ஆர் எஸ் எஸ் இல் கரைகிற சைவ ஆதினங்கள் – அருண் நெடுஞ்செழியன்

06 Jun 2023

வேத மந்திரங்கள் முழங்க, நாடு முழுவதிலிருந்தும் வரவழைக்கப்பட்டிருந்த  40 சாமியார்கள் சூழ, புதிய நாடாளுமன்றத்தின் சபாநாயகர் இருக்கைக்கு அருகே சைவ ஆதினங்கள் வழங்கிய செங்கோலை நிறுவி புதிய “நாடளுமடத்தை” கடந்த 28.05.23  அன்று பிரதமர் மோடி திறந்துவைத்தார்.

புதிய நாடாளுமன்றத்தை ஜனாதிபதியை கொண்டு திறக்கவேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை பாஜக ஏற்காததால், காங்கிரஸ், இடதுசாரிகள், திமுக, ராஷ்ட்ரிய ஜனதாதளம், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா, ஐக்கிய ஜனதா தளம், ஆம் ஆத்மி உள்ளிட்ட 21-க்கும் மேற்பட்ட பிரதான எதிர்க்கட்சிகள் நிகழ்ச்சியை புறக்கணித்தன. “நாடாளுமன்றம் என்பது மக்களின் குரல்,பிரதமர் நரேந்திர மோடி புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவை முடிசூட்டு விழா போல நினைத்துக் கொண்டிருக்கிறார்” என காங்கிரஸ் தலைவர்  ராகுல் காந்தி காட்டமாக விமர்சித்துள்ளார்.

இந்தியாவை இந்து நாடாகவும் குடியரசு ஜனநாயகத்தை இந்து ராஜ்யமாகவும்   கட்டமைக்கிற ஆர் எஸ் எஸ்- பாஜகவின் இந்துத்துவ பிரச்சார நிகழ்ச்சி நிரலாக புதிய நாடாளுமன்ற திறப்பு நிகழ்வு திட்டமிட்டு உருவாக்கப்பட்டது. அதிலும் குறிப்பாக 1947 இல் இந்திய சுதந்திரத்தை முன்னிட்டு திருவாவடுதுறை ஆதினம் நேருவிற்கு வழங்கிய செங்கோலை மையமாக கொண்டு கட்டப்பட்ட புனைவுதான் கொடுமை.

அதாவது ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் பெறுவதை குறிக்கும் விதமாக,அதிகார மாற்ற குறியீடாக ஏதோவொன்று இருக்க வேண்டாமா என மவுன்ட்பேட்டன் நேருவிடம் கேட்டதாகவும்,உடனே ராஜாஜியிடம் நேரு ஆலோசனைக் கேட்டதாகவும்,ராஜாஜியோ  திருவாவடுதுறை ஆதினதைக் கொண்டு  சோழர் கால மாதிரி செங்கோலை வரவைத்து மவுன்ட்பேட்டனிடம் செங்கோலை கொடுத்துப் பெற்றதாக ஒரு கதை புனையப்பட்டது.எந்தப் பொய்யை கூறினாலும் அதில் அரை உண்மை இருக்கவேண்டும் எனக் கூறுவது போல திருவாவடுதுறை ஆதீனம் நேருவிற்கு செங்கோலைப்  பரிசாகக் கொடுத்த நிகழ்வு உண்மை என்பதற்கு ஆதாரம் உள்ளது.(தற்போது வரையிலும் அரசியல் கட்சிகளின் மாநாடுகளில் கட்சித் தலைவர்களுக்கு செங்கோல் பரிசாக கொடுப்பதைக் காணலாம்)

ஆனால் மௌன்ட்பெட்டன் நேருவிடம் செங்கோல் கொடுத்தது குறித்து எந்த வரலாற்று ஆதாரமும் இல்லை.இது குறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கேள்விய எழுப்பிய பத்திரிக்கையாளர்களுக்கு வாட்ஸப்பில் வந்த கதைகள் மற்றும் புனைவு கட்டுரைகளை ஆதாரமாக கொடுத்தாராம் அமைச்சர்!

வடநாட்டுப் பொய்யும் புனைசுருட்டும் ஒரு பக்கம் இருந்தாலும் புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவில் சைவ ஆதினங்கள்,சோழர் கால செங்கோல் ஆகியவை ஏன் இணைக்கப்படவேண்டும்?ஆர் எஸ் எஸ் பாஜக இதன் மூலம் என்ன சாதிக்க முயற்சிக்கிறது என்பதை ஆய்வு செய்வது அவசியமாகும்.

ஆர் எஸ் எஸ்- பாஜக சூழ்ச்சிக்கு இரையாகுமா தமிழ்நாடு?

தமிழ்நாட்டில் காலூன்றுவதற்கு எதைத் தின்றால் பித்தம் தெளியும் எனத் திரிகிற ஆர் எஸ் எஸ்-பாஜக கும்பல்,நாடாளுமன்றத் திறப்பை ஒரு வாய்ப்பாக பயன்படுத்த முயற்சித்தது.நாடாளுமன்ற திறப்பு விழாவில் தமிழ்நாட்டின் சைவ ஆதினங்களின் புடை சூழ பிரதமர் பவனி வருவது,தேவாரம் ஓதுவது,செங்கோல் பெறுவது ஆகியவற்றின் மூலமாக தமிழ்நாட்டிற்கும் தமிழ்மொழிக்கும் முக்கியத்துவம் கொடுப்பதாக பாவனை செய்து,தமிழ்நாட்டு அரசியலில் ஆழமாக கால்பதிக்கிற முனைப்பில் திட்டமிட்டது தெளிவாகிறது.

முன்னதாக தருமபுர ஆதினத்தின் பல்லக்கு விவகாரத்தை கையிலெடுத்து அரசியல் செய்தது முதலாக,ஆதினத்திற்கு சொந்தமான சீர்காழி கோயில் குடமுழக்கிற்கு ஆளுநர்  ரவியை அழைத்து “சிறப்பித்தது” தொடர்ந்து, தற்போது ஆதினங்களை தனி விமானம் வைத்து டெல்லிக்கு அழைத்து,புதிய நாடாளுமன்றத்தில் பிரதமருக்கு செங்கோல் வழங்க வைத்தது வரை ஆதினத்தையும் தமிழ்(திருக்குறள்)மொழியை வைத்தும் தமிழ்நாட்டு அரசியலில் ஆர் எஸ் எஸ் -பாஜக நுழைய முயல்வதில் ஒரு தொடர் முயற்சி தெரிகிறது..

பொதுவாக அரசியல் அரங்கில் ஆளும்கட்சி ஆதரவு, எதிர்க்கட்சி  ஆதரவு என எந்தப் பக்கச் சாய்வு நிலைப்பாடும் எடுக்காமல் நடுநிலைமை வகித்து வந்த ஆதினங்கள்,குறிப்பாக தற்போதைய தருமபுர ஆதினம் வெளிப்படையாக ஆர் எஸ் எஸ்-பாஜக  ஆதரவு நிலைப்பாடு எடுத்துள்ளது ஆர் எஸ் எஸ் முயற்சிக்கு கிடைத்த வெற்றியாக எடுத்துக்காட்டுகிறது. சைவ சித்தாந்தத்தில் ஊடுருவுகிற களைகளை அகற்றி சைவத்தை பரப்புவதற்கு உறுதிமொழி எடுத்துக் கொண்ட சைவ மடாதிபதிகள், தற்போது வெளிப்படையாக சைவ சமயத்தில் இந்துத்துவ ஊடுருவலை ஏற்றுக் கொண்டு இந்துத்துவ பாசிசத்தை வெட்கமின்றி ஆரத் தழுவிக்கொள்கிறார்கள்.

சைவ சித்தாந்தமும் பார்ப்பனியமும்

ஆர் எஸ் எஸ் எனும்  தேசிய இந்து மட அமைப்பின் அடிப்படையானது  பார்ப்பன கருத்தியலை நிலை நிறுத்துவதை நோக்கமாக கொண்டதாகும்.இந்த அமைப்பை நிறுவுவதில் முக்கியப் பங்காற்றிய கோல்வால்கர் பார்ப்பன தன்னுணர்வை அதிகம் வெளிப்படுத்துகிற ஸ்மார்த்த பார்ப்பனியத்தின் வேத புராண உபநிடங்களை வெற்றிகரமாக ஆர் எஸ் எஸ் அமைப்பிற்கு தன்வயப்படுத்திக் கொள்கிறார்.ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ஆரம்ப கால தலைவர்களான ஹெட்கேவர், சாவர்க்கர், கோல்வாக்கர், அவருக்குப் பின் வந்த தேவரஸ் முதல் இன்றைய ஆர்.எஸ்.எஸ் தலைவரான மோகன் பகவத் வரை அனைவருமே சித்பவன் பார்ப்பனர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  

சைவர்களுக்கும் ஸ்மார்த்தம் முன்வைக்கிற பார்ப்பன கோட்பாட்டிற்கும் நிறைய முரண்பாடுகள் உன்று.சைவ சித்தாந்தவாதிகள் தங்களது சமயத்தை சைவ நெறி என்பர்,இந்து மதத்திற்குள் சைவத்தை அடக்குவதை ஏற்கமாட்டார்கள்.இந்து என்ற பெயருக்கு பதில் எங்களை சைவன் என்றே சொல்லுங்கள் என்பார் இலங்கைப் பண்டிதமணி மு. கந்தையா. “வெள்ளைக்காரன் நமக்கு இந்து எனப் பெயர் வைத்ததால் பிழைத்தோம்” என தெய்வத்தின் குரல் நூலில் காஞ்சி சங்கராச்சாரியார் கூறிய ஒப்புதல் வாக்குமூலத்தை அதற்கு உதாரணம் கூறுவர்.

சைவர்கள் சிவனை முழுமுதற் கடவுளாக ஏற்று வழிபடுபவர்கள்.மாறாக ஸ்மார்த்த பிராமணர்கள் பிரம்மத்தை முழுமுதற் கடவுளாகவும் அதில் சிவனையும் நாராயணனையும் உள்ளடக்குவர்(அரியும் சிவனும் ஒன்று!).சைவ சித்தாந்த மரபில் சைவ ஆகமங்கள் மற்றும் வேதங்களை பிரமாணமாக ஏற்றுக்கொண்டாலும்,வேதத்தின் புருஷ சூக்கத்தில் உள்ள நால்வர்ண பேதங்களை ஏற்க மாட்டார்கள். பிறப்பின் அடிப்படையில் உயர்வு தாழ்வை நியாயப்படுத்துகிற ஸ்மிருதிகளை சைவர்கள் கடுமையாக கண்டனம் செய்வார்கள்.திருக்குறளின் “பிறப்பொக்க எல்லா உயிர்க்கும்” என்ற வள்ளுவன் வாக்கையும்,யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற கணியன் பூங்குன்றனாரின் புறநானூற்றுப்  பாடல்களையும் ஏனைய பிற புராணங்கள் மற்றும் உபநிடங்களைக் கொண்டு நால்வர்ண கோட்பாட்டை கடுமையாக மறுப்பார்கள்.பிறப்பின் அடிப்படையிலான ஏற்றத் தாழ்வு தமிழகத்தில் பிற்காலத்தில் நுழைந்தவையே என்பது இவர்களது முடிபாகும்.ஸ்மார்த்தர்கள் உயர்வாக பேசுகிற  சங்கரரின் கொள்கைகளை  சைவ சமய ஆச்சாரியார்கள் ஏற்கமாட்டார்கள்.மாறாக ஸ்மார்த்த பிராமாணர்கள் தீண்டாமையை ,நால்வர்ண சாதி பாகுபாட்டை நிலைநிறுத்துகிற மனு நீதி,புருஷ சூக்கமத்தை புனிதமாக கருதுபவர்கள்.

சுத்த சைவத்தை வேத,ஆகம மரபுகளும் பன்னிரு திருமுறை,மெய்க்கண்ட சாத்திர உண்மைகளும் கூறும் வர்ணாசிரமம் நீங்கிய அருள்நெறி என வரையரப்பர்.மொத்தத்தில், வைதிக சமயங்களான சுத்த சைவம் மற்றும் வைணவத்தையும்  அவைதிக சமயங்களான பௌத்தம் மற்றும் சமணத்தையும் இந்து சமயம் என்ற பொது அடையாளத்தில்  ஸ்மார்த்த பிராமணர்கள் உட்செரிக்கின்றனர்  என்பது இவர்களது விமர்சனம் ஆகும்.அது உண்மையும் கூட!

ஆனால் இந்த சித்தாந்த முரண்பாடுகள் எல்லாம் இன்று பொய்யாய் பழங்கதையாய் போயின.ஆளும் ஆர் எஸ் எஸ் –பாஜக கும்பலுக்கு சாமரம் வீசுவது என்ற ஒற்றைக் குறிக்கோளில் சைவ ஆதினங்கள் ஆர் எஸ் எஸ் இல் முற்றாக கரைந்தேவிட்டன.

சைவ மடங்களும் நிலவுடமையும்:

தமிழ்நாட்டில் மடங்களும் விளைநில சொத்துடமையும் பிரிக்க முடியாதவை.தமிழையும் சைவத்தையும் வளர்ப்பதன் பொருட்டு  நிறுவப்பட்டதாக கூறப்படுகிற சைவ மடங்கள் தற்போது தமிழ் மொழியை சமஸ்கிருதத்திடமும் சைவத்தை இந்துத்துவ சனாதனிகளிடம் அடமானம் வைத்துவைத்துவிட்டது. வரலாற்றின் எல்லா கால கட்டத்திலும் ஆளும் அரசிற்கு ஆதாரவாக இருப்பதன் மூலமாக மடத்தின் கட்டுப்பாட்டின் உள்ள பல லட்சம் ஏக்கர் சொத்துக்கள் மற்றும் கோயில் வருமானங்களில் குறிப்பாக பினாபி ட்ரஸ்ட் மூலமான குத்தகை வருமானம் மற்றும் கோயில்,கடை வருமானங்களில் எந்த வித ஆபத்தும் வரமால் காத்துக் கொள்கின்றன.ஆகவே எப்போதுமே ஆளும் அரசுக்கு அனுக்கமாகவும்  ஆளும் வர்க்கதின்  துதிபடியாக சைவ மடங்கள் தகவமைந்து கொண்டன.

தமிழ்நாட்டில் கோயில் நிலங்கள் மற்றும் சைவ ஆதின மடங்களுக்கு மன்னர் காலம் தொட்டு தற்போது வரை பல்வேறு வகைகளில் சேர்ந்த சொத்துக்களின் அளவு மட்டுமே சுமார் 6.5 லட்ச ஏக்கர் சொந்தமாக உள்ளது.இந்த நிலங்கள் யாவும் நில உச்சவரம்பு சட்டத்தில் வராதவை.இதில் மூன்றில் ஒரு பங்கு நிலம் (ஒன்றுபட்ட)தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்ததாகும்.திருப்பனந்தாள் மடம்,திருவாவடுதுறை மடம் மற்றும் தருமபுர ஆதின மடங்கள் இந்த மாவட்டத்தில் வருவன ஆகும்.இந்த மடங்களில் சொத்துக்களை பாதுகாக்கிற தலைமை அதிகார பதவியே சந்நிதானம்.இந்த சன்னிதானம் பதவியும் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுப்பது கிடையாது.மேலும் அனைத்து சாதியினரும் சன்னிதானம் ஆகிவிட முடியாது.குறிப்பாக சைவ வேளாளர்கள் மட்டுமே நாம் குறிப்பிட்ட ஆதினங்களின் தலைமை பொறுப்பிற்கு வரமுடியும்.எல்லா  சாதியினரும் உள்ள மடங்கள் ஒன்றுகூட தமிழ்நாட்டில் இல்லை.சாதி சமூக இறுக்கத்தை மடங்கள் தீவிரமாக  கட்டிப் காப்பாற்றுவதே அதற்கு காரணம்.நிற்க

1940 களில் கீழத் தஞ்சையில் கிளர்ந்து எழுந்த கம்யூனிச பூதத்தை கண்டு அஞ்சிய ஆளும் வர்க்கமானது, பல்வேறு நிலச் சீர்திருத்த சட்டங்களை கொண்டு வந்து  நிலப்பிரபுக்களுக்கும் கூலி விவசாயிகளுக்குமான முரண்பாட்டை தணிக்க முயற்சித்தது.அதில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய சட்டமாக தஞ்சாவூர் பண்ணையாள் பாதுகாப்பு சட்டம்(1952) மற்றும்  நிலச் சீர்திருத்த உச்சவரம்பு சட்டத்தை(1961) குறிப்பிடலாம். ஆனாலும் இந்த சட்டங்கள் பண்ணையார்களை தப்பித்துக்கொள்வதற்கு ஏதுவாக பல்வேறு வாய்ப்புகளை வழங்கியது.நில உச்சவரம்பு சட்டம் வருவதற்கு மூன்று ஆண்டு முன்னரே காங்கிரஸ் கட்சி,இந்த சட்டத்தை கசிய விட்டதான் காரணமாக,பண்ணையார்கள் சொத்துக்களை சொந்த பந்தங்கள் மற்றும் பினாமி பெயர்களில் பிரித்து வைத்துக் காத்துக் கொண்டனர்.அதுபோல கோயில், மடங்கள் மற்றும் அறக்கட்டளைகள் நிலங்களுக்கு உச்சவரம்பு சட்டத்தில் இருந்து விதி விலக்குகள் வழங்கப்பட்டன.இதன் காரணமாக கோயில் மற்றும் மடங்களின் நிலங்களை உச்சவரம்பு சட்டத்தில் இருந்து காப்பாற்றிக்கொள்வதற்கு போலி அறக்கட்டளைகள் உருவாக்கப்பட்டன.

1961 நில உச்சவரம்பு சட்டத்தின் அடிப்படையில் அறிவிக்கப்பட்ட உபரி நிலமும் அதன் பகிர்ந்தளிப்பு  விவரங்களைப் பார்த்தாலே,உச்சவரம்பு சட்டம் எவ்வளவு தந்திரமாக பண்ணையார்களையும்  மடாதிபதிகளையும் காப்பற்றியுள்ளது எனத் தெரியும்.

நில உச்சவரம்பு சட்டத்தில் உபரி நிலமாக மதிப்பிடப்பட்டது2,04,000  ஏக்கர்
உபரி நிலமாக அறிவிக்கப்பட்டது89,000 ஏக்கர்
அரசாங்கம் இதில் எடுத்தது82,000 ஏக்கர்
இதில் அரசாங்கம் பிரித்து விநியோகித்தது71,000 ஏக்கர்

நில உச்சவரம்பு சட்டத்தின் தோல்வியானது தற்செயல் ஆனது அல்ல.அன்றைய காங்கிரஸ் கட்சியின் நிலப்பிரபுத்துவ  ஆதரவுக் கொள்கையின் வெளிப்பாடே இந்த சட்டத்தின் தோல்வியாக வெளிப்பட்டது.எந்த ஒரு நாடு நில சீர்திருத்தத்தை வெற்றிகரமாக மேற்கொள்ளவில்லையோ, சிறு குறு விவசாயிகள் மற்றும்  கூலி விவசாயிகளின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தாமல் நிலப்பிரபுத்துவத்தின் மிச்ச சொச்சதைக்  காத்து வருகிறதோ அந்த நாடு தொடர்ந்து ஏழை நாடாக,விவசாய  உற்பத்தியை பெருக்க முடியாமல்,விவசாய நெருக்கடிகளில் சீரழிகிறது.இப்போக்கு நகரத்திற்கும் கிராமத்திற்கும் இடையே பெரிய மதில் சுவரை எழுப்பி நாட்டை பிற்போக்கில் நீடித்து வைத்திருக்க வித்திடுகிறது.அதற்கு இந்தியாவே சிறந்த உதாரணம்.

கோயில் மற்றும் சைவ மடங்கள் மிகப்பெரிய நிலப்பிரபுத்துவ அதிகார மையங்களாக திகழ்வதற்கு அதன் வசம் உள்ள சுமார் 6.50 லட்ச ஏக்கர் நிலங்களே முக்கிய பொருளாதார ஆதாரமாக உள்ளன.அரசின் ஆதரவும் உள்ளத்தால் சமயத்தின் பெயரால் ஆதின மடாதிபதிகள்  பல்லக்கில் பவனி வரவும்  முடிகிறது,ஹெலிகாப்டரில் பறந்து செல்லவும் முடிகிறது.அரசாங்கத்திற்குள்  ஒரு அரசு போல இந்த ஆதினங்கள் தனி அரசாட்சியை நடத்தி வருகிறார்கள்.நாம் மேலே குறிப்பிட்டபடி ஆளும் வர்க்க விசுவாசமே அதற்கொரு முக்கியக் காரணமாக இருக்க முடியும்.

காலனிய ஆதிக்க காலத்தில் இங்கிலாந்து மன்னர்கள்,வைஸ்ராய்களுக்கு விசுவாசமாக இருந்த மடாதிபதிகள்,இந்திய சுதந்திரத்திற்கு பிறகு விசுவாசத்தை காங்கிரஸ் கட்சிக்கு  மாற்றிக் கொண்டனர்.தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அக்கட்சி தலைமையிடம் மடாதிபதிகள் நெருக்கம் பாராட்டத் தவறுவதில்லை..எப்போதெல்லாம் நாடாளுமன்ற சட்டமன்ற தேர்தல் வருகிறதோ அப்போதெல்லாம் கட்சித் தலைவர்கள் மடாதிபதிகளை சந்தித்து ஆசி வாங்குவது ஒரு சடங்கு போல இன்றும் நடைபெற்றுவருகிறது.

இறுதியாக,ஆர் எஸ் எஸ் பாஜக சூழ்ச்சிக்கு தமிழ்நாட்டில் உள்ள சைவ ஆதினங்கள் இரையாகிவிட்டார்கள் என்பது தற்போது தெளிவாகிவிட்டது.பெரும் சொத்துக்களுடன் செல்வச் செழிப்புடன் பவனி வருகிற ஆதினங்கள் இந்துத்துவ பாசிஸ்ட்களின் துதிபாடிகளாக மாறியது தமிழ்நாட்டிற்கு பெரும் கேட்டை ஏற்படுத்துக் கூடும்.இப்போக்குகளை தமிழ்நாடு அரசு இனியும் கண்டும் காணாதது போல நடந்துகொள்ளாமல் உடனடியாக செயலாற்ற வேண்டும்.முக்கியமாக கம்யூனிஸ்ட் கட்சிகளின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ள மடங்களுக்கு  சொந்தமான கோயில் நிலங்கள் மற்றும் இதர சொத்துக்களை அரசுடைமையாக்குவதற்கு துணிந்து செயல்பட வேண்டும்.ஏனெனில் மடங்களின் பொருளாதார அடித்தளத்தை பறித்து விட்டால் அதனது முக்கியத்துவம் தாமாகவே கரைந்துவிடும்.!

நன்றி: ஜனசக்தி

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW