‘மதங்கள் எழுப்பும் மதில்களைத் தகர்த்து, சாதித்திமிர் ஆணவ வெறியை எதிர்த்து காதல் வெல்க’ – கவிதை தொகுப்பு

14 Feb 2019
விழிகளின் விதைப்பு

விளைத்திடும்  இணைப்பு

இருவிழி  கலப்பில்

தகித்திடும் தவிப்பு

ஒருமன உணர்வை

உணர்த்திடும் குவிப்பு

இருமனம்  ஒருமனம்

ஆக்கிடும்  குறிப்பு!

 

இதயப் பகிர்வில்

இனித்திடும் இனிப்பு

பகிர்ந்திடும் அன்பினில்

அரும்பிடும்  பிணைப்பு

புலர்ந்திடும் வாழ்வில்

மலர்ந்திடும் அணைப்பு

உலகப் பந்தில்

உயிர்த்தெழும் துடிப்பு !!

 

பொருள் தரும் வழிவகை

அறியாது இருப்பினும்

புலரும் பொழுது

மலராது போயினும்

உற்றார் பெற்றோர்

பொதுவெளி அரங்கில்

உதைத்தும்  வதைத்தும்

சிதைத்தும் புதைத்தும்

புலப்படா உணர்வில்

பகையாய் வரினும்

மதங்கள் எழுப்பும்

மதில்களைத்  தகர்த்து

சாதித்திமிர் ஆணவ

வெறியை எதிர்த்து

பலப்படும் ஒருகணம்

புலப்படும் புதுயுகம்

புதுவழி நாடிடும்

இளையரின் புகலிடம்

புலப்படும் நாளதில்

புரிபடும் வழித்தடம் !!!

 

காதல் வெல்க ! காதலர் தினம் வெல்க !!

 

–   கோ . சீனிவாசன் , சேலம்

================================================================

” காவி” யக் காதல்!

 

அலைபேசியைப் பிடுங்கித்

தூர வீசுங்கள்!

காதலர் அழைப்புகளை

அறுத்தெறிய-

 

பேருந்து நிறுத்தத்தில்

நிழற்குடைகளைத்

தட்டி எறியுங்கள்!

காதலர்கள் சைகைமொழி

பரிமாற இடம் தராதீர்!

இருபாலர் இணைந்து கற்கும் கல்லூரிகளை

இடித்துத் தள்ளுங்கள்!

ஏராளமாய்க் காதல்

ஏற்படாமல் தடுக்க-

 

இருக்கிற கொஞ்சநஞ்ச பூங்காக்களையும்

பொசுக்கிவிடுங்கள்!

காதலர்கள் நெருங்கி

உலவுமிடம் அதுதான்!

 

தென்றலுக்குத்

தடை விதியுங்கள்!

பூந்தளிரும்  துளிர்க்காமல்

காதல்

புழுங்கிச்  சாகட்டும்!

 

நிலவை வானில்

வர விடாதீர்!

காதல் நினைவை அழிக்க

அதுதான் வழி!

 

கடற்கரைக்குச் சீல்

வையுங்கள்!

காளையடக்கும் போராட்டத்திற்காக மட்டுமல்ல-

காதலர்கள் கால்தடம்

படாமல் இருக்கவும்தான்!

 

———– என்ன செய்யலாம்?

 

சாதி பார்த்து

சாதகம் பார்த்து

வீதி பார்த்து

விதி பார்த்து

குலம் பார்த்து

கூட்டம் பார்த்து

ஐயரை அழைத்து

சுபமுகூர்த்தத்தில்

விவாகமே செய்யலாம்!

இந்துப் பண்பாடு- இல்லையில்லை இந்தியப் பண்பாடே இதுதான்!

 

இனி

காதலர் தினம் தேவையில்லை! மகாத்மா நாதுராம் கோட்சே தலைமையில்

காவிகள் தினம் கொண்டாடுவோம்!

 

ஜெய ஜெய ஜெயஹே!!!

 

– சிற்பிமகன்

உலகமய உபதேசம்!

▪▪▪▪▪▪▪▪▪▪

காதலினால் கலவி…..

கலவியினால் குழவி…….

 

போதும் நிறுத்து!

 

தனித்தனியே சிந்திக்கும்

மானுட உயிர்கள்

இனி

பூமிக்குப் பொருந்தாது!

 

நாங்கள் விரும்பும் வண்ணத்தில் இல்லையென்றால்

ஆயிரம் பூக்கள் மலர்வதை

அனுமதிக்க முடியாது!

 

சொன்னதைச் செய்யும்

ரோபோக்களை

எங்கள் எந்திரக் கருவறையிலிருந்து

நாங்களே பிரசவிப்போம்!

 

ஆதலினால் மானிடரே

காதல் செய்யாதீர்!

-சிற்பிமகன்

 

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW