தமிழ்நாட்டு உழைப்புச் சந்தையில் வட இந்திய தொழிலாளர்களும் பாசகவின் பீதியூட்டும் புரளிப் புனைசுருட்டும் – சதிஷ்

06 Mar 2023

கடந்த மார்ச் 3 அன்று நடைபெற்ற தமிழக முதல்வர் முக ஸ்டாலினின் பிறந்த நாள் விழா 2024 மக்களவைத் தேர்தலைக் குறிவைத்து காசுமீர் முதல் தமிழ்நாடு வரையிலான முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களின் கூடுகையாக அமைந்தது.

எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையைச் சீர்குலைப்பதை தனது தேர்தல் உத்தியாக செயல்படுத்தும் பாசக, தனது சமூக ஊடக அணியின் மூலம் பீகார் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் வெட்டிக் கொல்லப்பட்டு உடல்கள் இரயில் தண்டவாளத்தில் வீசப்படுவதாகவும் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அங்கிருந்து பீகாருக்கு தப்பி வருவதாகவும் புகைப்படங்களையும் காணொளிகளையும் வெளியிட்டது. ’டைனிக் பாஸ்கர்’ என்ற இந்தி நாளிதழிலேயே இத்தகைய செய்தி வெளியிடப்பட்டது. பீகாரிகள் கொல்லபடும்போது இராஷ்டிரிய ஜனதாதளத்தின் தலைவரும் பீகார் துணைமுதல்வருமான தேஜஸ்வி தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலினுடன் கூடிக்குலாவிக் கொண்டிருப்பதாக பீகார் பாசகவின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் தளத்தில் செய்திகளும் புகைப்படங்களும் வெளியிடப்பட்டுள்ளன.

மொத்தத்தில் தமிழ்நாட்டில் வட இந்திய தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் வட இந்தியர்களுக்கு எதிராக வெறுப்பு அரசியல் செய்யும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளோடு அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி போன்ற மாநிலக் கட்சிகள் கைகோர்க்கின்றன என்றும் சொல்வதன் மூலம் எதிர்க்கட்சி கூட்டணியை சிதறடிப்பது அல்லது கூட்டணி வைக்கக் கூடிய கட்சிகளை அந்தந்த மாநிலத் தொழிலாளர்கள் பற்றி அக்கறையில்லாதவர்களாகக் காட்டி தனிமைப்படுத்தே நோக்கமாகும்.
தமிழ்நாட்டில் உள்ள பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் தாக்கப்படுவதாகவும் படுகொலை செய்யப்படுவதாகவும் பீகார் , உத்தரபிரதேச பாஜவினர் புரளியைக் கிளப்புவதோடு நிற்காமல் அதை பீகார் சட்டப்ப்ரேவையிலும் எழுப்பினர். தமிழ்நாட்டில் நிலவும் இந்தி திணிப்பு எதிர்ப்பு உணர்வையும் பார்ப்பன – பனியா ஆதிக்க எதிர்ப்பு உணர்வையும் ஆரியப் பண்பாட்டு மேலாதிக்க எதிர்ப்பையும் மாநில உரிமை கோரும் அரசியலையும் வட மாநிலத் தொழிலாளர் வருகை குறித்தப் பேச்சுகளோடு இணைத்து வட இந்திய எதிர்ப்பாக பரப்புரை செய்து வட இந்தியாவில் வாக்கு அறுவடை செய்ய முடியும் என்று திட்டமிடுகிறது பாசக.

இதை தொடர்ந்து தமிழ்நாட்டு முதல்வரும் காவல்துறை இயக்குநர் சைலேந்திரபாபுவும் கோவை மாவட்ட ஆட்சியரும் இதற்கு எதிர்வினையாற்றி தமிழ்நாட்டில் அப்படியான நிலைமைகள் இல்லை, வட மாநிலத் தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருக்கின்றனர் என்று அறிவித்துள்ளனர். பாசகவினரால் வடமாநிலத் தொழிலாளர்கள் இடையே பதற்றத்தை விளைவிக்கும் விதமாக வாட்ஸ் அப் செய்திகள் பரப்பப்பட்டு அச்சமூட்டப்பட்டது.. பாதுகாப்பு தொடர்பாக அச்சம் இருந்தால் வெளிமாநிலத் தொழிலாளர்கள் தொடர்பு கொள்வதற்கான அவசர அழைப்பு உதவி மையங்களைத் தமிழ்நாடு அரசு திறந்துள்ளத்து.
2024 தேர்தலைக் கணக்கு வைத்து பாசக ஒரு சதிவலையைப் பின்னுகிறது. வெளிமாநிலத் தொழிலாளருக்கும் தமிழ்நாட்டு தொழிலாளருக்கும் இடையிலான மெய்யான முரண்டாட்டைப் பயன்படுத்தித்தான் பாசக இந்த வேலையை செய்கிறது. எனவே, இந்த முரண்பாட்டை சரியான வழியில் தீர்க்காவிட்டால் எதிர்வரும் காலத்தில் வெவ்வெறுவகைகளில் இப்பிரச்சனை வெளிப்பட்டுக்கொண்டே தான் இருக்கும்.

போர், இயற்கை சீற்றங்கள், வறுமை ஆகிய காரணங்களால் புலம்பெயர்வு நடைபெறுகிறது. இதில் வறுமை காரணமாக, அதாவது வேலைவாய்ப்புக்காக புலம்பெயர்வது அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையின் விளைவாக ஏற்படுகிறது. குறிப்பாக, 1990 முதல் இந்தியாவில் கடைபிடிக்கப்பட்டுவரும் உலகமய, தாராளமய, தனியார்மயக் கொள்கை விவசாயத்தை ஒழித்துக்கட்டி நகரத்தை மையமிட்ட அந்நிய மூலதனம் சார்ந்த வளர்ச்சிக் கொள்கையாக இருந்துவருகிறது. இதனால், விவசாயத்தில் வெளியேற்றப்பட்ட கிராமப்புற உழைக்கும் மக்கள் நகரங்களை நோக்கி புலம்பெயர்கின்றனர். இந்தப் புலம்பெயர் ஒரு மாநிலத்திற்குள் மட்டுமின்றி மாநிலம் விட்டு மாநிலம், நாடு விட்டு நாடு என்று விரிவடைகின்றது.
2000 த்திற்குப் பிறகு மாநிலம் விட்டு மாநிலம் புலம்பெயரும் தொழிலாளர்களின் எண்ணிக்கை ஒவ்வோராண்டும் பன்மடங்காகப் பெருகிவருகிறது. இது குறித்த சரியானப் புள்ளிவிவரங்கள் மாநில அரசுகளிடமும் ஒன்றிய அரசிடமும் இல்லை. 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஒன்றிய அரசின் தொழிலாளர் நல அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் உள்ள விவரங்கள் 2011 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பைத்தான் அடிப்படையாக கொண்டுள்ளன. கடந்த பத்தாண்டுகளில் புலம்பெயர்தல் என்பது பன்மடங்காகப் பெருகியிருக்கிறது. குறிப்பாக, தொழில்வளர்ச்சியில் பின் தங்கிய மாநிலங்களில் இருந்து வளர்ந்த மாநிலங்களை நோக்கி இப்புலம்பெயர்வு அதிகமாகியிருக்கிறது. மேற்குறிப்பிட்ட, 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவிலேயே மிக அதிகமான புலம்பெயர்தல் மகாராஷ்டிரம், ஒருங்கிணைந்த ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களை நோக்கி ஏற்பட்டுள்ளது. உள்ளூர் தொழிலாளர் எண்ணிக்கைக்கும் வெளிமாநில தொழிலாளர் எண்ணிக்கைக்கும் இடையிலான விகிதம் அதிகரித்துக் கொண்டே போகிறது. ”உள்ளூர் வேலைவாய்ப்பு பறிபோகிறது. வெளிமாநிலத்தவர் வெள்ளமென வருகின்றனர்” என்ற நிலைமை சாதாரண மக்களிடம் ஒரு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது உண்மைதான்.

அன்றாட வாழ்க்கையில் பேருந்து, இரயில்களில் வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கும் உள்ளூர் மக்களுக்கும் இடையில் சச்சரவு ஏற்படுகிறது. காவல்துறை வெளிமாநிலத் தொழிலாளர்களைக் குற்றமய்ப்படுத்துவது இயல்பான ஒன்றாக ஆகிவிட்டது. கண்டுபிடிக்க முடியாத குற்றங்கள் தொடர்பில் பழியைப் புலம்பெயர் தொழிலாளர்கள் மீது போடுகிறது, சில நேரங்களில் போலி மோதல் கொலை வரை செல்கிறது. ஊடகங்கள் தமது ஊகங்களின் அடிப்படையில் வட மாநிலத்தவர்கள்மீது பழிபோடும் செய்திகளை வெளியிடுகின்றன. தீரன் அதிகாரம், டோரா போன்ற வடமாநிலத்தவர்களைக் குற்றவாளிகளாக சித்திரிக்கும் படங்கள், கேலிக் கிண்டல் செய்யக்கூடிய படங்கள் கடந்த பத்தாண்டுகளில் வெளிவந்துள்ளன. இவை புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்த அச்சவுணர்வையும் ’வடக்கன்ஸ்’, ’பானி பூரிக்காரர்கள்’ போன்ற வசவு சொற்புழக்கத்தையும் மக்களிடையே ஏற்படுத்தியுள்ளன.  

இந்தப் பின்னணியில்தான், பாசக புரளியைக் கிளப்பி வேறொரு கோணத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் விளைவாக, பிற மாநிலங்களுக்கு புலம்பெயர்ந்து வாழக் கூடிய தமிழர்கள் தாக்கப்படுவதற்குகூட இவை வழிவகுத்துவிடும் அபாயம் இருக்கிறது. பாசகவினர் கிளப்பிய புரளிகளுக்குப் பதிலளிக்கும் விதமாக தமிழக ஆட்சியாளர்கள், “வட மாநிலத் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் பாதுகாப்பாக இருக்கின்றனர்’ என்று சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.

உண்மையில் வட மாநிலத் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்புடன் உள்ளனரா? அத்துடன் வட மாநிலத் தொழிலாளர்களின் வருகையால் தமிழ்நாட்டில் உழைப்புச் சந்தை பாதிக்கப்படவில்லையா? இதனால் ஏற்படக்கூடிய பதற்றத்தை எபப்டி எதிர்கொள்ளப் போகிறோம்?

அந்நிய மூலதனத்தை ஈர்ப்பதற்கு ஒவ்வொரு மாநிலமும் தங்களுக்கிடையே போட்டிப் போடுகின்றன. அதன் பகுதியாக, சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், ஏற்றுமதி மண்டலங்கள் உருவாக்கப்ப்டுகின்றன, 99 ஆண்டுகளுக்கு நிலம், குறைந்த விலையில் மின்சாரம் வழங்கப்படுகிறது, விரைவாக ஏற்றுமதிக்கு கொண்டு செல்லும் வகையில் துறைமுகங்கள், சாலைப் போக்குவரத்து வசதிகள், விமான நிலையங்கள் என அனைத்துக் கட்டுமானங்களும் இதை மையப்படுத்தியே உருவாக்கப்படுகின்றன. இந்த சலுகைகளின் பகுதியாக தொழிலாளர் நலன்களைப் பாதுகாக்கும் சட்டங்கள் தளர்த்தப்படுகின்றன; தூக்கிக் குப்பையில் வீசப்படுகின்றன; பெருமளவில் காகிதத்தில் மட்டும் உயிரோடு இருக்கின்றன. 

தொழிலாளர்களின் நலனைப் பாதுகாப்பதற்கான குறைந்தபட்சக் கூலிச் சட்டம், சம வேலைக்கு சம ஊதியச் சட்டம், ஒப்பந்த தொழிலாளர் முறை ஒழிப்புச் சட்டம் போன்றவை நடைமுறைப்படுத்தப் படுவதல்லை. ஒரே வேலையை அடிமாட்டுக் கூலிக்கு செய்வதற்காக வடமாநிலத் தொழிலாளர்கள் கொத்தடிமைத் தன்மையில் அழைத்துவரப்படுகின்றனர். தமிழ்நாட்டுத் தொழிலாளர்கள் உழைப்புச் சந்தையில் போட்டிப்போட முடியாதவர்களாக விரட்டியடிக்கப்படுகின்றனர். மாநிலம் விட்டு மாநிலம் புலம்பெயரும் தொழிலாளர்களின் உரிமையைப் பாதுகாக்கும் நோக்கில் மாநிலங்களுக்கு இடையே புலம்பெயரும் தொழிலாளருக்கான சட்டம் – 1979 ( Inter State Migrant Workmen( Regulation of Employment and Conditions of Service) Act 1979 ) உள்ளது. ஆனால், இச்சட்டம் இயற்றப்பட்டு 40 ஆண்டுகளுக்கு மேலாகியும் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து ஒன்றிய அரசும் மாநில அரசுகளும் சிறிதளவு அக்கறைக்கூட காட்டவில்லை. ஒரு மாநிலத்தில் இருந்து ஒரு தொழிலாளியை வேறு ஒரு மாநிலத்திற்கு அழைத்துவரும் ஒப்பந்ததாரர் அந்த மாநிலத்தில் உள்ள உரிய அதிகாரியிடம் லைசன்ஸ் வாங்க வேண்டும், ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும். ஆனால், ஒப்பந்த்தாரர்கள் பொய்யான முகவரியைக் கொடுத்துவிட்டு ஆடுமாடுகளைப் போல் கூட்டிவருகின்றனர். சொந்த மாநிலத்திலும் புலம்பெயரும் மாநிலத்திலும் உள்ள அதிகாரிகளிடம் ஒப்பந்தாரர் ஒவ்வொரு தொழிலாளிக்கும் லைசன்ஸ் பெற்றிருக்க வேண்டும்.

கோவிட் பெருந்தொற்றின் போது வெறும் நான்கு மணி நேர இடைவெளியில் ஊரடங்கை அறிவித்து நாட்டையே நிறுத்திய மோடி, முதலில் பலிபீடத்தில் ஏற்றியது புலம்பெயர் தொழிலாளர்களைத்தான். புலம்பெயர்ந்த மாநிலங்களில் இருந்து சொந்த மாநிலத்தை நோக்கி மூட்டை முடிச்சுகளோடும் குழந்தைகுட்டிகளோடும் வளர்ப்புப் பிராணிகளோடும் பசிப்பட்டினியோடும் குடும்பம்குடும்பாக பல்லாயிரம் கிலோமீட்டர் நடந்தே சென்ற காட்சிகள் எண்ணும் போதெல்லாம் கண்ணீர் சிந்த வைப்பவை. 1947 ஆம் ஆண்டின் பிரிவினைக்கால இடப்பெயர்வுக்குப் பின்னாலான மிகப்பெரும் இடப்பெயர்வாக வரலாற்றில் பதியப்படுகிறது. ஒன்றிய பாசக அரசு புலம்பெயர் தொழிலாளர்கள் மீது கொண்டிருந்த அக்கறை எப்படிப்பட்டது என்பதை உலகுக்கு காட்டிய தருணமாக அது அமைந்தது. இந்த பாசகவினர் புலம்பெயர் தொழிலாளர்கள் மீது அக்கறை கொண்டவர்கள் போல கபட நாடகமாடி ஓர் இரத்தக் களரியை ஏற்படுத்த முயல்கின்றனர்.

தமிழ்நாட்டில் உள்ள தனியார் பெருநிறுவனங்கள், கட்டுமானத் துறை, ஜவுளித் துறை உள்ளிட்ட அனைத்து உற்பத்தி மற்றும் சேவை துறைகளிலும் 80% வேலை தமிழ்நாட்டவர்களுக்கே வழங்க வேண்டும். இதற்கான சட்டத்தை தமிழ்நாடு அரசு இயற்றி அமல்படுத்த வேண்டும். இது ஒன்றும் புதிய கோரிக்கையல்ல, திமுக தனது தேர்தல் அறிக்கையில், தனியார் துறையில் 75% வேலை தமிழர்களுக்கே வழங்க வழிசெய்யும் சட்டமியற்றப்படும் என்று வாக்குறுதி அளித்துள்ளது. திமுக இன்னும் நிறைவேற்றாத தேர்தல் வாக்குறுதிகளில் இதுவும் ஒன்றாகும். இது தமிழ்நாட்டின் உழைப்புச் சந்தையைப் பாதுகாக்க ஓரளவுக்கு உதவும்.
பொதுவில், தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு குறைந்தபட்சக் கூலி சட்டம், சமவேலைக்கு சம ஊதியச் சட்டம், ஒப்பந்த தொழிலாளர்முறை ஒழிப்புச் சட்டம், மாநிலங்களுக்கு இடையே புலம்பெயரும் தொழிலாளர் சட்டம் – 1979 ஆகியவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும். இதன்மூலமே தமிழ்நாட்டுத் தொழிலாளர்களின் வேலைப்பறிப்பையும் வெளிமாநிலத் தொழிலாளர்கள் மீது நிகழ்த்தப்படும் அளவற்ற சுரண்டலையும் வெளிமாநிலத் தொழிலாளர்களின் கட்டுப்பாடற்ற வருகையையும் கட்டுப்படுத்த முடியும். தற்போது நிலவும் முரண்பாடுகளைப் பயன்படுத்தி அதில் தீ மூட்டி குளிர் காயத் துடிப்போரின் தீய நோக்கங்களை முறியடிக்க முடியும்.

தோழர் சதிஷ்,

சோசலிச தொழிலாளர் மையம்

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW