நவம்பர் – 1 தமிழக நாள் உரிமை முழக்கம்

22 Oct 2020

காவி-கார்ப்பரேட் பாசிச ஒற்றை மைய அதிகாரத்திற்கு எதிராக-

 தமிழ்நாடு தமிழருக்கே என முழங்குவோம்!

 

  • தமிழ்நாட்டு அரசுரிமை தமிழருக்கே! நாணயம், பாதுகாப்பு, வெளியுறவு தவிர்த்த பிற விவகாரங்களில் சட்டமியற்றும் உரிமை தமிழக சட்டமன்றத்திற்கே!
  • தமிழ்நாட்டுப் பொருளியல் உரிமை தமிழருக்கே!  தமிழ்நாட்டின் மூலதனம், தொழில், சந்தை, வணிகத்தைக் கைப்பற்றத் துடிக்கும் மார்வாடி, பனியா முதலாளிகளே, ரிலையன்ஸ் உள்ளிட்ட அந்நிய நிறுவனங்களே, வெளியேறு!!
  • தமிழ்நாட்டு வேலையுரிமை தமிழருக்கே! ஒப்பந்த முறையை ஒழித்திடு! சமவேலைக்கு சம ஊதியம், மைய மாநில அரசுப் பணிகள், தனியார் நிறுவனப் பணிகள், தமிழ்ப் படித்த தமிழ்நாட்டு மக்களுக்கே!!!

 

1956 நவம்பர் 1 – மொழிவழி மாநிலங்கள் அமைப்பதற்கான சட்டம் நடைமுறைக்கு வந்த நாள். இதற்குள் கொஞ்ச, நஞ்சமா கழுத்தறுப்புகள்; ஒன்றிரண்டா போராட்டங்கள், எத்தனை எத்தனை உயிர்த்தியாகங்கள்.!

1946 வரை மொழிவழி மாநிலங்கள் அமைப்பதாய் சொல்லிக் கொண்டிருந்த காங்கிரசு பின்னர் கைகழுவியது. இதற்கென்று அமைக்கப்பட்ட தார் ஆணையம் ஆட்சியாளர்களின் விருப்பத்தையே அறிக்கையாக்கித் தந்தது. ’மொழிவழி மாநிலங்கள் அமைக்கத் தேவையில்லை’ என்றது. இன்றைய ஆந்திரப் பகுதியிலும் தமிழகத்திலும் எதிர்ப்பும் போராட்டங்களும் கிளம்பின. பின்னர் நேரு,படேல், சித்தராமையா தலைமையில் குழு அமைக்கப்பட்டது. முடியாது என்று நேரடியாக சொல்லாமல், காலத்தை தள்ளிப்போடச் சொன்னது இக்குழு.

போராட்டங்கள் வெடித்து கிளம்பின. 1952 அக்டோபரில் ஆந்திர தனி மாநிலம் கோரி பட்டினிப் போராட்டத்தில் உயிர்விட்டார் பொட்டி ஸ்ரீராமலு. இத்தனைக்கும் பிறகுதான் 1953 இல் மாநிலங்கள் மறுசீரமைப்புக்கான ஆணையம் அமைக்கப்பட்டது. 1955 இல் இவ்வாணையம் கொடுத்த பரிந்துரையை ஏற்று 1956 இல் சட்டமியறப்பட்டது. ஆனால், ஆணையத்தின் பரிந்துரையைக் கடுமையாக எதிர்த்தார் ஆர்.எஸ்.எஸ். தலைவர் கோல்வால்கர். மொழி அடிப்படையில் மாநிலங்களைப் பிரிக்காமல், ஒரே அரசாங்கமே இருக்க வேண்டும் என்றார். இன்றைக்கும் மொழிவழி மாநிலங்களை மாற்றியமைத்து ஜன்பத்துகளை உருவாக்கி மொழிவழி தேசிய இனங்களை அழிக்கும் நோக்கத்தில் ஆர்.எஸ்.எஸ். இருக்கிறது.

மொழிவழி மாநிலங்கள் பற்றி இத்தகைய கொள்கையை கொண்டிருக்கும் ஆர்.எஸ்.எஸ். ஆல் வழிநடத்தப்படும் பாசகதான் கடந்த 7 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கிறது. ஒரே தேசம், ஒரே சந்தை, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே வரி, ஒரே தேர்வு, ஒரே சட்டம், ஒரே காவல்துறை, ஒரே கல்விக் கொள்கை, ஒரே வேளாண் கொள்கை என ஒற்றையாட்சி அதிகாரக் குவிப்பைத் தீவிரப்படுத்தி இருக்கிறார்கள். காவி-கார்ப்பரேட் கூட்டணி பாசிசத்தை நோக்கி முன்னேறி சென்று கொண்டிருக்கிறது.

எழுவர் விடுதலைத் தீர்மானம் எங்கே போனதென்று தெரியவில்லை. நீட் விலக்கு சட்ட மசோதாவுக்குப் பதில் இல்லை. ’காவிரி வேளாண் மண்டலம்’ என்ற அறிவிப்பு என்ன ஆகப் போகிறதோ தெரியவில்லை. சட்டம் ஒழுங்கு மாநிலப் பட்டியலில் இருக்கும்போதே என்.ஐ.ஏ வுக்கு சென்னை கிண்டியில் அலுவலகம். நம் குழந்தைகளின் 3 ஆம் வகுப்புப் பாடத்திட்டத்தைக்கூட நடுவண் அரசே உருவாக்குமாம். வேளாண்மை மாநிலப் பட்டியலில் இருக்கும்போதே புதிய வேளாண் சட்டங்கள் திணிக்கப்படுகின்றன. பேருக்குதான் சட்டமன்றம், ஆனால் சட்டங்கள் இயற்ற முடியாது, அரசியல் பட்டிமன்றம் வேண்டுமானால் நடத்தலாம்.  தோல் இருக்க சுளை விழுங்கும் கதையாக நாடாளுமன்றம், சட்டமன்றங்கள் இருக்கும்போதே சட்டத் திருத்தங்களின் வழியாக அதிகாரம் பிரதமர் அலுவலகத்திற்குள் குவிக்கப்பட்டு வருகின்றன. இனி சட்டமன்றம் முடக்கப்படுவதோ அல்லது தமிழ்நாடு துண்டாக்கப்படுவதோ ஒரு நள்ளிரவில் நடந்தேறக்கூடும்.

மாநில அரசுக்கு வரி விதிக்கும் அதிகாரம் இல்லை. ஒப்புக்கொண்டபடி ஜி.எஸ்.டி.யில் இருந்து ஒரு பகுதி தொகையைக் கொடுக்கவும் மறுக்கிறது நடுவண் அரசு. ஏகபோகம் துறைதோறும் வளர்த்துவிடப்படுகிறது. இப்போது இந்தியாவின் 15 இலட்சம் கோடி மதிப்புக் கொண்ட சில்லறை வணிகச் சந்தையை விழுங்க ரிலையன்ஸ், வால்மார்ட், ஐ.டி.சி., டாட்டா ஆகிய  பெருநிறுவனங்கள் அணியமாகிக் கொண்டிருக்கின்றன. தமிழகத்தின் குக்கிராமம் வரை வட்டி மற்றும் சில்லறை வணிகத்தில் மார்வாடி, பனியாக்கள் உள்நுழைகின்றனர். வரிபோட முடியாது, அந்நிய மூலதனக் குவிப்பு, கைப்பற்றப்படும் தொழில்கள், சூறையாடப்படும் சந்தை!

1938 இல் தந்தை பெரியாரும் தமிழறிஞர்கள் சோமசுந்திர பாரதியும் மறைமலையடிகளும் 1946 இல் ம.பொ.சியும் கம்யூனிஸ்ட் தலைவர் தோழர் ஜீவாவும் ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்றனர். ஆனால், தமிழ்நாட்டின் பொருளியல் தமிழர்களிடமா இருக்கிறது?

தமிழர்களிடம் தொழில்நுட்பமும் இல்லை தொழிலும் இல்லை, மூலதனமும் இல்லை – சந்தையும் இல்லை என்று பார்த்தால், வேலை உரிமையும் இல்லை. நடுவண் அரசுப் பணிகளில் பிற மாநில நகர்ப்புற மேட்டுக்குடிகள் நிரம்பிக் கிடக்கின்றன. மாநில அரசுப் பணிக்கும் தமிழ்நாட்டை சேராதோர் விண்ணப்பிக்கின்றனர், வேலை பெறுகின்றனர். அமைப்புசாரா உடலுழைப்புத் தொழிலிலோ குறைந்தக் கூலிக்கு இந்தியாவின் குக்கிராமங்கள் எங்குமிருந்து தொழிலாளர்கள் அழைத்து வரப்படுகின்றார். சம வேலைக்கு சம ஊதியமில்லை. இலாப நோக்கத்தைத் தவிர இனப்பற்றோ அல்லது முதலாளிய சனநாயக உணர்வோ இல்லாத முதலாளிகளும் பெருநிறுவனங்களும் இதனால் பலன்பெறுகின்றனர். ஒப்பந்தப் பணியில் சக்கையாப் பிழியப்படும் வட இந்தியத் தொழிலாளர்கள் ஒருபுறம், வேலையின்றி குறைந்த கூலிக்கு நெருக்கப்படும் தமிழகத் தொழிலாளர்கள் இன்னொருபுறம். இதுதான் இன்றைக்கு தமிழர் நிலை.

மொழிவழி மாநிலம் என்பதன் உள்ளடக்கம் என்ன? ”தமிழர்களாகிய நாங்கள் ஒரு தேசிய இனம், தமிழ்நாடு தமிழருக்கே” என்ற உரிமை முழக்கம்தான் அது.

மொழிவழி மாநிலங்கள் அமைக்கப்பட்ட நவம்பர் 1 ஆம் நாளன்று நம்மை விழுங்கிக் கொண்டிருக்கும் காவி – கார்ப்பரேட் பாசிச ஒற்றை மைய அதிகாரத்திற்கு எதிராக தமிழ்நாடு தமிழருக்கே என்று முழங்குவோம்!

 

     நவம்பர் 1 – உரிமை முழக்க நிகழ்வுக்கான ஒன்றுகூடல்

           சென்னை, மதுரை, சேலம், தஞ்சை, திருச்சி

தமிழ்த்தேச மக்கள் முன்னணி

      www.peoplesfront.in

9941931499, 9486953557,  9994217822, 7299999168, 9585417086

 

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW