ஈழத் தமிழர் தொடர்பில் நடக்கும் பன்னாட்டு நிகழ்வுகளை திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு கவனிப்பதில்லையா? அல்லது தெரிந்தே செயலற்று இருக்கிறதா?

28 Oct 2021

 உத்தரபிரதேசத்தில் லக்கிம்பூர் கெரியில் கொல்லப்பட்ட உழவர்களின் குடும்பங்களை சந்தித்த பின், அந்த மாநிலத்தின் காங்கிரசு தலைவர் பிரியங்கா காந்தி, “ அவர்கள் நிவாரணம் வேண்டாம், நீதி வேண்டும் என்கிறார்கள்(நியாய் என்று இந்தியில்)” என்று உணர்வுப்பூர்வமாக சொன்னார்.

ஈழத் தமிழர்களைப் பொருத்தவரை 70,000 த்திற்கும் மேற்பட்டோர் இறுதிப் போரில்  கொல்லப்பட்டுள்ளனர் என்று ஐ.நா. அறிக்கை ஒப்புக் கொண்டுள்ளது. மறைந்த மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப் கொடுத்த விவரப்படி சுமார் 1,46,000 பேர் எங்கிருக்கிறார்கள் என்று தெரியவில்லை. 18,000 த்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் காணாமலாக்கப்பட்டுள்ளனர்.  இதில் பலர் 2009 மே மாதம் போர் முடிந்த தருவாயில் இராணுவத்திடம் அவர்தம் உறவுகளால் கையளிக்கப்பட்டவர்கள். அரசியல் கைதிகளில் இன்னும் பலர் விடுவிக்கப் படாமல் உள்ளனர். இப்படி அடுக்கடுக்கான கட்டமைப்பு வகை இன அழிப்பு நடவடிக்கைகள் நடந்து கொண்டிருப்பதைச் சுட்டிக்காட்டலாம். போர்க்குற்றங்கள்,மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள், இன அழிப்பு குற்றங்களுக்காக இலங்கை அரசைப் பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை தமிழ்நாட்டு சட்டமன்றத்தில் தீர்மானமாக இயற்றப்பட்டுள்ளது. ஆனால், இந்திய அரசு ஈழத் தமிழர்களுக்கு  வீடு கட்டிக் கொடுத்துவிட்டு நீதியைப் பற்றி பேச மறுக்கிறது. பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீட்டை விடவும் நீதி உறுதிசெய்யப்பட வேண்டும் என்ற கோட்பாடு ஈழத் தமிழருக்கு மறுக்கப்படுவதேன்?

கடந்த ஆகஸ்ட் – செப்டம்பர் மாதங்களில் ஈழம் தொடர்பாக பன்னாட்டரங்கில் நடந்த முக்கியமான அரசியல் நிகழ்வுகள் தொடர்பில் திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு உற்று கவனிக்கிறதா? அல்லது தெரிந்து கொண்டு செயலற்று இருக்கிறதா? என்பது தெரியவில்லை.

 1. கடந்த ஆகஸ்ட் 30 பன்னாட்டு காணாமல் ஆக்கப்பட்டோர் நாள்.   காணாமலாக்கட்டோரைக் கொண்டுள்ள தேசங்கள் இந்நாளில் தம் உறவுகளை நினைவு கூர்ந்து போராடுகின்றனர். ஈழத் தமிழர்களில் 18,000 த்திற்கும் மேற்பட்டோர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். ”அவர்களின் நிலை என்ன? அவர்களது உறவுகள் எப்படி துயருறுகின்றனர்” என்பதைப் பற்றி தனது டிவிட்டரில் ஒரு பதிவு போடுவதற்கு இலங்கைக்கான அமெரிக்கத் தூதர் டெட்லிஸ் சில மணித்துளிகளை ஒதுக்கினார். ஆனால், திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசிடம் இருந்து ஆகஸ்ட் 30 அன்று சிறு முனுமுனுப்புக் கூட வெளிவரவில்லை.
 2. செப்டம்பர் மாதத்தில் நடந்த ஐ.நா. மனித உரிமை மன்றக் கூட்டத் தொடருக்கு முன்பு சிங்கள பெளத்தப் பேரினவாத இலங்கை அரசு உள்நாட்டு புலனாய்வை நியாயப்படுத்தி ஐ.நா. மனித உரிமை மன்ற ஆணையருக்கு அறிக்கை அனுப்பியது. ஈழத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆணையருக்கு ஒரு மடல் அனுப்பினர்.  ஆனால், கூட்டத் தொடருக்கு முன் அத்தகைய ஓர் அறிக்கையோ அல்லது மடலோ தமிழ்நாடு அரசிடமிருந்து வெளிவர வில்லை. கூட்டத் தொடர் முடிந்தபின் ஆணையரின் வாய்மொழி அறிக்கைக்குப்பின் அதற்கு எதிர்வினையாக இன அழிப்பை நியாயப்படுத்தி சிங்களர்கள் சார்பாக அந்த அரசு பேசியது. ஆனால், தமிழர்களின் நியாயத்தை முன் வைத்து பேச  எந்த அரசும் முன்வரவில்லை. அரைகுறை இறைமை கொண்ட தமிழ்நாடு அரசும் வாயை இறுக்கமாக மூடிக்கொண்டிருந்தது.
 3. இதே செப்டம்பர் மாதத்தில் நியூயார்க்கில் நடந்த ஐ.நா. பொது அவைக் கூட்டத்திக்கு சென்றிருந்த இலங்கை அதிபர் கோத்தபய இராசபக்சே, அமெரிக்க மண்ணில் நின்றபடி காணாமற் போனோருக்கு மரணச் சான்றிதழ் தருவதை விரைவுப்படுத்துவதாக அறிவித்தார். இதற்கு முன்பு 2020 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இலங்கையின் அதிபர் ஆனச் சூட்டோடு இதே கூற்றை அவர் சொல்லியிருந்தாராயினும் அமெரிக்காவில் ஐ.நா. பொது அவைக் கூட்டத்திற்கு முன்பு சொல்லியது மிகுந்த முக்கியத்துவம் உடையதாகும். முன்பே கூறியது போல் காணாமற் ஆக்கப்பட்டோரில் பெரும் பகுதியினர் முள்ளிவாய்காலில் இராணுவத்தின் கையில் ஒப்படைக்கப்பட்டவர்கள். அதில் 50 க்கும் மேற்பட்டோர் சிறுவர்கள். விடுதலைப் புலிகளில் மிகவும் அறியப்பட்டவர்களான யோகியுய் புதுவை இரத்தினதுரையும் பேபி சுப்பிரமணியமும்  பாலகுமாரனும் அப்படி சரணடைந்ததால் காணாமல் ஆக்கப்பட்டவர்கள்தாம்! அப்போது பாதுகாப்பு  துறைச் செயலாராக இருந்தவர் இன்றைக்கு அதிபராய் இருக்கும் கோத்தபய இராசபக்சே. எனவே, காணாமலாக்கப்பட்டோர் விவரகாரத்தில் பொறுப்புக்கூற வேண்டியர்களில் முதன்மையானவர் அதிபர் கோத்தபய. இலங்கை அரசே அமைத்த பரணகம ஆணையத்தின் அறிக்கையில் இப்படி சரணடைந்ததால் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பெயர்கள் சிற்சில கொடுக்கப்பட்டுள்ளன. ஐயத்திற்கு இடமின்றி இதுவொரு பன்னாட்டுக் குற்றமாகும்.

காணாமலாக்கப்பட்டோருக்கு மரணச் சான்றிதழ் கொடுப்பதாக அந்நாட்டு அதிபர் கூறிய கூற்று அவர்கள் உயிருடன் இல்லை என்பதை ஒப்புக் கொண்டதாகும். அவர்களை உயிருடன் பாதுகாத்திருக்க வேண்டிய பொறுப்பில் இருந்த கோத்தபய இராசபக்சேவே இதை கூறுவதால் உயிருடன் இல்லாமல் போனதற்கு அவரே பொறுப்பேற்க வேண்டியவராகின்றார். அவர்கள் கொல்லப்பட்டார்கள் என்பதற்கான ஒப்புதல் வாக்குமூலமாக இதை பார்க்க முடியும்.

கடந்த மார்ச் மாதம் கூட்டத்தொடருக்கு முன்பு ஐ.நா. மனித உரிமை மன்ற ஆணையர் மிசேல் பசெலே வெளியிட்ட அறிக்கையில் இலங்கை அரசை பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்று சொன்னார். கூடவே,  அனைத்துலக மேலுரிமையை ( Universal Jurisdiction) ஐ பயன்படுத்தி உறுப்பு அரசுகள் போர்க்குற்றச்சாட்டு உடையவர்கள் மீது பயணத் தடை விதித்தல், வழக்கு தொடுத்தல் போன்ற நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று பரிந்துரை செய்தார்.

இந்தப் பின்புலத்தில், காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தை முன்னிட்டு கோத்தபய இராசபக்சேவைப் பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தி புலனாய்வு செய்யப்பட வேண்டியவர் என்பதை தமிழர்கள் எழுப்ப வேண்டும். அனைத்துலக மேலுரிமையைப் பயன்படுத்தி, கோத்தபய இராசபக்சேவைக் கண்டால் கைது செய்ய வேண்டும் என்று இந்தியா உள்ளிட்ட ஐ.நா. உறுப்பு அரசுகளுக்கு கோரிக்கை வைக்க வேண்டும். யார் வைக்க வேண்டும்? உலகெங்கும் உள்ள தமிழர்கள் இக்கோரிக்கையை எழுப்ப வேண்டும். தமிழ்நாட்டு சட்டமன்ற தீர்மானத்திலும் தேர்தல் வாக்குறுதிகளிலும் ஊன்றி நின்று திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு இதை உலகத்திற்கு எடுத்து வைத்திருக்க வேண்டும்.

ஆனால், கோத்தபய இராசபக்சே 18,000 த்திற்கு மேற்பட்ட காணாமலாக்கப்பட்டோர் உயிருடன் இல்லை என்று சொன்ன நிலையில் தமிழ்நாடு அரசு செயலற்றுக் கிடக்கிறது.

 1. பின்னர், அக் 2 – அக் 6 வரை இலங்கைக்கு பயணம் மேற்கொண்ட இந்திய வெளியுறவு செயலர் அர்ச சிறிங்கலா, ”தமிழர் தாயகப் பகுதிகளில் இருந்து இராணுவ வெளியேற்றம், தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை, சிங்களக் குடியேற்றத் தடுப்பு” என்ற உடனடிப் பிரச்சனைகள் பற்றி பேசவில்லை., தமிழர்களுக்கான நீதியைப் பற்றியும் பேசவில்லை. மாறாக 13 ஆவது சட்டத் திருத்தம் என்ற அதே பழைய பல்லவியைப் பாடிவிட்டு இந்தியா திரும்பியுள்ளார். இந்த பயணத்திற்கு முன்பு தமிழர்கள் தொடர்பில் என்ன பேச வேண்டும் என்று தமிழ்நாடு அரசு சொல்லவில்லை. பயணத்திற்குப் பின்பு வெளியுறவு செயலர் செய்யத் தவறியதை திறனாய்வு செய்து ஓர் அறிக்கைக் கூட தமிழ்நாடு அரசு வெளியிட வில்லை.

3200 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர்களின் நாகரிகத்தை சிவகளையில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழி  பறைசாற்றிக் கொண்டிருக்கிறது. இதை நாம் பெருமையாக சொல்லிக் கொள்கிறோம். இந்த பெருமிதத்தை மட்டும் உலகம் பார்க்க வில்லை. கூடவே, இன அழிப்புக்கு உள்ளாகியுள்ள தமிழர்கள் என்பதையும் பார்த்துக் கொண்டிருக்கிறது. ஒருபக்கம் பண்டைக்கால பெருமிதம் இன்னொருபுறம் சமகால இனவழிப்புத் துயரம் என்பது ஒரு முரண்பட்ட காட்சியாக உலகின் கண்முன் விரிகின்றது. இந்த இன அழிப்புக்கு நீதி பெற்றால்தான் கடந்த கால பெருமிதம் உலகின் முன்பு அதற்குரிய உண்மையான மதிப்பைப் பெற முடியும். இல்லாவிட்டால் அது வாழ்ந்து கெட்டவர்களின் வரலாறாகவே பார்க்கப்படும்.  எனவே, தமிழ்நாடு ஈழத் தமிழர்களின் நீதிக்கான போராட்டத்தில் உண்மையான அக்கறை செலுத்த வேண்டும்.

புதிதாக ஆட்சிக்கு வந்துள்ள திமுக சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட ஈழத் தமிழர் ஆதரவு தீர்மானத்தை நடைமுறையாக்க ஏன்ன செய்யவிருக்கிறது?  ஈழத் தமிழர் சிக்கலை இழப்பீடு , மறுவாழ்வு, வீடு கட்டிக் கொடுத்தல் என்ற வட்டத்திற்குள் முடித்துக் கொள்ளலாம் என்று கருதுகிறதா? இதன் தொடர்பில் கடந்த காலத்தைப் போல் இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கையை கேள்விக்குள்ளாக்காமல் இருக்கப் போகிறதா?  முள்ளிவாய்க்கால் படுகொலைகள் நடந்து முடிந்து வெறும் 12 ஆண்டுகளே ஆகியுள்ளன. எங்கோ தென்னாப்பிரிக்காவிலோ, பிஜியிலோ, சிங்கப்பூரிலோ நடக்கவில்லை. தமிழ்நாட்டில் இருந்து கூப்பிடும் தூரத்தில் உள்ள இலங்கை தீவில் நடந்துள்ளது. ஈழப் பிரச்சனையை கண்டுங்காணாமல் விடுவோம் என்று திமுக கருதுமாயின் அது ஓர் அறியாமையே. ஏனெனில், இலங்கை தீவு அதன் அமைவிடம் காரணமாக வல்லரசுகளின் போட்டிக் களமாக இருப்பதால் ஈழச் சிக்கல் ஓயாத அலையாய் மீண்டும் மீண்டும் எழுந்து வரக்கூடியது.  

தமிழ்நாடு அரசு குறைந்த அளவே இறைமை கொண்ட(shared sovereignty) அரை அரசாக இருந்தாலும் இந்திய அரசமைப்புக்கு உட்பட்டு  செய்யக்கூடிய அனைத்தையும் நீதியின் பக்கம் நின்று செய்ய முடியும். திமுக தலைமையிலான அரசுக்கு அத்தகைய கடமைகளை ஆற்றுவதற்கு குறைந்தபட்ச மனத்திட்பமும் ( Political Will) பன்னாட்டு அரசியல் பற்றிய பார்வையும் தேவைப்படுகிறது.

வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சகத்திற்குள் ஈழத் தமிழர்கள் தொடர்பில் நடக்கும் சர்வதேச நிகழ்வுகள், ஐ.நா. கூட்டங்கள், இலங்கை அரசின் முக்கிய நகர்வுகள், இந்திய – இலங்கை உறவில் நடக்கும் விசயங்கள், இலங்கையின் வடக்கு கிழக்கில் தமிழர்கள் மீது நிகழ்த்தப்படும் ஒடுக்குமுறைகள் ஆகியவற்றை உற்றுக் கவனிப்பதற்கு ஒரு பிரிவை உருவாக்க வேண்டும். அந்த அமைச்சகத்தின் வழிகாட்டலில் ஈழத் தமிழர்களுக்கு நீதி, பாதுகாப்பு, இறைமை ஆகியவற்றின் நோக்கு நிலையில் தமிழ்நாடு அரசு வினையாற்ற வேண்டும். அதாவது, இலங்கை எதிர் தமிழ்நாடு, இலங்கை அதிபர் எதிர் தமிழ்நாடு முதல்வர் , கோத்தபய எதிர் முக ஸ்டாலின் என்ற சட்டகத்தில் தமிழ்நாட்டு அரசின் எதிர்வினை இருக்க வேண்டும். இதை ஒரு கோரிக்கையாக ஏற்று தமிழ்நாடு அரசு பரிசீலிக்க வேண்டும்.

 

-செந்தில்

RELATED POST
1 comments
 1. முதலில் இலங்கைத் தமிழர்கள் தங்களை தமிழ்நாட்டுத் தமிழர்களின் சொந்தம் என்று நினைக்க சொல்லுங்கள்.
  புலம்பெயர் இலங்கைத் தமிழர்களுக்கு தமிழ்நாட்டின் தொலைக்காட்சிகள் மற்றும் திரைப்படங்கள் கொடுக்கும் வாய்ப்பு தான் தேவைப்படுகிறது.
  தமிழ்நாட்டில் இருந்து செல்லும் நாங்கள் அவர்களைக் கண்டவுடன் “தமிழா?” என்று கேட்டு புன்னகைக்கிறோம்.
  ஆனால், அவர்கள் “இலங்கையில் இருந்து வருகிறீர்களா” என்று கேட்டு, இல்லை என்றவுடன் முகத்தை திருப்பிக் கொள்கிறார்கள்.
  பெரும்பான்மையானவர்கள் இப்படித்தான் இருக்கிறார்கள்.

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW