தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் 2021 தமிழக சட்டமன்றத் தேர்தல் நிலைப்பாடு
தமிழக விரோத பாசிச பாசக, அடிமை அதிமுக கூட்டணியைத் தோற்கடிப்போம்!
அன்பார்ந்த தோழர்களே!
16வது தமிழக சட்டமன்றத் தேர்தலில் காவி-கார்ப்பரேட் பாசிச சக்திகளையும் அதன் தமிழக கூட்டாளிகளையும் தோற்கடிக்க வேண்டிய தேவையுள்ளது. ஏனெனில், இது தமிழகத்தில் மாநில அரசைத் தேர்வு செய்யும் தேர்தலாக மட்டுமில்லை, தில்லி மைய அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள பாசிச கும்பல் தமிழகத்தின் சமூக அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான ஒத்திகை அரங்கேற்ற மேடையாகவும் காட்சி தருகிறது.
மைய அதிகாரத்தில் உள்ள மோடி – அமித்ஷா பாசிச கும்பலின் அடித்தளம் மென்மேலும் திடப்பட்டுக் கொண்டிருக்கிறது. மத்தியில் மிருக பலத்துடன் ஆட்சி, 21 மாநிலங்களில் ஆட்சி என நாடாளுமன்ற அமைப்பு முறைக்கு ஊடாகவே தன்னுடைய சமூக அடித்தளத்தை ஆழ அகலமாக விரிவாக்கி வருகின்றனர். ஆர்.எஸ்.எஸ். – பாசக கும்பல் தேர்தல் வெற்றியை அரசியல் வெற்றியாக மட்டும் பார்க்கவில்லை. ஒவ்வொரு தேர்தல் வெற்றியையும் பாசிசத்திற்கான சமுதாய இயக்கமாக பரிணமிக்கச் செய்து இனப்படுகொலையை நிகழ்த்துவதற்கும் இந்துராஷ்டிர நிகழ்ச்சி நிரலை விரிவாக்குவதற்கும் கிடைத்துள்ள வாய்ப்பாக பாவிக்கின்றது.
ஒரே தேசியம், ஒரே அரசு, ஒரே சந்தை, ஒரே தேர்தல் என்ற மையப் புள்ளியில் நின்றுகொண்டு தனது இரண்டாம் ஆட்சிக் காலத்தில் இந்துராஷ்டிர நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப குடியுரிமைப் பறிப்புச் சட்டம், காசுமீர் உடைப்பு, இராமர் கோயிலுக்கு அடிக்கல், இஸ்லாமியர்களுக்கு எதிரான தில்லி கலவரம் ஆகியவற்றை நிகழ்த்திக் கொண்டு ஏக போக ஒற்றை சந்தையை உருவாக்கும் பொருட்டு மாநிலங்களுடைய உரிமைகள், மக்களுடைய உரிமைகளைப் பறிக்கின்ற வகையில் நிதி, பொருளாதார, தொழிலாளர், விவசாய சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகின்றது மோடி – அமித்ஷா கும்பல். இந்த திசையில்தான், ஒற்றை தேர்தல் என்பது விவாதத்திற்குரிய ஒன்றல்ல, நேரடியாக அமலாக்க வேண்டிய ஒன்று என மோடி சர்வாதிகார சாட்டையை வீசுகின்றார். இந்த சூழமைவுக்கு ஊடாகவே எதிர்வரும் ஐந்து மாநில தேர்தல்களைப் பார்க்க வேண்டியுள்ளது. பாசிச சக்திகள் மேற்கு வங்கத்தையும் தமிழகத்தையும் கேரளத்தையும் அடுத்தடுத்த குறி இலக்குகளாக கொண்டு முன்னேறியத் தாக்குதலை அரசியல் அரங்கில் நடத்தி வருகின்றன. பாசிச அபாயத்தை உணர்வுபூர்வமாக அறிந்தேற்காத தமிழகத்தின் முதன்மை கட்சிகள் எப்போதும் போலவே லாவணி அரசியல் செய்துக் கொண்டிருக்கின்றன. அதிமுக அடிமைக் கும்பல் தமது பிழைப்பு நலனுக்காக ஆர்.எஸ்.எஸ் – பாசக கும்பலிடம் தமிழகத்தின் நலனை விற்பதோடு மட்டுமல்லாமல் தங்கள் கட்சியையும் பாசக வளர்வதற்கான வாகனமாக மாற்றிவிட்டது.
2016 ஆம் ஆண்டு முதலே வரவிருக்கின்ற சட்டமன்றத் தேர்தலை நோக்கி தமிழக அரசியலில் பாசகவின் தலையீடு மென்மேலும் தீவரமடைந்துக் கொண்டே வருகிறது. ஜெயலலிதா மரணம், அதிமுக மூன்றாக உடைந்தது தொடங்கி ரஜினிகாந்தின் அரசியல் வருகை வரை பல நிகழ்ச்சி நிரல்கள் அரங்கேற்றப்பட்டுள்ளது. இன்னும் நிறைய அரங்கேற்றங்களை சந்திக்கத் தான் போகிறோம். பாசகவின் தேர்தல் வெற்றிகளுக்கு இடம் கொடுக்காத தமிழத்தைப் பழிவாங்கும் நோக்கத்தோடு அந்த தாக்குதல்களை நடத்தப்போகிறது ஆர்.எஸ்.எஸ். பிற மாநிலங்களைச் சேர்ந்த சனநாயக சக்திகள் தமிழகத்தை பாசிச சக்திகளுக்கு எதிரான இறுதிச் சண்டைக் களமாகப் பார்க்கின்றன. அடுத்தடுத்த ஆண்டுகளில் வாழ்வா? சாவா? என்கிற வகையில் தீவிரப்படவிருக்கின்ற பாசிச எதிர்ப்புப் போருக்கு உதவும் வகையில் ஓரடிக் கூட விட்டுக்கொடுக்காமல் நாம் கால்பதித்து நிற்கும் தமிழ் நிலத்தைத் தக்க வைத்துக்கொண்டாக வேண்டும். ஐதராபாத் மாநகராட்சி தேர்தலைக்கூட இந்துராஷ்டிரம் எனும் முழுமைப்படுத்தப்பட்ட நிகழ்ச்சி நிரலின் மையப் புள்ளியில் நின்றபடி அணுகி அதை கையாள்கின்றனர், களம் காண்கின்றனர். நாமும் பாசிசத்திற்கு எதிரான சனநாயகம் என்ற நிகழ்ச்சி நிரலின் மையப் புள்ளியில் நின்றபடி ஒவ்வொரு தேர்தலையும் ஒவ்வொரு அரசியல் சண்டையையும் ஒவ்வொரு அரசியல் அணி சேர்க்கையையும் அணுக வேண்டும்.
வாருங்கள் தோழர்களே,
சங் பரிவார பாசிசப் படையெடுப்பை தடுத்து நிறுத்துவோம்! தமிழகத்தைக் காப்போம்! சனநாயகப் பதாகையின்கீழ் ஒன்றிணைந்து ஒரு வேலைத் திட்டத்தை முன்னெடுப்போம் வாரீர்!
தோழமையுடன்,
பாலன்,
பொதுச்செயலாளர்,
தமிழ்த்தேச மக்கள் முன்னணி
09.02.2021
தொடர்பு: 7010084440