வகுப்புவாத வன்முறை தடுப்பு மசோதா: ஏன் சட்டமாக்கப்பட வேண்டும்?

07 May 2022

நவம்பர் 2011ல் சப்ரங் இந்தியா இணையத்தளத்தில் வெளியான இந்த கட்டுரை சமகாலத்தில் அதிகரித்திருக்கும் வன்முறைகளின் பின்னணியில் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

வகுப்புவாதத்திற்கு எதிரான போரைத் தொடங்கிய ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு ,1998 ஆம் ஆண்டில், சுதந்திர இந்தியாவின் முதன்முதல் வகுப்புவாத வன்முறை (ஜபல்பூர், 1961) மற்றும் அதனை தொடர்ந்து நிகழ்ந்த பல திட்டமிட்டப் படுகொலைகளின் மீதான நீதிமன்ற தீர்ப்புகளின் தொகுப்புகளை நாம் வெளியிட்டோம். அதில்  உயிரையும் உடைமையையும்  காவு வாங்கும் வன்முறை வெறித்தனங்களின் இரண்டு   குணாதிசயங்களைக்  குறிப்பிட்டோம்.

அந்த இரண்டு குணாதிசயங்களும் இன்றும் பொருந்தும்.

ஒன்று, வலதுசாரி இயக்கங்களின் மத மற்றும் பிற சிறுபான்மையினருக்கு எதிராக கமுக்கமான, ஆனால் கடுமையான வெறுப்புப் பேச்சு மற்றும் வெறுக்கத்தக்க எழுத்துகள் மூலம் மக்களை அணிதிரட்டுவது. இச்செயல்கள் யாவுமே  இந்திய தண்டனைச் சட்டத்தின்படி விதி மீறல்களாக இருந்தாலும், அவை கட்டுப்படுத்தப்படாமலும், தண்டிக்கப்படாமலும் போய்விடுகின்றன, இது வன்முறைக்கான சூழலை உருவாக்குவதோடு பெரும் வன்முறை வெடிப்பதற்கான ஆதாரம் ஆகிறது.

மற்ற முக்கிய காரணமாக இந்திய நீதித்துறையின் பல உறுப்பினர்களால் கருதப்படுவது, அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினரால் சட்ட ஒழுங்கு காப்பாற்றப்படாததால் அது வன்முறையை மறைமுகமாக  ஆதரிப்பதற்கு ஈடாகிறது.

இந்த இரண்டு அம்சங்களும் எல்லா வன்முறைகளிலும் காணப்படுகிறது – ஜபல்பூர் (1961), ராஞ்சி (1967, நீதிபதி ரகுபீர் தயாள் விசாரணை கமிஷன்), அகமதாபாத் (1969, நீதிபதி ஜக்மோகன் ரெட்டி விசாரணை கமிஷன்), பிவாண்டி, ஜல்கான் மற்றும் மஹாத் (1970, நீதிபதி டிபி மாடன் கமிஷன்), தளச்சேரி (1971, நீதிபதி ஜோசப் விதயத்தில் விசாரணை கமிஷன்), ஹாஷிம்புரா (1987) மற்றும் பாகல்பூர் (1989). இவை அனைத்திலும் சிறுபான்மையினர் கடுமையாக தாக்கப்பட்டதோடு அவர்களுக்கான சட்ட உதவிகளும், இழப்பீடுகளும் மறுக்கப்பட்டன.

1984-ல் டெல்லியிலும், 1992-1993-ல் பம்பாயிலும், 2002-ல் குஜராத்திலும் நடந்த திட்டமிடப்பட்ட வன்முறைகள், அதில் ஈடுபட்ட அரசு அதிகாரிகள் மற்றும் வன்முறையாளர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதில் இதுவரை இல்லாத புது உச்சம் தொட்டுள்ளது. இந்திய சுதந்திரத்திற்குப் பின்னான வகுப்புவாத வன்முறையின் வரலாற்றை ஆராய்ந்தால் நீதி பரிபாலனை மற்றும் இழப்பீடுகள் வழங்குவதில் இருக்கும் மோசமான நிலை வெளிப்படுகிறது. இன்றும் துரதிர்ஷ்டவசமாக, பாதிக்கப்பட்ட சிறுபான்மையிரான முஸ்லிம்கள், சீக்கியர்கள் மற்றும் கிறித்தவர்கள், குற்றங்கள் நடந்து பல ஆண்டுகளுக்குப் பிறகும் விசாரணையின் முதல் கட்டத்தில் நீதி வேண்டி   காத்திருப்பதற்கான பல உதாரணங்கள் உள்ளன.

புதிதாக வடிவமைக்கப்பட்ட வகுப்புவாத வன்முறை தடுப்பு மசோதா 2011(நீதி மற்றும் இழப்பீடுகளுக்கான உரிமை) பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பு அமைச்சரவையின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. அறுபது ஆண்டுகளுக்கு மேலாக பாரபட்சமாக வழங்கப்பட்ட நீதியின் காரணமாக ஏற்பட்ட ஏற்றத்தாழ்வு மற்றும் அவநம்பிக்கையை இந்த மசோதா களைய முயல்கிறது. பெரும்பான்மையினருக்கு எதிராக பாரபட்சமாக நடந்து கொள்வதற்குப் பதிலாக, எந்தவொரு பாதிக்கப்பட்டவருக்கும் – பெரும்பான்மையினராக இருந்தாலும் அல்லது சிறுபான்மையினராக இருந்தாலும் – இழப்பீடு மற்றும் உரிமைக்கான வலுவான திட்டத்திற்கு இது உறுதியளிக்கிறது.

நீண்ட காலமாக வகுப்புவாத வன்முறைக்கு ஆளாகியிருக்கும் நமது மக்களின் ஒரு பிரிவினர் எதிர்கொள்ளும் நீதி துறையின்  பாகுபாடுகளை இந்த மசோதா சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கிறது.எண்ணிக்கையில் குறைவாகவும், சமூக ரீதியாக பின்தங்கியும் இருக்கும் மக்கள், அவர்களின் அடையாளத்தின் காரணமாக தாக்கப்படும்போது, ​​அரசு நிறுவனங்களும் நீதி துறையும் பெரும்பாலும் அவர்களுக்கு எதிராக பாகுபாடான வழிகளில் செயல்படுகின்றன.

வகுப்புவாத வன்முறை தடுப்பு மசோதா, இந்தியாவின் எந்த மாநிலத்திலும் உள்ள மத மற்றும் மொழி சிறுபான்மையினரையும், ஒடுக்கப்பட்ட சாதியினரையும், பழங்குடியினரையும் திட்டமிடப்பட்ட வகுப்புவாத வன்முறை உட்பட அனைத்து வன்முறையிலிருந்தும் பாதுகாக்க முயல்கிறது. இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள குற்றங்களைச் சேர்ப்பதைத் தவிர, பாலியல் வன்கொடுமையின் வரையறையை விரிவுபடுத்தும் நோக்கில் பாலியல் வன்முறை  மட்டுமல்லாமல், பாதிக்கப்பட்டவர்களைக் களங்கப்படுத்தும்  (பொது இடங்களில் ஆடைகளை அகற்றுவது உட்பட) எந்த ஒரு செயலையும் பாலியல் குற்றங்களாக இச்சட்டம்  வரையறுக்குகிறது. மேலும்  வெறுப்பு பேச்சு மற்றும் எழுத்திற்கு இந்திய தண்டனை சட்டம் 153 ஏ பிரிவின் கீழ் இருக்கும் வரையறையும் விரிவுபடுத்துகிறது.

அரசு அதிகாரிகள் தங்களது கடமையிலிருந்து தவறுவது குறித்த விளக்கத்தை இந்த மசோதா மறுவரையறை செய்கிறது. அதாவது இந்திய தண்டனைச் சட்டத்தின்படி அரசுத்துறை அதிகாரிகள் கடமை தவறுவது ஒரு  குற்றமாக வரையறக்கப் பட்டிருந்தாலும் , அரசு அதிகாரிகளின் கடமை தவறுதலின் வரைமுறையையும் இந்த மசோதா விரிவுபடுத்துகிறது. மேலும் இந்தியாவில் முதல் முறையாக அரசு ஊழியர்கள் அல்லது  உயர் அதிகாரிகளின் கடமை தவறுதலின் குற்றங்களை இந்த மசோதா  உள்ளடக்குகிறது.  “அரசு அதிகாரி தொடர்ச்சியான முறையில் சட்டத்திற்குப் புறம்பான செயல்களில் பரவலாக திட்டமிட்டபடி நடந்ததாகக் காட்டப்படும்போது, ​​வகுப்புவாத வன்முறைகளைத் தடுக்கும் கடமையில் தோல்வியுற்றதாகவும் அவரின் கட்டளை அல்லது மேற்பார்வையின் கீழ் உள்ள அதிகாரிகளைக் கட்டுப்படுத்த தவறியதாகவும்  குற்றம் சாட்டப்படலாம்” என்கிறது இந்த மசோதா. இந்த குற்றத்திற்கான குறைந்தபட்ச தண்டனையாக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படுவதால், டெல்லி 1984 அல்லது பம்பாய் 1992-1993 அல்லது குஜராத் 2002 போல் மீண்டும் நிகழாமல் மேலதிகாரிகள் கட்டுப்படுத்துவார்கள். இந்த வரைவு மசோதா வன்முறைகளின் போது அரசு அதிகாரிகளை சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க செய்வதோடு பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையான இழப்பீடை வழங்கவும் வழி செய்கிறது.

அரசு அதிகாரத்தின் பாரபட்சமான செயல்பாடு மற்றும் பாரபட்சமான நீதி வழங்கல் ஆகியவற்றைச் சரிசெய்வதற்கான நேர்மையான மற்றும் நியாயமான சட்ட நடவடிக்கை என்பது தெளிவான அரசியலமைப்பு உரிமையிலிருந்து  வலிமை பெறுகிறது. இந்திய அரசியலமைப்பின் பிரிவு 14 கூறுவதாவது “இந்திய தேசத்தின் எல்லைக்குள் எந்தவொரு நபருக்கும் சட்டத்தின் முன்னான சமத்துவத்தையும் சட்டத்தினால் வழங்கப்படும்  சமமான பாதுகாப்பையும்  அரசு மறுக்கக்கூடாது”. பிரிவு 21 அனைத்து மக்களின்  வாழ்க்கை மற்றும் சுதந்திரத்தின் (மற்றும் சொத்து) சமமான பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அரசு பொறுப்பைத் தெளிவாக விளக்குகிறது.  மற்றும் பிரிவு 15(1) “மதம், இனம்,சாதி, பாலினம், பிறந்த இடம் அல்லது அவற்றில் ஏதேனும் ஒன்று ஆகியவற்றின் அடிப்படையில் எந்த குடிமகனுக்கும் எதிராக அரசு பாகுபாடு காட்டக்கூடாது”. இதன் மூலம் அச்சுறுத்தலை எதிர்கொள்கிற  சிறுபான்மை மக்களுக்கு  அரசிடமிருந்து பாதுகாப்பு தேவைப்படலாம் என்பதை அரசியலமைப்பு அங்கீகரிக்கிறது.

பொதுவாக ஜனநாயக நாடுகளில்  (மத/இன)பெரும்பான்மை மக்கள் தங்களைத் தாங்களே பாதுகாத்து கொள்ள முடியும் ஆனால் சிறுபான்மையினருக்கு சிறப்புப் பாதுகாப்பு தேவை என்ற அனுமானத்தை முன்வைக்கிறது. உதாரணமாக  வகுப்புவாத வன்முறையைக் கையாள்கிற இந்திய அனுபவமானது,எண்ணிக்கையில் பலவீனமான மற்றும் சமூக ரீதியாக பின்தங்கிய மக்கள் – மொழி அல்லது மத சிறுபான்மையினர் அல்லது தலித்துகள் அல்லது பழங்குடியினர் – அவர்களின் அடையாளத்தின் காரணமாக தாக்கப்படும் வன்முறை வரலாற்றுடன் ஆராய வேண்டும் . குறிப்பாக இந்த வன்முறைகளில் பட்டியல் சாதிகள் மற்றும் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் (அட்டூழியங்கள் தடுப்பு) சட்டம் 1989 இன் உபயோகத்தை (அல்லது உபயோகிக்க படாததை ) மதிப்பாய்வு செய்தால் இந்த சட்டத்தின் தேவைக்கான காரணங்கள் அனைத்தும் சிறுபான்மையினர் (மதம் மட்டுமில்லாமல் அனைத்து வகையான) பாதுகாப்பு சட்டத்திற்கும் பொருந்தும் என்பது புலப்படும்.

“சிறுபான்மை” என்பது மதத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட விசயம் அல்ல ,இருக்கவும்  கூடாது. ஏனெனில் யதார்த்தம் அப்படியில்லை என்பதை  காசுமீர் பள்ளத்தாக்கில் காசுமீரி பண்டிட்டுகள் மீதான தாக்குதல்கள், மும்பை மற்றும் மகாராஷ்டிராவில் வட இந்தியர்கள் / பீஹாரிகளின் மீதும் கர்நாடகாவில் தமிழர்கள் மீதும்  கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகள் காட்டுகின்றன. தற்ப்போது அதிகரித்திருக்கும் மக்கள் இடம்பெயர்வு அதனால் ஏற்படும் புவிசார் அரசியல் மாற்றங்கள் ஆகியவற்றின் பின்னணியில் அனைத்து மக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்யும் நடவடிக்கைகளையும் ஜனநாயகங்கள் முன்னெடுக்க வேண்டும். முறையான நீதி மற்றும் இழப்பீடு வழங்குதலில் இந்த யதார்த்தம் பிரதிபலிக்க வேண்டும்.

முன்மொழியப்பட்ட இந்த மசோதாவை ஜம்மு மற்றும் காசுமீர் மாநிலத்தில் சட்டமாக்குவதற்கு  ஓர் எளிய வழி உள்ளது. இந்திய ஜனாதிபதியிடம் இந்த சட்டத்தை ஜம்மு காசுமீரில் அமல்படுத்தக் கோரி அம்மாநில சட்டமன்றத்தில்  முதலில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும். அதன்பிறகு, புதிய சட்டத்தை ஜம்மு மற்றும் காசுமீரில் நீட்டிக்க ஜம்மு காஷ்மீர் (சட்டங்கள் நீட்டிப்பு சட்டம்) 1956 இல் திருத்தம் செய்வதற்கு இந்திய ஜனாதிபதியால் நாடாளுமன்றத்தில் ஒரு குறிப்பை சேர்க்க வேண்டும்.

சிறுபான்மையினர் பாதுகாப்பிற்கான சட்டமானது,மத்திய அரசுக்கு ஏற்கனவே இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 355வது பிரிவில் உள்ள “புற மற்றும் உள் வன்முறைகளுக்கு எதிராக மாநிலங்களைப் பாதுகாப்பதற்கான கடமை” யின் படி வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களிலிருந்து உரிமை கோருகிறது. அந்த சட்டத்தின்படி : “ஒவ்வொரு மாநிலத்தையும் வெளிப்புற ஆக்கிரமிப்பு மற்றும் உள் இடையூறுகளுக்கு எதிராகப் பாதுகாப்பது, மேலும் ஒவ்வொரு மாநிலத்தின் அரசாங்கமும் இந்திய அரசியலமைப்பின் விதிகளின்படி செயல்படுவதை உறுதி செய்வது ஒன்றியத்தின் கடமையாகும்” என்கிறது. இது ஏற்கனவே கணிசமான விவாதத்தை உருவாக்கியுள்ளது, இந்த மசோதா நாடாளுமன்ற நிலைக்குழுவின் முன் வைக்கப்படும் போது மேலும்  விவாதிக்கப்படும். இதன் பின்னணியில் இந்தியாவின் கூட்டாட்சி பற்றி மட்டுமே பேசும் எதிர்ப்பாளர்கள் வன்முறைகளின் போது நிகழும்  இத்தகைய கள யதார்த்தங்களை  ஒப்புக்கொள்ள தயங்குகின்றனர்;

கடந்தகால நிகழ்வுகளின்  மூலம்  சமூக செயற்பாட்டாளர்கள்  மற்றும் சட்ட வல்லுநர்களின் கூட்டு அனுபவமானது  அத்தகைய நேரங்களில் சட்டம் ஒழுங்கு அதிகாரத்தை தற்காலிகமாக இராணுவத்திடம் ஒப்படைக்குமாறு கோருகிறது. உயிர்கள் மற்றும் உடைமைகளைப் பாதுகாப்பதற்கான மாநில அரசாங்கங்களின் உரிமையில் தலையிடாமல் இதை செயல்படுத்த வரைவு சட்டமானது அத்தியாயம் IV இன் கீழ், சமூக நல்லிணக்கம், நீதி மற்றும் இழப்பீடு ஆகியவற்றிற்கான தேசிய ஆணையத்தை உருவாக்க பரிந்துரைக்கிறது. இந்த சட்டத்தை அமல்படுத்த இந்த ஆணையம் ஒரு கருவியாக செயல்படும். மேலும் வன்முறை மற்றும் கடமை தவறுதல் பற்றிய புகார்களைப் பெற்று அதை  விசாரணை செய்வது  மற்றும் வன்முறைக்கு வழிவகுக்கும் சூழ்நிலைகளைக்  கண்காணிப்பது ஆகியவையும் அதன் செயல்பாடுகளில் அடங்கும்.

(வகுப்புவாத வன்முறைகளை எதிர்கொள்வது பற்றி) தேசிய ஆணையம் மாநில அரசை வற்புறுத்த முடியாது.ஏனெனில் கூட்டாட்சி தத்துவத்தின்படி சட்ட ஒழுங்கு மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது.ஆனால் மாநில அரசுகள் செயலற்று  இருக்கிற போது ஆணையம் நீதிமன்றம் மூலமாக மாநில அரசை நெருக்கலாம்.மேலும் அன்றைய ஆளும் கட்சியின் தலையீடில்லாத வகையில் அந்த ஆணையத்திற்கான மாநிலப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணம் மற்றும் மறுவாழ்வு குறித்து கண்காணிப்பது  அவர்களின் பொறுப்புகளில் முக்கிய பகுதியாக இருக்கும்.

இந்த தேசிய ஆணையத்தின் உருவாக்கம், முன்னாள் நீதிபதிகள் உட்பட பல செயற்பாட்டாளர்கள் உடனான நீண்ட ஆலோசனைக்குப் பிறகே வரைவு சட்டத்தில் சேர்க்கப்பட்டது. ஒரு முறையான கண்காணிப்பு அமைப்பு இல்லாத பட்சத்தில்,தொடர்ச்சியான  வன்முறைகள் நடக்கும் போது சமீபத்தில்  பீகார் (ஃபோர்பேஸ்கஞ்ச், ஜூன்) ராஜஸ்தான் (பரத்பூர், செப்டம்பர்) மற்றும் உத்தரகாண்ட் (ருத்ராபூர், அக்டோபர் 2011) ல்  நடந்தது போல் மாநில அரசுகள் மெத்தனமாகவே செயல்படும் என அவர்கள் கருதினர்.

இந்த ஆணையத்தின் அதிகாரங்கள் பரிந்துரைகளாகவே இருக்கும் மற்றும் எந்த வகையிலும் கூட்டாட்சி கொள்கைகளை மீறாது. இதேபோல், வன்முறையைத் தடுப்பதற்கும் அதைக் கட்டுப்படுத்துவதற்கும் முறையான நீதியினை  கண்காணிக்கவும் மாவட்ட அளவிலான தகவல் சேகரிப்பை எளிதாக்கும் வகையில் மட்டுமே மாநில அளவிலான அதிகாரிகள்  நியமிக்கப்படுவர். மேலும், தகவல்களை பெறும் நோக்கங்களுக்காக தவிர, எந்தவொரு உத்தரவுகளையும் மாநில அரசாங்கத்திற்கு பிறப்பிக்க தேசிய ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை. இந்த ஆணையம் வழங்கும் பரிந்துரைகளுக்கும் நிபந்தனைகளுக்கும் தாங்கள் உடன்படாத போது அதை நிராகரிக்க சம்பந்தப்பட்ட மாநில அரசு/அரசு ஊழியர்களுக்கு அதிகாரமுள்ளது ஆனால் அதற்கான காரணத்தை மட்டும் பதிவு செய்ய வேண்டும்.

கடந்த 2011 ஆம் ஆண்டில், தேசிய ஆலோசனைக் குழு (என்ஏசி) இந்த வரைவு மசோதா குறித்த கருத்து கேட்க  ​​தொடங்கியதிலிருந்தே பல கேள்விகள் எழுந்தன.முக்கியமாக, பாதிக்கப்பட்ட சிறுபான்மையினரின் வரையறை குறித்ததாக இருந்தன. அதாவது மத மற்றும் மொழி சிறுபான்மையினர் மற்றும் ஒடுக்கப்பட்ட சாதியினர் மற்றும் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் பற்றின வரையறை.மேலும் தேசிய ஆணையத்தின் உருவாக்கம், மாநில அரசுக்கு அது வழங்கும் அறிவுரை, கேட்கும் கேள்விகள், வழக்கு விசாரணையில் தலையிடுதல் போன்றவை விமர்சனத்திற்கு உட்படுத்தப்பட்டன. சாட்சியத்தின் பாதுகாப்பு, விசாரணையின் போது பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் முழுமையான இழப்பீட்டுத் திட்டம் ஆகியவை பெரிதும் வரவேற்கப்படுகின்றன.

வரைவு மசோதாவிற்கு எதிராக, அரசியல்  சித்தாந்தங்களைக் கடந்து, இரண்டு விமர்சனங்கள் எழுப்பப்பட்டது. அதில் ஒன்று, சிறுபான்மை மற்றும் பெரும்பான்மை அடிப்படையில் மக்களைப் பிரிக்கும் ஒரு சட்டம் நடைமுறைக்கு வருவது  குறித்தான  கவலை. இரண்டாவது ஆட்சேபனை இன்னும் கூர்மையானது; சிறுபான்மையினர் ஒருபோதும் வன்முறைச் செயல்களைச் செய்ததில்லை அல்லது செய்ய மாட்டார்கள் என்ற அனுமானத்தினை அடிப்படையாக கொண்ட ஒரு சட்டம் நியாயமானதா அல்லது நியாயமானதாக இருக்க முடியுமா என்ற கேள்வி. இரண்டாவது விமர்சனத்தை முதலில் பதிவு செய்தவர் மூத்த வழக்கறிஞரும் அன்றைய ராஜ்யசபாவின் எதிர்க்கட்சித் தலைவருமான அருண் ஜெட்லி என்பதில் எந்த வியப்பும் இல்லை. ஜேட்லியின் விமர்சனத்தை ஆவேசமாக எதிரொலித்தவர்களில், இந்த சட்டத்தை கடுமையாக எதிர்த்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவைத் தவிர, அனைவரும் அன்றைய எதிர்க்கட்சியான பாரதீய ஜனதாவை சார்ந்தவர்கள். இந்த விமர்சனத்திற்கு ஆதரவாக பெரிதும் குரல் கொடுத்தது பா.ஜ.க, ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம் (ஆர்எஸ்எஸ்)  மற்றும் அதன் துணை அமைப்புகளான விஷ்வ ஹிந்து பரிஷத் (விஎச்பி) மற்றும் பஜ்ரங் தள் ஆகியன.

இதை தவிர மசோதாவுக்கு எதிரான பிற எதிர்ப்புகள் சில பிராந்தியக் கட்சிகளின் தலைவர்களிடமிருந்து வந்துள்ளன, திரிணாமுல் காங்கிரசின் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, வரைவு சட்டத்தின் கீழ் மத்திய/தேசிய அதிகாரத்தின் பங்கு குறித்தும், மாநில அரசுகளின் உரிமைகளின் பாதிப்பு குறித்தும் கேள்வி எழுப்பினார்.

பாதிக்கப்பட்ட சிறுபான்மையினரின் வரையறை தொடர்பான விமர்சனம்  குறித்து முதலில் கவனிப்போம்.

ஜனநாயகங்கள் என்பது தேர்தல் மற்றும் பிரதிநிதித்துவ அரசியலை அடிப்படையாகக் கொண்டவை, வெவ்வேறு பிரிவுகளின் குரலைப் பிரதிபலிக்கின்றவை, ஆனால் பெரும்பான்மையினருக்கு சில முன்னுரிமையை அளிக்கின்றவை. இந்த பெரும்பான்மை எப்போதும் மதம் சார்ந்து இருக்க வேண்டிய அவசியமில்லை; அது ஒரு குறிப்பிட்ட சமூக அடுக்கு அல்லது சாதி அல்லது ஒரு குறிப்பிட்ட சித்தாந்தத்தை  மையமாக கொண்டதாகவும் இருக்கலாம். அதிகாரச் சமநிலையைப் பேணவும்  ஒற்றைக் குரலாக ஒலிக்கும் சிறுபான்மையினரின் குரலுக்கு எப்போதும் இடமும் பாதுகாப்பும் அளிக்கவும் தங்களால் இயன்றவரை  ஜனநாயகங்கள் முயல்கின்றன. இந்த நுட்பமான சமநிலை தவறும் போது , ஜனநாயகம் நிலைகுலைந்து கும்பல் ஆட்சிக்குள் விழுகிறது. கும்பல் ஆட்சி நிகழும் போது அரசியலமைப்பு நிர்வாகத்தின் கூறுகளான அனைவரும் சமம் , குறிப்பாக சட்டத்தின்முன் அனைவரும்  சமம் போன்ற கோட்பாடுகள் நிராகரிக்கப்படுகின்றன. இந்தியாவை நாம் – கண்ணியத்துடன் எண்ணி பார்க்கும்போது – கூட்டாக கும்பலின் ஆட்சிக்கு அடிபணிவோம்  என்பதை ஏற்றுக்கொள்ள முடியுமா?

இந்தியாவில் தேர்தலை நாம் துடிப்பான, வாழும் ஜனநாயகத்தின் அடிப்படையாக கருதி கொண்டாடும் அதே வேளையில், அதே தேர்தலின் செயல்முறை மூலமே ஒவ்வொரு தனிநபரின் வாக்களிக்கும் உரிமையை நீர்த்துப் போக செய்யவும் மிருகத்தனமான பெரும்பான்மை அதிகாரத்தினை சட்டப்பூர்வமாக்கவும் முடியும் என்பதையும் நாம் உணர வேண்டும்.

வெறும் பெரும்பான்மை, சிறுபான்மை என்ற இரு கருதுகோள்களை மட்டும் வைத்து இதை அணுகுவது நகைப்பாக இருந்தாலும், நாம் கொண்டாடும் தேர்தல் வெற்றிகளின் முரண்பாடுகள் குறித்து பிரதிபலித்தோமெனில் நமது கருத்துக்களை மறுபரிசீலனை செய்வதற்கான தேவையை அது நமக்கு நினைவூட்டும். இந்தியாவில் வாக்கு அரசியலின் வழியே பெரும் குற்றங்கள் வசதியாக பயணிக்கின்றன. மேலும் வாக்கு அரசியல் எப்போதும்  அனைவருக்கும் நீதி மற்றும் யாருக்கும் பாகுபாடு இல்லாத கொள்கைகளைப் பிரச்சாரம் செய்யப் போவதில்லை.

நமது வரலாற்றில் ஒரு தருணத்தை நினைவு கூர்ந்து பார்த்தால், நவம்பர் 1984 இல், சுமார் 72 மணி நேரம் நீடித்த ஒரு வகுப்புவாத வன்முறையில், டெல்லியில் 3,000 க்கும் மேற்பட்ட சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அடுத்த ஆண்டு சனவரியில் பாராளுமன்றம் கூடியபோது, ​​படுகொலை குறித்த எந்த ஒரு இரங்கல் தீர்மானமும்  நிறைவேற்றப்படவில்லை. இன்னும் கவலையான நிகழ்வு என்னவென்றால், ஒரு மாதத்திற்கு முன்பு நடந்த தேர்தலில் வெற்றி பெற்று  கீழ்சபையில்  அமர்ந்திருந்தவர்களில் காங்கிரசு தலைவர்களான ஹெச்.கே.எல் பகத், ஜகதீஷ் டைட்லர் மற்றும் லலித் மாக்கன் ஆகியோர் சஜ்ஜன் குமாருடன் இனவாத வன்முறைக்காக  சிவில் உரிமைகளுக்கான மக்கள் சங்கம் மற்றும் ஜனநாயக உரிமைகளுக்கான மக்கள் ஒன்றியம் ஆகியவற்றின் 1984 ‘குற்றவாளிகள் யார்?’  என்ற அறிக்கையில் குற்றம்  சாட்டப்பட்டவர்கள். (இது பின்னர் பாதிக்கப்பட்டு  உயிர் பிழைத்தவர்களின் சாட்சியங்கள் மற்றும் வாக்குமூலங்களால் உறுதிப்படுத்தப்பட்டது.)

அன்றிலிருந்து இருபத்தேழு ஆண்டுகள் கடந்துவிட்டன.

1984 சீக்கிய படுகொலைகளில் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்ட நான்கு அரசியல்வாதிகள் ஒருபோதும் தண்டிக்கப்படவில்லை. அதற்குப் பதிலாக, அவர்களில் மூவர் வன்முறை நடந்த ஒரு மாதத்திற்குள் அவர்கள் வன்முறை நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட நகரத்திலிருந்து நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். இது படுகொலைகளுக்கு ஜனநாயக அங்கீகாரத்தைக் கொடுப்பதாக அமைகிறது. அவர்களுக்கு ஆளும் காங்கிரசு கட்சி சீட்டு வழங்கியது மட்டுமின்றி, இந்து வாக்காளர்கள், அவர்களின் நடவடிக்கைகளுக்கு பெரும்பான்மை ஆதரவை தெரிவிப்பதை போல் அவர்களுக்கு வாக்களித்து வெற்றி பெற வைத்தனர்.

ஜனநாயக அனுமதியுடன் நடைபெறும் இது போன்ற பெரும்பான்மை கும்பல் வன்முறைகளை சட்டப்படி தடுக்க வேண்டாமா ?

இந்திய ஜனநாயகம் அரசியல் மற்றும் கட்சி நலன்களுக்கு அப்பால் உயர்ந்து அதன் சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதி செய்யும் சட்டத்தை இயற்ற வேண்டாமா?

இதே போன்று, 1992-1993 இல் பம்பாயில் அப்பாவி முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையில் குற்றவாளிகள் என்று நீதிபதி பிஎன் ஸ்ரீகிருஷ்ணாவின் பாபர் மசூதி இடிப்புக்குப் பிந்தைய வன்முறை பற்றிய அறிக்கையில் பெயரிடபட்ட  பால்தாக்கரேவின் சிவசேனா மற்றும் அதன் தலைவர்கள் 1995 ஆம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலத்தில் மீண்டும்  ஆட்சிக்கு வந்தனர். சிவசேனா தலைவர் மதுகர் சர்போதார் 1996 ஆம் ஆண்டு மும்பை வடமேற்கு தொகுதியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார், மேலும் 1998 ஆம் ஆண்டு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் அறிக்கையில் வன்முறையை முன்நின்று நடத்தியதாக கூறப்பட்டவர், இதைப் போல குறிப்பிடப்பட்ட மற்றொருவர்  கோரேகானைச் சேர்ந்த சேனா தலைவர் கஜான் கீர்த்திகர். மேலும்  நீதிபதியின் அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்ட 31 காவலர்களும் தண்டிக்கப்படுவதற்குப் பதிலாக 1999 முதல் மாநிலத்தை ஆளும் காங்கிரசு-தேசியவாத காங்கிரசு ஆட்சியால் அவர்களின்  சுயலாபத்திற்காக பதவி உயர்த்தப்பட்டனர்.

2002ல் குஜராத்தில் நடந்த இனவழிப்பு(Genocide) மற்றும் அதற்குப் பின்னான நிகழ்வுகள் கும்பல் வன்முறைக்கான “ஜனநாயக” அங்கீகாரத்தை புதிய உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது. அக்கறையுள்ள குடிமக்கள் தீர்ப்பாயம்  – குஜராத் (The Concerned Citizens Tribunal – Gujarat 2002) என்கிற தீர்ப்பாயம் அதன் கண்டுபிடிப்புகளில், முதல்வர் நரேந்திர மோடியை, அரசு நடத்திய  இனவழிப்பைத்(Genocide) திட்டமிட்டவர் என்று கூறியது. மோடி டிசம்பர் 2002 மற்றும் 2007 இல் மீண்டும் ஆட்சிக்கு வந்தது மட்டுமல்லாமல், வெட்கமின்றி அவரும் அவரது கட்சியும் இந்த தேர்தல் வெற்றிகளைப் படுகொலைகளின் குற்றத்தை மறைக்கப் பயன்படுத்தினர். முதலமைச்சராகவும் உள்துறை அமைச்சராகவும் நிலுவையில் உள்ள பல வழக்குகளில் வன்முறைக்கு பொறுப்பானவராக குறிப்பிடப்பட்ட அவர், அப்போது தாக்கல் செய்யப்பட்ட பல குற்றப் புகார்களில் முக்கிய குற்றவாளியாகவும் இடம்பெற்றார். இதில் அரசு ஆவணங்களை அழித்தல், வன்முறை குற்றவாளிகளுடன் ஒத்த சித்தாந்தம் உடையவரை நீதிபதியாக நியமித்தல் போன்ற குற்றங்களும் அடங்கும்.

நாம் கொண்டாடும் தேர்தல் அரசியல் போன்ற ஜனநாயகத்தின் அம்சங்களாலேயே இங்கு அரசியலமைப்பு சிறை பிடிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நிலையிலும் வன்முறைகள்  தடுக்கப்படாமல், நீதி நடைமுறையின் சீர்குலைவு எல்லா நேரத்தை விடவும் உச்சத்தை எட்டியுள்ளது. ஆட்சி அமைப்பில் பெரும்பான்மைவாதம் ஊடுருவும்போது, ​​வகுப்புவாத வன்முறை தடுப்பு மசோதாவைப் போன்ற சட்டமியற்றுவது இன்றியமையாததாகிறது.

எனவே, நமது காலத்தின் மிகப் பெரிய சவால்களுள் ஒன்றாக விளங்குவது, இந்தியாவில் நாம் எப்படி அனைத்து மக்களையும் சமமாகப் பாதுகாக்கப் போகிறோம் என்பதாகும். நீதி பரிபாலனையில் பாரபட்சம் இல்லை என்று நம்மால் உறுதியாகச் சொல்ல முடியுமா? பல ஆண்டுகளாக வகுப்புவாத வன்முறைகளின் போது, ​​சிறுபான்மையினரே மிகப்பெரிய உயிர்கள் மற்றும் உடைமைகளை இழந்துள்ளனர் என்பதை நாம் மறுக்க முடியுமா? அத்தகைய குற்றங்களைச் செய்த குற்றவாளிகள் தண்டிக்கப்படாமல் தப்பித்துவிடவில்லையா ?

வகுப்புவாத வன்முறை தடுப்பு மசோதா எந்த இடத்திலும் சிறுபான்மையினர் ஒருபோதும்  வகுப்புவாத வன்முறையை செய்யவில்லை என அனுமானிக்கவில்லை. மராட் (கேரளா), மாலேகான் (மகாராஷ்டிரா) மற்றும் பிவாண்டியில் (மகாராஷ்டிரா) முஸ்லிம்கள்தான் கலவரக்காரர்கள் என்பதை மறுப்பதற்கில்லை. இதுபோன்ற சம்பவங்கள் நிகழும்போது, ​​காவல்துறையும் நிர்வாகமும் ஏற்கனவே உள்ள சட்டங்களின்படி நடந்துகொள்வதோடு, துல்லியமான முதல் தகவல் அறிக்கைகளை (எஃப்ஐஆர்) பதிவு செய்வதிலும், முழுமையான விசாரணைகளை மேற்கொண்டு, குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவதிலும் தவறவில்லை என்ற சட்டப்பூர்வ ஒப்புதலையே இந்த மசோதா பிரதிபலிக்கிறது. குற்றவியல் நீதி அமைப்பு அனைத்து இந்தியர்களுக்கும் தாமதமானதாகவும், சிரமமானதாகவும் இருக்குமெனில் அது சிறுபான்மையினரைப் பொறுத்தவரை, இன்னும் மோசமானதாக இருக்கிறது.

எனவே இந்த மசோதா அதன் வரையறை விதிகளில்,  இழப்பீடு தொடர்பான பிரிவுகளைத் தவிர, காவல்துறை மற்றும் அதிகார தலையீடு அதிகமாக இருக்கும் அனைத்து அம்சங்களிலும் பாதிக்கப்பட்டவர் வரையறுக்கப்பட்ட குழுவில் உறுப்பினராக இருந்தால் மட்டுமே பொருந்தும் என்கிறது. நியாயமான மற்றும் பாரபட்சமற்ற நிர்வாகத்தை உறுதிப்படுத்த, வரையறுக்கப்பட்ட குழுவில் மத மற்றும் மொழி சிறுபான்மையினர், ஒடுக்கப்பட்ட சாதியினர் மற்றும் பழங்குடியினர் இடம்பெறுவர்.

2009 இல் சுமார் 50 தலித் அமைப்புகள் இணைந்து 20 ஆண்டுகால  பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டம் 1989 இன் செயல்பாட்டை மதிப்பாய்வு செய்கையில், அந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் ஏற்படும்  சிக்கல்களில் ஒன்றாக, அரசு ஊழியர்களின் செயலற்ற தன்மை குறித்தான விதிகள் எதுவும் இல்லாததை கண்டறிந்தனர். அதோடு சாதிப் படிநிலையில் ஒடுக்கப்பட்ட சாதிகள் மற்றும் பழங்குடியினர் மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதும் வரைவு சட்டத்தில் பாதுகாக்கப்பட்ட குழுவில் அவர்களைச் சேர்ப்பதற்கான காரணமாகிறது.

வன்கொடுமை சட்டத்தைத் தவிர, சமூகநிலை தொடர்பான குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம் 2005ம் ஆண்டு முதல்  நடைமுறையில் உள்ளது. இந்த சட்டம் இயற்றப்படும்வரை, இந்திய அரசியல் சட்டத்தின் திருத்தப்பட்ட பிரிவு 498A என்பதே பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை நிகழும்போது பயன்படுத்தப்படும் குற்றவியல் சட்டப் பிரிவாக இருந்தது. இந்தத் திருத்தத்தின் மூலம் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதை எதிர்த்தவர்களில் பலர், ஒரு சில வழக்குகளில் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகக் கூறி, 498A பிரிவை ரத்து செய்ய வேண்டும் என்று நீண்ட காலமாக வாதிட்டனர். அதிர்ஷ்டவசமாக, எதார்த்த உண்மை நிலவரங்கள் அந்த திருத்தத்தைப் பாதுகாத்தன.

ஜேட்லி மூலம் பாஜக வகுப்புவாத வன்முறையை வெறும் “சட்டம் – ஒழுங்கு” பிரச்சனையாகக் காட்ட முயல்கிறது, அதே நேரத்தில் முதன்மையாக வகுப்புவாத வன்முறையை அனுமதிக்கும் முக்கிய காரணிகளையும், இரண்டாவதாக அது தீவிரமடைவதையும், மூன்றாவதாக நீதியை நிலைநாட்ட தவறுவதையும்  வசதியாகப் புறக்கணிக்கிறது. மேலும் தேசிய ஆணையத்தின் ஏழு உறுப்பினர்களில் நான்கு பேர் பாதிக்கப்பட்டவர்களின்  நலன்களுக்காக சிறுபான்மை சமூகங்களைச் சார்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்று வரைவு சட்டம் பரிந்துரைப்பதும் அவர்களை  கோபமடைய செய்கிறது.

ஜேட்லியின் ஆவேசமான வாதங்களில் மேலே குறிப்பிடப்பட்ட முக்கியமான கூறான அதிகார மற்றும் காவல்துறையின் ஒருதலை  சார்பு  கணக்கில்கொள்ளப் படவில்லை. பாஜக தலைவர்கள் (முன்னாள் துணைப் பிரதமர் உட்பட) செய்த குற்றங்கள் மற்றும் பெரும்பான்மை கும்பல் வெறி அலையில் அவரது கட்சி ஆட்சிக்கு வந்ததால் இதில் ஆச்சரியப்படுவதற்கில்லை. உதாரணமாக 1992 இல் பைசாபாத்-அயோத்தி மற்றும் 2002 இல் குஜராத் போன்ற நிகழ்வுகள் நிறுவன உதவி மற்றும் பெரும்பான்மை சார்பு ஆகியவை பாஜக தலைவர்களை வழக்குத் தொடுப்பதில் இருந்தும்  தண்டனையிலிருந்தும் தப்பிக்க உதவும் என்பதை விளக்கும்.

இன்னும் அறிவார்ந்த மட்டத்தில், சமூக அரசியல் செயற்பாட்டாளர் அசுதோஷ் வர்ஷ்னி முன்வைத்த வாதங்களும் முப்பதாண்டு பழமையான  யதார்த்தத்தில் மூழ்கியிருப்பதாகத் தோன்றுகிறது. வர்ஷ்னி கருதுவது போல் 1960 கள் மற்றும் 1970 களில் பிவாண்டி, அகமதாபாத், அலிகார் போன்ற வகுப்புவாத உணர்வுள்ள நகரங்களில் மட்டுமல்லாமல் இன்று வகுப்புவாத வன்முறை மற்றும் தீவிர கும்பல் கலவரங்கள் இந்தியாவின் அனைத்து  கிராமப்புறங்களுக்கும், நகரங்களுக்கும், பெருநகரங்களுக்கும் பரவி  இருக்கிறது . இந்த பெரும்பான்மை மதவாத பரவலோடு சேர்ந்த பாஜக வின் வளர்ச்சிக்கு முக்கிய காரணம், அதன் கருத்தியலை முறியடிக்க தவறிய “மதச்சார்பற்ற” காங்கிரசு மற்றும் இடதுசாரிகளின் தார்மீகத் தோல்வியே. வெறித்தனமான பெரும்பான்மையினரின் இந்த அத்துமீறல் நமது ஆட்சி முறைகளிலும், நிர்வாகம் மற்றும் காவல்துறையிலும் ஊடுருவியுள்ளது. இந்த சிக்கல்களை வரைவு மசோதா தீர்க்க உதவாத போதும் இத்தகைய செயல்களில் ஈடுபடும் அரசு அதிகாரிகள் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 14 மற்றும் 15 ன் படி செயல்படாமல், தங்கள் அடையாளங்களுக்காக தாக்கப்படும் சிறுபான்மையினரைப் பாதுகாக்க தவறுவதை குற்றமாக இந்த வரைவு சட்டம் கொள்கிறது.

நீதி மற்றும் உரிமையில் அக்கறை கொண்டவர்கள் அனைவரும் இந்த வரைவு சட்டம் குறித்தான விவாதத்தை மீட்டெடுப்பதற்கான முயற்சியில் இணைய வேண்டியது அவசியமாகிறது. தற்போது இந்த சட்ட வரைவு வெற்று  பிரச்சாரத்திற்கு பலியாகியுள்ளது. பகுத்தறிவற்ற தீயெண்ணத்தையும் வெறுப்பையும் கூட சட்டப்பூர்வமாக்குவதன் மூலம் அரசியல் பாதையில் வேகமாக  வெற்றி பெற்றவர்களால் இந்த பிரச்சாரம் மேற்கொள்ளபடுவதில் வியப்பொன்றுமில்லை.

நீண்ட காலமாக கிடப்பில் கிடக்கும் இந்த சட்ட வரைவின் மீது நியாயமான உரையாடலை தொடங்க , வகுப்புவாத மற்றும் வன்முறை தடுப்பு மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு உடனடியாக நிலைக்குழுவின்  முன் சமர்ப்பிக்கபட வேண்டும். அதற்குள் இருக்கும் எல்லா முரண்பாடுகளையும் அந்த நிலையில் களைய முயல வேண்டும். வெறுப்பு பரவல் மற்றும் கும்பல் வெறித்தனத்தை உருவாக்குவதன் மூலம் அரசியல் லாபத்தையும் வெற்றியையும் அனுபவிக்கும் அரசியல்வாதிகளால் இந்த நடைமுறை தடம் புரள்வதை  நாம் ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது.

தமிழில்: சற்ஜூன்

https://sabrangindia.in/article/communal-and-targeted-violence-bill-why-it-must-be-codified-law

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW