செப் 27 – போராடும் விவசாயிகளின் அனைத்திந்திய முழு அடைப்பை வெற்றிப் பெறச் செய்வோம்! தமிழ்த்தேச மக்கள் முன்னணி பொதுச்செயலாளர் பாலன் அறைகூவல்

24 Sep 2021

கடந்த 300 நாட்களாக  பஞ்சாப், அரியானா,  உத்தரபிரதேச விவசாயிகள் மற்றும் அகில இந்திய விவசாயப் போராட்டக் குழு தில்லியை முற்றுகையிட்டு வீரஞ்செறிந்த போராட்டத்தை நடத்தி வருகின்றது. விவசாய விரோத கார்ப்பரேட் ஆதரவு மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறவும் மின்சார மசோதாவைத் திரும்பப் பெறவும் தொழிலாளர் விரோத சட்டத் திருத்தங்களை திரும்பப் பெறவும் விவசாய விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலைக்கான சட்ட அங்கீகாரம் தரவும் கோரி செப் 27 அன்று அனைத்திந்திய அளவில் முழு அடைப்புப் போராட்டத்திற்கு விவசாயிகள் போராட்டக் குழு அழைப்புக் கொடுத்துள்ளது.

கார்ப்பரேட் ஆதரவு காவிப் பாசிச அரசு பல்வேறு சீர்திருத்தங்களை செய்து கொண்டிருக்கும்போது அதற்கெதிரான ஒரு நீடித்த, உறுதிமிக்க, மக்கள் திரள் போராட்டமாக கடந்த 300 நாட்களாக விவசாயிகள் போராட்டம் நடந்துவருகின்றது. போராட்டக் களத்திலேயே சுமார் 700 க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிர்விட்டு ஈகம் செய்துள்ளனர். இந்த போராட்டம் திரைக்குப் பின்னால் ஒளிந்து கொள்ளும் கார்ப்பரேட் கொள்ளையர்களை அடையாளம் காட்டுவதில் பெருவெற்றி  கண்டுள்ளது. குறிப்பாக அம்பானி, அதானி போன்ற கார்ப்பரேட்  நிறுவனங்கள் போராட்டம் நடக்கக் கூடிய மாநிலங்களில் மூடப்பட்டுள்ளன, நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளன. இன்னொருபுறம், விவசாயிகள் எழுச்சிக் கொண்டு போராடும் மாநிலங்களில் பாசக என்ற கட்சி செயல்பட முடியாத அளவுக்கு வெகுமக்களிடம் இருந்து தனிமைப்படுத்தப்பட்டு , முடக்கப்பட்டு கிடக்கின்றது. இந்த வரலாறு காணாத விவசாயப் போராட்டம் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோருவதோடு சேர்த்து நாட்டின் அரசியல் போக்கை தீர்மானிக்க வல்லதாக உருவெடுத்துள்ளது.

கொரோனா பெருந்தொற்று நெருக்கடியின் போதும் கார்ப்பரேட் நிதிமூலதனக் குவிப்புக்கான சீர்திருத்தங்களை செய்தபடி தங்கு தடையின்றியும் கேள்வி கேட்பாரின்றியும்  முன்னேறிக் கொண்டிருந்த காவி-கார்ப்பரேட் சர்வாதிகாரத்தின் குறுக்கே விவசாயிகளின் எழுச்சிப் போராட்டம் வந்து நின்றுள்ளது. நாடு தழுவிய அளவில் விவசாயிகள், தொழிலாளர்கள், இஸ்லாமியர் உள்ளிட்ட மதச் சிறுபான்மையினர், தேசிய இனங்கள், மாணவர்கள், ஒடுக்கப்பட்ட மக்கள், பழங்குடிகள் என பற்பல பிரிவினர் மீதான ஒடுக்குமுறைகள் தீவிரப்பட்டிருக்கும் நிலையில் விவசாய வர்க்கம் பாசிச பாதையில் பயணித்துக் கொண்டிருக்கும் நாட்டின் அரசியல் திசை வழிக்கு தடை போட்டு நிற்கிறது. இந்தப் போராட்டம் முதல்நிலை பொருளில் வேளாண் சட்டங்களுக்கு எதிரானப் போராட்டம் என்றாலும் அதற்கோர் அரசியல் பரிமாணம் உண்டு. இந்த காவி-கார்ப்பரேட் ஆட்சியை மக்களிடம் அம்பலப்படுத்தி, பாசிஸ்டுகளை ஆட்சி அதிகாரத்தில் இருந்து கீழ் இறக்கக் கூடிய உள்ளாற்றல் கொண்ட போராட்டம் இது. எனவே, விவசாயிகள் போராட்டம் வெற்றிப் பெற வேண்டும். விவசாயிகளுக்கு ஆதரவாக இந்தியாவெங்கும் உள்ள தொழிலாளர்கள், மாணவர்கள், நடுத்தர வர்க்க்கத்தினர் கொண்டிருக்கக் கூடிய ஆதரவு மனநிலை செயல்வடிவம் பெற வேண்டும். விவசாயிகளின் இந்த போராட்ட வெற்றி என்பது பாசிஸ்டுகளின் தோல்வி என்பதால், கார்ப்பரேட்களின் தோல்வி என்பதால் அது மக்களின் வெற்றி. விவசாயிகள் போராட்டம் நாடு தழுவிய அரசியல் மாற்றத்திற்கான திறவுகோலாக அமைய முடியும் என்பதைக் கருத்தில் கொண்டு சனநாயக ஆற்றல்கள் காவி-கார்ப்பரேட் பாசிசத்திற்கு எதிராக செப் 27 அன்று நடக்கவுள்ள நாடு தழுவிய முழுமுடக்கத்தை வெற்றிப் பெறச் செய்ய களம்காண்போம். தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தோழர்கள் அனைவரும் வாய்ப்புள்ள இடங்களில் இப்போராட்டத்தில் பங்குபெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW