குருந்தூர் மலை முதல் கச்சத்தீவு வரை – வடக்குநோக்கி நீளும் பெளத்தமயமாக்கல் ஏன்? – தோழர் செந்தில்

05 Apr 2023

கடந்த மார்ச் திங்கள் முதல் கிழமையில் புனித அந்தோணியார் திருவிழாவிற்காக கச்சதீவுக்கு போயிருந்த தமிழ்நாட்டு தமிழர்களுக்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. அங்கே இரண்டு பெளத்த கோயில்கள் முளைத்திருந்தன. ஈழத் தமிழர்களுக்கு இது அத்தனை அதிர்ச்சி அளித்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் கடந்த 13 ஆண்டுகளில் ஈழத் தமிழர்கள் இதுபோன்ற திடீர் பெளத்த விகாரைகளை அதிகம் கண்டிருக்கின்றனர்.

அண்மையில் நெடுந்தீவில் உள்ள வெடியரசன்கோட்டை ஒரு பெளத்த சின்னம் என்றும் இராவணன் கட்டியதாக நம்பப்படும் கன்னியா வெந்நீருற்று(கிணறு)  அநுராதபுர கால பெளத்த தொல்பொருள் என்றும் சிறிலங்காவின் தொல்லியல் திணைக்களம் அறிவிப்புக் கொடுத்துள்ளது. வெடுக்குநாறி மலையில் உள்ள ஆதிலிங்கேசுவரர் ஆலயத்தில் உள்ள கடவுள் சிலைகள் உடைத்தெறியப்பட்டன. அதற்கு எதிர்ப்பு வந்ததையொட்டி, மீண்டும் அங்கு சிலைகள் நிறுவப்படும் என அதிபர் இரணில் தெரிவித்துள்ளார். நிலாவரை கிணற்றடியில் திடீரென ஒரு புத்த சிலை நிறுவப்பட்டது. இதற்கு எதிர்ப்பு எழுந்ததைத் தொடர்ந்து அப்புத்தர் சிலை அகற்றப்பட்டுள்ளது. கிமு 200 ஆம் ஆண்டில் நெடுந்தீவில் வாழ்ந்த வெடியரசன் என்ற மன்னனின் கோட்டையை 21 ஆம் நூற்றாண்டில் ’துறவி மடம்’ என்று அறிவிக்கிறது சிங்கள பெளத்த பேரினவாதம். எதிர்ப்பு எழுந்த நிலையில் இதிலும் பேரினவாதம் பின்வாங்கியுள்ளது.

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு தையிட்டிப் பிரதேசத்தில் உள்ள தனியார் நிலமொன்றி திச ரஜமகா விகாரைக்கு படைத்தளபதி சவேந்திர சில்வா அடிக்கல் நாட்டினார். வலிகாமம் வடக்கு பிரதேசத்தின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில், கட்டுமானங்களைத் தொடரக்கூடாதென்று தீர்மானம் இயற்றப்பட்டிருப்பினும் இதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருப்பினும் இந்த விகாரையை அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது. அதுபோலவே, இந்த ஆண்டு மார்ச் 19 அன்று நாவற்குழியில் விகாரையொன்று கட்டப்பட்டு அதற்கு கலசம் வைத்தார் ஒரு படைத்தளபதி. முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள குருந்தூர் மலையிலும் தமிழ் மக்களின் எதிர்ப்பையும் நீதிமன்றத்தின் ஆணையையும்மீறி பெளத்த விகாரையை நிறுவும்பணி நிறைவடையும் நிலையில் உள்ளது.

யாழ் மாவட்டத்தில் 6 விகாரைகள், கிளிநொச்சியில் 3 விகாரைகள், மன்னாரில் 20 விகாரைகள், வவுனியாவில் 35 விகாரைகள், முல்லைத்தீவில் 67 விகாரைகள் என்ற வகையில் 131 விகாரைகள் வடக்கில் இருப்பதாக தொல்பொருள் திணைக்களத்தின் அறிக்கை கூறுகிறது என்று ’நமது ஈழநாடு’ தனது மார்ச் மாத இதழில் வெளியிட்டுள்ளது.  படைமுகாம்களின் முன்னாலும் காவல் நிலையங்களின் முன்னாலும் புத்தர் சிலைகள் பெருமளவில் உள்ளன. இவையும் எதிர்காலத்தில் விகாரைகளாக மேலெழக் கூடும்.

தமிழர் தாயகமான இலங்கையின் வடக்குகிழக்கில் பெளத்த விகாரைகளை நிறுவுவது, தமிழர்களின் வழிபாட்டுத் தலங்களை இடித்தழிப்பது என்பதில் தொல்லியல் திணைக்களம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. வடக்குகிழக்கில் பெளத்த விகாரைகளை நிறுவுவதன் மூலம் அது சிங்களர்களுக்கு உரித்தான பகுதி என்று சொல்லி தமிழரின் தனித்த தாயகம் என்பதை மறுக்க நினைக்கிறார்கள். பண்பாட்டு அடையாளங்களை சிதைப்பது, அழிப்பது, பண்பாட்டைத் திணிப்பது ஆகியவற்றின் மூலம் பண்பாட்டு முனையில் தாக்குதலை நடத்தி பண்பாட்டு இனவழிப்பை முன்னெடுக்கிறது சிங்கள பெளத்த பேரினவாதம்.

இரு கிழமைகளுக்கு முன்பு, இது குறித்து தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கேள்வியெழுப்பிய போது, ” இந்த நாட்டில் தமிழர்கள் வாழும் பகுதிகள் அனைத்தும் பெளத்த மதத்துக்கும் சிங்கள இனத்துக்கும் உரியவை என்பதைத் தமிழர்களும் அவர்கள் நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வைத்துள்ள உறுப்பினர்களும் கவனத்தில் கொள்ள வேண்டும்” என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

இதற்கு எதிராக தமிழ் மக்கள் போராடுகின்றனர் என்றாலும் கருந்துநிலையில் இக்காலகட்டத்தை நாம் புரிந்து கொண்டிருக்கிறோமா?

முள்ளிவாய்க்கால் என்பது பல்லாயிரக்கணக்கான தமிழர் வகைதொகையின்றி படுகொலை செய்யப்பட்டதன் குறியீடு மட்டுமல்ல, முப்பது ஆண்டுகாலம் தமிழ் மக்களுக்கு அரணாக விளங்கி விடுதலைப் போராட்டத்திற்கு தலைமை தாங்கிய விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முதுகெலும்பு முறிக்கப்பட்டதன் குறியீடு மட்டுமல்ல, உலகெங்கும் பரவி வாழும் தமிழினத்தை வெட்கி தலைகுனியச் செய்யும் பெருந்தோல்வியினதும் பேரழிவினதும் குறியீடு மட்டுமல்ல, அது வடக்குகிழக்கு வாழ் தமிழர்களுக்கு எதிராக முழுவீச்சிலான இனவழிப்பை நடத்துவதற்கு தடையாய் இருந்த அனைத்து காரணிகளும் தகர்த்து எறியப்பட்ட வரலாற்று சந்தியாகவும் இருக்கிறது. அதாவது கரை உடைந்த ஏரியில் இருந்து காட்டாற்று வெள்ளமென தண்ணீர் புறப்படுவது போல் புலிகள்  வீழ்த்தப்பட்ட நிலையில் தமிழீழத் தமிழ்த்தேசிய் இனத்திற்கு எதிரான  இனவழிப்பு நிகழ்ச்சி நிரலை உருவாக்கி அதை எவ்வித தங்கு தடையுமின்றி செயலப்டுத்தி வருகிறது சிங்கள பெளத்த பேரினவாதம்.

முள்ளிவாய்க்காலில் போர் முடிவுற்ற நிலையில் பல்லாயிரக்கணக்கான தமிழ் பெண்களும் ஆண்களும்  படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்கள் சிங்களப் படையினரால் காணாமலாக்கப்பட்டுவிட்டனர்; அதாவது கொல்லப்பட்டு விட்டனர். விதை நெல்களை சிதைத்து அழிப்பது போல் சமூக முன்னோடிகளாக அறச்சீற்றங் கொள்ளக்கூடியவர்கள் எல்லோரும் கொல்லப்பட்டுவிட்டனர், சிறைபடுத்தப்பட்டனர், சிறையில் இருந்து மீண்டோர் ’திடீர் புற்றுநோய்க்கு’ பலியாயினர். இப்படி தங்கள் மீதான இனவழிப்பு நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்துவதற்கு முன்வரக்கூடிய மனித ஆற்றல்கள் இல்லாமல் ஆக்கப்பட்டதோடே முள்ளிவாய்க்காலுக்கு பின்னான காலம் தொடங்கியது. எதிரியின் காலடியில் வீழ்த்தப்பட்ட தமிழர்கள்! தமிழர்களின் தாயகப் பகுதியில் சிங்களர்கள் குடியேற்றப்பட்டனர். போர் முடிந்த நிலையிலும் படைவிலக்கம் நடக்கவில்லை. படையினர் குடும்பத்தோடு குடியமர்த்தி படைவகை குடியேற்றம் நடைபெறுகிறது. காணிகள் மீளக் கொடுக்கப்படுவது முற்றுப்பெறவில்லை என்பதோடு மென்மேலும் பறிக்கப்பட்டு வருகிறது. காட்டுவளம், கனிம வளம், க்டல வளம் சூறையாடப்பட்டு வருகிறது. தொகுதி மறுசீரமைப்பு, வளர்ச்சி திட்டங்கள் என்ற பெயரில் தமிழர்களின் தாயக நிலப்பறிப்பு நடந்தேறி வருகிறது. இப்பதின்மூன்று ஆண்டுகளில் காணாமலாக்கப்பட்டோருக்காகப் போராடிக் காத்திருந்தோரிலும் 140 பேர் தம் உறவுகளைக் காணாமலே கண்மூடிப்போயினர்.

இந்த வரிசையில், தமிழர் தாயகப் பகுதியில் பெளத்த விகாரைகளை நிறுவுவதையும் பண்பாட்டு அடையாளங்களை அழிப்பதையும் சிறிலங்கா அரசின் தொல்லியல் திணைக்களம் அரச ஆதரவுடனும் படையினரின் உதவியுடனும் செயல்படுத்தி வருகிறது.  இப்போது தமிழர்கள் கொத்து கொத்தாய் கொல்லப்படவில்லை, தமிழர்களின் தாயகப் பகுதியில் வான்வழிக் குண்டுவீச்சு இல்லை, துப்பாக்கி சத்தம் கேட்கவில்லை, ஆனால், தமிழர்களுக்கு எதிரான இனவழிப்பு நடந்துவருகிறது. தமிழர்களின் தேசிய தகுநிலையைக் கட்டமைப்பு வகையில் இல்லாதொழிக்கும் நிகழ்ச்சிநிரல் ஒன்று, அதே  நோக்கத்தோடு திட்டமிடப்பட்டு முன்னெடுக்கப்படுகிறது. இதைதான் கட்டமைப்பு வகைப்பட்ட இனவழிப்பு( Structural Genocide) என்று நாம் விவரிக்கிறோம்.

எல்லாம் முடிந்துவிட்டது என்றொரு சாராரும் என்றாவதொரு நாள் விடுதலைக் கிட்டும் என்றொரு சாராரும் செயலற்று இருக்கின்றனர். இன்னும் ஒரிரு பத்தாண்டுகள் இக்கட்டமைப்பு வகைப்பட்ட இனவழிப்பு தொடருமாயின் இலங்கை தீவில்  சிதறடிக்கப்பட்ட இரண்டாவது தேசியக் கூட்டமாக ஈழத் தமிழர் ஆகிடுவர் என்பது திண்ணம். 1950 வாக்கில் சுமார் 9 இலட்சமாக இருந்த மலையக தமிழர்கள் 70 ஆண்டுகள் கடந்த நிலையில் 8 இலட்சம் மட்டுமே இருக்கின்றனர். அவர்கள் இலங்கைத் தீவுக்கு உள்ளேயும் வெளியேயும் சிதறடிக்கப்பட்டதன் விளைவு இது. ஈழத் தமிழர்களின் எதிர்ப்பு அரசியல் முறியடிக்கப்பட்ட நிலையில் இலங்கை தீவுக்குள் கரைத்துவிடப்பட்ட தேசிய சிறுபான்மையினராக ஈழத் தமிழர்கள் ஆகிவிடுவர்.   

கன்னியாவிலும் குருந்தூர் மலையிலும் நாயாற்றிலும் மாதகலிலும் தையிட்டியிலும் நெடுந்தீவிலும் எனத் தொடர்ந்து வந்த பெளத்த ஆக்கிரமிப்பு இப்போது கச்சத்தீவில் அரங்கேறியுள்ளது. 1974 இல் தமிழ்நாட்டுக்கு சொந்தமான கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தது இந்தியா. ’கச்சத்தீவை மீட்க வேண்டும்’ என்ற கோரிக்கை தமிழ்நாட்டில் உயிர்ப்புடன் உள்ளது. கடற்படையினர் வழிபடுவதற்காக இரண்டு சிறு பெளத்த கோயில்கள் அமைக்கப்பட்டிருப்பதாக சிறிலங்கா அரசு விளக்கமளித்துள்ளது. சிறிலங்கா அரசு நீண்டகால நோக்கத்துடனேயே செயல்படுகிறது. 

இலங்கை விடுதலைப் பெற்றவுடன் மலையகத் தமிழர்களின் குடியுரிமையைப் பறித்த டி.எஸ். சேனநாயகா. கிழக்குப் பகுதியில் சிங்களக் குடியேற்றங்களைத் தொடங்கிவைத்தார். இன்று மலையகத் தமிழர்கள் சிறுபான்மை தேசிய மக்கள் என்ற தகுதியை இழந்துநிற்கின்றனர். ஈழத் தமிழர்களோ கிழக்கில் மூன்றில் ஒரு பங்கினராக சுருங்கிப் போயுள்ளனர்.

10 ஆம் நூற்றாண்டில் புனித ஆந்தோனியார் ஆலயம் கச்சத்தீவில் எழுந்தது. இப்போது 21 ஆம் நூற்றாண்டில் இரு புத்தக் கோயில்கள் வந்துள்ளன. கச்சதீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டு அரை நூற்றாண்டு ஆகப் போகிறது. இன்னுமொரு அரை நூற்றாண்டுக் கழித்து கச்சத்தீவு யாருக்கு சொந்தம் என்றொரு பஞ்சாயத்து வந்தால் புத்தக் கோயில்களைக் காட்டி சிங்களர்க்கு உரியதென்று சிறிலங்கா சொல்லக்கூடும். இப்படி தொலைநோக்குப் பார்வையுடனே, புத்தரால் வாழ்த்தப்பட்டதாக நம்பப்படும் அத்தீவை சிங்களருக்கு மட்டுமே உரியது என்றாக்க சிறிலங்கா அரசு காய் நகர்த்திவருகிறது.

கச்சதீவில் எழுந்தருளிக் கொண்டிருக்கும் புத்தரைக் கொண்டு இந்திய அரசை சிங்கள அரசுக்கு எதிராக திருப்பிவிட முடியும் என்ற விருப்பம் நமக்கு இருக்கலாம். கச்சத்தீவை மீட்கச் சொல்லி தமிழ்நாட்டரசு குரலெழுப்பியும் செவி சாய்க்காத இந்திய அரசு, கச்சத்தீவில் சிறிலங்கா அரசு ரேடார் பொருந்திய போதும் அதை பொருட்படுத்தாத இந்திய அரசு புத்தரின் பெயராலா சிங்கள அரசுடன் பிணக்கு ஏற்படுத்திக் கொள்ளப் போகிறது? சைப்ரசில் படையெடுத்துச் சென்ற துருக்கியைப் போல், கிரிமீயா மீதும் உக்ரைன் மீதும் படையெடுத்துச் சென்ற இரசியாவைப் போல் தேவைப்படும்போது சிறிலங்கா மீது படையெடுத்துக் கொள்ளலாம் என்று இந்தியப் பேரரசின் அதிகார வகுப்பு கருதக்கூடும். ஆனால், அதற்கும்கூட சைப்ரசில் வாழும் துருக்கியரையும் கிரிமியாவிலும் டொனாட்சுக்கிலும் லுகான்சுக்கிலும் வாழும் இரசியர்களையும் காப்பாற்றப் போகிறேன் என்று துருக்கியும் இரசியாவும் சொல்வதுபோல் இந்தியா தலையிடுவதற்கான காரணமாக காட்டுவதற்கு சிறிலங்காவில் தமிழர்கள் இருந்தாக வேண்டும். ஆனால், இதேவேகத்தில், கட்டமைப்புவகைப்பட்ட இனவழிப்பு தொடருமாயில் ஈழத் தமிழர்கள் சிறிலங்காவில் வாழும் தனித்த தேசிய இனம் என்ற தகுதியை இழந்துவிடுவர். இந்திய அரசு தனது பேரரச மிதப்பில் இருந்து மாறிக் கொண்டிருக்கும் நிலைமைகளைக் கண்ணுறாமல் இருக்கிறது.

தனது விரிவாதிக்க நலனுக்கு அப்பால்,  தமிழ்நாட்டு மக்களின் இறைமையைக் கோரி நிற்கும் அரசு என்ற வகையில் இனவழிப்புக்கு உள்ளாகிவரும் ஈழத் தமிழரைக் காக்க வேண்டிய பொறுப்பும் கச்சத் தீவை பெளத்தமயமாக்குவதைக் கண்டித்து அதை மீட்க வேண்டிய கடமையும் இந்திய அரசுக்கு இருக்கிறது.

 தமிழ்நாடு அரசோ ஏதிலிகளுக்கு வீடு கட்டிக் கொடுப்பதோடு தன் கடமை முடிந்ததாக கருதுவது போல் தெரிகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தது முதல் ஈழத் தமிழரின் நீதிக்கான போராட்டத்திற்காகவும் கட்டமைப்பு வகைப்பட்ட இனவழிப்பைத் தடுக்கவும் ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை என்பதை எல்லோரும் உற்று நோக்கி வருகின்றனர். தமிழ்நாடு அரசு இனியாவது தன் கடமையறிந்து செயலாற்ற வேண்டும். கட்டமைப்பு வகைப்பட்ட இனவழிப்பைத் தடுக்கவும் கச்சத் தீவை மீட்கவும் இந்திய அரசு செயல்பட வேண்டும் என தமிழ்நாடு அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

தோழர் செந்தில்

ஒருங்கிணைப்பாளர்

இளந்தமிழகம் இயக்கம்

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW