பத்து கோரிக்கைகள் – நிறைவேற்ற மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு, திமுக அரசுக்கு அரசியல் மனத்திட்பம் உண்டா?

04 Jun 2021

மாநில அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டு நிறைவேற்றக்கூடிய பத்துக் கோரிக்கைகள் உள்ளன. திமுக கொள்கையளவில் ஏற்கக் கூடிய கோரிக்கைகள்தாம் இவை. ஆனால், இக்கோரிக்கைகளை நிறைவேற்ற முயலும்போது பிற்போக்காளர்களும் அவர்களின் கேடயமாக இருக்கும் ஒன்றிய அரசும் எதிர்க்கக்கூடும். அந்த எதிர்ப்பை சமாளித்து மக்களின் பக்கமும் வரலாற்றின் பக்கமும் நிற்க வேண்டும் என்ற மனத்திட்பம் புதிதாக அமைந்துள்ள தமிழக அரசுக்கு வேண்டும்.

மக்கள் நலவிய அரசு என்பது திமுக, அதிமுக ஆகிய இருபெரும் கட்சிகளுக்கும் இருக்கும் பொதுப்பண்புதான். ஆனால், சாதி, மத விவகாரங்களில் திமுக தனக்கென சனநாயகக் கொள்கைகளை வரித்துக் கொண்ட கட்சியாக அறியப்படுகிறது. தன்னை அப்படி அறிவித்துக் கொள்ளவும் செய்கிறது. திமுக அறிவித்த, வழங்கிய வாக்குறுதிகளின் அடிப்படையிலேயே இக்கோரிகைகள் முன்வைக்கப்படுகின்றன. இன்னொரு வகையில் சொல்ல வேண்டுமென்றால் திமுகவுக்கு நடைமுறையளவில் அமிலச் சோதனையாக அமையக் கூடிய கோரிக்கைகளாகும் இவை.

  1. 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் வாடும் இஸ்லாமிய சிறைவாசிகள் உள்ளிட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும். இது இஸ்லாமியர்களின் உயிராதரமான கோரிக்கை. எது பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்டோருக்குப் பொருந்துமோ அது அவர்களுக்கும் பொருந்தும். வாழ்நாள் சிறைத்தண்டனைக்கு எதிரான மாந்தவுரிமை உணர்வை தமிழக அரசு உயர்த்திப் பிடிக்கிறதா? இஸ்லாமிய எதிர்ப்புவாதத்திற்கு எதிராக நிற்கிறதா? என்பதற்கான விடை இந்த முடிவில் இருக்கிறது. அல்லது வழக்கம் போல் இஸ்லாமியர்களின் வாக்குகளை ஏப்பம்விட்டு அவர்களைத் தெருவில்விடும் ஆட்சியா? என்பதை இந்தக் கோரிக்கையில் இருந்து முடிவுக்கு வந்துவிடலாம்.
  2. பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, இரவிச்சசந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய எழுவரையும் விடுதலை செய்வதில் மாநில அரசு செய்ய வேண்டிய அனைத்தையும் செய்ய வேண்டும்.
  3. தமிழகத்தில் கடந்த மார்ச் மாத கணக்குப்படி ஈழ ஏதிலிகளுக்கான ’சிறப்பு’ முகாம்களில் 82 பேர் உள்ளனர். ஒரு முகாம் திருச்சியிலும் மற்றொன்று இராமநாதபுரத்திலும் உள்ளது. இந்த முகாம்கள் மாநில அரசால் உருவாக்கப்பட்டவை. இவை ஈழ ஏதிலிகளை சட்டவிரோதமாக அடைத்து வைப்பதற்கும் முகாம்களில் இருப்பவர்களை மிரட்டி ஒடுக்குவதற்கும் பயன்படுகின்றன. எனவே, இம்முகாம் கலைக்கப்பட வேண்டும்.
  4. சாதி ஆணவக் கொலைக்கு எதிரான தனிச் சட்டம் இயற்றப்பட வேண்டும். அண்மையப் பத்தாண்டுகளில் நடந்த பல்வேறு ஆணவக் கொலை வழக்குகள் விசாரிக்கப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.
  5. அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்குவதற்கு இசைவளிக்கும் உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க வேண்டும்.
  6. பள்ளி, கல்லூரி, அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் அனைத்திலும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான விசாகா கமிட்டி உயிர்த்துடிப்புடன் நடைமுறைக்கு வருவதை தமிழக அரசு உறுதிசெய்ய வேண்டும்.
  7. மருத்துவ படிப்புக்காக ஒன்றிய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறையில் இருந்து அனைத்திந்திய நுழைவுத் தேர்வான ‘நீட்’ தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு பெற வேண்டும். எவ்வித நுழைவுத் தேர்வும் இன்றி பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண்ணின் அடிப்படையில் மருத்துவப் படிப்புக்கு இடங்களை நிரப்ப வேண்டும்.
  8. 2011 ஆம் ஆண்டும் தாய்ப்பாலில் நஞ்சு கலந்தது போல் அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வையை அறிமுகப்படுத்தியது தமிழக அரசு. இன்றைக்கு அரசு பள்ளிகளில் தமிழ்வழியில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை பாதியாக குறைந்துவிட்டது. பொறியியல், மருத்துவம் போன்ற படிப்புகளை தாய்மொழியில் கற்பது பற்றிய விழிப்பு நிலையை இந்திய ஒன்றிய அரசு பெற்றுவரும் ஒரு காலகட்டத்தில், தொடக்கக் கல்வியையே ஆங்கில வழியில் கொடுப்பது மிகவும் பின்தங்கிய நிலைமையாகும். தமிழக அரசு படிப்படியாக அரசு பள்ளிகளில் இருக்கும் ஆங்கில வழிக் கல்வியை முடிவுக்கு கொண்டுவர வேண்டும். கல்வியாளர்கள் 99% ட்டினர் இதை ஏற்கின்றனர். இது மொழிப் பற்றிய பிரச்சனை கிடையாது.குழந்தைக் கல்வி, தொழிற்நுப்ட வளர்ச்சி, தற்சார்பு போன்ற நீண்டகால அரசியல் பொருளியல் பிரச்சனையாகும்.
  1. ’ஆக்சிஜன் தயாரிப்பு’ என்ற போர்வையில் ஸ்டெர்லைட் ஆலை செயல்பட தொடங்கியுள்ளது. பழையபடி தாமிர உருக்கு ஆலையாக அதை பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது. ஆலை மூடப்பட வேண்டும், பின்னர் அப்புறப்படுத்தப்பட வேண்டும். காவிரி வேளாண் பாதுகாப்பு மண்டலம், அதானியின் காட்டுப் பள்ளித் துறைமுகம், எட்டுவழிச் சாலை என பல்வேறு சூழலியல் கோரிக்கைகள் இருப்பினும் முதற்கட்டமாக ஸ்டெர்லைட் விசயத்தில் அரசு காட்டும் உறுதியில் இருந்தே ஏனைய கோரிக்கைகளில் என்ன நடக்கும் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.
  2. ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு, சாத்தான்குளம் காவல் சித்திரவதைக் கொலைகள் போன்றவற்றிலேனும் தொடர்புடைய காவல்துறையினர் தண்டனைக்குள்ளாக்கப்படுவதை அரசு உறுதிசெய்ய வேண்டும்.

 

இவற்றை நிறைவேற்ற ஒன்றிய அரசை எதிர்ப்பார்க்க வேண்டியதில்லை; நிதி தேவை என்ற நெருக்கடியும் கிடையாது. கொள்கை பற்றும் அதன்வழி நிற்க வேண்டும் என்ற மனமுமிருந்தால் போதும்  பெரும்பாலானவற்றை ஒரே நாளில் நிறைவேற்ற முடியும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தக்கூடிய பல்வேறு சமூகப் பிரிவினர் எதிர்ப்பார்ப்புடன் கோட்டையை நோக்கிக் காத்து நிற்கின்றனர்.

தமிழக முதல்வர்  எதிர்ப்பார்ப்புகளை நிறைவேற்றப் போகிறாரா? ஏமாற்றத்தைப் பரிசளிக்கப் போகிறாரா?  என்று பார்த்திருக்கிறார்கள் மக்கள்.

 

– செந்தில்

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW