக அரசியல் பிரதிநிதித்துவம் பெற்று இந்த சமூகம் பாலின சமத்துவத்தை நோக்கி நகர வேண்டும் என்ற நோக்கத்தினால் அல்ல, மாறாக வரும் தேர்தலில் பெண்களின் வாக்கைப் பெற்று மீண்டும் அதிகாரத்தை ருசிக்க வேண்டும் என்பது தான்.

2010 ஆம் ஆண்டு காங்கிரஸ் அரசு கொண்டு வந்த பெண்கள் இடஒதுக்கீட்டு சட்டவரைவுக்கும் மோடி அரசு கொண்டு வந்த சட்டவரைவுக்கும் உள்ள ஒரே முக்கிய வேறுபாடு பெண்கள் இடஒதுக்கீட்டு சட்டம் இயற்றிய பிறகு நடைபெறும் மக்கள்தொகை கணக்கெடுப்பும் அதன் பின்னரான மறுவரையறைக்கு பிறகு தான் நடைமுறைக்கு வரும் என்ற அம்சம் மட்டும் தான்.

ஒரு பக்கம் மறுவரையறை என்பது வளர்ச்சி அடைந்த மாநிலங்களின் அரசியல் பிரதிநிதித்துவத்திற்கு ஆபத்தானது என்ற கருத்து நிலவும் சூழலில் பெண்கள் இடஒதுக்கீட்டு சட்டத்தை மறுவரையறையோடு இணைத்த மோடி அரசின் செயலானது சூது மிகுந்தது. இது மாநில அரசுக்கும் பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவம் பேசுவோருக்கும் முரண்பாட்டை ஏற்படுத்துவதாகும். மாநில உரிமைக்கும் பெண்ணுரிமைக்கும் மோதலை உருவாக்க முனைவதாகும்.

ஒரு பக்கம் பெண்கள் இடஒதுக்கீட்டை கொண்டு வர கடவுளே என்னை அனுப்பி வைத்திருக்கிறார் என்ற தன்னுடைய வழக்கமான ஜும்லா வை காட்டிவிட்டு மறுவரையறை என்ற நிபந்தனை மூலம் கோடிக்கணக்கான பெண்களின் அரசியல் உரிமைக்கு நம்பிக்கை மோசடி செய்து இருக்கிறார் மோடி.

பெண்களுக்கான அரசியல் இடஒதுக்கீடு என்பது நூற்றாண்டு கால பெண்களின், சனநாயக சக்திகளின் போராட்டம். நிபந்தனைகளுடன் கூடிய பெண்கள் இடஒதுக்கீடு சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது கூடஅந்த போராட்டத்திற்கான ஒரு வெற்றியே.

பெண்கள் இடஒதுக்கீடு சட்டத்தில் மோடி அரசு பெண்களுக்கு செய்த நம்பிக்கை மோசடியை அம்பலப்படுத்துவோம். எந்த நிபந்தனையும் இன்றி பெண்கள் இடஒதுக்கீடு சட்டம் உடனடியாக நடைமுறைக்கு வர ஓங்கி குரல் எழுப்புவோம்.

https://indianexpress.com/article/political-pulse/women-reservation-panchayat-municipality-level-challenges-on-ground-8946576/

https://www.ndtv.com/india-news/exclusive-details-of-what-womens-reservation-bill-says-4403339

https://www.livelaw.in/top-stories/womens-reservation-bill-live-updates-from-rajya-sabha-238294?infinitescroll=1

https://www.thehindubusinessline.com/blexplainer/bl-explainer-all-you-want-to-know-about-womens-reservation-bill-2023/article67324017.ece

https://indianexpress.com/article/political-pulse/delimitation-and-the-changing-india-political-map-8950367/

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW