நாதியில்லை தமிழர்களுக்கு! நடுக்கடலில் நான்கு மீனவர்கள் கொலை! நரேந்திர மோடி வலிமையான பிரதமரா?

26 Jan 2021

சில  காலமாக தமிழ் மீனவர்கள் சிங்களக் கடற்படையால் கொல்லப்படுவது நடக்காமல் இருந்தது. இப்போது மீண்டும் அது நடந்துள்ளது. நான்கு மீனவர்களின் உடல்கள் யாழ்ப்பாணக் கரைகளில் ஒதுங்கக் கண்டோம்.

கடந்த சனவரி 18 ஆம் தேதியன்று காலையில் புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டிணத்தில் இருந்து ஆரோக்கிய ஜேசு என்பவரது விசைப்படகில் தங்கச்சிமடத்தை சேர்ந்த மெசியான், உச்சிப்புளி அருகே வட்டவளம் பகுதியைச் சேர்ந்த நாகராஜ், மண்டபம் ஏதிலி முகாமிலிருந்து சாம்சன், திருபுல்லாணியைச் சேர்ந்த செந்தில்குமார் என நால்வர் சென்றுள்ளனர். அன்றிரவு ரோந்து வந்த இலங்கை கடற்படையின் கப்பல் வேகமாக மோதியதில் படகு மூழ்கடிக்கப்பட்டது.

சனவரி 20 அன்று மெசியான், செந்தில்குமார் ஆகிய இருவரின் உடல்களும் சனவரி 21 அன்று நாகராஜ், சாம்சன் ஆகிய இருவரின் உடல்களும் சிங்களக் கடற்படையால் ஈழக் கடற்கரையில் கண்டெடுக்கப்பட்டன. பின்னர் யாழ்ப்பாண மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.  உடற்கூராய்க்குப்பின் சனவரி 23 அன்று அவ்வுடல்கள் தமிழ்நாடு கொண்டுவரப்பட்டன.

பன்னாட்டுக் கடல் எல்லையைத் தாண்டி மீன்பிடித்துக் கொண்டிருந்ததால் தாங்கள் அப்படகைப் பிடிக்க முற்பட்டபோது ஏற்பட்ட விபத்தில் அது மூழ்கியதாகவும் அந்த படகில் இருந்தோர் எதிர்த்ததால்தான் அது நேரிட்டது என்றும் சிங்கள கடற்படை தெரிவித்துள்ளது.

இந்திய வெளியுறவு அமைச்சகம் தாம் அதிர்ச்சியடையவதாகவும் தம்முடைய கடுமையான எதிர்ப்புப் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் மீனவர்கள் தொடர்பான சிக்கல்கள் மனிதாபிமானத்துடன் அணுகப்பட வேண்டும் என்று இலங்கை அரசுக்கு தெரிவித்திருப்பதாகவும் செய்தி அறிக்கை வெளியிட்டுள்ளது.

வழமை போலவே தமிழக கட்சிகள் இக்கொலைகளைக் கண்டித்து அறிக்கைவிட்டுள்ளான.

இதற்கு முன்னர் 2017 மார்ச் 8 அன்று இராமேசுவரத்தைச் சேர்ந்த பிரிட்ஜோ என்ற இளைஞர் நடுக்கடலில் சிங்களக் கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டுப் பிணமாக கரை திரும்பினார். அப்போதும் இந்திய வெளியுறவு அமைச்சகம் இதே போன்று இலங்கை அரசுக்கு கண்டனத்தை வெளிப்படுத்தியது.

அண்மையில் சனவரி 5,6,7 ஆகிய நாட்களில் இலங்கை சென்று வந்தார் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர். அப்போது அவர், இலங்கை அரசு 13 ஆவது சட்டத்திருத்தை நடைமுறைப்படுத்த வேண்டியது இலங்கை அரசின் நலனைப் பொருட்டும்தான் என்று மிரட்டுவது போன்ற தோற்றம் காட்டக்கூடிய வரிகளைப் பயன்படுத்தினார். அதை புகழ்ந்து, “இலங்கை தமிழர்களுக்கு மீண்டும் விடிவெள்ளி?” என்ற தலைப்பில் தலையங்கம் தீட்டியது துக்ளக். இதை ஒரு திருப்பம் என்றது. ஆனால், ஜெய்சங்கர் இந்தியா திரும்பிய அடுத்தநாளே யாழ் பல்கலைக் கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் போர் நினைவுச் சின்னம் தகர்ப்பட்டது. அதில் இருந்து அடுத்த சில நாட்களில் தமிழ் மீனவர்கள் சிங்களக் கடற்படையால் கொல்லப்பட்டுள்ளனர்.

மிரட்டுவது போலவும் வலியுறுத்துவது போலவும் ஆன இருவேறு பொருள் தரக்கூடிய இராஜதந்திர மொழியை இந்திய வெளியுறவு அமைச்சர் பயன்படுத்தியதற்குப் பின்புலமாக சர்வதேச அரசியல் நிலைமைகள் உள்ளன. கொரோனாவுக்குப் பின்னான உலக ஒழுங்கில் அமெரிக்க – சீன முரண்பாடு முன்பு எப்போதும் இல்லாத வகையில் வெளிப்படுத்திக்கொண்டும் தீவிரத் தன்மையும் பெற்றுள்ளது. இப்பிராந்தியத்தில் அமெரிக்கா சீனாவுடனான தனது முரண்பாட்டு சுமையை இந்தியாவின் தோள்களின் மீது ஏற்றி வைத்துள்ளது. இது லடாக்கில் கல்வான் பள்ளதாக்கில் இந்திய – சீன மோதலாக வெடித்தது. இந்தியப் படையினர்  20 பேர் சீனப் படையினரால் கொல்லப்பட்டதாக இந்திய அரசு சொல்கிறது.

இலங்கையில் உள்ள அம்பந்தோட்டா துறைமுகத்தின் கிழக்கு முனையப் பராமரிப்பு ஒப்பந்தம் இலங்கை அரசால் இந்தியா – சப்பான் கூட்டணிக்கு கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால், அங்குள்ள தொழிலாளர்களின் எதிர்ப்பு காரணமாக அந்த ஒப்பந்தம் செயலுக்கு கொண்டு செல்லப்படவில்லை என்று இலங்கை அரசால் காரணம் சொல்லப்படுகிறது. இராசபக்சே சகோதர்கள் ரணில் – சிறிசேனாவைவிடவும் கூடுதலாக சீன சார்பு கொண்டவர்கள் என்று இந்திய மற்றும் மேற்குலக அரசுகளால் பார்க்கப்படுகிறது. இந்திய – சீன முரண்பாடு தீவிரப்படும்விடத்து அது இந்திய – சீன சார்பு சிங்கள முரண்பாடாக வடிவம் பெறுகின்றது. வேறு வகையில் சொல்வதானால், இந்தியப் பெருங்கடலில் யார் மேலாதிக்கம் செலுத்துவது என்று இந்தியாவும் சீனாவும் நடத்தும் போட்டி இந்திய – சிங்கள முரண்பாடாக உருவெடுக்கிறது. இதனாலும் வரலாற்று ரீதியாகவும் உருப்பெற்று வந்துள்ள சிங்களரின் இந்திய மேலாதிக்க எதிர்ப்பு என்பது ஈழத் தமிழர் மற்றும் தமிழ்நாட்டு மீனவர் மீதான ஒடுக்குமுறையாக வெளிப்படத் தொடங்குகிறது.

எனவே, வடக்கே கல்வான் பள்ளத்தாக்குப் போல் இந்திய பெருங்கடல் இந்திய சீன முரண்பாட்டின் தென்புலத்துப் போர்க்களமாக வடிவமெடுத்துள்ளது. ஆனால், வடக்கே குருதி சிந்தி உயிர் கொடுத்திருப்பது படை வீரர்கள். தெற்கேயோ தம்மிடம் எவ்வித ஆயுதமும் இல்லாத அப்பாவித் தமிழ் மீனவர்கள் !

இதற்கு முந்தைய காங்கிரசு அரசுகள் பலவீனமாக இருப்பதால்தான் மீனவர்கள் கொல்லப்படுவதாகவும் ஒரு வலிமையான அரசு ஆட்சியில் இருந்தால் மீனவர்கள் மீதான தாக்குதலைத் தடுக்க முடியும் என்றும் சொல்லி மோடி தமிழர்களிடையே வாக்கு கேட்டார். மீனவர்கள் சிக்கலுக்கு தீர்வு காண்போம் என்ற வாக்குறுதியுடன் பாசகவால் இராமேசுவரத்தில் 2014 சனவரி 31 அன்று ’கடல் தாமரை’ மாநாடு நடத்தப்பட்டது. ஆனால், மீனவர் சிக்கலுக்கு இன்றுவரை தீர்வு காணப்படவில்லை.

இவர்கள் ஆட்சிக்கு வந்தப் பிறகு கொல்லப்பட்ட மீனவர் பிரிட்ஜோவின் பொருட்டுக்கூட எவர் ஒருவரும் தண்டிக்கப்படவில்லை. கடந்த 40 ஆண்டுகளில் 800 க்கும் மேற்பட்ட மீனவர்கள் சிங்கள கடற்படையால கொல்லப்பட்ட பின்பும் இதற்காக இதில் தொடர்புடைய ஒரே ஒரு சிங்களக் கடற்படை ஆள்கூட வழக்குப் பதியப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படவில்லை; தமிழக சிறைகளில் ஒருநாள் கூட விசாரணைக்காக அடைத்து வைக்கப்படவில்லை; மொத்தத்தில் ஒருவர்கூட தண்டிக்கப்படவில்லை.

இந்த சிக்கலைப் பொருத்தவரை, பனிப்போருக்கு முந்தைய காலத்தில் இலங்கையில் அமெரிக்காவின் கை ஓங்கிவிடக்கூடாதென்ற கவலை இந்தியாவுக்கு இருந்தது. 1991 க்குப் பிறகு சீனாவின் கை ஓங்கிவிடக் கூடாது என்ற கவலை இந்திய அரசுக்கு. இது விசயத்தில் இலங்கையை நட்பு நாடு என்று கையாண்டு தமிழர்களின் நலனை எவ்வளவோ விட்டுக் கொடுத்துவிட்டது இந்திய அரசு. எடுத்துக்காட்டாக, மலையகத் தமிழர் குடியுரிமைப் பறிப்பு, மலையகத் தமிழர்களை ஆடு-மாடுகளைப் போல் பிரிந்துகொள்ளும் சிறிமாவோ – சாஸ்திரி ஒப்பந்தம், கச்சத் தீவு இலங்கைக்கு தாரை வார்ப்பு, போராளிகளிடம் இருந்து ஆயுதங்களைப் பறித்தல், 13 ஆவது சட்டத்திருத்தை இனச் சிக்கலுக்கு தீர்வு என்று திணித்தல், மீனவர் படுகொலைகளுக்கு மெளனம் காத்தல் எனப் பட்டியல் இடலாம். இலங்கையைத் தனது செல்வாக்கு மண்டலத்தில் வைத்துக் கொள்வதற்கு மேலே குறிப்பிட்டவாறு தமிழர்களின் உரிமைகள் கைவிடப்பட்டுள்ளன.

இந்திய  – சிங்கள நட்புறவு என்னும் பலிபீடத்தில் தமிழர்கள் பலியிடப்படுகிறார்கள். இன அழிப்புக்கு உள்ளாகி இருக்கும் ஈழத் தமிழர்களின் சிக்கலுக்கு தனிநாடுதான் தீர்வு என்று முடிவெடுப்பதற்கு இந்தியா தயங்குகிறது. ஏனென்றால், இந்திய அரசு இலங்கையைப் போலவே பல்வேறு தேசிய இனங்களை அடிமைப்படுத்தி வைத்திருப்பதால் சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டைப் பயன்படுத்தி இச்சிக்கலுக்கு தீர்வு காண மறுக்கிறது. இலங்கை தீவுக்குள் மட்டுமின்றி இந்திய குடிமக்களாகிய தமிழ்நாட்டு மீனவர்கள் கொல்லப்படும் போதும் இந்திய அரசு கண்டுகாணாமல் விடுகின்றது.

மோடி வலிமையான பிரதமரா, இல்லையா? என்பதல்ல கேள்வி. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை நீதியின் பாற்பட்டதா? என்பதே கேள்வி. அது மலையகத் தமிழரையும் சரி ஈழத் தமிழரையும் சரி இந்தியாவின் குடிமக்களாகிய தமிழக மீனவர்களையும் சரி பாதுகாக்கிறதா? என்பதே கேள்வி. இக்கேள்வியை எழுப்பும் உரிமை தமிழ்நாட்டுக்கு உண்டு. அம்பானி, அதானி போன்ற இந்தியாவின் பெருமுதலாளிகள் கொழுத்துத் திரிவதற்கு தமிழர்கள் பலிகடாக்கள் ஆக்கப்படுவதை பார்த்துக் கொண்டிருக்க வேண்டுமா? மொத்தத்தில் தமிழர்களின் உரிமையும் உயிரும் இந்நாள்வரை காக்கை குருவிகள் போல் பலியிடப்பட்டே வந்துள்ளது.

அமெரிக்க – சீன முரண்பாடு தீவிரப்பட்டிருக்கும் நிலையில், இனக்கொலை இராசபக்சேக்கள் பதவியில் இருக்கும் நிலையில், இலங்கை அரசியல் உள்ளும் புறமும் இராணும் ஆகியிருக்கும் நிலையில், வடக்கு கிழக்கு தமிழர் தாயகப் பகுதியில் இலங்கை இராணுவம் சட்டப்பூர்வமாக சரமாரியான துப்பாக்கிக் குண்டு பொழியக்கூடும்; கூடவே இந்துமாக்கடல் கொதி நிலையடைவதும் தமிழக மீனவர்கள் நடுக்கடலில் வேட்டையாடப்படுவதும்  தொடர் கதையாகக் கூடும். பாசக வலிமையானப் பிரதமர் என்று மோடியை அடையாளப்படுத்தவும் முடியாது. கூடவே, தமிழ்நாட்டுப் பிரதான அரசியல் கட்சிகள் வெறும் அறிக்கையோடு கடந்து போய்விடவும் முடியாது.. மீனவர்கள் கொலைக்கு காரணமாக சிங்களக் கடற்படையினர் மீது தமிழ்நாட்டில் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும், அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

 

-செந்தில்

 

 

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW