அதானி-பெருமுதலாளிகளில் பெரும் கொள்ளையன்
அதானி குழுமம் மீதான ஹின்டன்பர்க் நிறுவனத்தின் ஆய்வறிக்கை நாட்டின் தலைப்புச் செய்தியாகியுள்ளது. அதானி குழுமத்தின் பங்கு வர்த்தக மோசடி, வரி ஏய்ப்பு முறைகேடுகள் உள்ளிட்ட பொருளாதார முறைகேடுகளை ஹின்டன்பர்கின் ஆய்வறிக்கை ஆதாரத்துடன் அம்பலப்படுத்தியுள்ளதால், பங்கு வர்த்தகத்தில் அதானியின் பங்குகள் அதிவேகமாக வீழ்ச்சியடைந்து வருகிறது.
இக்கட்டுரை எழதுகின்ற இந்நேரத்தில் அதானியின் பங்கு மதிப்புகள் சரிபாதியாக சரிந்து 120 பில்லியன் டாலராக உள்ளது. பத்து நாட்களுக்கு முன்பாக உலகப் பணக்கார வரிசைப் பட்டியலில் மூன்றாம் இடத்திலிருந்த அதானி தற்போது பதிமூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
சர்வதேச கடன்களை வழங்குகிற கிரெடிட் சூசி (Credit Suisse), சிட்டி குரூப் போன்ற வங்கிகள் அதானியின் பிணைப்பத்திரத்தை அடமானமாக ஏற்றுக் கொண்டு இனி கடன் வழங்க முடியாது என அறிவித்துவிட்டது.
சர்வதேச வங்கிகள், இம்முடிவை எடுத்தபிறகு இதுவரை தூங்குவது போல பாசாங்கு செய்து வந்த இந்திய ரிசர்வ் வங்கி, அதானி குழுமத்திற்கு வழங்கியுள்ள கடன் விவரங்களை வழங்கும்படி வங்கிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி, நிலைமையில் தலையீடு செய்வதாக சமாளிக்க முயல்கிறது. இந்திய் ஸ்டேட் வங்கி மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கி மட்டும் அதானி குழுமத்திற்கு சுமார் 35,000 கோடி ரூபாய் கடன் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ், திமுக, இடதுசாரிகள் போன்ற எதிர்க்கட்சிகளானது, பங்கு வர்த்தகத்தில் இந்திய பொதுத்துறை வங்கிகளும் இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனமும்(74,000 கோடி) அதானி குழுமத்தில் முதலீடு செய்து நஷ்டமாகிவிட்டது ஆகவே பங்கு வர்த்தகங்களை ஒழுங்கு செய்கிற SEBI அமைப்பானது இந்த விவகாரத்தில் இறங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறது. அதானி விவகாரத்தை விவாதிக்கக் கோரி மக்களவை மற்றும் மாநிலங்களவையை எதிர்க்கட்சிகள் முற்றுகையிட்டு அமளியில் ஈடுபட்டு வருகின்றன.
ஆனால் அதானி விவகாரமானது கடல் பரப்பில் மேலே தெரிகிற பனிப்பாறையின் ஒரு பகுதிதான். அதானி குழுமத்தின் ஊழலும், முறைகேடும், பொதுப்பணத்தை சூறையாடுவதும் அரசியல்வாதிகளுடன் இணக்கமாக இருந்து கொண்டு அதனது வர்த்தக நலனை காப்பதும் முதலாளித்துவ அமைப்பின் பொதுப் பண்பாகும்.
ஏதோ அதானி மட்டும் நிதி மோசடி பேர்வழி போலவும் அம்பானி நேர்மையான முதலாளி போலவும் ஒரு தோற்றம நிலவுகிறது. முதலில் அம்பலப்பட்டது வேண்டுமானால் அதானியாக இருக்கலாம், அதானியைத் தொடர்ந்து வரிசையாக அம்பானி குழுமம், எஸ்ஸார் குழுமம், டாட்டா குழுமம், பஜாஜ் குழுமம், மஹிந்திரா குழுமம், ஆதித்ய பிர்லா குழுமம் என நாட்டின் ஒரு டசன் குழும நிறுவனங்கள் அனைத்தும் அதானிக்கு சலைத்தவை அல்ல. பங்கு வர்த்தக மோசடி முதலாக போலி நிறுவனங்கள் மூலமாக மொரிஷியஸ் நாட்டிலிருந்து மூலதனத்தை மடைமாற்றி வரி ஏய்ப்பு செய்கிற வித்தை தெரிந்தவைதான். அதானி குழமத்தின் பொருளாதார மோசடி ஏதோ தனிப்பட்ட ஒரு நிறுவனத்தின் மோசடி போன்றும், ஆளும் கட்சியான பாஜக-மோடி ஆதரவால் மட்டுமே வளர்ந்தது போன்றும், பங்கு வர்த்தகத்தை முறையாக கண்காணித்து சில கட்டுப்பாடுகளையும் சீர்திருத்தங்களையும் செய்தால் போதுமென்ற போக்கும் நிலவுகிறது.
அதாவது அதானி மோசடி என்பது ஒரு தற்செயல் நிகழ்வல்ல என்பதும் இந்திய ஏகபோகங்களின் வளர்ச்சிகளுக்கும் நாட்டு மக்களின் மீதான பொருளாதார அழுத்தங்களுக்கும் நெருக்கடிகளுக்கும் தொடர்பு இருப்பது என்பதுதான் நாம் இங்கு உறுதியாகக் கூற வருவது.
காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட முதலாளித்துவ கட்சிகள் அவ்வாறு கருதுவதில் தவறில்லை. மாறாக பாட்டாளி வர்க்கக் கட்சி என்றும் சோசலிசக் கட்சி என்றும் தங்களை அழைத்துக் கொள்கிற இடதுசாரிக் கட்சிகள் இவ்வாறு அதானி குழுமத்தின் முறைகேடுகளை தனிப்பட்ட முதலாளியின் ஊழல், மோசடி என்று குறுக்கலாமா? இல்லையென்றால் பிற முதலாளியக் கட்சிகள் போல அதானி குழுமம் குறித்து ஹின்டன்பர்க் வெளியிட்டுள்ள அறிக்கை மீது உச்ச நீதிமன்றத்தின் மூலம் நாள்தோறும் மேற்பார்வையுடன் கூடிய ஓர் உயர்மட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) கோரிக்கை வைத்து விஷயத்தை குட்டி முதலாளித்துவ கண்ணோட்டத்தில் குறுக்கிப் பார்க்குமா? முதலாளித்துவத்தின் தடையற்ற போட்டியானது உற்பத்தி குவிப்புக்கு இட்டுச் செல்லும் என நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்பாக மூலதனத்தில் மார்க்ஸ் எழுதியதை மறக்கலாமா? நூறாண்டுகளுக்கு முன்பாக, முதலாளித்துவத்தின் உச்ச கட்ட வளர்ச்சியே ஏகாதிபத்தியம் என்றும் உலகை பங்கு போட்டுக் கொள்வதற்கான ஏகாதிபத்தியங்களின் சந்தைப் போட்டியே உலகப் போர் என விளக்கிய லெனினின் போதனையை மறக்கலாமா? வரலாற்றுப் பூர்வமாக மார்க்சும் லெனினும் நிருபித்த முதலாளித்துவ கோட்பாடானது ஏற்கனவே நடைமுறையில் நிரூபணம் ஆகிவிட்டது. தற்போது இந்திய நிலைமையில் ஏகபோகம் நடைமுறை உண்மை ஆகிவிட்டது; அதனது வெளிப்பாடுதான் இந்நிகழ்வு எனத் துணிந்து கூற கம்யூனிஸ்ட் கட்சிகள் தயங்குவதேன்?
இந்தியப் பொருளாதாரமும் ஏகபோகமும்:
அதானி குழமத்தின் பொருளாதார முறைகேடு விவகாரம் உள்ளங்கை நெல்லிக்கனி போன்று நவீன முதலாளித்துவத்தின் பண்பை வெளிப்படுத்திவிட்டது.
1990 களில் இந்தியாவின் சந்தையை உலகமயம்,தாராளமயம்,தனியார்மயத்திற்கு திறந்துவிட்ட நிகழ்வானது, அடுத்த முப்பது ஆண்டுகளில் இந்தியாவில் ஏகபோக முதலாளித்துவ உருவாக்கத்திற்கு வித்திட்டது.
இந்தியாவின் பொருளாதாரம் விரல் விட்டு எண்ணக் கூடிய ஒரு சில ஏகபோக முதலாளிகளின் கட்டுப்பாட்டிற்குள் சென்று விட்டதன் சிறு தெறிப்பே அதானி குழுமத்தின் மீதான முறைகேட்டு நிகழ்வு.
உலகப் பொருளாதாரத்தின் ஒரு பகுதியாக சந்தையை பங்குபோட்டுக் கொழுக்கிற ஒரு சில ஏகபோக முதலாளிகளிடம் நாட்டு மக்கள் அடமானம் வைக்கப்பட்ட நிகழ்வின் ஒரு வெளிப்பாடுதான்.
- இந்திய முதலாளித்துவ வளர்ச்சியானது போட்டியிலிருந்து ஏகபோகமாக மாறிவிட்டதை காட்டுகிறது.
- இந்தியப் பெரு முதலாளிகள், முதலாளித்துவத்தின் உச்ச கட்ட வளர்ச்சியான ஏகபோக முதலாளிகளாக பரிமாணமடைந்துவிட்டதையும், வங்கிகள் மூலமாக அசைவற்ற மூலதனத்தை முனைப்புள்ள மூலதனமாக திரட்டி, உற்பத்தி குவிப்பிலும் லாபத்தை பெருக்குவதில் புல்லுருவித்தனப் பண்புடன் பொதுச்சொத்தை சூறையாடிவருவதைக் காட்டுகிறது.
- பிற நாட்டு தொழில்களில் அசுர வேகத்தில் நுழைவது ஏகபோகத்தின் பண்பாக உள்ளது. அதானி குழுமமும் அம்பானி குழுமமும் இந்த பண்பின் எதார்த்த சாட்சிகள்.
நூறாண்டுகளுக்கு முன்பாக இங்கிலாந்து, ஜெர்மனி, அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் முதலாளித்துவத்தின் உச்ச கட்ட வளர்ச்சியின் விளைபொருளாக ஏகபோக முதலாளிகள் உருவானார்கள். மூலதனத்தை ஏற்றுமதி செய்தும் உலக சந்தையை மறு பங்கீடும் செய்து கொண்டனர். காலனிய நாடுகளை சுரண்டியும் கந்து வட்டி அரசாக சுரண்டினர். சந்தைப் பங்கீடுகளுக்காக உலகப் போர்களில் ஈடுபட்டனர். தற்போது நூறாண்டுகளுக்கு பிறகு ஆசியாவில் ஏகபோக முதலாளிகள் ஐரோப்பிய மாதிரியை பிரதிபளித்து உருவாகி வருகின்றனர். சீனாவிலும், ரஷ்யாவிலும் இந்தியாவிலும் விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சில ஏகபோக குழுமங்கள் நாட்டின் வளங்களை சுரண்டிக் கொழுக்கின்றன. அந்நாடுகளின் அரசுகள் ஏகபோக சக்திகளின் ஊது குழலாக, அவர்களின் நலன்களைக் காத்துப் பேணும் அரசாக உள்ளது.
ஏகபோகத்தின் முதன்மைப் பங்கான உற்பத்தியின் ஒன்றுகுவிப்பும் குழு இணைவு உருவாக்கமும்
நாம் நவீன முதலாளித்துவ சமுதாயத்தில் வாழ்ந்துகொண்டிருகிறோம். நவீன முதலாளித்துவ உற்பத்தி முறையிலும் அதற்கு பொறுத்தமான உற்பத்தி உறவிலும் ஏதோ ஒரு கண்ணியில் நாம் தெரிந்தும் தெரியாமலும் அறிந்தும் அறியாமலும் பிணைக்கப்பட்டுள்ளோம்.
நவீன முதலாளித்துவ உற்பத்தி முறையில், முதலாளிகளுக்கு இடையிலான போட்டிகள் அகற்றப்பட்டு ஒரு பெரும் நிறுவனம் ஏகபோகமாக மற்ற முதலாளிகளை விழுங்கி பெருத்து வளர்கிறது. இப்படி ஊதிப் பெருகி பிரம்மாண்ட வளர்ச்சிப் பெறுவது நவீன முதலாளித்துவத்தின் முக்கியமான அம்சமாகும். இது நவீன முதலாளித்துவ அமைப்பின் உச்சகட்ட வளர்ச்சி நிலையாகும்.
புதிய தொழில் தொடங்குவதற்கான மூலதனமும் தொழில்நுட்பமும் பாகசுர நிறுவனங்களுடன் போட்டி போட இயலாமல் சிறு தொழில் நிறுவனங்கள் சந்தையை விட்டு வெளியேறுகின்றன. இந்தியாவில் அப்படி நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான நடுத்தர உயர் நடுத்தர கோடீஸ்வர முதலாளிகளை விழுங்கி ஏப்பம் விட்டு செரித்து ஊதிப் பெருகி ஏகபோக குழுமமாக பரிமாணம் அடைந்த நிறுவனங்களில் ஒன்றுதான் அதானி குழுமம்.இந்தியாவின் நவீன முதலாளித்துவ அமைப்பின் நரம்பும் சதையுமாக தலை முதல் கால் வரையில் ரத்தம் சொட்ட சொட்ட கண் முன் நிற்கிற முதலாளித்துவத்தின் கோர வடிவம்.
அதானி எனும் ஏகபோக குழுமத்தின் பிரம்மாண்டத்தை புரிந்துகொள்ள கீழ்வரும் புள்ளிவிவரங்களைப் பார்ப்போம்.
அதானி எனும் தாய் குழுமத்தின் முக்கிய சேய் நிறுவனங்கள்
No | நிறுவனங்கள் | சந்தை மதிப்பு (கோடிகளில்) |
1 | Adani Enterprises Limited | 22,909 |
2 | Adani Ports & Special Economic Zone Ltd | 77,715 |
3 | Adani Power Ltd | 24,395 |
4 | Adani Transmission Ltd | 38,114 |
5 | Adani Green Energy Ltd | 30,123 |
6 | Adani Gas Limited | 19,192 |
சொத்து மதிப்பு
- ஹின்டன்பர்க் நிறுவனத்தின் ஆய்வறிக்கை வெளியாவதற்கு முன்பு (ஜனவரி 24,2023) அதானி உலகின் மூன்றாவது பணக்கார நபராக இருந்தார். அப்போது அவரது சொத்து மதிப்பு 120 பில்லியன் டாலர்கள். (1பி.=100கோடி ஒரு டாலர்=80ரூ).
அதானி-இந்திய முதலாளித்துவத்தின் உச்ச கட்ட வளர்ச்சியின் எதார்த்த சாட்சி
முதலாளித்துவ வளர்ச்சியின் உச்ச கட்டத்தில் பல்வேறு தொழில்களை உள்ளடக்கிய நிறுவனங்களை ஒரு குழுமத்தின் குடையின் கீழ் கொண்டு வருவது முக்கிய நிகழ்வாகும். பெரும்பாலும் இந்த தொழில்கள் யாவும் இணை தொழிலாக அமைந்திருக்கும். அதாவது ஓரு தொழிலின் கழிவு அல்லது உற்பத்தி பொருள் மற்றொரு தொழிலுக்கு கச்சாப் பொருளாக பயன்படும் வகையில் அமைந்திருக்கும். அதானி குழுமத்தின் தொழில் நிறுவனங்கள் அதன் இணை தொழில் நிறுவனங்களோடு எப்படி இணைக்கப்பட்டுள்ளது என்பதைப் பார்ப்போம்.
தொழில் | இணைத் தொழில் |
அதானி நிலக்கரி சுரங்கத் தொழில் | அதானி அனல் மின் நிலையம் |
அதானி அனல் மின் நிலையம் | அதானி மின்கடத்தி நிறுவனம் |
அதானி அனல் மின் நிலையம் | அதானி சிமெண்ட் ஆலை (அம்புஜா, ஹோல்சிம்) |
கச்சா பொருட்களை ஏற்றுமதி/இறக்குமதி செய்வதற்கான துறைமுங்களையும் விமான நிலையங்களையும் கொண்டுள்ள பெரிய அதானி போக்குவரத்து மற்றும் அதானி துறைமுக நிறுவனங்கள். |
அதானி நிலக்கரி சுரங்கத் தொழில் நிறுவனத்தால் தோண்டி எடுக்கப்படுகிற நிலக்கரியானது அதானி கப்பல் / விமான போக்குவரத்து மூலமாக அதானியின் துறைமுக நிறுவனத்திற்கோ, அதானியின் விமான நிலையத்திற்கோ அனுப்பப்படுகிறது. இங்கிருந்து நிலக்கரியை கச்சாப் பொருளாக கொண்டு, மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த அனல் மின் நிலைய நிறுவனத்தின் மின் உற்பத்தி நிகழ்முறையில், உற்பத்திக் கழிவாக நிலக்கரி சாம்பல் கிடைக்கிறது. இந்த நிலக்கரி சாம்பலானது, அதானியின் சிமென்ட் ஆலைகளுக்கு கச்சாப் பொருளாக பயன்படுகிறது.
அதுபோல அதானி அனல் மின் நிலையத்திலிருந்தோ, சூரியஒளி மின் உற்பத்தி ஆலையத்திலிருந்தோ உற்பத்தி செய்ப்படுகிற மின்சாரத்தை அதானி மின்கடத்தி கட்டமைப்பு நிறுவனம் மூலமாக மின்பகிர்மானத்திற்கு வழங்கப்படுகிறது. இந்த அனைத்து தொழில் நிறுவனங்களையும் கட்டுப்படுத்தி நிர்வகிக்கிற ஒரு பெரும் தொழில் குழுமாக அதானி குழுமம் செயல்படுகிறது.
இவ்வாறு ஒன்றுக்கொன்று தொடர்புடைய தொழில் நிறுவனங்கள் ஒரு குழுமத்தின் குடையின் கீழ் உற்பத்தியில் ஈடுபடுகிற முறையானது, குழும உற்பத்தி முறை (Combination of production) என அழைக்கப்படுகிறது. முதலாளித்துவ வளர்ச்சியின் உச்ச கட்ட நிலையே இந்த குழும உற்பத்தி ஆகும்.
குழும இணைப்பின் பயன்கள் முறையே
- சந்தையின் ஏற்ற இறக்கத்தில் தாக்குப்பிடித்து நிற்பது.
- நிலையான லாப வீதத்தை உத்தரவப்படுத்துவது.
- கச்சா பொருட்களின் விலை ஏற்ற இறக்க நிலைமைகளை சமாளித்து சந்தையில் நீடித்திருப்பது.
- போட்டியை அகற்றுகிறது. தொழில்நுட்பத்தை கட்டுப்படுதுகிறது.
மேற்குறிப்பிட்ட உதாரணமானது,அதானி குழமத்திற்கு மட்டுமானது. இதையே நாம் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமத்திற்கும், பிர்லா குழமத்திற்கும் டாட்டா குழுமத்திற்கும் பொருத்தலாம்.
நாம் மேலே குறிப்பிட்டுள்ள அம்சமானது, ஏகபோகப் பண்பின் ஒரு பகுதிதான். ஏகபோகத்தின் அடித்தளமான சக்தி அதன் மூலதன திரட்சியாகும். இதை விளங்கிக் கொள்ள வங்கிகளின் ஏகபோகம் குறித்தும் தொழில்குழுமத்துடனான அதன் உறவையும் நாம் ஆராயவேண்டும்.
அடுத்தப் பகுதியில் அதைக் காண்போம்.
ஆதாரம்:
- ஏகாதிபத்தியம்-முதலாளித்துவத்தின் உச்ச கட்ட வளர்ச்சி-வி.இ.லெனின்,தமிழில் அப்பணசாமி ,பாரதி புத்தகாலயம்
- https://indiancompanies.in/adani-group/
- அதானிக்கு சேவையே மோடியின் பிறவிப் பயனாம்! -ச.அருணாசலம்-அறம்