தந்தைப் பெரியாரின் பிறந்த நாளை (செப் 17) சமூகநீதி நாளாக கடைப்பிடிக்கும் தமிழக அரசின் முடிவுக்குப் பாராட்டுக்கள்! தூய்மைப் பணியாளர்களைப் பணி நிரந்தரமாக்குக! நெடுநாள் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்க! சாதி ஆணவக் கொலைக்கு எதிராக தனிச் சட்டமியற்றுக! 2021 ஆம் ஆண்டு சமூகநீதி நாளுக்கு உயிரூட்டுக!

10 Sep 2021

பெரியாரின் பிறந்த நாளை(செப் 17) சமூகநீதி நாளாக கடைபிடிக்கும் தமிழ்நாடு அரசின் அறிவிப்பு வரவேற்புக்குரியது.   பெரியாரை கடவுள் மறுப்பாளராக மட்டும் சுருக்காமல் சமூக நீதியோடு அடையாளப்படுத்தி தமிழக அரசே மக்களிடம் கொண்டு செல்வது பாராட்டுக்குரியது.

மேலும் ஒவ்வொரு ஆண்டும் பெரியார் பிறந்த நாளை இலக்காக வைத்து, சாதி – சமூக ஏற்றத்தாழ்வுகள், ஒடுக்குமுறைகளுக்கு எதிரானக் கோரிக்கைகளை நிறைவேற்றி சமூகநீதித் துறையில் பாய்ச்சலில் முன்னேறுவதற்கு இந்த முன்னெடுப்பு துணை செய்யவேண்டும். அந்த நோக்கில், ஒருபுறம் சமூக நீதியை தமிழக அரசு உயர்த்திப் பிடிக்கிறது என்று சொல்லிக் கொண்டே மறுபுறம் வெகுநாள் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் தள்ளிப் போடுவது கவலையளிக்கிறது. ஆகவே, வருகின்ற பெரியார் பிறந்த நாளை அதாவது  முதலாவது சமூகநீதி நாளை முன்னிட்டு பின்வரும் சில கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு நிறைவேற்றித் தர வேண்டும்.

  1. இரு நாட்களுக்கு முன், தமிழ் இந்து நாளிதழில் முதல் பக்கத்தில் ’பெரியார் பிறந்த நாள் சமூகநீதி நாள்’ என்ற அறிவிப்புச் செய்தி இருந்தது. நடுப்பக்கத்திலோ, ”என்று தீரும் தூய்மைப் பணியாளர் துயரம்?” என்ற தலைப்பில் கட்டுரை வந்தது. தேசிய தூய்மைப் பணியாளர்களுக்கான தேசிய ஆணையத்தின் தலைவர் ம.வெங்கடேசன் கட்டுரையாளர். தூய்மைப் பணியாளர்கள் ஒப்பந்த தொழிலாளர்களாக இருப்பதும் அவர்களுக்கு 10,000 ரூ – 13,000 ரூ வரை மட்டுமே மாதச் சம்பளம் கொடுக்கப்படுவதும், 8 மணி நேர வேலை நேரக் கட்டுப்பாடு கடைபிடிக்கப்படாமையும் , கிழமை தோறும் முறையான விடுமுறை இன்மையும் அக்கட்டுரையில் கவலையோடு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தமிழ்நாடு இதற்கு விதிவிலக்கல்ல, கர்நாடகவில் தூய்மை பணியில் உள்ள ஒப்பந்தப் பணியாளர்களுக்கும் 18,000 ரூ கூலி கொடுக்கப்படுகிறது என்பது ஒரு துணை செய்தி!

சுயமரியாதை இயக்கத்தின் சிறப்பே அது கீழிருந்து மேல் நோக்கி சமூக மாற்றத்தை சிந்தித்தது. சாதியமைப்பு உடலுழைப்பை இழிவானதாகவும் மூளை உழைப்பை உயர்வானதாகவும் பார்க்கிறது. உடலுழைப்பில் ஈடுபடுவோரின் சுயமரியாதையைக் பேணுவதும் உழைப்பைப் போற்றுவதும் சமூக நீதி இயக்கத்தின் முதன்மையான கடமையாகும். உழைப்பைப் போற்றுவதென்றால் ’முன்களப்பணியாளர்’ என்று புகழ்ந்து தள்ளி ஏதாவது பெயர் மாற்றம் செய்வதல்ல, கண்ணியமான வாழ்க்கைக்கு நியாயமான சம்பளம் தரப்பட வேண்டும்.  மிக மிக இன்றியமையாத ஒரு சமூகப் பணியில் எதற்கு ஒப்பந்த முறை? இவர்கள் நிரந்தர பணியாளர்களாக இருக்க வேண்டாமா? அதுதானே சமூகநீதியாக இருக்க முடியும்.

இதுபோன்ற கோரிக்கைகளில்தான் தமிழ்ச் சமூகத்தின் சமூக நீதி இயக்கம் பாய்ச்சலில் முன்னேற முடியும்.

  1. சமூக நீதி என்பதில் கண்ணுக்குப் புலப்படக் கூடிய ஒன்று இட ஒதுக்கீடு. ’வகுப்பு வாரி பிரதிநிதித்துவம்’ என்ற முழக்கத்தைப் பெரியார் முன்வைத்தார். வறுமை, துயரம், அடக்குமுறை ஆகியவற்றில் சாதிப் படிநிலையில் கீழிருப்போருக்கு அதிக பங்கு கிடைக்கிறது. செழுமை, இன்பம், அரசின் அரவணைப்பு ஆகியவற்றில் சாதிப் படிநிலையில மேலிருப்போருக்கு அதிக பங்கு கிடைக்கிறது. இதை விமர்சித்தது சுயமரியாதை இயக்கம். இதை தொடர்ந்து கல்வி, வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீட்டு ஏற்பாடு வந்தது. அதனால் சமூக நீதித் துறையில் ஈட்டிய வெற்றிகள் குறிப்பிடத்தக்கவையாகும். அதே நேரத்தில், எதிர்மறையான விசயங்களில் இருந்து ஒடுக்குண்ட மக்கள் விடுவிக்கப்பட்டார்களா? என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும்.

இந்தியாவெங்கும் சிறைச்சாலைகளில் தமது மக்கள் தொகை எண்ணிக்கையோடு ஒப்பிடும் போது தலித் , பழங்குடி, இஸ்லாமிய மக்கள் மிக அதிகமாக இருக்கிறார்கள் என்பதே புள்ளிவிளக்கங்கள் சொல்வதாகும். தமிழ்நாடு இந்தப் போக்கில் இருந்து பெரிதும் மாறுபட வில்லை. குறிப்பாக தமிழ்நாட்டில் 6% இருக்கக்கூடிய இஸ்லாமியர்கள் தமிழ்நாட்டில் சிறையில் இருப்போரில் உள்ள ஒட்டுமொத்த சிறைவாசிகளில் 15% அளவுக்கு சிறையில் இருக்கிறார்கள். அதாவது அவர்கள் இருக்கும் மக்கள்தொகையைவிட 2.5 மடங்குக்கு அதிகானோர் சிறைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்திய அரசு இயந்திரத்தின் இந்துத்துவப் பண்பில் இருந்து தமிழ்நாடு அரசு இயந்திரம் இவ்விசயத்தில் மாறுபட்டிருக்கவில்லை என்பது கவலைக்குரியதாகும்.

இராஜீவ் கொலை வழக்கில் தண்டனைப் பெற்றுவரும் 7 தமிழர்கள் உள்ளிட்ட 40 க்கும் மேலானோர் தமிழ்நாட்டில் 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடுகின்றனர். இதில் இஸ்லாமிய சிறைவாசிகள் சுமார் 36 பேர் என்று அறியப்படுகிறது. ஆகவே,  சாதி, மத வேறுபாடின்றி 10 ஆண்டுகளுக்கு மேல் சிறைத்தண்டனை அனுபவித்தர்களின் மறுவாழ்வுக்கு வழிசெய்யும் முன்விடுதலை செய்வது சட்டப்படியானதே ஆகும். இது இது மாநில அரசின் உரிமையாகும். யாருக்கும் அஞ்சாமல் இஸ்லாமிய  சிறைவாசிகள் உள்ளிட்ட பத்தாண்டு சிறைத் தண்டனை கழித்த அனைத்து சிறைவாசிகளையும் விடுதலை செய்ய திமுக அரசு முன்வர வேண்டும்.

  1. பறையன் பட்டம் போகாமல் உன் சூத்திரப் பட்டம் போகாதென பெரியார் சாட்டை எடுத்து வீசினார். சமூக நீதி இயக்கம் என்பது பார்ப்பனரிடம் போட்டிப் போடுவது மட்டுமா? ஏற்றத் தாழ்வுகள், ஆதிக்கம் சாதியக் கட்டுமானத்தில் எந்த படிநிலையில் இருந்தாலும் அதை எதிர்த்து நிற்பதுதானே. சாதி ஆணவக்கொலைக்கு எதிராக தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என்பது சமூகநீதி ஆற்றல்களின் நெடுநாள் கோரிக்கை. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக காதல் திருமண விசயத்தில் ஒரு சமூகப் பதற்றம் நிலவிக் கொண்டிருக்கிறது. இதை வைத்து சாதிவெறி கட்சிகள் அரசியல் பிழைப்பு நடத்தி வருகின்றன. ஆனால், திமுக அரசோ இப்படியான சட்டத்தை இயற்றுவதை தள்ளிப்போடுகின்றது.

பெரியார் சாதி இந்துக்களின் மிரட்டலுக்கு அஞ்சியவர் அல்ல. பெரியாரின் பிறந்த நாளை சமூகநீதி நாளாக கடைபிடிக்க முன்வந்த அரசு,  சாதி ஆணவக் கொலைக்கு எதிராக தனிச்சட்டம் இயற்றவும் முன்வர வேண்டும் என்பதே நம் எதிர்பார்ப்பு. இது தலித் மக்களுக்கான கோரிக்கை,  எங்கே சாதி இந்துக்களிடம் ஆதரவை இழந்துவிடுவோமோ என்று கருத வேண்டாம். பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த பெண்களின் திருமணத் தேர்வு உரிமை சம்பந்தப்பட்டதுமாகும், சாதி ஆணவக் கொலையில் அவர்களும் பலியிடப்படுகிறார்கள் என்பதை கருதிப் பார்த்து அரசு துணிவுடன் சட்டமியற்ற முன்வர வேண்டும். பெரியாரின் இலட்சியமாக பெண்ணடிமைத்தன ஒழிப்பும் உண்டு என்பது இங்கே சுட்டிக்காட்டத்தக்கது. சமூக நீதி ஆற்றல்கள் அரசின் இந்த முன்னெடுப்புக்கு துணை நிற்பர் என்பதில் சிறிதும் ஐயம் வேண்டாம்.

ஒடுக்குண்ட  மக்களின் மேற்படி கோரிக்கைகளில் சமூக நீதியின் வெளிச்சம் கிடைக்கப்பெறுமானால் இவ்வாண்டு செப் 17 – பெரியார் பிறந்த நாளை சமூக நீதி நாளாகக் கடைப்பிடிப்பது பெரிதும் பொருள் பொதிந்ததாக அமையும். அந்நாளுக்கு உயிரூட்டியதாகவும் அமையும்.

 

-செந்தில்

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW