என்.ஆர்.சி. – என்.பி.ஆர். ஐ அனுமதிக்கமாடோம் என்ற உறுதிமொழி இல்லாமல் சிஏஏ வை திருமப் பெற வலியுறுத்தினால் மட்டும் போதுமா?
2014 இல் பாசக ஆட்சி அமைத்ததிலிருந்து இஸ்லாமியர்களுக்கு எதிரான பல்வேறு அடக்குமுறைகள் கட்டவிழ்த்துவிடுகின்றன. அவை அனைத்தின் மீதான கோபமும் சேர்ந்துகொள்ள குடியுரிமை திருத்தச் சட்டம் வந்தவுடன் நாடெங்கும் உள்ள இஸ்லாமியர்கள் கொதித்து எழுந்து போராடக் கண்டோம். குடியுரிமை திருத்த்ச சட்டம்(CAA), தேசிய மக்கள்தொகை பதிவேடு(NPR), தேசிய குடிமக்கள் பதிவேடு(NRC) ஆகியவற்றிற்கு எதிராக இந்தியாவெங்கும் உள்ள இஸ்லாமியர்கள் போராட்டத்தில் குதித்தனர். ஆண் – பெண் வேறுபாடின்றி குழந்தைகள் முதல் முதியவர் வரை ஒட்டுமொத்த சமுதாயமும் போராடியது. இச்சட்டத்திருத்தங்கள் இஸ்லாமியரிடையே ஏற்படுத்திய அச்சவுணர்வின் விளைவே இந்த எழுச்சி. ஏனெனில் இச்சட்டம் ஏதிலிகளிடம் சமய அடிப்படையிலான வேறுபாடு காட்டுவதால் அது இந்தியாவின் மதச்சார்பின்மையை சட்டப்பூர்வமாகவே இல்லாமல் ஆக்கிவிடும். இச்சட்டத் திருத்தங்கள் அமலுக்குப் போனால் இஸ்லாமியர்களின் குடியுரிமை கேள்விக்குள்ளாகும், முகாம்களில் அடைத்து வைக்கப்படலாம், சட்டப்பூர்வமாக இரண்டாந்தரக் குடிமக்களாக்கப்படலாம் என்பதே அச்சத்திற்கான காரணம்.
கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்ட பின்பு ”நாங்கள் என்.ஆர்.சி., என்.பி.ஆர். ஐ அமல்படுத்தத் தொடங்குவோம்” என்று இன்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா சொல்லிவருகிறார் .எனவே, இடைநிறுத்தம் செய்யப்பட்ட சிஏஏ எதிர்ப்புப் போராட்டங்கள் மீண்டும் தொடங்குவதற்கான எல்லா வாய்ப்புகளும் உண்டு.
2021 தமிழக சட்டப்பேரவை தேர்தலை ஒட்டி தேர்தல் அறிக்கைகள் வெளிவரும் நிலையில் குடியுரிமை திருத்தச்சட்டங்கள் எதிர்ப்புக் குறித்து மீண்டும் விவாதம் தலையெடுத்துள்ளது. ”தேர்தல் அறிக்கைகளில் சிஏஏ திருத்தங்கள் திரும்பப் பெறுமாறு நடுவண் அரசிடம் வலியுறுத்தப்படும்” என்று வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தங்கள் அரசு அமைந்தால், அது என்.பி.ஆர். ஐ. அனுமதிக்காது என்று சொல்லப்படவில்லை. என்.ஆர்.சி. யை உருவாக்க ஒத்துழைக்கமாட்டோம் என்று உறுதியளிக்கப்படவில்லை. ஆனால், மேற்குவங்க முதல்வர் மம்தாவும் கேரள முதல்வர் பிணராய் விஜயனும் தங்கள் மாநிலத்தில் என்.பி.ஆர். ஐ விடமாட்டோம் என்று சொல்லக் கேட்டிருந்தோம்.
ஒரு மாநில கட்சியின் வலியுறுத்தல்களுக்கு, சட்டப் பேரவை தீர்மானங்களுக்கு இந்திய அரசியலில் எள்ளவும் மதிப்பில்லை என்பதற்கு எத்தனையோ எடுத்துக்காட்டுகள் உண்டு. அது ஒரு கட்சியின் பிரச்சனை இல்லை, அரசியலமைப்பின் பிரச்சனை. எனவே, சிஏஏ வை திரும்ப பெறுமாறு போடப்படும் தீர்மானம் இயற்றுவதோடு சேர்த்து என்.பி.ஆர். , என்.ஆர்.சி. ஐ மாநில அரசும், மக்களும் சேர்ந்து நடைமுறையில் தடுப்பதன் மூலம்தான் இப்போதைக்கு இதை எதிர்கொள்ள முடியும்.
சிஏஏ, என்.ஆர்.சி., என்.பி.ஆர். விசயத்தில் ஏன் உரிய அக்கறை செலுத்தப்பட வில்லை? இதற்காகத்தான் வரலாறு காணாத போராட்டத்தை இஸ்லாமியர்கள் நடத்தினர். ”தாங்கள் இந்நாட்டின் குடிமக்களா? இல்லையா? தங்களுடைய அடுத்த தலைமுறைக்கு இந்நாட்டில் பாதுகாப்பு இருக்குமா?” என்ற கவலைதான் இலட்சக்கணக்கான இஸ்லாமியர்களை குறிப்பாக பெண்களை தெருவில் இறக்கியது. இஸ்லாமியர் இன்றைக்கு எதிர்கொண்டுள்ள முதற்பெரும் பிரச்சனை இதுதான்.
குறைந்தபட்ச நுண்ணுர்வு இருந்தால்கூட சிஏஏ, என்.ஆர்.சி,என்.பி.ஆர். ஆகியவற்றை எதிர்ப்பதன் முக்கியத்துவத்தை புரிந்துகொள்ளவியலும். கூடவே, நாடு இப்போது எதிர்கொண்டிருக்கும் சிக்கல் பற்றி தெளிவின்மையும் இந்த அலட்சியத்திற்கான வேர்களைக் கொண்டுள்ளது.
ஒரு நாடு மதச்சார்பாக இருப்பது, இன, மத, மொழி அடிப்படையில் பெரும்பான்மைவாதம் அரசியலில் மேலோங்குவது என்பது வேறு பெருந்தேசியவாதம் என்பது வேறு.
”ஒரே தேசம், ஒரே சட்டம்” என்ற ஒற்றையாட்சி இலட்சியம் இந்துத்துவ ஆற்றல்களுக்கு மட்டுமின்றி மிக அண்மைக் காலத்தில் வளர்ந்துள்ள இந்தியக் கார்ப்பரேட் பெருமுதலாளிகளுக்கும் உண்டு. நடந்துகொண்டிருப்பவை எல்லாம் ஏதோ தொடர்பற்ற திடீர் நிகழ்வல்ல. ”நாடுதழுவிய அளவில் வெகுசன ஏற்புள்ள, உலகமய ’வளர்ச்சி’ என்ற அரசியல் பொருளாதாரக் கொள்கையும், ஏகபோக இந்தியப் பெருமுதலாளிய சக்திகளின் நலனும் இந்துத்துவத் தேசியமும் ஒன்றிணைந்த வரலாற்றுக் கட்டமாக இது அமைந்துள்ளது. இந்திய சந்தை விரிவடைவதற்கான தடைகளை அரசியல் ரீதியாக இந்துத்துவ தேசியம் வழியாக அகற்றுவதும் இந்துத்துவத் தேசியம் முழுமையடைவதற்கான பொருளாயத அல்லது பெளதீக அடிப்படையாக இந்திய சந்தை விரிவாக்கமும் அமைந்துள்ளதால் இரண்டின் நலனும் ஒன்றோடொன்றுப் பொருந்திப்போயுள்ளது” என்று 2019 இன் முடிவில் ”மோடி 2.0 – பாசிச அபாயத்திற்கு எதிரான குறைந்தபட்ச செயல்திட்டம்” என்ற அறிக்கையில் தமிழ்த்தேச மக்கள் முன்னணி முன்வைத்தது. எனவே, நிதிமூலதன கும்பல் ஆதிக்கத்திற்கு இந்துத்துவ தேசியம் தேவைப்படுகின்றது. அந்த இந்துத்துவ தேசியம் இந்து, கிறித்தவர், இஸ்லாமியர் என சமய வழியில் மக்களைப் பிரிக்கும் கணத்திலேயே மொழிவழி தேசிய அடையாளங்கள் மறுக்கப்படுகின்றன. இந்துத்துவ தேசியத்தில் தமது முன்னோர்கள் இந்துக்களே என்று ஒப்புக்கொண்டு, தம்மை இந்து முகமதியர்கள் என்று அறிவித்துக் கொண்டு இணைந்து கொள்ளுமாறு ஆர்.எஸ்.எஸ். கத்தி முனையில் இஸ்லாமியர்களைக் கோருகிறது. அந்த கத்திதான் சிஏஏ – என்.ஆர்.சி. – என்.பி.ஆர். ஆகவே பாசிச அபாயம் என்பது நிதிமூலதன ஆதிக்கத்தையும் இந்துத்துவ தேசியத்தையும் அடிப்படையாக கொண்டது என்ற புரிதல் இருந்தால்தான் பாசிஸ்ட்கள் தமது நிகழ்ச்சி நிரலுக்கான பிரம்மாஸ்திரமாக ‘சிஏஏ , என்.ஆர்.சி. – என்.பி.ஆர்.’ ஐ பார்க்கிறார்கள் என்பதை விளங்கிக் கொண்டு வினையாற்ற முடியும்.
தேசியவெறியூட்டலும் நிதிமூலதனத் தேவையும் இல்லாமல் பாசிச அரச வடிவம் பெறவியலாது. இந்தியாவில் அது பார்ப்பனிய மேலாதிக்க அடிப்படையிலான இந்துத்துவ தேசியமாக இருக்கிறது. இதை மதச்சார்பின்மைப் பிரச்சனையாக சுருக்கிப் புரிந்து கொள்வதும் விளக்கப்படுத்துவதும் தற்செயலானதல்ல, அது ஒரு தனித்தலைப்பு என்பதால் வேறொரு தருணத்தில் பேசலாம்.
மொத்தத்தில், இஸ்லாமியர்களின் அச்சம் போக்கப்பட வேண்டும். சிஏஏ சட்டம் திருத்தப்பட்டு இஸ்லாமியர்கள் ஏதிலிகளாக வந்தாலும் ஏதிலிகளாக ஏற்கப்பட்டு, எந்தவொரு ஏதிலி விரும்பினாலும் சமய வேறுபாடு காட்டாமல் குடியுரிமை கொடுக்கப்பட வேண்டும்.
என்.ஆர்.சி., என்.பி.ஆர் ஐ தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் என தமிழக அளவில் செயல்படும் கட்சிகள் மக்களுக்கு உறுதியளிக்க வேண்டும். சமகாலத்தில் ரோஹிங்கியா மக்கள் ஆளில்லா தீவில் குடியமர்த்தப்படும் கொடுமையை எண்ணிப்பார்த்தால் இப்பொருளின் தீவிரத்தன்மையை தேர்தல் வாக்குறுதிகளுக்கு அப்பால் புரிந்துகொள்ள முடியும்.
– செந்தில்