உயிரைக் கொடுக்க செங்கொடிகள் உண்டிங்கே, தலைமைக் கொடுக்க மண்டேலாக்களும் ஹோசிமின்களும் எங்கே?
ஆகஸ்ட் 28. 2011 – பேரறிவாளன், சாந்தன், முருகனைத் தூக்கில் இடுவதைத் தடுப்பதற்காக தோழர் செங்கொடி தன் உயிரை மாய்த்துக் கொண்ட நாள். தன்னுடைய ஈகத்தால் வரலாற்றில் இந்நாளை நினைவுக்குரிய நாளாக மாற்றிவிட்டார். ஒன்பது ஆண்டுகள் நிறைவு அடைந்துவிட்டன. தமிழக அரசு மேலே குறிப்பிட்ட மூவர் மற்றும் நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய எழுவரையும் விடுதலை செய்யப் பரிந்துரைத்து தமிழக அமைச்சரவையில் 2018 செப்டம்பர் 9 அன்று தீர்மானம் இயற்றி ஆளுநருக்கு அனுப்பியது. இந்நாள்வரை ஆளுநர் தீர்மானத்தை ஏற்பதாகவோ திருப்பி அனுப்புவதாகவோ அல்லது நிராகரிப்பதாகவோ பதில் அளிக்கவில்லை. அரசமைப்புச் சட்டத்தின்படி ஆளுநர் இத்தனை நாளுக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று வற்புறுத்த முடியாது. அப்படியொரு கால வரையறையை அரசமைப்பு சட்டம் குறிப்பிடாததற்கு காரணம் உண்டு. இத்தகைய உயரிய பதவியில் இருக்கும் ஒருவர் காரணமற்ற காலதாமதத்தை செய்ய மாட்டார் என்பது எதிர்பார்ப்பு. ஆனால், ஆளுநர்கள் நடுவண் அரசின் கைப்பாவையாய் அனைத்துவகை அட்டூழியங்களையும் அரசமைப்பு சட்டம் இயற்றப்பட்ட முதல் பத்தாண்டுகளுக்குள்ளே செய்து காட்டிவிட்டனர்.
நடுவண் அரசில் பாசக இருக்கும்பொழுது எழுவர் விடுதலைக்கு இசைவு தெரிவித்தால் ‘பாசக பயங்கரவாதத்திற்கு துணை போவதாக’ காங்கிரசு கட்சி வட இந்தியாவில் பரப்புரை செய்யும். அதிமுக அரசு தீர்மானம் இயற்றிய போது காங்கிரசு கட்சியின் அனைத்திந்திய பொறுப்பாளர்கள் இதைத்தான் செய்தார்கள். காங்கிரசு, பாசக ஆகிய இரு அனைத்திந்திய கட்சிகளும் எழுவர் விடுதலைக்கு எதிராக உள்ளன. அதிகபட்சமாக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றுவதோடு கடமை முடிந்தது என கருதுகிறார்கள் ஆட்சியாளர்கள். நடுவண் பாசக அரசுக்கு எதிராக அரசியல் செய்வதற்கு இதுவும் ஒரு பிரச்சனை எனக் கருதும் எதிர்க்கட்சி. இதுதான் நம்முடைய நிலை.
செங்கொடியின் அளப்பரிய ஈகத்திற்குப் பின்னும் சிறைக் கதவுகளை திறக்க முடியாததற்கு காரணம் என்ன? இந்தி திணிப்புக்கு எதிராய் உயிரைக் கொடுப்பதற்கு நடராசன்கள் தமிழ்மண்ணில் உண்டு; ஈழத் தமிழர் விடுதலைக்காக உயிர் கொடுப்பதற்கு முத்துக்குமார்கள் இங்கு உண்டு, எழுவர் விடுதலைக்காக உயிர் கொடுப்பதற்கு செங்கொடிகள் உண்டு. அடிமைப்பட்டுக் கிடக்கும் ஒரு மண்ணில் தன் உயிரைக் கொடுக்க முன்வரக்கூடிய ஈக மறவர்கள் இல்லாமல் இல்லை. ஆனால், எதற்கும் அஞ்சாமல் மக்களை வழிநடத்திச் செல்லத்தக்க நெல்சன் மண்டேலாக்களும் ஹோசிமின்களும் தமிழ் மண்ணில் இன்றைக்கு இல்லை. மக்களைத் திரட்டி வைத்திருப்பவர்கள் அடிமைத்தனத்தை ஏற்றுக் கொள்ளச் சொல்கின்றனர். எஜமானர்களுக்கு கங்காணி வேலைப் பார்ப்பதையே கெளரவமாக, வரலாற்று சாதனையாக கருதுகின்றனர். அளப்பரிய ஈகங்களை செய்தவர்கள் மக்களை திரளாக்க முடியாத அரசியல் சூழல் நிலவுகிறது. மொத்தத்தில் எம்.ஜி.ஆர். கள் புரட்சித் தலைவர்களாகவும் கருணாநிதிகள் வாழும் பெரியார்களாகவும் தமிழக அரசியலில் கொலுவீற்றிருக்கக் காண்கிறோம். எதிர்ப்புரட்சி தம்மைப் புரட்சியென்று முரசறைந்துக் கொள்வதே தமிழக அரசியலின் துயரமாக இருக்கிறது.
ஈடுஇணையற்ற தலைவர்களாக வலம் வந்தவர்களும் வருபவர்களும், செங்கொடிகளைப் போன்றவர்களின் ஈகத்தின் பெயரால் மக்களை விடுதலையை நோக்கி வழிநடத்தி செல்லக் கூடியவர்களாக இல்லை. ஆளும்வர்க்கத்திற்கு எதிரானப் போராட்டத்தில் எதற்கு அஞ்சாமல் களத்தில் நிற்கக் கூடியவர்களாக இல்லை. வன்முறையற்ற போராட்டம், அறவழி, அகிம்சை என்பவற்றை எல்லாம் தமது கோழைத்தனத்திற்கும் பதவி அரசியலுக்குமான முகக் கவசங்களாக பயன்படுத்திக் கொள்கின்றனர்.
அகிம்சை வழிப் போராட்டம் என்றொரு பாதையை உலகுக்கு காட்டிய காந்தி, ‘செய் அல்லது செத்து மடி’ என்றார். தான் சிறைக்கு சென்றதோடல்லாமல் பல்லாயிரக்கணக்கானோரை சிறைக்கு போகும் துணிவு கொள்ளச் செய்தார். இந்துத்துவத்திற்கு எதிராக, பெரும்பான்மைவாதத்திற்கு எதிராக நின்றதால் சுட்டுக் கொல்லப்பட்டார் காந்தி. செய் அல்லது செத்து மடி என்று ஊருக்கு அருள்வாக்கு சொல்லவில்லை அவர்.
காந்தியை தனது வழிகாட்டியாக ஏற்றுக்கொண்ட நெல்சன் மண்டேலா, கருப்பின மக்களின் விடுதலைக்காக தன் வாழ்நாளில் 27 ஆண்டுகள் சிறையில் கழித்தார். காந்தியைப் பாதுகாக்க நினைத்தது போல் வெள்ளையர்கள் மண்டேலாவைப் பாதுகாக்க நினைக்கவில்லை. மாறாக, சிறையிலேயே கடுமையான வேலைகளைக் கொடுத்து கொன்றுவிட எண்ணினார்கள். சிறையிலும் வாடாத கருப்பு மலராக அவர் வெளிவந்தார்.
நெல்சன் மண்டேலா ஆயுள் தண்டனைப் பெற்று சிறையில் அடைக்கப்பட்ட அதே 1962 ஆம் ஆண்டில், காசுமீரின் சிங்கமென அறியப்பட்ட சேக் அப்துல்லா தில்லிக்கு அடிபணியாத காரணத்தால் கொடைக்கானலில் சிறை வைக்கப்பட்டு ஒன்பது ஆண்டுகள் நிறைவடைந்திருந்த அதே 1962 ஆம் ஆண்டில்தான் திராவிட நாடு கோரிக்கையை அறிஞர் அண்ணா கைவிட்டார். இத்தனை ஆண்டுகாலத்தில் காசுமீரிகள் விடுதலையை நோக்கி வெகுதூரம் நடந்துள்ளனர். கருப்பின மக்களின் விடுதலையின் நியாயத்தை இவ்வுலகம் ஏற்றுக் கொள்ளும் பொருட்டு மண்டேலா என்றொரு மாமனிதன் தன் வாழ்நாளின் 27 ஆண்டுகளை சிறையில் கழித்து சாத்தியப்படுத்தினான். ஆனால், கட்சிக்காக கொள்கையைக் கைவிட்டார் தமிழர்களின் தலைவரான அண்ணா. திராவிட நாடு கோரியதற்கான காரணங்கள் அப்படியே இருக்கின்றன என்று ஒப்புக் கொள்ளவும் செய்து தான் செய்தது பிற்போக்கான சமரசம் என வெளிப்படுத்திக் கொண்டார். 1962 இல் இருந்து 2020 வரையான இந்த 58 ஆண்டுகால அரசியல் பயணத்தில், 28 ஆண்டுகள் சிறையில் கழித்த ஏழு பேரின் விடுதலைக்கு தீர்மானம் இயற்றிவிட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக காலவரையறையின்றி காத்திருக்கும் அளவுக்கு மாநில சுயாட்சிக் கோரிக்கையில் முன்னேறியிருக்கிறோம்! தமிழர்களாகிய நம்மை தொடங்கிய இடத்திலேயே நிறுத்திவிட்டு எதிரியின் காலடியில் கிடத்தியவர்களாக நம் தலைவர்கள் காட்சியளிக்கின்றனர்.
தமிழ்த்தேசத்தை அடிமைத்தனத்திலிருந்து விடுவிப்பதற்கு துணிவு கொண்டு அதற்காக சிறைக்கு செல்லவும் உயிரைக் கொடுக்கவும் அணியமாய் இருக்கக் கூடியவர்களாக ’தலைவர்கள்’ என்று இன்று அறியப்படுபவர்கள் இருக்கிறார்களா? எல்லாப் போராட்டங்களும் ஒரு முட்டுச் சந்தில் வந்து நின்றுவிடுகின்றன. ஆனால், இது குறித்தெல்லாம் எவ்வித கவலையும் இன்றி இதை சாத்தியப்படுத்துவதற்கு எவ்வித திட்டமும் இன்றி தேர்தல்களுக்கு இடையில் அரசியல் செய்பவர்களாகவே இருக்கிறார்கள். மாநில சுயாட்சிக்கு போராடுவதாக சொல்லிக் கொண்டே நடுவண் அரசில் அங்கம் வகித்து அமைச்சர் பதவிகளை வாங்கிக் கொள்வதற்கும் மாநில அதிகாரத்தைப் பறிக்கும் என்.ஐ.ஏ. போன்ற சட்டங்களை ஆதரித்து வாக்களிப்பதற்கும் தமிழக அரசியலில் இடமுண்டு. ஈகி முத்துக்குமாருக்கு வீரவணக்கம் சொல்லிக் கொண்டே கலைஞரின் கொள்கை தவறாமைக்கு சான்றிதழ் தந்து புகழாரம் சூட்டுவதற்கு தமிழக அரசியலில் இடமுண்டு. சமரசமும், சந்தர்ப்பவாதமும், அடிமை மோகமும் கோட்பாடாக்கப்பட்டு ஒரு தர்மமாக தமிழக அரசியலில் விரவிக் கிடக்கிறது. நாடாளுமன்ற, சட்டமன்ற பதவி அரசியலுக்கு எதிராக புரட்சிகரமான மாற்று அரசியலை வளர்த்தெடுப்பது ஒன்றே செங்கொடி போன்ற ஈகிகளுக்கு நாம் ஆற்றும் நன்றிக் கடனாக இருக்க முடியும்.
செங்கொடியின் நினைவு நாள், அவர் தீக்கிரையாகி ஒன்பது ஆண்டுகள் முடிந்துவிட்டபோதும் எழுவர் விடுதலை அடையாத இந்த இழிநிலைக்கான காரணங்களைத் தேடச் சொல்கிறது. அந்தக் காரணங்களின் பகுதியாக சம காலத் தமிழர்களாகிய நாம் இருக்கிறோம்.
தமிழன்னை நடராசன்களையும் முத்துக்குமார்களையும் செங்கொடிகளையும் ஈன்றெடுத்திருந்தாலும் மண்டேலாக்களுக்காகவும் ஹோசிமின்களுக்காகவும் வழிமேல் விழி வைத்து காத்திருக்கிறாள்!!
தோழர் செங்கொடிக்கு செவ்வணக்கம்!
– செந்தில்