ஸ்டெர்லைட் ஆலை முதல் அதானி துறைமுக திட்டம் வரை – கார்ப்பரேட் பேரழிவு திட்டங்களிலிருந்து மக்களை காக்குமா திமுக அரசு?

22 May 2021

ஸ்டெர்லைட் எதிர்ப்பு தியாகிகளின் மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி இன்று. மூன்றாண்டுகளுக்கு முன்பாக ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மாவட்ட ஆட்சியருக்கு புகார் கொடுக்க பேரணியாக சென்ற நிராயத பாணி மக்களை காக்கை குருவி போல சுட்டுத் தள்ளி  பதினைந்து பேரின் உயிரை குடித்த நாள் இன்று.ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான முத்துநகர் மக்களின் எழுச்சிமிக்க போராட்டத்தாலும் தியாகத்தாலும் தற்காலிகமாக மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை இன்று கரோனா பேரிடர் சூழலில் ஆக்சிஜன் தேவைக்காக மட்டும் நான்கு மாதம் இயங்கலாம் என்ற உத்தரவின் பேரில் இயங்கத் தொடங்கியுள்ளது.

ஆலை மூடப்பட்ட நாள் தொட்டு கரோனா பேரிடர் தொடக்கம் வரையிலான இரண்டாண்டு காலங்களில் ஆலையை எவ்வாறேனும் திறக்க வைத்திட வேண்டும் என பல்வேறு அரசியல் தந்திரங்களை கையாண்ட வேதாந்தா நிறுவனம் தற்போதைய பேரிடர் நிலைமையை பயன்படுத்தி பொய் வாக்குறுதி கொடுத்து ஆலையை  திறப்பதில் பகுதி வெற்றிபெற்றுள்ளது.

ஸ்டெர்லைட்டின் ஆக்சிஜன் உற்பத்தி நாடகம்: ஏமாறுகிறதா திமுக அரசு?

கரோனா பேரிடர் காலத்தில் அவசர கால ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்கு மட்டும் ஆலையை இயக்குவதற்கு ஏப்ரல் 26  ஆம் தேதி தமிழக அரசு அனுமதி வழங்கியது.  இதையடுத்து  மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலைக்கு காவலர்கள் பாதுகாப்பு போடப்பட்டு   மாவட்ட ஆட்சியர் தலைமையிலான கண்காணிப்பு குழுவின் மேற்பார்வையோடு ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திப் பணி தொடங்கப்பட்டது.

முன்னதாக காப்பரை உருக்கி கரைக்கிற சூடேற்ற நிகழ்முறைக்கு ஆக்சிஜனை உற்பத்தி செய்த ஸ்டெர்லைட் ஆலை, தற்போது பேரிடர் காலத்தில் அதே ஆக்சிஜன் அளவை மருத்துவ தேவைக்கு வழங்கத் தயாராக இருப்பதாக அறிவித்திருந்தது. ஸ்டெர்லைட் ஆலையில் 1,050 மெட்ரிக் டன்(MT) ஆக்சிஜனை உற்பத்தி செய்கிற திறன் உள்ளதாகவும், அதற்காக ஆலையை திறப்பதற்கு அனுமதி தாருங்கள் என நீதிமன்ற மனுவில் தெரிவித்தது.

தற்போது தமிழகத்திற்கு நாளொன்றின் ஆக்சிஜன் தேவை சுமார் 440  மெட்ரிக் டன்(MT) எனவும். வரும் நாட்களில் ஆக்சிஜன் தேவை இருமடங்காக உயரக் கூடும் எனவும் மத்திய அரசு கூடுதல் ஆக்சிஜன் வழங்க வேண்டுமென மே 7 ஆம் தேதி ஸ்டாலின் மத்திய அரசிற்கு கடிதம் எழுதுகிறார். தற்போது தமிழகத்தில் உள்ள  நான்கு தனியார் ஆக்சிஜன் உற்பத்தி நிறுவனங்கள் 490 மெட்ரிக் டன்(MT) ஆக்சிஜனை வழங்கி வருகிறது. கூடுதல் ஆக்சிஜன் தேவைகள் ஓடிஸா போன்ற ஸ்டீல் நிறுவனங்கள் அதிகம் உள்ள மாநிலங்களில் இருந்து வரவழைக்கப்படுகிறது.

இந்நிலையில் 1,050 மெட்ரிக் டன்(MT) உற்பத்தி செய்வோம் என  வாக்குறுதி வழங்கிய ஸ்டெர்லைட் ஆலை  ஐந்து மெட்ரிக் டன் ஆக்சிஜனும்  மட்டுமே உற்பத்தி செய்த பின் தொழில்நுட்ப பழுதுகள் காரணமாக உற்பத்தியை நிறுத்தியது.பிறகு இஸ்ரோ தொழில்நுட்ப வல்லுனர்களின் துணையுடன் பழுது நீக்கப்பட்டு தற்போது ஆறு மெட்ரிக் டன் ஆக்சிஜன்  மட்டுமே உற்பத்தி செய்து மேற்கொண்ட உற்பத்தி செய்ய இயலாமல் தடுமாறி நிற்கிறது.

முன்னதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் திரு செந்தில் அவர்கள் ஸ்டெர்லைட் ஆலையின் ஆக்சிஜன் உற்பத்தி நிலை குறித்து கீழ்வருமாறு கூறுகிறார்.”

“ஸ்டெர்லைட் ஆலையில் இரு ஆக்சிஜன் உற்பத்தி மையம் உள்ளது.ஒன்று பிரான்சு தொழில்நுட்பத்திலான உற்பத்தி அமைப்பு (Air Liquide plant).இதன் ஆக்சிஜன் உற்பத்தித் திறன் 535 மெட்ரிக் டன்.மற்றொன்று அமெரிக்க தொழில்நுட்பத்திலான ஆக்சிஜன் உற்பத்தி அமைப்பு ( Air Product plant).இதன் ஆக்சிஜன் உற்பத்தித் திறன் 515 மெட்ரிக் டன். தற்போது அமெரிக்க தொழில்நுட்பத்திலான உற்பத்தி மையம் மட்டுமே  இயங்கும் நிலையில் உள்ளது. ஆகவே ஒரு ஆக்சிஜன் உற்பத்தி மையமே பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது”என்கிறார்.

தற்போது இயக்கப்பட்டு வருகிற ஆக்சிஜன் உற்பத்தி மையத்திலிருந்து  பத்து விழுக்காட்டு ஆக்சிஜன் மட்டுமே திரவ வடிவிலான ஆக்சிஜனாக பெற முடியும். இது தோராயமாக 35 மெட்ரிக் டன் ஆகும். திரவ வடிவிலான ஆக்சிஜன் உற்பத்தி நிகழ்முறையின் கட்டமைப்பு ஸ்டெர்லைட் ஆலையிடம் இல்லாததால்  35 மெட்ரிக் டன்னுக்கு மேல் திரவ ஆக்சிஜனை பெற முடியாது.அதேநேரம் வாயுவில் இருந்து திரவ ஆக்சிஜனாக மாற்றுகிற கன்வெர்டர் பாக்ஸில் (converter Box) ஏற்பட்ட பழுத்தால் இதுவும் முழுதாக செயல்படாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையிலே அதிக திரவ ஆக்சிஜன் பெறுவதற்கு ஏற்ப உபகரணங்களையும் போக்குவரத்து சாதனங்களையும் ஏற்பாடு செய்வதற்கு முயன்று வருவதாக ஸ்டெர்லைட் ஆலை தெரிவித்து வருகிறது.

மற்றொரு வழிமுறையாக ஆக்சிஜன் சிலிண்டர்களின் அதிக அழுத்தத்தில்  (150 bar) ஆக்சிஜனை அடைக்கிற  தொழில்நுட்பமும் ஸ்டெர்லைட் ஆலையில் இல்லை. அவ்வாறு செய்தால் 3000-4000 ஆக்சிஜன் சிலிண்டர்கள் வரை பெற முடியும். இந்த உபகரணங்கள் வாங்க ஆறுமாத காலம் ஆகும் என ஸ்டெர்லைட் கூறுகிறது.

ஆக நடைமுறையில் நாளொன்றுக்கு  ஐந்து, ஆறு மெட்ரிக் டன் ஆக்சிஜனை தடையில்லாமல்  வழங்க வக்கற்ற ஸ்டெர்லைட் நிறுவனம் தான் ஆயிரம் மெட்ரிக்டன் வழங்குவதாக பொய்உறுதி மொழி கொடுத்து ஆலையை திறந்துள்ளது.இதற்கு அனைத்துகட்சி கூட்டத்தில் ஆதரவு தெரிவித்த அனைத்து கட்சிகளும் ஸ்டெர்லைட் ஆலையின் இந்த தொழில்நுட்பமோசடி குறித்து வாய் திறக்காமல் சுமார் ஒரு மாதமாக வேடிக்கைப்  பார்க்கிறது.

பேரிடர் காலத்தில் நிலவுகிற குழப்பத்தையும் நிச்சயமற்ற நிலைமையும் பயன்படுத்திக் கொள்கிற முதலாளித்துவ சக்திகள், கடந்த காலத்தில் மக்கள் எதிர்க்கிற விஷயங்களை  அமல்படுத்த முடிகிறது. பேரிடர் குழப்ப காலத்தில் சாமானிய மக்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள போராடுகிற நிலையிலே இவ்வாறான கார்பரேட் நல முடிவுகளை எடுக்கிற அரசை மக்கள் கண்டுகொள்ள மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் முதலாளித்துவ வர்க்கம் இந்த வாய்ப்பை தன்வயப்படுத்திக் கொள்கிறது. ஸ்டெர்லைட் வேதாந்தாவின் நாடகத்திற்கு தமிழகத்தின் அனைத்துக் கட்சிகளும் இரையாகிவிட்டன.

தேவை கார்ப்பரேட் பேரழிவு திட்டங்களுக்கு எதிரான கொள்கை முடிவு

ஸ்டெர்லைட் ஆலையை முதலில் மக்களுக்கு ஆபத்து விளைவிக்கிற தாமிர ஆலைகளை தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் என்ற கொள்கை முடிவின் பேரில் நிரந்தரமாக திமுக அரசு மூட வேண்டும்.அதுவே ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் களப்பணி ஆனவர்களுக்கு அரசு செய்கிற மெய்யான நினைவஞ்சலி.இதைச் செய்வதற்கு முதலில் திமுகவிற்கு சூழலியல் கரிசனம் குறித்த கண்ணோட்டம் வேண்டும்.

தற்போது திமுகவில் சுற்றுச்சூழல் அணி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த அணிக்கு கார்ப்பரேட் பேரழிவுத் திட்டங்கள் குறித்த கண்ணோட்டம் என்னவாக உள்ளது என்பது கேள்விக்குறியாக உள்ளது.

உலகமயம் தாராளமயம் தனியார்மயத்திற்கு எதிரான சூழல் மையவாத தொழில் கொள்கை இருந்தால் மட்டுமே திமுக அரசால் தமிழக சுற்றுச் சூழலை காக்க முடியும். முன்னதாக மீத்தேன் திட்டம், கூடங்குளம் திட்டம், ஸ்டெர்லைட் விரிவாக்க திட்டம் போன்ற  பேரழிவு திட்டங்கள் யாவற்றுக்கும் திமுக அரசிற்கு பங்குண்டு என்பதை யாரும் மறுப்பதிற்கில்லை.திமுகவும் அதிமுகவும் கார்பரேட் ஆதரவு அரசியலில் ஒருமித்த கொள்கை கொண்டவையே என எடுத்துக் காட்டுகிறது.மக்கள் எதிர்ப்பு வந்தவுடன் மாறி மாறி குற்றம் சாட்டிக் கொள்வதை மீத்தேன் எதிர்ப்பு போராட்டம் முதலாக ஸ்டெர்லைட் போராட்டம் வரையிலும் பார்த்தோம்.

மத்திய மோடி அரசின் காவி கார்பரேட் ஆதரவிற்கு எதிரான மக்கள் எதிர்ப்பலையை அறுவடை செய்த திமுக, காவி எதிர்ப்பு அரசியலில் சமரசம் செய்யாது என நம்பினாலும் கார்ப்பரேட் எதிர்ப்பு அரசியலில் என்ன நிலைப்பாடு எடுக்கப் போவது என்பதை பொறுத்தே பார்க்கவேண்டும்.

 

அதானி துறைமுக திட்டம்:

எண்ணூர் காட்டுப்பள்ளி பகுதியிலே சுமார் ஐம்பதாயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் துறைமுக விரிவாக்க திட்டத்தை அதானி நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.கடந்த 2018 ஆம் ஆண்டில் L &T நிறுவனத்திடம் இருந்து முன்னூறு ஏக்கர் நிலத்தை வாங்கி சுமார் 6000 ஏக்கரில் விரிவாக்கம் செய்ய முனைகிற அதானியின் சூழலியல் விதிமீறல் கொஞ்சம் நஞ்சமல்ல. சூழல் முக்கியத்துவம் வாய்ந்த எண்ணூர் கழிமுகம்,பழவேற்காடு பறவைகள் சரணாலயம் ஆகியவை இந்த துறைமுக விரிவாக்கத் திட்டதிற்கு இரையாக உள்ளது.இப்பகுதியில் வசிக்கிற பல்லாயிரக்கணக்கான மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குள்ளாகப் போகிறது.திமுக தேர்தலில் வெற்றி பெற்றதும் அதானியிடம் இருந்து திமுகவிற்கு தூது சென்றதாக பத்திரிக்கைச் செய்திகள் வந்தன.திமுக அரசு ஆசியாவின் இரண்டவாது பணக்காரருக்கு எதிராக மக்கள் மக்கள் பக்கம் நிற்குமா?

காவிரிப் படுகையில் ஹைட்ரோகார்பன் எடுப்புத் திட்டம்:

அதிமுக அரசால் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என அறிவிக்கப்பட காவிரி டெல்ட்டா பகுதியிலே 273 கிணறுகளில் ஹைட்ரோகார்பன் எடுக்கிற திட்டத்தத்தை வேதாந்தா நிறுவனம் தொடங்கத் தயாராக உள்ளது.நிலத்தில் 4368 சதுர கி.மீ. , வங்கக் கடலில் 4047 சதுர கி.மீ. பரப்பில் வேதாந்தா வல்லூறு வட்டமிடப் போகிறது. நாகை, காரைக்கால், விழுப்புரம் மாவட்டங்களில் இவை வருகின்றன. அரை கிமீ தொலைவி பிச்சாவரம் காடு!  காவிரி, மஞ்சளாறு, உப்பனாறு, தென்பெண்ணை என ஆறுகள் பலவும் தேங்காய்திட்டு முகத்துவாரம், பக்கிங்காம் கால்வாய், வேதாரண்யம் கால்வாய் என நீர்நிலைகள் பலவும் இத்திட்டப் பகுதிகளில் வருகின்றன.

ஸ்டெர்லைட் ஆலையால் தூத்துக்குடியை நாசமாக்கிய வேதாந்தா, ஹைட்ரோகார்பன் திட்டம் மூலமாக காவிரிப் படுகையிலே நாசம் செய்ய  நுழைகிறது.

ஆகவே கார்பரேட் நல கொள்கைக்கு எதிரான சூழல் மையவாத தொழில்மயக் கொள்கை இருந்தால் மட்டுமே தமிழக அரசால் ஸ்டெர்லைட் ஆலை முதலாக அதானி துறைமுக விரிவாக்க திட்டம்,ஹைட்ரோகார்பன் திட்டம் போன்றவற்றிற்கு எதிரான கொள்கை முடிவு எடுக்க முடியும்.

திமுக அவ்வாறு செய்யுமா? பொறுத்திருந்துப் பார்ப்போம்.

-அருண் நெடுஞ்செழியன்

ஆதாரம்:

https://theprint.in/india/in-tuticorin-sterlite-copper-is-struggling-to-cope-with-new-medical-oxygen-supplier-avatar/661336/

https://www.thenewsminute.com/article/hydrocarbon-projects-vedanta-and-ongc-tn-cauvery-delta-hit-roadblock-119639

https://www.ogj.com/refining-processing/refining/construction/article/14197787/cpcl-advances-construction-of-grassroots-cauvery-basin-refinery

https://www.downtoearth.org.in/news/environment/why-are-ennore-residents-protesting-against-adani-s-kattupalli-port-expansion-project–75894

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW