கார்ப்பரேட் முதலாளிகளுக்கு காவடி தூக்கும் 12 மணி நேர வேலை சட்டம் தொழிலாளர்களின் உரிமையை பறிக்கும் கொடூர சட்டம்.! தமிழ்நாடு அரசே திரும்பப் பெறுக! சோசலிச தொழிலாளர் மையத்தின் அறிக்கை
நடந்து முடிந்த சட்டசபை கூட்டத் தொடரில் மார்ச் 21ஆம் தேதி அன்று தமிழ்நாடு தொழிற்சாலைகள் திருத்த சட்டம் 2023 என்ற மசோதா மூலம் நூற்றாண்டு காலமாக நடைமுறையில் இருந்த 8 மணி நேர வேலை என்ற சட்டத்தை திருத்தி தொழிலாளர்கள் 12 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்ற திருத்தத்தைக் கொண்டு வந்திருக்கிறது திமுக அரசு. இந்த சட்டத்தை அறிமுகப்படுத்தும் பொழுது தொழில்துறை அமைச்சர் தங்கம்.தென்னரசு அவர்கள் ” உலகளாவிய முதலீடுகளை ஈர்ப்பதற்கும், வேலை நேரத்தில் நெகிழ்ச்சி தன்மையைக் கொண்டு வருவதற்கும் இந்த சட்டம் கொண்டுவரப்படுகிறது. இது அனைத்து தொழிற்சாலைகளுக்கும் கட்டாய சட்டம் இல்லை” என்று கூறியிருக்கிறார்..மின்னணு தொழிற்சாலைகள், தோல் அல்லாத காலனி உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், மென்பொருள் நிறுவனங்கள் ஆகிய துறைகளிலேயே இச்சட்டம் அமல்படுத்தப்படும். இது கட்டாய சட்டம் இல்லை. தொழிலாளர்கள் விரும்பினால் இச்சட்டத்தின் கீழ் வேலை செய்யலாம். இல்லையென்றால் அவர்கள் வழக்கமான பணியிலேயே இருக்கலாம். இது அனைத்து தனியார் தொழிற்சாலைகளுக்கும் பொருந்தாது.. குறிப்பிட்ட துறைகளுக்கு மட்டுமே இச்சட்டம் கொண்டுவரப்பட்டிருக்கிறது என்று விளக்கம் அளித்து இருக்கிறார்.
இது மிகப்பெரிய மோசடி ஆகும். .ஏப்ரல் 12 ஆம் நாள் அன்று இந்த சட்டம் சட்டசபைக்கு அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. ஏப்ரல் 13 அன்று சிபிஐ(எம்) கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் அவர்கள் இதற்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டு முதல்வர் அவர்களுக்கும் கடிதம் எழுதியிருக்கிறார்.அதை ஒட்டி பல இடங்களில் இடதுசாரி தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டங்களையும் இந்த சட்டம் தேவையற்ற ஒன்று என்ற எதிர்ப்புகளையும் தெரிவித்து இருக்கிறார்கள். கூட்டணி கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை கொஞ்சமும் கருத்தில் கொள்ளாமல், சட்டசபையில் விவாதிக்காமல் குறைந்தபட்சம் கூட்டணி கட்சிகளுடன் கூட இது குறித்து விரிவான உரையாடலை நடத்தாமல் ஒரு சில நிமிடங்களில் சட்டம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
வார்த்தைக்கு வார்த்தை சமூக நீதி, இட ஒதுக்கீடு வேலைவாய்ப்பு, ஜனநாயகம் என்ற சொல்லாடல்களைப் பேசி சாமானிய மக்கள் பக்கம் நிற்பது போன்ற ஒரு மாயத் தோற்றத்தை திமுக உருவாக்குகிறது. ஆனால், அதன் உண்மை முகம் அது அல்ல என்பது இந்த இரண்டு ஆண்டுகளிலேயே வெட்ட வெளிச்சமாக தெரிகிறது. 8 மணி நேர வேலை என்பது தொழிலாளி வர்க்கத்தின் அடிப்படை உரிமைகளில் ஒன்று. இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் உலகம் முழுவதும் போராடி, இரத்தம் சிந்தி, உயிர் தியாகம் செய்து பெற்ற உரிமை ஆகும். மூலதனத்தைக் காப்பாற்றவும் முதலாளிகளின் இலாபத்தை பெருக்கவும் அப்பட்டமாக வக்காலத்து வாங்கும் திமுகவின் அமைச்சர் அவர்கள் கார்ப்பரேட் பெரும் முதலாளியின் சார்பாக பேசுவது நன்றாகத் தெரிகிறது. இச் சட்டத்தால் தொழிலாளர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் ஒரு நாளைக்கு 12 மணி நேரம் என்ற அடிப்படையில் வாரத்தில் நான்கு நாட்கள் வேலை மூன்று நாட்கள் விடுமுறை ஆக மொத்தம் 48 மணி நேரம் வேலை என்ற அளவுகோல் பின்பற்றப்படும்,விருப்பத்தின் அடிப்படையிலேயே சட்டப்படி தொழிலாளர்கள் வேலை வாங்கப்படுவார்கள், விருப்பம் இல்லாதவர்கள் கட்டாயப்படுத்தப்பட மாட்டார்கள் என்றும் விளக்கம் அளிக்கின்றனர்.
எந்த தனியார் நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு இருக்கின்ற உரிமைகளை அமல்படுத்துகின்றன? பல தனியார் நிறுவனங்கள் ஏற்கனவே ஒரு நாளைக்கு 10 மணி நேரம், 12 மணி நேரம் என சட்டத்திற்குப் புறம்பான வகையில் தொழிலாளர்களை வேலை வாங்குகின்றனர். அதற்கு எந்த ஊதியமும் வழங்கப்படுவதில்லை என்பதுதான் தொழிலாளர் சங்கங்களின் குற்றச்சாட்டாக இருக்கின்றது. இந்நிலையில் சட்டப்பூர்வமாக முதலாளிகளுக்கு 12 மணி நேரம் வேலை வாங்கலாம் என்ற அதிகாரத்தை வழங்குவது தொழிலாளர்களைக் கொத்தடிமையாக முதலாளிகளுக்கு விற்பதற்கு சமமாகும். இது பண்ணையடிமை முறையையும் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முந்தைய தொழிற்சாலைகளின் கொடுங்கோன்மை சுரண்டலையும் நினைவுபடுத்துவதாக உள்ளது.
உலகம் முழுக்க 8 மணி நேர வேலையை 6 மணி நேரமாக சுருக்க வேண்டும், உற்பத்தியைப் பெருக்குவதற்கான நவீன தொழில்நுட்பங்கள், இயந்திரங்கள் உள்ளிட்ட அனைத்து கட்டமைப்புகளும் பெருகிவிட்ட, நவீன தொழில்மயமான சூழலில் எட்டு மணி நேர வேலை என்பது தேவையற்ற ஒன்று என்ற கருத்து பலமாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் 8 மணி நேரத்தை 12 மணி நேரமாக அறிவிப்பது என்பது மோசடியிலேயே பெரும் மோசடியாகும். மனிதர்களை உணர்வுகளற்ற, ஓய்வற்ற. சிந்தனையற்ற குடும்ப உறவுகள், சமூக உறவுகள் அற்ற வெறும் உழைக்கின்ற இயந்திரங்களாக பார்க்கின்ற மனிதாபிமானமற்ற அரக்கத்தனமான சிந்தனை போக்காகும்.
கோவையில் 1986 இல்.மே தின நூற்றாண்டு விழா நடத்திய கருணாநிதி அவர்கள் 8மணி நேர வேலை என்பதை இனிமேல் ஆறு மணி நேர வேலை என்று மாற்ற திமுக அரசியல் போராட்டங்களை நடத்தும் என்றார். ஸ்டாலின் அவர்கள் அதை மேற்கோள் காட்டி 2020இல் தொழிலாளர்களுக்கு விரோதமான நான்கு சட்டங்களைக் கொண்டு வந்த பிஜேபியின் கருத்துக்கு எதிராக கடுமையாக பேசினார்.
40க்கும் மேற்பட்ட தொழிலாளர் நல சட்டங்களை தூக்கி எறிந்து விட்டு வெறும் நான்கு சட்டங்களாக சுருக்கி தொழிற்சங்கத்தின் போராட்ட உரிமைகளையும் தொழிலாளர்களின் உரிமைகளையும் காலில் போட்டு மிதிக்கின்றது பாஜக அரசு என்று அறிக்கைவிட்டார். ஸ்டாலின் அவர்கள்.இன்று பாஜகவை விட ஒரு படி மேலே சென்று 12 மணிநேர சட்டத்தை நிறைவேற்றி உள்ளது பாஜக கொண்டு வந்த சட்டத்தின் நீட்ச்சியாகவே உள்ளது. கேரளா போன்ற மாநிலங்களில் 8 மணி நேர வேலை என்பது வேண்டுமானால் 9 மணி நேர வேலையாக மாற்றலாம் என்ற அளவிலேயே பேசப்பட்டு வருகிறது.
உலகமயமாக்கல்,,நவீன மயமாக்கல், தாராளமயமாக்கல். நிதி மூலதன குவிப்பு. நவீன தொழில் துறை வளர்ச்சியின் இந்த 30 ஆண்டுகளுக்கு மேலான காலகட்டத்தில் பல சந்தர்ப்பங்களில் திமுகவின் கொள்கை என்பது முதலாளிகளுக்கு சார்பானதாகவும் அந்நிய மூலதனத்திற்கு சார்பானதாகவும் தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிலாளர்களின் உரிமைகளுக்கு எதிரானதாகவுமே இருந்திருக்கிறது. சிறப்பு பொருளாதார மண்டலங்கள் போன்ற திட்டங்களின் போது எதிர்க்கட்சியாக இருக்கும்போது எதிர்ப்பது போல் அறிக்கை விடுவதும் ஆளுங்கட்சியாக மாறும்பொழுது ஒன்றியத்திலும் மாநிலத்திலும் முதலாளிகளுக்கு சார்பாக சட்டங்களை அமல்படுத்துவது என்பதாகவே திமுகவின் கபடத்தனம் இருந்து வருகிறது. இப்பொழுது ஸ்டாலின் அவர்களின் நடவடிக்கை அப்படித்தான் தெரிகிறது. .பாஜக அல்லாத ஆட்சி ஆளும் மாநிலங்களில் 12 மணி நேர வேலை சட்டத்தை கொண்டு வந்தது முதல் மாநில தமிழ்நாடு தான். அந்த அளவுக்கு பாஜகவோடு அரசியல் ரீதியாகவும் கார்ப்பரேட் கம்பெனிகளோடு நட்பு ரீதியாகவும் திமுக இருப்பது இந்த 12 மணி நேர தொழிலாளர் சட்டத்தின் மூலம் வெட்ட வெளிச்சமாக தெரிகிறது.
ஆளுநரின் செயல்பாடுகள் அறிவுக்கும் பகுத்தறிவிற்கும் ஒத்து வராத, ஜனநாயக மாண்புக்கு எதிரானதாக கூறிக்கொண்டு போராட்டங்களையும் கூட்டணிக் கட்சிகளோடு சேர்ந்து நடத்துகின்றது..ஆனால் திமுக அரசு தொழிலாளர்களின் உரிமைகளையும் போராடி பெற்ற சட்டப்பூர்வ பாதுகாப்பையும் மக்களின் உழைப்புச் சுதந்திரத்தையும் முதலாளிகளுக்கு அடிமையாக்க சட்டம் இயற்றுகிறது. இந்த கொடூரத்தை என்னவென்று சொல்லுவது..?
திமுக ஆட்சிக்கு வந்த இந்த இரண்டு ஆண்டு காலத்தில் அரசு துறைகள், பொதுத்துறைகள், அரசு சார்பான துறைகள் அனைத்திலும் சொல்லிக் கொள்ளும்படியான எந்த வேலை வாய்ப்பையும் உருவாக்கவில்லை -நிரந்தர ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதாக கூறியதையும் நிறைவேற்றவில்ல .ஆசிரியர் பணிகள் உள்ளிட்ட அனைத்து அரசுப் பணிகளீலும் நிரந்தர ஊழியர்களை நியமிக்காமல் ஒப்பந்தப் பணியாளர்களையும் தினக்கூலி பணியாளர்களையும் வைத்து குறைந்த கூலி கொடுத்துவேலை வாங்குகிறது. பெரும்பாலான அரசு பணிகள் தனியார் நிறுவனங்களுக்கு ஒப்பந்தமாக விடப்பட்டுள்ளது. அரசு நிர்ணயத்த குறைந்தபட்சக் கூலி துப்புரவு பணியாளர்கள், மருத்துவ பணியாளர்கள் உள்ளிட்ட எந்த துறை பணியாளர்களுக்கும் வழங்கப்படுவதில்லை. இதற்கு எதிரான போராட்டங்களையும் அரசு கொடூரமாக ஒடுக்குகின்றது.
கொரோனா உள்ளிட்ட நெருக்கடியான காலகட்டங்களில் பணியாற்றிய மருத்துவப் பணியாளர்களை நிரந்தரம் செய்யாமல் சம்பளமும் வழங்காமல் அவர்களை எப்படியாவது வெளியேற்றுவதிலேயே குறியாக இருக்கின்றது. ஆனால் தன்னை சமூகநீதி காக்கின்ற அரசு என்று வார்த்தைக்கு வார்த்தை பீற்றிக் கொள்கின்றது.இந்நிலைமையைக் கருத்தில் கொண்டும் நிலவுகின்ற நிதிமூலதன சுரண்டல் அமைப்புக்கு எதிராகவும் பறிபோகின்ற தொழிலாளர் நல சட்டங்களைப் பாதுகாத்திடவும் ஜனநாயக சக்திகளும் தொழிற்சங்கங்களும் அனைத்து அரசியல் இயக்கங்களும் ஒன்றுதிரண்டு போராட வேண்டிய அவசியம் ஏற்பட்டு இருக்கின்றது.
தோழமையுடன்
க.விநாயகம்
தலைவர்
சோசலிசத் தொழிலாளர் மையம்