கொரோனாவுக்கான தடுப்பூசி என்னும் பெயரில் இலாபவெறி – மக்களைக் காக்கும் மருத்துவர்கள் மெளனம் காக்கலாமா? – பகுதி 2
…..இங்கே உணவு மற்றும் மருந்துகளின் நிர்வாகம் (FDA) போன்று மேற்பார்வைக்காக அமைக்கப்பட்டு இருக்கும் அனைத்துமே கண்துடைப்பு வேலை மட்டுமே செய்து வருகிறது. ஒரு மருந்துக்கான படிநிலைகளில் இவர்களின் கவனம் அதை சந்தைபடுத்தப்பட்ட பிறகு காட்டும் அக்கறையைவிட குறைவுதான். ஏனென்றால் சோதனைகளில் மாட்டினால் குப்பைக்கு சென்றுவிடும். கட்டம் 3 இல் வேண்டுமானல் வாய்ப்புகள் குறைவு. கட்டம் 2 இல் செய்த முதலீடு காரணாமாக பரிசீலனைக்கு அனுமதிப்பார்கள். மாறாக கண்கானிப்பில் மாட்டினால் பரிசீலனை தான் அதிகம், நிராகரிப்பு குறைவு. ஆங்காங்கே கவனிக்கப்படுவதற்கான விசுவாசம் தான் இது.
சரி இந்த சோதனைகளில் அப்படி என்னதான் செய்வார்கள்?
1.ஒப்பீட்டு மருந்தின் (Comparator drugs) அளவை குறைத்து கொடுப்பது.
2.சிகிச்சை குறைவாக (Treatment inferior) இருக்கும் நோய்களுக்கு மட்டும் மருந்து செய்வது.
3. கட்டங்களுக்கான கால அவகாசத்தை குறைப்பது
4.இரண்டு கட்டங்களை ஒன்றாக இணைப்பது
5.பரிசோதிக்கப்படும் மக்களை அவர்களின் விருப்பத்திற்கு மாறாக பரிசோதிப்பது.
6.பரிசோதித்த நோயாளிகளுக்கு ஏதேனும் நேர்ந்தால் இழப்பீடு வழங்காமல் இருப்பது. இதனை “The letrozol affair” என்கிற திறனாய்வில் “பெண்கள் கினிப் பன்றிகளைப்போல் பயன்படுத்தப்படுகிறார்கள்” என்று சொல்லி இருப்பார்கள். இன்னும் பல சொல்லிக்கொண்டே போகலாம்.
Investigation (பரிசோதனை) முடிவுகளை பொது வெளியில் காட்ட வேண்டும் என்று கூறும் வேளையில் அம்மருந்தின் ஆராய்ச்சியாளர்களின் பார்வைக்குகூட பரிசோதனை முடிவுகளை சொல்ல மாட்டார்கள். ”அதை எதிர்த்தால் வேறு ஆராய்ச்சியாளர்கள் இருக்கிறார்கள் நீங்கள் வேண்டாம்” என்பார்கள்.
அப்படி இல்லை என்றால் படியளந்து வாயை அடைத்து விடுவார்கள்.
இதனைக் கண்டிக்கும் வகையில் Critic Medical Journal (மருத்துவ திறனாய்வு இதழ்கள்) இருக்கின்றன. ஆனால் அவர்களும் பட்டும் படாமல் தொட்டும் தொடாமல்தான் பேச வேண்டும். காரணம் அவர்கள் இணைய பக்கத்தில் இருக்கும் இந்த மருந்து நிறுவனங்களின் விளம்பரம் தான்.
மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள், திறனாய்வு இதழ் ஆசிரியர்கள் என அனைவரும் நிறுவனங்கள் விரிக்கும் பல்வேறு வகையான சிக்கல் வலைகளில் நேரடியாக மாட்டிக் கொள்வார்கள்.
இந்த சிக்கல்களில் மாட்டாமல் இருக்கும் மருத்துவர் ஒருவர் ஒரு நம்பகத்தன்மை வாய்ந்த திறனாய்வு மூலமாக ஒரு சோதனை முடிவு கட்டுரையாக வெளிவரும் போது அதனை வாசித்துகூட பார்க்காமல் அப்படியே ஏற்க வாய்ப்பு உண்டு. அப்படியே வாசித்தாலும் அதை எழுதுபவர்களின் தேன் சொட்டும் வார்த்தைகளால் மயங்கி விடுகிறார்கள். இப்படி தன்னையறியாமல் அந்த சிக்கல்களில் சேர வாய்ப்பு உண்டு.
எப்படி என்று பார்த்தால் திறனாய்வு இதழ்களில் கட்டுரை எழுதுபவர் மருத்துவரே இல்லையாம் ஒரு எம்.பி.ஏ. (MBA) மாணவராம். ஆனாலும் இறுதியில் படியளந்த ஒரு மருத்துவரின் பேரில் கட்டுரை வெளிவரும். அதையும் கண்டிக்காமல் மருத்துவ உலகம் நகரும். மருந்துகளும் புழக்கத்திற்கு வந்துவிடும். அந்த இதழும் தலைசிறந்த திறனாய்வு இதழ் என்ற பெயர் பெற்றுவிடும்.
இதையெல்லாம் ஒருபுறம் சகித்துக்கொண்டால் நிறுவனம் நஷ்டத்தில் போகிற ஒரே காரணத்திற்காக ஒரு நோயின் வீரியத்தை இவர்களே அதிகப்படுத்தும் வேலையும் அரங்கேறி இருக்கிறது. அப்படி ஒரு மருந்தை (National Immunization schedule) தேசிய தடுப்பூசி அட்டவணையிலேயே நுழைத்து இருக்கிறார்கள்.
’அநீதிகளை கண்டிக்கிறேன் பேர்வழி’ என்று கிளம்பிய மருத்துவ சங்கத்தின் முகப்பு பக்கங்களிலும்கூட மருந்து நிறுவனங்களின் விளம்பரம் பல்லிளிக்கிறது. இவர்கள் அநீதி என்று பின்பு எதைதான் குறிப்பிடுகிறார்கள் ?
இந்த சீர்கேடுகள் எல்லாம் அன்றாடம் நடந்துகொண்டிருக்கிறது. ஆனால் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கும் இந்த பேரிடர் காலங்களில் மக்கள் அன்றாடம் செத்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில்கூட மருத்துவத் துறையின் வர்த்தக கண்ணோட்டத்தை என்னவென்று சொல்வது.
கொரோனா தொற்று ஏற்பட்ட நாள் முதல் வெவ்வேறு மருந்துகள் தீர்வாக காட்டப்படும் அதே வேளையில் அந்த மருந்துகளின் மீதான விமர்சனங்களும் குறைந்த பாடில்லை. கிளன்மார்க் நிறுவனத்தின் Favipiravir தொடங்கி பாரத் பையோடெக்கின் Covaxin வரை இதே கதை தான்.
Favipiravir ஜப்பான் ப்யூஜிப்பிலிம் நிறுவனத்தின் துணை நிறுவனமான டோயமா கெமிக்கல் நிறுவனத்தின் மருந்து. உண்மையில் இது அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டு அங்கு ஏற்பு கிடைக்காத நிலையில் பின்னர் ஜப்பானில் ஏற்புப் பெற்று பயன்பாட்டுக்கு வந்தது. அவிகன் (Avigan) என்ற பெயரில் இன்ப்லூயன்சா நோயைக் குணப்படுத்த வெளிவந்தது. அவிகன் மீது சரியான பரிசோதனை சான்றுகள் இல்லாமல் எப்படி சீனா மற்றும் ருஷிய நாடுகளில் இது புழக்கத்திற்கு வரலாம் என்று கேள்வி எழுப்பப்பட்டுக் கொண்டிருக்கும்போதே அது இந்தியாவில் நுழைந்து இரண்டு நிறுவனங்கள் (கிளன்மார்க் மற்றும் ஸ்ட்ரைடர்) பரிசோதிக்கும் உரிமம் பெற்றது, சரியான ஆதாரங்கள் பொதுப்படையில் சமர்பிக்கப் படவில்லை என்றாலும் பரிசோதனை செய்து புழக்கத்திற்கே வர இருக்கிறது .
கடந்த வாரம் Favipiravir விநியோகம் செய்ய உரிமம் வழங்கிய DCGI ( Drug controller General of India ) மீது பல கேள்விகளை எழுப்பியிருக்கிறார் மருத்துவர் கலந்திரி அது “தி இந்து” இதழில் வெளிவந்தது .
பரிசோதனை முடித்த பிறகு தான் ஒரு மருந்து விற்பனைக்கு வரும் என்று பேசியிருந்தோம். ஆனால் கிளன்மார்க் கட்டம் 1 மற்றும் 2 யைக் கடக்காமல் நேரடியாக கட்டம் 3 க்கு வந்து விற்பனைக்கே வந்து விட்டது .”Evaluation data (மதிப்பீடு தகவல்கள்) “படி தான் தனது ஆராய்ச்சியை மேற்கொண்டோம் என்று கூறும் கிளன்மார்க் அந்த தகவல்களுக்கான ஆவணங்களைப் பொதுவெளியில் சமர்ப்பித்து இருக்கிறதா? இல்லை.
கிளன்மார்க் கட்டம் 3 பரிசோதனைக்கான முடிவுகளை ஜூலை மாதத்திலோ இல்லை ஆகஸ்ட் மாதத்திலோதான் வெளியிட முடியும் என்று தன் இணைய பக்கத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்காள். பிறகு கிளன்மார்க்கிற்கு எதன் அடிப்படையில் DCGI உரிமம் வழங்கியது?
பரிசோதனைக்கான முடிவுகள் வெளிவருவதற்கு முன் மருந்துகள் வெளிவரலாமா? வரலாம் என்று DCGI வெளியிட்டு இருக்கும் (New drugs and Clinical trial rules,2019) 2019 இன் புதிய விதிமுறைகள் சொல்கிறது. அதாவது “ஒரு மருந்தின் பரிசோதனை முடிவு வருவதற்கு முன்பே விற்பனைக்கு வரலாம்” என்ற அடிப்படையில் உரிமம் வழங்கியிருக்கிறது.
இது சப்பைக்கட்டு இல்லையா ? விதிமுறைகளில் இத்தனை சமரசம் ஏன் ? விதிமுறைகள் அவ்வளவு நெருக்கடியாக இருந்தபோதே மக்களை ஏமாற்றியவர்களுக்கு இப்படியெல்லாம் வளைந்து கொடுப்பது ஏன்?
2019 திற்கான புதிய விதிமுறைகளின் குறிக்கோள் பரிசோதனை முறையை மேம்படுத்துவதன் மூலமாக இந்திய மக்களுக்கு எளிதில் அந்த மருந்து சென்றடைந்து நலன் தர வேண்டும் என்பதற்காகத்தான். ஆனால் அவ்விதிமுறைகளில் முக்கியமாக குறிப்பிட்டு இருக்கும் வெளிப்படைத்தன்மையை (Transparency) மட்டும் தொடர்ந்து மறந்து கொண்டு இருக்கிறார்கள். இன்னும் முதலாளிகளுக்கு எதை தான் தாரைவார்த்துக் கொடுப்பார்கள் ?
CTRI (Clinical trial Registry of India) படி கிளன்மார்க் தனது அராய்ச்சியை 150 நோயாளிகள் மீது மேற்கொண்டு இருப்பதாக கூறுகிறது. பரிசோதிக்கப்படும் நபருக்கு Favipiravir மற்றும் Standard care வழங்குவதாக கூறுகிறது. ஆனால் அந்த “Standard care ” என்ன என்பது தெரியவில்லை. இப்போது Favipiravir ஐ எதனோடு ஒப்பிடுகிறார்கள் என்றே புலப்படவில்லை. தற்போது லேசான அறிகுறிகள் கொண்டவர்களுக்கு Favipiravir ஆல் முன்னேற்றமா இல்லை Standard care ஆல் முன்னேற்றமா? என்றால் அதுவும் தெரியவில்லை.
மேலும் கிளன்மார்க் வார்த்தைக்கு வார்த்தை கூறும் “நிபுணர்கள் கருத்தின் படியான மதிப்பீடு தகவல்கள்” தான் என்ன ? மருத்துவர் கலந்திரி அவர்கள் குறிப்பிட்டு இருந்தவாறு ஒரே ஒரு பரிசோதனை ஆவணம்தான் கிடைக்க நேர்ந்தது. “PubMed” என்கிற இணைய இதழில் ஓர் ஆராய்ச்சிக் கட்டுரை வெளியாகி உள்ளது. அந்தக் கட்டுரை Favipiravir செய்யும் அதே வேலையை கொண்ட Lopinavir உடன் ஒப்பீடு செய்து எது சிறந்தது என்று பார்த்த ஒரு கவனிப்பு பரிசோதனை (Open label observational study) பற்றி பேசுகிறது. பெரும்பாலும் இரு மருந்துகளை ஒப்பீடு செய்யவே இந்த வகையான பரிசோதனை உதவியாக இருக்கும். ஆனால் ஒரு நோய்க்காக ஒதுக்கப்படும் மருந்துகளின் பரிசோதனைமுறை ,”சீரற்ற கட்டுப்பாட்டு பரிசோதனை” முறை (Randomized control trials) . ஆக முதல் படியிலேயே தவறுகிறது நிறுவனம். அப்படியே இந்த ஆராய்ச்சியின் முடிவுகள்படி பார்த்தால் கூட Favipiravir அதன் செயல்திறனில் முன் நின்றாலும் அதை ஒப்பீடு செய்த lopinavir ருடன் கூடுதல் பின் விளைவுகள் ஏற்படுத்துவதாகத்தான் குறிப்பிட்டு இருந்தது. முக்கியமாக குழந்தை பிறப்பு கோளாறுகள் ஏற்படுத்தும் டெரடோஜெனிக் (Teratogenic) என்ற மோசமான பின் விளைவு அது. பொதுவாக இப்படியான மருந்துகள் ஒரு எச்சரிக்கை படிவத்துடன்தான் வரும். மேலும் டெரடோஜெனிக் மருந்துகளைக் திருமணமான இளம்பெண்கள் எடுத்துகொள்ளக் கூடாது. ஆனால் CTRI யின் விளக்கப்பட்ட அளவுகோல் (Exclusion criteria ) படி இம்மருந்தை கருவுற்ற மற்றும் பால் சுரக்கும் பெண்கள் மட்டும் உட்கொள்ளக் கூடாது என்று கூறுகிறது. இது இரண்டுமே நிச்சயம் ஒன்றல்ல. இதைதான் கிளன்மார்க் மதிப்பீடு தகவல்கள் என்கிறது.
இரண்டாவதாக Expert opinion (சிறந்த நிபுணரின் கருத்து) படி இதனை பரிசோதித்ததாக கூறும் கிளன்மார்க் நிறுவனம் அதனையும் நிரூபிக்க திணருகிறது. “HCQ க்கு நேரடி விற்பனை செய்யும் டிரம்புக்கு (அமேரிக்க பிரதமர்) நிகர் Avigan க்கு விற்பனை செய்யும் ஏப் (ஜப்பான் பிரதமர்).ப்யூஜிப்பிலிம் நடத்திய அத்தனை விழாவையும் சிறப்பித்து இருக்கிறார் ஏப் . மேலும் Avigan மீது மருத்துவ நிபுணர்களிடையில் பல எதிர்மறைக் குற்றச்சாட்டுகள் எழுந்தாலும் சத்தமில்லாமல் வளர்த்து கோடிக்கணக்கான பணத்தை கொட்டி மருந்தை அடுக்கி விற்பனைக்கு தயாராகிவிட்டார் ஏப் “என்று நியூயார்க் டைம்ஸ் இதழ் மே மாதமே தனது கட்டுரையில் வெளியிட்டு இருக்கிறது . இதில் மருத்துவ நிபுணர்களின் விமர்சனம் என்பது குறிப்பிடத்தக்கது. இதனடிப்படையில் நிபுணர்களின் பரிந்துரைப்படி ஆய்வுகள் மேற்கொண்டோம் என்ற கிளன்மார்க்கின் கூற்று விமர்சனத்துக்குள்ளாகிறது.
மேலும் கிளன்மார்க்கின் பங்கு விலை Favipiravir வருகைக்கு முன் குறைவாக இருந்ததாகவும் வந்த பின் 180% பங்கு விலை உயர்ந்து இருப்பதாகவும் சில பொருளாதார தரவுகள் வெளியிட்டு இருக்கிறது . ஒரு மாத்திரையின் விலை ஏன் ரூ.103 என்ற கேள்வி இவ்வண்ணம் எழுகிறது.
இது நம் கண்முன்னே நடக்கும் ஒரு அப்பட்டமான சுரண்டல் உத்தி.
ஒரு மாத்திரையின் விலை ரூபாய் 103 என்றால் ஒருவர் சிகிச்சையின் இறுதியில் ரூ 12000 செலவழித்து இருப்பார். இது எந்த வகையில் மலிவு என்கிறார்கள்?. ஒரு குடும்பத்தில் இருக்கும் அனைவருக்கும் கொரொனா தொற்று என்றால் சில லட்சங்களை அவர்கள் சமர்பித்து தான் ஆக வேண்டும் என்ற நிலையை ஏற்படுத்துகிறார்கள். மேலும் லேசான மற்றும் மிதமான அறிகுறிகள் கொண்ட நோயாளிகள் எதிர்ப்புசக்தியை கொண்டு தாமாகவே நோயிலிருந்து விடுப்படுவதாக ஆய்வுகள் கூறுகையில் அவர்களுக்கு மருத்துவமனை கண்காணிப்பு தேவையில்லை என்றாகிறது. மாறாக தீவிர அறிகுறிகள் கொண்டவர் என்றால் மருத்துவமனையை நாடித் தான் ஆக வேண்டும். அரசு மருத்துவமனைகளில் இடங்கள் இல்லை, கவனிப்பு இல்லை என்று தனியாரிடம் சென்றால் பல இலட்சங்களை ஒருவர் தன்னையறியாமல் செலவு செய்து விடுவார். ஆனால் லேசான மற்றும் மிதமான நோயாளிகளுக்கு இந்த நிலை ஏற்படாது என்பதால் இவர்கள்தான் விற்பனைக்கு இலக்கு.
மேலும் இந்த ஊடகங்கள் கொரோனா மீதான மக்களின் பயத்தை அளவுக்கு மிஞ்சி அதிகப்படுத்துவது மட்டும் இல்லாமல் இம்மருந்துகளை கொரோனாக்கான சர்வரோக நிவாரணி போன்று தம்பட்டம் அடித்து கொண்டு இருக்கிறார்கள். மக்களும் உச்சக்கட்ட பயத்தினால் மட்டுமே இம்மருந்தை வாங்குவார்கள். கிளன்மார்க்கை அடுத்து ஸ்ட்ரைடர் என்று எழுந்து வரிசையாக நாளைந்து நிறுவனங்கள் மக்களின் பயத்தில் இலாபம் பார்க்க கிளம்பி விடும். இதிலிருந்தே புலப்படுகிறது நவீன மருத்துவத்தின் கேவலமான வர்த்தக முகம்.
அடுத்து “வருமுன் காப்போம்” இந்த ஒப்பற்ற வாக்கியத்தை காப்பாத்துறேன் பேர்வழினு , தடுப்பூசி கண்டு பிடிச்சே ஆவேன்ற வைராக்கியத்துடன் இருக்கும் பாரத் பையோடெக்.
நடக்கப் பழகும் குழந்தையிடம் சரியாக நடக்க சொல்லித்தரலாம் ஆனால் தவள்கிற குழந்தையிடம் “மூன் வாக்” வேண்டும் என்று அடம்பிடித்துக் கொண்டு இருக்கிறது இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் ( ICMR). ஒரு பரிசோதனை முடிவு வருவதற்கு குறைந்தது 4 வருடங்கள் ஆகும் என்று பேசியிருந்தோம். ஆனால் covaxin தடுப்பூசிக்கு ICMR கொடுத்த கால அவகாசம் வெறும் ஒன்றரை மாதம். உலகிலேயே ஆராய்ச்சி சார்ந்த கண்டிபிடிப்புக்கு காலஅவகாசம் கொடுத்த ஒரே ஆய்வுக் கழகம் நம் நாட்டின் கழகம் தான்.
பாரத் பையோடெக் நிறுவனம் ICMR மற்றும் NIV ( தேசிய நுண்ணுயிரி ஆராய்ச்சி நிறுவனம் ) உடன் சேர்ந்து covaxin என்ற தடுப்பு மருந்தை உருவாக்கினார்கள். இது முன்மருத்துவ பரிசோதனை முடிந்த நிலையில் ஜூலை 7 ஆம் தேதி மனிதர்கள் மீதான மருத்துவப் பரிசோதனைக்காக தயாராக உள்ளது. இதைத்தான் ஆகஸ்ட் 15 க்குள் புழக்கத்திற்கு வரவேண்டும் என்று ICMR கூறுகிறது.
முன்மருத்துவ பரிசோதனைக்காக மே 9 ஆம் தேதி DCGI இடம் உரிமம் பெற்ற நிலையில் ஜூன் மாத இறுதியில் பரிசோதனை முடித்து மருத்துவ பரிசோதனைக்கு தயாராகி விட்டது என்கிறார் அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர். அதே இயக்குனர் “ஒரு முன் மருத்துவ பரிசோதனைக்கு குறைந்தது 3 மாத கால அவகாசம் வேண்டும்” என்று ஏப்ரல் 7 அன்று ஒரு நேர்காணலில் பேசிவிட்டு ஐம்பதே நாட்களுக்குள் ஏன் பரிசோதனையை முடித்தார் என்று தெரியவில்லை .
மேலும் எலிகள்(Mice) மற்றும் வெள்ளெலிகள் (Hamster) மீது பரிசோதித்ததாக கூறுகிறது நிறுவனம். கொரோனா தொற்றை சாதாரண எலிகளில் ஏற்படுத்த முடியாத நிலையில் மனித ace2 வெள்ளெலிகள் (human ace2 hamster) மீது பரிசோதனை நடந்திருப்பது தெரியவருகிறது. இந்த எலிகள் வெளி நாடுகளிலிருந்தே வர வேண்டும் . இத்தனை குறுகிய காலத்திற்குள் வரவழைத்து பரிசோதித்து முடித்து விட்டார்கள் என்பது அவர்களின் வெளிப்படைத் தன்மையைக் கேள்விக்குள்ளாக்குகிறது. அதற்கு அவர்களிடன் பதிலும் கிடையாது என்பது சரியான ஆவணங்களை சமர்ப்பிக்காத போதே தெரிகிறது.
உலக சுகாதார அமைப்பு (WHO) கொரோனாவுக்கான தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்களின் தொகுப்பை வெளியிட்டுள்ளது. அதில் மொத்தம் 18 தடுப்பூசிகள் மருத்துவப் பரிசோதனையிலும் 129 தடுப்பூசிகள் முன்மருத்துவப் பரிசோதனையிலும் இருக்கிறது .
இந்தியாவில் ஒரே ஒரு நிறுவனம் (Bharat biotech) தான் தடுப்பூசி தயாரிப்பதாகவும் அதுவும் முன்மருத்துவ சோதனையைக் கடக்கவில்லை என்றும் கூறுகிறது .
பின் எதன் அடிப்படையில் மனிதர்களின் மேல் பரிசோதிக்கும் உரிமம் பெற்றுள்ளதாக தம்பட்டம் அடித்துக் கொண்டு இருக்கிறார்கள்? “தடுப்பூசி வருவதற்கு குறைந்தது ஒரு வருடம் ஆகும்” என்ற பேச்சின் ஒலி ஓயும் முன்பே மருந்துகள் விற்பனைக்குத் தயார் என்றால் இதில் எதை தான் நம்புவது?
மேலும் ஜூலை 7 ஆம் தேதியிலிருந்து மனிதர்கள் மீதான பரிசோதனை தொடங்கலாம் என்னும் பட்சத்தில் ஒன்றரை மாதத்திற்குள் எப்படி 1000 நோயாளிகளைத் தேடி பரிசோதிப்பார்கள்?
அத்தனை நோயாளிகளிடமும் ஒப்புதல் வாங்குவது எப்படி சாத்தியமாகும்? இல்லை ஒப்புதல் வாங்கும் எண்ணமாவது உள்ளதா? 1000 நோயாளிகளைப் பரிசோதிப்பது அவ்வளவு சுலபமா? “பிரதமரே வந்து சொன்னாலும் பரிசோதனை தொடங்கமாட்டோம் ; எங்களை இவர்கள் மிரட்டுகிறார்கள் “என்று பரிசோதனைக்கென ஒதுக்கிய மருத்துவ நிறுவனங்கள் கூறுகின்றன. பின் யாருக்குத்தான் தடுப்பூசி கண்டு பிடிக்கிறார்கள்?
இதில் இந்தியாவிலே பெரிய ஆராய்ச்சி நிறுவனமான ICMR இன் கூட்டு வேறு. கொரோனா தொற்று ஏற்பட்ட நாள் முதல் தொற்று ஏற்பட்ட மக்களின் கணக்கெடுப்பை விரைவில் வெளியிடுவதாக சொல்லிய ICMR அத்தனை ஆள்பலம், அதிகார பலம் இருந்தும் இதுவரை அதன் முழுமையான முடிவுகளை சொல்லவில்லை மாறாக ICMR ஐ விட சிறிய ஆராய்ச்சி மையங்கள் தனது முடிவுகளை வெளியிட்டவுடன் முந்தி அடித்துக் கொண்டு ஆங்காங்கே துண்டு தகவல்களோடு பேட்டியளித்து கொண்டு இருக்கிறது. ஆனால் அதற்கும் சரியான ஆதாரங்கள் இல்லை. ஒரு மாத்திரையோ தடுப்பூசியோ தயாரிப்பதற்கு முன் அந்நோய் மக்கள் தொகையில் எத்தனை பேருக்கு வந்துள்ளது ? எப்படி அது விளைவுகளை ஏற்படுத்துகிறது ? நோய் வந்தவுடன் உடம்பில் இருக்கும் எதிர்ப்பு சக்தியின் நிலை என்ன? பல்வேறு இடங்களில் உள்ள வித்தியாசம் குறிப்பாக மரபியல் வித்தியாசம் தெரிந்துகொள்ள கணக்கெடுப்பு அவசியம் இல்லையா? அதை செய்யாமல் மருந்து தயாரிப்பதிலேயே குறியாக இருக்கிறது ICMR. மேலும் புதிய மருந்துகளின் மேல் எதிர்மறை விமர்சனங்கள் இருந்தும் இது தான் தீர்வு என்று ICMR கூறிய அதே நேரத்தில் அம்மருந்துகளால் இருதய மற்றும் ஈரல் பின்விளைவுகள் வரும் செய்தியை சத்தமில்லாமல் கடந்து செல்கிறது என தொடர்ந்து மக்களிடம் தனது நம்பகத்தன்மையை இழந்து வருகிறது ICMR. மக்களும் பின் யாரை தான் நம்புவார்கள்?
கொரோனாக்கு மருந்து வந்தா நல்லது தானே? அதுவும் சீக்கிரம் வந்தா நல்லது தானே ? நல்லதுதான். ஆனால் கூர்ந்து கவனித்தால்
- இரண்டு மருந்துகளுமே சரிவர படி நிலைகளை கடக்க வில்லை.
- கடந்து வந்த படி நிலைகளின் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை.
- நிபுணர்களின் எதிர்மறை விமர்சனங்களை மீறி தயாரிக்கப்படுகிறது.
- பின் விளைவுகள் பற்றி விவரிக்கப்பட்டும் பரிசீலனை இல்லாமல் அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்தப்பட்டு இருக்கிறது.
- மிக குறுகிய கால அவகாசத்தில் வெளி வருகிறது .
இவை கொரோனாவே மேல் என்று எண்ண வைத்துவிடும் விபரீதங்கள் அன்றி வேறொன்றும் இல்லை.
பரிசோதனைகளின் கால அவகாசம் குறைப்பது தீர்வை தேடி வேகமாக நகர்த்தும் என்பது சரியானாலும், அதற்கான வழிமுறைகளையும் சான்றுகளையும் ஏன் வெளியிடவில்லை ? ஒரு மருந்துக்கான பரிசோதனை காலங்கள் குறித்து உணவு மற்றும் மருந்து நிர்வாகம் நிர்ணயிக்கப்பட்ட அளவை வைத்துத்தான் இந்த வேக கண்காணிப்பு பரிசோதனை (Fast tracking trials) குறித்து கேள்வி எழுப்படுகிறது என்றால் அதற்கு விளக்கம் தர ஆராய்ச்சி நிறுவனங்கள் ஏன் முன் வரவில்லை? எதன் அடிப்படையில் இந்த முயற்ச்சிகள் மீது நம்பிக்கை வரும் என்று நினைக்குறார்கள்? எதிர்வினை விளக்கங்கள் மட்டும் போதுமா? அதற்கான ஆதாரம் வேண்டாம ? பிறகு எப்படி இது சான்றுகளின் அடிப்படையிலான மருந்துகள் ஆகும்?
மொத்தம் எத்தனை மக்களுக்கு தொற்று ஏற்பட்டு உள்ளது என்று பார்த்து மந்தை எதிர்ப்புச் சக்தியை கணக்கில் கொண்டு நடத்தப்பட்ட ஆராய்ச்சி முடிவுகளை சரியான ஆவணங்களுடன் வெளியிட்ட பிறகு முறையான வடிவில் மருத்துவ நிபுணர்களுடன் கலந்து மருந்து ஆராய்ச்சி நடத்துவதில் அப்படி என்ன தயக்கம்?
காரணம் இவர்கள் எண்ணம் நோயை தீர்ப்பது அல்ல, நோயை வைத்து இலாபம் பார்ப்பதே ஆகும்.
இதில் இந்த மருந்தின் மீதான பயத்தை விட மருத்துவர்களின் கள்ள மெளனம் தான் அச்சத்தை தருகிறது. இதை பற்றி சிறிதளவும் பேசி விடக் கூடாது என்று ஏன் இருக்கிறார்கள் ? மக்களுக்கான மருத்துவர்கள் என்று பிறகு எப்படித்தான் மக்கள் நம்மை நம்புவார்கள். மருத்துவர்களின் சம்பள உயர்வு போராட்டத்திற்கு எப்படி ஆதரவு கரம் நீட்டுவார்கள் ?
மருத்துவ துறையில் இது போன்ற வர்த்தக சீர்கேடு இன்று நேற்று நடக்கும் சம்பவங்கள் இல்லை. காலம் காலமாக நடந்துகொண்டு தான் இருக்கிறது. ஆயுஷ் மருந்துகளை விமர்சிப்பதில் காட்டுகிற அதே வேகம் ஏன் அல்லோபதியின் இந்த சீர்கேடான நடைமுறையை பற்றி விமர்சிப்பதில் இல்லை ? இதெல்லாம் நடப்பது தெரியாதது போன்ற ஒரு மாய பிம்பத்தில் ஒளிந்து கொள்வதும், இல்லை தெரிந்தும் சொகுசு வாழ்க்கைகாக மக்களை ஏமாற்றி விட்டதாக நினைப்பதும், மக்களுக்கான மருத்துவர்கள் என்று கூறிக்கொண்டு மருத்துவர்களின் நலனை மட்டுமே கருத்தில் கொள்வதும் மக்கள் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். ஏனென்றால் மேல் சொன்ன அத்தனை வழிமுறையின் நேரடி பாதிப்பும் மக்களுக்குத்தான். மேலும் அந்த மக்களில் நாமும் ஒருவர் என்று மறக்க வேண்டாம். கொரோனா தொற்று மக்களுக்கு மட்டும் இல்லை மருத்துவர்களுக்கும் தான். இந்த மருந்துகள் மருத்துவர்களின் வாய்களிலும் பாயும்.
முதலாம் ஆண்டில் ஒரு மருத்துவ மாணவர் எடுக்கும் ஹிப்போகிரேட்டிக் உறுதிமொழியின் முதல் வரியான “எனது வாழ்க்கையை மனித குல சேவைக்காக நான் அர்ப்பணிப்பேன் என்று உறுதி மொழி அளிக்கிறேன்” என்பதற்கு இணங்க இம்மாதிரியான சீர்கேடுகளுக்கு உடனடியாக எதிர்வினையை மருத்துவர்கள் எழுப்ப வேண்டும் . மருத்துவர்கள் மட்டும் அல்ல ஆராய்ச்சியாளர்கள், மனித ஆர்வலர்கள், சட்ட வல்லுநர்கள் என அனைவரது குரலும் மக்கள் பக்கம் நிற்க வேண்டிய தருணம் இது
-அபர்ணா,
துணைப் பொதுச்செயலாளர்,
தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கம்
kaaparna.28@gmail.com
ஆதாரங்கள்:
வரியறைகள் மற்றும் பரிசோதனை விளகங்கள் : Essentials of Medical Pharmacology by Dr. Tripathi -7 th edition
மருந்து சந்தை: http://www.locostindia.in/
Book Resource : A lay person’s guide to medicines . Particularly chapter 4 and 5
https://m.indiamart.com/impcat/nimesulide-tablets.html
கிளன்மார்க் மற்றும் Favipiravir :
https://www.nytimes.com/2020/05/05/business/japan-avigan-coronavirus.html
https://pubmed.ncbi.nlm.nih.gov/32346491/
பாரத் பையோடெக் மற்றும் covaxin :
https://science.thewire.in/health/how-indigenous-is-bharat-biotechs-new-covid-19-vaccine-covaxin/
https://www.who.int/publications/m/item/draft-landscape-of-covid-19-candidate-vaccines
ICMR :
https://m.thewire.in/article/health/icmr-covid-19-pandemic-editorial
ஆகச்சிறந்த முன்னெடுப்பு. இதே கருத்துக்களை பாரம்பரிய மரபுவழி மருத்துவர்களான எங்களைப் போன்றவர்கள் முன்வைக்கும்போது ஏற்படுத்தும் விளைவினை விட துறை சார்ந்த உங்களைப் போன்றோர் முன் வைக்கும் கருத்துக்கள் மக்களை சிந்திக்கத் தூண்டும்…
மரபுவழி மருத்துவர்களான நாங்கள் அறிவியலுக்குப் புறம்பானவர்கள் என்று முத்திரை குத்தப்படுகிறோம், ஒதுக்கப்படுகிறோம் …
நவீன மருத்துவத்துறையில் இருக்கும் மனசாட்சி உள்ளவர்கள் நீங்கள் எழுப்பியுள்ள கேள்விகளை நிச்சயம் எழுப்ப வேண்டும் …
” ஆயுஷ் மருந்துகளை எதிர்க்கும் வேகம் கேடு விளைவிக்கும் அல்லோபதி மருந்துகளை எதிர்ப்பதிலும் இருக்க வேண்டும் ” … சாட்டையடி …
வாழ்த்துகள் .