தடுப்பூசிக் கொள்கை – மண்டியிட்ட மோடி அரசு
18 முதல் 44 வயதுடைய மக்களுக்கு தடுப்பூசி போடுகிற பொறுப்பை மாநில அரசுகளின் தோள் மேல் மாற்றிய ஒன்றிய அரசு, தனது பொறுப்புகளையும் கடமைகளையும் கைகழுவி மக்களை நட்டாற்றில் விட்ட மோடி அரசு, தற்போது தனது நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்கி ஒன்றிய அரசே மாநிலங்களுக்கு இலவசமாக தடுப்பூசி வழங்கும் என அறிவித்துள்ளது. வருகிற ஜூன் 21 ஆம் தேதி முதல் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு ஒன்றிய அரசே இலவசமாக தடுப்பூசி வழங்கும் என பிரதமர் நரேந்திர மோடி தொலைக்காட்சியில் தோன்றி அறிவித்துள்ளார். (நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சருக்கு இம்முறையும் எந்த வேலையையும் மோடி விட்டு வைக்கவில்லை!)
இருதினங்களுக்கு முன்பாக பிரதமர் மேற்கொண்ட இந்த அறிவிப்பானது கண்கட்ட பின் சூரிய நமஸ்காரம் என்பது போல கடந்த மூன்று மாதங்களாக பல்வேறு மாநில முதல்வர்கள் கரடியாக கத்தியும், எதிர்க்கட்சித்தலைவர்கள் கடிதம் எழுதியும் நீதிமன்றம் தடுப்பூசி கொள்கையில் தலையிட்டு ஒன்றிய அரசுக்கு கொட்டு வைத்தும் மோடி அரசை கிழித்து தொங்கவிட்ட பின் இறுதியாக தனது பிடிலை ஓரமாக வைத்துவிட்டு, ஏதோ பற்றி எரிகிறதே என நீரோ மன்னனுக்கு உரைத்தது போல தடுப்பூசி இலவச அறிவிப்பை பிரதமர் அறிவித்துள்ளார்.
ஆனால் இந்த அறிவிப்பை மேற்கொள்ள பாஜக அரசு எடுத்துக் கொண்ட கால அவகாசதிற்கும் நேர விரையற்கும் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் பரிதாமாக உயிர் விட நேர்ந்துள்ளது. அமெரிக்காவில் தற்போது 12 வயதினருக்கு தடுப்பூசி போடுகிற திட்டமே அமலுக்கு வந்துவிட்ட நிலையில், இந்தியாவில் வெறும் 8 விழுக்காடு மக்களுக்குத் தான் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்த நிலையிலே தடுப்பூசிக் கொள்கையை சிறப்பாக கையாள்கிறோம் என நீதிமன்றத்திடம் மக்களிடம் மோடி அரசு பச்சைப் பொய்யைக் கூறி மக்களை நிறுவனப் படுகொலைக்குள் தள்ளி வருகிறது.
“எங்கள் பேச்சை கேட்க பிரதமர் மோடிக்கு நான்கு மாதங்கள் ஆகியுள்ளது எனவும் துரதிருஷ்டவசமாக பிரதமர் எடுத்த தாமதமான முடிவால் பலரை இழந்துள்ளோம் ” என மேற்குவங்காள முதல்வர் மம்தா பானர்ஜி மோடி அரசின் தாமதமான அறிவிப்பால் ஏற்பட்டுள்ள உயிரிழப்பை சுட்டுக் காட்டி விமர்சித்துள்ளார். ’18 முதல் 44 வயதுடைய மக்களுக்கு இலவசமாக தடுப்பூசி வழங்க வேண்டும் என்ற மாநிலங்களின் கோரிக்கையை மோடி செவிமடுக்கும் முன்பாக நிறைய இழப்புகளை சந்தித்துவிட்டோம்’ என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார்.
கரோனா பேரிடரை மோசமாக கையாண்ட தலைவர்கள் பட்டியலில் தொடர்ந்து சர்வதேச கவனத்தை ஈர்த்து வருகிற பிரதமர் மோடி, எதிர்வருகிற சட்டபேரவை தேர்தல் முடிவுகளில் மக்களின் ஆவேசமும் கோபமும் பிரதிபலிக்கும் என பயந்தே இந்த அறிவிப்பை இந்நேரத்திலே வெளியிட்டுள்ளார்.
மாநில அரசுகளின் எதிர்ப்புகள்:
முன்னதாக,மாநில அரசுகளே நேரடியாக தடுப்பூசிகளை(18-44 வயதினருக்கு) கொள்முதல் செய்துகொள்ள வேண்டும் என்ற ஒன்றிய அரசின் தடுப்பூசி கொள்கை முடிவை எதிர்த்தும், தடுப்பூசி நிறுவனங்களின் மாறுபட்ட விலைகளை மத்திய அரசு தலையிட்டுக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் பாஜக அல்லாத பிற மாநில ஆளும் கட்சிகள் பாஜகவின் தடுப்பூசி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தன.
“கரோனா தடுப்பூசிகளை மத்திய அரசு கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு வழங்க வேண்டும் எனவும் மத்திய அரசு கொள்முதல் செய்யும் விலையிலிருந்து தற்போதைய விலை உயர்வு மாறுபட்டதாக உள்ளது. இது மாநில அரசுகளுக்கு நிதிச் சுமையை ஏற்படுத்தும் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், 18 -45 வயதுக்கு உட்பட்டோருக்கு தேவையான தடுப்பூசிகளை விரைவில் வழங்க வேண்டுமென்றும் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஒன்றிய அரசுக்குக் கடிதம் எழுதினார்.
ஒன்றிய அரசின் மோசமான தடுப்பூசிக் கொள்கையை “தடுப்பூசி கள்ளச்சந்தையை ஊக்குவிக்கும் ஒன்றிய அரசு” என நீதிமன்றத்தில் கேரள அரசு பகிரங்கமாக குற்றம் சாட்டியது.
இவ்வாறு, மத்தியத் தொகுப்பில் இருந்து மாநிலங்களுக்கு விரைந்து தடுப்பூசி வழங்காமலும் மாநில அரசுகள் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் நேரடியாக தடுப்பூசி வாங்கிக் கொள்ளவேண்டும் என மோடி அரசு அறிவித்ததாலும் கடும் அதிருப்தியடைந்த சில மாநில அரசுகள் தடுப்பூசி சான்றிதழில் இருந்து மோடியின் படத்தை அதிரடியாக நீக்கின. பஞ்சாப், ராஜஸ்தான், ஜார்கண்ட், சத்தீஸ்கர் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் இந்த நடவடிக்கையில் இறங்கின. தடுப்பூசிக்கு செலவு செய்வது நாங்கள்; இதில் பிரதமரின் படம் இடம்பெறுமா?” எனக் கேட்டு படத்தை நீக்கினர்.
ஒருகட்டத்தில் ஒன்றிய அரசை இனியும் நம்பினால் மாநில மக்கள் பொறுமையிழப்பார்கள் என்றெண்ணிய சில மாநில அரசுகள் தடுப்பூசி கொள்முதலுக்கு சர்வதேச ஒப்பந்தப் புள்ளிகளை கோரியது. பாஜக ஆள்கிற உத்திரப்பிரதேசம் உட்பட மகாராஷ்டிரா, ராஜஸ்தான், ஒடிஸா, ஆந்திரா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநில அரசுகள் நேரடியாக தடுப்பூசி கொள்முதலுக்கு ஒப்பந்தப் புள்ளி கோரின.
தமிழ்நாட்டிலோ செங்கல்பட்டில் உள்ள தடுப்பூசி உற்பத்தி மையத்தை உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என ஒன்றிய அரசை தமிழ்நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி வந்தார்.
இந்நிலையில், மாநில அரசுகளிடம் தடுப்பூசிகளை விற்பதற்கு தயக்கம் காட்டிய தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்கள் ஒப்பந்த புள்ளியில் பங்கேற்காமல் விலகின. ஒன்றிய அரசும் கைவிட்டு, தடுப்பூசி நிறுவனங்களும் கைவிட, தடுப்பூசி திட்டம் நிலைமை இடியாப்ப சிக்கலாக மோடி அரசு மாற்றியது.
நீதிமன்றத்திடம் குட்டு வாங்கிய ஒன்றிய அரசு:
ஒன்றிய அரசின் குழப்பமான தடுப்பூசி கொள்கை குறித்த வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம் , ஒன்றிய அரசை கேள்விக்கணைகளால் துளைத்தெடுத்ததை நாம் மறந்துவிடக் கூடாது.
“உலகின் பல்வேறு நாடுகளில் கரோனா தடுப்பூசி மருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டு அவற்றின் குடிமக்களுக்கு இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியாவில் மட்டும் 45 வயதை கடந்தவர்களுக்கு தடுப்பூசியை இலவசமாக வழங்கும் அரசு 18 -44 வயதுடையவர்களுக்கு மட்டும் ஏன் கட்டணம் செலுத்த வேண்டும் என்று முடிவெடுத்தது” என உச்சநீதிமன்றத்தில் டி.ஒய். சந்திரசூட், நாகேஸ்வர ராவ், எஸ். ரவீந்திர பட் ஆகியோர் அடங்கிய நீதிபதி அமர்வு ஒன்றிய அரசின் வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினர். மேலும் கரோனோ ஒன்றிய அரசின் தடுப்பூசி கொள்கை எதேச்சதிகாரமிக்கதாக பகுத்தறிவற்றதாக உள்ளது என்றும் விமர்சித்தனர்.
ஒன்றிய அரசின் நிர்வாக கொள்கைகளால் நாட்டு மக்கள் பாதிக்கப்படுவதை நீதிமன்றத்தால் வேடிக்கை பார்க்க முடியாது என்ற நீதிபதிகள் கரோனா தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்வதற்காக மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட 35,000 கோடி ரூபாய் நிதியைவைத்து 18-44 வயது பிரிவினருக்கு இலவசமாகத் தடுப்பூசிகளை ஒன்றிய அரசு வாங்க முடியாதா?, என கேள்வி எழுப்பினர். மேலும் அப்படி வாங்க முடியாது என்றால் அதற்கான உரிய விளக்கத்தை மத்திய அரசு நீதிமன்றத்தில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
முன்னதாக ஒன்றிய அரசின் தடுப்பூசி கொள்கையில் நீதிமன்றம் தலையிடக் கூடாது என ஒன்றிய அரசு நீதிமன்றத்திடம் பிராமணப் பத்திரம் தாக்கல் செய்ததை நாம் இங்கு மறந்திடக் கூடாது.
இப்படியாக உச்ச நீதிமன்றத்தின் கிடிக்கிப் பிடிக் கேள்விகளால் உள்நாட்டில் மட்டுமல்லாமல் சர்வதேச அளவில் மோடி அரசின் மோசமான “புதிய தாராளமயமாக்கப்பட்ட தடுப்பூசிக் கொள்கை’ அம்பலப்பட்டு போனதால் வேறு வழியின்றி மோடி அரசு அற்ப சொற்ப மானத்தைக் காப்பாற்றிக் கொள்ள தனது கொள்கையில் இருந்து பின்வாங்கியது.
எதிர்க்கட்சிகளின் கடிதம்:
மோடி அரசின் மோசமான தடுப்பூசிக் கொள்கையை விமர்சித்து வந்த எதிர்க்கட்சிகள் பிரதமருக்கு உறைக்கும் வரையில் தொடர்ச்சியாக கடிதம் எழுதி வந்தன. அதில்
“புதிய நாடாளுமன்றம் கட்டுவதற்காக ஒதுக்கிய நிதியை கொரோனா தடுப்பூசி, ஆக்ஸிஜன் ஆகியவற்றை வாங்க செலவிட வேண்டும்” என காங்கிரஸ், தி.மு.க., திரிணமூல் காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சமாஜ்வாதி கட்சி உள்ளிட்ட எதிர்கட்சிகள் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதின.மேலும் ஒன்றிய அரசே தடுப்பூசிகளை உள்நாட்டிலும் உலக அளவிலும் மொத்தமாகக் கொள்முதல் செய்ய வேண்டும் என்றும் நாட்டு மக்கள் அனைவர்க்கும் இலவசமாக தடுப்பூசித் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை பட்டியலிட்டன.
மோடி அரசின் கொள்கை இல்லா தடுப்பூசி திட்டம் அன்னை இந்தியாவின் இதயத்தில் வாளாக குத்துகிறது என ராகுல் காந்தி மோடி அரசை கடுமையாக விமர்சித்தார்.
கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம்:
இவ்வாறு, ஒரு அரசை இலவசமாக தடுப்பூசி போடச் செய்வதற்கு நாடே ஒன்றிணைந்து கூப்பாடு போடவேண்டியுள்ளது. தினமும் கரோனா தொற்றால் உயிரிழந்தோர் பட்டியலில் முதலிடத்தில் உள்ள இந்தியாவில் இலவசமாக தடுப்பூசி வழங்க அரசை நிர்பந்திக்க வேண்டிய அவமானகர நிலை உருவாகிவிட்டது. தடுப்பூசி தட்டுப்பாட்டால் மணிக்கணக்கில் நாட்டு மக்கள் வரிசையில் நின்று திரும்ப வேண்டியுள்ளது. உயிர்பலி, உடமை இழப்புகள் என நாட்டு மக்கள் இந்த சர்வாதிகார ஆணவ அரசால் சொல்லொனா பாதிப்பை எதிர்கொண்டு வருகின்றனர். இவ்வளவிற்கு பிறகும் தங்களது தனியார்மய தாராளமய கொள்கையை விட்டுவிடாமல் தடுப்பூசி தயாரிப்பில், பொதுத்துறை நிறுவனங்களை அனுமதிக்காமல் மோடி அரசு ஏகபோக கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாக செயல்படுகிறது.
தடுப்பூசி தயாரிப்பில் ஈடுபடுகிற தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மட்டுமே உற்பத்திக்கும் விநியோகத்திற்கும் ஏகபோக அனுமதி வழங்கி இஷ்டம் போல விலையை நிர்ணயம் செய்து கொள்ள அனுமதிக்கிறது. கரோனா பேரிடரிலும் தடுப்பூசிக்கு கொள்ளை லாபம் வைத்து மக்கள்வரிப்பணத்தைம் கொள்ளையடிக்க கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாமரம் வீசுவதை பாஜக அரசு நிறுத்தவில்லை.
கரோனா பேரிடரை மோசமாக கையாண்டு மக்களை மடியவிட்ட அமெரிக்க அதிபர் ட்ரம்பை அந்நாட்டு மக்கள் வீட்டுக்கு அனுப்பியது போல இந்தியாவிலே மோடி அரசை மக்கள் வீட்டுக்கு அனுப்புகிற நாள் வெகு தொலைவில் இல்லை.
-அருண் நெடுஞ்செழியன்
ஆதாரம்:
https://www.bbc.com/tamil/india-57332849