காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் – தமிழ்நாடு – பத்திரிக்கைச் செய்தி

14 Aug 2020
  • வனத்துறைக் காவலில் மரணமடைந்த அணைக்கரை முத்து படுகொலைக்கு நீதி வழங்குக!
  •  குற்றவாளிகளைக் கைது செய்க!
  • அறிவிக்கப்பட்ட 10 லட்சம் இழப்பீட்டை உடனே வழங்குக!
  • வேலை வழங்க உத்திரவாதமளித்ததை அமலாக்குக!

தென்காசி மாவட்டம், வாகைகுளம் கிராமத்தை சார்ந்த விவசாயி அணைக்கரை முத்து 22.7.2020 அன்று இரவு வனத்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு, படுகொலை செய்யப்பட்டார். அவரை படுகொலை செய்த குற்றவாளிகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யக் கோரி முத்துவின் பிரேத உடலை வாங்காமல் உறவினர்கள் 5 நாட்களுக்கு மேல் போராட்டம் நடத்தி வந்தனர். மக்கள் போராட்டத்தின் விளைவாக தமிழ்நாடு அரசு 10 லட்சம் ரூபாய் நிவாரணமாக அறிவித்தது. வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழக்கப்படும் என தமிழக வாக்குறுதி அளித்தது.

நேற்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் விசாரணைக்கு வந்த வழக்கில், மருத்துவருக்கு கொரோனா காரணமாக பிணக்கூறாய்வு அறிக்கை (PMR) சமர்ப்பிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. பொதுவாக, பிரேத பரிசோதனை முடிந்து 2 நாட்களில் அறிக்கை வழங்கப்பட வேண்டும்.

ஆனால் இந்த வழக்கில் முதல் பிரேத பரிசோதனை அவசர கதியாக இரவில் பண்ணப்பட்டதாலும் இறப்பை  விசாரித்த நீதிபதி பார்த்து எழுதிய 18 காயங்களில், வெறும் 4 காயங்கள் மட்டுமே முதல் பிரேத பரிசோதனை அறிக்கையில் இருந்ததால் 31.07.2020 அன்று  உயர்நீதிமன்ற தலையீட்டிற்கு பின்பு 2 ஆவது முறையாக மறு பிரேத பரிசோதனை நடைபெற்றது.  உயர்நீதிமன்றத்தில் மறு பிரேத பரிசோதனை அறிக்கை 2 ஆவது வாரமாக கொடுக்க படாமல் இருப்பது, 2 ஆவது பரிசோதனை கேட்டத்தின் காரணம் பூர்த்தியாகமலும் உள்ளது. பிரேத பரிசோதனை செய்த 3 மருத்துவரில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பதால் அறிக்கையில் கையெழுத்து போட இயலவில்லை என்பது ஏற்றுக்கொள்ள முடியாத காரணமாகும்.

தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட  நிவாரணத் தொகை ரூ. 10 லட்சம் இன்று வரை பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு வழங்கப்படாததும் பொதுமக்களை ஏமாற்றுகிற செயலாகும். வேலை நியமன உத்தரவு வழங்கப்படாதது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம், கடையம் வனச்சரகர் நெல்லை நாயகம், வனக்காவலர் முருகசாமி, வேட்டைத் தடுப்புக் காவலர்கள் சக்திமுருகன், பசுங்கிளி, மனோஜ் மற்றும் மணிகண்டன் ஆகியோர் மீது பிரிவு  302-ன் படியும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டப் பிரிவுகளின் படியும் வழக்குப் பதிவு  செய்ய வலியுறுத்துகிறது.

தமிழக அரசு சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும். அறிவிக்கப்பட்டபடி மாவட்ட ஆட்சியர் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு இழப்பீடு ரூ 10 லட்சம் வழங்க உடணடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தகுதிக்கேற்ற வேலை நியமன உத்தரவு உடனடியாக வழங்கப்பட வேண்டும் என காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

சாத்தான்குளம் இரட்டைப் படுகொலை வழக்கில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன்  அவர்களின் கவனக்குறைவும், கடமை தவறிய செயலும் காரணமாக இருக்கிற நிலையில் அவரை தண்டிக்காமல் காத்திருப்பில் வைக்கப்பட்ட செயல் கண்டிக்கத்தக்கது. ஆனால் தற்போது சைபர் கிரைம் பிரிவின் கண்காணிப்பாளராக அவர்  நியமிக்கப்பட்டிருப்பது சட்டவிரோதச் செயலாகும். சாத்தான்குளம் காவல்நிலையச் சித்திரவதைக்கு மாவட்டக் கண்காணிப்பாளரின் கவனக்குறைவும் ஒரு காரணமாகும்  ஆகவே புதிய நியமனம் இரத்து செய்யப்பட வேண்டும். அவர் மீது குற்ற வழக்குப் பதிவு செய்து துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் தமிழக அரசை வலியுறுத்துகிறது.

 

 

Sd/-

தியாகு

ஒருங்கிணைப்பாளர்

Sd/-

மீ.த.பாண்டியன்

செயலாளர்

 

காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் – தமிழ்நாடு

Joint Action Against Custodial Torture – Tamil Nadu (JAACT –TN)

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW