நீட் – மாணவர் வாழ்வை சூறையாடும் அதிகார வர்க்க பேய்கள்

17 Sep 2020

நீட் தேர்வு நாளுக்கு (செப் -12) முந்தைய நாளில் மட்டும் மூன்று மாணவர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்துகொண்ட துயர நிகழ்வானது தமிழகத்தையே பதைபதைக்க வைத்தது. நாகரிக சமூகத்திற்கு சற்றும் பொருத்தமற்று  வாழ்கிற அறிவற்ற சங்கி கும்பலோ, தற்கொலை செய்து கொண்ட மாணவரின்  இறுதி மரண வாக்குமூல கடிதத்தை அருவருப்பான வகையில் எள்ளி நகையாடினார்கள்.

மாநில துணை முதல்வரோ நீட் என்ற வார்த்தையையே பயன்படுத்தாமல் மாணவி ஜோதி ஸ்ரீ துர்காவின் மரணத்திற்கு இரங்கல் அறிக்கை வெளியிடுகிறார். மாநில முதல்வரோ, 2010 இல் மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கரஸ் கட்சியோடு திமுக கூட்டணியில் இருந்தபோதுதான் நீட் கொண்டு வரப்பட்டது என்றும் நீட் தேர்வின் காரணமாக 13 மாணவர்கள் மரணமடைந்ததற்கு திமுகவே காரணம் என்றும் சட்டமன்றத்திலே ஆவசமாக கொந்தளிக்கிறார்.

அதேநேரம் கடந்த 2017 ஆண்டிலேயே நீட் தேர்வுக்கு எதிராக சட்டமன்றத்திலே  ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட மசோதாவை மத்திய அரசு எங்கு வீசியது எனக் கேட்க துணிவின்றி மத்திய அரசின் துரோகம் குறித்து ஒரு வார்த்தை கூட பேசாமல் தனது அரசியல் இயலாமையை  ஆவச உடல் மொழி உரையால் ஈடு செய்ய முனைகிறார்! இதற்கிடையிலே நீட் தேர்வை ரத்து செய்ய அதிமுக அரசு கேட்கவில்லை என்ற மத்திய அமைச்சர் பியூஷ் கோயலின் கருத்திற்கும் முதல்வர் கள்ள மௌனம் காத்தார்.எதிர்கட்சிகள் முதலாக மாணவர் அமைப்புகள் கல்வியாளர்கள், நடிகர்கள், அரசியல் இயக்கங்கள், என சிவில் சமூகத்தின் பல்வேறு பிரிவினரும் நீட் அநீதிக்கு எதிராக தமிழக அரசு செயல்படக்கோரி வற்புறுத்திவருகிற நிலையிலே, தமிழக அரசிடம் நாம் நிகழ்காலத்தில் நியாயத்தை கேட்கிற வேளையிலே, தமிழக அரசோ இறந்த காலத்தில் தலையை அமிழ்த்தி கொள்கிறது.

கொரோனா பேரிடர் காலத்தில் தற்காலிகமாவது நீட் தேர்வை தள்ளி வைக்க வேண்டுமென்ற கோரிக்கையும் மத்திய அரசு நிராகரித்தது. இறுதியாக உலகில் கொரோனா பாதிப்பு இரண்டாம் இடத்தில உள்ள இந்தியாவில் நீட் தேர்வை அதிகார செருக்குடன் மத்திய அரசு நடத்தி முடித்தது. அதே வேளையில் நாம் இங்கே தமிழகத்தில் ஒரே நாளில் மூன்று அப்பாவி மாணவச் செல்வங்களின் உயிரை இழந்துள்ளோம்.

ஏழை எளிய மாணவர்கள் நலனுக்கு  எதிரான பணக்கார வர்க்க பிரிவினருக்கு ஆதரவான நீட் தேர்வு முறையை ரத்து செய்யக் கோரியும் மாநிலத்தில் பல்வேறு மாணவர் இயக்கங்கள் அரசியல் இயக்கங்கள் போராட்டங்கள்  நடத்தின. அதனொரு பகுதியாக நடிகர் சூர்யா நீட் தேர்வு முறைக்க எதிராக அறிக்கை வெளியிட்டார்.அதில் “கொரோனா அச்சத்தால்‌ உயிருக்குப் பயந்து ‘வீடியோ கான்பிரன்ஸிங்‌’ மூலம்‌ நீதி வழங்கும்‌ நீதிமன்றம்‌, மாணவர்களை அச்சமில்லாமல்‌ போய்‌ தேர்வு எழுத வேண்டும்‌ என்று உத்தரவிடுகிறது” என தனது நியாயமான ஆதங்கத்தை, அறச்சீற்றதை வெளிப்படுத்தியிருந்தார்.

இந்நிலையில்தான் நீட் தேர்வு குறித்த சூர்யாவின் அறிக்கை நீதிமன்ற நடவடிக்கையை விமர்சிப்பதாகக் கூறி நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என  சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு, நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் கடிதம் எழுதி உள்ளார்.

‘நீதிமன்றமாவது மயிராவது’, ‘நீதிமன்றமாவது மன்னாங்கட்டியாவது’ என பாஜகவின் எச்.ராஜா மற்றும் எஸ்.வீ சேகர் போன்றோர்கள்  நீதிமன்றத்தை இழிவாக விமர்சிக்கும்போதெல்லாம் வாய் திறந்திடாத நீதிமான்கள் கொரோனா காலத்தில் மாணவர்களுக்கு ஒரு நீதி, நீதிமன்றத்திற்கொரு நீதியா என்கிற தர்க்கம் நியாமற்றதாக நீதிமன்ற அவமதிப்பாக தெரிகிறது!

நாட்டிலோ கொரோனா பரவல் அச்சத்தால் பாராளுமன்ற கேள்விநேர அவை எழுத்துப் பூர்வ நடவடிக்கையாக மாற்றப்படுகிறது. பாராளுமன்ற பிரதிநிதிகள் முதலாக அலுவலர்கள் வரைக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இங்கே தமிழக சட்டமன்றம் தற்காலிகமாக கலைவாணர் அரங்கத்திற்கு இடமாற்றம் செய்யப்படுகிறது. சட்டமன்ற பிரதிநிதிகள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. பிரதமர் கானொளியில் மட்டுமே நாட்டு மக்களிடம் “உரையாற்றுகிறார்”. நீதிமன்றங்கள் கானோளிகாட்சி மூலமாக  வழக்கை நடத்துகிறது.

சமூகத்தின் மேல்தட்டு அதிகார வர்க்கப் பிரிவினர்களின் அனைத்து அலுவல்களும்  பல்வேறு கட்ட மருத்துவ பரிசோதனை பாதுகாப்புடன் நடைபெறுகிற நிலையிலே மாணவர்கள் மட்டும் வீட்டை விட்டும் ஊரை விட்டும் வெளியே வந்து தேர்வை எழுத வேண்டும்! அரசுக்கு மக்களா? மக்களுக்கு அரசாங்கமா?

JEE, NEET போன்ற தேர்வுகளைக் கொண்ட நாட்டின் முன்னிலை கல்வி நிலையங்களில் சேர விழையும் மாணவர்களின் கனவுகளைப் பயன்படுத்தி  தனியார் சந்தை அறுவடைசெய்வதற்கு கொரோனா பேரிடர் கூட ஒரு இடராக இருக்கக் கூடாது என்ற ஆளும்வர்க்க குணாம்சமே நீட் தீர்வை பலவந்தப் படுத்தி எழுத வைப்பதற்க்கான முக்கிய காரணமாக உள்ளது..

உலகமய சூழலுக்கு பிறகு இந்தியாவின் கல்வித்துறை வேகமாக வணிகமயமாகி வருகிறது. பணமுள்ளவர்களுக்கே கல்வி என்ற நிலையில், ஏழை எளியவர்களுக்கு கல்வி வாய்ப்பு மறுக்கப்படுகிறது. நாட்டின் 6-14 வயதுடைய குழந்தைகளில் கணிசமான விழுக்காட்டினர் பள்ளி கல்விக்கு செல்லாமல் உள்ளனர். கல்வித்துறைக்கு நாட்டின் மொத்த உற்பத்தியில் 3.3 விழுக்காட்டை இந்திய அரசு ஒதுக்குகிறது. வளர்ந்த நாடுகளில் இது 5.8 விழுக்காடாக உள்ளது. பாஜகவின் வருகைக்கு பிறகு கல்வி, வேகமாக கார்ப்பரேட் மயமாவதோடு காவிமயமாகியும் வருவதை இந்திய கல்விக் கொள்கை வெளிப்படுத்தியுள்ளது. பல காலம் போராடிப்பெற்ற இட ஒதுக்கீட்டையும் தனியார்மயத்தால் விழுங்குகிறது. இதனால் கல்வி நிறுவனங்களில் வெளிப்படையாகவே ஒடுக்கப்பட்டோருக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுகிறது.

கொரோனாவிற்கு முன்பே நாட்டின் பொருளாதாரம் கல்வி சுகாதாரம் உள்ளிட்ட தேசிய இன மக்களின் உரிமைகளை  மத்திய காவி கார்பரேட்  கும்பலாட்சியாளர்கள் சூறையாடத் தொடங்கினர். தற்போது கொரோனா பேரிடருக்கு பிந்தைய சூழலில் பொருளாதார மந்தம் எனக் கூறி மாநிலத்திற்கு வழங்கவேண்டியே ஜிஎஸ்டி வரி நிலுவைத் தொகையை வழங்காமல் மறுப்பது, மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் கல்விக் கொள்கை 2020 இன் மூலமாக  இந்தியையும் சமஸ்கிருதத்தையும்  பலவந்தமாக திணிப்பது, சூழலியல் தாக்க மதிப்பீடு வரைவு அறிக்கை என்ற பெயரில் கார்பரேட் நலனுக்கு ஆதரவாக நாட்டின் இயற்கை வளங்களை நாசமாக்குவது, கார்பரேட்களுக்கு வரிச் சலுகைகளை அறிவித்து அவர்களின் வங்கிக் கடன்களை  ரத்து செய்வது,தனியார் நலனுக்காக ரயில்வே முதலாக LIC வரைக்கும் தனியார்மயப்படுத்துவது. நீட் தேர்வை ரத்து செய்ய மறுப்பது, ஜனநாயக சக்திகளை ஊப்பா போன்ற ஆள்தூக்கி சட்டங்களின் மூலமாக  சிறைப்படுத்துவது, எதிர்கட்சிகளை விலைக்கு வாங்கி ஆட்சியை கவிழ்ப்பது என  கொரோனா காலத்தில் இத்தனையும் செய்ய முடிகிற அரசுதான் கொரோனா பேரிடர் காலத்தில் புலம் பெயர் தொழிலாளர்களின் மரண எண்ணிக்கை  குறித்த புள்ளி விவரங்கள் தெரியவில்லை அதனால் அவர்களுக்கு இழப்பீடு வழங்க இயலாது என்கிறது!

பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்!

இங்கே நம்மை சுற்றி அதிகார வர்க்க பேய்களும் பணக்கார வர்க்க  பேய்களும் நமது ரத்தத்தை உறிஞ்சிச் குடித்துக்கொண்டு வாழ்வை சூறையாடுகின்றன.

அதனால்தான் நரகம் காலியாகக் கிடக்கிறது!

நரகம் காலியாக கிடக்கிறது, ஏனெனில் அனைத்து பேய்களும் இங்கே நம்மோடு உலாவுகின்றன -வில்லியம் சேக்ஸ்பியர்

 

-அருண் நெடுஞ்செழியன்

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW