15 மாதங்களாக முடங்கியுள்ள OMR ஐ.டி சாலை – சென்னையிலிருந்து வெளியேற்றப்பட்டு செம்மஞ்சேரி, பெரும்பாக்கத்தில் குடியமர்த்தப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்திற்கு பொறுப்பேற்குமா தமிழக அரசு ?

09 Jul 2021

(கொரோனா பொதுமுடக்கமும் பொருளாதார பேரிடரும் – கள ஆய்வு – பதிவு 8)

சென்னை நகரத்தின் பல்வேறு பகுதிகளில் ஆற்றங்கரையோரம் இருந்தவர்களை  ’ஆக்கிரமிப்பாளர்கள்’ என்று முத்திரையிட்டு, அப்பகுதிகளிலிருந்து வெளியேற்றி அவர்கள் வாழ்வதற்காக உருவாக்கப்பட்ட குடியிருப்புப் பகுதிதான் OMR  சாலையில் உள்ள செம்மஞ்சேரி, பெரும்பாக்கம். சென்னைக்கு வெளியே சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. வேறெந்த பகுதி வாழ் மக்களையும்விடவும்   அரசால் கைவிடப்பட்டது இவர்கள்தாம் என்று சொல்லலாம். அமைந்தகரை, கிரீம்ஸ் சாலை திடீர் நகர், பட்டினப்பாக்கம், சிந்தாதரிப்பேட்டை, திருவான்மியூர், தரமணி,  என வெவ்வேறு பகுதிகளில் இருந்தும் வெவ்வேறு காலகட்டங்களிலும் சிங்காரச் சென்னை திட்டத்தாலும் சுனாமியாலும் சென்னை பெருவெள்ளத்தாலும்  எம்.ஆர்.டி.எஸ் இரயில்வே பாலத்தின் வருகையாலும் அங்கிருந்து துரத்தி விடப்பட்டவர்கள்.

1990 களில் உலகமய, தாராளிய, தனியார்மய பொருளியல் கொள்கைக்குள் இந்தியாவும் தமிழ்நாடும் அடியெடுத்து வைத்ததை ஒட்டி ஏற்பட்ட  தொழில் துறை வளர்ச்சியின் பகுதியாக ஸ்ரீபெரும்புதூர், உரக்கடம் பகுதிகள் அமைந்தன. அதைப் போலவே சேவைத் துறை வளர்ச்சியாக தகவல் தொழில்நுட்பப் (ஐ.டி.) பூங்காக்களைக் கொண்ட பகுதியாக சென்னை அடையாறில் உள்ள மத்திய கைலாசிலிருந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள திருப்போரூர் வரையிலான 35 கிமீ நீளம் வளர்த்தெடுக்கப்பட்டது. சென்னையின் புறநகர்ப் பகுதிகளாக இருந்த தரமணி முதல் கிழக்கு தாம்பரம் வரையிலும் கிழக்கு கடற்கரை சாலையிலுள்ள திருவான்மியூர் முதல் வாட்டர் டேங்க் வரையிலும்ன் பழைய மகாபலிபுரம் சாலை(ஓ.எம்.ஆர்) கந்தன்சாவடி  முதல் திருப்போரூர் வரையிலும் சென்னை நகரத்தின் நீட்சியாக, துணைநகரமாக உருமாற்றப்பட்டன.

ஐ.டி துறையில் முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்கு  நிலம், மின்சாரம், சாலை வசதிகள், வரிச் சலுகைகள், சிப்காட், எல்காட் போன்ற ஏற்பாடுகள் அரசால் உருவாக்கிக் கொடுக்கப்பட்டது. ஐ.டி. துறை நிறுவனங்களில் பணி புரிவதற்கு தேவையான கணிணித் திறன் கொண்ட உழைப்புச் சக்தியை உருவாக்குதற்கு அதே காலகட்டதில் பொறியியல் கல்லூரிகள்  தமிழ்நாட்டில் பெருகின. தமிழகமெங்கும் இருந்து ஐ.டி. துறையில் பணிபுரிவதற்கு படித்த ஆண்களும் பெண்களும் சென்னை நகரை நோக்கி வந்தனர்.  இந்த ஐ.டி. நிறுவனங்களின் வருகையையும் செயல்பாட்டையும் சார்ந்து உருவாக்கப்பட வேண்டிய துணை நகரத்தை வளர்த்தெடுப்பதற்கு உடலுழைப்புச் சார்ந்த வேலைகளை செய்வதற்கு குறைந்த கூலிக்கான உழைப்புச் சக்தியையும் அரசு வழங்க வேண்டிய தேவையிருந்தது. நிலம் மின்சாரம், வரிச்சலுகை, சாலை வசதிகளை வாரி வழங்கியதோடு குறைந்த கூலிக்கான மூளை உழைப்புத் தொழிலாளர்களைப் பெருக்கியதோடு சேர்த்து உடலுழைப்புச் சார்ந்த வேலைகளை செய்வதற்கான உழைப்புச் சக்தியையும் சேர்த்தே அரசு பன்னாட்டு முதலீட்டார்களுக்கு வழங்கியது.

இவ்வண்ண்ம்,  இந்த துணை நகரத்திற்கான உடலுழைப்புத் தொழிலாளர் முகாம்களாக கண்ணகி நகர், செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் ஆகியவை உருவாக்கப்பட்டன. எவ்வித உடைமையும் அற்ற, உழைப்பை மட்டுமே தமது உடைமையாக கொண்ட, பத்தாவதுக்கு மேல் படித்தவர்களை அரிதாகக் கொண்டிருந்த சுமார்  3 இலட்சம் பேர் (50,000 க்கும் மேற்பட்ட குடும்பங்கள்) சென்னை நகரத்தின் ஆற்றங்கரையோரங்களில் இருந்து வெளியேற்றப்பட்டு இங்கு குடியமர்த்தப்பட்டனர். இதில் ஒருபாதியினர் இன்னமும் தங்கள் வாழ்வாதாரத்திற்கு சென்னை நகரத்தை நம்பி இருக்கின்றனர், சென்னைக்கு வந்து போகின்றன்ர். இன்னொரு பாதியினர், ஓ.எம்.ஆர். சாலையில் இயங்கிவரும் ஐ.டி. நிறுவனங்களை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தங்கள் வாழ்வாதாரத்திற்காக சார்ந்து இருக்கின்றனர். வீட்டு வேலை, அலுவலக பராமரிப்பு, தூய்மைப் பணி, காவல் பணி ஆகியவற்றில் ஈடுபட்டு இந்த துணைநகரத்திற்கு உயிர் கொடுத்தது இவர்களுடைய உழைப்புமாகும்.

கொரோனாவின் வருகை ஐ.டி. துறையினர் அனைவரையும் வீட்டில் இருந்து வேலை செய்யும் நிர்பந்தத்திற்கு தள்ளியது. இதில் பெரும் பகுதியினர் பழைய மகாபலிபுர சாலையில் வாழ்விடம் இல்லாதவர்கள் தான். பலரும் தங்கள் சொந்த மாவட்டத்திற்கோ அல்லது சொந்த மாநிலத்திற்கோ சென்று அங்கிருந்தபடியே ஐ.டி. நிறுவனங்களுக்குப் பணி செய்து கொண்டிருக்கின்றனர். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஐ.டி. துறையினர் பணிபுரிந்த அந்த கண்ணாடிக் கட்டிடங்கள் ஆள் அரவம் இன்றி வெறிச்சோடிப்  போய்க்கிடக்கிறது.

சுனாமியால் பாதிப்பை தொடர்ந்து 2009 ஆம் ஆண்டு வாக்கில் பட்டினம்பாக்கத்தில் இருந்து இங்கே குடியமர்த்தப்பட்டவர்களோடு பேசினோம்.

2009 இல் பட்டினம்பாக்கத்தில் இருந்து இங்கே வந்த நேரத்தில் பஸ் வசதிக்காக குமரன் நகர் செல்ல வேண்டும், தண்ணீருக்காக ஆர்ச் வரை செல்ல வேண்டும். 2015 ஆம் ஆண்டு வெள்ளம் வந்த போது மிகவும் பாதிக்கப்பட்டோம். இப்போது கொரோனா வந்து எல்லாம் மொத்தமா அழிச்சிருச்சு, பிள்ளைகளுக்குப் படிப்பே மறந்துபோச்சு. இரண்டு வருசமாப் படிப்பே இல்லாமல் போச்சு. இந்த காலகட்டத்தில் ரேசன் அரிசி, கிருஸ்ணாயில் வாங்கக்கூட காசில்லாமல் கஷ்டப்பட்றோம். பள்ளிக்கூடம் திறக்கலைன்னா பிள்ளைங்க படிப்பு மொத்தமா போய் வாழ்க்கையே முடிஞ்சுப் போயிடும்’ என்று கவலையாக சொன்னார்.

செம்மஞ்சேரி, பெரும்பாக்கத்திற்கு மிக அருகில் உள்ள  டி.எல்.எப் மற்றும் பொலினெனி என்ற பெயரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் வீட்டு வேலைக்குப் போய் வருபவர்கள் இவர்கள். கொரோனா பெருந்தொற்று அச்சம் காரணமாக, ’வீட்டு வேலைக்கு வர வேண்டாம்’ என்று சொல்லிவிட்டதாக சொன்னார்கள். பொதுவாக  4, 5 வீட்டில் வேலை செய்தால் மாதம் 4000 ரூ வருமானம் கிடைக்கும். ஒரு வீட்டில் பாத்திரம் கழுவினால்  ஒரு நாளைக்கு 30ரூ கிடைக்கும். கொரோனா இந்த 4000 ரூ வருமானத்திற்கும் வேட்டு வைத்துவிட்டது. ”இனி டி.எல்.எப். இல் இருந்து வீட்டுக்காரர்கள் போனில் கூப்பிட்டால்தான் வேலைக்கு செல்ல முடியும். தண்டலுக்கு கடன் வாங்கித்தான் காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறோம். நாளைக்குகூட ஒருவர் வட்டி கேட்டு வருவார், என்ன செய்வது என்று தெரியவில்லை”  என்று சொன்னார்.

 

கொரோனா பெருந்தொற்று ஏற்படுத்திய நெருக்கடி வருமானத்தை இல்லாதொழித்த நிலையில், மருத்துவ தேவைகளுக்கு செம்மஞ்சேரியில்  உள்ள அரசு மருத்துவமனையைத்தான் இவர்கள் எதிர்பார்த்திருக்கிறார்கள். ஆனால், அண்மைக்காலமாக இங்கே பிரசவம் பார்ப்பதில்லை.

”பேபி ஹாஸ்பிடலுக்கோ ராயப்பேட்டைக்கோ அல்லது கோஷா ஆஸ்பத்திரிக்கோ போங்க என்று சொல்வதற்கு எதற்கு இங்க இந்த ஆஸ்பத்திரி? எப்போது போனாலும் மருத்துவர் இல்லை, நர்சு இல்லை  என்கிறார்கள். ’டாக்டர் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்’ என்று சொல்கிறார்கள். காசில்லைன்னுதான் இங்கே போறோம், இங்க இருந்து மறுபடியும் தனியாருக்கு விரட்டினால் என்ன பண்ணுவோம்? அருகில் உள்ள வீட்டில் 30 வயது பையன் தடுக்கி விழுந்துட்டாக. அடிபட்ட அவரை ஆஸ்பத்திரிக்கு கூட்டிக்கிட்டுப் போனாங்க. ’சாப்பிட்டு வாரோம், படுக்க வையுங்கன்னு’ டாக்டர் சொல்லிட்டு போயிருக்காக. அவங்க வரக்காட்டியும் உயிர் போயிருச்சி, செத்துப் போனதை சொல்லாமல் ராயப்பேட்டைக்கு அனுப்பிவிட்டாங்க” என்று  அங்குள்ள மருத்துவமனையின் அக்கறையின்மைக்கு எடுத்துக்காட்டு சொன்னார் ஒருவர்.

மூன்று நாட்களுக்கு முன்பு கீழே விழுந்ததால் பேச்சு மூச்சில்லாத தன் குழந்தையை அந்த மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றபோது அவர்கள் நடந்துகொண்ட விதத்தை விவரிக்கும் போதே அன்றைக்கு அவரது கையறு நிலையை எண்ணி அழத் தொடங்கிவிட்டார் இன்னொருவர். ”வாயில் நுரைதள்ளிக் கொண்டிருக்கும் குழந்தையைத் தொட்டுக்கூட பார்க்காமல் ஜி.எச்சுக்கு இட்டுப் போங்கன்னுதான் சொல்றாங்க, ஒன்னுமே பாக்கல. அப்பறம் செட்டிநாடு ஆஸ்பத்திரிக்குப் போனோம். அங்க எக்ஸ் ரே எல்லாம் எடுத்துப் பாத்துட்டு மூளையில் இரத்தம் கட்டி இருக்கிற மாதிரி இருக்கு.டாக்டர்ங்க எல்லாம் இன்னிக்கு வரமாட்டாங்கன்னு சொல்லிட்டாங்க. அப்புறம் பேபி ஆஸ்பத்திரி போய் அங்க பாத்தோம். அப்புறம் ஜி.எச்சு க்குப் போய் பார்த்து, பிறகுதான் கொஞ்சம் கொஞ்சமா பேச்சு வந்துச்சு. நரம்பு டாக்டர் பாத்துட்டு ஒன்னும் இல்ல, எதாவது பிரச்சன வந்தா வாங்கன்னு’ சொல்லி அனுப்பிச்சார் என்று தன் பிள்ளைக்கு மருத்துவம் பார்க்க தான் பட்ட பாட்டை சொன்னார். பின்னர், தீக்காயப்பட்ட தன் மகளின் சிகிச்சை அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டார் இன்னொருவர்.

சென்னை நகரத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கொத்து கொத்தாக அள்ளி வீசப்பட்டவர்களுக்காக கட்டிய குடியிருப்பு இது. அதில் குறைந்தது நான்கில் ஒருவரேனும் இங்கு தங்காமல் பிழைப்புக்காக  மீண்டும் நகரத்திற்கு வந்துவிட்டனர். தங்களுடைய சொந்த வீட்டை வாடகைக்கு விட்டுள்ளனர். அதனால், வாடக்கை வந்து குடியிருப்போரிடம் இந்த முகவரிக்கு குடும்ப அட்டை கிடையாது. எனவே, அவர்களால் நியாய விலைக் கடையில் இருந்து பொருட்களைப் பெற முடியாதவர்களாக இருக்கிறார்கள். கூடவே, எல்லா இடங்களைப் போல இங்கேயும் குடியிருப்போர் வாடகை தர முடியாத காரணத்தால் தத்தளித்துப் போய் கிடக்கின்றனர். ’வாடகை தரமுடியாவிட்டால் வீட்டைக் காலி செய்துவிட்டுப் போங்கள்’ என்று வீட்டு உரிமையாளர்கள் கட்டாயப்படுத்தி வருவதாகச் சொன்னார்கள்.

சற்று துணிச்சலாகப் பேசிய அவர், அரசின் மீதும் அதன் நிர்வாகத்தின் மீதும் கொஞ்சமும் நம்பிக்கையற்றவராக இருந்தார். ’ஓட்டுப் போடும் வரைக்கும்தான் ஆட்சி, அப்புறம் நம்ம கதை நாய் மாதிரிதான்’ என்று சொன்னார்.

அதே பகுதியில் இருந்த ஒருவரின் கதை வேறுவகையான துயரமாக இருந்தது. ”திருவல்லிகேணியில் இருந்து வீடு, கடை இரண்டையும் போட்டது போட்டபடி விட்டுவிட்டு இங்கே வந்துவிட்டோம். கடந்த திசம்பரில் சுமார் 1.5 இலட்சம் ரூபாய் கடன் வாங்கி தையற் கடை போட்டேன். சில நாட்கள் 1000 ரூ வரைக் கூட வருமானம் கிடைத்துக் கொண்டிருந்தது. ஆனால், கொரோனா இரண்டாம் அலை குறுக்கே வந்தது. வீட்டுக்கும் சரி கடைக்கும் சரி வாடகை கொடுக்க முடியவில்லை.  தலைமறைவு வாழ்க்கை போல இங்க வந்து இருக்கேன். இங்க என் தம்பியும் அம்மாவும் இருக்காங்க. அதனால இங்க வந்துட்டேன். இங்கிருந்து சைக்கிளில் கண்ணகி நகருக்கு போய் தினக் கூலிக்கு தையல் வேலை வேலை செய்து வருகிறேன். ஒரு நாளுக்கு 300 ரூ கிடைக்குது. வேலை கிடைச்சா போதும்னு இருக்கிறது. நலிவடைந்து கிடக்கிற எங்களைப் போன்ற தையற் தொழிலாளர்கள காப்பாத்த அரசு எதாவது செய்தா நல்லாருக்கும் ” என்று சொன்னார். இங்கே  பள்ளிக்கல்வி இடை நிற்றல் இருக்கிறதா? என்று கேட்டோம். ”அப்படி ஒன்னும் தெரியலங்க. எல்லாரும் படிக்க வைக்க முயற்சி பண்றாங்க. நான் 6 வது தான் படிச்சிருக்கேன். என் பிள்ளைங்களாவது படிக்கனும்னு நினைக்கிறேன். அதுக்குதானே இவ்வளவு கஷ்டப்படுறோம்”  என்றார்.

பின்னர் பெரும்பாக்கத்தில் உள்ள நேதாஜி நகருக்கு சென்றோம். அங்கே பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கான கொரோனா நிவாரண  மையம் இருக்கிறது. அங்கிருந்த பெரும்பாக்கம் பி.எப்.ஐ. தலைவர் அப்துல் ஹக்கிம், நேதாஜி நகரைச் சேர்ந்த பி.எப்.ஐ. தோழர்கள் நிஜாமுதீன், சாகுல் அமீது ஆகியோருடன் பேசினோம். இவர்கள் காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் கொரோனா நிவாரணப் பணிகள் செய்திருந்தனர். அவர்களது மனக் கண்ணில் ’குருவிக்கார மக்கள்’ என்று சொல்லப்படும் நாடோடிகளின் துயரம்தான் முதலில் வந்து நின்றது. செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் பகுதிக்கு அருகே வாழ்ந்துவரும் இந்த ’குருவிக்கார மக்கள்’ மிகுந்த வறுமையில் உணவுக்கே வழியின்றி தவிக்கின்றனர் என்று சொன்னார்கள். கொரோனா பணியில் ஈடுபட்டிருந்த தமது தோழர்களுக்கு இறைவனின் அருளால் நோய்த் தொற்று எதுவும் ஏற்படவில்லை. அதே போல், மக்கள் மிக நெருக்கமாக வாழும் நம் பகுதியில் தொற்று அதிகமாக பரவிவிட்டால் எப்படி எதிர்கொள்ளப் போகிறோம்’ என்று கவலையாக இருந்தோம். ஆனால், அதிசயமாக இங்கே கொரோனா பெருந்தொற்றுப் பாதிப்பு மற்ற பகுதிகளைவிட குறைவாக இருந்தது.” என்று சொன்னார். இதே கருத்தை நாம் பேசிய பலரும் சொன்னார்கள்.  ’இவ்வளவு அடர்த்தியாக மக்கள் வாழ்கின்றபோதும் ஏன் தீவிரமான நோய்ப் பரவல் ஏற்படவில்லை?’ என்று நலவாழ்வுத் துறை ஆய்வு மேற்கொண்டால் காரணங்களைக் கண்டறிய முடியும். அது கொரோனா பற்றிய தொற்றியல் சார் புரிதலை மேம்படுத்த உதவும்.

குடும்ப அட்டை இல்லாமல் பலரும் தவிக்கின்றனர்.  மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிப்புக்கு  உள்ளாகி இருக்கிறது. ஒவ்வொரு நாளும் காலையில் புறப்பட்டு இங்கிருந்து சோழிங்கநல்லூருக்கு உடலுழைப்புத் தொழிலாளர்கள் செல்வார்கள். அதுவொரு வேலைச் சந்தை. அங்கே வேலைக் கிடைத்தால் வேலைக்குப் போவார்கள். வேலைக் கிடைக்காத ஒரு பகுதியினர் வெறுங் கையோடு திரும்பிவருவார்கள். பேருந்து காசு வீணானதுதான் மிச்சம். இந்த சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதி 7 இலட்சம் வாக்காளர்களைக் கொண்டது. இது கிட்டத்தட்ட இரண்டு சட்டமன்ற தொகுதி அளவுக்கான மக்கள் தொகை.  செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் பகுதியில் மக்கள் தொகை இருக்கும் அளவுக்கு வழிபாட்டுத் தலம் இல்லை, பள்ளி, கல்லூரி வசதிகளும் இல்லை என்றே சொல்ல வேண்டும். ஆனால், டாஸ்மாக் இருக்கிறது. முன்பு ஒருமுறை நாங்கள்தான் போராட்டம் நடத்தி ஒரு டாஸ்மாக்கை மூட வைத்தோம். ஆனால், கொஞ்ச நாளில் மீண்டும் அதற்கு அருகிலேயே இன்னொரு டாஸ்மாக்கை திறந்துவிட்டார்கள்.  செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் பகுதிகளில் வாழ்வோரிடம் நகர்ப்புற அடித்தட்டு மக்கள் என்ற உணர்வே மேலோங்கி இருக்கிறது. சாதி, மத வேறுபாடுகள் பார்ப்பது மற்ற பகுதிகளை ஒப்பிடும்போது மிக குறைவாகவே உள்ளது” என்று சொல்லி ஆறுதல் அடைந்து கொண்டனர். பெரும்பாக்கத்தில் உள்ள இந்த நேதாஜி நகர் 2000 ஆம் ஆண்டுகளின் முன் பாதியில் உருவானது. சென்னையின் வெவ்வேறு பகுதியைச் சேர்ந்தோர் இங்கே நிலம் வாங்கி, வீடு கட்டி குடியேறியுள்ளனர்.

பின்னர், பெரும்பாக்கத்தில் வாழும் நமக்கு தெரிந்த நண்பர் ஒருவரை சந்தித்துப் பேசினோம். அவரது மனைவி ஒரு கார்ப்பரேட் கம்பெனியில்  அலுவலகப் பராமரிப்பு வேலை செய்து கொண்டிருப்பவர். அவரது வேலையைப் பொருத்தவரை இரண்டாம் அலையில் அதிக பாதிப்புகள் இல்லை. சுழற்சி முறையில் வாரம் இருநாள் என்ற அளவில் அவர் வேலைக்குப் போய் வருவதாக சொன்னார்.  6 – 10 வகுப்புக்கானப்  பள்ளிகள் 2 , 1-5 க்கான தொடக்கப் பள்ளிகள் 2 , புதிதாக ரோட்டரி கிளப்பின் துணையுடன் கட்டப்பட்டுள்ள 1-12 வகுப்புக்கான பள்ளி என அங்கிருக்கும் கல்வி நிலையங்கள் பற்றிச் சொல்லி அவற்றை சுற்றிக் காட்டினார் நண்பர். கூடவே, ஐடிஐ ஒன்றும் கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கான கல்லூரி ஒன்றும் அங்கே இருக்கிறது.

பெரும்பாக்கத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் இரண்டு இருப்பினும் நகரத்தின் மற்ற பகுதிகளைப் போலவே உடனடி சிறுப் பிரச்சனைகளுக்கு தனியாரையே சார்ந்து உள்ளனர். ஒருமுறை காய்ச்சல், தலைவலி, வயிறு வலி என்று போனால்கூட சாதாரணமாக 500 ரூ ஆகிவிடுகிறது என்று நண்பர் சொன்னார்.

ஆயிரம் விளக்கு தொகுதி கிரிம்ஸ் சாலையில் உள்ள திடீர் நகரில் இருந்து 2018 வாக்கில் பெயர்த்தெடுக்கப்பட்டு பெரும்பாக்கத்தில் குடியமர்த்தப்பட்ட தோழர் வேளாங்கண்ணியை சந்தித்தோம். காரைப் பெயர்ந்து கிடக்கும் வீட்டைக் காட்டி வருத்தப்பட்டார். ”உருப்படியான பராமரிப்பு கிடையாது தோழர். அதனால், பராமரிப்புக்காக மாதந்தோறும் வசூலிக்கப்படும் 750 ரூ கட்டணத்தைக் கொடுக்க முடியாது என்று நாங்கள் சொல்லிவிட்டோம். மக்களை தமது தேவைகளுக்காக ஒன்றுபடுத்துவது மிகவும் கடினமாக உள்ளது. பேசாமல் நகரத்திற்குப் போய்விடலாமா? என்று வீடு பார்த்துக் கொண்டிருக்கிறேன். இங்க இருந்து பிழைக்க முடியாது தோழர். திடீர் நகரில் இருந்து வர்றோம் என்று சொன்னால் அங்கே வேலை கொடுப்பார்கள். ஆனால், செம்மஞ்சேரி, பெரும்பாக்கத்தில் இருந்து வருகிறேன் என்று சொன்னால் இங்கே வேலை இல்லை என்று சொல்லி விரட்டிவிடுகிறார்கள்” என்று சொல்லி முடித்தார்.

பெரும்பாக்கம் பேருந்து நிலையம் இருக்குமிடத்தைக் கடந்து வந்த போது வெகுநேரமாக மக்கள் காத்துக் கொண்டிருப்பதை அறிய முடிந்தது.  ”ஒரு மணி நேரத்திற்கு மேல காத்துக் கிட்டிருக்கோம். பஸ் வரக்காணோம். நாங்க ஆர்ச் க்கிட்ட நடந்து போனா, செம்மஞ்சேரியில் இருந்து வர பஸ்ஸ பிடிக்கலாம். இன்னும் கொஞ்சம் நேரம் பாப்போம்’ என்று ஒரு அம்மா சொன்னார். அவர் சிந்தாதரிப்பேட்டையில் இருந்து இங்கே தூக்கி வீசப்பட்டவர். ஆனாலும், அவர் மீது வீட்டுக்காரங்களுக்கு மிகுந்த நம்பிக்கை இருக்கும் காரணத்தால், வீட்டு வேலைக்கு தொடர்ந்து போய்க் கொண்டிருக்கிறார். இத்தனை நாள் அவருக்கு பேருந்து பாஸ் எடுத்துக் கொடுத்திருந்த வீட்டுக்காரங்க, பெண்களுக்கு பயணக் கட்டணம் இல்லையென்று ஆனப் பின்பு அதை நிறுத்திக் கொண்டார். அதாவது, பெண்களுக்கு பயணக் கட்டணம் இல்லை என்ற அறிவிப்பு முதலாளி கொடுக்கும் கூலியில் போக்குவரத்துக்கென்று கொடுக்கப்பட்டுவரும் அல்லது ஒதுக்கப்பட்டு வரும் தொகையைக் குறைத்துக் கொள்ள உதவியுள்ளது.

கான்கிரீட் காடுகளாக வளர்ந்து கிடக்கும் இந்தப் பகுதியில் வாழும் கைவிடப்பட்ட மக்களிடம் கொரோனா காலத் துயரக் கதைகள் ஆயிரமாயிரம் இருக்கின்றன. ஆனால், அதைக் கேட்பதற்குகூட ஆட்கள் இல்லை என்று அவர்கள் வருந்திக் கொள்கின்றனர்.

டி.எல்.எப் என்ற உயர்நடுத்தர வர்க்க அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஓர் அறையின் அளவுதான் செம்மஞ்சேரி, பெரும்பாக்கத்தில் உள்ள ஒரு வீட்டின் அளவாக இருக்கும். தமிழ்நாட்டில் ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும் உள்ள வேறுபாட்டைக் காட்டும் விதத்திலும் இந்த குடியிருப்புகள் அக்கம்பக்கத்தில் அமைந்திருக்கின்றன. அதாவது ஒன்று பணக்கார தமிழகம், மற்றது ஏழைகளின், விளிப்புநிலை மக்களின் தமிழகம்.

கண்ணகி நகரில் 180 சதுர அடியோடு தொடங்கிய குடிசை மாற்று வாரியக் குடியிருப்புகள் 270 சதுர அடி, 350 சதுர அடி என குறைந்தபட்ச தரத்தை எட்டுவதற்கே 20 ஆண்டுகள் ஆகிவிட்டன.   செம்மஞ்சேரியில் இருக்கும் வீடுகளைவிட பெரும்பாக்கத்தில் இருக்கும் வீடுகள் சற்றே பெரியவை என்பதைப் பார்த்தாலே இதை தெரிந்து கொள்ளலாம். தமிழ்நாட்டின் சமூகநீதி, சுயமரியாதை அரசியலை உரசிப் பார்த்து செம்மஞ்சேரியும் பெரும்பாக்கம்  புன்னகையோடு நம்மை வழியனுப்பியது.

‘அணைத்து பிரிவினரையும் உள்ளடக்கிய மக்கள் நல அரசு’ என்ற கொள்கையை  முன்வைக்கும் திமுக தலைமையிலான தமிழக அரசு இந்த பகுதியை முன்மாதிரியாக கொண்டு அனைவருக்கும் குறைந்தபட்ச வருமானம் (Universal Basic Income),  தரமான கல்வி, சுகாதாரம், குடியிருப்பு (Universal Education, Health & Housing) என அடிப்படை தேவைகளை  உறுதிப்படுத்தும் நோக்கில் சிறப்பு திட்டம் வகுத்திட வேண்டும்.

 

சோசலிச தொழிலாளர் மையம் SWC – தமிழ்த்தேச மக்கள் முன்னணி

சென்னை மாவட்டம்

9500056554, 9787430065

 

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW