”தமிழ்நாட்டை உடைக்கும் எண்ணம்” – இராமதாசுகளுக்கு அப்பால் ஒரு பார்வை – 2 உலக வரலாற்றில் உடைந்த தேசங்கள் தரும் படிப்பினை என்ன?
தேசிய இன மக்களை வாய்ப்பிருக்கும் வழியில் எல்லாம் பிரித்தாள்வது ஒடுக்குமுறையாளர்கள் வழமையாக கையாளும் உத்தி. குறிப்பாக, தேசிய இன மக்களின் தாயகத்தை துண்டாடி அடிமடியில் கைவைப்பதும் உலக வரலாற்றில் வாடிக்கையாக இருந்து வருகிறது. சில எடுத்துகாட்டுகளைப் காண்போம்.
ஈழம்:
இச்சிக்கலைப் பொருத்தவரை நம் கண் முன் இரத்த சாட்சியாக ஈழம் இருக்கிறது. வடக்கு கிழக்கு பிரதேச முரண்பாட்டின் பெயராலேயே விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து கருணா பிரிந்து சென்று அதுவே தோல்விக்கான முக்கிய காரணிகளில் ஒன்றாக மாறிப் போகக் கண்டோம். வடக்கு கிழக்கு பிரதேச முரண்பாட்டை சிங்களப் பெளத்தப் பேரினவாத சக்திகள் சிறப்பாகப் கையாண்டனர். 1987 இந்திய இலங்கை ஒப்பந்தப்படி வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைப்பை இலங்கை அரசு நடைமுறையாக்கவில்லை. வடக்கு கிழக்கு பகுதியை தமிழர்களின் தாயகமாக இன்றைக்கும் சிங்களத் தரப்பு ஏற்கவில்லை. தாயகம் துண்டாடப்பட்ட நிலையிலேயே ஈழத் தமிழர்கள் இருந்துவருகின்றனர். வடக்குகிழக்கு இணைந்த ஓர் தமிழீழம் மலர்வது அத்தனை எளிதல்ல என்பதே மெய்நிலை.
காசுமீர்:
2019 ஆகஸ்டில் சம்மு காசுமீர் மாநிலத்தை இரு துண்டாக்கியது இந்திய அரசு. லடாக்கையும் சம்மு- காசுமீரையும் இரு தனி ஒன்றிய ஆட்சிப்புலங்களாகவும் ஆக்கியது. இது அண்மைய கதை. ஆனால். இதைவிட கொடியதாக கடந்த கால வரலாறு இருக்கிறது. காசுமீர் மக்களின் தாயகம் பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்ட காசுமீர் என்றும் இந்தியாவால் ஆக்கிரமிக்கப்பட்ட காசுமீர் என்றும் துண்டாடப்பட்டு கிடக்கிறது. அங்கிருந்து இங்கு வந்தாலோ அல்லது இங்கிருந்து அங்கு சென்றாலோ அது எல்லைத் தாண்டிய திகிலியம் (பயங்கரவாதம்) என்று காட்டப்படுகின்றது. இதில் 1947 இறுதியில் காசுமீருக்குள் இருந்த தலைவர்கள் ஒன்றுபட்டு நின்று இந்தியா- பாகிஸ்தானைக் கையாளத் தவறி, உள்நாட்டு தலைமைப் போட்டிக்காக அண்டை நாட்டு ஆக்கிரமிப்பு அரசுகளின் உதவியை நாடினர். அன்று விழுந்த கோடு இன்றுவரை அழியாமல் இருக்கிறது. கோடெங்கும் இரத்தச் சுவடுகள்!
கொரியா:
சப்பான் ஆக்கிரமிப்புக்கு எதிராக கொரியர்கள் போராடிக் கொண்டிருந்தனர். இரண்டாம் உலகப் போரில் சப்பான் தோற்கடிப்பட்ட நிலையில், கொரியாவை சப்பானிடம் இருந்து விடுவிக்கும் நிகழ்ச்சி நிரலில் இரண்டாம் உலகப் போரில் வெற்றி பெற்ற அமெரிக்காவும் சோவியத் இரசியாவும் தென் கொரியா, வட கொரியா என்று நிர்வாக நோக்கில் பிரித்தனர். தேசிய விடுதலைப் போராட்டத்தில் பங்குபெற்றிருந்த சக்திகளை இரு வல்லரசுகளும் தன் பக்கம் வளைப்பதன் வழியாக இந்த பிளவுக்கு வழிவகுக்கப்பட்டது. இன்றைக்குவரை வல்லரசுகளின் ஆடுகளமாக வட கொரியா, தென் கொரியா இருந்து வருகிறது.
ஜெர்மனி
இரண்டாம் உலகப் போரின் முடிவில் தோற்கடிக்கப்பட்ட ஜெர்மனி – மேற்கு ஜெர்மனி, கிழக்கு ஜெர்மனி என்று இரு நாடுகளாகவே மாறிப்போனது. அமெரிக்க தலைமையிலான மேற்குலத்தின் கையில் மேற்கு ஜெர்மனியும் சோவியத் இரசியாவின் கையில் கிழக்கு ஜெர்மனியும் என்று இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய புதிய நிலை தோன்றியது. அணிசேரா நாடாக ஜெர்மனி ஒன்றுபடுவதற்கு தடையாக அமெரிக்க தலைமையிலான மேற்குலகம் இருந்தது. தேசிய சோசலிசம் என்ற பெயரில் இட்லரின் தலைமையில் ஏகாதிபத்திய கொள்ளைப் போரில் இழுத்துவிடப்பட்ட ஜெர்மனி, இரு துண்டுகளாக சிதறிப் போனது. இறுதியில், பனிப்போரின் முடிவில் தான், ஜெர்மனி ஒன்றுபட நேர்ந்தது. அதுவும் சோவியத் இரசியாவின் சரிவு, வலுசம நிலையில் ஏற்பட்ட மாற்றம் என்ற புதிய சர்வதேச சூழல் பிறக்கும்வரை ஜெர்மானியர்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. பெர்லின் சுவர் திறந்துவிடப்பட்டது.
வியட்நாம்:
பிரெஞ்சு காலனியாக இருந்த வியட்நாம் 1954 இல் விடுதலைப் பெற்றது. ஆனால், வியட்நாம் வட வியட்நாம் என்றும் தென் வியட்நாம் என்றும் கூறுபோடப்பட்டது. அமெரிக்க வல்லாதிக்கத்தின் ஆதரவுடன் தென் வியட்நாம் நின்றது. வட வியட்நாமிற்கு தலைமையேற்றிருந்த புரட்சியாளர் ஹோசி மின் அமெரிக்க வல்லாதிக்கத்திற்கு எதிரானப் போரை நடத்தி தென் வியட்நாமை மீட்டார். பின்னர், வட வியட்நாமும் தென் வியட்நாமும் இணைந்து 1976 இல் ஒரு நாடாக மலர்ந்தது.
ஏமன்:
1918 இல் ஓட்டமான் பேரரசு வீழ்ந்ததை தொடர்ந்து வட ஏமன் ஒரு நாடானது. ஆனால், தென் ஏமன் பிரிட்டனின் காலனியாக இருந்தது. 1967 இல் பிரிட்டன் தென் ஏமனை விட்டு வெளியேறியது. ஆயினும் பனிப் போர் காலத்தில் வட ஏமனுக்கும் தென் ஏமனுக்கும் இடையிலானப் போராக அமெரிக்காவும் சோவியத் இரசியாவும் மோதிக் கொண்டன. ஜெர்மனி போலவே பனிப்போர் முடிவுதான் ஏமன் ஒன்றுபட்ட தேசமாவதற்கு வழிவகுத்தது. 1990 இல் வட ஏமனும் தென் எமனும் இணைந்து ஏமன் என்ற நாடானது. வழக்கம் போல, மேற்குலக சார்பு கொண்ட ஒரு நாடாகத் தான் ஏமன் மலர முடிந்தது.
மேலே சொன்னவை ஒரு தேசிய இனத்தின் தாயகம் துண்டாடப்படுவதற்கானப் பல்வேறு எடுத்துக்காட்டுகளாகும். நேரடி ஒடுக்குமுறையாளர் மட்டுமின்றி உலக வல்லரசுகளின் போட்டியும் தேசங்களைக் கூறுபோடக்கூடிய அரசியல் யதார்த்தம் நிலவுகிறது. இன்றைய சூழலில் தமிழ்நாட்டைத் துண்டாடி தங்கள் வசம் வைத்துக் கொள்ளும் அல்லது பலவீனப்படுத்தும் ஆட்டத்தில் இந்திய ஆதிக்க அரசுக்கு மட்டுமின்றி அமெரிக்கா, சீனா ஆகிய இருபெரும் வல்லரசுகளும் ஈடுபடும் வாய்ப்புகள் நிறையவே உண்டு. முள்ளிவாய்க்கால் படுகொலைகள் என்பது இந்தியப் பெருங்கடல் ஆதிக்கப் போட்டியின் தீவிரத்தைக் காட்டக் கூடிய குறிகாட்டி. இந்தியப் பெருங்கடல்சார் மேலாதிக்க அரசியலில் எதுவெல்லாம் ஈழத்திற்குப் பொருந்துமோ அதுயெல்லாம் 1073 கி.மீ நீளக் கடற்கரை கொண்ட தமிழ்நாட்டுக்கும் பொருந்தும்.
மருத்துவர் இராமதாசுக்கு அப்பால் தமிழ்நாடெனும் நம் தாயகம் துண்டாடப் படக்கூடிய சூழ்நிலை உருவாக இடமுண்டு. மருத்துவர் இராமதாசின் பதவி, சாதி அரசியல் என்பது ஒரு தூண்டில் புழு போல் பங்குவகிக்க, குழம்பிய குட்டையில் யார் வேண்டுமானாலும் மீன் பிடித்து நம்மை வறுத்து திண்ணக்கூடும்.
எனவே, இலகுவில் துண்டாட எதிரி வைத்திருக்கும் கருவியைத் தட்டிப் பறித்தாக வேண்டும். அது என்ன?
-செந்தில்