21ஆம் நூற்றாண்டின் “கார்ப்பரேட் விவசாய” சட்டங்கள்

25 Sep 2020

அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் 2020, விவசாய விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக (மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டம் 2020, மற்றும் விவசாயிகளுக்கு (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம் 2020 ஆகிய மூன்று வேளாண்  மசோதாக்களை எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கிடையே  மக்களவையிலும் மாநிலங்களவையிலும் ஆளும் பாஜக அரசு நிறைவேற்றியுள்ளது.

முன்னதாக மக்களவையில் இந்த மசோதாக்களை நிறைவேற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவின் நீண்ட கால கூட்டணி கட்சியான அகாலிதள கட்சியின் உறுப்பினர் ஹர்ஸிம்ரத் கௌர் பாதல் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா  செய்தார். இம்மூன்று வேளாண் மசோதாக்களை கறுப்புச் சட்டங்கள் என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். மேலும் இந்த மசோதாக்கள் விவசாயத் தொழிலாளர்களுக்கு எதிரானது எனவும் முதலாளிகளிடம் நிலத்தை தாரை வார்க்க நிர்பந்திக்கிற சட்டம் எனவும் சாடியுள்ளார்.

இந்த மசோதா மீது விவாதம் நடத்தப்படவேண்டும்,பேரிடர் காலத்தில் இவ்வளவு அவசரமாக மசோதாவை நிறைவேற்றக் கூடாது என மாநிலங்களவையிலே சில எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.  ஒரு கட்டத்தில் துணை சபாநாயகர் இருக்கைக்கு அருகே சென்று மசோதா நகல்களையும் கிழித்தனர். பின்னர் அமளியில் ஈடுபட்டதாக எட்டு மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டத் தொடர் முழுவதும் அவை நடவடிக்கைகளில் பங்குகொள்ளக் கூடாது என்று அவையிலிருந்து சஸ்பென்ட் செய்யப்பட்டனர். சபாநாயகரின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவைக்கு செல்லாமல் புறக்கணித்த நிலையிலே இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இல்லாமல் முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. நாடாளுமன்ற ஜனநாயக காவலர்கள் தான் பாவமாக செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர்! போர் போர் என நாடாளுமன்ற வளாகத்திலே எதிர்க்கட்சிகள் அமைதி ஊர்வலம் சென்று கொண்டுள்ள நிலையில் சாலையிலோ விவசாயிகளின் வர்க்கப் போராட்டத்தைத் தொடங்கிவிட்டனர்.

கடந்த ஜூன் மாதத்தில் இந்த திருத்தச் சட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்த நாள்தொட்டே இந்த சட்டத்திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தெலுங்கானா, ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். தற்போது நடைமுறையிலுள்ள குறைந்தபட்ச ஆதாரவிலை மூலமாக மண்டியில் கொள்முதல் செய்கிற முறை ரத்து செய்யப்படும் என்கிற அச்சத்தில் நாடுதழுவிய அளவிலே விவசாயிகள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

மசோதா மீதான விவசாயிகளின் எதிர்ப்பிற்கு பிறகு, வழக்கம்போல பேசிய பிரதமர் மோடி, இந்த சட்டத்தால் விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை எனவும், இந்த சட்டங்கள் தவறாக புரிந்துகொள்ளப்படுகின்றன எனவும் கூறியுள்ளார். மாநிலங்களவையிலே இந்த மசோதாவிற்கு ஆதரவு தெரிவித்து அஇஅதிமுக வெற்றி பெறச்செய்தது. தற்போது எதிர்க்கட்சி மற்றும் விவசாயிகளின் கடும் எதிர்ப்பிற்கு பிறகு இந்த சட்டத்தால் விவசாயிகள் பலனடைவார்கள் எனவும் குறைந்தபட்ச ஆதார விலை ரத்து செய்யப்படாது எனவும் கிளிப்பிள்ளை போல முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார்.

தற்போது சட்டத்திற்கு வெளியே உத்தரவாதம் தருகிற முதல்வர், இதை ஏன் சட்டத்திற்குள் கொண்டு வரவில்லை என பிரதமரை கேட்க மறந்துவிட்டார் பாவம். முதல்வருக்கு காவிரி காப்பாளர் விருது வழங்கிய விவசாய சங்கத் தலைவர்களும் இக்கேள்வியை மறந்ததுதான் சோகம்!

இந்த வேளாண் சட்டங்கள் பிரதமர் கூறுவது போல 21ஆம் நூற்றாண்டின் தேவையா அல்லது விவாசாயிகளுக்கான மரண சாசனமா என்பதை சற்று  சுருக்கமாக பார்ப்போம். அதற்கு முன்பாக ஏற்கனவே அழிவுப் பாதையிலே சென்றுகொண்டுள்ள இந்திய வேளாண் பொருளாதாரத்தின் போக்கு குறித்து பார்ப்போம்.

இந்தியாவின்  வேளாண் பொருளாதாரம்:

இந்திய மக்கள் தொகையில் சுமார் 70 விழுக்காட்டு மக்கள் வேளாண் தொழில் சார்ந்த உற்பத்தி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள். அதேவேளையிலே நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வேளாண் உற்பத்தியின் பங்கு வெறும் 15.96 விழுக்காடாக உள்ளது. இந்தியாவில் வறுமையில் வாடுகின்ற மக்களில் 80 விழுக்காட்டு மக்கள் வேளாண் தொழிலை சார்ந்துள்ளனர் என நிதி ஆயோக்கின் முன்னாள் துணைத் தலைவர் அரவிந்த் பனகாரியா தெரிவித்துள்ளார். இந்தியாவெங்கிலும் அதிகரிக்கிற விவசாய தற்கொலைகள் விவசாய திவால் நிலைமையையும் வேளாண் பொருளாதாரத்தின் அழிவையும் முரண்பாட்டையும் எடுத்துக் காட்டுகின்றன.

மன்னர் கால சுரண்டல் வழிவந்த காலனிய கால சுரண்டலை சுதந்திர இந்தியக் குடியரசு துடைத்துவிடும் என நம்பிய இந்திய மக்களை மத்திய அரசு ஏமாற்றியது. பெயரளவிலான நில உச்ச வரம்பு சட்டங்கள் ஏழை விவசாயிகளின் வாழ்வை மாற்றியமைக்க உதவவில்லை. உபரி நிலங்கள் மறு பங்கீடு செய்யப்படவில்லை. அதேநேரம் தெலுங்கானா பகுதிகளில் நடைபெற்ற வீரம் செறிந்த ஆயுதப் போராட்டங்களாலும் வங்காளம் மற்றும் கேரளாவில் நடைபெற்ற விவசாய எழுச்சிகளாலும் பிற மாநிலங்களைக் காட்டிலும் ஒப்பீட்டளவில் இந்த மாநிலங்களில் நிலச் சீர்திருத்தங்கள் அமலாக்கப்பட்டன.

நாட்டின் பிற பகுதிகளில் பழைய சுரண்டல் முறை புதிய வடிவத்துடன் தொடர்ந்தது. நவீன இந்தியாவின் வேளாண் உற்பத்தி உறவில் பெரிய மாற்றம் ஏதும் ஏற்படவில்லை. விவசாய உற்பத்திப் பெருக்கமும் நடைபெறவில்லை.

இந்த நிலையிலேதான் அன்னிய நாடுகளில் இருந்து வேளாண் உற்பத்தி பொருட்ளை இறக்குமதி செய்து உள்நாட்டு உணவு வீக்கத்தை மத்திய அரசு கட்டுப்படுத்தின. ஒரு கட்டத்தில் அன்னிய மூலதன சக்திகளிடம் நாட்டின் தற்சார்பு வேளாண்மையை அடமானம் வைக்கின்ற வகையிலே உலக வர்த்தகக் கழகத்திடம் சரணடைந்தன. “காட்“ ஒப்பந்தந்தில் கையெழுத்திட்டு விவசாயிகளுக்கு முதல் மரண சாசனத்தை எழுதியது. விதை, உரம், பூச்சிமருந்து ஆகிய வேளாண் பொருட்களின் உற்பத்தியும் அதிகாரமும் அந்நிய நிறுவனங்களுக்கு தாரை வார்க்கப்பட்டது. ஒட்டுரக வீரிய விதைகளை மான்சான்டோ போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் தயாரித்து விதைகளின் மீதான விவசாயிகளின் உரிமையை பறித்தன. இவ்வாறு பசுமைப் புரட்சி சிறு குறு விவசாயிகளின் உற்பத்தி செலவை பெருக்கியும் தற்சார்பை ஒழித்துக் கட்டியது. விவசாயிகளை கடனாளியாக்கி இறுதியில் ஓட்டாண்டி ஆக்கியது.

வேளாண் பொருளாதாரத்திலிருந்து அரசு தன்னை படிப்படியாக விளக்கிக் கொள்கிற போக்கை கடந்த கால் நூற்றாண்டு காலமாக ஆளும் கட்சிகள் மேற்கொண்டு வருகின்றன. விதைக் காப்புரிமை சட்டம், பண்ணைய ஒப்பந்த சட்டம் என பல சட்டங்களை திருத்தியும் புதிதாகவும் கொண்டு வந்தன. இந்திய வேளாண் பொருளாதாரம் சூறையாடும் முதலாளிகளின் பிடிக்குள் சிக்கின.

 

இந்திய வேளாண் பொருளாதாரத்தின் முக்கிய முரண்பாடுகள் வருமாறு

 

  1. கடன் தொல்லை அதிலும் குறிப்பாக வங்கிகளுக்கு வெளியே விவசாயிகள் வாங்கிய கடன்கள். தனியார் நிறுவனங்களிடம் பெற்ற கடன்கள் சார்ந்து தமிழக விவசாயிகள் பல்வேறு தீவிரமான பிரச்சினைகளைச் சந்தித்து வருகின்றனர்.
  2. நிலச்சீர்திருத்தம் முழுமையாக மேற்கொள்ளாத காரணத்தால், நில உரிமையில் சமச்சீரற்ற நிலைமை தொடர்கிறது. ஒரு ஏக்கர் முதல் ஐந்து ஏக்கர் அளவு நிலம் வைத்துள்ள சிறு குறு விவசாயிகள் மற்றும் நிலமற்ற விவசாய கூலித் தொழிலாளர்கள் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகிறார்கள்.
  3. விவசாயிகளுக்கு இடுபொருள் செலவு பெருமளவு அதிகரித்துவிட்டது. ஆனால், சந்தையில் விளைச்சலுக்குக் கிடைக்கும் விலையோ மோசமாகக் குறைந்து வருகிறது.
  4. பசுமைப்புரட்சியின் விளைவாக ரசாயன உரங்களின் பயன்பாடு அதிகமாக இருக்கிறது. இது தண்ணீரை அதிகம் உறிஞ்சக்கூடியது. இதன் காரணமாக நிலத்தடி நீர் மட்டமும் சரிந்திருக்கிறது.

இந்திய கிராமங்களில் விவசாய முரண்பாடு எழும்போதெல்லாம் நூறு நாள் வேலைத் திட்டம், இலவச பண விநியோகம் போன்ற தற்காலிக உத்திகளை கொண்டு விவசாய முரண்பாடுகளை தீர்க்காமல் தள்ளிப் போட்டு வந்தன. தற்போது சந்தையின் மாயக் கைகளில் விவசாயிகளை கையறு நிலையில் விட்டு விட்டு கார்ப்பரேட் பெரு நிறுவனங்களின் கைகளில் முழுவதுமாக ஒப்படைக்கிற வகையிலே பல சீர்திருத்தங்களை ஆளும் பாஜக அரசு மேற்கொண்டு வருகிறது.

 

  1. தற்போதைய வேளாண் சட்டங்களும் விளைவுகளும்:

 

  1. i) விவசாய விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக (மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டம் (Farming Produce Trade and Commerce (Promotion and Facilitation) Act 2020)

இந்த சட்டத்தின் மூலமாக விவசாயிகள் தங்களது வேளாண் உற்பத்தி பொருளை மண்டிகளுக்கு வெளியே நாட்டில் எங்கு வேண்டுமானாலும் விற்றுக் கொள்ளலாம் எனவும், இடைத்தரகர்களை இச்சட்டத்தின் மூலமாக ஒழித்துவிட்டதாகவும் பிரதமர் கூறுகிறார். ஆனால் நடைமுறையிலே வேளாண் விலைபொருள் சந்தைக் கழகத்தையும்(APMC) விவசாயிகளுக்கான குறைந்தபட்ச ஆதார விலை  நடைமுறையையும் ஒழிப்பதன் மூலமாக விவசாயிகளையே மோடி ஒழிக்கிறார்.

இந்தியாவிலே நாடு தழுவிய வேளாண் விற்பனை மற்றும் வணிக சட்டம் என்ற ஒரே சட்டம்  இதுவரை கிடையாது. மாறாக மாநில அரசுகளுக்கு வேளாண் விளை பொருள் விற்பனை (ஒழுங்குமுறை) சட்டம் குறித்த வரைவை மத்திய அரசு அனுப்பியது. அதன் அடிப்படையிலே தமிழக அரசால் 1987 ஆம் ஆண்டு தமிழ்நாடு வேளாண்மை விளை பொருள் விற்பனை (ஒழுங்கு முறை) சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இச்சட்டத்தின் ஓரங்கமாக ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் அமைக்கப்பட்டது. மறைமுக ஏல முறையின்கீழ் விவசாயிகளின் விளைபொருட்களான நெல், உளுந்து, பருத்தி, தட்டைப் பயிர், மணிலா, கம்பு, கேழ்வரகு, சோளம், எள், தேங்காய், மரவள்ளி உள்ளிட்டவை ஒழுங்குமுறை அமைப்புகளின் மூலமாக விற்பனை செய்யப்படுகிறது.

தமிழகத்திலே இவ்வாறு 268 ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள், 15 சோதனை சாவடிகள், 108 ஊரக சேமிப்புக் கிடங்குகள் மற்றும் 108 தரம் பிரிக்கும் மையங்கள் செயல்படுகின்றன. ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ஏல அரங்கு, உலர்களம், விவசாயிகள்-வணிகர் ஓய்வு அறை வசதிகள் உள்ளன. அரசின் வேளாண் விலை நிர்ணய கமிட்டிகள் மூலமாக சந்தை விலை நிர்ணயிக்கப்படுகின்றன. வேளாண் வியாபாரிகள் விளைபொருட்களை இங்கே வாங்கியவுடன் விவசாயிகளுக்கு பணம் கிடைக்கிறது. சரியான விலை கிடைக்கவில்லை என்றால், சேமிப்பு கிடங்குகளில் இருப்பு வைத்து, இருப்பு பொருளின் 60 விழுக்காடு கடனையும் விவசாயி பெறலாம்.

தற்போதைய நடைமுறையின்படி அரசு கொள்முதல் நிலையங்களில் தங்களது வேளாண் பொருட்களை விவசாயிகள் விற்பனை செய்வதோடு தனியார் வியாபாரிகளிடமும் விற்பனை செய்கிறார்கள். தனியார் வியாபாரிகள் இடைத்தரகர்கள் மூலமாக நேரடியாக விவசாயிகளின் நிலத்திற்கு சென்று பயிர்களை  கொள்முதல் செய்துகொண்டு பணத்தை வழங்குகிறார்கள்.

அரசு கொள்முதல் நிலையங்களில் தர கெடுபிடி, விளைபொருள் நிராகரிப்பு, பொருட்களை ஏற்றி இறக்குகிற செலவு, சேமிப்பு செலவு, ஊழல் ஆகிய காரணங்களால் சில நேரங்களில் விவசாயிகள் தனியார் வியாபாரிகளிடம் விற்பனை செய்கின்றனர். அரசு கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் எதிர்கொள்கிற நெருக்கடியை சாதகமாக மாற்றிக் கொள்கிற இடைத்தரகர்களும் வியாபாரிகளும் குறைந்த விலையில் கொள்முதல் செய்துகொள்கின்றனர்.

இக்காரணங்களால்தான் கொள்முதல் நிலையங்களை சீர்திருத்தம் செய்யவேண்டும் எனவும், எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் எனவும் விவசாய சங்கங்கள் கோரிக்கை விடுத்துவருகின்றன. மாறாக மண்டிகளை எப்போதுமே விவசாய அமைப்புகள் மூடக் கோரவில்லை.

மண்டிகள் விவசாயிகளுக்கும் கொள்முதல் நிறுவனங்களுக்கும் இடையிலான இணைப்புக் கண்ணியாக செயல்படுகின்றன. மண்டிக்கு வெளியே வியாபாரிகள் பொருட்களை வாங்கினாலும் மண்டிகளின் பதிவேடுகளில் பதிந்தே வெளி மாவட்ட வெளி மாநில வர்த்தகத்திற்கு செல்கின்றன. மேலும் இதற்கான  வரியையும் மாநில அரசுக்கு செலுத்துகின்றன.

இவ்வாறு மாநிலத்தின் ஒட்டுமொத்த வேளாண் விலை பொருள் விற்பனை சந்தையின் முக்கிய அங்கமாக விவசாயிகளிடம் நேரடி தொடர்பில் இயங்குகிற அரசுத்துறை இயந்திரமானது வேளாண் வருமானத்தை தீர்மானிப்பதில் முக்கிய பங்காற்றுகிறது.

தற்போதைய சட்டமானது மண்டிக்கு வெளியே விற்பனை செய்ய ஊக்குவிப்பதன் மூலமாக மண்டிகளின் செயல்பாட்டை பலவீனப்படுத்துகிறது. எதிர்காலத்தில் மண்டிகளை ஒழிப்பதற்கான கருவை இச்சட்டத்தில் கொண்டுள்ளது.

 

ii)விலை உத்தரவாதம், விவசாய சேவைகள் ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம் 2020 The Farmers (Empowerment and Protection) Agreement on Price Assurance and Farm Services Act 2020

 விவசாயிகளுக்கும் கொள்முதலாளர்களுக்குமான நாடு தழுவிய ஒரு “ஒப்பந்த பண்ணையம்” முறையை இச்சட்டம் அமலாக்குகிறது.

கடந்த 2018 ஆம் ஆண்டில் ஒப்பந்தப் பண்ணையம் தொடர்பாக மத்திய அரசு ,மாநில அரசுகளுக்கு “மாதிரி” ஒப்பந்த பண்ணைய சட்டத்தை சுற்றுக்கு அனுப்பியிருந்தன. இந்த மாதிரி சட்டத்தின் அடிப்படையிலே இந்தியாவிலே முதல் மாநிலமாக `தமிழ்நாடு வேளாண் விளைபொருள் மற்றும் கால்நடை ஒப்பந்தப்பண்ணையம் மற்றும் சேவைகள் சட்டம்- 2019′ என்ற சட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்தது. கரும்பு போன்ற பணப் பயிர்கள் மற்றும் இறைச்சிக் கோழி, ஈமுக் கோழி போன்ற கால்நடை விற்பனைகளை ஒப்பந்த அடிப்படையிலே வியாபாரிகளுக்கு பல சாதகங்களை இந்த சட்டம் வழங்கியது. வேளாண் சீர்திருத்தத்தின் ஒரு பகுதியாக இந்த சட்டம் தமிழகத்தில் கொண்டுவரப்பட்டது எனவும், விவசாயிகள் நேரடியாக உற்பத்திப் பொருள்களை விற்றுக் கொள்ளலாம் எனவும் தமிழக வேளாண்துறை செயலாளர் ககன் சிங் பேடி பேட்டியளித்தார்.

தற்போது, இந்த சட்டத்திருத்தம் மூலமாக, நாடு தழுவிய அளவில் ஒரு ஒப்பந்த பண்ணையச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதனடிப்படையில்

  • வியாபாரி/கொள்முதலாளா்/உணவு பதப்படுத்தும் நிறுவனத்துடன் விவசாயிகள் விலை, தரம், காலக்கெடு உள்ளிட்ட அம்சங்களை எழுத்துப் பூர்வமாக ஒப்பந்தம் செய்துகொள்வார்கள்.
  • ஒப்பந்த காலம் ஓராண்டு முதல் ஐந்தாண்டுகள் வரை
  • மாநில வேளாண் துறை அதிகார அமைப்பின் கண்காணிப்பில் இந்த ஒப்பந்தம் போடப்படும்.

ஒப்பந்த சாகுபடி முறையால் விவசாயிகளுக்கு பல நன்மைகள் உள்ளதாக மத்திய மாநில அரசுகளால் திரும்பத் திரும்ப கூறப்படுகின்றன. ஆனால் நடைமுறையில் இந்த ஒப்பந்தங்களால் விவசாயிகளுக்கு எந்த நன்மையும் இல்லை. சில உதாரணங்களைப் பார்ப்போம்.

 

பெப்சிகோ  x  குஜராத் விவசாயிகள்:

 கடந்த ஆண்டு மோடியின் சொந்த மாநிலமான குஜராத் மாநிலத்தில் அமெரிக்காவின் “பெப்சிகோ“ நிறுவனமானது  அம்மாநில விவசாயிகள் மீது ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடுத்தது. தனது நிறுவனத்தில் லேஸ் சிப்ஸ் தயாரிப்புக்காக FC5 ரக உருளைக்கிழங்கை தம்மிடம் உரிமம் பெறாமல் உற்பத்தி செய்தததாக 11 விவசாயிகளுக்கு எதிராக “பெப்சிகோ“ இந்தியா நிறுவனம் வழக்கு தொடுத்தது. ஒவ்வொரு விவசாயும் தலா ஒரு கோடி ரூபாய் தர வேண்டும் என்றது.

இந்த விதை ரகத்தை, “பெப்சிகோ“ நிறுவனத்தினுடையது என அறியாமல் நாங்கள் உற்பத்திசெய்து விட்டோம் என சில விவசாயிகள் கூறினார்கள். அதேவேளையில், “பெப்சிகோ“ நிறுவனத்தின் வழக்கு நடவடிக்கைக்கு எதிராக பெரும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து “பெப்சிகோ“ வழக்கை திரும்பப் பெற்றுக்கொண்டது.

சக்திமிக்க பன்னாட்டு நிறுவனங்களுக்கு முன்பாக விவசாயிகளின் கூட்டுப் பேர சக்தியோ, பண்ணைய ஒப்பந்தமோ ஒன்றுமில்லாமல் வெற்றுக் காகிதமாக போய் விடுகிறது. இதுதான் எதார்த்த உண்மை.

 

கரும்பு ஆலைx விவசாயிகள்:

 கரும்பு சாகுபடி செய்கிற விவசாயிகள் கரும்பு நடவு செய்யும்போதே கரும்பு ஆலை நிர்வாகத்துடன் ஒப்பந்தம்செய்து கொள்கிறார்கள். உதாரணமாக தமிழகத்தில் தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய டெல்டா மாவட்டங்களில் திருஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகத்துடன் ஒப்பந்தம் செய்து கொள்கிறார்கள்.

ஆனால் அறுவடைக்கு பின்னும் இந்த ஒப்பந்தங்களை விவசாயிகளுக்கு வழங்காமல் ஆலை நிர்வாகம் ஏமாற்றி வருவதும், நிலுவைத் தொகை  சுமார் 80  கோடி ரூபாய் வழங்காமல் இழுத்தடிப்பது தற்போது அந்நிறுவனத்தில் வாடிக்கை ஆகிவிட்டது. கடந்த 3 ஆண்டுகளாக இவ்வாறு ஒப்பந்த நகலை ஆலை நிர்வாகம் வழங்கவில்லை எனவும், கரும்பை எங்களிடம் வழங்கியதற்கான ஆதாரத்தை சமர்ப்பியுங்கள் எனவும் ஆலை நிர்வாகம் ஏமாற்றுகிறது என விவசாயிகள்  குமுறுகிறார்கள்.

மேலும் கரும்பு அரவை பரப்பளவு, அரவைத் தொகை, விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை குறித்தெல்லாம் கரும்பு கட்டுப்பாட்டு ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகளை அடிப்படையாகக் கொண்டு வேளாண்மை உதவி இயக்குநரும், கரும்பு அலுவலராக இருப்பவரும் கண்காணிக்க வேண்டும். ஆனால், இவை யாவுமே ஆலை நிர்வாகத்தின் அடாவடியை கண்காணிக்க இயலவில்லை.

ஒப்பந்த நடைமுறை அமலில் இருப்பதால் இனி அரசு இதில் எதுவும் தலையீடு செய்ய இயலாது என்று எதிர்காலத்தில் கண்டிப்பாக கூறும். உதரணமாக, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக கர்நாடக மாநிலத்தில் இதுபோன்றதொரு சிக்கல் எழுந்தபோது, கரும்பு விவசாயிகள்-சர்க்கரை ஆலைகள் இடையே ஏற்பட்டுள்ள ஒப்பந்தத்தில் மாநில அரசு தலையிடாது என்று அம்மாநில அமைச்சர்  கே.ஜே.ஜார்ஜ் வெளிப்படையாகவே கூறினார்.

 

iii) அத்யாவசியப் பொருட்கள் திருத்த சட்டம்:

 அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டத்தின்கீழ் வெங்காயம், உருளைக்கிழங்கு, பருப்பு, பயறு வகைகள், எண்ணை வித்துக்கள் ஆகிய விளைபொருட்களை அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. இப்பொருட்களை கிடங்குகளில் இருப்பு வைத்துக்கொள்வதற்கான கட்டுப்பாடுகளை இச்சட்டம் விளக்கிக்கொண்டுள்ளது. தற்போது இந்தியாவில் இந்திய உணவுக் கழகம் சுமார் நூறு மில்லியன் மெட்ரிக் டன் அளவில் நெல்லையும் கோதுமையும் இருப்பில் வைத்துள்ளன. நாடெங்கிலும் உள்ள பொது விநியோக அமைப்பிற்கு இந்திய உணவுக் கழகம் நெல் தானியங்களை அனுப்பி வைக்கிறது. இந்த கழகத்திற்கு மத்திய அரசு நிதி வழங்குகிறது. மோடி அரசு ஆட்சிக்கு வந்த ஐந்து ஆண்டுகளில் இந்திய உணவு கழகத்தின் கடன் சுமை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. தற்போது இந்திய உணவுக் கழகம் சுமார் 2.5 லட்சம் கோடி கடனில் சிக்கியுள்ளது. இந்த கடனை தீர்ப்பதற்கான எந்த வழிமுறையும் மோடி அரசு மேற்கொள்ளவில்லை. மாறாக, இந்திய உணவுக் கழகத்தின் கிடங்கு கட்டுமான வேளைக்கு தனியாரை ஊக்கப்படுத்தும் விதமாக கொள்கைகளில் மாற்றம் செய்து புதிய கிடங்கி வடிவமைப்பு கொள்கைகளையும் வெளியிட்டிருந்தன.

மேலும் இந்திய உணவுக் கழகத்திடம் இருப்பில் உள்ள தானியங்களை தனியார் நிறுவனங்கள் எளிமையாக வாங்கவும், இஷ்டம் போல சேமித்துவைத்துக் கொள்வதற்கும் வழிசெய்கிறது. இத்திருத்தச் சட்டம்  இந்திய உணவுக் கழகத்தின் எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்கிவிட்டதோடு, நாட்டின் உணவுப் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்க உள்ளது.

வருங்காலத்தில் வியாபாரிகளிடம் நேரடியாக தானியங்களை கொள்முதல் செய்து செயற்கையான உணவு பற்றாக்குறையை ஏற்படுத்தி தேவைப்படும்போது பொருட்களை அதிக விலைக்கு பெருநிறுவனங்கள் விற்பதற்கான வாய்ப்பை இத்திருத்தம் சட்டபூர்வமாக்குகிறது. தற்போதைய சட்டத்தின்படி தனியார் கிடங்கிகள் தங்களது தானிய இருப்பு குறித்து மாநில அரசுக்கு கணக்கு கூறவேண்டும் எனக் கூறப்பட்டாலும் அதன் நடைமுறை சாத்தியம் என்பது குறைவு.

மேலும், தற்போது கொரோனா பேரிடர் காலத்திலே நாட்டின் வர்த்தகம் முழுவதுமாக முடங்கிய சூழலில், இந்திய உணவுக் கழகத்தின் சேமிப்புக் கிடங்கின்  இருப்பில் இருந்து தானியத்தை மாநில அரசுகளுக்கு அனுப்பி, பொது ரேஷன் விநியோக அமைப்பின் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவச அரிசி சென்றது. பேரிடர் காலத்தில் பசிப்பிணியைப் போக்க உதவியது.

இனி எதிர்காலத்தில் இந்திய உணவுக் கழகத்தின் செயல்பாட்டையும் ரேஷன் விநியோக கட்டமைப்பையும் இந்த திருத்த மசோதா பலவீனப்படுத்தி ஒழிப்பதற்கு வகை செய்கிறது.

முன்னதாக இந்திய பொருளாதார ஆய்வறிக்கையிலே பொது ரேஷன் விநியோக அமைப்பிற்கு மாற்றாக வங்கி கணக்கில் பணம் போடவேண்டும் என ஆலோசனை கூறப்பட்ட நிலையிலே, இந்தத் திருத்தச் சட்டம், பொது விநியோக கட்டமைப்பை ஒழிப்பதை முன்னறிவிப்பதாக உள்ளது.

பிரதமர் மோடி கூறுகிற 21 ஆம் நூற்றாண்டின் சிறப்பு சட்டம் எவ்வாறு விவசாயிகளுக்கு மரண சாசனமாக மாறியது என வரும்கால நடைமுறையே விவசாய நெருக்கடிகளின் வாயிலாக வெளிப்பட உள்ளது.

 

 

-அருண் நெடுஞ்செழியன்

 

ஆதாரம்:

https://www.huffingtonpost.in/2017/04/29/80-of-indias-poor-mainly-depend-on-farming-how-can-they-be-ta_a_22061287/

https://www.indiatoday.in/india/story/farms-bills-are-sugar-coated-pills-will-oppose-them-tooth-and-nail-at-all-cost-kcr-1723398-2020-09-19?utm_source=izooto&utm_medium=push_notifications&utm_campaign=Farm%20bills&utm_content=&utm_term=

https://scroll.in/latest/973093/farmers-in-punjab-up-and-telangana-protest-against-centres-farm-sector-ordinances

https://www.thehindubusinessline.com/news/tamil-nadu-govt-amends-apmc-act-by-promulgating-ordinance/article31732493.ece

https://www.bbc.com/tamil/india-54215998

https://www.hindutamil.in/news/opinion/columns/582529-farmers-protest-1.html

https://www.hindutamil.in/news/others/119998-.html

 

RELATED POST
1 comments

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW