கொரோனா பொதுமுடக்கமும் பொருளாதாரப் பேரிடரும் – முதற்கட்ட கள ஆய்வறிக்கை

17 Jul 2021

உள்ளடக்கம்

1.அறிமுகம்

2.ஆய்வுக் குறிப்புகள்

3.முடிவுகள் மற்றும் கோரிக்கைகள்

1) அறிமுகம்:  

கடந்த மார்ச் 2020 தொடங்கி ஒன்றரை ஆண்டுக்கும் மேலாக கொரோனா பெருந்தொற்று காரணமாக, தமிழக அரசு பொதுமுடக்கத்தைப் பல்வேறு கட்டுப்பாடுகள், தளர்வுகளுடன் அமலாக்கியுள்ளது, கொரோனா முதல் அலையில் இந்திய அளவிலான முழு முடக்கம், பிறகு மாநில அளவிலான முழு மற்றும் பகுதி முடக்கம் என தொடர்ந்து மூன்றாம் அலையை நோக்கித் தயாராகிறது ஒன்றிய – மாநில அரசுகள். கொரோனா பெருந்தொற்றைக் கட்டுப்படுத்த சீனாவின் வூஹான் மாகாணத்தில் கொண்டுவரப்பட்ட முழுமுடக்கமே உலகளவில் ஒரு மாதிரியாக இன்றுவரை கடைபிடிக்கப்பட்டுவருகிறது.

முதல் அலையின் தொடக்கத்தில் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு வெறும் 4 மணிநேர இடைவெளியில் நாடு தழுவிய பொதுமுடக்கத்தை அறிவித்தது. எவ்விதத் தயாரிப்பும் இல்லாமல் அறிவித்த முழுமுடக்கத்தினால் மக்கள் பெரும் துன்பத்திற்கு ஆளானார்கள். அதிலும் குறிப்பாக மாநிலம் விட்டு மாநிலம் இடம்பெயர்ந்த கோடிக்கணக்கான தொழிலாளர்கள் வருமானம் இழந்து உணவிற்கு வழியில்லாமல் ஆயிரம் கிலோமீட்டருக்கும் மேலாக கடும் வெயில் மழையிலும் நடந்தே தங்கள் ஊருக்குச் சென்றனர். நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் வழியிலே உயிரைத் துறந்தனர். ஓர் மனித பேரவலத்தை உலகமே கண்டது. கொரோனா முதல் அலையில் நோய்த் தொற்றின் தாக்கம் குறைவாக இருந்தபோது, இரண்டாவது அலையில் நோய்த்தொற்று நகரம் – கிராமம், பணக்கார – ஏழை என அனைத்துப் பிரிவினரையும் அச்சுறுத்தி உயிர் இழப்புகளையும் ஏற்படுத்தியது.  இதை எதிர்கொள்வதற்கு நாடளவிலான மருத்துவக் கட்டமைப்பு திணறியதை நாம் கண்டோம். நோய்த் தொற்றின் பாதிப்பும் இவ்வாறிருக்க, அதைக் கட்டுப்படுத்துவதற்காக ஒன்றிய – மாநில அரசுகள் மேற்கொண்ட பொதுமுடக்கம் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. உயிரைக் காக்க வாழ்வாதாரத்தை பலியிடும் அணுகுமுறை பலரால் விமர்சிக்கப்பட்டது. வறுமையின் பிடியில் இருந்து மக்களை பாதுகாக்கவும், நாட்டின் பொருளாதாரத்தை மீள்கட்டமைக்கவும் ஒன்றிய அரசு நேரடியாக மக்களுக்கு பணம் கொடுக்கவேண்டும், உணவு தானியங்கள் இலவசமாக கொடுக்கவேண்டும் என்று வலியுறுத்தினார். ஆனால், மோடி தலைமையிலான ஒன்றிய அரசோ உணவு தானியங்களை மட்டும் கொடுத்துவிட்டு மக்களுக்கு நேரடியாக பணப் பரிமாற்றம் ஏதும் செய்யவில்லை. 20 லட்சம் கோடி பொருளாதார மீட்பு நிதித் தொகுப்பு என்று அறிவித்துவிட்டு நடைமுறையில் இவை பெரும்பாலும் ஏற்கனவே இருக்கக்கூடிய திட்டங்களே ஆகும். மூன்று மாதங்கள் கடன் தவணை கட்டுவதில் தளர்வு, சாலையோர வியாபாரிகளுக்கு 10,000 கடன் உதவி என்று சிற்சில சலுகைகள் என்பது, அடிப்படை வாழ்வாதார மீட்சிக்குப் போதிய பங்காற்றவில்லை.

தமிழகத்தில் கொரானா முதல் அலையின்போது, அதிமுக அரசு, மக்களுக்கு இலவசமாக உணவு தானியங்களை வழங்கியதேத் தவிர, பாதிக்கப்பட்ட பல்வேறு தரப்பு மக்களுக்கு நிவாரணத்தொகை எதுவும் வழங்கவில்லை. 14 லட்சம் பதிவுபெற்ற அமைப்பு சாராத் தொழிலாளர்களுக்கு மட்டும் ‘நல வாரியங்கள்’ நிதியிலிருந்து ரூ 1000 வழங்கியது. தேர்தலை முன்னிட்டு பொங்கல் சிறப்பு நிதியாக ரூ2,500 ஐ அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கியது. முழுமுடக்கம் தொடங்கி பகுதிமுடக்கம் வரையிலும் சுமார் 6 மாதங்களாக சென்னை நகரத்தில் பேருந்துகள், ரயில்கள் எதுவும் இயக்கப்படவில்லை. இரண்டாவது அலையில், இரண்டு மாதகால பொதுமுடக்கத்திற்குப்பிறகு, தற்போதுதான் (July,17) இயல்பு வாழ்க்கை திரும்புகிறது.

திமுக தலைமையிலான புதிய ஆட்சி,   குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் ரூ 4000 மற்றும் உணவு தானியங்கள் மற்றும் சமையல் பொருட்கள் வழங்கியுள்ளது. கடந்த ஆட்சியைவிட, நிதியை மக்கள் கைகளில் நெருக்கடி காலத்தில் கொண்டு சென்றது வரவேற்கத்தக்கது. ஆனால், கடந்த 15 மாதகாலப் பொதுமுடக்கம் ஏற்படுத்திய பொருளாதார நெருக்கடி, ஒரு பொருளாதாரப் பேரிடராகவே உருப்பெற்று இருப்பதை தமிழக அரசு கவனத்தில் கொள்ளவேண்டும். கடந்த அதிமுக ஆட்சியில், பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள திரு ரங்கராஜன் தலைமையில் ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டு அவற்றின் அறிக்கை சமர்பிக்கப்பட்டது. தற்போது திமுகவின் ஆட்சியானது, ரகுராம் ராஜன் உள்ளிட்ட பொருளாதார அறிஞர்களை உள்ளடக்கி மாநில வளர்ச்சிக்கான ஆலோசனைக் குழுவை நியமித்திருக்கிறது.

கொரோனா பொருளாதார நெருக்கடியானது, அனைத்துப் பிரிவினரையும்/ துறைகளையும் சமமாக பாதிக்கவில்லை என்பதை அங்கீகரித்துக்கொண்டு நாம் மீட்பு நடவடிக்கைகளை பரிசீலிக்கவேண்டியுள்ளது. உதாரணமாக இதே காலகட்டத்தில் அம்பானி, அதானி போன்ற பெரும் பணக்காரர்கள் அதீத வளர்ச்சி அடைந்தனர். ecommerce கார்ப்ரேட் நிறுவனங்களான அமேசான், ஜியோ மார்ட், zomato, பிக் பாஸ்கெட்  பெரும் அளவிற்கு வளர்ந்துள்ளது. நாட்டின் பொருளாதாரம் பெரும் நெருக்கடியில் இருந்தபோதும் இந்தியப் பங்குச்சந்தை கடந்த 15 மாதங்களாக வளர்ந்து வருகிறது. அரசு துறை, வங்கி – இன்சூரன்ஸ், பெரும் தொழிற்சாலை, ஐ.டி உள்ளிட்ட துறைகள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகவில்லை. இந்நிறுவனங்களில் மாத சம்பளத்திற்குப் பணிபுரியும் நிரந்தர தொழிலாளர்களின் ஊதியம் உத்தரவாதமாக்கப்பட்டிருக்கிறது. விவசாய உற்பத்தி சிறிது பாதிப்புகளோடு தொடர்கிறது. ஆனால், பெரும் எண்ணிக்கையில் உள்ள சிறு குறு உற்பத்தியாளர்கள் – வியாபாரிகள் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளனர். 2017 பணமதிப்பு நீக்கம், GST அமலாக்கம், விலைவாசி உயர்வு என்று கடந்த 5 ஆண்டுகளாக பல்வேறு சிக்கல்களை சந்தித்து வரும் சிறு குறு தொழில் நிறுவனங்கள் கொரோனா பொதுமுடக்கத்தால் மீள வழியின்றி தவித்து வருகின்றன. மேற் குறிப்பிட்ட துறைகளில் உள்ள நிரந்தர தொழிலாளர்களை தவிர்த்து, பெரும்பான்மையாக உள்ள அமைப்புசாரா தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இழந்து பெரும் நெருக்கடியை சந்தித்து வருகின்றனர்.

கொரோனா பொதுமுடக்கம் பல்வேறு மக்கள் பிரிவினர்கள் மத்தியில் ஏற்படுத்திய பாதிப்புகளை மதிப்பீடு செய்வதற்காக சென்னை நகரில் ஒரு கள ஆய்வை சோசலிச தொழிலாளர் மய்யம் மற்றும் தமிழ்த்தேச மக்கள் முன்னணி மேற்கொண்டது. கடந்த ஒரு மாதமாக மேற்கொள்ளப்பட்ட இந்த கள ஆய்வில் சுமார் 70 நபர்களை சந்தித்து உரையாடினோம். சிறு குறு வியாபாரிகள்,  ஆட்டோ – டாக்சி ஓட்டுனர்கள், கட்டுமான தொழிலாளர்கள், ஷோரூம் தொழிலாளர்கள், வீட்டுவேலை செய்யும் தொழிலாளர்கள் என பல்வேறு பிரிவினர்களை சந்தித்தோம். இந்த முயற்சி சென்னை நகரை ஒரு மாதிரியாக எடுத்துக்கொண்டு செய்யப்பட்டவை. இன்னும் பல பிரிவினர்களை சந்திக்கவேண்டியுள்ளது. தமிழகம் தழுவிய முழுமுடக்கம் முடிவுக்கு வந்துள்ளதை அடுத்து மக்களை நேரில் சந்தித்து எடுத்த விவரத்தின் அடிப்படையில் முதற்கட்ட கள ஆய்வறிக்கையைத் தொகுத்துள்ளோம்.

 

2) ஆய்வுக் குறிப்புகள்:

2.1 அதிகரிக்கும் வேலையின்மை, வறுமை:

 • சென்னை நகரத்தில் முறைசார்ந்த தொழில்கள் வேலை செய்யும் நிரந்தர தொழிலாளர்களைத் தவிர தனியார் நிறுவனங்களில் (Pvt Ltd) ஒரு பகுதி 50% சம்பளம் வெட்டு, தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு மொத்த சம்பளம் தொடங்கி 50% வரை சம்பளம் வெட்டு, சரவணா ஸ்டோர்ஸ், சென்னை சில்க்ஸ் போன்ற பெரும் வணிக ஷோரூம்களில் மொத்த சம்பள வெட்டு மற்றும் அனைத்து ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கும் மொத்த சம்பளவெட்டு என நிரந்தரத் தொழிலாளர்களை தினக் கூலிகள்போல நடத்தும் தனியார் நிறுவனங்கள் பரவலாக உள்ளது.
 • பெரும்பாலான மக்கள் சிறு – குறு தொழில்கள் சார்ந்த வேலைவாய்ப்பில் உள்ள நிலையில் ஓராண்டாக தொழில் நசிவடைந்து, தொழிலாளர் வேலை-வருமானம் இழந்து வர்க்கப் படிநிலையில் கீழிறக்கப்பட்டு, தற்போது வாழ்நிலையே கேள்விக்குறியாகியுள்ளது. நடுத்தர வருமானம் (Middle Income Group) கொண்டிருந்த பல குடும்பங்கள் குறைந்த வருமானம் (Low Income Group) உள்ளவர்களாகவும், குறைந்த வருமானம் உள்ள குடும்பங்கள் வறுமைக் கோட்டிற்கு கீழே தள்ளப்பட்டுள்ளனர்.
 • குறைந்த வருமானம் உள்ள பெரும்பான்மையான குடும்பங்கள் வாடகை வீட்டில்தான் வசிக்கின்றனர். கள ஆய்வில் விசாரித்த 90% குடும்பங்கள் கொரோனா காலத்தில் வாடகை முழுவதுமாக வசூலிக்கப்பட்டதும், சிலர் வாடகை கொடுப்பதில் கால அவகாசம் பெற்றும் வந்துள்ளனர். குடிசை பகுதிகளில் குறைந்தது 3000 ரூ வாடகை தொடங்கி அடுக்குமாடி குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளில் 6000ரூ வரை வசூலிக்கப்படும் வீட்டு வாடகை, குறைந்த வருமானம் உள்ள குடும்பங்களுக்கு மாத வருமானத்தில் 30 – 40% ஆகும்.
 • குறைந்த வருமானமுள்ள குடும்பங்களாக இருந்தாலும் தங்கள் பிள்ளைகளைத் தனியார்ப் பள்ளிகளில் படிக்கவைப்பது பரவலாகக் காணப்படுகிறது. கள ஆய்வில் 50% திற்கும் மேலான குடும்பங்கள் தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளியிலேயே படிக்கவைக்கின்றனர். கொரோனா காலத்திலும் பள்ளிக் கட்டணம் செலுத்த சொல்லி வரக்கூடிய அழுத்தத்தால் பலர் அரசு பள்ளிக்கு மாறிவருகின்றனர். தனியார் பள்ளியில் பயிலும் இரண்டு பிள்ளைகள் இருக்கும் குடும்பத்தில் வீட்டு வாடகைக்கு அடுத்தபடியாக, பள்ளிக்கட்டணம் மாத பட்ஜெட்டில் இரண்டாவது செலவீனமாக உள்ளது.
 • கள ஆய்வில் 30% குடும்ப ஆண்கள் குடிப்பழக்கத்திற்கு ஆளாகி தாங்கள் ஈட்டும் குறைந்த வருமானத்தையும் டாஸ்மாக்’ல் செலவிடுகின்றனர். இந்த குடும்பங்கள் அனைத்தும், பெண்கள் வேலைக்குச் சென்று அவர்கள் ஈட்டும் வருமானத்தில்தான் இயங்கிவருகிறது. முழுமுடக்கத்தில் டாஸ்மாக் மூடப்பட்டிருந்த காலம் பிரச்சனை இல்லாமல் இருந்தது எனவும், கடைகள் திறந்ததும் ஆண்கள் பழைய நிலைக்குத் திரும்பிவிட்டனர் என்கிற வருத்தமும், தமிழக அரசின் மீதான கோபமும் பெண்களிடம் பரவலாகக் காணப்பட்டது.
 • கிராமத்திலிருந்து இடம்பெயர்ந்து சென்னையில்
  குடியேறி சிலஆண்டுகளாக வேலைசெய்துவரும் சில ஆயிரம் குடும்பங்கள் வீட்டை காலிசெய்து சொந்த ஊருக்கேத் திரும்பும் (Reverse Migration) போக்கையும் நாம் காண்கிறோம். சென்னைக்குள் பல வாடகை வீடுகள் கடந்த ஓராண்டாக காலியாக இருந்தும் வாடகை இன்னும் குறையவில்லை.
 • சென்னையைப் பூர்வீகமாகக் கொண்டும் அல்லது ஒரு தலைமுறைக்கு மேல் வாழ்ந்தபோதும் சொந்தவீடு என்பது குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்குக் கனவாகவே இருக்கிறது.
 • கட்டுமானம் உள்ளிட்ட உடலுழைப்பு தொழிலாளர்கள், வீட்டுவேலை செய்யும் தொழிலாளர்கள், சாலையோர சிறு வியாபாரிகள், ஆட்டோ ஓட்டுனர்கள் என சென்னை நகரில் உள்ள குடிசைப் பகுதிகளில் (slums) சுமார் 28 லட்சம் மக்கள் வாழ்கின்றனர். இவர்களை உள்ளடக்கி சுமார் 7.12 லட்சம் குடும்பங்கள் வறுமைக்கோட்டிற்குக் கீழே உள்ளவர்கள் என்று 2019ல் சென்னை மாநகராட்சி புதிய வழிமுறையில் கணக்கெடுப்பு எடுத்துள்ளது. கொரோனாவிற்குப் பின்னர் எண்ணிக்கை இருமடங்காகியிருக்க வாய்ப்பு உள்ளது.

      2.2 நிவாரணம் மற்றும் சமூகப் பாதுகாப்பு:

 • பிற மாநிலங்களை ஒப்பிடும்போது, தமிழ்நாட்டில் சமூக நலத் திட்டங்கள் அதிகம் செயல்பாட்டில் இருந்துவருகிறது. குறிப்பாக ரேஷன் அட்டை தாரர்களுக்கு உணவுதானியங்கள் மற்றும் நிதி உதவி, முதியோர் பென்ஷன், விதவை உதவித் தொகை, பெண்குழந்தைகளுக்கு நிதி உதவி, மருத்துவக் காப்பீடு, அம்மா உணவகம் மற்றும் அமைப்புப் சாரா தொழிலாளர்களுக்கு 36 நல வாரியங்கள் என பல திட்டங்கள் உள்ளன.
 • மேலே குறிப்பிட்டதுபோல கொரோனா கால நிவாரண நிதியாக 4,000 ஆயிரம் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்பட்டது. ஆனால் இவை அனைவருக்கும் சென்று சேரவில்லை என்பதை கள ஆய்வில் நாம் கண்டறிந்தது. ‘ஒரு வீட்டிற்கு ஒரு ரேஷன் அட்டை’ என்ற நடைமுறை தமிழக அரசால் கடைபிடிக்கப்படுகிறது. சென்னை நகரத்தில் பெரும்பான்மையினர் கிராமத்திலிருந்து இடம்பெயர்ந்து வாழ்பவர்கள், அதிலும் பெரும்பாலானோர் வாடகை வீட்டில்தான் வசிக்கின்றனர். வீட்டின் உரிமையாளர் அந்த விலாசத்தில் ரேஷன் அட்டை வைத்திருப்பதால், அந்த வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் குடும்பங்கள் ரேஷன் அட்டையைப் பெறமுடிவதில்லை என்பது அடித்தட்டு உழைக்கும் மக்களின் முக்கியச் சிக்கலாக நீடித்துக்கொண்டிருக்கிறது.
 • அதேபோல, கள ஆய்வில் சந்தித்த அமைப்புச் சாரா தொழிலாளர்கள் 80% நல வாரியத்தில் பதிவு செய்யவில்லை. இதனால் கடந்த ஆண்டு கொடுக்கப்பட்ட ரூ 1000/- பெரும்பாலான தொழிலாளர்கள் பெறவில்லை. தொழிற்சங்கங்களின் கணக்குப்படி தமிழகத்தில் சுமார்5 முதல் 2 கோடி அமைப்புச் சாரா தொழிலாளர்கள் உள்ளனர். ஆனால், இதில் நல வாரியத்தில் பதியப்பட்டது 15-20% மட்டுமே. இதைத் தொடர்ந்து தமிழக அரசு அமைப்புச்சாரா தொழிலாளர்கள் பதிவிற்காக தனி ஒரு இணையதளம் தொடங்கி உள்ளது. ஆனால், அதில் பதிவுசெய்வது எளிமையானதாக இல்லை. குறைவான பதிவிற்கு இன்னொரு காரணம் நல வாரியத்திடம் இருந்து பெறப்படும் தொகை மிகக் குறைவாகவும், அதைப் பெறுவதற்கு அரசு அலுவலகங்களில் பல முறை அலையவேண்டியுள்ளது.
 • முதியோர் பென்ஷன் பதிவு பெற்றவர்களுக்கு இடையில் பணம் வராமலும், புதியதாக விண்ணப்பிப்போருக்கு பதிவு வராமலும் உள்ளது. மருத்துவக் காப்பீடு பெரும்பாலும் பயன்படுத்தப்படாமல், அரசு மருத்துவமனைகளையே அடித்தட்டு மக்கள் சார்ந்து இருக்கின்றனர்.
 • கணிசமான எண்ணிக்கையில் குடும்பங்களின் பொருளாதாரத்தை பெண்களே (தாயும் – மகளும்) ஈட்டிவருகின்றனர், இதில் பெண்கள் மட்டுமே உள்ள குடும்பங்களும் அடங்கும். இப்படிப்பட்ட குடும்பங்களுக்கு சிறப்பு கவனம் தேவைப்படுகிறது. உதாரணத்திற்கு பேச்சியம்மாளும் அவர் மகளும் வாடகை வீட்டில் வசித்துவருகிறார். 60 வயதை எட்டிய பேச்சியம்மாள் வீட்டு வேலைக்குச் சென்றுவந்தார். தற்போது கொரோனா நோய் அச்சத்தால் ஒரு வருடமாக வேலை இல்லை. அவர் மகள் ஒரு கடையில் மாதம் 6000 சம்பளத்திற்கு வேலை செய்கிறார். வீட்டு வாடகை 3000 போக அவர் கையில் வெறும் 3000 கொண்டு ஒரு மாத செலவை சமாளிக்கவேண்டும். இவர் ரேஷன் அட்டையைத் தவிர, அரசின் வேறு எந்த நலத்திட்டங்களையும் பெறுவது இல்லை.
 • சென்னை போன்ற நகரத்தில் வாடகை வீட்டில் வசிக்கும் குறைந்த வருமானம் உள்ள குடும்பங்கள் கொரோனா காலத்தில் வருமானம் இழந்து இருக்கும்போது தமிழக அரசின் சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் போதுமானதாக இல்லை.

     2.3 விலைவாசி உயர்வும் சிறு குறு தொழில்களும்:

 • 15 மாத பேரிடர் காலத்தைப் பயன்படுத்தி பெட்ரோல், டீசல், LPG தொடங்கி சமையல் எண்ணெய், பருப்பு, சர்க்கரை, டிதூள் என மளிகைப்பொருட்கள் மட்டுமில்லாமல் இரும்பு, சிமெண்ட் போன்ற கட்டுமானப் பொருட்கள் வரை அனைத்தின் விலைகளும் ஏற்றப்பட்டுள்ளன. மக்களிடம் வருமானம் குறைந்துள்ளதால் நுகர்வும் குறைந்தது. ஆனால், ஒன்றிய அரசும், கார்ப்ரேட் நிறுவனங்கள் தங்கள் லாபம் குறையக்கூடாதென்று செயற்கையாக விலையை உயர்த்தி சாமானிய மக்கள் மீது மேலும் சுமையை அதிகப்படுத்தியுள்ளனர்.
 • மக்கள் வருமானமின்றி வாடும் சூழலில், தமிழக அரசால் கொடுக்கப்பட்ட நிவாரண நிதியும் விலைவாசி உயர்வால் பயன் குறைவாகவே உள்ளது. வாங்கும் சக்தி மக்களிடம் குறைவாக உள்ள சூழலில், சிறு குறு வியாபாரிகள் எந்தப் பொருட்களின் விலையையும் உயர்த்த முடியாத நிலை உள்ளது. அப்படி விற்கும் பொருட்களின் விலையை உயர்த்தி விற்பனை செய்தால் வியாபாரம் இன்னும் குறையும். உதாரணமாக LPG சிலிண்டர், டிதூள் விலை உயர்ந்தாலும் ஒரு தேநீர் விலை ரூ 10 க்கு மேல் தற்போது விற்கமுடியாது. பாமாயில் விலை உயர்ந்தாலும் ஒரு வடை ரூ. 5-8க்குமேல் உயர்த்தமுடியாது. குறு வியாபாரிகள் வாடகைக் கொடுத்து, தண்டல் காசு கட்டியபின்பு ரூ100-200 மட்டுமே ஒரு நாளைக்கு சம்பாதிக்க முடிகிறது.
 • பொதுவாக உணவுக் கடைகளுக்கு பார்சல் மூலம் விற்பனை செய்ய அனுமதி அளித்த தமிழக அரசு, நடைபாதை உணவுக் கடைகளுக்கு அனுமதி அளிக்கவில்லை. ‘அம்மா’ உணவகங்கள் போல ஏழை எளிய மக்களுக்கு பயன்படும் வகையில், குறைந்தவிலையில் தரமான உணவை வழங்கும் இவர்களை அரசு அங்கீகரிக்கவில்லை என்ற வருத்தத்தை உணவுக்கடை வியாபாரிகளிடம் பார்க்க முடிந்தது.
 • தி.நகர் சாலையோர துணிக் கடைகள் கடந்த ஓராண்டாக வரலாறு காணாத குறைந்த வியாபாரமே செய்துவருகின்றனர். பொதுமுடக்கம் படிப்படியாகத் தளர்த்தும் தமிழக அரசு, இவர்களுக்குக் கடைசியாகத் தான் அனுமதி கொடுக்கிறது. பழைய நிலைக்கு வியாபாரம் திரும்ப இன்னும் சில ஆண்டுகளாகக்கூடும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.
 • 15 மாத கொரோனா காலத்தில் பஸ்-ரயில் போக்குவரத்துக்கு 6-8 மாதங்கள் வரை தடைப்பட்டது. இருசக்கர வாகனம் வைத்திருப்போர், ஆட்டோ – டாக்சியில் செல்ல பணம் வைத்திருப்போர் மட்டுமே இந்த காலகட்டத்தில் இயல்பாக செல்ல முடிந்தது. ஒவ்வொரு பஸ் – ரயில் நிலையங்கள் அருகில் சாலையோர வியாபாரிகள் காய்கறி, பூ, பழம், துணி என ஒரு நாளைக்கு ஆயிரம் ரெண்டாயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை மட்டுமே வியாபாரம் செய்யும் ஆயிரக்கணக்கான குறு வியாபாரிகள் உள்ளனர். கொரானா முதல் அலையில் ஒன்றிய அரசு சாலையோர வியாபாரிகளுக்கு ரூ 10,000 கடன் உதவி வழங்கியது. குறைந்த எண்ணிக்கையிலான வியாபாரிகள்தான் இத்தொகையைப் பெற்றனர். ஆனாலும், இதுபோன்ற நடவடிக்கை தொடரவேண்டியுள்ளது. ஒரிசா அரசு சாலையோர வியாபாரிகளுக்கு நிவாரணத்தொகையாக ரூபாய் 3000 நிதி வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது
 • பெட்ரோல், கேஸ் விலையேற்றம், ஆண்டுதோறும் உயரும் இன்சூரன்ஸ், FC கட்டணத்தொகை, Ola – Uber களின் உழைப்புச் சுரண்டல், வட்டிக்கு மேல் வட்டி விதிக்கும் நிதிநிறுவனங்கள் என அனைத்தையும் தாங்கி திணறி ஓடிக்கொண்டிருந்த ஆட்டோ-டாக்சி ஓட்டுநர்களின் வாழ்க்கை. இருவருக்கு மேல் ஆட்டோவில் பயணிக்கக் கூடாது, மூவருக்கு மேல் டாக்சியில் பயணிக்கக்கூடாது என்று நடைமுறைக்கு உதவாத கட்டுப்பாடுகள் மேலும் இவர்களுக்கு சிக்கல்களை அதிகரிக்கிறது. கள ஆய்வில் நாங்கள் சந்தித்த அனைத்து ஆட்டோ-டாக்சி ஓட்டுநர்களும் தொழிலை விட்டு வெளியேற முடியாமல், வேறு எந்த வாய்ப்புகளும் இல்லாமல் ஓராண்டாகத் திணறி வருகின்றனர். குறிப்பாக Ola- Uber மற்றும் RTO விதிகளுக்கு உட்படாத Rapido போன்ற தொழில்நுட்பம் சார்ந்த கார்ப்ரேட் நிறுவனங்கள் இந்த சந்தையைக் கைப்பற்றி, பயணக் கட்டணம், commission என அனைத்தையும் தீர்மானிக்கின்றனர்.வாகன முதலீடு, பராமரிப்பு, இன்சூரன்ஸ், FC கட்டணம் என எதிலும் ஒரு ரூபாய் கூட முதலீடு செய்யாத Ola-Uber கார்ப்ரேட் நிறுவனங்கள், வாகன ஓட்டுனரும் உரிமையாளருமானவர்களை ‘partner’ என்று அழைத்து ஓட்டுனர்களின் உழைப்பிலிருந்து 30% வரை கமிஷன் பெறுகிறது. இவர்களிடையே இருக்கும் தொழில் போட்டியில் டீசல் விலை ரூ.100ஐ தொடும்போதும் கிலோமீட்டர் விலையை குறைக்கிறது. போக்குவரத்துத்துறை கட்டணத்தை தீர்மானிக்கவேண்டும் என்றும், Ola-Uber போன்ற நிறுவனங்களின் கமிஷன் 10% ஆக குறைக்கவேண்டும் என்றும் இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட கால் டாக்சி ஓட்டுனர்கள் சமீபத்தில் போராட்டடம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

      2.4)  15 மாதங்களாக முடங்கியுள்ள OMR ஐ.டி சாலை

 • OMR IT Corridor இல் மார்ச் 2020 முதல் சூன்வரை கடந்த 15 மாதங்களாக ஐ.டி அல்லாத பிற தொழில்கள் முழுமையாக முடங்கியுள்ளது. உணவகம், தங்கும் விடுதி, லாரி-பேருந்து போக்குவரத்து, ஆட்டோ–டாக்சி, கட்டுமானம், ரியல் எஸ்டேட், ஜவுளி மற்றும் ஐ.டி அல்லாத அனைத்துத் தொழில்களும் நசிவடைந்திருக்கிறது. இதனால் சுமார் 4500 தங்கும் விடுதிகள் மற்றும் PG விடுதிகள் மூடப்பட்டுள்ளன. 20,000 க்கும் மேற்பட்ட property  காலியாக உள்ளது. மக்கள் நடமாட்டம் இல்லாத காரணத்தால் மளிகைப் பொருட்களின் வியாபாரம் 60% குறைந்துள்ளது. மேலும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை-வாழ்வாதாரம் இழந்து வறுமைக்குள் தள்ளப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதே சமயம், TCS, CTS, Infosys, Wipro, HCL போன்ற பெரும் ஐ.டி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்துகொண்டே பணி செய்ய ஏற்பாடு செய்து, தங்கள் தொழிலை தடையில்லாமல் நடத்திவந்துள்ளது, கடந்த காலத்தைப்போன்று வருமானமும் ஈட்டியிருக்கிறது. பல ஐ.டி நிறுவனங்கள் ‘வீட்டில் இருந்து வேலை’ என்பதை நிரந்தரமாக்கலாமா? என்று பரிசீலித்துவருகின்றன. மேலும் அலுவலகங்களை முழுமையாகத் திறப்பதுபற்றி இன்றுவரை ஏற்பாடுகள் செய்வதாகவும் தெரியவில்லை.
 • கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசு OMR சாலையை, பிரத்யேகமாக ஐ.டி தொழில் வளர்ச்சிக்காக பல கட்டமைப்புகளை உருவாக்கி மேம்படுத்தி வந்துள்ளது. SIPCOT, ELCOT என சிறப்புப் பொருளாதார மண்டலத்தின் (SEZ) மூலம் வரி விளக்கு உள்ளிட்ட பல சலுகைகளை ஐ.டி நிறுவனங்களுக்கு தமிழக அரசு வழங்கி வருகிறது. அடையார் மத்திய கைலாஷ் தொடங்கி திருப்போரூர் வரை சுமார் 35 கிலோமீட்டர் வரை IT Corridor விரிவாக்கம் அடைந்துள்ளது. தமிழக அரசின் இந்தத் தொழில் மேம்பாட்டுத் திட்டத்தை நம்பிதான் சில லட்சம் தொடங்கி பல கோடிகள் வரை ஆயிரத்திற்கு மேற்பட்ட சிறு, குறு, நடுத்தர  தொழில் நிறுவனங்கள் முதலீடு செய்து வந்தது. கடந்த 15 மாத பொருளாதார முடக்கம் ஆயிரம் கோடிக்கு மேலாக இழைப்பை ஏற்படுத்தியுள்ளது.
 •  ‘சிங்கார சென்னை’ திட்டத்தின் கீழ் கூவம், அடையாறு மற்றும் பக்கிங்காம் கால்வாய் சுத்திகரிப்பு திட்டத்தை செயல்படுத்திட கரையோரம் வாழ்ந்த ஆயிரக்கணக்கான பூர்வகுடி மக்களை ‘ஆக்கிரமிப்பு’ என்ற பெயரில் அங்கிருந்து வெளியேற்றி சென்னைக்கு வெளியே 30 கிலோமீட்டர் தொலைவில் OMR சாலையில் கண்ணகிநகர், செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் என புதிய குடியிருப்புப் பகுதிகளை உருவாக்கி 3 லட்சத்திற்கும் (சுமார் 50,000 குடும்பங்கள்) மேற்பட்ட ஏழை எளிய மக்களை OMR துணை நகரத்திற்கு கூலி தொழிலாளர்களாக தமிழக அரசு குடியமர்த்தியுள்ளது. இதில் ஒருபாதியினர் இன்னமும் தங்கள் வாழ்வாதாரத்திற்கு சென்னை நகரத்தை நம்பி இருக்கின்றனர், தினமும் 50-60 கிலோமீட்டர் பயணம் செய்து சென்னைக்கு வந்து போகின்றனர். இன்னொரு பாதியினர், ஓ.எம்.ஆர். சாலையில் இயங்கிவரும் ஐ.டி. நிறுவனங்களை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தங்கள் வாழ்வாதாரத்திற்காக சார்ந்து இருக்கின்றனர். ஐ.டி, இதர நிறுவனங்கள் மற்றும் உயர் தர அடுக்குமாடி குடியிருப்புகளில் AC மெக்கானிக், எலெக்ட்ரிசின் உள்ளிட்ட பராமரிப்புப் பணிகள், தூய்மைப் பணி, காவல் பணி, வீடு வேலை, தோட்ட வேலை என பணிபுரிந்து வருகின்றனர், இவை தவிர கட்டுமான கூலி தொழிலாளர்கள் உள்ளனர். 15 மாதங்களாக அலுவலகங்கள் திறக்கப்படாமலும், கொரோனா காரணமாக வீட்டு வேலைக்கு அழைக்கப்படாமலும் இம்மக்கள் வேறெந்த பகுதியை காட்டிலும் அதிக இன்னலுக்கு ஆளாகி, அவர்கள் பிரச்சனைகள் தொடர்ந்து கவனிக்கப்படாமல் புறக்கணிக்கப்படுகிறது. அடிப்படை தேவைகளான குடிநீர், கல்வி, சுகாதாரம், போக்குவரத்து என அனைத்திலும் சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர். செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் பகுதிகள் வெறும் இரண்டு கிலோமீட்டர் சுற்றளவில் சுமார் 2 லட்சம் மக்கள் அடுக்குமாடிகளில் வசிக்கின்றனர்.

3) முடிவுகள் மற்றும் கோரிக்கைகள்:

கொரோனா பொதுமுடக்கம், தமிழக தொழில்கள் மற்றும் மக்கள் பிரிவினர்கள் இடையே ஏற்படுத்திய பொருளாதார பாதிப்புகள் குறித்த முழுமையாக ஆய்வும்  ஒன்றிய அரசு ஓராண்டில்  அறிவித்த ‘பொருளாதார தொகுப்பு’ மூலம்  ஏற்பட்ட பயன்கள் என்ன ? எனபது மதிப்பீடு  செய்யப்பட்டு தமிழக அரசு அறிக்கை வெளியிட வேண்டும். முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் திரு ரங்கராஜன் தலைமையிலான குழு கொரோனா முதல் அலையைத் தொடர்ந்து ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் பொருளாதார மீட்புப் பரிந்துரைகளைத் தமிழக அரசுக்கு அறிக்கையாகக் கொடுத்துள்ளது.  பேரா.ஜெயரஞ்சன், விஜயபாஸ்கர் உள்ளிட்டோரை கொண்ட ‘தமிழக வளர்ச்சிக் கொள்கைக் குழு’ மற்றும் ரகுராம் ராஜன் உள்ளிட்டோரை கொண்ட ‘பொருளாதார ஆலோசனைக் குழுவை’ தமிழக அரசு நியமித்திருப்பதை வரவேற்கும் அதேவேளையில் நகர்ப்புற / கிராமப்புற ஏழைகள், குறைந்த வருமானமுள்ள பிரிவினர், கூலித் தொழிலாளர், சிறு-குறு தொழில் புரிவோர் என வகைப்படுத்தி தமிழக அரசு பொருளாதார மீட்பு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

 1. நகர்ப்புற வேலைவாய்ப்புத் திட்டம்: ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தைப்போல (MGNREGA) நகர்புறத்திற்கான வேலைவாய்ப்புத் திட்டத்தை ‘casual, semi-skilled, skilled’ வகைப்படுத்தி கொண்டுவரவேண்டும். இத்திட்டத்தில் பெண்களுக்கு உரிய கவனம் கொடுக்கவேண்டும்.
 2. வறுமை நிலையை அறிய கணக்கெடுப்பு: கொரோனாவிற்குப் பின்னான வறுமையின் நிலை அறிய கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும், விளிம்பு நிலையில் உள்ள குடும்பங்களைக் கண்டறிய மேம்பட்ட வழிமுறையை கையாள வேண்டும். வாழ்வாதார மீட்புத் திட்டத்தை அறிவித்து வெளிப்படைத் தன்மையோடு கண்காணிக்க வேண்டும்.
 3. அரசுப் பள்ளி மேம்படுத்துதல்: பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து தமிழக முழுவதும் 10 லட்சத்திற்கு மேலானோர் தனியார் பள்ளி மாணவர்கள் அரசு, அரசு உதவி பெறும்  பள்ளியில் மாறியுள்ள நிலையில் ஆசிரியர் எண்ணிக்கை, பள்ளி  உள்கட்டுமானம் மேம்படுத்தப்பட்டு கல்வித்தரம் உயர்த்தப்பட வேண்டும். இடைநிற்றல் நடக்காமல் தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசின் பயிற்று மொழிக் கொள்கை தமிழ்வழிக் கல்வி என்று முடிவு செய்ய வேண்டும். இதை செயல்படுத்துவதற்கு தமிழ்வழி கல்வி பற்றிய அறிவியல் விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தவேண்டும். குழந்தை திருமணம், குழந்தைத் தொழிலாளர் முறை பெருகாமல் தடுக்க சிறப்புக் கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும்
 4. அனைவருக்கும் மேம்படுத்தப்பட்ட சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள்:
  • ரேஷன் அரிசி அனைவரும் பயன்படுத்தும் வகையில் தரம் உயர்த்திட வேண்டும்.
  • வாடகை வீட்டில் குடியிருக்கும் குடும்பங்களுக்கு ரேஷன் அட்டை வழங்குவதற்கு ஏற்ப விதிகளை மாற்றி அமைக்கவேண்டும்.
  • ‘அம்மா உணவகம்’ திட்டத்தை மேம்படுத்தி விரிவாக்கம் செய்யவேண்டும்.
  • முதியோர் பென்ஷன்/விதவை நிதிஉதவி, என அனைத்து சமூக நலத் திட்டங்களை விரிவுபடுத்த வார்டு அளவில் கார்பரேஷன் மூலமாக முகாம்கள் அமைத்து பதிவு/செரிப்பதல் வேண்டும்.மாதாந்திரத் தொகையை ஆயிரத்திலிருந்து இரண்டாயிரமாக உயர்த்தவேண்டும்.
  • குடும்பப் பெண்களுக்கு மாதம் ரூ.1,000/- வழங்கும் திட்டத்தை விரைந்து அமல்படுத்த வேண்டும்
  • அமைப்புச் சாரா தொழிலாளர் பதிவை இணையதளத்தில் எளிமையாக்க வேண்டும், தொழிற்சங்கங்களை இதில் ஈடுபடுத்த வேண்டும், தொழிற்சங்கங்கள் மூலம் கொடுக்கப்படும் பட்டியலை சரிபார்த்து பதிவு கொடுக்கவேண்டும். விலைவாசி உயர்வை கணக்கில்கொண்டு அணைத்து நல திட்டங்களின் தொகையை அதிகரிக்கவேண்டும்.
  • பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் ‘வெள்ளை போர்டு’ பேருந்துகள் அதிகரிக்க வேண்டும்.
 5. தொழிலாளர் உரிமை பாதுகாக்கப்படவேண்டும்:
  • நிரந்தரத் தொழிலாளர்களாக தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வதையும், மாத சம்பளம் பிடித்தலையும் நிறுத்திட அரசு உத்தரவிடவேண்டும். குறிப்பாக அனைத்து Pvt Limited மற்றும் Limited நிறுவனங்களில் தொழிலாளர் சட்ட விதிகள் முழுமையாக அமல்படுத்திட கண்காணிக்க வேண்டும்.
  • அறக்கட்டளை மூலம் வணிக நோக்கில் நடத்தப்படும் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் இதர ஊழியர்களுக்கு ஊதியம் கொடுப்பதில் தொழிலாளர் சட்டங்கள் அமல்படுத்துவதை உறுதிசெய்யவேண்டும்.
  • தூய்மைப் பணி, சுகாதாரம் உள்ளிட்ட அணைத்து அத்தியாவசிய சேவைகளில்  (முன்கள பணியாளர்கள் உள்ளடக்கிய) ஒப்பந்த முறையை ஒழித்து அனைவரையும் பனி நிரந்தரமாகி, மாத சம்பளத்தை அரசே நிர்ணயிக்க ஊதிய வாரியம்(wage board)  அமைத்திடவேண்டும்.
  • வடமாநில புலம்பெயர் தொழிலாளர் கணக்கெடுப்பு, பதிவு மற்றும் சமூக பாதுகாப்பை உறுதி செய்து அணைத்து தொழிலாளர் நல திட்டங்களும் அவர்களுக்கும் அளித்திடவேண்டும்.
 6. டாஸ்மாக்‘கை மூட வேண்டும்:குடியைக் கெடுக்கும் டாஸ்மாக் சாராயக் கடைகளின் எண்ணிக்கையை உடனடி நோக்கில் பாதியாக குறைத்துப் பிறகு முழுமையாக மதுவிலக்கை அமலாக்கவேண்டும்.
 7. வீட்டு வாடகை: வீட்டு வாடகையை கட்ட முடியாமல் திணறும் அடித்தட்டு மக்களுக்கும்   தண்டலில் கடன் பெற்று வட்டிக் கட்ட முடியாமல் தவிப்போருக்கும் உரிய கால அவக்காசம் வழங்குவதற்கான அறிவிப்பாணைகளை அரசு வழங்க வேண்டும். அந்த அறிவிப்பாணையை மீறுவோர் மீது புகார் தர வழிவகை செய்யப்பட வேண்டும்.
 8. சாலையோர குறு வியாபாரத்தையும், தள்ளுவண்டி உணவகங்களையும் ஊக்குவிக்கவேண்டும்: பொதுமக்களுக்கு குறைந்தவிலையில் பொருட்களையும், உணவையும் வியாபாரம்செய்யும் சாலையோர வியாபாரிகளை ஊக்குவிக்க வேண்டும்.ஒன்றிய அரசு அறிவித்த கடன் உதவியான பத்தாயிரம் ரூபாய் என்பது இதுவரை 93 ஆயிரம் நபர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. ஆனால்5 லட்சம் வியாபாரிகளுக்கு கொடுக்க திட்டம் தீட்டியுள்ளது ஒன்றிய அரசு. அதனை தாமதம் இல்லாமல் வழங்கிட ஏற்பாடுசெய்யவேண்டும்.மேலும் அனைத்து குறு தொழில்களுக்கும் ‘வணிக முதலீட்டு நிவாரணம்’ என்ற அடிப்படையில் ரூ 20,000தொடங்கி ஒரு லட்சம் வரை வட்டியில்லாத கடனாக கொடுக்கவேண்டும்
 9. சிங்காரச் சென்னை 2.0 – ஏழைகள் வாழ்வாதாரத்தைப் பறிப்பதாக இருக்கக்கூடாது:
  • ஆற்றோரம் ஆக்கிரமிப்பாளர்கள் என்று சொல்லி குடிசைகளை அகற்றி சென்னைக்கு வெளியே பெரும்பாக்கத்தில் குடியமர்த்துவதை நிறுத்த வேண்டும். சென்னை நகரத்திற்கு உள்ளே மக்களை குடியமர்த்த வேண்டும்.
  • சென்னை நகரத்திற்குள் உள்ள கோல்ப் மைதானம், கிண்டி ரேஸ் கோர்ஸ் உள்ளிட்ட கேளிக்கை மைதானங்களை மக்கள் குடியிருப்பிற்கும் பிற பொதுத்தேவைகளுக்கும் பயன்பாட்டிற்கும் கொண்டுவரவேண்டும்.
  • ‘ஸ்மார்ட் சிட்டி‘ என்ற பெயரில் சாலையோர வியாபாரிகளை வெளியேற்றுவதை (பாண்டி பஜார் போல) நிறுத்தவேண்டும்.
  • கண்ணகி நகர், செம்மஞ்சேரி, பெரும்பாக்கம்அனைத்து மக்கள் பிரிவினரையும் உள்ளடக்கிய மக்கள் நல அரசு என்ற கொள்கைகயை முன்வைக்கும் திமுக தலைமையிலான தமிழக அரசு இந்தப்பகுதியை முன்மாதிரியாகக் கொண்டு அனைவருக்கும் குறைந்தபட்ச வருமானம் (Universal Basic Income ) தரமான கல்வி, சுகாதாரம், குடியிருப்புகள் (Universal Education, Health & Housing) போன்ற அடிப்படைத் தேவைகளை உறுதிதப்படுத்தும் நோக்கில் சிறப்புத்திட்டம் வகுத்திட வேண்டும். வெகு  அடர்த்தியாக மக்கள் வாழும் இந்தப்பகுதிகளில்  மேலும் மக்களை குடியமர்த்துவதை  தவிர்க்க வேண்டும்.
 10. Ola-Uber கட்டுப்படுத்தப்படவேண்டும்: கார்ப்பரேட் நிறுவனங்களின் கமிஷன் பங்கை கட்டுப்படுத்தி ஆட்டோ-டாக்சி கட்டணத்தை அரசே தீர்மானிக்கவேண்டும். போக்குவரத்து பொது சேவையாக இருந்திட இது போன்ற செயலியை அரசே கொண்டுவரவேண்டும்
 11. OMR ஐ.டி சாலை பொருளாதார முடக்கத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்: ஐ.டி.நிறுவனங்களை குறைந்தபட்சம் 50% ஊழியர்களோடு அலுவலகங்களை உடனே திறந்திட உத்தரவிடவேண்டும்

 

சோசலிச தொழிலாளர் மையம் SWC – தமிழ்த்தேச மக்கள் முன்னணி

சென்னை மாவட்டம், 9500056554, 9941931499

சாலையோர உணவுக்கடைகள் என்ன கள்ளச்சாராயம் விற்பவர்களா ? எங்களுக்கு ஏன் அனுமதி இல்லை ?

நடுத்தரக் குடும்பங்களை ஏழைகளாக்கி, ஏழைகளை ஏதுமற்றவர்களாக்கிய பொதுமுடக்கம்

பொதுமுடக்க காலத்தில் தொழிலாளர் வயிற்றிலடிக்கும் சரவணா ஸ்டோர்ஸ்

இனி சுயமரியாதையுடன் வாழமுடியுமா ? – சிறு குறு வியாபாரிகளின் நிலை

பெட்ரோல் விலையேற்றம், OLA – Uber பகல் கொள்ளை, அதிகரித்த இன்சூரன்ஸ் கட்டணம் – ஆட்டோ ஓட்டுனர்களுக்கு தமிழக அரசு என்ன செய்யப் போகிறது ?

சென்னை அண்ணாசாலையைத் திணறடித்த ஓலா-ஊபர் கால் டாக்ஸி ஓட்டுனர்களின் போராட்டம் – தமிழக அரசே கட்டணம், கமிசனைத் தீர்மானிக்கவேண்டும்!

கொரோனா காலத்தில் தனியார் பள்ளி நிர்வாகத்தால் வஞ்சிக்கப்பட்ட ஆசிரியர்கள்

15 மாதங்களாக முடங்கியுள்ள OMR ஐ.டி சாலை – சென்னையிலிருந்து வெளியேற்றப்பட்டு செம்மஞ்சேரி, பெரும்பாக்கத்தில் குடியமர்த்தப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்திற்கு பொறுப்பேற்குமா தமிழக அரசு ?

15 மாதங்களாக முடங்கியுள்ள OMR ஐ.டி சாலை – ஐ.டி நிறுவனங்கள் குறைந்தபட்சம் 50% ஊழியர்களோடு அலுவலகங்களை திறந்திட தமிழக அரசு உத்தரவிடவேண்டும்!

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW