சனாதனத்திற்கு எதிரான வள்ளலார் ஆளுநர் ரவியின் பொய்யும் புனைசுருட்டும் – அருண் நெடுஞ்செழியன்

03 Jul 2023

அண்மையில் வடலுாரில் நடைபெற்ற வள்ளலாரின் 200வது பிறந்த நாள் விழா நிகழ்வொன்றில் பேசிய ஆளுநர் ரவி “சனாதன தர்மத்தின் மாணவனாகிய நான் பல ரிஷிகள், மகான்களின் பல நூல்களை படித்தவன். வள்ளலாரின் நூல்களையும் படித்தபோது பிரமிப்பு ஏற்பட்டது, பத்தாயிரம் ஆண்டுகள் சனாதன தர்மத்தின் உச்ச நட்சத்திரம் வள்ளலார் ஆனால், அறியாமை மற்றும் காழ்ப்புணர்ச்சியால் சனாதன தர்மத்தை சிலர் தவறாக நினைக்கின்றனர். வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன் என்ற வள்ளலாரின் வரிகள், சனாதன தர்மத்தின் எதிரொலி” என பொய்யும் புரட்டுமாக பேசியுள்ளார்.

பிறப்பால் உயர்வு தாழ்வு கற்பிக்கிற சனாதன வைதீக சமய நெறிக்கு நேரெதிரான வள்ளலாரின் சமரச சன்மார்க்க நெறியை சனாதன தர்மத்தின் உச்சமென ஆளுநர் ரவி கூறியிருப்பது அவரது அறிவின்மையைக் காட்டுவதோடு வள்ளுவருக்கு அடுத்து வள்ளலாருக்கு காவி வண்ணம் பூசத் துடிக்கிற ஆர்.எஸ்.எஸ்-பாஜகவின் திட்டமும் அப்பட்டமாக வெளிப்பட்டுள்ளது. ஆளுநரின் இந்தப்பேச்சை முன்வைத்து வள்ளலார் எவ்வாறு சனாதனத்திற்கு நேரதிராக சன்மார்க்கத்தை முன்வைத்தார் என்பதை அவரது சிந்தனைப் போக்கின் வளர்ச்சியை முன்வைத்து ஆய்வு செய்வது அவசியமாகும்.

சனாதனத்திற்கு எதிரான வள்ளலாரின் சன்மார்க்கம்:

வைதீகத்தின், நால் வர்ணக்கோட்பாடு மானுடர்களை அந்தணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என நான்காக வகுக்க, எல்லா உயிர்களையும் தன்னைப் போல் பாவித்தல் சன்மார்க்கம் என புது நெறி காட்டியவர் வள்ளலார். வர்ண/மனு தர்மத்தின் மறுபெயரான சனாதன தர்மமோ பிறப்பினடிப்படையிலான உயர்வு தாழ்வை போற்றிப் பாதுகாக்கின்றது. தீண்டாமையை வற்புறுத்துகிறது.

”வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் மனம் வாடினேன்” என பயிர் வாடியதையும் பொறுக்க இயலாமல் அல்லல்படுகிற உயிர் இரக்கமும், கருணையுள்ளமும் கொண்ட வள்ளலார், மனிதர்களுக்கு இடையிலே பேதம் கற்பிக்கிற சாதி மத ஆசாரங்களையும் வேத உபநிடங்களையும் “பிள்ளை விளையாட்டு” என்று எழுதியதை ஆளுநர் வசதியாக படிக்காமல் கடந்து சென்று விட்டார் போலும். ‘நால்வருணம், ஆசிரமம், ஆசாரம் முதலான நவின்ற கலை சரிதமெல்லாம் பிள்ளை விளையாட்டே’ என்கிறார் வள்ளலார். ‘தோல் வருணம் கண்டு மேல் வருணம் அறிவாரில்லை’ என்கிறார். பொய்யும் புரட்டையுமே வேலையாக கொண்டுள்ள ஆர் எஸ் எஸ் கூட்டத்திடம் அறிவு நேர்மையெல்லாம் எதிர் பார்க்க இயலாது அல்லவா!

வள்ளலாரின் உயிர் இரக்கக் கொள்கையும் ஜீவ காருண்யமும் மண்ணுலகில் மனிதர்கள் படுகிற துன்பங்களின் பாற்பட்டது. மண்ணுலக பிரச்சனைகளை மண்ணுலகிலே தீர்க்கக் கோரியது. பசி பிணி மரணத்தால் மானுடர்கள் படுகிற இன்னல்களையும், செடி கொடித் தாவரங்கள் வாடியதையும் காணச் சகியாது உலகத்தின் சகல உயிர்களையும் தன்னைப் போல பாவித்து சக உயிர்களின் பால் இரக்கங்கொள்ளக் கோருவது வள்ளலார் கண்ட சன்மார்க்கம்.

சனாதனம் பிரிவினைகளையும் பேதங்களையும் வற்புறுத்துகிறது. உயர் சாதிகளுக்கு சலுகைகளையும் தாழ்ந்த சாதிகளுக்கு கடமைகளையும் சமூக நியதி என்கிறது. இந்த சனாதன தர்மமானது, புனிதம்x தீட்டு பாகுபாட்டில் பெண் கல்வி மறுப்பு, குழந்தைத் திருமணம், உடன்கட்டை ஏறுதல் என மூட நம்பிக்கைகளின் புகலிடமாக இந்தியாவின் துயரமாக மக்களை வருத்தியது. இத்தகைய சனாதனத்தை அனைவரிடமும் பரவச்செய்வதே எனது ஆசை என்கிறார் சங்ககராச்சாரியார்.

“ஸநாதன தர்மத்தை ஊதி ஊதி எல்லாரிடமும் பரவச் செய்யலாம் என்பது என்னுடைய பேராசை. அதனால்தான் இதையெல்லாம் சொல்கிறேன். நம்முடைய ஸநாதன மதத்தில் மற்ற மதங்கள் எதிலுமே இல்லாத வர்ண தர்மம் இருப்பதால், இது அவசியமில்லை என்று எடுத்துப் போட்டுவிட்டு நம் மதத்தையும் மற்றவை மாதிரி ஆக்கிவிடவேண்டும் என்று சீர்திருத்தக்காரர்கள் சொல்கிறார்கள்” என்கிறார்.

வள்ளலார் சிந்தனையின் வளர்ச்சிப் போக்குகள்

வள்ளலாரின் சமரச சுத்த சன்மார்க்க நெறியானது 600 ஆண்டுகாலத்திற்கு முந்தைய சித்தர்களின் “கலக” மரபின் தொடர்சி என்பார் அறிஞர் தொ.பரமசிவன். எழுத்தாளர் ராஜ் கௌதமனோ, பக்தி நெறியும் சித்தர்களின் கலக மரபும் கலந்த தனித்துவமிக்க கொள்கையென்பார். வள்ளலாரின் ஆன்மீக சிந்தனைபோக்கின் வளர்ச்சி நிலைகளை நாம் மூன்று கட்டமாக வகைப்படுத்தலாம். (கண் மூடி வழக்கமெல்லாம் மண் மூடிப் போக -சி.இராமலிங்கம் (1823-1874)”- ராஜ் கௌதமன்)

முதல் கட்டத்தில் சைவ சமயவாதியாக இறைவன் பேரில் தோத்திரப் பாடல்களை இயற்றிப்பாடுவது. அருணகிரிநாதர் முருகனைப் பற்றியே பாடியதுபோல வள்ளலார் முருகனையே முழுமுதற் கடவுளாக ஏற்றுப் பாடியதாகவும் அருணகிரியாரின் “திருப்புகழ்” தாக்கமும் அதற்கொரு காரணமாக இருக்கலாம். முருகனைத் தொடர்ந்து தேவாரம் பாடிய நாவரசர், சுந்தரர் சம்பந்தர் மரபை அடியொற்றி சிவன் மீது பாடல்கள் பாடியுள்ளார். இக்காலத்திலே, சைவ சமயவாதிகள், பௌத்தம் சமண மதங்களை பகை மதங்களாக தாக்கிப் பாடுவதை வழக்கமாக கொண்டதையொற்றி வள்ளலாரும் திட்டிப் பாடியுள்ளார். ஆக, தொடக்கதில் சென்னையில் வாழ்ந்த காலத்தில் வள்ளலார் தனது சமகால சைவ சமயவாதிகள் போல இறைவன் பேரில் தோத்திரப் பாடல்கள் இயற்றுபவராக, வித்வானாக, புராண பிரசங்கியாக இருந்துள்ளார். வள்ளலாரின் முதல் மூன்று தொகுதி பாடல்களும் இதற்கு சான்று. இக்காலத்தில் அவரது சக சமயவாதிகள் போல வள்ளலார் வாழ்ந்தாலும் அவர்களைப் போல கிருஸ்துவ மிஷனரிகளுக்கு எதிரான வெறுப்பு பிரசங்கத்திலோ, சாதி சமய ஆசாரங்களை காப்பாற்றுவதிலோ கவனம் கொள்ளாமல் சொந்த ஆன்மீக ஈடேற்றத்திலே அதிகம் அக்கறை கொண்டவராக இருந்துள்ளார். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாத மனம் கொண்டவராக இருந்துள்ளதையும், அதற்கு அருணகிரியார், தாயுமானவரின் தாக்கமும் தொடர்ச்சியாக அவரிடத்திலே இருந்ததும் அதற்கு காரணமாக இருந்திருக்கலாம். வள்ளலாரின் இந்த உந்துதலே அவரது சிந்தனைபோக்கின் அடுத்தகட்ட நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது.

இரண்டாவது கட்டமாக வள்ளலார், சிவ யோகியாக மாறுவது. யோக சித்தியை அடைவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவது. (இக்காலத்திலே சென்னையை விட்டு கருங்குழிக்கு வருகிறார்) திருமூலர், தாயுமானவர், பட்டினத்தார் ஆகியோர்களின் பாடல்களின் செல்வாக்கினால் உந்தப்பட்டவராக சைவ சமயத்திலிருந்து சித்தர்களின் கலக மரபில் இணைகிறார். பதினெண் சித்துக்களை இக்கட்டத்தில் கற்றவராக, குறிப்பாக யோகத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவராக பரிணமிக்கிறார். சைவ நெறியில் புறநிலை கோயில் வழிபாடு சடங்கு ஆசாரங்கள் முதன்மையானது. எல்லா சைவ நாயன்மார்களும் சமயக் குரவர்களும் இதை வலியிறுத்தியவர்களே. அதில் விதிவிலக்கு திருமூலர் மட்டுமே. சைவத்தின் புறநிலை பக்தி வழிபாட்டு சடங்கு முறைகளை ஒதுக்கி, ஊனுடம்பே ஆலயம் என பக்தியை அகநிலைக்கு திருப்பிய திருமூலரின் பாடல்கள் வள்ளலாரிடம் செல்வாக்கு பெற்றதாக தெரிகிறது. குறிப்பாக திருமூலரின் உடம்பு அழியா நிலை குறித்த நிலைப்பாடு வள்ளலாரின் இறுதி காலம் வரை செத்தாரை எழுப்புதலில் அசைக்க முடியாத உறுதியாக இருந்ததில் காணலாம். அருட்பாவின் நான்கு மற்றும் ஐந்தாம் தொகுதியில் உள்ள பாடல்களில், வள்ளலாரின் ஆன்மீக வளர்ச்சிக்கான மாற்றங்களைக் காணலாம்.

இறுதியாக மூன்றாம் கட்டத்தில், தனது ஆன்மீகத் தேடலில் சமரச சுத்த சன்மார்க்க நெறிக்கு வள்ளலார் வந்தடைவது. இந்த கட்டத்தில் வடலூர், மேட்டுக்குப்பதிற்கு வந்துவிடுகிறார். பக்தி நெறியும் சித்தி நெறியும் ஒன்றுகலந்த புதிய சன்மார்க்க நெறியை மக்களுக்கு போதிக்கவும், பக்தகர்களுக்கு கொள்கையை விளக்கவும், பசித்தவர்களுக்கு உணவு வழங்கவும் சங்கம் சபை சாலையை அமைக்கிறார். காவிக்கு பதிலாக வெள்ளாடை, சைவ மடத்திற்கு மாறாக சபை, உருவ வழிபாட்டு சடங்கிற்கு மாறாக ஜோதி வழிபாடு என முற்றிலும் புதிய நெறியாக சன்மார்க்கத்தை நடைமுறைப்படுத்த முயற்சிக்கிறார். சக உயிர்களை சமமாக பாவிப்பது என்பது இயல்பாகவே சனாதன வைதீக கொள்கையில் அடிமடியில் கைவைப்பது போலாகிறது. உயிர் இரக்கமும் சமத்துவத்துவத்திற்கும் சாதி சமய சடங்கு ஆசாரங்கள் தடையாக இருப்பதால், அந்த தடையை போகிற போக்கில் உடைக்கிற வள்ளலார் சனாதனவாதிகள் மற்றும் சைவர்களின் வயிற்றில் நெருப்பிட்டார். இதன் வெளிப்பாடே ஆறுமுக நாவலரின் வள்ளலார் எதிர்ப்பாகும்.ஆறுமுக நாவலர்,சாதி ஆசாரம், சமய ஆசாரம் இல்லாத எழுத்தால் பயனில்லை என அறிவித்தவர். இயல்பாகவே சாதி மதம் கடந்தோரின் உறவு வேண்டும் என சமதர்மம் பேசிய வள்ளலாரை வெறுத்து ஒதுக்குவதற்கு இயல்பான காரணமாகின. நாவலரின் பாடல்கள் அவரை மத நம்பிக்கைவாதி என்ற எல்லையைக் கடந்த மத வெறியராக காட்டுகின்றன. அதுவே வள்ளலாரை தனிப் பட்ட முறையில் நாவடக்கமின்றி விமர்சிக்கிற இடத்திற்கு இட்டுச் சென்று விட்டது. வள்ளலாரின் பாடல்கள் அருட்பா அல்ல மருட்பா எனத் தூற்றுகிறார்.

கற்பனாவாத சோசலிஸ்டாக வள்ளலார்

காலனியாதிக்க காலத்தின் கொடூர வேளாண்கொள்கையால் இந்தியாவில் கடும் பசிப் பிணி பஞ்சம் நிலவிய காலத்தில் வாழ்ந்த வள்ளலார், பஞ்ச கால கொடுமையை நேரில் அனுபவித்ததாலேயே பின்னாளில், பசியை போக்க அன்னச் சாலைகளை நிறுவுவதற்கு இட்டுச் சென்றது எனலாம். தான் வாழும் காலத்தில் நிலவிய சமூக முரண்பாடுகளுக்கு மக்களின் ஒரு பகுதியோரின் இரக்கமின்மையே காரணமாக கருதியதே வள்ளலாரின் அரசியல் புரிதலாக இருந்துள்ளது எனலாம்.இதுவே கருணை இல்லா ஆட்சி கடுகி ஒழிக எனப்பாடுவதற்கு ஆதாரமாகியது.

கருணையில்லாத ஆட்சியாளர்களும் செல்வந்தர்களையும் சாடுகிற வள்ளலார் சக மனிதர்களும் சக உயிர்களிமும் சமமாக பேதமின்றி வாழ்வதே சன்மார்க்கத்தின் கொள்கையாக அறிவிக்கிறார். அனைவரும் சமம் அனைவரிடத்தில கருணை கொள்வது; உலகத்து உயிர்க்கெல்லாம் இன்பம் செய்வதே வள்ளலார் ஆன்மீகத் தேடலில் இறுதியாக வந்தடைந்த இடம்.வள்ளலாரின் இந்த மார்க்கத்தை மார்க்சிய மொழியில் கற்பனாவாத சோசலிசம் எனலாம். முதலாளிகள் கருணையாக நடந்த கொண்டால், தொழிலாளர்களை சமமாக நடத்தினால் வர்க்க முரண்பாடுகளை தீர்க்கலாம் என்பது கற்பனாவாத சோசலிசத்தின் ஒரு வாதம் ஆகும். முதலாளிகளுடனான சமாதானமாக சோசலிசத்தை அடைவதே இதன் உட்பொருள். ராபர்ட் ஓவன் இதற்கொரு சிறந்த உதாரணம்.

வள்ளலாரின் ஈடுபாடு முழுக்க ஆன்ம ஈடற்றதில் இருந்தாலும், அவரது காலத்தில் நிலவிய சமூக முரண்பாடுகளுக்கு அகநிலை மாற்றத்தில் வள்ளலார் தீர்வு காண முயன்றார் என்றே கூறலாம். இந்த இறுதிக் கட்டமே அருட்பாவில் ஆறாம் தொகுதியாக வள்ளலார் மறைவிற்கு பின் பொதுப் பாட்டு என்ற பெயரில் அவரது பக்தர்கள் வெளியிடுகிறார்கள். இத்தொகுதியை குடியரசு வெளியீடாக பெரியார் வெளியிட்டுள்ளார்.

பாரதிதாசன் என்ற பெருங்கவிஞன் உருவாக்கத்திற்கு வள்ளலாரும் பாரதியும் பங்கற்றியதாக கூறுகிற தொ.ப., யாப்பை எளிய சொற்களில் வழியே கவிதையாக மாற்றிக் காட்டியவர் வள்ளலார் என்பார். யாப்பிற்கு தொல்காப்பியர் வகுத்த இலக்கணத்தை மீறி ‘அருட்பெருஞ்ஜோதி அகவல்” என்ற தலைப்பிலான பாடலை 1596 அடிகளைக் கொண்டதாக ஒரே இரவில் வள்ளலார் எழுதியாக கூறுவர்.!!

வள்ளலாரின் இறுதிக் காலத்தில் ஒருவித தவிப்புடன் இருப்பதையும் அவ்வப்போது அறைக்குள் சென்று யோக நிலையில் ஆழ்வதும் செத்தாரை எழுப்புவதாக அடித்துக் கூறுவதும் தான் ஜோதியாக போகிற நாளை நேரத்தை முன் கூட்டி அறிவிப்பதையும் அவரது உடனிருந்தவர்கள் கூறுவார். அவரது மரணம் இன்றுவரை மர்மம் நிறைந்ததாகவே உள்ளது.

வள்ளலாரின் வாழ்வும் பணியும் சனாதனத்திற்கு எதிரான கலகக் குரலாக ஒலிக்க ஆளுநர் ரவியோ தனது ஆர் எஸ் எஸ் பற்றால், வள்ளலாரை இந்துத்துவமயப்படுத்த முயற்சிப்பது கடுமையான கண்டனத்திற்குரியது.

நன்றி:ஜனசக்தி

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW