கர்நாடக தேர்தலும் சிவில் சமூக ஆற்றல்களின் பாசிச எதிர்ப்பு செயலுத்தியும் – செந்தில்

07 Jul 2023

நடந்து முடிந்த கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பாசக தோற்கடிக்கப்பட்டதில் இருந்து நாடெங்கும் உள்ள பாசிச எதிர்ப்பு ஆற்றல்கள் ஊக்கம் பெற்று வருகின்றன. அந்த தேர்தலில் சிவில் சமூக ஆற்றல்கள் செயலூக்கத்துடன் தலையிட்டு பாசகவின் தோல்விக்கு பங்காற்றியுள்ளமை கர்நாடகாவுக்கு வெளியேயும் கவனத்தை ஈர்த்துள்ளது.

கர்நாடகா என்பது கன்னட மொழிவழி மாநிலமாக உருவாக்கப்பட்டாலும் அங்கிருக்கும் வட்டார வேறுபாடுகள் மிகவும் வெளிப்படையாகவே கண்ணுக்கு தெரிபவை. கர்நாடகாவின் வடக்குப் பகுதி மும்பை கர்நாடகா என்றும் மைசூர் பகுதி மைசூர் கர்நாடகா என்றும் கிழக்கு பகுதி ஐதராபாத் கர்நாடகா என்றும் பெங்களூர் பகுதி தென்கர்நாடகா என்றும் அழைக்கப்படுகிறது. மைசூர் கர்நாடகா மைசூர் சமஸ்தானத்தின் கீழ் இருந்த பகுதியாகும். ஐதராபாத் கர்நாடகா நிஜாம் மன்னனுக்கு கீழ் இருந்தது. தென் கர்நாடகா சென்னை மாகாணத்தின் பகுதியாக இருந்தது. மும்பை கர்நாடகா பண்பாட்டளவில் மராட்டியப் பகுதியோடு ஒத்திருக்கிறது. வரலாற்று வழிவந்த இந்த வட்டார வேறுபாடுகளும் சாதிக் குழுக்களும் சமய அமைப்புகளும் என கர்நாடகாவுக்கே உரிய சிக்கலான அரசியல் வரைபடம் காணக் கிடைக்கிறது.

கர்நாடகாவில் சமய மற்றும் பட்டியலின மக்கள்தொகையைப் பொருத்தவரை 12% இஸ்லாமியர்கள், 26% தலித் மக்கள், 7% பழங்குடி மக்கள், 2% கிறித்தவர்கள் என்ற சமூக வரைபடம் கிடைக்கிறது. இதில், சாதி, வட்டார வேறுபாடுகளைக் கையாள்வதில் தனக்கு மிஞ்சி யாரும் இல்லை என்ற தோற்றத்தைப் பாசக ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த தேர்தலில் சாதி, வட்டார வேறுபாடுகளைக் காங்கிரசு சிறப்பாக கையாண்டிருப்பதைக் காண முடிகிறது.

கர்நாடகத் தேர்தலில் பாசகவின் தோல்விக்கு பங்களித்ததில் ‘விழித்தெழு கர்நாடகா’ என்ற சிவில் சமூக முன்னெடுப்பு குறிப்பிடத்தக்கது ஆகும். இது தேர்தலுக்கு வெளியே நின்று செயல்படக் கூடிய அமைப்புகள், எழுத்தாளர்கள், செயற்பாட்டாளர்கள், தொண்டு நிறுவனங்கள், சமுதாய அமைப்புகள் ஆகியவற்றை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்ட சிவில் சமூக முன்னெடுப்பாகும். ’’விழித்தெழு கர்நாடகா’ இயக்கத்தை ஒருங்கிணைப்பதற்கான ஓர் மையம் உருவாவதற்கு கடந்த சில ஆண்டுகளில் அங்கு முன்னெடுக்கப்பட்ட பல்வேறு அரசியல் செயல்பாடுகள் துணைநின்றன. குறிப்பாக கர்நாடக ஜனசக்தி, மறைந்த சுதந்திரப் போராட்ட ஈகியும் காந்தியவாதியுமான துரைசாமி- உள்ளிட்ட பல்வேறு சனநாயக ஆற்றல்களின் கடந்தகால செயல்பாடுகள் இங்கு குறிப்பிடத்தக்கன.

2018 ஆம் ஆண்டு பத்திரிகையாளர் கெளரி லங்கேஷ் சங் பரிவார கும்பலால் சுட்டுக் கொல்லப்பட்டார். அதற்கு முன்பு கர்நாடகாவில் வரலாற்றறிஞர் கல்புர்கி இதே பாணியில் சுட்டுக் கொல்லப்பட்டார். இப்படுகொலைகள் கர்நாடக நடுத்தர வர்க்கத்திடம் தாக்கத்தை ஏற்படுத்தியது; பாசகவுக்கு எதிராக செயல்படுவதற்கான உணர்வு சார்ந்த அடித்தளத்தை அப்பிரிவினரிடம் ஏற்படுத்தியது. ‘நானும் கெளரி’’ என்ற முழக்கத்துடன் எழுந்த வெகுசன இயக்கத்தில் நடுத்தர வர்க்கத்தினர் ஈர்க்கப்பட்டு புதிய ஆற்றல்கள் களத்திற்கு வந்தனர்.

2015 ஆம் ஆண்டில் நடந்த குஜராத் ஊனா எழுச்சியை வழிநடத்திய ஜிக்னேஷ் மேவானி கர்நாடகவில் ‘உடுப்பி செல்வோம்’ என்ற நடைபயணத்தை நடத்தினார். கர்நாடகவில் உள்ள தலித் அமைப்புகள் தேர்தல் களத்திற்கு வெளியே செயல்படக் கூடியவை. கர்நாடகாவில் ஜிக்னேஷ் மேவானி பங்குபெற்ற இயக்கம் அங்குள்ள தலித் அமைப்புகளிடையே பாசக எதிர்ப்பு அரசியல் வளர்வதற்கு உதவியது.

2019 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட கார்ப்பரேட் ஆதரவு வேளாண் சட்டங்களுக்கு எதிராக உழவர்கள் முன்னெடுத்தப் போராட்டம் கர்நாடகாவில் உழவர் அமைப்புகளிடையே பாசக எதிர்ப்பு அரசியல் வளர்வதற்கு உதவியது. குறிப்பாக, உழவர் போராட்டத் தலைவர்களில் ஒருவரான ராகேசு திகாயத் கர்நாடகாவுக்கு அடிக்கடி வந்திருந்து உழவர் போராட்டத்திற்கான ஆதரவைத் திரட்டினார். உழவர் போராட்டத்துடன் தொடர்பு கொண்டிருந்த திரு யோகேந்திர யாதவும் கர்நாடகாவில் நடந்த பாசக எதிர்ப்பு இயக்கங்களில் பங்காற்றினார்.

கர்நாடகாவில் பாசக அரசு தொடர்ச்சியாக இஸ்லாமியர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை செய்து வந்தது. மங்களூர் பகுதியில் உள்ள பள்ளி வளாகங்களில் ஹிஜாப் அணிவதற்கு தடைவிதிக்கும் அரசாணை நாடு தழுவிய அளவில் விவாதத்தைக் கிளப்பியது. இதை முறியடிக்கும் விதமாக உடுப்பியில் முன்னெடுக்கப்பட்ட ”சமாதான சகவாழ்வு மாநாடு” மாபெரும் வெற்றி பெற்றது.

சமான மனஸ்கார வேதிகா, அரசமைப்பு சட்டத்தைப் பாதுகாப்பதற்கான கர்நாடகா ( சம்விதானா உள்விகாகி கர்நாடகா), நாட்டுக்காக நாம் ( தேசக்காகி நாவு) , சகமதா, மனித சகோரதத்துவ மேடை ( மானவ பந்துத்துவ வேதிகா), பவுத்துவா ( பன்மைத்துவம்) , மக்கள் இயக்கங்களின் கூட்டமைப்பு ( சனபரா சங்கடநேகலா ஒக்கடா), சகபல்வே ( சமாதான சகவாழ்வு) போன்றவை குறிப்பிடத்தக்க பாசிச எதிர்ப்பு இயக்கங்களாகும்.

மேற்சொன்னவற்றில், பாசிச எதிர்ப்பு ஆற்றல்களுக்கு பேரூக்கத்தையும் ஒருங்கிணைய வேண்டும் என்ற உணர்வையும் வழங்கிய நான்கு முக்கிய நிகழ்வுகள் பின்வருமாறு

 1. 2022 மே 14 ஆம் நாள் உடுப்பியில் வெறுப்பரசியலுக்கு எதிரான ஆற்றல்கள் அனைவரும் ’சமாதான சகவாழ்வு மாநாட்டில்’ ஒன்றுகூடி, கர்நாடகாவை வெறுப்பரசியலில் இருந்து விடுவிக்க சூளுரைத்தனர்.
 2. 2022 திசம்பர் 6 ஆம் நாள் தலித் சங்கர்ஷ் சமிதியின் (DSS) பல்வேறு போக்குகளைச் சேர்ந்தோர் பெங்களூரில் உள்ள தேசிய கல்லூரி மைதானத்தில் நடந்த ’தலித் பண்பாட்டு எழுச்சி’ ( Dalit Cultural Resistance) மாநாட்டில் ஓரணியில் திரண்டு, ”பாசிச ஆற்றல்களை வெற்றிக்கொள்வதே இன்றைய முதன்மை கடமை” என்று ஒரே குரலில் ஓங்கி ஒலித்தனர்.
 3. பிப்ரவரி 16 ஆம் நாள் பல்வேறு உழவர் அமைப்புகள், விவசாயக் கூலி தொழிலாளர் அமைப்புகள் ஒன்றுதிரண்டு வெகுமக்கள் கோரிக்கைக்கான ஒன்றுகூடலை நடத்தினர். அம்மாநாட்டில் மக்கள் விரோத பாசகவுக்கு வரும் தேர்தலில் தக்கப் பாடம் புகட்ட வேண்டும் என்று தீர்மானித்தனர்.
 4. ஏப்ரல் 25 ஆம் நாள் அன்று புகழ்பெற்ற எழுத்தாளர் தேவனூர் மகாதேவன் தலைமையில் விழித்தெழு கர்நாடகா சார்பாக நடைபெற்ற ஊடக சந்திப்பில், ”இந்த இரண்டு என்ஜின் சர்க்காரை குப்பையில் வீச வேண்டும்” என அவர் கொடுத்த எழுச்சியுரை குறிப்பிடத்தக்க கவனத்தையும் பரந்துபடட விவாதத்தையும் ஏற்படுத்தியது.
 5. மார்ச் 5 ஆம் நாள் பெங்களூரில் உள்ள ஜெய்பீம் பவனில் நடந்த பயிற்சிப் பட்டறையில் பல்வேறு அர்ப்பணிப்புள்ள அமைப்புகள் ஒன்றுதிரண்டு ‘விழித்தெழு கர்நாடகா’ என்ற பதாகையின் கீழ் பணியாற்றுவது என முடிவுசெய்தன. 20 மாவாட்டங்களில் அர்ப்பணிப்புள்ள 150 தன்னார்வலர்களை அடையாளங் காண வேண்டும் என முடிவுசெய்தனர்.

விழித்தெழு கர்நாடகா பரப்புரை இயக்கத்தின் முக்கியமான செயல்பாடுகள்.

 • ’விழித்தெழு கர்நாடகா’ என்ற இந்த முயற்சியை வரவேற்று தேவனூர் மகாதேவன், புருசோத்தம்மன் பிலிமேல், ரகமத் தரிகேரே, அல்லம்மா பிரபு பெட்டாடூர், டாக்டர் விஜயா, டி. சரசுவதி, தாரா ராவ், வாசவி உள்ளிட்ட புகழ்ப்பெற்ற தனியாட்கள் மார்ச் 9 ஆம் நாள் அன்று, இவ்வியக்கத்தில் பங்குபெற்று கர்நாடகவைக் காப்பாற்ற முன்வருமாறு கூட்டாக அறைகூவல் விடுத்தனர். கர்நாடகாவில் உள்ள சமூக செயற்பாட்டாளர்கள் இந்த அறைகூவலுக்கு பேராதரவு நல்கினர்.
 • ஆயிரக்கணக்கான தனியாட்கள் இணையத்திலும் தொலைபேசி வாயிலாகவும் பதிவு செய்தனர், வெறும் 40 நாட்களில் கர்நாடகாவின் பல்வேறு மாவட்டங்களிலும் சுமர் 250 பயிற்சிப் பட்டறைகள் நடத்தப்பட்டன.
 • குறைந்தது 5000 தன்னார்வலர்கள் ’விழித்தெழு கர்நாடகா’ என்ற பதாகையின்கீழ் செயல்பட்டனர். இவையன்றி பல்வேறு சமூகப் பின்புலம் கொண்ட, அமைப்புகளைச் சேர்ந்த சுமார் 20,000 பேர் இந்த உயரிய நோக்கத்திற்கு பங்களித்தனர். மேலும் தெலங்கானா, ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா, மராட்டியம், ஒரிசா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து செயற்பாட்டாளர்கள் கர்நாடகா சென்று இப்பரப்புரையில் பங்களித்தனர்.
 • கடந்த கால சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள், தொகுதி பற்றிய அரசியல் வரலாற்றுப் புரிதல் ஆகியவற்றை உள்ளடக்கிய பருண்மையான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் சுமார் 103 தொகுதிகளில் பாசக வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று அடையாளங் காணப்பட்டது. தொடக்கத்தில் 55 தொகுதிகளில் மட்டும் கவனம் குவிப்பது என்று முடிவு செய்யப்பட்டிருந்தது. பின்னர், வேலை தொடங்கியவுடன் படிப்படியாக 103 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் தேர்தல் வேலைகளை விரிவாக்க முடிந்தது.
 • களப்பணி செயல்பாட்டுக்கு தேவையான உத்திகளைப் பயிற்றுவிப்பதற்கு விரிவான வழிகாட்டு ஆவணம் உருவாக்கப்பட்டு, பயிற்சிப் பட்டறைகள் நடத்தப்பட்டன. அதில், முக்கியத்துவம் வாய்ந்த வாக்குச்சாவடிகளை அடையாளம் காணுதல், அதிலுள்ள இலக்கு சமூகக் குழுக்களை அடையாளம் காணுதல், சமுதாயத் தலைவர்களுடன் தொடர்பில் இருத்தல், அவர்களுடைய கவலைகளையும் கண்ணோட்டங்களையும் புரிந்துகொள்வதற்கு அவர்களுடன் உரையாடுதல் ஆகியவற்றிற்கு பயிற்சி அளிக்கப்பட்டது. ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் தொடர்ந்து வரும் வாக்களிக்கும் பாணியைப் புரிந்து கொள்வதற்கும் பயிற்சி வழங்கப்பட்டது.
 • விழித்தெழு கர்நாடகாவின் நோக்கங்களை விளக்கும் துண்டறிக்கை அச்சடிக்கப்பட்டது. உழவர்கள், சிறுபான்மையினர், மாணவர்கள், தலித் மக்கள், நடுத்தர வர்க்கத்தினர் என ஒவ்வொரு சாராரையும் இலக்கு வைத்து துண்டறிக்கைகள் கொண்டுவரப்பட்டன. ”கலைந்துபோன வாக்குறுதிகள்” ( Disillusioned Promised ) என்ற தலைப்பில் பாசகவின் நிர்வாகத் தோல்வியை அம்பலப்படுத்தி ஒரு வெளீயீடு கொண்டுவரப்பட்டது. இப்படியாக, பத்து இலட்சம் அறிக்கைகள் கொண்டு வரப்பட்டு, பரப்புரைக்கான நல்ல வழிகாட்டியாகவும் தொகுப்பாகவும் அமைந்தன. இவை கன்னடத்திலும் ஆங்கிலத்திலும் கொண்டுவரப்பட்டன.
 • சமூக ஊடக அணி பரப்புரையில் வலுவான தாக்கத்தை செலுத்தியது. மின் ஒட்டிகள் கன்னடம், ஆங்கிலம், உருது, துலு, கொங்கனி ஆகிய ஐந்து மொழிகளில் கொண்டுவரப்பட்டன. 80 காணொளிகள், 8 பாடல்கள் என உருவாக்கப்பட்டு அவை மக்களின் மனங்களைத் தொட்டன. உள்ளடக்கம் கொடுப்போர், வடிவமைப்பாளர், காணொளி எடிட்டர்கள், கேரமாமேன்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் இப்பணியில் அர்ப்பணிப்புடன் தங்களை ஈடுபடுத்தி இரவுபகல் பாராமல் உழைத்தனர். ’நாங்கள் எவ்வகையில் பங்களிக்க முடியும்’ என்று எண்ணற்றோர் அணுகியுள்ளனர். அவர்கள் எல்லோரையும் ஆக்கப்பூர்வமான செயல்பாட்டில் ஈடுபடுத்துவதில்தான் இடர்பாடு இருந்ததே ஒழிய ஆள் பற்றாக்குறை என்பது இல்லை.
 • பாசகவின் செயலுத்திகளை முறியடிக்கும் வகையில் கதையாடல்களை உருவாக்கும் அணி செயல்பட்டது. 40% அரசாங்கம், விலைவாசி உயர்வைக் காட்டும் எரிவாயு உருளை உருவகம் ஆகியவை மிகவும் பிரபலமாக கொண்டு செல்லப்பட்டது. உரி கவுடா – நஞ்ச கவுடா கதையாடலை முறியடிப்பது, நந்தினி பால் நிறுவனத்தின் இடத்தில் குஜராத்தின் அமுல் பால் நிறுவனத்தைக் கொண்டு வரும் முயற்சியை விவாதங்களில் முன்னுக்கு கொண்டு வருவது, கர்நாடகாவை ஒன்றிய அரசு வஞ்சித்ததைப் பேசு பொருளாக்குவது ஆகியவற்றை இவ்வணி சிறப்பாக செய்துகாட்டியது. வெறுப்பு அரசியலுக்குப் பின்னால் ஒளிந்துகிடக்கும் திட்டத்தை மக்களுக்கு புரியும் வகையில் அவர்கள் அம்பலப்படுத்தினார்கள். ஈதினா, PEEPUL TV, வர்தா பாரதி, நானு கெளரி, கெளரி செய்திகள் உள்ளிட்ட பல்வேறு ஊடகங்கள் இதில் மிகச் சிறப்பாக பங்களித்தன.
 • ஈதினாவின் கருத்துக்கணிப்பு பாசக வெற்றிப் பெறும் என்று மையநீரோட்ட ஊடங்கள் காட்டி வந்த தோற்றத்தை நொறுக்கித் தள்ளியது. சுமார் 50,000 பேரிடம் கருத்துக்கணிப்பு நடத்தி மக்களின் நாடித் துடிப்பை வெளிக் கொண்டுவந்தது கருத்துக்கணிப்பு. மக்கள் தமக்கு முக்கியமானப் பிரச்சனைகள் என்று கருதுவனவற்றை அறிந்துகொள்ள முடிந்தது. இந்த கருத்துக்கணிப்பு பாசக தோல்வியடைவதற்கான வாய்ப்புகளை மட்டும் கண்டறிந்து சொல்லவில்லை, அது எத்தனை வாக்கு வேறுபாட்டில் தோல்வி காணும் என்பதைக்கூட மிக துல்லியமாக கணித்தது. Cicero என்ற புகழ்ப்பெற்ற நிறுவனத்தின் உதவியுடன் பெரும்வீச்சிலான கருத்துக்கணிப்பை ஈதினா நடத்திக் காட்டியது. ஈதினாவின் இந்த கருத்துக்கணிப்புக்கு புகழ்ப்பெற்ற ஆய்வாளர் யோகேந்திர யாதவ் பெரிதும் உதவினார்..
 • இஸ்லாமியர்கள், கிறித்தவர்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆகியோரை ஒன்றிணைத்த வலுவான அணிசேர்க்கையாக ’விழித்தெழு கர்நாடகா’ உருப்பெற்றது. இவர்களின் ஆற்றல் பெருமளவில் வெளிப்பட விளிம்புநிலை மக்களின் முழு ஆதரவுடன் இப்பரப்புரை மேற்கொள்ளப்பட்டது.
 • மக்களின் மெய்யானப் பிரச்சனைகளை முன்னுக்கு கொண்டு வருவதற்கு கடும் உழைப்பு செலுத்தப்பட்டது. நிலம் மற்றும் குடியிருப்பு உரிமைக்கான போராட்டக் குழு 9 மாவட்டங்களில் தொடர் பரப்புரையையும் போராட்டங்களையும் நடத்தி, ‘’வாக்குகளுக்காக எங்கள் நிலங்களை விட்டுக் கொடுக்க மாட்டோம்” என்ற முழக்கத்தை எழுப்பினர். ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்திற்கு (MNRGEA) ஆப்பு வைத்த மோடி அரசை அம்பலத்தி விவசாயக் கூலித் தொழிலாளர்களுக்கான அமைப்புகள் வீடுதோறும் பரப்புரை மேற்கொண்ட. ’விழித்தெழு கர்நாடகா’ இயக்கம் சம்யுக்த கிசான் பஞ்சாயத்துடன் ஒத்துழைத்து உழவர்களின் குரலை முன்னுக்கு கொண்டு வந்தது. நிகழ்ச்சிகளுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களை அழைத்ததோடு உழவர்களுக்கு எதிரான பாசகவுக்கு தக்கப் பாடம் புகட்ட வேண்டும் என்ற முழக்கம் எழுப்பப்பட்டது. உள் இட ஒதுக்கீடு தொடர்பாக பாசக கொண்டுள்ள சூழ்ச்சியான நிலைப்பாடுகளை அம்பலப்படுத்தி விரிவான பரப்புரை செய்யப்பட்டது. தொழிலாளர் விரோத பாசகவைத் தோற்கடிக்குமாறு மே நாள் அன்று அறைகூவல் விடுக்கப்பட்டது.
 • காங்கிரசு மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதளத்தின் தேர்தல் அறிக்கை தயாரிப்பு கமிட்டியோடு ’விழித்தெழு கர்நாடகா’ விவாதங்களை நடத்தி, மக்களுடைய கோரிக்கைகளை உள்வாங்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
 • இவ்வண்ணமான, ஆயிரக்கணக்கான தன்னார்வலர்களுடன் கதையாடல் உருவாக்கும் அணி, ஊடக அணி, சமூக ஊடக அணி, பலவகைப்பட்ட அறிக்கைகள் மற்றும் ஒடுக்கப்பட்ட பின்புலம் கொண்ட தனியாட்கள், வேர்க்கால் மட்ட சமூகக் குழுக்களுடைய வலைப்பின்னல் ஆகியவற்றுடன் ‘விழித்தெழு கர்நாடகா’ ஒரு குறுகிய காலத்தில் எழுந்தது.
 • சமயச் சிறுபான்மையினர், உழவர்கள், தலித் மக்கள், இடதுசாரி பின்புலம் கொண்ட வேட்பாளர்களை அணுகி வாக்குகள் சிதறுவதைத் தவிர்க்கும் நோக்கில் போட்டியிடுவதில் விலகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. அத்தனகைய முயற்சியின் பயனாக, 49 பேர் போட்டியிடுவதில் இருந்து விலகிக் கொண்டனர்.
 • ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதியிலும் குறிப்பிட்ட சமூகக் குழுக்கள், வட்டாரங்கள் அடையாளம் காணப்பட்டு பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்டன. ஒவ்வொரு பகுதியிலும் உள்ள சமுதாயத் தலைவர்கள், வட்டாரத் தலைவர்களை அணுகி அவர்கள் முன் இருக்கும் அரசியல் கடமை விளக்கப்பட்டது. மூன்று பிரதான விசயங்கள் இதில் அழுத்தம் கொடுக்கப்பட்டது. 1. வாக்குப் பதிவு எண்ணிக்கையை அதிகரித்தல் 2. வாக்குகள் சிதறுவதை தவிர்த்தல் 3. பாசக வேட்பாளரை தோற்கடிக்கவல்ல வேட்பாளருக்கு வாக்களித்தல்.
 • சில இடங்களில் காங்கிரசா? மதச்சார்பற்ற ஜனதாதளமா? யார் வெற்றிப்பெறக் கூடும்? என்பதில் தெளிவின்மை இருந்தது. அந்தப் பகுதிகளில் கூடுதலான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு யார் வெற்றிப் பெற வாய்ப்பிருக்கிறது? என்று கண்டறியப்பட்டு அச்செய்தி மக்களுக்கு கொண்டு செல்லப்பட்டது. இம்முயற்சியில் மூன்று தொகுதிகளில் மட்டும் தப்புக் கணக்குப் போட்டுவிட்டதாக தேர்தலுக்குப் பின்பு ‘விழித்தெழு கர்நாடகா’ அணி மீளாய்வு செய்துள்ளது.
 • சுருங்கச் சொன்னால், மக்களுடைய பிரச்சனைகள் மீது மெய்யான அக்கறை கொண்ட அமைப்புகள், வேர்க்கால் மட்ட அமைப்புகள் மற்றும் கர்நாடக அடையாளத்தின் முக்கியத்துவத்திற்காகவும் சனநாயகத்திற்காகவும் குரல் கொடுக்கும் அறிவாளிப் பிரிவினர், எழுத்தாளர்கள் ஆகிய மூன்று தரப்பினரை ’விழித்தெழு கர்நாடகா’ அமைப்பு உள்ளடக்கியிருந்தது.
 • 103 தொகுதிகளைக் குறிவைத்து வேலை செய்வது, விரிந்த வலைப்பின்னலுடன் மேற்கொள்ளப்பட்ட, சமூக ஊடகப் பரப்புரை மற்றும் சமுதாயத் தலைவர்கள், கட்சிகள் ஆகியவற்றுடன் பேசி வாக்குச் சிதறலை கட்டுப்படுத்துவது ஆகிய மூன்று தளங்களில் வேலைகள் முன்னெடுக்கப்பட்டன.
 • 40% அரசாங்கம், விலைவாசி உயர்வு, கார்ப்பரேட் ஆதரவு பொருளியல் கொள்கைகள், வெறுப்பு அரசியலை தோலுரித்தல் ஆகிய நான்கு முனைகளில் பாசக அம்பலப்படுத்தப்பட்டது.
 • வாக்களிப்ப்பதைப் பொறுத்தவரை, வாக்கு எண்ணிக்கையை அதிகரித்தல், வாக்குகள் சிதறுவதை தடுத்தல், பாசகவை தோற்கடிக்கும் வேட்பாளருக்கு வாக்களித்தல் ஆகிய மூன்று உத்திகள் முன்வைக்கப்பட்டன.

விழித்தெழு கர்நாடகா ஏற்படுத்திய தாக்கம்:

 1. பாசக எதிர்ப்பு உணர்வு கொண்ட ஆயிரக்கணக்கான இளைஞர்களை ஈர்த்து அவர்களது ஆற்றலை ஒருங்கு குவித்த மேடையாக அமைந்தது.
 2. அர்ப்பணிப்புடன் கூடிய செயல்பாட்டினால் பாசகவை தேர்தல் களத்தில் வீழ்த்த முடியும் என்ற ஊக்கத்தை வழங்கியுள்ளது.
 3. எந்தவொரு அரசியல் கட்சியையும் பொருளுதவி உள்ளிட்ட எவ்வகையிலும் சாராமல் தற்சார்பான அரசியல் ஆற்றலை வெளிக்கொணவர்வதில் வெற்றி கண்டுள்ளது.
 4. சமகால தேர்தல் அரசியல், உத்திகள் பற்றிய புரிதலை மேம்படுத்துவதற்கு உதவியுள்ளது. வாக்குகள் சிதறுவதை தடுப்பதில் உள்ள முக்கியத்துவத்தை உணர்த்தியுள்ளது.
 5. சமூக ஊடகம் சார்ந்த பரப்புரை சோர்வுற்றவர்களுக்கு புதிய நம்பிக்கையை ஊட்டியுள்ளது. எதிர்ப்பு அரசியலின் அதிர்வலைகளை சமூகத்திற்குள் கேட்கச் செய்தது.
 6. பாசக கட்டமைக்க முயலும் கதையாடலுக்கு எதிராக உருவாக்கப்பட்ட எதிர் கதையாடல்கள் குறிப்பிடத்தக்கவை. ஊரி கவுடா – நஞ்ச கவுடா கட்டுக்கதை, நடிகர் சுதீப் பரப்புரைகள் ஆகியவை முறியடிக்கப்பட்டன. மோடி – அமித் ஷா கர்நாடகாவுக்கு பல முறை படையெடுத்து வந்து நடத்திய பரப்புரைகள் எதிர்கொள்ளப்பட்டன.
 7. மாட்டிறைச்சியின் பெயரால் இத்ரீசு பாசா என்ற 31 அகவை இளைஞர் கொல்லப்பட்டார். இசுலாமியருக்கு என்று இருந்த 4% இட ஒதுக்கீடு உரிமையைப் பறித்து லிங்காயத்துகளுக்கும் ஒக்கலிக்கர்களுக்கும் வழங்கியமை ஆகியவை சமூகப் பதற்றத்தை ஏற்படுத்துவதற்கு பாசக மிகப்பெரிய சதித்திட்டம் தீட்டியது. இசுலாமிய அமைப்புகளுடன் ’விழித்தெழு கர்நாடகா’ நெருக்கமாகப் பணியாற்றியதன் காரணமாக, இவற்றுக்கு எதிராக வினையாற்றும் போது சங் பரிவார ஆற்றல்களுக்கு வாய்ப்புக் கொடுக்காத வகையில் அரசியல் மற்றும் சட்டப்போராட்டத்தை மட்டும் இசுலாமிய அமைப்புகள் மேற்கொண்டன.
 8. ஈதினா நடத்திய துல்லியமான கருத்துக்கணிப்பு பாசகவைத் தோற்கடிக்க முடியும் என்ற நம்பிக்கையையும் செயலூக்கத்தையும் கொடுத்தது.
 9. நிலமற்ற உழவர்கள், விவசாயக் தொழிலாளர்கள், உள் இட ஒதுக்கீடு கோரும் சமூகங்கள், அரசு ஊழியர்கள் ஆகிய பல்வேறு விளிம்புநிலை மக்களின் கோரிக்கைகள் முன்னுக்கு கொண்டுவரப்பட்டன. இவ்வியக்கம் காங்கிரசு, மதச்சார்பற்ற ஜனதாதளம் போன்ற கட்சிகள் இக்கோரிக்கைகளை அங்கீகரிக்கவும் ஒரளவுக்கேனும் கருத்தில் எடுக்கவும் வழிவகுத்தது.
 10. தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து 49 தலித் மற்றும் சிறுபான்மை வேட்பாளர்களைப் பின்வாங்கச் செய்தது உள்ளிட்ட பல்வேறு முயற்சிகள் மூலம் வாக்குச் சிதறுண்டுப் போவதை தடுப்பதில் வெற்றி கண்டது.
 11. ’வாக்குகள் சிதறக்கூடாது’ என்ற விழிப்புணர்வு சமுதாய தலைவர்களிடம் ஏற்படுத்தப்பட்டது. காங்கிரசு அல்லாத கட்சிகளின் வாக்கு விழுக்காடு சுமார் 4% குறைந்ததற்கு இத்தகைய பரப்புரை உதவியிருக்க வேண்டும்.
 12. ’விழித்தெழு கர்நாடகா’ தெரிவு செய்து பணியாற்றிய 103 தொகுதிகளில் 73 இடங்களில் பாசக தோல்வி கண்டுள்ளது.

சில படிப்பினைகள்

 • ஏராளமான உழைப்பைச் செலுத்தி மிகக் குறைந்த விளைவைக் காணும் வழக்கமான நடைமுறைக்கு மாறாக தேர்தல் அரசியல் நுணுக்கங்களைப் புரிந்துகொள்வதற்கு இது உதவியுள்ளது.
 • தேர்தல் என்பது மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட, சிறுபான்மையான எதிர்மறை ஆற்றல்களுக்கும் ஒழுங்கமைக்கப்படாத பெரும்பான்மையான மதச்சார்பற்ற ஆற்றல்களுக்குமான போட்டிக்களமாக இருப்பதும் இதன் காரணமாகவே அந்த சிறுபான்மையினர் வெற்றிப் பெறுவதாகவும் அமைந்துவிடுகிறது. இதற்கு மாறாக, பெரும்பான்மையாகவும் சிதறிக் கிடக்கக்கூடிய மதச்சார்பற்ற ஆற்றல்களை ஒழுங்கமைக்கப்பட்ட ஒன்றாக மாற்றுவதில் ‘விழித்தெழு கர்நாடகா’ ஓரளவு வெற்றிக்கண்டுள்ளது.
 • சாதி, பணம், வெறுப்பு ஆகியவை மட்டும்தான் தேர்தல் அரசியலில் செல்வாக்கு செலுத்தமுடியும் என்ற வழமையான கருத்தை உடைக்கும் வகையில் சிவில் சமூக ஆற்றல்களின் வழியாக சமூகத்தில் அறம் சார்ந்த அரசியலை முன்னகர்த்துவதற்கான சாத்தியப்பாடுகளைக் கண்டடைந்துள்ளது.
 • எதிர்மறை ஆற்றல்களோடு சண்டையிடத் துணிந்த, ஒற்றுமையின் மீது அக்கறை கொண்ட, கர்நாடகாவெங்கும் விரவிக் கிடக்கும் நல்மனங் கொண்டோர் பலரைப் பார்த்தது மிகவும் ஊக்கமளிப்பதாக இருந்தது.
 • ஊழல் அரசியலுக்கு எதிராக தன்னார்வமாக உழைக்கக் கூடிய இளைஞர்கள் சமூகத்தில் இருப்பதை அடையாளங் காண முடிந்தது.
 • சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவது, துல்லியமான கருத்துக் கணிப்பை மேற்கொண்டு மக்களின் நாடித் துடிப்பைக் கண்டறிவது, கதையாடல்களை உருவாக்கி, வெற்றிகரமாகப் பரப்புவது ஆகியவற்றில் நல்லப் பயிற்சி கிடைத்துள்ளது.
 • செல்வாக்கு மிக்க தனியாட்கள், சமூக அமைப்புகள், வெகுமக்கள் ஊடகம் ஆகிய மூன்றுக்கும் இடையில் தொடர்பை ஏற்படுத்தி செயல்பட்டால் ஏற்படக்கூடிய மிகப்பெரிய விளைவுகளைப் பார்க்க முடிந்தது.
 • வெகுமக்களிடையே ஏற்படும் பிளவைக் கையாள்வதற்கும் கூட்டு முடிவெடுக்க ஊக்குவிப்பதற்கும் இந்த இயக்கம் நல்ல பயிற்சியை வழங்கியுள்ளது.
 • தேர்தல் அரசியலைப் புரிந்து கொள்வது, தொகுதிகள் பற்றிய நுணுக்கங்கள், வாக்குச்சாவடி அளவிலான ஆய்வை மேற்கொள்ளுதல், மக்களிடையே செல்வாக்கு செலுத்தக்கூடிய தனியாட்கள், பிரச்சனைகள், குழுக்களை அடையாளம் காணுதல் ஆகியவற்றிற்கு நல்ல பயிற்சியாக அமைந்தது.

இந்த தேர்தல் முடிவுகளை மதிப்பிடும் போது பாசகவின் வாக்கு விழுக்காடு குறையவில்லையாகையால் பெரிதாக எதுவும் நடந்துவிட வில்லை என்றொரு சாராரும் வகுப்புவாத ஆற்றல்கள் தோற்கடிக்கப்பட்டுவிட்டன என்றொரு சாராரும் கூறுகின்றனர். இவ்விரண்டுமே சரியான மதிப்பீடு இல்லை. பாசகவின் தோல்வி மிகைப்படுத்தத் தக்கதல்ல என்பது எப்படி உண்மையோ அதேபோல் அது குறைத்து மதிப்பிடத்தக்கதும் அல்ல.

எடியூரப்பா ஓரங்கட்டப்பட்டுள்ளார், ஈஸ்வரப்பா தோற்கடிக்கப்பட்டுள்ளார், தோல்விகளுக்கு காரணமாக பொம்மை பார்க்கப்படுகிறார். கர்நாடக மாநிலப் பாசகவில் தலைமை பற்றிய கேள்வி எழுந்துள்ளது. பாசகவின் உயர்மட்டத் தலைவர்களாக அறியப்படும் சி.டி.ரவி, சோமன்னா அசோக், விசுவேசுவர் காகெரி, முருகேசு நிரானி, ஆலப்பா, சங்கர் பாட்டில், பிசி நாகேஷ், எம்.டி.பி. நாகராஜ், உள்ளிட்டோர் தோற்கடிக்கப்பட்டுள்ளனர். பாசகவின் அனைத்து உத்திகளும் இத்தேர்தலில் தவிடுபொடி ஆக்கப்பட்டுள்ளது.

உடுப்பி உள்ளிட்ட கடலோரப் பகுதிகளிலும் பெங்களூருவிலும் பாசக வலுவாக இருக்கிறது என்பது உண்மையே. அதேநேரத்தில் 9 மாவட்டங்களில் பாசக ஓர் இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. 8 மாவட்டங்களில் ஒரேயொரு இடத்தை மட்டுமே பெற்றுள்ளது. 30 வேட்பாளர்கள் கட்டுப்பணத்தை இழந்துள்ளனர். இந்துத்துவ அரசியல் தோற்கடிக்கப் படவில்லை என்பது உண்மையே. அதுபோலவே, இந்துத்துவ அரசியல் அடிவாங்கியுள்ளது என்பதும் உண்மையே.

கர்நாடகத்தை ஒப்பிடும் போது ஆர்.எஸ்.எஸ் – பாசகவை கொள்கை வகையில் எதிர்க்கக் கூடிய பல்வேறு முகாம்கள் தமிழகத்தில் உள்ளன. பரவலான நகரப்புற வளர்ச்சி என்ற பின்புலத்தில் படித்த நடுத்தர வர்க்கம் இருக்கிறது. இவ்வாற்றல்கள் உண்மையில் வெவ்வேறு காரணங்களுக்காக சிதறிக் கிடக்கின்றன.

கர்நாடகாவில் பாசக x காங்கிரசு என்ற நிலை இருக்கின்றது. தமிழ்நாட்டில் பாசக மிக குறைந்த வாக்கு வங்கியைத் தான் கொண்டிருக்கிறது.

பாசிச அபாயம் என்பது எங்கோ தொலை தூரத்தில் இருக்கும் ஒன்றாக சிலர் பார்க்கின்றனர். பாசிச எதிர்ப்பு ஆற்றல்களை ஒருங்கிணைத்து ஆர்.எஸ்.எஸ். – பாசகவுக்கு மரண அடி கொடுப்பதற்கான வாய்ப்புகள் தமிழ்நாட்டில் உள்ளன. அத்தகைய ஒரு முயற்சிக்கு ‘விழித்தெழு கர்நாடகா’ ஒரு நல்ல எடுத்துக்காட்டாக அமையக்கூடும்.

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW