மக்கள் கண்காணிப்பகத்தை(Peoples Watch) சிபிஐ(CBI) யைப் பயன்படுத்தி முடக்க நினைக்கும் ஒன்றிய பாசக அரசுக்கு கண்டனம் – தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் பாலன் அறிக்கை

12 Jan 2022

ஒன்றிய மோடி அரசு மனித உரிமை அமைப்புகளுக்கு எதிராக நடத்திவரும் தொடர் வேட்டையின் பகுதியாக தமிழ்நாட்டில் இருந்து செயல்படும் மக்கள் கண்காணிப்பகத்தை முன்னெடுத்துள்ள சமூக சிந்தனை வளர்ச்சி மையத்தின்( CPSC)  மீது சிபிஐ யை ஏவிவிட்டுள்ளது.

கடந்த  2012, 2013 ஆம் ஆண்டுகளில் ஒன்றிய உள்துறை அமைச்சகம் CPSC அயல்நாடுகளில் இருந்து நிதி பெறுவதற்கு விதித்த தடையின் அடிப்படையில் பத்தாண்டுகள் கழிந்த நிலையில் சிபிஐ வழக்கு தொடுத்து நேற்று முன் தினம்  மதுரையில் உள்ள அவர்களது அலுவலகத்தில் சோதனை நடத்தியுள்ளது.  இத்தனைக்கும் அக்காலகட்டத்தில் விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து  தில்லி உயர்நிதிமன்றத்தில் முறையிடப்பட்டு அது செல்லாது என்ற தீர்ப்பும் 2014 இல் பெறப்ப்ட்டது. பின்னர் 2015 அக்டேபரில் CPSC இன்  FCRA வங்கிக் கணக்கின் அனுமதியை உள்துறை அமைச்சகம் புதுப்பிக்க மறுத்துவிட்டது. இதை எதிர்த்துப் போடப்பட்ட வழக்கு தில்லி உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் சிபிஐ யின் சோதனை நடந்துள்ளது. பாசிச மோடி – ஷா சிறுகும்பலின் சர்வாதிகார ஆட்சியில் மக்கள் கண்காணிப்பகம் தனது மனித உரிமை செயற்பாடுகளின்வழி சனநாயகத்தை மீட்டெடுக்க குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்துவருகின்றது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்திற்கு எதிராக நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுப் படுகொலை,  ஜெயராஜ் – பெலிக்ஸ் காவல் கொட்டடிக் கொலை, போலி மோதல் கொலைகள், காவல் சித்திரவதைகள் ஆகியவற்றிற்கு எதிரான செயல்பாடுகள் குறிப்பிடத்தக்கவை.

கடந்த 2014 ஆம் ஆண்டில் பாசிச மோடி – ஷா சிறுகும்பல் ஆட்சி அதிகாரத்தைப் பிடித்த நாள்தொட்டு மனித உரிமை அமைப்புகள்,   கிறித்தவ தொண்டு நிறுவனங்கள் FCRA சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தங்களின் மூலம் முடக்கப்படுவதும் நாட்டை விட்டே வெளியேற்றப்படுவதும் நடந்து வருகிறது.  ஒன்றிய அரசு சர்வதேச மன்னிப்புச் சபையின் ( Amnesty International) வங்கிக் கணக்கை முடக்கியதன் காரணமாக கடந்த 2020 செப்டம்பரில் அது  இந்தியாவில் தனது அலுலகத்தை மூடிவிட்டு வெளியேறியது. கிட்டத்தட்ட இரண்டாண்டுகள் அமலாக்கத் துறை, சிபிஐ ஆகியவற்றின் மூலம் தொடர் நெருக்கடிகளை ஒன்றிய அரசு கொடுத்து வந்தது. இதற்கு சர்வதேச மன்னிப்புச் சபையின் பன்னாட்டு தலைமையகம் மட்டுமின்றி மனித உரிமைக் கண்காணிப்பகம்( HRW) ஆகியவை கண்டனம் தெரிவித்தன. கிரீன்பீஸின்  இந்தியப் பிரிவுக்கும் இதே நிலைமை ஏற்பட்டது. வழக்கறிஞ்சர் கூட்டமைப்பும்( Lawyers Collective)   அமலாக்கத்துறையாலும் சிபிஐ யாலும் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டது.  குஜராத் கலவரத்திற்கு எதிரான நீதிக்கானப் போராட்டத்தில் புகழ்ப்பெற்ற தோழர் தீஸ்தா செதல்வாட் அவர்களால் தலைமை தாங்கப்படும் நீதி மற்றும் அமைதிக்கான மையம் என்ற மனித உரிமை அமைப்பு 2015 ஆம் ஆண்டு சிபிஐ யால் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டது. சாதியச் சிக்கலில் செயல்படக்கூடிய நவசர்ஜன் டிரஸ்ட் , மதச்சார்பின்மைக்காகப் பணியாற்றக் கூடிய ANHAD, Indian Social Action Forum ( INSAF) ஆகிய அமைப்புகளும் நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டன.

அமைதியான ஒன்றுகூடல் , அமைப்பாகும் உரிமைக்கான ஐ.நா.வின் சிறப்புப்  பிரதிநிதி இந்தியாவின் FCRA சட்டம் பன்னாட்டு விதிகளுக்கும், கோட்பாடுகளுக்கும் எதிராகவிருக்கிறது என்று சுட்டிக்காட்டினார்.  பின்னர், ஐ.நா.வைச் சேர்ந்த மூன்று  நிபுணர்கள் FCRA வை திரும்பப்பெறுமாறு இந்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இவையாவும் 2020 ஆம் ஆண்டு FCRA வில் மேலும் மோசமான திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவதற்கு முன்பு நடந்தவை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

2019 ஆம் ஆண்டு திசம்பரில் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட கணக்கின்படி மோடியின் ஆட்சிக்காலத்தில் சுமார் 14,500 அரசுசாரா தொண்டு நிறுவனங்கள்  அயல்நாட்டு நிதியைப் பயன்படுத்துவதில் இருந்து தடுக்கப்பட்டன. அதற்கு FCRA தான் பயன்படுத்தப்பட்டது.   கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் வறுமைக்குள் தள்ளப்பட்ட மக்களில் சிலருக்கேனும் இந்த அயல்நாட்டு நிதியுதவிகள் பயன்பட்டிருக்கக் கூடும்.

தன்னுடைய இந்துத்துவ அரசியலின் பகுதியாக கிறித்தவப் பின்னணிக் கொண்ட தொண்டு நிறுவனங்களை முடக்குவதும் இன்னொருபுறம் தன்னுடைய மனித உரிமை மீறல்கள் உலகின் கண்களுக்கு தெரியாதபடி மறைப்பதற்கு மனித உரிமை அமைப்புகளை இல்லாதொழிப்பதும் காவி-கார்ப்பரேட் பாசிச அரசின் நிகழ்ச்சி நிரலாக இருந்துவருகிறது.  பீமா கோரேகான் பொய் வழக்கில் மனித உரிமைச் செய்றபாட்டாளர்கள் 16 பேர் ஆண்டுக் கணக்கில் சிறை வைக்கப்பட்டிருக்கின்றனர். அதில் அருட்தந்தை ஸ்டேன் சுவாமி சிறையில் இருந்த படியே சாகடிப்பட்டார். இவர்கள் அன்றி உமர் காலித், சித்திக் காப்பான் என சனநாயகத்தின் குரல்கள் சிறைக் கொட்டடியில் அடைக்கப்பட்டிருக்கின்றன. காசுமீரில் நடந்துவரும் மனித உரிமை மீறல்களை மறைப்பதிலும் மோடி – ஷா – அஜித் தோவல் கும்பல் குறியாய் இருக்கிறது. அண்மையில் காசுமீர் மனித உரிமை செயற்பாட்டாளர் தோழர் குர்ரம் பர்வேஸ் ஊபாவின் கீழ் சிறைப்படுத்தப்பட்டார்.

இத்தகைய  உள்நாட்டு நிலைமையின் பின்னணியில்தான் மக்கள் கண்காணிப்பகத்தை நோக்கி பாசிஸ்டுகளின் கொடுங்கரங்கள் நீண்டுள்ளன. இந்த தாக்குதல் நாம் எதிர்பாராத ஒன்றல்ல, சனநாயக ஆற்றல்கள் இதை எதிர்நோக்கியே இருந்தனர். எனவே, இதை எதிர்கொள்வதற்கு சனநாயகத்தின் பெயரால் ஒன்றுபட்டு செயல்படும் மனத்திட்பத்துடன் நாம் இருக்கிறோம். அவ்வகையில், தமிழ்த்தேச மக்கள் முன்னணி மக்கள் கண்காணிப்பகத்தை முடக்கும் ஒன்றிய அரசின் முயற்சியை வன்மையாகக் கண்டிக்கிறது.

மக்கள் கண்காணிப்பகத்தின் மீது சிபிஐ போட்டுள்ள வழக்கைத் திரும்பப் பெறுமாறும் FCRA திருத்தங்களை திரும்பப் பெறுமாறும் இவ்வறிக்கையின் வாயிலாக ஒன்றிய பாசக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.

 

                                                                                                                                    தோழமையுடன்,

                                                                                                                                                 பாலன்,

                                                                                                                                    பொதுச்செயலாளர்,

                                                                                                                 தமிழ்த்தேச மக்கள் முன்னணி

                                                                                                                                          70100 84440

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW